கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

இதுவரை பார்த்த மாலதி சந்தூரின் நாவல்கள், தனிமனிதப் பிரச்சினைகளையும் தனிமனிதனுக்கும் குடும்பத்திற்கும் இடையில் நடக்கும் மோதல்களையும் வேறுபட்ட கோணங்களில் கதைப் பொருளாக எடுத்துக் கொண்டு எழுதப்பட்டவை.

மாலதி சந்தூரின் நாவல் படைப்பின் வழிமுறைகளில் ஒரு திருப்பம், 1976 ல் வெளிவந்த கிருஷ்ணவேணி என்ற நாவல். கிருஷ்ணவேணி ஒரு தனி மனுஷிதான். ஆனால் தனி மனுஷியாக அவளுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மேடு பள்ளங்கள் பற்றிய பிரச்சினை அல்ல இந்த நாவலின் கதைப்பொருள். மகளிர் விஜிலென்ஸ் ஹோம் ஒன்றில் சூப்பரின்டென்டாக, கிருஷ்ணவேணி பல பெண்களின் வாழ்க்கை அனுபவங்களை தன்னுடையதாகக் கொண்டு, எவ்வாறு ஒரு வளர்ச்சி பெற்ற மனிதாபிமானம் மிக்க சமுதாய கட்டமைப்பு செய்கிறாள் என்பதை நோக்கமாகக் கொண்டது இந்த நாவல்.

பெண்கள் சமுதாயத்தில் எத்தகைய பொருளாதார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் சரி, அவர்கள் வாழ்க்கையில் பற்பல நிலைகளில் பற்பல இம்சைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது என்று காட்டுகிறது இந்த நாவல்.

இம்சைக்கு உள்ளாகுபவர்களையே, அதாவது பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாகப் பார்த்து தண்டனை அளிக்கும் சமுதாய நீதி முறையையும், சட்டத்தையும் விமர்சிக்கிறது இந்த நாவல்.

சீட்டாட்டத்திற்கும் குடிப்பழக்கத்திற்கும் எல்லாவற்றையும் அழித்துவிட்டு மனைவி, குழந்தைகளின் பசியைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் கணவனை விட்டுவிட்டு, குழந்தைகளை வளர்ப்பதற்காக வாழும் வழியைத் தேடிக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறிய சுசீலா குற்றவாளியாக பார்க்கப்படுகிறாள். மனைவி, குழந்தைகள் பற்றிய கடமையை விட்டு விட்டு, அவர்களின் உணவு உடை மருந்து போன்ற எந்த தேவையையும் கண்டு கொள்ளாமல், இன்னொரு பெண்ணோடு தொடர்பு கொள்வதற்குத் தயாராக உள்ள அவளுடைய கணவனின் சமுதாய அந்தஸ்துக்கு எந்தக் குறையும் வரவில்லை. அதோடு அவனுக்கு பெண் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் சூழல் கூட காணப்படுகிறது. அரசாங்கம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று சட்டம் வைத்தது. ஆனால் மற்றொரு பெண்ணோடு தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்ல முடியாமல் போனது. மனைவி, குழந்தைகளுக்கு உணவு அளிக்காமல் சித்திரவதை செய்வது தனிமனித விஷயம் என்று சும்மா இருக்கிறதே தவிர, அதனைக் குற்றமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் சமுதாய நீதி இல்லை, குழந்தைகளுக்கு சோறு போடாமல் தவிக்க விட்ட ஆண் மகனுடைய திமிர் குற்றம் அல்ல. ஆனால் அவர்களின் பசியை ஆற்றுவதற்கு உடல், கை, மற்றும் உடலின் எந்த உறுப்பையும் விலைபேசுவதற்குத் தயாராகும் பெண் மட்டும் குற்றவாளியாக தண்டனைக்கு உரியவளாகிறாள்.

சிறை போன்ற குடும்ப வாழ்க்கை, குலக் கட்டுப்பாடுகள், பெண் எனபதால் விதிக்கப்படும் தடைகள் – இவற்றின் இடையில் மூச்சு விட முடியாமல் சுதந்திரத்திற்காக வெளியில் வந்து விபச்சாரம் செய்த பெண் கீதா குற்றவாளியாக குற்றம் சுமத்தப்படுகிறாள். அவளிடம் வந்து சுகப்படும் ஜட்ஜ் போன்ற ஆண்களின் அந்தஸ்து சற்றும் குறையவில்லை. எந்த குற்றத்துக்காக விஜிலன்ஸ் ஹோமில் கீதா தண்டனை அனுபவிக்கிறாளோ அதே குற்றத்தின் பங்குதாரரான ஜட்ஜ் அந்த விஜிலன்ஸ் நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக வரக்கூடிய நிலை உள்ளது.

ஒரு மகளுக்குத் தாயாகி தனிமையில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவள் கண்ணை மறைத்து உறவுகளை மதிக்காமல் இரண்டாம் மனைவியின் மகளைக் கூட அனுபவிக்கும் கீழ்த்தரமான மனிதர்களுக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் இருக்கவே இருக்கிறது. ஆனால் அந்த ஆணின் கீழ்த்தரமான செயலுக்குப் பலியாகிய ஆரோக்கியம் போன்ற பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு, வேறு வழியில்லாமல் விபச்சாரத்தில் இறங்கி, குற்றவாளி என்ற முத்திரையைத் தாங்க வேண்டிய வருகிறது.

உதவியற்ற நிலையில் பலாத்காரத்திற்கு ஆளான பெண், குழந்தைகளுக்கு ஆறுதலோ அடைக்கலமோ உதவியோ அளிக்காததோடு, தனிமை, ரகசிய வாழ்க்கை என்ற தண்டனைகளை விதித்து, மானம், அவமானம் என்று பார்க்கும் குடும்பங்களின் மனிதத் தன்மையற்ற இயல்பு ஒருபுறம். சாலை ஓரத்தில் காய்கறி விற்கும் பெண்களைக் குற்றவாளிகளாக கணக்கிட்டு, மாதாமாதம் மாமூல் வசூல் செய்யும் போலீஸ் அமைப்பு மறுபுறம். இப்படிப்பட்ட பல இந்த நாவலில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

ஒருவரை குற்றவாளியாக நிற்க வைத்துத் தண்டனை கொடுக்கும் அமைப்பில், அவர்களை அவ்வாறு ஆக்கிய குற்ற சமுதாயத்தின் மூல காரணங்களைப் பார்க்க சொல்கிறது இந்த நாவல். பெண்ணை பல விதங்களில் உதவியற்ற நிலைக்குத் தள்ளி, அவளைக் கொள்ளை அடிப்பதற்கும், தாக்குவதற்கும் அனைத்து அவகாசங்களும், ஆண்களுக்கு அளித்த சமுதாயத்தில் உண்மையான குற்றவாளிகள், அந்த ஆண்களும், அவர்களுக்கு சிறப்பான அதிகாரங்களை அளித்த சமுதாய அமைப்புமே என்று எழுத்தாளர் கூறாமலே கூறுகிறார்.

ஜெயலட்சுமி என்ற நாவல்

ஜெய-லட்சுமி என்ற நாவல் இதே மகளிர் பெண் விஜிலென்ஸ் இல்லத்தை மையமாகக் கொண்டு நடக்கும் கிருஷ்ணவேணி நாவலின் தொடரச்சி. இந்த இரண்டு நாவல்களையும் சேர்த்துப் பார்த்தால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளின் தீர்வுக்காக அமல்படுத்தும் சட்டங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட அரசாங்க அமைப்புகள், கிருஷ்ணவேணி போன்று அர்ப்பணிப்போடு உத்தியோகம் செய்பவர்களின் முயற்சி – இவை எதுவுமே போதாமையாக இருக்கும் ஒரு நிலைமை பற்றி அறிந்து கவலை ஏற்படுகிறது.

ஆனால் அதே நேரம், ஆணாதிக்க அதிகாரம் கொண்ட சமுதாயக் கட்டமைப்பில் முழுமையான மாற்றங்கள் பற்றியும் சமுதாயத்தில் மட்டுமின்றி அரசாங்க அமைப்பிலும் ஆழமாக ஊடுருவிப் போன இரட்டை ஒழுக்க விழுமியங்களின் கலாச்சாரத்தை பற்றியும் கேள்வி எழுப்புகிற நாவலாக பிறவற்றை விட இதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.

சத்யோகம் என்ற நாவல்

மாலதி சந்தூரின் நாவல்களில் குறிப்பிடத்தக்க நாவல் சத்யோகம். கிருஷ்ணவேணி, ஜெய-லட்சுமி நாவல்களில் கிருஷ்ணவேணியை உற்சாகமானவளாகவும் சாமர்த்தியசாலியாகவும் உள்ள ஒரு உத்தியோகஸ்தராகச் சித்திரித்து அனைத்திந்தியப் பெண்கள் தசாப்தத்தில் ஆண்களுக்குச் சமமாக தம் சக்தியையும் சாமர்த்தியங்களையும் உபயோகிக்கக்கூடிய தனியாளுமை உயிர்ப்பு கொண்டிருந்த பெண் மாதிரியைக் காட்டிய மாலதி சந்தூர், அதே ஆண்டு வேலை விஷயமாக ஒரு பெண் தன்னைத்தான் நிலைநிறுத்திக் கொள்வதற்கும், நிரூபித்துக் கொள்வதற்கும் செய்த வெற்றி தரும் முயற்சிகளை கதைப் பொருளாகக் கொண்டு சத்யோகம் என்ற நாவலை எழுதுகிறார்.

தந்தைக்கு அடங்கிய பெண்ணாக, அண்ணன் சொல் கேட்கும் தங்கையாக அவர்கள் படிக்கச் சொன்ன சட்டப்படிப்பை படித்து அவர்கள் சேரச் சொன்ன லாயரிடம் ஜூனியராகச் சேர்ந்த சுமித்ரா தனக்கென்று ஒரு தனிப்பட்ட உத்தியோக வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு மூன்று ஆண்டு அனுபவத்தில் எந்த விஷயங்களைக் கற்று, எந்த நிலைமைக்கு உயர்ந்தாள் என்பதைக் காட்டுவதே இந்த நாவலின் நோக்கம். அந்த ரீதியில் நீதிமன்றம், மாதிரி வழக்குகள், வழக்கு விசாரணைகள், சாட்சி ஆதாரங்களின் சேகரிப்பு, வழக்கறிஞரின் அலுவலகம் போன்ற பல விவரங்கள் இதில் ஒரு பகுதியாக உள்ளன.

முன்பு அவளிடம் தகாத முறையில் நடந்துகொண்டு குற்றம் புரிந்தவனிடமிருந்து தப்பித்து தன் வாழ்க்கையைத் தான் வாழ்வதற்கு முயற்சிக்கும் அவளைப் பின் தொடர்ந்து வேதனை செய்யும் ஒருவன் ஒரு திருட்டு வழக்கில் குற்றவாளியாக வருகிறான். முதலில் அவனை எதிர்கொள்வதற்குத் தயங்கினாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விட்டு, பாரபட்சம் இல்லாத கண்ணோட்டத்தோடு வழக்கை விசாரித்து வாதிக்கத் தேவையான அறிவைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் தேவை ஒரு வழக்கறிஞருக்கு உள்ளது என்பதை சீனியர் கூறிய பின் அந்த வழியில் தன் தனித்துவத்தை மாற்றிக்கொண்டு அந்த வழக்கை வெல்வது அவள் சாதித்த வெற்றி. அது சீனியர் லாயர் வெங்கட்ராமன் அவளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கை கொடுத்துத் தொழில் ரீதியாக கூட்டாளியாக மதிக்கும் நிலைமைக்கு அவளை உயர்த்துகிறது.

இந்த நாவலில் மற்றும் ஒரு முக்கிய அம்சம் நீதிமன்றத்தில் சக ஊழியர்களாக இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் நிலவும் நட்பும் உறவும் எந்த நிலையில் உள்ளது என்பன பற்றிய காட்சிகள். பெண்களை பாலியல் பொருளாக மட்டுமே பார்ப்பதற்கு பழக்கப்பட்டுப் போன சமுதாயத்தில் பணியகங்களில் அவர்களை சக உத்தியோகிகளாகவோ, சக மனிதர்களாகவோ, நண்பர்களாகவோ பார்க்கும் பண்பாடு ஆண்களுக்கு வருவதில்லை என்பதைப் பற்றிய குறிப்பு நாவலில் வெளிப்படுகிறது. படித்து, பணி புரிவதற்கு வெளியில் வந்த பெண்கள் கூட இந்த விதமான சம்பிரதாய கருத்துகள் நிறைந்த புத்தியுடன் இருக்கிறார்கள். அதன் பலனாக பெண்களை ஜூனியர்களாக வைத்துக் கொள்ளும் ஆண் லாயர்களின் அதிர்ஷ்டம் பற்றிய பொறாமையும், அவர்களிடையே உள்ள தொடர்பு குறித்த புகார்களும் நீதிமன்ற வளாகத்தில் சுற்றி வருகின்றன. இந்த நிலைமை மாறவேண்டும் என்பதே நாவலாசிரியையாக மாலதி சந்தூரின் விருப்பம். அதற்கு அனுகூலமாக சந்தர்ப்பங்களையும் உரையாடல்களையும் நாவலின் கதையம்சத்தில் ஒரு பகுதியாக்கியுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் அறையில் மேரிக்கும் சுமித்ராவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் அப்படிப்பட்டது.

தொழில் ரீதியாக சுமித்ரா, ஜூனியர் லாயராக வேலை பார்ப்பது சீனியர் வெங்கட்ராமனிடம். தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டு சாமர்த்தியமான வழக்கறிஞராக அவள் வளர்கிறாள். ஆனால் காந்தாமணி, சீனியர் லாயர், ஜூனியர் லாயர் என்ற வேறுபாடுகளுக்கு மாறாக ஆண் பெண் என்ற பாலியல் ரீதியாக அவளைப் பார்க்கிறாள் என்பது மேரியின் பேச்சு மூலம் புரிந்த போது சுமித்ரா ஆடிப்போகிறாள்.

அவ்வாறு சக உத்தியோககளை ஆண், பெண் என்று வேறுபடுத்திப் பேசும் முறை தூய்மையான உள்ளங்களைக் குப்பையாகச் செய்வது என்று மேரி தெரிவிக்கிறாள். வேலை செய்யும் இடங்களில் ஆண் பெண் இருவரும் அந்தப் பணிக்குத் தேவையான உடல் மற்றும் மூளையின் திறமையை வெளிப்படுத்தக்கூடிய இரு மனிதர்களாகவே இருப்பார்கள். இருக்க வேண்டும் கூட. அவ்வாறின்றி அவர்களுடைய பெண்மைக்கும் ஆண்மைக்கும் அங்கு இடமில்லை என்று மாலதி சந்தூர் தெளிவாகக் கூறியதாகத் தெரிகிறது.

பணியிடங்களில் பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராக விசாகா வழக்கு மீது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு (1997) அளிப்பதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே வேலை இடங்களில் ஆண் பெண் உறவுகளை புனரமைக்க வேண்டும் என்ற தேவையை சுட்டிக் காட்டுவது இந்த நாவலில் உள்ள சிறப்பு. பாலியல் குறித்து முன்னேற்றச் சிந்தனை பெற வேண்டிய ஜனநாயக கண்ணோட்டத்தை கதையம்சத்தில் பிரிக்க முடியாத பகுதியாக எடுத்துச் செல்வதும் சத்யோகம் நாவலின் மற்றும் ஒரு தனிச்சிறப்பு.

இந்த நாவலில் லாயர் சுமித்ரா பதினாறு பதினேழு வயதிலேயே அறியாமையால் சரியான புரிதல் இல்லாமல் ஒரு இளைஞனை ஹீரோவாக எண்ணி மயங்கி அவனோடு போய் ஒன்றிரண்டு மாதங்களிலேயே அவனுடைய சேற்றில் சிக்கிக் கொண்டதை உணர்ந்து தப்பித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பிய இளம்பெண். சம்பிரதாய விழுமியங்கள்படி கற்பிழந்த பெண்ணாக சுமித்ரா நிந்தையையும் அவமானத்தையும் சுமந்து வாழ்நாள் முழுவதும் குன்றிப் போக வேண்டும். ஆனால் மாலதி சந்தூர் நவீன ஜனநாயக சமுதாயத்தில் காலம் கடந்த அந்த விழுமியங்களை வேலைக்காகாது என்று ஒதுக்கிவிட்டு புதிய விழுமியங்களின் கட்டமைப்புக்குத் தோதாக மனிதர்களின் பண்பாட்டை புனரமைப்பு செய்யும் வேலையில் ஈடுபடுகிறார்.

கற்பு, புனிதம், கற்பிழப்பது, புனிதமற்ற பெண்களின் வாழ்க்கை வீணாவது முதலான அம்சங்கள் குறித்த ஆவேசமான சர்ச்சைகளோ வாக்குவாதங்களோ இல்லாமல் பெற்றோர் அவளை எந்தக் கேள்வியும் சந்தேகமும் இல்லாமல் ஆதரித்துக் காப்பாற்றி, கல்வி அளித்ததோடு கூட ஆஸ்தியில் ஆண் பிள்ளைக்குச் சமமாக பங்கு கொடுத்ததில் அந்த பண்பாடு தெரிகிறது. அண்ணனும் அண்ணியும் கூட அவளிடம் மிகவும் மென்மையாகவே நடந்து கொள்கிறார்கள். அது சுமித்ராவின் தனிப்பட்ட ஆளுமைக்கும் உத்தியோக அபிவிருத்திக்கும் மிகவும் உதவுகிறது. குடும்பத்திலும் சமுதாயத்திலும் இது விரும்பக்கூடிய மாற்றம் என்பது நாவலாசிரியையின் அபிப்பிராயம்.

சுமித்ராவின் கடந்த காலம் பற்றித் தெரிந்த பின்னும் அவளிடம் வெங்கட்ராமனுக்கு இருந்த கௌரவமும் அன்பும் வாத்சல்யமும் சிறிதும் குறையாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. ஒரு பெண்ணின் கௌரவமும் மரியாதையும் புத்தி கூர்மையும் திறமையும் ஆணா பெண்ணா என்பதைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவது அநியாயம் என்பதை அறிந்த வழக்கறிஞர் வெங்கட்ராமன். தான் தவறிழைத்து வஞ்சிக்கப்பட்ட அந்த நேரத்தில் இருந்த மானசிக நிலையையும் அறியாமையையும் தாண்டி மிகவும் வளர்ந்த சுமித்ரா ஒரு கட்டத்தில் தன் தவறுக்கு காரணமான மனிதன் திருடனாக எதிர் வந்தபோது வருந்தி, குழப்பத்தில் ஆழ்வது அர்த்தமற்ற செயல் என்று அவளுக்கு எடுத்துக் கூறி, பிரச்சினையை எதிர்கொண்டு தீர்வு காணும் குணம் அவளிடம் வளர்வதற்கு உதவி செய்தார் வெங்கட்ராமன். அவ்விதமாக பெண்கள் கற்பு பற்றிய சம்பிரதாய எண்ணங்களை விட்டுவிட்டு முன்னேறுவதற்கான புதிய புரிதலைப் பற்றி எடுத்துரைக்கிறது சத்யோகம் நாவல்.

காஞ்சனம்ருகம் (தங்கமான்) என்ற நாவல்

1986ல் பிரசுரிக்கப்பட்ட காஞ்சனம்ருகம் என்ற நாவலும் ஆண் பெண் என்ற பால் வேற்றுமை தொடர்பான புதிய விழுமியங்களை முன்னெடுத்தாலும் கதையம்சம் ஒரு டிடெக்டிவ் நாவல் வகையில் கட்டமைக்கப்பட்டு, கடந்த காலத்தைப் பல அடுக்குகளாக வெளிப்படுத்தி, ஒரு பணக்கார இல்லத்தரசி தன் மகளை ஆணாதிக்க பாலமைப்பு நீதிக்குப் பலியாகாமல் எவ்வாறு காப்பாற்றிக் கொண்டாள் என்பதை நிரூபிக்கும்விதமாக விரிகிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவக் கூடிய பாலுறவு, அவற்றின் பரிணாமங்கள், அவற்றின் தாக்கம் ஆகியவை பற்றிய சரியான புரிதல் இல்லாத சமுதாயத்தின் மீதும் அப்படிப்பட்ட அறிவைக் கொடுக்க முடியாத அரசாங்க அமைப்புகளின் மீதும் மாலதி சந்தூருக்கு ஒரு அதிருப்தி உள்ளது. கிருஷ்ணவேணி நாவலிலும் அதுவே வெளிப்படுகிறது.

ஆண் பெண் உறவை ஆர்வமூட்டும் விதமாகவும் ஈர்க்கும்படியாகவும் சித்திரிக்கும் பத்திரிகைகள், நாவல்கள் முதலானவை இளமைப்பருவத்தில் அடிஎடுத்து வைக்கும் இளைஞர்களை காதல் மயக்கத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்கிறது என்பதை சத்யோகம் நாவலில் குறிப்பிடுகிறார் மாலதி சந்தூர்.

காஞ்சனம்ருகம் என்ற நாவலில் தெரிந்தும் தெரியாமல் இருக்கும் அறியாத வயதில் ஆர்வக் கோளாறால் ஏற்படும் உடலுறவுகள், அவற்றின் விளைவுகள், எதிர்பாராத விரும்பத்தகாத கருப்புத்தரிப்பு, அந்த விஷயம் வெளியில் தெரிந்தால் கெட்டுப் போகும் வாழ்க்கை, அவற்றை விவேகத்தோடு சரிசெய்து கொள்வதற்கு அவரவர்களே தங்கள் எல்லைகளில் செய்யும் முயற்சிகள், அவற்றின் விளைவுகள் ஆகியவற்றை சித்திரிக்கிறார். இதில் பெண்ணை மோசம் செய்தான் என்ற குற்றச்சாட்டு ஆண் மீதோ, கற்பை இழந்த அவமதிப்பு பெண் மீதோ இல்லாமல் இருப்பது சிறப்பு.

சத்யோகம் நாவலில் சுமித்ராவுக்கு கிடைக்காத திருமண வாழ்வு காஞ்சனம்ருகம் நாவலில் பங்கஜத்திற்கு கிடைக்கிறது. விளைவுகள் தெரியாமல் நடந்த ஆபத்தாக மட்டுமே கர்ப்பத்தை பார்க்க வேண்டும் என்றும் அது அவளுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு தடையல்ல என்றும் எடுத்துக் கூறி மகளை சாதாரண மனுஷியாகச் செய்த தாயின் வளர்ப்பால், அந்த ஆபத்தை பற்றி எடுத்துக் கூறி தடை கூறாதவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற பண்பாடு பங்கஜத்திடம் மலருகிறது. அதே விதமாக மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அவளுக்கு கிடைப்பதைப் பார்க்கிறோம். அதோடுகூட இந்த நாவல் பெண்களுக்கு கை விலங்காக மாறிய தாய்மை தொடர்பான மூடநம்பிக்கைகளையும் உடைத்தெறிகிறது.

விரும்பத்தகாத கருத்தரிப்பு காரணமாக அன்று என்றோ பிறந்த பிள்ளை, செத்துவிட்டான் என்று கூறப்பட்ட பிள்ளை, உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்த போது இருபது ஆண்டுகளாக இல்லாத பாச உணர்ச்சி, கண்ணால் கூட பார்க்காத ஒரு உயிரின் மீது எவ்வாறு ஏற்படும்? ஏற்படாது என்று கூறுகிறாள் பங்கஜம்.

பங்கஜத்தின் தாய் தன் சந்திரஹாரத்தை காணிக்கையாக கொடுத்த அந்த பிள்ளையின் பிறப்பு வரலாற்றை தேடிச் சென்று உண்மையை அறிந்து கொண்ட பிரசாத்துக்கு அவள் நடத்தை இயல்பானதாகத் தோன்றவில்லை. பாலியல் பலாத்காரத்தால் விளைந்த விருப்பமற்ற கர்ப்பத்தால் பிறந்தாலும் பெற்ற பிள்ளைகளின் மீது பெண்களுக்கு அன்போ பாசமோ இல்லாமல் போகாது என்பது அவனுடைய நம்பிக்கை.

மகன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்த போது அவள் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகப் போகிறாள் என்று நினைத்த அவனுக்கு அவளுடைய நடத்தை இயற்கைக்கு விரோதமாக தோன்றுவது இயல்பு. இங்கு பிரசாதின் கண்ணோட்டம் சாதாரண ஆணின் பார்வையை முன்வைக்கிறது. அது ஆண்களின் கண்ணோட்டம் என்று மாலதி சந்தூருக்குத் தெரியும். அதற்கு மாறாக பெண்கள் நடந்து கொண்டால் ஆணாதிக்கம் அடிபட்டு போகும் என்று கூட அவருக்கு தெரியும். அதனை அவர் பிரசாதின் வாய்வழியே விமரிசனம், சுய பரிசோதனை என்ற விதமாக, மூர்த்தியோடு நடந்த உரையாடலில் ஒரு பகுதியாகக் காட்டுகிறார். கற்பு, தாய்மை என்னும் மாயத் திரைகளை கிழித்துக் கொண்டு பெண்கள் சைதன்யம் உள்ளவர்களாகும் இந்த காலத்திற்கு தகுந்தாற்போல் ஆண்களும் தம் அதிகார, அகங்கார இயல்புகளை விட்டு விட வேண்டும் என்ற எச்சரிக்கை அதில் தெரிகிறது.

ராகரக்திமா என்ற நாவல்

ராகரக்திமா என்ற நாவல் சிறு வயதிலேயே அத்தை வீட்டில் வளர்ந்து, பிறந்த வீட்டின் ஏழ்மையால் வருந்தி, தன் உடன்பிறந்தவர்களை முன்னேற்றுவதற்காக திருமணத்தைக் கூட ஒத்திப்போட்டு, வேலையில் சேர்ந்து பொறுப்புகளை தலைமீது எடுத்துக் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்ட ஒரு பெண்ணின் கதை.

வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகச் செய்து கொள்வதில் கல்விக்கும் பண்பாட்டிற்கும் விவேகத்திற்கும் அறிவுக்கூர்மைக்கும் இருக்கும் முக்கியத்துவத்தையும் தன்னம்பிக்கையும் நியாய நிர்ணய சக்தியும் பெண்களின் வாழ்க்கையை ஒளிவிடச் செய்யும் முறைகள் என்றும் இந்த நாவல் சித்திரிக்கிறது. (அப்பூரி சாயாதேவி, நவலாமாலதீயம்).

1977 ல் பிரசுரிக்கப்பட்ட என்னி மெட்லெக்கின்னா… (எத்தனை படிகள் ஏறினாலும்) என்ற நாவல் இவை அனைத்திற்கும் மாறாக ஆண்களின் வாழ்க்கையில் இருக்கும் அதிருப்திகள், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உடலுறவுத் தொடர்புகள், மோதல்கள், அவற்றின் விளைவுகள் ஆகியவற்றைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது.

1977 லிருந்து 79 வரை இரண்டாண்டு காலத்தில் வந்த நாவல்களில் ஏமிடீ ஜீவிதாலு (இதென்ன வாழ்க்கை) என்ற நாவலிலும் ரெக்கலு, சுக்கலு நாவலிலும் கதையம்சம் அன்பில்லாத திருமணங்கள். வரதட்சணைக்காக செய்து கொண்ட திருமணங்கள், ஒருவருக்கொருவர் மன ஒற்றுமை இல்லாத தாம்பத்தியங்கள், பணிபுரியும் இடத்தில் ஏற்படும் உறவுகளால் கிடைக்கும் இனிமையையும் சிறப்பையும் அனுபவித்த பின் திருமணத்தால் ஏற்பட்ட உறவில் இணைய முடியாமல் போவது போன்றவை அனைத்தும் ஆண்களின்பாற்பட்ட பிரச்சனைகள். அப்படிப்பட்ட ஆண்களுக்கு வாழ்க்கைப்பட்ட மனைவிகளாக பெண்கள் படும் அவஸ்தைகள், மோதல்கள், செய்து கொள்ளும் சமரசங்கள் ஆகியவையும் இவற்றில் ஒரு பகுதியே. மொத்தத்தில் ஆண் பெண் உறவுகளின் ஈர்ப்புகளுக்கும் இயல்புகளுக்கும் பழக்க வழக்கத்திற்கும் நடுவில் மனிதனின் ஆசைக்கும் சமூக அமைப்பின் தர்மத்திற்கும் இடையில் நிகழும் மோதல்களை ஆண்களின் புறத்திலிருந்து சித்திரிக்கும் நாவல்கள் இவை.

மனசுலோனி மனசு என்ற நாவல் சினிமாவுக்கு ஏற்ற கதையாக உள்ளது. செல்வந்தர் குடும்பத்தில் பேரனை பெற்றுக் கொடுப்பதற்காக பாட்டி தேர்ந்தெடுத்த நடுத்தர வர்க்கத்து தன்மானம் உள்ள இளம் பெண் அருணாவை மையமாகக் கொண்டு நடக்கும் நாவல் மனசுலோனி மனசு.

சுயமரியாதை இல்லாதவனோடு நடந்த திருமணத்தில் தன் தனித்தன்மை என்னவாகுமோ என்ற திகில், வம்சத்திற்கு வாரிசை பெற்றுத் தரும் ஜீவனாக அன்றி ஒரு பெண்ணாக, மனமும், சுயமரியாதையும் உள்ள சக மனுஷியாகப் பார்க்க இயலாத பாட்டியின் அதிகாரத்தின் மீது உள்ள உள்ளார்ந்த வருத்தம் ஆகியவை இந்த பாத்திரத்தில் வெளிப்படுகின்றன. அவர்கள் எத்தனை செல்வந்தராக இருந்தாலும் சுய கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுகிறது என்பதால் எதிர்க்கத் துணியும் குணம்கொண்ட கதாநாயகி வாசகர்களை ஈர்க்கிறாள்.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ஜீ டிவியில் தொடராக வந்த மங்கம்மாகாரி மனமராலு என்ற கதைக்கு மூலம் இந்த நாவல்தான் போலும் என்று தோன்றுகிறது.

Series Navigation<< மாலதி சந்தூர், ரேணுகா தேவிஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.