அன்பின் அளபெடைகள்
எதற்கும்
பெறுமதியில்லாத
பெரு மதியில்லாத
பெரும் பூசலுக்குப் பின்
பெயர்ந்து கிடந்தது
இடங்களோடு இதயங்கள்……
முகம் காட்டாது
முதுகுரசிக்
காட்டிக் கொண்ட கோபங்களில்
கட்டிக் கொண்டு கிடந்தது
சமரசத்தின் இதயங்கள்……..
எத்தனை முயற்சித்தும்
எத்தனை பயிற்சித்தும்
முரண்டு பிடித்தே நீள்கிறது இந்த
அன்பின் அளபெடைகள்……
செல்லாக் காசு

எல்லா
அசிங்கத்தையும்
யதார்த்தம் ஆக்கி
எல்லா
அசௌகரியத்தையும்
எளிய வாழ்வென விளக்கி
எல்லா
சாதனைகளையும்
சாதிக்குள் அடக்கி
எல்லா
வித்தைகளையும்
விலை பேசி மடக்கி
எல்லா
வித்தகனையும்
விகடன் ஆக்கி
எல்லா
ஒழுக்கத்தையும்
ஒன்றுமில்லையென விலக்கி
எல்லா
கோணலையும்
நேர்தான் என்று பழக்கி
எல்லார் கை நிறைத்துப்
பொல்லார் தருவதெல்லாம்
செல்லாக் காசெனச்
சென்றே சேருமே
என்றேனுமோர் நாளே…….
ஓர் வார்த்தை
அத்தனை பரிசுத்தங்களையும்
அசாதாரணமாய் ஓர் வார்த்தை உடைக்கும்….
அத்தனை ஒழுக்கங்களையும்
அசாதாரணமாய் ஓர் வார்த்தை
கேள்வியாக்கும்…..
அத்தனை நியாயங்களையும்
அசாதாரணமாய் ஓர் வார்த்தை
எதிர்க்கும் ….
விரலிலிருந்தும் இதழிலிருந்தும்
விழும் முன் வார்த்தைகள்
விழுந்த பின் வெறும் எச்சங்கள்……
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
