தமிழக வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டு என்பது அரசியல், சமூகவியல், சமயவியல் எனப் பல துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமாகக் கருதத்தக்கது. இயற்றமிழாசிரியர் கி. விசாகப்பெருமாளையர், இராமலிங்க அடிகளார், மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் இக்காலகட்டத்தவர்களே. இவர்களின் வரிசையில் வைத்து எண்ணத் தக்க மற்றொரு முக்கியமான வைணவ சமய ஆளுமைகளாகத் திகழ்ந்த புதுவை விலக்ஷணகவி. ஏ. வே. இராமானுச நாவலர் ஆவார்.
எந்த ஓர் ஆய்வையும் வரலாற்றுப் பின்னணியோடு தான் அதன் உண்மையான நிலைகளும் முழுமையான விளக்கங்களும் விரிவான சூழல்களும் வெளிப்படுகின்றன. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் என விட்டுவிடக்கூடாது. அதனைச் சீர்தூக்கிப் பார்த்து நிறைகுறைகளை அறிந்து எதிர்வரும் காலத்தில் எதையும் செம்மை செய்ய வழி காண வேண்டும். ஒன்றன் வரலாற்றுச் சூழல் தெரிந்தால் தான், முன் நடந்தவற்றை உள்வாங்கிக்கொண்டு தற்போது நடக்க வேண்டியதைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும், எதிரது போற்றவும் முடியும். இதனால் தான் பிரான்சிஸ் பேக்கன் என்னும் வரலாற்று அறிஞர் “History is a discipline which makes men wise” (நடராசன் 13) என்று கூறுகிறார் என ஆ.கோ. நடராசன் எடுத்துரைக்கிறார். அவரின் கூற்றின்படி இராமானுச நாவலரின் காலச் சூழல் எவ்வாறு அமைந்திருந்தது என்ற சித்திரம் துலக்கம் பெற்றால் தான் அவரின் பணிகளுக்குரிய முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள இயலும்.
ஐரோப்பியர்களான போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் 16 ஆம் நூற்றாண்டு தொடங்கி தமிழகத்தில் மதப் பரப்புதல் பணிகளில் ஈடுபட்டுவந்தனர். கி.பி. 1517 இல் கோவாவில் நிறுவப்பட்ட அச்சு இயந்திரச் சாலையில் 1577 இல் ‘தம்பிரான் வணக்கம்’ என்ற முதல் தமிழ் அச்சு நூல் வெளிவருகிறது. இராபர்ட்-டி-நொபிலி (1605-1656) வீரமாமுனிவர் (1680-1747), சீகன் பால்கு (1663-1717) போன்ற கிறித்தவ ஆளுமைகள் ஆரம்பகாலக் கிறித்தவ மதப்பணிகளைத் தமிழகத்தில் முன்னெடுத்தனர். இவர்களின் பணிகளால் பல பூர்வீக இந்துத் தமிழக் குடும்பங்களில் மதமாற்றம் நடந்தேறியது. அதன் விளைவாகத் தமிழ்ப்புலமை மிக்க பரம்பரியச் சைவ வைணவப் பின்புலம் கொண்ட வேத நாயக சாஸ்திரி (1774-1864) மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826-1889) எச். ஏ. கிருஷ்ணம்பிள்ளை (1827-1900) போன்ற நபர்கள் கிறிஸ்தவச் சமயச் செய்திகளைத் தமிழ்ச் செய்யுள் வடிவிலும் உரைநடை வடிவிலும் வெளியிடத் தொடங்கினர். இவற்றுள் பல இந்துமதக் கண்டன நூல்களும் அடக்கம். இவை தவிர நாடெங்கும் நிறுவப்பட்ட கிறித்தவக் கல்வி நிறுவனங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியோடு கிறித்தவச் சமயக் கல்வி வழங்கும் பயிற்சிக் கூடங்களாகச் செயல்பட்டன.
இத்தகு மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் சைவ, வைணவப் பெருமக்களில் பலர் எதிர்வினை புரியத் தொடங்கினர். தங்கள் தரப்பு நூல்களைப் பரப்பி சமய அறிவையும் தெளிவையும் உண்டாக்கும் பணியுடன் மாற்றுத் தரப்புக்குரிய மறுமொழிகளை வழங்கும் நூல்கள் பல இக்காலகட்டத்தில் இயற்றப்பட்டன. சான்றாகக் கோயம்புத்தூர் வித்வான் கந்தசாமி முதலியார் சைவ சமயத்தவர்களின் பொருட்டுத் திருபோரூர் கிள்ளைவிடு தூது என்ற நூலை வெளியிடுகிறார். அதை மறுத்து கோயம்புத்தூர்க் கிறிஸ்தவச் சகோதரர்களின் வேண்டுகோளாலும், பொருளுதவியாலும், அவர்களிற் சிலர் கடவுட்குச் செலுத்திய பிராத்தனையின் ஒத்தாசை கொண்டும் மேற்படியூர் கத்தோலிக்க இஸ்கூல் உபாத்தியாயர்களில் ஒருவராகிய வீராஸ்வாமி பிள்ளையென்றும் அழைக்கப்படுகிற, சி. சாமிநாதப் பிள்ளை என்பவர் ‘திருக்கோயைப் பிள்ளை விடு தூது’ என்ற மறுப்பு நூலை எழுதுகிறார். இக்கிறித்தவ நூலை மறுத்து கோயம்புத்தூர் சைவசமாஜீகளில் ஒருவரான வெங்கடராமணதாசர் ‘திருக்கோயைப் பிள்ளை விடுதூதின் மறுப்பு என்கிற சிசுதெளத்திய திறண சண்டை மாருதம்’ என்ற நூலை வெளியிடுகிறார். இந்நூல்கள் 1885-1886 ஆம் ஆண்டுக் காலகட்டங்களில் எழுந்தன.
இவ்வாறு சைவ சமயக் காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலருள் முன்னின்றவர் யாழ்ப்பாண நல்லூர் ஆறுமுக நாவலர் ஆவார். ஆறுமுக நாவலரைப் போல் வைணவ சமயப் பிரதிநிதிகளுள் முக்கியமானவராகக் கொள்ளத்தக்கவர் புதுவை விலக்ஷணகவி. ஏ. வே. இராமானுச நாவலர். இராமானுச நாவலர் மாற்றுத் தரப்பை எதிர்ப்பதைக் காட்டிலும் தம் தரப்பைப் பரப்புவதில் முன்னின்று செயல்பட்டுள்ளார் என்பது கவனிக்கத் தக்கது.

நாவலர் 1831 ஆம் ஆண்டு திண்டிவனத்துக்கு அருகில் உள்ள ‘ஏப்பக்கம்’ எனும் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் வேங்கடராம நாயுடு – அலர்மேல்மங்கை அம்மாள். இளம் வயதிலேயே பல ஆசான்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் வடமொழி நூல்களையும் கற்றுத் தேர்ந்த நாவலர் பலருக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியராகத் திகழ்ந்துள்ளார். ஆரம்ப காலங்களில் இவரின் பெயரை ‘ஏ. வே. இராமானுச உபாத்தியாயர்’ என அழைக்கப்பட்டதைக் கொண்ட இவர் தமிழாசிரியப் பணி மேற்கொண்டுள்ளார் எனக் கருதலாம். மேலும் கலைக்களஞ்சியம் இவரைப் பற்றி உரைக்கும் போது “தாம் கற்றவற்றைப் பிறருக்கு வாரி வழங்கிய நல்ல போதகாசிரியர்” (கலைக்களஞ்சியம் 111) என உரைப்பதும் இவரின் ஆசிரியப் பணியைச் சுட்டுவதாகச் கொள்ளலாம்.
தமிழை முறையாகக் கற்ற, கற்பித்த பயிற்சி காரணமாக இளமையிலேயே இவருக்குக் கவிபுனையும் ஆற்றல் கைவரப்பெற்றிருந்தது. இவர் 1863 ஆம் ஆண்டு முதன்முதலில் எழுதி வெளியிட்ட ‘புருஷார்த்த நிர்ணயம்’ என்னும் ‘பாலசம்வாத வினாவிடை’ என்னும் நூலிலேயே பல பாடல்களைத் தாமே புனைந்து வெளியிட்டுள்ளார்.
அக்காலத்தில் பல சைவப் பெருமக்களுக்கும் இவர் தமிழ் பயிற்றுவித்துள்ளார். புதுவையைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ் அறிஞர் மா. அ. வேங்கடகிருஷ்ணப்பிள்ளை அவர்களுக்கு இவர் ‘அஷ்டப்பிரபந்தம்’ படம் சொல்லியுள்ளார். ‘அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்’ என்றும் ‘அஷ்டப்பிரபந்தம் கஷ்டப்பிரபந்தம்’ என்றும் வழங்கப்பெறும் சொலவடைகள் அஷ்டப்பிரபந்தம் கற்பதன் கடினத்தன்மையைக் காட்டுகின்றன. அத்தகு கடினமான நூலைக் கற்பிக்கும் அளவு இவரின் தமிழ்க்கல்வி செழிப்பானதாக அமைந்திருந்தது கவனிக்கத்தக்கது.
உலகியல் கல்வியில் சிறந்து விளங்கிய நாவலர் தம் சமயக்கல்வியறிவையும் ஐயம்திரிபறக் கற்றுப் பெருக்கிக் கொண்டார். ஐந்தீக்கைச் சடங்கான பஞ்சசம்ஸ்ம்கரங்களைத் திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் ஆதீன மடாதிபதியிடம் பெற்ற நாவலர் ஸ்ரீவானமாமலை பரமஹம்ஸ பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமியிடம் வைணவ சமய தோத்திர நூல்களான பாசுரங்களையும் அவற்றின் பொருள் சிறப்புகளையும் சாத்திர நூல்களான ரகசிய கிரந்தங்களையும் கற்றுத் தெளிந்தார்.
இத்தகைய அருளியல் கல்வியும் பொருளியல் கல்வியுமே பிற்காலங்களில் இவர் ஆற்றவிருந்த எழுத்துப்பணிகளுக்கு அடித்தளமிட்டன.மேலும் இயற்றமிழ் அறிவோடு இசைத்தமிழ்க் கல்வியும் நாவலர் கற்றுத் தேர்ந்தவர் என்பதை அவரின் இசைப்பாடல்கள் உணர்த்துகின்றன.

பிரபந்தங்கள் அல்லது ‘சில்லறைப் பிரபந்தங்கள்’ என அழைக்கப்படும் சிற்றிலக்கியங்கள் 12 ஆம் நூற்றாண்டளவில் வளரத் தொடங்கி 14 ஆம் நூற்றாண்டளவில் பெரு வளர்ச்சி எய்தி 20 ஆம் நூற்றாண்டின் நவீனக் கவிதைகளின் வருகைக்கு முன்பு வரை தமிழ்ச்சூழலில் மலிந்து காணப்பட்டன. நாவலரும் தம் காலமான 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஏற்ப பல்வேறு சிற்றிலக்கியங்களைப் பாடியுள்ளார்.
தேசிகன் திருப்பதிகம், மணவாள மாமுனி திருப்பதிகம், ஸ்ரீ எதிராஜ சதகம், பெருந்தேவித் தாயார் திருப்பதிகம், ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மலை, ஸ்ரீ வரதராஜப் பெருமாள் பதிற்றுப்பத்தந்தாதி, போற்றித் திருப்பதிகம் ஆகியன இவரியற்றிய சிற்றிலக்கியங்கள் ஆகும்.

‘கீர்த்தி’ என்ற வடசொல்லுக்குப் புகழ் என்பது பொருள். இக்கீர்த்தி என்ற சொல்லினடியாகக் கீர்த்தனை என்ற சொல் எழுந்தது. இறைவனைப் புகழ்ந்து பாடுதல் கீர்த்தனை எனப்பட்டது. இக்கீர்த்தனைகள் “இராக தாளத்துடன் இறைவனைத் துதிப்பதற்கும் மன்றாடுவதற்கும் உள்ளத்தின் ஆழ்மன உணர்வுகளை இறைவனிடம் எடுத்துரைப்பதற்கும் பூரண பக்தியில் நிரம்பி இறைவன் செய்த அற்புதச் செயல்களை எடுத்துக் கூறுவதாகும் இருக்கின்றன.” (மைக்கேல் 74)
தமிழகத்தில் இசை மரபு நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் வடிவமைப்பு கொண்ட கீர்த்தனை வடிவம் 15 ஆம் நூற்றாண்டளவில் தெலுங்கில் தோன்றி தமிழுக்கு வந்தது. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்காழி அருணாச்சல கவிராயரின் ‘இராம நாடகக் கீர்த்தனை’ 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கோபால கிருஷ்ண பாரதியாரின் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ போன்ற புகழ்பெற்ற தமிழ்க் கீர்த்தனைகள் எழுந்தன.
முத்துத் தாண்டவர், கனம் கிருஷ்ணைய்யர், முத்துவேலவர் போன்ற புகழ்பெற்ற தமிழ்க் கீர்த்தனையாளர் வரிசையில் நம் நாவலரும் இடம்பெறத்தகுந்தவராகிறார். ஐந்து ரத்தினங்களைப் போல் ஐந்து ராகங்களைத் தேர்வு செய்து ஐந்து கீர்தனைகளாகப் பாடும் தொகுதிக்குப் பஞ்சரத்தினம் என்று பெயர். சங்கீத மும்மூர்த்திகளுள் தலை சிறந்தவரான தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் இசை உலகில் மிகவும் புகழ்பெற்றவை. இத்தாக்கத்தால் தூண்டப் பெற்ற நாவலர் ‘ஆழ்வார் பஞ்சரத்தினம்’ என்ற பெயரால் இசைப்பாக்களைப் புனைந்துள்ளார். இவையன்றி இவர் இயற்றிய வைஷ்ணவ சம்பிரதாயக் கீர்த்தனைகள் ‘பகவந்நாம சங்கீர்த்தனம்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளன. இப்பாடல்கள் ‘நாவலர் ஸ்வாமி கீர்த்தனைகள்’ என்ற பெயரில் வாரந்தோறும் சனிக்கிழமை பஜனைகளிலும் மாதந்தோறும் வரும் இரண்டு ஏகாதசி நாள்களிலும் புவனகிரி, கீரப் பாளையம், கடலூர், பாண்டிச்சேரி பகுதிகளில் திருமால் அடியார்களால் பாடப்படுவதாக அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் ‘ஆலய தரிசனம்’ மாத இதழாசிரியருமான திரு. கோகுலாச்சாரி கட்டுரையாளரிடம் தெரிவித்தார்.
கீர்த்தனைகள் செவ்வியல் இசையான கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுபவை. ஓரளவு கர்நாடக இசைப் பயிற்சி இருப்பவர்களைத் தவிர சாதாரண மக்களால் அவற்றைப் பாடுதல் எளிதல்ல. அனால் நாட்டுப்புறப்பாடல்கள் அவ்வாறானவையல்ல. அது செவ்வியல் வடிவில் இல்லாத காரணத்தால் பெரும்பான்மை மக்களைச் சென்று சேரத் தகுந்த வடிவமைப்பே அதன் தனித்துவம் எனலாம். அவ்வாறு எளிய மக்கள் வாங்கிப் படிக்கும் விதமாக நாட்டுப்புற மெட்டில் நாவலர் இயற்றிய நூல் ‘ஸ்ரீ வைணவ மங்கையர் வாழ்க்கைப்பாடு’.
வைணவர்களின் பெருமை அறியாத மகள் தாயிடம் முறையிடுவதும் அதற்கு விடையாக வைணவ சமயப் பெருமைகள் விளக்கப்படுதலுமாக இந்நூல் செய்யப்பட்டுள்ளது. வைணவர்களின் அன்றாட வாழ்வியல், பிற தெய்வங்களை வணங்காக் கற்பு(மறந்தும் புறந்தொழாமை), பஞ்ச சம்ஸ்காரம் என்னும் சடங்கின் பெருமை எனப் பலச் செய்திகள் இந்நூல் வழி எளிய பாடல் வடிவில் பிரசாரம் செய்யப்பட்டுள்ளன.

தல புராணங்கள் ஒரு தலத்தின் புராண வரலாற்றை மட்டும் பேசும் நூலாகக் கருதப்படத்தக்கதல்ல. தமிழ் இலக்கியப் பரப்பில் அதற்கெனத் தனியிடம் உள்ளது. “மக்கள் போற்றும் கலைகளை வளர்க்கும் இடங்களாகவே நம் கோயில்கள் திகழ்கின்றன. திருகோயில்களை அடிப்படையாகக் கொண்டு அறிவியல், தொழில்நுட்பம், கலைநோக்கு இவற்றோடு சமய வாழ்க்கைக்கும் நிறைவு பயப்பனவாய் முகிழ்த்ததொரு இலக்கிய வகையே தலபுராணங்கள்” (சுப்பிரமணியம் vii) என ச. வே. சுப்பிரமணியம் தெரிவிக்கிறார்.
இத்தலபுராணங்களின் தனிச் சிறப்புகளை “ஒரு தலத்தில் உள்ள இறைவன் புகழை விவரித்துச் சொல்வது தலபுராணம் ஆகும். ஊர்ப்பெயரில் அமைந்த இவ்வகைப் புராண நூல்கள் அவ்வத்தலப் பெருமையையும், மூர்த்தியின் பெருமையையும் தீர்த்தத்தின் பெருமையையும் கூறி, இத்தல இறைவனைப் பூசித்து நற்பேரு பெற்றவர்களின் வரலாற்றை எடுத்துரைப்பன. மக்கள் ஒழுக்கத்தக்க சீரிய ஒழுக்கங்களை எடுத்துக்கூறி விலக்கத்தக்க தீய செயல்களை விளக்குவதும் இவற்றை காப்பிய நயம்பட உரைப்பதும் இந்நூல்களின் சிறப்பாகும். ஒவ்வொரு ஊர் மக்களும் தங்கள் ஊர் பற்றியும் நாடு பற்றியும் பெருமை கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ வழி செய்வன இத்தலபுராணங்கள்” (மாதவன் 27) என வே. இரா. மாதவன் தெரிவிக்கும் கருத்துகள் கவனிக்கத்தக்கன.
கி. பி. 16 ஆம் நூற்றாண்டு முதல் 19 நூற்றாண்டளவில் பல்வேறு தல புராணங்கள் தமிழில் தோன்றின. உமாபதி சிவம் பாடிய ‘கோயிற் புராணம்’ என்னும் நூலே தமிழில் தோன்றிய முதல்த் தலபுராண நூலாகும். இவற்றுள் பெரும்பாலானவை வடமொழியில் இயற்றப்பெற்று தமிழ்ச் செய்யுள் வடிவில் மொழிபெயர்க்கப்பட்டவையே. இன்னும் சொல்லப் போனால் வடமொழி நூல்களை முழுமையாக மொழிபெயர்க்காமல் இப்புராண ஆசிரியர்கள் அவற்றைத் தம் தமிழ்ப் புலமைத் திறன் தோன்ற மொழியாக்கமே செய்துள்ளார்.
நாவலர் இவ்வாறு மூன்று தல புராணங்கள் இயற்றியுள்ளார். ஸ்ரீமுஷ்ணம் என்னும் தலத்து வரலாற்றையுரைக்கும் திருமுட்டத்துப் புராணம், திருவண்ணாமலை என வழங்கப்படும் தலம் வைணவத் தலமே என உரைக்கும் ஸ்ரீசுதரிசனகிரிப் புராணம் சிதம்பரம் ஆலய வளாகத்தினுள் உள்ள 108 திவ்யதேசங்களுள் ஒன்றான திருச்சித்திரக்கூடத்துப் புராணம் ஆகியன இவரால் இயற்றப் பெற்ற தலபுராண நூல்களாகும். இம்மூன்று தல புராண நூல்கள் தவிர ஸ்ரீபாத்மோத்தர புராணம் என்னும் புராண நூலையும் வடமொழியிலிருந்து தமிழ்ச் செய்யுள் வடிவில் மொழியாக்கம் செய்துள்ளார்.
இவற்றுள் “முதலிரண்டு புராணங்களும் கி. பி. 1884 ஆம் ஆண்டு வலயமாதவி என்னும் திருப்பதியில் வேதநாராணயப் பெருமாள் கோவிலில் அரங்கேற்றப்பட்டன. சுதரிசனகிரிப் புராணம் கி. பி. 1885 இல் திருக்கோவலூர் கண்ணன் ஆலயத்தில் அரங்கேற்றப்பெற்றது” (ரெட்டியார் 8) பத்மோத்தர புராணம் 1870 இல் காஞ்சி வைகுண்டநாதப் பெருமாள் சன்னதியில் அரங்கேற்றப்பட்டது என வித்வான் கி. வேங்கடசாமி ரெட்டியார் தெரிவிக்கிறார். சித்திரக்கூடப்புராணம் 61 படலங்களையும் 2030 செய்யுள்களையும் கொண்டுள்ளது. சுதரிசகிரிப் புராணம் 32 படலங்களையும் 1068 செய்யுள்களையும் கொண்டுள்ளது. பாத்மோத்தர புராணம் 4123 செய்யுள்களால் ஆனது.
செய்திகளை நினைவில் வைக்க எளிமையாகவும் கால், கொம்பு, சுழி, புள்ளி முதலியன பயன்படுத்த இயலாத ஏடுகளில் எழுத வேண்டிய காரணத்தாலும் செய்யுள் அல்லது சூத்திர வடிவிலான நூல்களே தமிழகத்தில் பண்டைக்காலம் தொடங்கி இயற்றப் பெற்று வந்தன. இவற்றுள் சில உரை நூல்களும் அடக்கம் எனினும் அவை செய்யுள் நூல்களுக்கான விளக்கங்களே அன்றி உரைநடை வடிவில் எழவில்லை என்பது நோக்கத்தக்கது. அச்சு இயந்திரங்களின் வருகை இந்நிலையை மாற்றியது. ஏறத்தாழ கி. பி. 16 ஆம் நூற்றாண்டு தொடங்கி தமிழில் வசன நூல்கள் அல்லது உரைநடை இலக்கியங்கள் காணப்பெறுகின்றன. குறிப்பாக “வசனநடையை எந்தெந்த விதங்களில் உபயோகப் படுத்தலாம் என்று முயற்சி செய்து பார்க்கிற பரிசோதனைக் கட்டம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே ஏற்பட்டுவிட்டது” (சுப்பிரமணியம்) எனக் க. நா. சு. குறிப்பிடுகிறார்.
இவ்வுரை நடைப் பயன்பாடு சமயத் துறையில் மிக முக்கியமான பிரச்சாரக் கருவியாகக் கொள்ளப்பட்டது. “சென்ற நூற்றாண்டு வரையில் தத்தம் கருத்தைச் செவிவழியாகப் பரப்பி வந்தவருக்கு ‘அச்சியந்திர சாதனம்’ கிடைத்தமையின் அதன் வழியாகத் தத்தம் சமய உண்மைகளைத் தாங்கியவனாக நூலாகவும் இதழாகவும் பலப்பல வெளியிட வாய்ப்பு உண்டாயிற்று”. (பரமசிவானந்தம் 132) அவ்வகையில் நாவலர் வைணவ சமய உண்மைகளைப் பல வசன நூல்களின் வழி வெளியிட்டார். ஸ்ரீ வைஷ்ணவ தத்துவம், வைராக்கிய சூர்யோதயம், ஸ்ரீ சூர்ண விளக்கம், அரிதூஷண கபோலச பேடிகை, சச்சம்பிரதாய தரள மாலிகை போன்றவை இவரியற்றிய வசன நூல்களாகும். இந்நூல்களுள் ‘வைராக்கிய சூர்யோதயம்’ மிகச் சிறந்த நூலாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் முன்னோர்கள் செய்த பல்வேறு வைணவ சமய நூல்கள் பலவற்றின் சாரமாக அமையப்பெற்றுள்ளது.
சமய உண்மைகளை எடுத்துரைக்கும் வசன நூல்களில் மற்றொரு வகை வினா விடை அமைப்பில் நூலியற்றுவது. அவ்வகையில் நாவலர் இயற்றிய பாலசம்வாத வினா விடை குறிப்பிடத் தகுந்த படைப்பு எனலாம். நாவலர் வாழ்ந்த காலகட்டத்தைச் சார்ந்த சைவ சமயப் பெரியரான ஆறுமுக நாவலரின் சைவ வினா விடையுடன் இப்பணி ஒப்புநோக்கத் தக்கது. மேலும் இந்நூல் தெலுங்கு மொழியிலும் மொழி பெயர்ப்பு கண்டுள்ளது.
அச்சு இயந்திரங்களின் வருகை பல்வேறு நபர்கள் நினைவுகளில் சேகரித்து வைத்த நூல்களையும் ஏட்டுச் சுவடிகளில் மட்டுமே இருந்த நூல்களையும் எளிதில் படிக்கும் வண்ணம் நடமாடச் செய்தது. அந்த வகையில் காலங்காலமாக ஆசிரியர் மாணவர் முறையில் வாய்மொழியாகப் பயிலப்பட்டும் சிலரிடம் மட்டுமே ஏட்டுச் சுவடி வடிவில் பாதுகாக்கப்படும் இருந்த நாலாயிர திவ்ய பிரபந்தம் 19 ஆம் நூற்றாண்டளவில் காலத்துக்கு ஏற்ப மாறியாக வேண்டிய தேவையுணர்ந்த பலரின் பெருமுயற்சியால் அச்சுவாகனமேறியது. அவ்வகையில் திவ்ய பிரபந்த முன்னோடிப் பாதிப்புகளுள் ஒன்றாகக் கருதப்படத் தக்க முடிச்சூர் அப்பாவு முதலியார் பதிப்பு 1865 இல் வெளிவந்தது. நாலாயிர திவ்யப் பிரபந்தப் பயிற்சி காலத்துக்குகேற்ப பரவலாக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்த நாவலர் இப்பதிப்பு வெளிவரப் பெரிதும் துணை நின்றுள்ளார்.
19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத் தாக்கம் பெரிய அளவில் பிரச்சாரத்தில் இருந்து வந்தது. அதை எதிர்கொள்ள பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற சீர்திருத்த இந்து இயக்கங்கள் தோன்றின. ஆனால் அவ்வியக்கங்கள் கிறிஸ்தவக் கொள்கைகள் பலவற்றால் தாக்கம் பெற்றனவாகவும் திகழ்ந்தன. சான்றாக ஹிந்து சமய அடிப்படைகளுள் ஒன்றான ஆலய வழிபாட்டை இச்சீர்திருத்த மார்க்கங்கள் ஏற்கவில்லை. பாரம்பரிய வைதீக நெறியில் வந்தோர் இவற்றுக்குத் தக்க மறுப்புகள் வழங்கவேண்டிய சூழல் நிலவியது. நாவலர் வாழ்ந்த பகுதிகளில் இச்சீர்திருத்த இயக்கத்தினர் பிரச்சாரத்தால் பல ஆலயத் திருவிழாக்கள் தடைபட்ட போது நாவலர் அங்குச் சென்று பல சொற்பொழிவுகளாற்றி மக்கள் மனங்களை மீண்டும் வைதீக நெறியின்பால் ஈடுபடச் செய்து தடைபட்டுக் கிடந்த திருவிழாக்களை நடத்தினர்.
சைவ சமய அறிஞராகத் திகழ்ந்த சோமசுந்தர நாயகர் வைணவ சமயத்தைச் சார்ந்த தெய்வங்களையும் ஆழ்வார்களையும் வைணவ சமயப் பிரச்சாரம் செய்த நாவலரையும் இழிவுசெய்து எழுதிய பஞ்சராத்திர மதபேடிகை அல்லது சைவ சூளாமணி என்ற நூலை எதிர்த்து சென்னை பிரெஸிடென்சி மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்து நாவலர் வென்றார். சோமசுந்தர நாயகர் நீதிமன்றத் தீர்ப்பின்படி நூறுரூபாய் அபராதம் செலுத்தி மன்னிப்பும் கோரினார். இந்நிகழ்வு 1890 இல் நடந்தது.
புதுவையில் வாழ்ந்த நாவலரைப் பொன்னரங்கம் பிள்ளை என்னும் வள்ளல் ஆதரித்துள்ளார். தம் நன்றியைக் காட்டும் வகையில் பொன்னரங்கம் பிள்ளையின் வள்ளல் தன்மையை அவரின் ஆதரவால் வெளிந்த ‘ஸ்ரீ பாத்மோத்தர புராணம்’ நூலின் செய்யுள்களில் நாவலர் பாடியுள்ளார். இதை போல் குறிஞ்சிக்கொல்லை அன்பர் முருகப்பிள்ளை என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் ஆதரவிலேயே திருமுட்டப் புராணம் வளையமாதேவியில் அரங்கேறியது. அவ்வள்ளலின் சிறப்பையும் நாவலர் திருமுட்டப் புராணத்தில் குறிப்பிடுகிறார்.
நாவலரின் காலத்தில் வாழ்ந்தவர்களும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலில் தேர்ந்தவர்களுமான கோமளாபுரம் இராசகோபலப் பிள்ளை, திரிசபுரம் கோவிந்தப் பிள்ளை, பள்ளிகொண்டான் பிள்ளை, போன்றவர்களும் சைவ சமயத் தமிழறிஞர்களான விசாகப்பெருமாளையர், அஷ்டாவதானம் சபாபதி முதலியார் போன்றவர்களும் நாவலரின் படைப்புகளுக்குச் சிறப்புப்பாயிரம் இயற்றி நாவலரைப் போற்றியுள்ளனர்.
நாவலரைப் போலவே ‘ஸ்ரீ வைஷ்ணவ வினா விடை’ முதலான பல்வேறு நூல்களின் ஆசிரியரும், தமிழகமெங்கும் பயணித்து வைணவச் சொற்பொழிவுகளாற்றிய அறிஞரும் ஈட்டின் தமிழாக்கம் நூலை வெளியிட்ட பண்டித வித்வான் பு. ரா. புருஷோத்தம நாயுடுவின் பெரிய தந்தையாருமான புவனகிரி அழகிய மணவாள ஏகாங்கி சுவாமிகள் நாவலரின் முதன்மைச் சீடராவார். இவரைப் போல் இன்னும் பலர் நாவலரால் வைணவ ஞானம் பெற்றுச் சிறந்து விளங்கினார்.
பல்வேறு வைணவப் பணிகளை ஆற்றிய நாவலர் பெருமான் 1892 ஆம் ஆண்டு இறைபதம் சேர்ந்தார். அவரின் காலத்துக்குப் பின் அவரின் சீடர்கள் கரூர் அருகில் உள்ள கோயம்பள்ளி, கோலார் தங்கவயல், நாவலர் பிறந்த ஏப்பாக்கம் ஆகிய ஊர்களில் திருமேனியெழுப்பி வழிபடுகின்றனர். மேலும் 1925 ஆம் ஆண்டு முதல் பண்ணுருட்டி என்னும் ஊரில் நாவலரின் திருப்பெயரால் சபை நிறுவப்பெற்று வைணவ மாநாடுகள், சமயப் பிரசார நூல் வெளியீடுகள் ஆகியவை நடைபெறுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நாவலர் தம் காலச் சூழலுக்குத் தக வைணவ சமயம் சார்ந்த பல்வேறு பணிகளை முன்னெடுத்துப் பயணித்துள்ளார். அவர்காலத்துக்குப் பின் அவரின் நூல்கள் சில பாதிப்புகள் கண்டன. அவையும் ஏறத்தாழ வழக்கத்தில் இல்லை. நாவலரின் வரலாறு இனி விரிவாக எழுதப்பட வேண்டும். அவரின் நூல்கள் மின்னூலாக்கம் செய்து பாதுகாக்கப்பட வேண்டும். அந்நூல்களின் செய்யுள் நடையும் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்நடையும் எளிமைப்படுத்தப்பட்டு தற்கால மொழிநடையில் புத்தாக்கம் செய்யப்பட வேண்டும். இவையே நாவலர் மேற்கொண்ட நற்பணிகளை உயிரோட்டமாக வைத்திருக்கும் வழிகள்.

அடிக்குறிப்புகள்
நடராசன், ஆ.கோ. ஆறுமுக நாவலர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 2008. கலைக்களஞ்சியம். தமிழ் வளர்ச்சித் துறை, 1956.
மைக்கேல், த. “கிறிஸ்தவ கீர்த்தனையில் பக்தி”. ஷான்லஸ் பன்னாட்டு ஆய்விதழ். தொகுதி. 3:1, ஜூலை 2018, பக். 73-78. https://www.shanlaxjournals.in/pdf/TS/V3N1/ts_v3_n1_i1_010.pdf
சுப்பிரமணியம், ச. வே. தமிழில் வசன நடை. 2018. – https://www.azhisi.in/2018/11/blog-post_8.html?m=1
சுப்பிரமணியம், ச. வே. “அணிந்துரை.” தமிழில் தலபுராணங்கள், வே. இரா. மாதவன், பாவை பதிப்பகம், 1995, பக். v-xi. https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-40416-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#book/15
மாதவன், வே. இரா. தமிழில் தலபுராணங்கள். பாவை பதிப்பகம், 1995.
ரெட்டியார், கி. வேங்கடசாமி. புதுவை விலக்ஷணகவி ஏ. வே. இராமானுச நாவலரின் வரலாறு. 1958.
பரமசிவானந்தம், அ.மு. 19ஆம் நூற்றாண்டில் உரைநடை வளர்ச்சி. தமிழ்க் கலை பதிப்பகம், 1978. https://www.tamilvu.org/library/nationalized/pdf/53-paramasivanantham/037.pathonpathamnootrandintamilurainadaivalarchi.pdf







Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.


