‘கடைசிக் காலத்தில் காப்பாற்ற ஒரு பிள்ளை வேணும்’ என்பது பழைய திரைப்படங்களில் வரும் பிரபலமான வசனம். நம் கலாச்சாரத்தில் பெற்றோர்களைக் கடைசி வரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது பிள்ளைகளின் கடமையாகவே கருதப்படுகிறது. கூட்டுக் குடும்பமாக வாழும் காலத்தில் கூட பிள்ளைகள் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களுக்கு இருந்தது. சமூகமும் அது பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமையாகக் கருதும் நிலைதான் இருந்தது. மேற்கத்திய கலாச்சாரங்களில் பிள்ளைகள் பதினெட்டு வயதானால் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவார்கள் அதன் பின் அவரவரர் வாழ்க்கைதான் என்ற ஒரு பிம்பம் நமக்குக் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கேயும் பெற்றோரைப் பிள்ளைகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. பெற்றோர்களை தங்களுடனே வைத்துக் கொள்கிறார்களோ அல்லது வயதானவர்களுக்கான குடியிருப்புகளில் வாழ வசதி செய்து தருகிறார்களோ, பெரும்பாலான மேலைநாட்டுப் பிள்ளைகளுக்கும் இந்தக் கடமை இருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆனால் இன்றைக்கு இந்த எதிர்பார்ப்பு வேறு ஒரு பரிமாணம் அடைந்திருக்கிறது. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் 1970களில் பிறந்தவன். இன்றைய தலைமுறை என்னை ‘பூமர் அங்கிள்’ என்று அழைக்கலாம். ஆனால் எனக்கு ‘70ஸ் கிட்’ என்பதில் சிக்கலொன்றும் இல்லை. எங்கள் தலைமுறையில் கூட்டுக்குடும்பங்களாக இருந்த சமூகம் சிதறி அப்பா, அம்மா, குழந்தைகள் என்று சுருங்கிப் போனது. அதிலும் உடன்பிறந்தோர் எல்லாரும் ஒரே வீட்டில் வாழ்ந்தது போய் வேறு வேறு ஊர்களில், மாநிலங்களிலும் வாழும் மாற்றமும் நிகழ்ந்தது. இதிலும் கூட குழந்தைகள் என்று சொன்னாலும் ஒரே ஒரு குழந்தை, அல்லது அதிகபட்சம் இரண்டு பேர்தான் ஒரு வீட்டில். அவர்களும் கல்லூரிப் பருவத்திலேயே வெளியூர் செல்வதும் பின்னர் வேலைக்காக வெளியூரோ வெளிநாடோ செல்வதும் கூட வழக்கமாகிவிட்டது.
இச்சூழலில், இந்தத் தலைமுறை ஒரு பக்கம் தங்கள் வேலை, வளர்ச்சி என்பதில் கவனம் செலுத்த வேண்டும். மறுபுறம் தங்கள் குழந்தைகள், அவர்களின் படிப்பு, வேலை, கல்யாணம் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பது பற்றிய கவலை. பிறிதொரு புறம் எங்கோ தொலைவில் இருக்கும் வயதான பெற்றோரைக் கவனிக்க வேண்டிய கடமை. இப்படி மூன்று அடுக்குகளில் தங்களுக்கான கடமைகளைக் கொண்டிருப்பதால், இந்தத் தலைமுறை ‘சாண்ட்விச் தலைமுறை’ என்று சமூக ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தலைமுறைக்கு அன்பும் காதலும் மிகுந்து இருந்தாலும் அதன் கூடவே ஒருவித சோர்வும், தமக்கும், தம்மைச் சார்ந்திருக்கும் மற்றவர்களுக்கும், எல்லாவற்றையும் சரியாகச் செய்ய முடிகிறதா என்ற கவலையும் குற்ற உணர்ச்சியும், சூழந்து இருப்பதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்தக் கவலைக்கு முக்கியமான காரணம் நம் பெற்றோர்களை நல்லபடியாகக் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உணர்ச்சி. இது அதிக அழுத்தத்தையும் கவலையையும் தருகின்றதாக இருக்கிறது. ஒரு காலத்தில் நம்மை தூக்கி வளர்த்த பெற்றோர், நமக்குத் தேவைப்படும் பொழுது தேவைப்படும் ஆதரவினைத் தந்த பெற்றோர், இன்று எழுபது எண்பது வயதானவர்களாக, அன்றாடத் தேவைகளுக்குக் கூட அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பவர்களாக இருக்கும் உண்மை சுடுகிறது. இது இயற்கையான மாற்றம் என்பதை மனம் உணர்ந்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்வது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.
உறவுகளை பேணக்கூடிய நம்மைப் போன்ற சமுதாயத்தில்கூட வயதானவர்களைக் கவனித்துக் கொள்ள சரியான கட்டமைப்பு இல்லை. முதியோர்களைக் கவனித்துக் கொள்ளத் தேவையான வசதிகள், வயோதிக மருத்துவத்திற்கான முறைகள், முதியவர்களைப் பராமரிப்பவர்களுக்கு இளைப்பாற வழிமுறைகள் என எதுவுமே தேவையான அளவு கிடைப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். நம்முடைய சமூகக்கட்டமைப்பில் முதியோர்களைக் கவனித்துக் கொள்வது குடும்பத்தில் இருக்கும் பெண்கள் தலையில்தான் கட்டப்படுகிறது. குறிப்பாக மருமகள்களும் மகள்களும்தான் வீட்டிலுள்ள முதியோர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது இயல்பான எதிர்ப்பார்ப்பு ஆகிவிட்டது.
முதியோர்களை கவனித்துக் கொள்வதற்குத் தேவையான வழிமுறைகளை யாரும் கற்றுத் தருவதில்லை. போகப் போகப் பாதையைக் கண்டுபிடித்துக் கொள்வது போல முதியோர்களை எப்படி நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் செய்து பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. நமக்கு தேவை என்று நினைத்தே இராத நோய்கள் பற்றிய விபரங்கள், மருத்துவ முறைகள், மருந்து மாத்திரை பற்றிய விபரங்கள் என என்னென்னவோ தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மருத்துவமனைகளுக்கும் மருத்துவ ஆய்வகங்களுக்கும் செல்வது காய்கறிக்கடைக்குச் செல்வதைப் போல இயல்பானதொரு வேலையாகிவிடுகிறது.
இவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் செய்வதற்கு உறுதியான மனமும், அவற்றை செழுமையாகச் செய்திடும் பக்குவமும் நமக்குக் கிடைத்துவிடுகிறது. நம் பெற்றோர்களைப் பார்த்துக் கொள்வது நாம் எங்கிருந்து வந்தோம் என்று நம் வேர்களை நினைத்துப் பார்ப்பதற்கும், நாம் இன்று இருப்பதற்கு அவர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்வதற்கும், நமக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும் அன்பை உணர்ந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பினை அளிக்கிறது. நாம் அவர்களைப் பார்த்துக் கொள்வதை கடமையாக மட்டும் நினைப்பதல்லை, நன்றிக் கடனாகவும் பார்க்கிறோம்.
நம் பெற்றோருக்கு வயது கூடக் கூட அவர்களின் தேவை ஒரே மாதிரியாகவும், இதுதான் என்று எதிர்பார்க்கக்கூடியவையாகவும் இருப்பதில்லை. அவர்கள் தேவைகளுக்கெல்லாம் ஈடு கொடுக்க நம் வாழ்வுமுறைகளில் நாம் பெரும் சமரசத்தைச் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது, நம்மைப் பல விதங்களில் பாதிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
மூத்தோரைக் கவனித்துக் கொள்வதற்கான செலவினங்கள் நம்மை நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்சனை. ஏதாவது காரணத்திற்காக மருத்துவரை அணுகிவிட்டோம் என்றால் அது ஒரு முறையோடு முடிவதில்லை. மீண்டும் மீண்டும் மருத்துவமனை, மீண்டும் மீண்டும் மருத்துவ ஆய்வகங்கள், பொது மருத்துவர் போதாதென்று உடலில் ஒவ்வொரு பாகத்திற்கும் சிறப்பு மருத்துவர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். மருந்து மாத்திரைகளை வாங்கி வைத்தால் மட்டும் போதாது. அந்தந்த வேளைக்குச் சரியான மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்களா என்பதை வேறு பார்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னால், சாப்பிட்ட பின்னால், காலை, மதியம், மாலை என வேளைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் என்று நம்மையே குழப்பி விட்டுவிடும். ஆனால் அதை அவர்கள் சரியாக எடுத்துக் கொள்கிறார்களா என முனைப்புடன் கவனிக்க வேண்டியதாக இருக்கும்.
பணச் செலவு ஒரு புறம் என்றால், மற்றொரு விதத்தில் நாம் தரும் விலை, நமக்கு உண்டாகும் மன அழுத்தம்தான். அவர்களுக்கு தலை சுற்றல் வந்தாலோ, ரத்தக் கொதிப்பு அதிகமானாலோ, சர்க்கரை அளவு உயர்ந்தாலோ, அல்லது அவர்களுக்கு தற்காலிகமாகக் கூட மறதி ஏற்பட்டாலோ நம் நாளையே புரட்டிப் போட்டுவிடுகிறது. இரவு பகல் எனப் பாராமல் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதாக இருக்கட்டும், வேலை நேரத்தில் அவர்களை மருத்துவர்களைப் பார்க்கக் கூட்டிச் செல்ல வேண்டிய வேலையாக இருக்கட்டும் நம் தலைமுறையினர் எப்படியோ இவற்றோடு வாழப் பழகிக் கொண்டு விட்டனர். ஆனால் இதனால் உண்டாகும் அயர்ச்சி, அதைச் சமாளிக்க முடியாமல் வரும் சினம், ஒன்றும் செய்ய முடியாததால் வரும் மனக்கசப்பு என்று அவர்களை கவனித்துக் கொள்பவர்களுக்கு ஏற்படும் மறைமுக துன்பங்கள் மிக அதிகம்.
மருத்தவக் காப்பீடு இருக்கிறதா என்பது ஒரு பக்கம், அப்படியே காப்பீடு இருந்தாலும் கூட அது வயது முதிர்ந்தோருக்கு உகந்ததாக இருப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான வீட்டிற்கு வரும் செவிலியர் அல்லது உதவியாளருக்கான செலவுகள், உடம்பினை மறுசீரமைத்துக் கொள்வதற்கான செலவுகள், அல்லது நீண்ட நாள் கவனிப்புக்கான செலவினங்களை இந்த காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் நம் சேமிப்பு, அவர்களுக்கு வரும் ஓய்வூதியம் போன்றவற்றை வைத்துதான் இந்தச் செலவுகளைச் சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது. ஏதேனும் பெரிய செலவு வந்துவிட்டால் இப்படிச் சமாளிப்பது கடினமாகிறது.
இவற்றை எல்லாம் விட நமக்கு கிடைப்பதற்கு அரிதாக இருப்பது நேரம்தான். நம்முடைய அலுவலகப் பணிகள், நம் குழந்தைகளின் தேவைகள், இவற்றோடு மூத்தோரைக் கவனித்துக் கொள்வதும் சேர்ந்து கொள்ள நம் நாள் முழுவதுமே ஏதேனும் கடமையை நிறைவேற்றுவதிலேயே கழிந்து விடுகிறது. விருப்பப்பட்டாலும் சரி, படாவிட்டாலும் சரி, நாம் ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யப் பழகிக் கொண்டுவிடுகிறோம். பெற்றோர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவர்கள் மருத்துவரைப் பார்க்க இருக்கும் நேரத்தில் அறை வாசலில் இருந்து அலுவலகப் பணிகளைத் தொலைபேசி மூலம் செய்கிறோம். எதோ ஒரு கடையில் வரிசையில் நிற்கும் நேரத்தில் மருத்துவ ஆய்வகத்தில் இருந்து வந்த முடிவுகளை ஆராய்ந்து பார்த்துப் புரிந்து கொள்கிறோம்.
இப்படித் தொடர்ந்து கடமைகளைச் செய்யவே நேரம் செலவழிக்கும் பொழுது நமக்கான நேரம் என்பது இல்லாமலேயே போய்விடுகிறது. நமக்குப் போதுமான ஓய்வோ, அல்லது கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வதோ முடியாமலேயே போய்விடுகிறது. மருத்துவரிடம் கூட்டிக் கொண்டு செல்வது, மருந்து மாத்திரைகளை வாங்கி வைப்பது, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பதில் நேரம் செலவழிகிறதே தவிர சாதாரணமாக உட்கார்ந்து பேசக் கூட நேரம் வாய்ப்பதில்லை.
ஒரு பனிப்பாறை கடலில் மிதக்கும் பொழுது நம் கண்ணுக்குத் தெரிவது சிறு பகுதிதான் ஆனால் பெரும்பகுதி நீரில் மூழ்கித்தான் இருக்கும். அதைப் போல வெளியில் தெரியாமல் இருக்கும் மன அழுத்தம் இப்படி மூத்தோரைப் பார்த்துக் கொள்பவர்களுக்கு மிக அதிகம். என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் இருக்கும் பெரியவர்களைச் சமாளிக்கும் பொழுது நம் உணர்ச்சிகள் ஒரே போல இருப்பதில்லை. ஒரு நாள் நம்மையும் மீறிப் பொறுமையை இழந்துவிடுவோம். அதற்குப் பின் அப்படிச் செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி நம்மைத் தாக்கும். நிலைமை நம் கையை மீறிப் போய்விடுமோ என்ற பயம் வரும். நம் மீது பெரும் பொறுப்பு திணிக்கப்பட்டதைப் போல ஒரு அழுத்தம் உண்டாகும். இதைப் பற்றி எல்லாம் யாரிடம் சொல்வது என்பது கூட தெரியாமல் தனிமையில் வாடுவதும், அதனால் வரும் அழுத்தத்தைச் சமாளிக்கத் தெரியாமல் திணறுவதும் நமக்கு நடப்பதுதான்.
நமக்கு உண்டாகும் அழுத்தங்களைப் பற்றி வெளியில் பேசவில்லை என்றாலும் அவை எப்பொழுதும் நம் மனத்தில் ஓடிக்கொண்டேதான் இருக்கும். ஆனால் அவற்றைத் தாண்டி நாம் பெற்றோர்களின் நலனைக் கவனிப்பது என்பதை நம் கடமையாகக் கொள்வதற்குக் காரணம் நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பினால்தான்.
ஆனால் இதற்கு நாம் தரும் விலை என்ன என்ற கேள்வி நமக்கு அசௌகரியமான ஒன்றாக இருந்தாலும், அதைக் கேட்டுத்தான் ஆக வேண்டியதாக இருக்கிறது.
அடுத்த பகுதி:
(தொடரும்)
பி.கு. டாக்டர் விஜய் சதாசிவம் ஆங்கிலத்தில் எழுதிய தொடரை அடிப்படையாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட கட்டுரை.
Discover more from சொல்வனம் | இதழ் 361 | 22 பிப் 2026
Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “சாண்ட்விச் தலைமுறையும் சொல்ல இயலா சங்கடங்களும்!”