இது இந்தத் தொடரின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தின் சுட்டி இங்கே.
நம் பெற்றோரின் உடல்நிலைச் சரியில்லாமல் போனாலோ அல்லது அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள முடியாமல் போனாலோ நம் மனத்தில் எழும் முதல் கேள்வி இதற்கு என்ன சிகிச்சை என்பதோ அல்லது அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதோ இல்லை. மாறாக நமக்குக் குழப்பத்தை உண்டு பண்ணுகிற கேள்வி அவர்களை யார் பார்த்துக் கொள்வது என்பதுதான்.
அதுவும் அவர்களிடம் இருந்து வெகு தொலைவில் நாம் இருந்தால் இந்தக் கேள்வி உண்மையிலேயே மிகவும் பிரச்னைக்குரியதுதான். சிகிச்சை நேரத்தில் அவர்களை மருத்துவமனையில் சேர்க்கச் செய்யலாம். அதன் பின் முதியோர் இல்லங்களைக் கணக்கில் கொள்ளலாம். ஆனால் இந்த முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை இன்றைய தேவைக்கு மிகு குறைவு என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இவற்றை விட்டால் வயதானவர்களைக் கவனித்துக் கொள்வதற்கான கட்டமைப்பு என்பது இல்லை என்றே கூறலாம்.
நம் நாட்டின் பல பகுதிகளில் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. அவர்களைக் கவனித்துக் கொள்ள நாம் செய்திருக்கும் ஆயத்தங்கள் போதவே போதாது. அதிலும் நகர்மயமாகி இருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் செழிப்பாக வளர்ந்திருப்பதால் இங்கு நாட்டின் சராசரியை விட ஆயுள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இங்கு அரசு மருத்துவத்துறையும் தனியார்த்துறையும் மருத்துவச் சிகிச்சை என்ற அளவில் நன்றாக மேம்பட்டு இருந்தாலும் வயோதிகர் கவனிப்பு என்பது இன்னமும் ஒருங்கிணைக்கப்பட்ட துறையாக இல்லை, தேவைப்படும் அளவிலும் இல்லை. தொழில்முறை மூத்தோர் கவனிப்பு மற்றும் அவர்களின் மறுசீரமைப்புக்கான மையங்கள் வெகுக் குறைவாகவே உள்ளன. இருப்பவையும் கூட மேல்தட்டு மக்களுக்கானவையாகத்தான் இருக்கின்றன. நடுத்தர மக்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் இத்துறையின் நிபுணர்கள் வழிக்காட்டுதல் எதுவும் இல்லாமல் ஏதோ தம்மானால் ஆனபடி வீட்டிலேயே முதியோர்களைக் கவனித்துக் கொள்ளும் கட்டாயம்தான் ஏற்படுகிறது. இது இவ்வாறு கவனித்துக் கொள்பவர்களுக்குப் பெரும் அழுத்தத்தைத் தருகிறது.

இருக்கும் முதியோர் இல்லங்களில் கூட அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில்தான் கவனம் இருக்கிறதே தவிர அவர்களுக்கு ஒரு தரமான வாழ்வுமுறையை அமைத்துத் தர வேண்டும் என்ற முனைப்பு இருப்பதில்லை. இந்நிறுவனங்கள் தாங்கள் வசூலிக்கும் கட்டணங்களைப் பொறுத்து சாப்பாடு, உறைவிடம், மருத்துவத் தேவைகள் போன்ற அடிப்படை வசதிகளை ஓரளவு நன்றாகச் செய்து தருகின்றன. இந்நிறுவனங்களில் நல்ல முறையில் கவனிப்பு இருந்தாலும் இவை இங்கிருப்பவர்களின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் அர்த்தமுள்ளதாகச் செய்கின்றன என்பது கேள்விக்குரியதே. ஒன்று அவர்களை நோயாளிகளாக நினைத்துப் பராமரிப்பது என்றிருக்கும், அல்லது காலை முதல் இரவு வரை செய்ய வேண்டியவை என்ற அட்டவணைக்கு அடிமைகளாக நடத்துப்படுவதாக இருக்கும். இதனால் இங்கிருக்கும் வயோதிகர்களும் தங்கள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாமல் ஏனோதானோ என்று இருப்பவர்களாக மாறிவிடுகின்றார்கள். இவர்களுக்கு சுயமரியாதையும், சுதந்திரமும், தோழமையும் இல்லாது போய்விடுகிறது. அரசாங்கத் தரப்பில் இருந்தும் ஓய்வூதியம் போன்ற சில திட்டங்களைத் தவிர முதியோருக்கு என்று பிரத்யேகத் திட்டங்கள் ஏதும் இல்லை. இப்பொழுதுதான் தமிழகம் போன்ற சில மாநிலங்களில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற திட்டங்கள் மூலம் வீட்டிலேயே முதியோருக்கு மருத்துவ உதவி வழங்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நம் தலைமுறையினருக்கோ முதியோர் இல்லம் என்ற சொல்லாடலே கசப்பைத் தருவதாக இருக்கிறது. ஒரு வித ஒவ்வாமையை உண்டு செய்வதாக இருக்கிறது. என்னவோ நம் பெற்றோரை முடிந்த அளவுக்குப் பிழிந்து விட்டு பின் சக்கையை வீசுவது போல இங்கு கொண்டு வந்து சேர்க்கிறோம் என்ற குற்ற உணர்வு தலைதூக்குகிறது. அவர்களைத் தனிமையில் தள்ளுகிறோமோ என்ற ஆற்றாமை எழுகிறது. நல்ல மகனோ, மகளோ கடமையாகச் செய்ய வேண்டியவை என்று சமூகம் சொல்வதில் இது இல்லை என்பதால் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது என்பது தவறான செயல் என்பதுதான் பொதுப்புத்தியாக இருக்கிறது. ஆனால் சுருங்கும் குடும்பங்கள் ஒரு புறம், ஆணும் பெண்ணும் வேலைக்குப் போய் சம்பாதித்தால்தான் குடும்பம் செழிக்கும் என்ற கட்டாயம் மறுபுறம் என்று இருக்கும் இந்நாட்களில் வீட்டில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்வது என்பது பலருக்கும் இயலாத ஒன்றாகத்தான் இருக்கிறது. நம் நாட்டில் அதிகமாகிக் கொண்டு வரும் ஆயுள் எதிர்பார்ப்பினையும் கணக்கில் கொண்டால் இதைச் சமாளிப்பது அவ்வளவு எளிதில்லை என்பது நமக்குப் புரியும். இதனால் பணி ஓய்வுக்குப் பின்னான வாழ்க்கை என்பதையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய ஒரு கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
குறிப்பாகத் தமிழகத்தை எடுத்துக் கொண்டோமானால் கடந்த இருபது ஆண்டுகளில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. சென்னையிலும் கோவையிலும் இருக்கும் பெரு வசதியான இடங்கள், மற்ற ஊர்களில் இருக்கும் கொஞ்சம் இடைப்பட்ட தரத்தில் இருக்கும் இடங்கள், சமயச் சார்புள்ள நிறுவனங்கள் நடத்தும் இடங்கள் என பலவகைகளில் இவை இருக்கின்றன. இவற்றில் சில பாதுகாப்புக்கும் தோழமைக்கும் உறுதி அளிக்கும் நிறுவனங்களாகத் திகழ்கின்றன. ஆனால் மற்றயவை வணிகரீதியான ஏற்பாடுகளாகவே இருக்கின்றன. அல்லது மறக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிகப் புகலிடங்களாக இருக்கின்றன. இந்நிறுவனங்கள் அளிக்கும் சேவைக்கானத் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் சட்டங்கள் இல்லாத நிலையில் இந்நிறுவனங்கள் நடத்துபவர்களின் விழுமியங்களைச் சார்ந்தே இயங்குகின்றன. அதனால் இவற்றின் தரமும் ஒழுங்கும் சீராக இருப்பதில்லை.
இவற்றுக்கிடையே நம் சமூகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாற்றத்தைப் பற்றியும் நாம் பேசியாக வேண்டியதாக இருக்கிறது. முந்திய தலைமுறைகளைப் போலல்லாமல் இந்தத் தலைமுறையில் இருக்கும் வயதான பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்குச் சுமையாக இருக்க விரும்பாமல் தங்களுக்கு என்று ஓர் இடம் வேண்டும் என்ற தெளிவைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். முதியோர் இல்லங்கள் என்பது தாங்கள் கைவிடப்பட்டு விட்டதால் சேரும் இடம் என்று நினைக்காமல் இது தங்களுக்கு ஒரு சுதந்திரத்தைத் தரும் இடமாகக் கருதுகிறார்கள். தம் குடும்பங்களுக்காக வாழ்வினைத் தொலைத்தது போதும், இது எங்களுக்கான நேரம், இதை நாங்கள் சுயமரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் கழிக்க இது போன்ற முதியோர் இல்லங்கள் சரியானச் சூழலை அமைத்துத் தருகின்றன என்கிறார்கள் இவர்கள்.
அதிலும் குறிப்பாக நம் நாட்டை விட்டு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என உலகெங்கும் பரவி அங்கு தம் வேர்களை ஊன்றி இருப்போரின் பெற்றோர்களிடையே இந்த பக்குவம் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. ‘சார்ந்திரா முதியோர்’ என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இவர்கள் தாங்கள் தனியாக இருப்பதால் தங்கள் குழந்தைகளுக்கு குற்ற உணர்வு ஏதும் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். தங்களைப் பார்த்து யாரும் பரிதாபப்படவேண்டாம் என்று மிடுக்காகச் சொல்கிறார்கள். முதியோர் இல்லம் செல்வது தாங்கள் தேர்வு செய்ததினால்தானே தவிர தாங்கள் கைவிடப்பட்டதால் அல்ல என்று உறுதியாகச் சொல்கிறார்கள் இவர்கள். இங்கு தமக்குத் தேவையான கட்டமைப்பு மட்டும் இல்லாமல் தங்கள் வயதொத்த மற்றவர்களோடு தோழமை பேணக்கூடிய இடமாகவும் இவர்கள் முதியோர் இல்லத்தைப் பார்க்கிறார்கள்.
அதே சமயம், தாங்கள் கைவிடப்பட்டுவிட்டதாக எண்ணி முதியோர் இல்லத்தில் சேர்ந்ததை வெறுக்கும் முதியோர்களும் உண்டு. இதில் சிலர் தைரியமாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை உண்டு பண்ணிக் கொள்வார்கள், மற்றவர்களோ அதைக் கூடச் செய்யாமல் கழிவிரக்கத்தால் தங்களையே நொந்து கொள்வார்கள். தனிமையும், செய்ய ஒன்றுமில்லாமல் இருப்பதாலும் இவர்கள் தம் வாழ்க்கை இருளடைந்து விட்டதாகவே கருதுகிறார்கள்.
மாறும் விழுமியங்களை ஏற்றுக்கொள்ள முடியாதச் சமூகம், முதியோர் இல்லங்களைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கிறது. கூட்டுக் குடும்பங்களில் எல்லாம் நல்லபடியாக நடந்தது போல நமக்கு ஒரு புரிதல் கற்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிலிருந்தவர்களின் பணிச்சுமையைப் பற்றியும் அவர்களின் மன அழுத்தங்கள் பற்றியும் நாம் வெளிப்படையாகப் பேசியதே கிடையாது. இன்றையக் குறுங்குடும்பச் சூழலில் பெற்றோர்களைப் பார்த்துக் கொள்வது என்பது ஒரு பெரும் சுமையாக இருக்கிறது. இது அன்பில்லாமல் போனதனால் அல்ல ஆனால் முன்னமே சொன்னது போல இருவரும் வேலைக்குச் செல்ல, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள என நேரம் செலவழிந்து விடுவதால் வயதானவர்களுக்குத் தர வேண்டிய நேரத்தை நம்மால் அவர்களுக்குத் தர முடியவில்லை. அதனால் முதியோர் இல்லங்களைப் புறக்கணிக்கப்பட்டோருக்கான இடம் என்று பார்க்காமல் வயதானோருக்குப் பாதுகாப்பும், தோழமையும், சுதந்திரமும் தரக்கூடிய இடமாகப் பார்க்க வேண்டியது அவசியம்.
உண்மையில் நாம் முதியோர் கவனிப்புக்காக இன்னும் புதிய தீர்வுகளைக் கண்டறிய வேண்டும். அந்தந்த வட்டாரங்களில் அவர்களின் பகல்நேர கவனிப்புக்கான இடங்களை உருவாக்க வேண்டும். அவர்களை அவர்தம் வீடுகளிலேயே பார்த்துக் கொள்ளப் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் குழுக்களுக்கான இடத்தினை அளிக்க வேண்டும். முதியோர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அத்துறை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மொத்தத்தில் அவர்களுக்குச் சுயமரியாதையோடுச் சுதந்திரமாக வாழ வகை செய்து தர வேண்டும்.
(தொடரும்)
பி.கு. டாக்டர் விஜய் சதாசிவம் ஆங்கிலத்தில் எழுதிய தொடரை அடிப்படையாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட கட்டுரை.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “எங்கே செல்லும் இந்தப் பாதை?”