இதுவரை தமிழகத்தில் நடக்கும் தமிழுக்கான நோபெல் பரிசு விழாவான விஷ்ணுபுரம் நிகழ்வுக்குச் சென்றதில்லை. ஏற்கனவே ஒரேயொரு முறை நண்பர் வேல்முருகனுடன் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு ‘இயல்’ விருது கிடைத்தபோது பங்கேற்கும் வாய்ப்பு + வரவேற்பு அமைந்திருந்தது,
இந்த வருடம்தான் மீண்டும் இயல் விருதில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. சென்ற ஆண்டுகளிலும் மனதிற்கு நெருக்கமான, மதிக்கத்தக்க ஆளுமைகள் பரிசு பெற்றபோதும், ஏனோ, விழாவிற்கு செல்ல நேரம் அமையவில்லை. இந்த முறையும் தவறவிடக் கூடாது என்று கடைசி நிமிடத்தில் அ. முத்துலிங்கம், ஆஸ்டின் சௌந்தர், திருமூர்த்தி, வெங்கட் என்று அனைவரின் அனுக்கிரகத்துடன் டொரண்டோ பயணித்தோம்.
இதுவரை விருது வாங்கியோருக்கான பட்டியல் பெரியது. எனினும் பட்டியலிட்டு விடுவோம்:
| ஆண்டு | இயல் விருது | துறை | நாடு | புனைவு (நூல்) | அபுனைவு (நூல்) | கவிதை (நூல்) | மொழிபெயர்ப்பு |
|---|---|---|---|---|---|---|---|
| 2001 | சுந்தர ராமசாமி | எழுத்தாளர் | இந்தியா | — | — | — | |
| 2002 | கே. கணேஷ் | எழுத்தாளர் | இலங்கை | — | — | — | |
| 2003 | வெ.சா. (வெங்கட் சாமிநாதன்) | எழுத்தாளர்/ விமர்சகர் | இந்தியா | — | — | — | |
| 2004 | பத்மநாப ஐயர் | எழுத்தாளர் / பதிப்பாளர் | இங்கிலாந்து | — | — | — | |
| 2005 | ஜார்ஜ் எல். ஹார்ட் | பெர்க்லி பேராசிரியர் | அமெரிக்கா | சோ தர்மன் (கூகை) | க்ரியா ராமகிருஷ்ணன் (தற்காலத் தமிழகராதி) | — | — |
| 2006 | ஏ. சி. தாசீசியஸ் | நாடக ஆசிரியர் / இயக்குநர் | இங்கிலாந்து | ஜோ டி குரூஸ் (ஆழி சூழ் உலகு) | ஏ. ரேவதி (உணர்வும் உருவமும்) | சேரன் (மீண்டும் கடலுக்கு) | — |
| 2007 | லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் | எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர் | இங்கிலாந்து | எஸ். ராமகிருஷ்ணன் (யாமம்) | நாஞ்சில் நாடன் (நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை) | கே வாசுதேவன் (தொலைவில்) | — |
| 2008 | அம்பை (சி.எஸ். லஷ்மி) | எழுத்தாளர் | இந்தியா | தமிழவன் (வார்ஸாவில் ஒரு கடவுள்) | முருகர் குணசிங்கம் (இலங்கையில் தமிழர்) | லீனா மணிமேகலை (உலகின் அழகிய முதல் பெண்) | — |
| 2009 | கோவை ஞானி | எழுத்தாளர் | இந்தியா | ஜெயமொகன் (கொற்றவை) | ஆ சிவசுப்ரமணியன் (ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்) | சுகுமாரன் (பூமியை வாசிக்கும் சிறுமி) | — |
| 2009 | ஐராவதம் மகாதேவன் | ஆய்வறிஞர் | இந்தியா | பொ. கருணாகரமூர்த்தி (பதுங்கு குழி) | சச்சிதானந்தன் சுகிர்தராஜா (பண்பாட்டு பொற்கனிகள்) | — | — |
| 2010 | எஸ். பொன்னுத்துரை | எழுத்தாளர் | ஆஸ்திரேலியா | சு. வெங்கடேசன் (காவல் கோட்டம்) | சு தியடோர் பாஸ்கரன் (இன்னும் பிறக்காத தலைமுறைக்காக) | திருமாவளவன் (இருள் – யாழி) | — |
| 2010 | — | — | — | — | — | மனுஷ்யபுத்திரன் (அதீதத்தின் ருசி) | — |
| 2011 | எஸ். ராமகிருஷ்ணன் | எழுத்தாளர் | இந்தியா | யுவன் சந்திரசேகர் (பயணக் கதை) | பெருமாள் முருகன் (கெட்ட வார்த்தை பேசுவோம்) | தேவதச்சன் (இரண்டு சூரியன்) | ஜி குப்புசாமி (My Name is Red: Orhan Pamuk) |
| 2011 | — | — | — | — | — | அனார் (எனக்குக் கவிதை முகம்) | — |
| 2012 | நாஞ்சில் நாடன் | எழுத்தாளர் | இந்தியா | கண்மணி குணசேக்ரன் (அஞ்சலை) | பிரபஞ்சன் (தாழப் பறக்கும் பறத்தையர் கொடி) | தேவ அபிரா (இருள் தின்ற ஈழம்) | எம்.ஏ. சுசீலா (The Idiot: Fyodor Dostoyevsky) |
| 2012 | — | — | — | — | அப்பு (வன்னி யுத்தம்) | நிலாந்தன் (யுகப்புராணம்) | வைதேஹி ஹெர்பர்ட் (முல்லைப்பாட்டு & நெடுநல்வாடை) |
| 2013 | சு தியடோர் பாஸ்கரன் | எழுத்தாளர் | இந்தியா | கீரனூர் ஜாகிர் ராஜா (ஜின்னாவின் டைரி) | எம். புஷ்பராஜன் (நம்பிக்கைகளுக்கு அப்பால்) | இசை (சிவாஜி கணேசன் முத்தங்கள்) | சி மோகன் (Wolf Totem by Jiang Rong) |
| 2013 | டொமினிக் ஜீவா | எழுத்தாளர் | இலங்கை | சுப்ரமணிய ஸ்ரீதரன் (ஸ்ரீதரன் கதைகள்) | மு நித்தியானந்தன் (கூலித்தமிழ்) | — | அனிருத்தன் வசுதேவன் (மாதொருபாகன்: பெருமாள் முருகன்) |
| 2014 | ஜெயமோகன் | எழுத்தாளர் | இந்தியா | பி தேவகாந்தன் (கனவுச்சிறை) | எம். ஜெயராணி (ஜாதியற்றவளின் குரல்) | கதிர் பாரதி (மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்) | ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் பிள்ளை (Madras Studios – Narrative Genre and Ideology in Tamil Cinema) |
| 2014 | — | — | — | — | — | — | கே வி ஷைலஜா (யாருக்கும் வேண்டாத கண்) |
| 2015 | ஆர். மயூராநாதன் | மயன் | இலங்கை | ஷோபா சக்தி (கண்டி வீரன்) | அசோகமித்திரன் (குறுக்கு வெட்டுக்கள்) | குமரகுருபரன் (மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது) | என் கல்யாணராமன் (Farewell, Mahatma) |
| 2015 | — | — | — | — | — | — | புவியரசு (The Book of Mirdad: Mikhail Naimy) |
| 2016 | என் சுகுமாரன் | எழுத்தாளர் / கவிஞர் | இந்தியா | சயந்தன் (ஆதிரை) | மிஷ்கின் (ஓநாயும் ஆட்டுக்குடியும்) | பி. சங்கர ராம சுப்ரமணியன் (ஆயிரம் சந்தோஷ இலைகள்) | ரிஷான் ஷெரீஃப் (சிங்களத்தில் இருந்து தமிழ்: இறுதி மணித்தியாலம்) |
| 2016 | — | — | — | — | — | — | எவ்லின் மாசிலாமணி மேயர் (தமிழில் இருந்து ஜெர்மாணிய மொழி: Bananenblatter und StraBenstaub) |
| 2017 | வண்ணதாசன் (கல்யாண்ஜி) | எழுத்தாளர் | இந்தியா | தமிழ்மகன் (வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்) | பேரா. ஏ பாலசுந்தரம் (கனடாவில் இலங்கத் தமிழரின் வாழ்வும் வளமும்) | பாக்கியநாதன் அகிலன் (அம்மை) | டி.ஐ. அரவிந்தன் (Balasaraswathi: Her Life and Art) |
| 2018 | இமையம் | எழுத்தாளர் | இந்தியா | தீபச்செல்வன் (நடுகல்) | உமாஜி (காக்கா கொத்திய காயம்) | போகன் சங்கர் (சிறிய எண்கள் தூங்கும் அறை) | இரா முருகன் (மலையாளத்தில் இருந்து தமிழில்: பீரங்கிப் பாடல்கள்) |
| 2018 | — | — | — | — | — | — | ரெ கார்த்திகேசு (ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’: Beyond the Sea) |
| 2019 | சு வெங்கடேசன் | எழுத்தாளர்/கவிஞர்/அரசியல்வாதி | இந்தியா | — | — | — | — |
| 2020 | — | — | — | பா கண்மணி (இடபம்) | — | எஸ். பெருந்தேவி | — |
| 2021 | ஆ.இரா. வெங்கடாசலபதி | எழுத்தாளர் | இந்தியா | பி.ஏ. ஜெயகரன் | கே சந்துரு (நானும் நீதிபதி ஆனேன்) | ஆழியாள் (நெடுமரங்களாய் வாழ்தல்) | மார்த்தா ஆன் செல்பி (திலிப்குமார்: Cat in the Agraharam and other stories) |
| 2022 | பாவண்ணன் | எழுத்தாளர் | இந்தியா | வேல்முருகன் இளங்கோ (மன்னார் பொழுதுகள்) | சாம்ராஜ் (மூவந்தியில் சூலுறும் மர்மம்) | சுகிர்தாராணி | — |
| 2022 | எல் முருகபூபதி | எழுத்தாளர் | ஆஸ்திரேலியா | — | — | — | — |
| 2023 | ஆர் பாலகிருஷ்ணன் | ஆராய்ச்சியாளர் | இந்தியா | ஏ.எம் ரஷ்மி (சற்றே பெரிய கதைகளின் புத்தகம்) | பி. விக்நேஸ்வரன் (நினைவு நல்லது) | இளவாலை விஜயேந்திரன் (எந்தக் கங்கையில் கைகளைக் கழுவுவது?) | ஜெகதீஷ் குமார் (பவா செல்லத்துரை: A Journey Through Words) |
| 2024 | சச்சிதானந்தன் சுகிர்தராஜா | எழுத்தாளர் | இங்கிலாந்து | ரவி அருணாச்சலம் (பம்பாய் சைக்கிள்) | டி. பிச்சாண்டி (எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர். நினைவுகள்) | ரவி சுப்ரமணியன் (அருகிருக்கும் தனியன்) | நெட்ரா ரொட்ரிகோ (தேவகாந்தன்: Prison of Dreams) |
| 2024 | யுவன் சந்திரசேகர் | எழுத்தாளர் | இந்தியா | — | — | றியாஸா எம் ஜவாஹிர் (நிலங்களின் வாசம்) | — |
இது தவிர சிறப்புப் பரிசுகள், கௌரவ விருதுகள். அயல் மொழிக்கான விருதுகள், தொழில் நுட்பத்தில் முக்கிய முன்னேற்றங்களை சாதித்தமைக்கான கவனிப்புகள், உதவித் தொகைகள் என்று பல்வேறு துறைகளில் சிறப்பு அங்கீகாரங்கள் வழங்கி வருகிறார்கள்
முழ்ப் பட்டியலை இங்கு சென்று பார்க்கவும்: Welcome to Tamil Literary Garden : https://tamilliterarygarden.com/awards#:~:text=2007%20Awards-,Iyal%20Awards,-Iyal%20award%20is
இந்த வருடம் விருது பெற்றோர்:
எவ்வளவு பெண்கள்; எத்தனை நாடுகள்; எவரெவருக்கு எந்த விருது என்று துறைவாரியாகக் கணக்குப் போட்டால் ஒரு தோரணமாக உருப்படிவம் கோலமாக எழலாம். எனினும் விருதிற்குச் செல்வது அதற்காக அல்ல…
எதற்காக விருதிற்கு செல்கிறோம் என்று பட்டியல் போட்டு பார்த்தேன்:
- அது ஒரு கொண்டாட்டம்: முன்பே வாங்கியவர்களுக்கும், அந்த வருடம் வாங்குபவர்களுக்கும்.
- பேச்சுத் திருவிழா: யார் வருகிறார்களோ அவர்களுடன் இரவு முழுக்க விழாவிற்கு முன்னும் பின்னும் விடிய விடிய கதைக்கலாம்.
- அ. முத்துலிங்கம்: அவரின் பண்பு, குணம், ஆதுரத்துடன் நேசமாக நலம் விசாரிப்பது, எப்பொழுதும் அன்புடன் தொடர்பில் இருப்பது
- குடும்பத்துடன் இணைவது: தமிழ்நாட்டில் இருந்த மட்டும் தீபாவளி/பொங்கல் இருந்தது. இப்பொழுது விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என்பது அண்ணன்களும் தங்கைகளும் நிறைந்த உறவு. அவர்களுடன் சில மணித்தியாலங்கள் அளவளாவி மகிழ்வது
- டொரோண்டோ என்னும் குட்டி ஈழம்: டிசே இளங்கோ, காலம் செல்வம், சேரன், தமிழ்நதி என்று பலரையும் ஒரேயிடத்தில் பார்த்து கதைக்கலாம். தமிழ் அங்காடிகளில் ஜிமிக்கியும் கம்மலும் வாங்கலாம்.
- யுவன் உடன் பலலாண்டு பழக்கம் இருந்தும் பிசிராந்தையார் ஆகவே காலம் போய் விடுமோ என்னும் அச்சம்.
- வெங்கட் + திருமூர்த்தி: எப்பொழுதுமே உபசரிப்பில் அவர்களை மிஞ்ச முடியாது. வீட்டுக்கு சாப்பிட அழைப்பது முதல் கடைசி நிமிடத்தில் புதிய விருந்தினர்கள் வந்தால் அவர்களையும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளும் தாராள மனப்பான்மை
- 25ஆம் ஆண்டு: இந்த முறை ரவி சுப்ரமணியமும் சேர்ந்து கொண்டார். கூடவே சிறப்பு விருந்தினராக சுவர்ணவேல் ஈஸ்வரன் & ராம் மகாலிங்கம் அவர்களும் இணைந்திருந்தார்கள் – வெள்ளி விழா விருது விழாவாயிற்றே
- அதான் ஏற்கனவே சொன்னேனே: தமிழின் நோபல் விருது – இயல் பரிசு
பத்தாவதை கட்டுரை இறுதியில் பார்க்கவும்
முதல் முறை இயல் விருது விழாவில் கலந்து கொண்டது அரசல் புரசலாகத்தான் நினைவில் இருந்தது. இயல்பான பேச்சுக்கள். நல்ல சாப்பாடு. கோட் சூட் கட்டுப்பாடு. மிலிட்டரி நேர துல்லியம்.
சற்றே மிரட்சியுடன் விழாவிற்கு இன்னொரு நுழைவுச்சீட்டு கிடைக்குமா என்று கடைசி நேரத்தில் தயங்கியும் தயங்காமலும் அ. முத்துலிங்கத்திடம் வினவினேன். மனைவியையும் இந்த முறை இலக்கிய விழாவினுள் நுழைக்கும் ஆர்வம் எனக்கு. புரிந்து கொண்டார். எனக்கு இயல் விருது நாயகர் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவிற்கு அருகில் அமர்த்தி அழகு பார்த்தார்.
விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் நிர்வாகி ஆஸ்டின் சௌந்தரும் அமைப்பின் சகோ விபி எனப்படும் வெங்கட் ப்ரசாத்தும் தாராளமான, சௌகரியமான இடத்தைப் பிடித்துக் கொடுத்து அழைத்துக் கொண்டனர். வெள்ளி இரவு எங்கள் பேச்சு கரை புரண்டோடியது.
அடுத்த நாள் காலை ரவி சுப்ரமணியம் பாடல்களுடன் துவங்கியது. சில சமயம் இயக்குனராக அவரின் காட்சியமைப்பு எங்களின் சாதாரண தற்படங்களைக் கூட மெருகேற்றியது. பல சமயம் ஒளிப்பதிவாளராக வெளிச்சம் எவ்வாறு விழ வேண்டும் என்பதை நட்போடு உணர்த்தியது. எவ்வளவு தகவல்கள்! எத்தனை சுவாரசியங்கள்!!
முந்தைய பாடல் கனிவான காதல் ரசம் என்றால் அடுத்த பாடலோ கம்பீர உற்சாக முழக்கம். இளையராஜாவுடன் பயணித்த கதையில் கீர்த்தனையும் ராகமும் விளையாடின என்றால், ஜெயகாந்தன் ஆவணப்படம் எடுத்த நனவோடையில் ஆளூமைகளுடன் எவ்வாறு பழகி பதிலைப் பெற்று உலக்குக்கு என்றும் நிலைக்குமாறு பகிர்வது என்னும் சூட்சும ரகசியங்கள் தரப்பட்டது. கவிஞர் ரவி சுப்ரமணியம்; கட்டுரையாளர் ரவி சுப்ரமணியம்; ஆவணப்பட நெறியாளர் ரவி சுப்ரமணியம்; எல்லாவற்றிலும் நண்பர் ரவி தெரிந்தார்.
மதியம் வெங்கட் வீட்டில் விருந்து.
முதல் முறையாக யுவன் சந்திரசேகரின் ‘நல்லாருக்கு! நல்லாருக்கு!!’ இரட்டைக் கிளவி கேட்கப் பெற்றேன். எந்தக் கேள்வி கேட்டாலும் நேரடியாக, நகைச்சுவையும் கலந்து அர்த்தமும் பொதிந்து பதில் தந்து சிந்திக்க வைக்கும் வினாக்களையும் கேட்டவரிடமே எழுப்புகிறார். கூடவே அல்புனைவிற்காக விருது பெறும் பிச்சாண்டி அவர்கள். இலக்கியத்திற்கும் திரைப்படத்துக்குமான தொப்புள்கொடி உறவை மிச்சிகன் பேராசிரியர் ஸ்வர்ணவேல் சினிமாவின் நுட்பங்களைக் கொண்டு விளக்க, சபை களை கட்டியது.
பின்மதியம் வரை நீடித்த அரட்டையை ஆஸ்டின் சௌந்தர் கலைத்து மாலைக் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாக பணிவித்தார்.
இரவு விருது + விருந்து – யுவன் மேடையில் நெகிழ்ந்தார். ரவி கனிவுமிக்க பாடலும் உற்சாகமெழுப்பி தட்டியுலுக்கும் பாடலும் கொடுத்தார். பிச்சாண்டி தன் பண்பை, நெடிய உழைப்பை கோடிட்டு ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா’ என உணர்த்தினார்.
தொடர்புள்ள பதிவு: கருடன்கள் பறந்த வானில் நான் ஒரு ஈ! -கனடா இயல் விருதுவிழாவில் ருசிகரம்
அதன் பின் காத்திருந்த தருணம்.
சௌந்தர் அன்போடு யுவனை உறங்க அனுப்பும் விடியற்காலை வரை திகட்டாத இலக்கிய அரட்டை. அதிகாலையில் எழுந்து நாள் முழுக்க சுற்றிய களைப்பில் கண் மூடினாலும் காதுகளையும் சிந்தையையும் திறந்து வைத்திருந்த மகேஸ்வரி; என் மனைவிக்கு ‘இத்தனை சுவாரசியத்தை, இத்துணை நாள் நீ மட்டும் தனியாக ரசித்தாயா!’ என்னும் பொறாமை கலந்த உற்சாகம்; யுவனின் அனைத்து நாவல்களையும் மறு வாசிப்பு செய்துவிட்டு வந்த மாதிரி முடிச்சுக்களைக் கோர்த்து, அவரின் புனைவுலகை ஒழுங்குபடுத்திக் காட்டிய பழனி; விவகாரமான கேள்விகளை படு விவரமாக, தைரியமாக சபையில் பாங்குடன் முன்வைத்து உரையாடலுக்கு செழுமை சேர்த்த விபி வெங்கட் ப்ரசாத்; எல்லாவற்றையும் அவதானித்த ராதா சௌந்தர்; சாத்தியப்படுத்திய ஆஸ்டின் சௌந்தர்…
என்றென்றும் நினைவில் நிற்கும் தருணத்தை உண்டாக்குவது நல்ல மனிதர்களும் அவர்களின் நட்பும்.
நிற்க
Opinion | The Dogged, Irrational Persistence of Literary Fiction – The New York Times கட்டுரையின் தழுவலை இங்கே துணைக்கு அழைக்கிறேன்:
இன்று ஆழ்ந்த அவநம்பிக்கை உடனேயே இலக்கியத்தின் நிலை குறித்த விமர்சன சொற்பொழிவு அமைகிறது; குறிப்பாக இலக்கிய புனைகதை என்று நாம் அழைப்பது, வெளிப்படையாக அபோகாலிப்டிக் ஆக உள்ளது. நாவல்கள்… தீவிரமான வாசிப்பைக் கோரும் நாவல்கள் – பரவலான கவனத்தையும் மரியாதையையும் ஈர்த்த ஒரு காலத்திலிருந்து இன்றைய தீவிரமான வீழ்ச்சியுயான வானிலைக்கு எல்லோரும் அழுகிறோம்.
ஃபேஸ்புக் மட்டுமல்ல; அந்தக் காலத்தில் எழுத்து, சு.ரா. என வரும் கருத்துக் கட்டுரைகள் இலக்கியம் மந்த நிலையில் மட்டுமல்ல, அழிந்து போகும் அபாயத்திலும் உள்ளது என்பதை ஒப்புக்கொள்கின்றன. வாசிப்பிற்கான உங்கள் தேர்வு, குறைந்து வரும் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; அதைப் புரிந்துகொள்ளவும் பாராட்டவும் போதுமான மெத்தப் படித்த திரள் கூட்டமிருப்பினும், காணாமல் போகும் சிறு பத்திரிகை வாசகர்கள்; மேலும், எதிர்காலத்தில் தொழில்நுட்ப தாக்குதல் – முடிவினை தெளிவாக உணர்கிறோம்.
ஆனால் வரலாற்றுக் கண்ணோட்டத்தை இத்தகைய சொற்பொழிவு விட்டு விடும்; ஆன்மீகத்திலும் இலக்கியத்திலும் குருட்டு நம்பிக்கை தேவை. முற்றிலும் நடைமுறை சாத்தியக்கூறுகள் கொண்ட பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இலக்கிய முயற்சிகளை பங்குச் சந்தை போல் தர்க்கரீதியாக மதிப்பிடுவது அக்கிரமம்.
இலக்கியம் பலவீனமானது. அன்றாட லௌகீக நோக்கத்திற்கு பைசா பிரயோசனமில்லை. அது எங்களுக்கு உணவளிக்கவோ அல்லது தங்க மாளிகையில் ஆபரணம் வாங்கவோ உதவாது. நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருந்தாலொழிய உங்களை வளப்படுத்தாது. ஆனால் மனிதகுலத்தின் எந்தவொரு கலாச்சார முயற்சியும் இருந்ததைப் போலவே இலக்கியமும் அழியாமைக்கு நெருக்கமாக உள்ளது.
இங்குதான் இயல் விருதாளர்கள் பங்களிப்பு காலாகாலத்திற்கும் பேசப்படுகிறது; அதன் மீது மற்ற படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களை எழுப்புகிறார்கள். வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் இந்த முரண்பாட்டை அழகாக படம் பிடித்தார்:
“கவிதைகளிலிருந்து செய்திகளைப் பெறுவது கடினம் / இருப்பினும் ஆண்கள் ஒவ்வொரு நாளும் மோசமாக இறக்கின்றனர் / அங்கு பெற்றதை கண்ணுறததால்”.
உலக இலக்கியத்திற்கு அமெரிக்காவின் தெளிவான பங்களிப்பான “மோபி-டிக்” நாவல், அதன் 1851 வெளியீட்டில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவதூறு செய்யப்பட்டது, அது ஹெர்மன் மெல்வில்லின் வாழ்க்கையை அழித்தது. அவர் தனது வாழ்நாள் முழுவதும் நியூயார்க் துறைமுகத்தில் சுங்க ஆய்வாளராக பணியாற்ற வேண்டியிருந்தது. செய்தித்தாளில் அவரது இரங்கல் செய்தியில் “மோபி டிக்” குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்குப் பின் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாவலின் மறு கண்டுபிடிப்புக்குப் பிறகுதான் அது தலைசிறந்த படைப்புக்காக அங்கீகரிக்கப்பட்டது.
1940 களின் நடுப்பகுதியில் வில்லியம் பால்க்னரின் வெளியிடப்பட்ட 20 படைப்புகளில் எதுவுமே அச்சாகவில்லை; புத்தகக்கடைகளில் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். வாழ்க்கை நடத்துவதற்காக ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கான திரைக்கதைகளை ஃபாக்னர் அரைக்க வேண்டியிருந்தது. விமர்சகர் மால்கம் கவ்லி தொகுத்த “தி போர்ட்டபிள் ஃபாக்னர்” என்ற தொகுப்பு, பல வருட புறக்கணிப்பையும் விமர்சன துஷ்பிரயோகத்தையும் மாற்றியமைத்து, இறுதியாக அவருக்கு தகுதியான அங்கீகாரத்தையும் நோபல் பரிசையும் பெற்றது.
சுதந்திரத்தையும் தன் அனுபவத்திற்கான தேடலின் கலாச்சாரத்தை வடிவமைக்கும் நாவலான ஜாக் கெரோவாக்கின் “ஆன் தி ரோட்”, பல நியூயார்க் வெளியீட்டாளர்களால் அவதூறானது என்றும் தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாதது என்றும் நிராகரிக்கப்பட்டது. நூலை வெளியிட்டால் சந்திக்க வேண்டிய அவதூறு வழக்குகள் குறித்த அச்சத்தை வைக்கிங் பிரஸ் விழுங்கி, மேலெழ, அச்சிட பல ஆண்டுகள் பிடித்தன, இது பின்னர் எதிர் கலாச்சாரம் என்று அழைக்கப்படும் இயக்கத்தைத் தூண்ட உதவியது. (இந்த நேரத்தில், அதே வெளியீட்டாளர்களில் பலரால் இதே போன்ற சில காரணங்களுக்காக “லோலிதா” கடுமையாக நிராகரிக்கப்பட்டது.)
டான் பவல் இன்று கடந்த நூற்றாண்டின் உலகளாவிய அமெரிக்க நாவலாசிரியர்களில் முக்கியமான ஒருவராக புத்திசாலித்தனமானவராக அங்கீகரிக்கப்படுகிறார். ஆனால் மேக்ஸ்வெல் பெர்கின்ஸ் + ஸ்க்ரிப்னர் போன்ற சிறந்த பதிப்பாசிரியர்களும் வெளியீட்டாளர்களும் இருந்தபோதிலும் அவரது தொழில் வணிகப் பயனற்ற, இருண்ட, நீண்ட பயிற்சியாக இருந்தது. அவர் வறுமை மற்றும் ஒப்பீட்டளவில் தெளிவற்ற நிலையில் இறந்தார். அவரது நண்பர் கோர் விடால் மற்றும் அயராத டிம் பேஜ் ஆகியோரின் பிந்தைய முயற்சிகளின் மூலம் மட்டுமே அவரது புத்தகங்கள் அவரின் மரணத்திற்குப் பிறகு எப்போதும் தகுதியான பார்வையாளர்களைக் கண்டறிந்துள்ளன.
சாம் லிப்ஸைட்டின் பெரும் பரிகாசமும் களி எகத்தாளமும் கொண்ட 2004 நாவலான “ஹோம் லேண்ட்”: அவரது உயர்நிலைப் பள்ளி வகுப்பில் மிகவும் விரிவாக தோல்வியுற்ற பட்டதாரி, மகிழ்ச்சியற்ற லூயிஸ் மைனரின் முன்னாள் மாணவர் குறிப்புகளின் வடிவத்தை எடுக்கிறது; புருஷகோளம் (manosphere) வார்த்தை உருவாக்கப்படுவதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பே இருப்பதை அவதானிக்கிறார் (ஒருவேளை உருவாக்கியிருக்கலாம்). இது 35 வெளியீட்டாளர்களால் நிராகரிக்கப்படுகிறது, இறுதியாக மலிவுவிலை பேப்பர்பேக் பதிப்பில் மட்டுமே அச்சானாலும், பரவலான பாராட்டையும் சிரிப்பால் வயிற்றுவலி உண்டாக்கியும் வெற்றி கண்டது.
ஆர்ட் ஸ்பீகல்மேனின் தலைசிறந்த படைப்பான கிராஃபிக் நாவல் “மாஸ்” இறுதியாக வெளியிடப்படுவதற்கு முன்பு ஏராளமான நிராகரிப்புகளை (இந்தக் கட்டுரையாசிரியரான ஜெரால்ட் ஹோவர்ட் உட்பட) சேகரித்தது.
இலக்கியத்தின் வாழ்க்கையும் அதன் படைப்பாளர்களின் வாழ்க்கையும் தீவிரமாக கணிக்க முடியாதவை; சொல்லப்போனால் பிளவுபட்டவை. நேர்க்கோட்டில் இயங்கும் ஒழுங்கான இடத்தில், சிறந்த புத்தகங்களை அவற்றின் தரத்திற்காகவும் சாதனைக்காகவும் உடனடியாக அங்கீகரிக்கப்படுகின்றன என புளகாங்கிதம் கொண்டு இறுமாந்திருப்போம். நிதர்சனம் என்னவோ… நேர் எதிரானது. ஏடுகளின் குடியரசு (republic of letters), என முன்பொரு காலத்தில் அழைக்கப்பட்டது, துல்லியமான பொய்மை. நூல் வெளியீட்டாளர்களாகவும் பல்ப் பதிப்பாசிரியர்களவும் விளங்குபவர்கள் – ஆழ்ந்த தவறான நபர்கள் (அதைப் பற்றி கட்டுரையாசிரியரான பதிப்பளருக்கு எல்லாம் தெரியும் என்கிறார்). அவர்கள் தீர்ப்பின் பிழைகளினாலும் பிழைப்பிற்கான சில்லறை அச்சங்கள் வழியேயும், இலக்கியக் கண்ணோட்டத்தின் குருட்டு புள்ளிகளின் வழியே தோல்விகளுக்கு ஆளாகி, எழுத்தை பலியாக்குகிறார்கள்.
முக்கியமான புத்தகங்கள் அவற்றின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளாத மோசமான காலங்களில் வெளியிடப்படலாம். தவறான இடத்தில் (அல்லது ஓரிடத்தில் சொன்னதால் பல சிற்றிதழாளர்களால் மீண்டும் மீண்டும்) தவறான மதிப்பாய்வு; உண்மையான தலைசிறந்த படைப்பை தற்காலிக மறதிக்கு (தாற்காலிகம் மட்டுமே என நாம் ஆசைப்படலாம்) அனுப்பலாம். இலக்கிய நற்பெயர் ஒருபோதும் நிலையானதாகவும் இருக்காது, மாறாக சுவைகள் மாறும்போது இடைவிடாத சிந்தனைக்கு உட்படும். உண்மையில், இலக்கிய வெளியீட்டில் இந்த தருணத்தின் போக்கு பின்தங்கிய பார்வையில் உள்ளது.
சிறந்த விற்பனையாளர் பட்டியலில் வணிக ரீதியான பிளாக்பஸ்டர் வகை நாவல்களின் பிடி மற்ற வர்ணனையாளர்களைப் போலவே எனக்கும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஆயினும்கூட வாசிப்புப் பழக்கத்தின் பிடிவாதமான உயிர்ச்சக்தி – இலக்கிய புனைகதை ரசிகரின் உணர்ச்சிபூர்வமான அர்ப்பணிப்பில் தெளிவாகத் தெரியும்; இதுவே நம்பிக்கையின் ஆதாரமாகும்.
இலக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் செய்யக்கூடிய மிக மோசமான விஷயம் என்னவென்றால், அதை குறுகிய காலத்திற்கு விற்று அதற்கொரு இறுதி தேதியை வைப்பதாகும். எதிர்காலம் எப்போதும் ஒவ்வொரு கணத்திலும் எழுதப்படுகிறது. பகுத்தறிவற்ற நம்பிக்கை மனித எதிர்பார்ப்புக்கு முக்கியம். ஆசையும் விசுவாசமும், இலக்கியத்தில் முதன்மை; விரக்திக்கும் தீர்வாகும். இந்த கட்டுரையில் குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களும் புகழையும் அங்கீகாரத்தையும் காணும் வழியில் நீண்ட தடைகளை எதிர்கொண்டு, முரண்பாடுகளில் இருந்து மீண்டு, நிலைத்தன்மையை அடைந்து, உயிர் பிழைத்தன.
தனது சொந்த வாழ்க்கையில் சில பின்னடைவுகளைச் சந்தித்த ஹென்றி ஜேம்ஸ், “நாங்கள் இருட்டில் வேலை செய்கிறோம்-எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்-எங்களிடம் உள்ளதை நாங்கள் தருகிறோம். எங்கள் சந்தேகமே எங்கள் ஆர்வம்; எங்கள் ஆர்வமே எங்கள் பணி. மீதமுள்ளவை கலையின் பைத்தியக்காரத்தனம் “.
விராட் கோஹ்லி பாஷையில் சொல்லவேண்டுமானால்: “நம்புங்க… எழுதுங்க.. இயல் விருது தானா வரும். அ. முத்துலிங்கம் அழைப்பார்!”
டொரொண்டோ-வில் சந்தித்த நெடுநாளைய வலை பரிச்சயம் டிசே இளங்கோ பதிவு:
இங்கு நடக்கும் இயல்விருது குறித்து நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. தொடக்க காலங்களில் அது குறித்து நிறைய விமர்சித்து எழுதியுமிருக்கின்றேன் (விருப்பமுடையவர்கள் தேடி வாசிக்கவும்). ஒரு கட்டத்தில் அவர்களும் மாறப்போவதில்லை; என்னைப் போன்றவர்களும் திருந்தப்போவதில்லை என்று ஒரு ‘சமாதான உடன்படிக்கை’ நிலைக்கு மனதைக் கொண்டு வந்தாயிற்று. மேலும் இயல்விருதுக்கு மாற்றாக எதையும் நாங்கள் உருப்படியாக உருவாக்கவில்லை என்பது எங்களைப் போன்றவர்களின் வீழ்ச்சியே தவிர இயல்விருதுக்காரர்களுக்கு இதனால் இழப்பேதுமில்லை. நாங்கள் பேசுவதில் வல்லவர்கள்; ஆனால் செயற்பாட்டுக்கு வரத் தயங்குபவர்கள். வெவ்வேறு மாற்றுப்பார்வைகள் இருந்தாலும், சில புள்ளிகளில் உடன்பட்டு ஒன்றாய் ஊர்கூடித் தேர் இழுப்போம் என்பதற்கும் எமக்கும் எட்டாப் பொருத்தம்.













































முந்தைய பதிவுகள்:
- வியத்தலும் உண்டே: அ.முத்துலிங்கத்துடன் ஒரு தினம்
- கனடா! கனடா!
- உடன்வரும் நிழல்
- சந்திப்பு- யுவன்
- செல்வம் அருளானந்தம்- நேர்காணல்
சரி… அந்த 10வது காரணம்: இந்த முறை ஜெயமோகன் நடத்தும் தத்துவ வகுப்பில்தான் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு மாற்று எதுவும் இல்லை என்றாலும்… இங்காவது, இன்னொரு கூடுகையில் பங்கு பெறலாமே!
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.


