லாவண்யா சத்தியநாதன் கவிதைகள்

தீர்க்கதரிசி மரம்

உண்மையில் அந்த ஊரின் பெயர் நினைவில்லை
காய்கள் கனியாத காற்றில் அசையாத
அதிசயமரம் அமானுஷ்யமரம்
அவ்வப்போது பேசும் மரம் அந்த ஊரிலிருந்தது.
அது தெய்வமா அரக்கனா ஆவியா யட்சனா
ஒருவருக்கும் தெரியவில்லை.
சிலரை வாழ்த்தும் பலரை வசை பாடும்
அந்த மரம் ஆட்கொல்லி மரமா தெரியவில்லை.
அச்சத்துடன் அருகில் சென்றேன். வணங்கினேன்.
மதுவருந்தியவன்போல மரம் பேசக் கவனமாய் கேட்டேன்.
எதிர்வரும் காலங்களில் உலகில்
எங்கெங்கு என்ன நடக்குமென்று முன்னுரைத்தது மரம்.
என்னிடம் மரம் சொன்னதை
உன்னிடம் சொல்ல வந்தேன்
பிரமிடுகளில் படுத்திருக்கும் பிணம்போல
நீ உறங்கிக் கொண்டிருந்தாய்


ப்ரூஸ் லீயும் பௌதீக விதியும்

சாட்டைச் சொடுக்கின்
விசை தீர்ந்தாலும்
புவி ஈர்ப்பில் தலைசாயாது
சில நொடிகள் சுழலும் பம்பரம்.
எதிராளியின் கைக்கெட்டும் அருகாமையும்
ப்ரூஸ் லீயின் கைவீச்சின் விசையும்
பௌதீக விதிகள் மீறும்.
காலி பானையின் எடை
சோற்றுப்பானையின் எடையைவிட
குறைவாயிருக்கும். ஆனால்
உயிர் இருந்த உடலைவிடவும்
உயிர் பிரிந்த உடலின் எடை கூடி
பௌதீகவிதிகள் மீறும்.
வியக்கிறது விஞ்ஞானம்.


தலைக்கனம்

நான் மகிழும்படி
என் வாழ்க்கையில்லை.
நான் உவக்கும்படி
நான் வாழும் உலகமில்லை.
குறை யார் மீது?
என் மீதா? உலகின் மீதா?
விடை தெரியாத கேள்வி ஒன்றை
தலைகனக்க சுமந்துகொண்டிருந்தேன்.
நான்மட்டுமில்லை
என் உறவும் நட்பும்கூட
என் கருத்தையே
உரையாடல்களில் கூறினார்கள்.
எங்கள் குடும்பமே மருத்துவக் குடும்பம்
என் அப்பாவும் நானும் மூளை மருத்துவர்கள்.
என் தம்பிக்கும் மகனுக்கும்
மூளைவளர்ச்சியில்லை
ஹூஸ்டனில் வைத்தியம் பார்த்தோம்.
இறைவனிடம் பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்கள்
அரற்றுகிறார் டாக்டர் அறிவுநிதி
எங்களுக்கு சுதந்திர தினம்
என்று வருமென்று கேட்கின்றன ரோபோக்கள்
போர்ட்டரும் சீசரும்.
தலைக்கனம் குறைந்து மறைந்துவிட்டதிப்போது.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.