பொறி பறந்தாற் போலத் தோன்றிற்று. ஒரு திருக்குறளுக்குப் பல உரையாசிரியர்களும் எப்பொருள் தந்துள்ளனர் என்றும் மொழிபெயர்ப்பாளர்கள் எந்த அளவுக்கு மூலக் குறட்பாவை நண்ணி வந்துள்ளனர் என்றும். இது எனக்கானதோர் பயிற்சி, வீட்டுப்பாடம். அந்த முயற்சியை ஒரு கட்டுரை ஆக்குகிறேன்.
அறத்துப்பாலில், வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தின் குறட்பாவை எடுத்துக் கொண்டேன்.
திருக்குறள் வரிசை எண் – 55.
மூலபாடம்
தெய்வத் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
நவீன பாடம்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
மேலும் திருத்திய பாடம்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை.
அரும்பத உரை
தெய்வம் – கடவுள், இறைவன்
தொழா அள் – தொழாள், தொழமாட்டாள், வணங்க மாட்டாள்
கொழுநன் – கணவன், திருமணம் செய்தவன், அகமுடையான், பர்த்தா.
தொழுது – வணங்கி, கும்பிட்டு, வழிபட்டு
எழுவாள் – எழுந்து போவாள்
பெய்யெனப் – பெய் என்று சொன்னால்
பெய்யும் – பொழியும்
மழை – மாரி
வேறு குறள்களில் ஆளப்பட்ட சில சொற்கள்
தெய்வம்
குறள் 43, இல்வாழ்க்கை அதிகாரம்
குறள் 50, இல்வாழ்க்கை அதிகாரம்
குறள் 619, ஆள்வினை உடைமை அதிகாரம்
குறள் 702, குறிப்பறிதல் அதிகாரம்
குறள் 1023, குடிசெயல்வகை அதிகாரம்
கொழுநன்
மேற்சொன்ன திருக்குறளில் மட்டுமே வந்துள்ளது.
தொழாஅர்
குறள் 2, வான்சிறப்பு அதிகாரம்
தொழாஅள்
மேற்சொன்ன திருக்குறளில் மட்டுமே ஆளப்பெற்றுள்ளது
தொழுத
குறள் 828, தீ நட்பு அதிகாரம்
தொழுது
குறள் 970, குடிமை அதிகாரம்
தொழுதேத்தும்
குறள் 1033, உழவு அதிகாரம்
குறள் 970, குடிமை அதிகாரம்
தொழும்
குறள் 260, புலால் மறுத்தல் அதிகாரம்
குறள் 268, புலால் மறுத்தல் அதிகாரம்
எழுவாள்
மேற்சொன்ன குறளில் மட்டுமே
பெய்
குறள் 475, வலியறிதல் அதிகாரம்
மழை
குறள் 12, வான்சிறப்பு அதிகாரம்
குறள் 15, வான்சிறப்பு அதிகாரம்
குறள் 1239. உறுப்பு நலன் அழிதல் அதிகாரம்
உரைகள்
பரிமேலழகர்
பிற தெய்வம் தொழாது தன் தெய்வமாகிய கொழுநனைத் தொழா நின்று துயிலெழுபவள் பெய் என்று சொல்ல மழை பெய்யும்.
மணக்குடவர்
தெய்வந் தெய்வமென்று தொழாளாய் எல்லாத் தெய்வமும் தன்கணவன் என்றே கருதி அவனை நாடோறும் தொழுதெழுபவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும் என்றவாறு.
பரிதியார்
குல தேவதையைக் கும்பிடாள் தன் பர்த்தாவைத் தெய்வமென்று தொழுதபடியால் அவள் சொல்ல மழை பெய்யும் என்றவாறு.
காளிங்கர்
வேறொரு கடவுளையும் வணங்காளாய்த் தன் கணவனையே நாடோறும் வணங்கி எழுகின்றாள் யாவள்? மற்றிவள் இவ்வுலகத்து மழை வறங்கூர்ந்த காலத்து வானைக் குறித்து ‘வந்து பெய்வாயாக’ என்று சொன்ன அளவிலே வந்து பொழியும் மழை என்றவாறு.
பழைய உரை (பெயர் அறியப்படவில்லை)
தெய்வங்களையும் கும்பிடாள், பர்த்தாவே தனக்கு இட்டமான குலதெய்வமென்று பூசித்து அதிக பயபக்தியுடனே சொல் தவறாப் பூசனை செய்து கொண்டிருக்கிற பதிவிரதை, அவாந்திர காலங்களிலே யாவது மேகங்களைப் பார்த்து மழை வருஷிக்க வேணுமென்று சொன்ன அளவிலேயே இவள் சொல்லுக்குப் பயந்து வேண்டிய மழை வருஷிக்கும்.
சாமி சிதம்பரனார்
கணவனையே தெய்வமாக வணங்குகின்றவள், மழை பெய் என்றால் மழை பெய்யும்.
வ.உ. சிதம்பரம் பிள்ளை
(துயில் நீங்குங்கால்) கடவுளை வணங்காளாய்க் கணவனை வணங்கிக் கொண்டே எழுபவள், பெய் என்று சொல்ல மழை பெய்யும்.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
(கற்புடைய மனைவியின் சிறப்பு என்னவெனில்)
கற்புடைய பெண் தெய்வத்தைக்கூடத் தொழமாட்டாள். அவள் கணவனையே தெய்வமாக வணங்கிச் சிறப்படைவாள். அப்படிப் பட்டவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும் படியான தெய்வ பலம் உள்ளவள்.
ஞா. தேவநேயப் பாவாணர்
தான் மணக்கு முன்பு தொழுது வந்த சிறு தெய்வமாகிய இல்லுறை தெய்வத்தைத் தொழாது, தன் கணவன் பாதங்களையே வைகறை இறுதியில் தொட்டுக் கும்பிட்டெழும் கற்புடை மனைவி, பெய்யென்று சொன்னவுடன் மழை பெய்யும்.
புலவர் பி.ரா. நடராசன்
தன் கணவனல்லாத பிற தெய்வங்களை வணங்காதவளாகி, துயிலினின்று எழும்போதே தன் கணவனையே நினைத்துத் தொழுது எழுபவள் பெய்யெனக் கூறின் மழை பெய்யும்.
சிற்பி பாலசுப்பிரமணியம்
தெய்வங்களை வணங்காமல் கணவனை வணங்கும் இயல்புடையவள் பெருமை வியக்கத்தக்கது. அவள் ஆணையிட்டுப் ‘பெய்’ என்றால் மழைகூடப் பெய்யுமாமே!
சின்னசாமி இராஜேந்திரன்
பிற தெய்வத்தை வணங்காமல் தனது தெய்வமாகிய கணவனைத் தொழுது நின்று துயில் எழுவாள் ‘பெய்’ என்று சொல்ல, மழை பெய்யும்.
மகுடேசுவரன்
இறைவனைத் தொழாது அறவழி வாழும் கணவனைத் தொழுது வாழ்வாள் பெய்யென்றால் மழை பெய்யும்.
ஆங்கில மொழிபெயர்ப்புகள்
ஜி.யு. போப்
No god adoring, low she bends before her lord,
Then rising, serves: the rain falls instant at her word!
Rev. Drew & Lazarus.
She who does not worship God but who, on rising worships her husband, if she says let it rain, it will rain.
- வ.வே.சு. ஐயர்
Behold the woman who worshippeth not the Gods, but worshippeth her husband even as she riseth from bed: the rain cloud obeyath her commands.
- கவியோகி சுத்தானந்த பாரதியார்
Her spouse before God who adores,
Is like rain that at request pours.
- கோ. வன்மீகநாதன் பிள்ளை
God she may not worship
but she rises from bed worshipping her husband:
if such a wife says “Pour”, rain will pour down.
- மணி மோகன்
For her who adores him more than even God.
even the rains pour down on demand.

மேலும் பற்பல மொழிபெயர்ப்புகளும் உரைகளும் உண்டு திருக்குறளுக்கு. உடனடியாக நினைவுக்கு வருவது மு.வ., புலவர் ஆதி. சாலமன் பாப்பையா. சுஜாதா, மு. கருணாநிதி, வைரமுத்து போன்றோர் உரைகள். அவற்றை அரசியல், சமூக நீதி, முற்போக்குக் காரணங்களுக்காக நான் வேண்டும் என்றே தவிர்க்கவில்லை. புத்தக அடுக்குகளில் உடனடியாகத் தேடி எடுக்க இயலவில்லை என்பதனால்.
ஆனால் திருக்குறள் – ஆராய்ச்சிப் பதிப்பு கிடைத்தது. பதிப்பாசிரியர் உ.வே.சா. அவர்களின் மாணவர், வாகீச கலாநிதி, கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன் அவர்கள். பெருமையுடன் நான் சொல்லிக் கொள்ளலாம், பம்பாய்த் தமிழ்ச் சங்கத்து விழாவில் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் தலைமையில் பட்டிமண்டபம் பேசியுள்ளேன். பம்பாய்த் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆதிலட்சுமணன் வீட்டில் நடந்த இரவு விருந்தில் அவருடன் அமர்ந்து உரையாடி இருக்கிறேன். உடன் இருந்தவர் பாரதி, மோகமுள், பெரியார் போன்ற படங்களின் இயக்குநர் ஞான.ராஜசேகரன்.
இந்த ஆராய்ச்சிப் பதிப்பைச் சிலகாலம் தேடிக்கொண்டு இருந்தேன். இராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் வெளியீடு புறத்தே யாண்டும் கொள்ளக் கிடைத்திலேன். ஏழெட்டு ஆண்டுகள் முன்பு கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்த இராமகிருஷ்ண மிஷன் வித்யாலய மாணவருக்கு உரையாற்றச் சென்றிருந்தபோது, நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய சுவாமி நிர்மலேஷானந்தா அவர்களிடம் என் தேட்டத்தைச் சொன்னேன். அவர் கையெழுத்துப் போட்டு அன்பளிப்பாக எனக்கொரு படி தந்தார். A-4 அளவில் கெட்டி அட்டையுடன் நல்ல காகிதத்தில் 960 பக்கங்கள். முதற்பதிப்பு 1963-ல் வெளிவந்துள்ளது. எனக்கு வழங்கப் பெற்றது 2014-ல் வந்த மூன்றாம் பதிப்பு. விலை எழுநூறு பணம்.
கச்சடா சினிமாக்களுக்கு காலை ஆறுமணிக் காட்சிக்கு இரண்டாயிரம் பணம் தந்து நுழைவுச்சீட்டு வாங்கிக் கண்டு களிப்பவர் நாம். இப்படியொரு ஆராய்ச்சிப் பதிப்பு, திருக்குறளுக்கு இருப்பதைக்கூட அறிய மாட்டோம். ஆனால் பிரபல கதாநாயகியின் பாட்டிக்கு எத்தனை பல் விழுந்துள்ளது எனக் கேட்டால் அறிவோம். வள்ளுவப் பேராசான், முப்பால், வான்மறை வள்ளுவம் என்ற சொற்றொடர்கள் மேடைப் பேச்சுக்கு உதவும்.
நாம் மேற்சொன்ன திருக்குறள் குறித்து ஆராய்ச்சிப் பதிப்பு என்ன செய்தி தருகிறது என்று அறிய விரும்பினேன். அற்புதமான பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. சிலவற்றைப் பகிர்ந்து கொள்வேன்.
‘தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’
என்பது நாம் கையாண்ட திருக்குறள். ஆராய்ச்சிப் பதிப்பில் இந்தக் குறளுக்குப் பரிமேலழகர் உரை தரப்பட்டுள்ளது. மேலும் தெய்வம் எனும் சொல்லுக்கு குலதேவதை எனும் பொருளைப் பரிதியார் உரை பரிந்துரைக்கிறது என்கிறார். தொழுது எனும் சொல்லுக்கு தோத்திரம் பண்ணிக்கொண்டு என்று கவிராஜபண்டிதர் உரை எழுதினார் என்பார். மேலும் ஒரு குறிப்பு – ‘கொழுநற் றொழுதெழுவாள்’ என்பது எழுந்து கொழுநற் றொழுவாள் என முன்பின்னாகப் பொருள்படும் என்கிறாராம் பிரயோக விவேக நூலார்.
கற்புடை மகளிர் தெய்வம் தொழார் என்ற கருத்துக்கு இசைவாகப் பல பாடல்கள் தரப்பட்டுள்ளன. ‘காமவேள் கோட்டம் தொழுதால் நன்மை பெறுவர்’ என்று அறிவுறுத்தப்படும் இடத்தில் கண்ணகியின் எதிர்வினை ‘பீடன்று’ என்பதாகும். இது இளங்கோவடிகளின் ஆக்கம். மணிமேகலையோ ‘கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர்’ என்று திருக்குறளையே வழிமொழிகிறது. கம்பன் பேசுவது ‘தங்கள் நாயகரில் தெய்வம்தான் பிறிதில் என்றெண்ணும் மங்கைமார்’ என்று. அதாவது தங்கள் நாயகரைவிடத் தெய்வம் பிறிது இல்லை என்று எண்ணும் மங்கைமார் என்பது பொருள்.
சீவக சிந்தாமணி, ‘கணவர் கை தொழுது வாழ்வள்’ என்னும். சிலப்பதிகாரம் மேலும் தெளிவாகப் பேசுகிறது –
‘தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் – தெய்வமாய்
மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து’
என்று.
கலித்தொகை பேசுகிறது – ‘குறவர் மட மகளிர் தாம்பிழையார் கேள்வர்த் தொழுது எழலால்’ – என்று உரைக்கும். மேலும் ஒரு பாடலில் –
‘வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே’
என்று தீவிரமாய் பேசும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று திரிகடுகம். நூறு பாடல்கள். இயற்றியது நல்லாதனார். அதில் ஒரு பாடல் –
‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி, கொண்டன
செய்வகை செய்வான் தவசி, கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன் இம்மூவர்
பெய்எனப் பெய்யும் மழை’
என்று குணம் உரைக்கும். கணவனின் குறிப்பறிந்து நடப்பவள் மனையாட்டி. தவப்பயனால் கொண்டவற்றை செம்மையாக நடைமுறைப்படுத்துபவன் தவசி. தீமைகளை அழித்து நல்லவை செய்பவன் அரசன். இம்மூவரும் பெய் எனப் பெய்யும் மழை என்பது உரை.
‘நாடும் ஊரும் நனி புகழ்ந்து ஏத்தலும்
பீடுறும் மழை பெய்கெனப் பெய்தலும்
கூட லாற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சான்மிகு பத்தினிக் காவதே’
என்றுரைக்கும் வளையாபதி.
நாட்டுப்படலத்தில் கம்பன் பேசுவான் –
‘மாதரார் அற்பின் நின்றன அறங்கள் அன்னவர்
கற்பின் நின்றன கால மாரியே’
என்று.
மறுபடியும் மணிமேகலை காப்பியத்துக்கு வந்தால் –
‘தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்’
என்று அழுத்தந் திருத்தமாகப் பேசுகிறது.
இவற்றால் நமக்குத் தெரிய வருவது, வள்ளுவர் கூற்றை முந்தைய இலக்கியங்களும் பிந்திய நூல்களும் முன்மொழிந்துள்ளன அல்லது பின்மொழிந்துள்ளன என்பது. இது நாலு சீட்டும் நானூறு கோடியும் கையடையாகப் பெற்றுக்கொண்டு கூட்டணியின் தலைமைக் கட்சி செய்யும் சிறுமைகளை இதர உறுப்புக் கட்சிகள் ஆதரிப்பதைப் போன்ற இழிதகைமை அல்ல.
கம்பனும், இளங்கோவும், சாத்தனாரும், நல்லாதனாரும், கலித்தொகைப் புலவனும், தோலாமொழித் தேவரும் திருவள்ளுவருக்கு ஆதரவாகத்தானே பாடியுள்ளனர்!
இதுவரை நான் எழுதிய வீட்டுப்பாடம் எனக்கோர் புதிய அனுபவமாகத் தெரிந்தது. சாகும்வரை கற்றுக் கொண்டுதானே இருக்கிறோம்! மாந்தரையும் மாண்புகளையும் அறிந்து கொண்டுதானே இருக்கிறோம்!
பல ஆண்டுகளாக வாசித்து வந்த சொற்றொடர் கடகரி. கரி எனில் ஆண்யானை என்பதறிவேன். கடகரி எனில் என்ன பொருள்? ‘கடகரியும் பரிமாவும்’ என்பார் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திருச்சாழல் பகுதியில். கடகரி எனில் பெரிய யானை என்றும், பரிமா எனில் குதிரை என்றும் உரை எழுதியுள்ளனர். கம்பன் பாடல் கடகரி பயன்படுத்துகிறது. மதக்களிறு என்று பொருளுரைத்துள்ளனர்.
சரி, கடம் என்றால் என்ன? சிறு வயதில் இசை கேட்க ஆரம்பித்த எனக்கு, கடம் என்றால் மண்பானை வாத்தியம் என்பது தெரியும். சீர்காழி கோவிந்தராஜன் கச்சேரிகளில் தவறாது இடம் பெறும். கடம் வித்துவான் விக்கு விநாயகராம் மிகப் பிரபலமானவர். பள்ளிப் பாடங்களை உருப்போடுகிறவனைக் ‘கடம் அடிக்கிறான்’ என்று பரிகாசம் செய்வோம். வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் வில்லின் ஒரு முனையைக் கழுத்தில் தாங்கி நிற்கும் வாத்தியத்தைப் பானைத் தாளம் அல்லது தோண்டி வாத்தியம் என்போம். கடன் என்ற சொல்லை வழக்கில் கடம் என்போம்.
கடம் எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் பொருள் நிறைய.
பாவம்
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில், திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதியில் ‘கடமுண்டார் கல்லாதவர்’ என்பார், ஐம்பத்திரண்டாம் பாடலின் ஈற்றடியில். கல்வியறிவு பெறாதவர் பாவம் செய்தவர்கள் என்பது பொருள்.
காடு, வனம்
கோபம், சினம்
கடன்
தெய்வக்கடன்
முறைமை, கடமை (சூடாமணி நிகண்டு)
நீதி (சூடாமணி நிகண்டு)
யானையின் கன்னக் கதுப்பு (பிங்கல நிகண்டு)
யானையின் மதம்
கயிறு (பிங்கல நிகண்டு)
பாலை நிலத்து வழி
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
குடம்
கும்பராசி
குடமுழவு
பண்டைய தானியங்கள் முகத்தல் அளவு. பதக்கு, இரண்டு குறுணி, இரண்டு மரக்கால், எட்டு பக்கா. ஒரு பக்கா என்பது இருநாழி. நாழி என்பது உத்தேசமாக ஒருபடி, ஒரு லிட்டர்
உடம்பு, உடல், தேகம், மெய், மேனி (பிங்கல நிகண்டு)
யானைக் கூட்டம் (பிங்கல நிகண்டு)
மலைச்சாரல்
மரமஞ்சள்
கம்பன் சொல்லாடலில் வரும் ‘கடகரி’ என்பதை இப்போது யோசித்துப் பார்த்தால் – கன்னக் கதுப்புகளை உடைய ஆண் யானை, மதயானை, யானைக் கூட்டம் என எப்பொருளும் கொள்ளலாம்.
பண்டைய காலத்துப் பாடல்களில் ஒரு சொல் புலர்த்தும் பாவம், தொனி, உணர்ச்சி, பொருள், சூழல் வேறுபாடுகள் கவனிக்கத்தக்கவை. நாம் எடுத்தாண்ட திருக்குறளில் வரும் கொழுநன் எனும் சொல்லின் பொருள் Husband, Master, Lord என வரும். அதாவது கணவன், இயமானன், இறைவன் என்பன.
நாஞ்சில் நாட்டில் கொழுந்தன் என்றால் கணவனின் தம்பி. அஃதேபோல பிற பிரதேசங்களின் மைத்துனி, மச்சினி என்ற சொற்களுக்கு நாஞ்சில் நாட்டு மாற்று கொழுந்தி. அதாவது மனைவியின் இளைய சகோதரி. மூத்தவள் மதனி. சொந்த அத்தையின் பெண்மக்களில் மூத்தவள் மதனி, இளையவள் கொழுந்தி. இளைய சகோதரனின் மனைவியும் கொழுந்தியே!
கொழுந்தன் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் முதற்பொருள் கொழுநன், கணவன் என்பதே. இரண்டாம் பொருள் கணவனின் இளைய சகோதரன். ஊரில் உறவு என்றல்லாமல், நான் அண்ணன் என்று அழைப்பவரின் மனைவிமார், சொக்களியாக என்னை விளிப்பது, ‘என்னா கொழுந்தம்பிள்ளே!’ என்று. எப்படி தென்னம்பிள்ளை, அணிற்பிள்ளை, செல்லப்பிள்ளை, மூத்த பிள்ளை என்பன சாதிப்பெயர் இல்லையோ அதுபோல கொழுந்தன் பிள்ளையும் சாதி குறிப்பது அல்ல.
கம்ப ராமாயணத்தின் ஐந்தாவது காண்டமான சுந்தர காண்டத்தில் மூன்றாவது படலம் காட்சிப் படலம். அசோக வனத்தில் தனிமைத் தவமியற்றும் சீதை, இராமன் குறித்த நினைவுகளில் மூழ்கிக் கிடந்தபோது, அவன் மனவோட்டமாக ஒரு பாடல் –
“ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்”
என்று பேசும்.
‘அன்று ஆழமான நீரோட்டம் உடைய கங்கை நதியில் எம்மை ஓடத்தில் ஏற்றித் துடுப்பும் போட்டு ஆற்றைக் கடத்திய ஏழை வேடன் குகனிடம் சொன்னானே இராமன் – என் தம்பி உன் தம்பி, நீ தோழன், மங்கை சீதை உன் கொழுந்தி – என்று, அந்த ஆழமான நட்பினை எண்ணி மயங்கினாள்’ என்பது பாடலின் பொருள். இங்கு கொழுந்தி என்றால் தம்பி மனைவி என்று பொருள்.
யுத்த காண்டத்தில், சீதை களம் காண் படலத்தில், மயங்கிக் கிடக்கும் இராமனைக் கண்ணுற்ற சீதையின் புலம்பலாக வரும் பாடலில் கம்பன் பேசுவான் –
“கொழுந்தா என்றாள், அயோத்தியர் தம் கோவே என்றாள்”
என்று. இங்கே கொழுந்தன் என்றால் கணவன் என்று பொருள். எனவே கொழுநன் ஒரு சொல், கொழுந்தன் இன்னொரு சொல், கணவனுக்கு.
‘தெய்வம் தொழா அள்…’ என்று நாம் ஆதியில் தொடங்கிய திருக்குறள் குறித்து சமகாலத்தில் விவாதங்கள் உண்டு. ஆனால் உரையாசிரியர் எவருமே அதை விவாதப்பொருள் ஆக்கவில்லை. பழம் பாடல்களின் அறக் கோட்பாடுகள் எக்காலத்துக்கும் பொருந்தும், நிலைத்து நிற்கும்.
அன்றைய அறவுணர்வு, தொல்மரபு, பண்பாட்டுச் சூழல் சார்ந்து கருத்து உரைப்பன திருக்குறள் பாடல்கள் பல. அவை எக்காலத்தும் இந்தியன் பீனல் கோடு சட்டங்கள் அல்ல. பரிந்துரைகள், வழிகாட்டல்கள், நிலைநாட்டல்கள். அவற்றை அப்படியே கொணர்ந்து இன்று பொருத்த முடியுமா என்பது பயனற்ற கேள்வி. காலை எழுந்ததும் பல் துலக்க வேண்டும் என்பது போல, முடிந்தால் முயலுங்கள். அது எவரின் சுதந்திரத்தின் மீதான குறுக்கீடு அல்ல.
மேலும் உரையாசிரியன் என்பவர் எத்தகு மேதமை கொண்டிருந்தாலும் அவர் மூலப் படைப்பாளி அல்ல. மொழிபெயர்ப்பு செய்பவருக்கும் அது பொருந்தும். தமது புலமை சார்ந்து அவர்கள் செயல்படுவார்கள். ‘புற்று வாள் அரவும் அஞ்சேன்’ என்ற மாணிக்கவாசகரின் அச்சப்பத்து வரியை ‘புற்று வாழ் அரவும் அஞ்சேன்’ எனத் திருத்தி உரை எழுதுபவரும் உண்டு நாட்டில். அவர்கள் தருகின்ற பொருள், புற்றில் வாழ்கின்ற பாம்புக்கும் அஞ்சமாட்டேன் என்பது. மாணிக்கவாசகர் கருதியது புற்றில் உறையும் விடப் பாம்புக்கும் அஞ்சமாட்டேன் என்பதை. வாள் எனில் விடம், வாள் என்றால் ஆயுதம், ஒளி என்பன வேறு பொருள்கள். திருவாசகத்தில் ஒரு பாடலில் ‘கற்பனவும் இனி அமையும்’ என்பார். உரையாசிரியர்கள் அனைவரும் கற்பனவும் இனி அடங்கும், முடிவுபெறும் என்று உரை எழுதினார்கள். கற்பனவும் இனிமேல்தான் அமையப் போகிறது என உரை சொல்வேன் நான். நாளை எவரும் திருக்குறளுக்கு உரை எழுதக்கூடும், ‘கொழுநன் தொழுதெழுவாள்’ என்பதற்கு கணவனின் தம்பி பாதங்களைத் தொழுது எழுவார் என்று.
தெளிவை அழுத்தமாகச் சொல்வதற்காக அவ்விதம் பாடல் யாத்தார் குறளாசான். 146 கோடி இந்திய மக்களில் பாதிப்பேர் பெண்கள். அவருள் மணமானவரில் எவரும் பெய் எனக் கூறினால் மழை பெய்யுமா என்று கேட்டால் பெய்யாது! அதன் காரணம் அவர்களின் கற்பின் குறைபாடு அல்ல. வலி மிகுந்த சோகத்தில் மகனின் உடலைப் பார்த்துக் கதறும் தாய், ‘ஏ! என்னைப் பெத்த ஐயா!’ என்று கூவினாள். அதன் பொருள் அவளைப் பெற்றவன் அவள் மகன் என்பதல்ல.
வள்ளுவரின் கூற்று ஒரு வாழ்க்கை நெறிப்பாடு, அவ்வளவே! மேலும் அத்தகு மனைமகள் வாழ்வதற்கு ஒப்பாக ஆண்மகனும் வாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா?
வள்ளுவரின் சிறப்பைக் கூலிக்கு கூவுகிறார்கள் உண்டு. திருக்குறள் என்பது வடமொழி நூலின் மொழியாக்கம் எனப் பகர்ந்து புளகாங்கிதம் அடைந்து வியர்வை கொப்பளிக்கத் தோள்த்துண்டால் அக்குளைத் துடைத்துக் கொள்பவர்களும் உண்டு.
‘நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும்’
என்பது 373-வது திருக்குறள்.
எளிதாகக் கூறிவிட்டுப் போவார் கவிமணி தேசிக விநாயக பிள்ளை – ‘வானம் கறுத்தால் மழை பெய்யும்’ – என்று. ஆனால் மணிமேகலைக் காப்பியத்தில் சாத்தனார் ஐயம் திரிபற நம்பிப் பாடினார் –
‘கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறங் கூரும்’
என்று. உரை சொன்னால் – செங்கோலின் நிலை பிறழ்ந்தால் கிரகங்களின் நிலை திரிந்து போகும். கோள் நிலை திரிந்துவிட்டால் மழை பொய்த்துப் போகும் – எனலாம்.
இன்று எந்தக் கிரகமும் நிலை திரிந்து போகவில்லை. மழையும் போதுமான அளவுக்குப் பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே ஊராட்சியில் இருந்து ஒன்றிய அரசுவரை யாவுமே சீரும் சிறப்பும் செம்மாப்பும் நீதியுமாய் செல்கிறது என்று உறுதிப்படுத்தி விடலாம் அல்லவா?
வள்ளுவர் கூற்றும் அதுவேதான்.
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்”
என்று அவர் கூறுவது – முறையாக அரசாட்சி நடைபெறவில்லை என்றால் ஆவினத்தின் பயன் குறையும். நேர்மையான தொழில்புரிவோர் தாம் கற்ற நெறிகளை மறந்து போவார்கள் – என்று. அறுதொழிலோர் என்றால் இன்று அரசு ஆதரவுத் தொழிலாகி விட்டது. அமுல், ஆவின், மில்மா, நந்தினி என ஆ பயன் பெருகி வருகிறது. எனவே காவலன் சிறப்பாகவே காக்கிறான் என மெய்ப்புப் பார்த்து விடலாம்.
இப்படியெல்லாம் இருந்தால் சிறப்பாக இருக்குமே என புலவன் விரும்பினான். அது ஆசையோ, பேராசையோ, ஆன்மீக வெளிப்பாடோ அல்லது அவன்மூலம் இறைக்கூற்றோ?
புலால் மறுத்தல் அதிகாரத்துத் திருக்குறள் மொழியும் –
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
என்று. ஏன் புலாலுக்காக அறுபடும் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் மாத்திரம் தொழுவதுதானே முறை? எல்லா உயிரும் – அரணை, பல்லி, ஓணான், நாய், பூனை, எலி, பெருச்சாளி, காகம், புறா, மயில், மைனா, குயில், செம்போத்து, கிளி, கழுகு, காய்சினம் முதலானவை ஏன் தொழல் வேண்டும்? புலால் மறுத்தானை என்று மட்டும் வள்ளுவர் சொன்னால் ஆகாதா? கொல்லான் புலால் மறுத்தானை என்று எதற்குத் தனியாகப் பேசவேண்டும்? ‘கொன்றால் பாவம் தின்றால் தீரும்’ என்பதனை விடுத்து, சகல உயிரினங்களிடமும் அன்பு பாராட்டுபவனாக இரு என்கிறார்.
சும்மா மனக்கிளர்ச்சிக்கும், வேடிக்கை பார்ப்பவனின் கைதட்டலுக்கும், காசுக்கும் ஆசைப்பட்டுக் கொன்றால் அது பாவம். அது உணவுக்காகக் கொல்வதைப்போல இல்லை. தடை செய்யப்பட்ட மான் இறைச்சி கூட செல்வாக்கும் அதிகாரமும் இருந்தால் இங்கு சாத்தியமே!
நமது மன்னர் பிரான்கள், சுல்தான்கள், ஐரோப்பியத் துரைமார்கள், இந்திய ஜமீன்தார்கள் இதுவரை இலட்சக்கணக்கான புலிகளை வேட்டையில் கொன்றதை அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள். அவர்கள் புலிக்கறிக்காகவா கொன்றனர்? யானைகள் கொல்லப்பட்டுத் தந்தங்கள் அறுக்கப்பட்டது ஏன்? இந்தியப் பாம்பினங்கள் பன்னூறு. அவற்றுள் நான்கே நான்குதான் விடமுள்ளவை. விடமுள்ள பாம்பை வாளரவு என்றார் மாணிக்கவாசகர் என்று முன்பே சொன்னோம். விடமே இல்லாத எத்தனை கோடிப் பாம்புகளை அச்சத்தின் காரணமாகவும் அறியாமையாலும் இதுவரை கொன்றிருப்போம்? தண்ணீர்ப் பாம்பு, மண்ணுள்ளிப் பாம்பு, இருதலை மணியன், சாரைப்பாம்பு, மலைப்பாம்பு, பச்சைப்பாம்பு, கொம்பேறி மூர்க்கன், புல்லுருவி எனச்சில இனப்பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.
புலி மானைக் கொல்லும், பூனை எலியைக் கொல்லும், பாம்பு தவளையைக் கொல்லும், பல்லி பூச்சியைக் கொல்லும். காரணம் உலகுக்கு எதையும் நிறுவுவதற்காக அல்ல. தனது பசியை அகற்ற. அது இயற்கையின் ஒழுங்கு, நியதி, நெறி. ஆனால் ஆராயாமல், அறிவற்று, வெற்று ஆரவாரங்களுக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக, தொழில் போட்டியில், தலைமைப் பீடம் அடையக் கொல்வதை என்னென்பது? அவ்விதம் கொல்லாமல் வாழ்பவனையே கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்றாரா வள்ளுவர்?
அவர்தானே –
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்”
என்கிறார். என்னை என்றுமே குற்றக்கூண்டில் நிறுத்தும் குறள் –
“உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்
எண்ணப்பட வேண்டா தார்”
என்பது. அதைவிடத் தீவிரமாகக் காயப்படுத்தும் குறள் –
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்”
என்பது.
எனில் மத்திய, மாநில அரசாங்கங்கள் நஞ்சைத்தானே விற்றுக் கொண்டிருக்கின்றன வருமானத்துக்காக! வள்ளுவ நெறி கூவுகிறவர்கள் மது ஆலைகள், மது விடுதிகள், மது இறக்குமதிகள் வைத்திருப்பதேன்?
எவ்வாறாயினும் இன்றைக்கும் பொருந்தும் கேள்விதானே,
‘‘சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை”
என்பது. அவர்தானே சொல்கிறார்,
“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று”
என்று.
“அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று”
என்று முன்பு பேசிய புலால் மறுப்பை வலியுறுத்துகிறாரே! எனில் நமது கடாவெட்டுக்கள், சேவற்கோழி அறுப்புகள், ஆண் பன்றிகளின் நெஞ்சம் வகுந்து உதிரம் குடித்தல், திசைபலிகள், நாற்சந்தியில் நள்ளிரவில் நாட்டுக்கோழி முட்டை வெட்டிக் கழிப்புக் கழித்தல், செய்வினை செய்தல் – எடுத்தல் நடத்திச் சேவல் அறுத்தல் யாவுமே கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன.
வேறொரு குறளில் சொல்கிறார் –
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்று அழுத்தந் திருத்தமாக. இதைவிட மேலாக என்ன சமூகநீதி பேசிவிட இயலும்?
என்றாலும் சினிமா நடிகனும் சினிமாக்களுக்கு சுவரொட்டி ஒட்டுபவனும்; ஊராட்சிமன்ற உறுப்பினனும் துப்புரவுத் தொழிலாளியும்; அமைச்சனின் ஆறாவது வீட்டின் வாரிசும் ஆட்டோ ஓட்டுநரும்; இனமானத் தலைவனும் கறிக்கடைக்காரனும்; ஒன்றே என்றும், செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு ஒவ்வாது என்றும் எந்த சமூகநீதித் தொழில் முனைவோரும் உரத்துப் பேசுவார்களா? ரொட்டியில் எப்பக்கம் வெண்ணெய் தடவப்பட்டிருக்கிறது என்பது யாவர்க்கும் தெரியும்தானே!
அஃதேபோல் மற்றொரு திருக்குறள் –
“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”
என்பது. நாகரிகம் உடையவர்கள் என்று கருதப்படுகிறவர்கள், நண்பர்களால் தமக்குப் பருகத் தருகிற, உண்ணத் தருகிற பானத்திலோ, உணவிலோ நஞ்சு பெய்யப்படுவதைக் கண்டிருந்தாலும் தயக்கமின்றி உண்டு நட்பைக் காப்பாராம்.
இதனையே நற்றிணையில் பெயரறியாப் புலவர் ஒருவரின் பாடல் –
“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்”
என்று உரைக்கிறது. வாசிக்கவும் கேட்கவும் நன்றாகவே உள்ளது. ஆனால் நம்மால் செய்ய இயலுமா தோழர்களே!
செங்கோல் என்பது ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்’ என்ற இளங்கோவடிகளின் குறியீடு. இன்று அது அறமற்ற, கொள்ளைச் செல்வம் சேர்த்த, ஒழுக்கமற்ற, சீமான்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும் காட்சிப்பொருள். சந்தன, செஞ்சந்தன, தோதகத்தி, தேக்கு, வேங்கை, மருது, மகாகனி மரத்திலோ அல்லது ஆனைத் தந்தத்தில் இழைக்கப்பட்டு நவமணிகள் பதிக்கப்பட்டதாக இருக்கலாம். இருக்கும் இடம் சார்ந்துதானே அதன் சிறப்பு?
எனவே ஞானிமடம் என்றால் யோனிமடம் என்று பொருள் சொல்லும் இடம் அல்ல பண்டை இலக்கியங்கள். அவை பேசிய நெறிகள் இன்றைய நெறிகளுடன் பல இடங்களில் பொருந்திப் போகா! புலவர், ஞானியர், சித்தர் உரைப்பன யாவுமே உன்னத இலட்சிய நிலை. ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் உண்டு நமக்கு.
சட்ட வரைவுகள் செய்த மேதையர் எவரும், கள்ள ஓட்டு குறித்தும், ஓட்டுக்குக் காசும் கால்குப்பி சாராயமும் கோழி பிரியாணியும் கொடுப்பது பற்றி சிந்தித்தவர் இல்லை. சாதி பிரித்த வாக்குகள் குறித்தும், சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்பாளருக்கு இருபது கோடி செலவு பற்றியும், சட்டமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் எடுப்பவர் பற்றியும் கவன்றார் இல்லை. வேட்பாளர்கள் அறிவிக்கும் தேர்தல் செலவுகளையும், அவர்கள் தருகின்ற சொத்து சம்பாத்தியம் கைப்பணம் போன்ற விவரங்களையும் எந்த அரசாக இருந்தாலும் பொறுப்புடன் ஏற்றுக் கொள்ளத்தானே செய்கிறார்கள்!
ஒரு காலத்தில் ‘இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன?’ என்பது நமது பொறுப்பற்ற தன்மையைக் காட்டும் அலட்சியமான கூற்றாக இருந்தது. இன்று அதற்கு உரை எழுதினால், அக்கூற்றில் இருந்து இராமன் ஆயுட்கால பூழி வெங்கானம் நண்ணி விடுவான். உரை இப்படி மாறும் – இராவணன் ஆண்டாலும், இரணியன் ஆண்டாலும், சூரபத்மன் ஆண்டாலும், நரகாசுரன் ஆண்டாலும், வேறெந்த சாத்தான் ஆண்டாலும் எமக்கென்ன, வேறு மாற்றென்ன? – என்று.
நான் சொல்ல வருவது, ஞானியர் புகல்வது அவர்தம் ஞானத் தெளிவு, உண்மை வெளிச்சம், உலக நீதி. கூடுமானவரை அனுசரிக்க முயல்வது மானுட மாண்பு. கம்பன் சொன்னான் அல்லவா – ‘மற்றுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா!’ – என்று. அதற்கான அறிவுரையும் ஆற்றுப்படுத்தலுமே சான்றோர் கவி!
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

நலில் தொறும் நூல் நயம் போல ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’. என்ற குறளை மையமாகக் கொண்டு நாஞ்சில் நாடன் விரிக்கும் சொற் குடைக்குள் எத்தனை ஆயிரம் மழைத்துளிகள்!
ஐயா நாஞ்சில் நாடன் அவர்களே
வாழ்த்துக்கள். மிக மிக நுட்பமான செய்திகளை, தங்களுக்கே உரிய அழகிய கொஞ்சும் தமிழில் ஆழ்ந்து, ஆராய்ந்து, காட்டாற்று வெள்ளமென பிரவாகம் எடுக்கும் தமிழ் சொற்களின் நடையில், அதன் ஓட்டத்திலே கலந்து, கொண்டே இருக்கும் அழகை சுவாசித்தேன்.
அற்புதமாக திருக்குறளில் புதைந்து கிடக்கும் எண்ணற்ற பொக்கிஷங்களை வெளிக் கொண்டு வரும் பெருந்தகையே நீவீர் வாழ்க வாழ்க என்று மனசார வாழ்த்துகிறேன்.
அன்பன். சுப்ரமணியம் KCS கோவையில் இருந்து