இப்படித்தான் இப்பாடலை நான் கேட்டேன்

சமீபத்தில் கவிஞர் ரவிசுப்பிரமணியனின் கவிதைப் பாடல் ஒன்றினைக் கேட்டேன். வழக்கமாக அவர்தான் பெரும்பாலும் கவிதைகளுக்கு இசையமைத்திருப்பார். ஆனால், அவரது இந்தக் கவிதைக்கு மெட்டமைத்துப் பாடியவர் அவரது இசை குரு காரைக்குடி வீணை சுப்பிரமணிய அய்யர். எங்கோ குரு சிஷ்ய பாவம் இன்னமும் இருக்கிறதுதான் போலிருக்கிறது.

பொதுவாக அதிகாலை எழுந்து படிக்கவோ எழுதவோ செய்கிறவன் நான். அன்றும் அப்படித்தான் ஆரம்பித்துப் போய்க்கொண்டிருந்தது. சட்டென வாட்ஸ் அப்பில் வந்து விழுந்த அந்தக் கவிதைப்பாடலைக் கேட்கத் துவங்கியதுமே, வேறொரு சூழல் என்னை ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டது. ஏற்கெனவே அவரது ‘அருகிருக்கும் தனிய’னில் அந்தக் கவிதையை நான் வாசித்திருந்தேன். இப்போது அது வேற்றுரு எடுத்து நின்றதைக் கண்டேன். ஒரு இசை மாணவனாக இருக்கிறபோதும் அந்த அனுபவத்தை என்னால் முழுமையாக விவரித்துவிட முடியுமா…தெரியவில்லை. ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன். சினிமாப் பாடல்வரிகளை முதலில் பிரதியாகப் படிக்கையில் இதில் என்ன இருக்கிறது, ஒன்றுமே இல்லையே என்றுதான் பெரும்பாலும் தோன்றும். பிறகு இசை சேரும்போதுதான், அதற்கு ஜீவன் வரும். அதன்பின் அது இன்னொரு தளம் செல்லும். ஆனால் இது அவ்வகை இல்லை.

ஏற்கெனவே இது வீர்யமான கவிதை. இந்தக் கவிதைக்குள்  இருக்கிற, அதன் சொற்களுக்குள் மறைந்திருக்கிற  இசையை வீணை சுப்பிரமணிய அய்யர், ரொம்பத் தெளிவாக வெளியில் கொண்டு வந்துவிட்டார் என்றே சொல்வேன். 

உதாரணத்துக்கு ‘ஆதரவற்ற தனியனுக்கு’ என்ற அந்தக் கவிதையின் முதல்வரியை அவர் பாடும் போது  ஆதரவில்லாமல் ஒருவன் இருக்கிறான் என்பதை மெட்டே காட்சிப்படுத்திவிடுகிறது. ஆதரவற்றவனென அவர் பாடுகையில் கண் கலங்கிவிட்டது. அதை  அவர் விதவிதமாக திரும்பத் திரும்பப் பாடி, கவலைகள் மட்டும் ஆயிரம் ஆயிரம் என்கிறபோது அந்த வரியும் இசையும் என்னை விதிர்க்க வைத்தன.

உள்ளடக்கம் என்னோடும் என் உணர்வோடும் உடனே நூறு சதவீதம் பொருந்திவிட்டது. கவிதை எழுதியவரையும் எனக்குத் தெரியுமென்பதனால் வரிகளும் கண்ணீரை வரவழைத்துக்கொண்டிருந்தன. இறைவா என்பது தொகுப்பின் கவிதையில் இல்லை. ஆனால் அச்சொல்லை மெட்டமைத்துப் பாடிய கலைஞர் சேர்த்துள்ளார். அந்த  பதமும்  அதனோடு அவ்வளவு பாந்தமாக இணைகிறது.

‘சரணென சாஷ்டாங்கமாகி’ என்ற வரி வருகையில் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அந்தக் கணமே இசை வழியே ஏதோ ஒன்று சரணாகதியென விழுந்து வணங்குகிறது. இது ‘தன்யாசி’ ராகம் என்று ரவியண்ணன் சொன்னாலும், எனக்கு கர்நாடக ராகங்களின் விவரங்கள் அவ்வளவு புரியாது. ‘சங்கீத ஞானமு’ என்ற கீர்த்தனை, தன்யாசி ராகம் என்று அவர் சொன்னதும் மோகமுள்ளில் ஜேசுதாஸ் பாடியதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.

ஒரு குழந்தை தான் அதிகம் விரும்புகிற  ஒரு சாக்லெட்டை அப்படியே ருசித்து  ருசித்துச் சாப்பிடுவது போல, வீணை சுப்பிரமணியன் சார் பாடிப் பாடிச் செல்லுகையில் அந்த அனுபவம் அலாதியாக உள்ளது. அதுதான் என்னை இத்தனை எழுதவும் வைக்கிறது. கவிதையின் வரிகளுக்குள் இருக்கும் உணர்வுகளும் மெட்டும் ஒருவித சேர்மானத்தில் இரண்டறக் கலக்கும்போது, ஒரே வரியையே அவர் திரும்பத் திரும்பப் பாடுகையில் சில இடங்களில் அது ஒருவிதமான  மந்திர உச்சாடனமாக மாறி அதிர்ந்து வேறொரு இடத்துக்கு இட்டுச் செல்கிறது. இது ஒரு அபூர்வ விஷயம்.

ரவியண்ணனின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும்.  நான் அவரது முதல் தொகுப்பான ‘ஒப்பனை முகங்கள்’ முதல் சமீபமாய் வெளிவந்த ‘அருகிருக்கும் தனியன்’ வரை எல்லாமும் வாசித்துள்ளேன். படித்ததும் பல கவிதைகள்  எனக்கு உடனே பிடித்துவிடும். சொற்களும் சொல்லும் தொனியும் ரிதமும் என்னை வசீகரிக்கும்.  அது வாசிப்பனுபவம். ஆனால், அதையே இப்படி இசையாக அதை ஒரு பாட்டாக கேட்கும்போது, அது வேறொரு மாதிரியான உணர்ச்சிக் கலவைக்கு இட்டுச் செல்கிறது. 

வீணை சுப்பிரமணியன் சார் கவிதைக்குள் வரும் ‘உன் பொறுப்பு’ என்று ஒரு வரி முடிகிறபோது அப்படியே சட்டென அதை நிறுத்தற்குறியிட்டது போல் நிறுத்துகிறார் மெட்டில். ‘இது உன் வேலைப்பா… நீ செஞ்சிரு’ என்பது மாதிரியான ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டு, சட்டென அகல்வது மாதிரியான ஒரு விஷயம். அது கவிதையில் ஒரு மாதிரி இருந்தாலும், அதை இசையில் வேறொரு வகையாகக் கொண்டு வரமுடியும் என்கிற சாத்திய நிகழ்வு பிரமாதமாக உள்ளது.  

இந்த இசைக்கோர்வை மூலம் பெறும் காட்சிப்படிமங்கள் அலாதியாக இருக்கின்றன. ‘கர்ப்பகிரஹத்தில் பிசுபிசுப்பாய் இன்னும் ஒட்டியிருக்கின்றன நம்பிக்கைகள்’ என்று அவர் பாடும்போது பிசுக்குகள் ஒட்டியிருப்பது கண்ணுக்கே புலனாகிறது. ‘தீபத்தில் ஒளிரும் அருள் கரங்கள்’ என்கிற வரி மறுபடி மறுபடி பாடல் ரூபமாய் வெளிப்படும்போது, அக்கடவுளின் கரத்தை அத்தீபத்தால் மின்னுகிற அந்தக் கரங்களை காட்சியாய் கற்பனையில் பார்க்கும்போது ஒளியை உணரும் ஒளிப்பதிவாளனுமான எனக்கு அது ஒரு பயங்கரமான அனுபவமாகவே இருந்தது. கை மட்டும் அப்படி ஒளிர்கிறது. அது வழங்கிற்றா. இல்லையா..? அப்படி ஒரு கேள்வியும் அதில் இருக்கிறது. அந்தக் கரம் ஒளிர்கிறது. சரி. ஆனால் என்ன பயன்… இங்கே எதுவுமே நடக்கவேயில்லையே என்பது மாதிரி உள்ள உணர்வைப் பிரதிபலிக்கும், ‘பாலிக்கும் பாலிக்குமென’ என்ற சொற்களைச் சொல்லும் போதும், ‘இன்னும் எத்தனை வயது வரை’ என்று சொல்லும்போதும் கவிக்குழந்தை கவியின் கையை விட்டுவிட்டு பாடற்கலைஞனோடு வேறொரு இடத்துக்குப் போய்விடுகிறது. நான் சொல்லச் சொல்ல என்ன இது என்பது இந்தக் கவிதைப்பாடலை நீங்கள் கேட்டால்தான் புரியும். இது கேட்டலின் கவனம் கோரும் வேறொரு வடிவக் கட்டுரை.

கவிதைக்குள் வரும் ‘ஊற்றுக்கண்ணின் முதல் எம்பலாய்’ என்ற வரியை நான் பிரதியில் வாசிக்கையில், ‘அட… இப்படிச் சொல்லியிருக்கிறாரே’ என்று வியப்பு தோன்றியது. ஆனால் பாடலாய் அதைக் கேட்கிறபோது தண்ணீருக்குள்ளேயிருந்து ‘குபுக்’கென ஒரு ஒரு முதல் குமிழ் வந்து மெல்ல உடையும் காட்சி பிரசன்னமானது.

இன்னொரு நுட்பமான ஒரு விஷயத்தைச் செய்திருந்தார் வீணை சுப்பிரமணியன். ‘தீர்ந்த பாடில்லை என் கவலைகள் எதுவுமென தீர்ந்த பாடில்லை என் கவலைகள் எதுவுமென’ என்று இரண்டு மூன்று முறை பாடிய பின், திடுமென  ‘எதுவுமென’ என்ற அந்தச் சொல்லை எடுத்துவிட்டு, தீர்ந்த பாடில்லை என் கவலைகள் என நேரிடையாக வந்து அச்சொல்லை விட்டுவிட்டுப் பாடிய இடம் பாடல் கலைஞனின் கற்பனை வண்ணத் தீற்றல்.

மொத்தத்தில் இந்தப் பாடலின் ரிதம், கடந்த காலத்தை இடத்தை உணர்த்தும் காட்சிப் படிமங்கள், ஒரு கவிதை மெட்டாய் மலரும்போது நிகழும் அற்புதம், இது உருவாக்கும் ஆதரவற்ற தனிமை, கையறு நிலை, சரணடைதல், சொல்லும் பொருளும் இயைந்து முயங்கியதில் கிறங்கிய இடங்கள், பாடிக்கொண்டே  வரும்போது இசைக்கலைஞர் ஏற்படுத்தும் மெளனவெளி, ஏற்ற இறக்கங்கள், சிறியது பெரியதாகப் பாடுதல், சில இடங்களில் துரிதகதி மற்றும் குறுங்கமகங்கள் போன்றவை எல்லாமே ஒரு சரியான கலைச் சேர்மானத்தில் புதிய ஒன்றாக மாறியுள்ளது கவிதை.

இவற்றைத் தாண்டி பச்சைக் கற்பூரம், துளசி போன்றவற்றின் வாசனை நாசியில் வந்து மோதுகின்றன. செப்புப் பாத்திரத்திலிருந்து, பித்தளைக் கரண்டி வழி வந்து உள்ளங்கையில் விழும் அந்தத் தீர்த்தச் சில்லிப்பு, அதை உதடு குவித்து உறிஞ்சும் சிலிர்ப்பு – இப்படி இவற்றோடு இசையையும் சேர்த்து ஒரு முழுமையான குறும்படம் போல் கண்ணுக்குள் விரிகிறது கவிதை.

சொற்களுக்குள் இசைக் கலைஞர் செய்த வித்தை தனி. சில இடங்களில் ஒவ்வொரு எழுத்துக்கும் இடையில் அவர் தரும் இடைவெளி, நிறுத்தம், ஏற்ற இறக்கம் – இவையெல்லாம் புலவன் லிபியில் செய்ய முடியாதவை. அதுதான் இசையின் பிரத்யேக அனுகூலம்.

‘திரும்பத் திரும்ப சந்நிதி வந்து பிதற்றுகின்றேன்’ என்ற வரியை பாடல் கலைஞர், ‘பிதற்றுகின்றேனே’ என்று மாற்றுகிறார். ‘னே’ ஒரே ஒரு எழுத்தை நீட்டும்போது அந்த எழுத்து நெடிலாக மாறும்போது ஒற்றைத் தமிழ் எழுத்து இசையில் கொள்ளும் பரிமாணத்தை எண்ணியபோது, எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்ற வரி வந்தது ஞாபகத்துக்குள்.

சிறுகதைகளில் காட்சிப் படிமங்கள் குறித்து ஒரு இயக்குனராக, ஒளிப்பதிவாளனாக இன்றும் ஆராய்ச்சி செய்துகொண்டே வருகிறேன். மொழி இசையோடு சேரும்போது வரும் ஒரு ஃப்யூஷன் தனி என்பதை இந்தப் பாடல் மூலம் மேலும் அழுத்தமாக உணர்கிறேன்.

அகலிகை கல்லிலிருந்து உயிர்பெற்று வந்தாள் என்பது நம்பகமில்லாமல்தான் இருக்கும் பலருக்கும். ஆனால், இங்கே நாம் இந்தக் கவிதையை வாசிக்கும் போது சொல்லாய் நின்ற ஒன்று நம் கண்ணுக்கு முன்னே எழுந்து பறந்து மேலேகி வட்டமிடுவதை கண்ணில் பார்க்கிற போது அதுவும் சாத்தியம்தானே என்ற தோற்ற மயக்கம் ஏற்படவே செய்கிறது.

இதை இன்னும் ஒரு வயலினோ, ஃப்ளூட்டோ, ஏதேனும் ஒரு வாத்தியத்தோடு லயக் கருவி ஒன்றையும் சேர்த்து முழுமையான கீர்த்தனை தரக்கூடிய அனுபவமாக மாற்றிப் பாடிப் பதிவு செய்ய யாராவது கிடைக்க மாட்டார்களா என்று மனம் தவிக்கிறது. அதை நாம் காட்சியாக ஆக்கிவிட முடியாதா என்றும்தான். 

இந்தக் கவிதைப்பாடல் முடியும்போது வார்த்தைகளே வேண்டுதலாகி, மயங்கி குழைந்து, கண்மூடி நிற்கும் ஒரு இடத்தை இரு கலைஞர்களுமாகச் சேர்ந்து சிருஷ்டிக்கிறார்கள். ரவியண்ணனின் கவிதையை இன்று புதிதாய் அதன் பல்தள விஸ்ரூபங்களோடு உள்வாங்கினேன் என்றே சொல்ல வேண்டும். ஒரு மனிதனை ஃபோட்டோவில் பார்ப்பது, பிறகு அவன் குரலைக் கேட்பது. பின் அவனை வீடியோவில் இரண்டும் சேர்ந்து பார்ப்பது எல்லாம் ஒரு அனுபவம். அவனே ரத்தமும் சதையுமாய் நம்முன் வந்து நின்றால், ‘அய்யோ வாடா இப்படி பக்கத்துல’ என்று அணைத்துகொள்ளத் தோன்றும் இல்லையா… அவன் கரங்களை எடுத்து நம் கரங்களோடு பிணைத்துக்கொள்ளத் தோன்றுமில்லையா… அப்படித்தான் இந்தக் கவிதை இசையோடு வந்து நிற்கிறது. ஒரு அசல் உயரமுள்ள மாணவனின் கவிதையை எந்தத் தன்முனைப்புமில்லாமல் தன் இசை வித்வத்வம் மூலம் செவ்வியல் பிரமாண்டமாய் பிரமாதப்படுத்தியுள்ளார் ஆசிரியர். மாணவனைப் போலவே எந்த எதிர்பார்ப்புமில்லாமல் மாணவன் கவிதைக்காக கனடா நாட்டின் இயல் விருதினைப் பெற்றதற்காக அவர் வீடு தேடி வந்து பாடிப் பரிசளித்துச் சென்றிருக்கிறார் ஆசிரியர். 2025இல் நடந்திருக்கும் இதை என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

பொதுவாக, கவிதைகளுக்கு ரவியண்ணன் டியூன் போட்டு அனுப்பும்போது நினைப்பேன்,’ இவர் எப்படி இப்படி அனாயசமாக டியூன் போட்டுவிடுகிறார்…’ என்று. குறிப்பாக மீரா சாரின், ஞானக்கூத்தனின், நகுலனின், சுந்தர ராமசாமியின் கவிதைகளை எல்லாம் இவர் மெட்டமைக்கும்போது

அதே கவிதைகளை அர்த்தம் உணர்ந்து இவர் இசையில் ஒருமுறை எழுதுகிறார் என்ற வகையில் ஆச்சர்யமாக இருக்கும். வீணை சுப்பிரமணியன் சார் பாடியதைக் கேட்கும் இப்போதுதான் தெரிந்தது இந்த ரவிசுப்பிரமணியன் உற்சவர் என்று. இப்போது ரவியண்ணனது மெட்டுக்களின்  ரகசிய ஊற்றுக்கண்கள் தெளிவாகிவிட்டன எனக்கு.

சொற்களின் மகத்துவம் உணர்ந்து வரி வரியாக யோசித்து வலியாக எழுதிய கலைஞனுக்கும், அதனையே இன்னும் மேலேற்றி உள்சக்தி ஊட்டி மெட்டிட்டுப் பாடிக் கலங்க வைத்த கலைஞனுக்கும் சிரந்தாழ்ந்த வணக்கம் செய்வதை விட வேறென்ன செய்துவிட என்ன செய்துவிட முடியும் என்னாலும்.

திருநாமம் சொல்லி… 

ஆதரவற்ற தனியனுக்கு
கவலைகள் மட்டும் ஆயிரம்

சரணென சாஷ்டாங்கமாகி
துயர் படிந்து கூப்பும் கரங்களில்
வலு ஏற்றுவதும் ஏற்றாததும் உன் பொறுப்பு

கர்ப்ப கிரஹத்தின் பிசுக்காய்
இன்னும் ஒட்டியிருக்கின்றன நம்பிக்கைகள்

தீபத்தில் ஒளிரும் அருள் கரங்கள்
பாலிக்கும் பாலிக்குமென
இன்னும் எத்தனை வயதுவரை ….

ஊற்றுக்கண்ணின் முதல் குமிழ் எம்பலாய்
எப்போது முகிழ்க்கும் நின் கருணை
தீர்ந்தபாடில்லை எதுவுமென
திரும்பத் திரும்ப சந்நிதி வந்து
பிதற்றுகின்றேன்

என்ன வசீகரமிது
எதை நான் நம்புகிறேன்
கிட்டாக் கருணையையா
கிட்டுமென்ற கிடக்கையையா

உன்னோடா
என்னோடா
யாரோடென் உரையாடல்

பச்சைக் கற்பூர வாசனை உறைந்த
துளசித் தீர்த்தத்தை
நிதமும் அதரம் குவித்து உறிஞ்சுகிறேன்
சடுதியில் கெடுதிகள் மறையுமென

களி மழைக்குக் கனவில்லை
பூந்தூறல்கூட வேண்டாம்
இருப்பின் சிறு துளியையேனும் பன்னீராக்கேன்

ஒலி வடிவில்



Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “இப்படித்தான் இப்பாடலை நான் கேட்டேன்”

  1. வரிகளும் குரலும் இயைந்து இயைந்து உருக வைக்கின்றது. ரவி சுப்பிரமணியன் சார் கவிதைகளின் வாசிப்பாளன் எனக்கு இப்பாடல் சடுதியில் மறக்காத ஞாபக மழை.

  2. செழியன் சார் எழுதிய உலக சினிமா கட்டுரைகளின் ரசிகன் என்பதால் அவர் மொழியின் லாவகங்களில் நான் உலக சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன். இதோ இசைக் கட்டுரையின் வாயிலாக பாடலைக் கேட்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.