சின்னச்சின்ன இழைகள் நெய்யும் தத்துவச் சித்திரம்- இரண்டாம் மற்றும் இறுதிப்பகுதி.
முந்தைய பகுதி
அந்த நிகழ்ச்சி என்னவென்று பார்ப்போம். புகழ் பெற்ற ‘த ந்யூ ரிபப்ளிக்’கில் (The New Republic) வேலை செய்த, தாராளமயத்தில் நம்பிக்கையுள்ள, என் தோழர், சிறந்த மனிதர், ரீகனின் பழமைவாத கட்சியில் இணைந்தார்; டுபான்ட் சர்க்கிள் (Dupont Circle) அருகே, ஒரு அருமையான, ஆடம்பரமான உணவுக்கூடத்தில் நடந்த விருந்தொன்றில், அதிபர் ரீகன், என் நண்பரைப் பார்த்துச் சொன்னார் : ‘வணிகத்தில் திறந்த மனம் கொண்ட சிறப்புள்ளவர் இவர்.’ இந்த மாறுபாடான கிண்டலின் தொனியில், ரீகன் ஏளனம் செய்வதை அனைவரும் உணர்ந்தாலும், சிரித்தார்கள். அறிவு சார் சீரியத் தன்மையுடன், அறிவு சார் வளைதலை எப்படி ஒப்பிட? மூடிய மனதுடன் இயங்கும் இன்றைய பொன்னுலகிலும், அறிவு வளர்ச்சிக்கான தர நிர்ணயங்கள் தேவை. மதவெறிகளை வளர்க்கும் சமூகங்கள், மதங்களின் சாரத்தை விடுத்து, வெற்றுப் புகழில் மிதக்க வைத்து, வெறுமைக் குழிகளில் நம்மைத் தள்ளி விடும்; அதை உணராத சமூகங்கள் ஊழல்களால், நசிவுகளால் பாதிக்கப்படும்.
மீபொருண்மை கருத்துக்களின் தற்காலிகத் தன்மையை, எனது மதம் சார்ந்த வளர்ப்பு முறையால், என்னால் பல காலம் உணர முடியவில்லை. எல்லாக் கருத்தியல் கருத்துக்களும் அவ்வாறே என்பதும், நாம் இப்போது நம்புவது தான் அனைத்திலும் ஆகச் சிறந்தது என்றும் எடுத்துக் கொள்கிறோம் என்று புரிய பல காலமாகியது. ஆனால், மீபொருண்மை கருத்துக்கள் சிறப்பு அந்தஸ்து உடையவை. அவை கூச்சலிடும் (இப்போதும் கூட), ஒளி வட்டம் அதைச் சுற்றி இருக்கும், புனிதத்துடன் இணைந்து வரும்; அதன் ஆன்மீக, அறிவு மேம்பாட்டு விளைவுகளால், அவற்றிற்கு ஏதோ ஒரு வழியில், முதிரா நிலை நிரந்தரத்துவம் முன்னரே உண்டாகிவிடுகிறது என எடுத்துக் கொள்ளலாம். அவைகளின் முன்னே, நான் அமைதி கொள்ள நேரம் பிடித்தது; அவைகளுக்கும் கடும் சீராய்வு வேண்டும் என்று கடும் உழைப்பைச் செலுத்தினேன்;
மீபொருண்மையாளர்களும் அந்த வழியைத் தானே சொன்னார்கள்? காவல் துறையினரைப் போல, எக்கருத்தையும், ஐயத்துடன் அணுகி, நுணுகிப் பார்க்கச் சொன்னார்கள் அல்லவா? தத்துவார்த்த சித்தாங்தங்களின் ஆர்ப்பரிப்பின் முன்னே இந்த நுணுகி ஆராய்தல் என்னவொரு கிளர்ச்சி!
இந்த அகிலத்தைப் பற்றியும், நம் அனுபவங்களைப் பற்றியும், உயர்வான, ஆழமான விஷயங்களைத் தேடும் ஒரு சரியான அறிவுஜீவியைப் படைத்துக் கொண்டவன் போல என் மனதின் ஒரு மூலையில் ஒரு எண்ணம், என் மத மரபினால் ஏற்பட்டதைப் பாருங்களேன்!
முன்னர் கீழ் மெசபடோமியா என்றும், தற்போது ஈராக் என்றும் அழைக்கப் படும் பிரதேசத்தில் யூதர்களின் மதம் மற்றும் அறிவு வரலாற்றை எழுதிய மாபெரும் ஆளுமையான சாதியா காவ்ன் (Saadia Gaon)10ம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். அவர் யூதர்களின் படைப்புத் திறனை மட்டுமல்ல, யூதர்களின் மற்ற சிறப்புக்கள், தத்துவம் உட்பட அனைத்தையும் எடுத்துச் சொன்னவர். The Book of Opinions and Beliefs என்ற நூலில் யூதத்தையும், பகுத்தறிவையும் ஐக்கியப்படுத்தி முதன் முதலாக எழுதியவர். அவர் எழுதுகோல், ஒரு சிந்தனையாளரின் ஓவியத்தை இப்படி வரைகிறது ‘சில காலங்களுக்கு, அந்த சிந்தனையாளன், ஒரு குறிப்பிட்ட பார்வையில் மும்முரமாக இருக்கிறான்; பின்னர் அதில் குறைபாடுகள் சிலவற்றைக் கண்டு அதை விட்டு விடுகிறான்; பிறகு, சில காலத்திற்கு, வேறொரு கருத்தில் கவனம் கொள்கிறான்- அதில் அவன் ஏற்றுக் கொள்ளாத ஒன்றை உணர்கையில் அதை விட்டு விலகுகிறான்; பின்னர் மற்றொரு கருத்து- சில காலம் அதைக் கொண்டாடுகிறான்- அந்தக் கருத்தில் பிழையை உணர்கிறான்- விட்டுச் செல்கிறான்; தன் வாழ் நாள் முழுதும் இந்த ஊஞ்சலில் ஆடுகிறான்.’
சாதியா இதை உயர்வெனக் கொள்ளவில்லை. பயணத்தை விட இலக்கு முக்கியம் என்று அவர் நினைத்ததால், இந்த ஊசலாட்டம் அவருக்கு உவப்பாக இல்லை. ஆனால், இந்த நுணுக்க அலைக்கழிப்பிற்கு உள்ளான சிந்தனையாளனை நான் ஆராதிக்கிறேன். அவன் அறிதலில் ஊதாரியாக இருப்பதும், அலைபாய்தலோடு இருப்பதும் நல்லதல்லவா? தன் புரிதல்கள், நம்பிக்கைகள், இவற்றை அவன் சரி பார்த்துக் கொண்டேயிருக்கிறானே? அவன் சிந்தனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த சீரற்ற குணத்தை சாதியா வெறுக்கிறாரோ, அதை நேர்மை என நான் உணர்கிறேன். கீழ்ப்படிதல் என்பது சிறந்த குணம் என்று மதங்கள் சொல்லக்கூடும்-ஆனால், அது அறிவுத் துறைக்குப் பொருந்துமா? ஏதோ ‘வெளிப்பாடுகளினால்/ உபதேசங்களால்’ சிந்தனை முன்னேறாது-அது கடவுளிடமிருந்து வந்தாலும், அது உனக்கு ஆன்ம விடுதலை தருவேன் என்று உறுதி கூறினாலும். (பகவத் கீதையை இங்கே நினைவு கூறலாம். மூலக் கட்டுரையாளருக்கு இந்திய தத்துவங்களில் பரிச்சயம் இல்லை) மீபொருண்மை கருத்துக்களைச் சொல்வதற்கான சாத்தியங்களுக்கு எந்த சிந்தனா சக்தி தேவையோ, அதே சிந்தனா சக்திதான் அக் கருத்துக்களை ஆழ்ந்து ஆராயவும் தேவையல்லவா? இல்லையென்றால், தேவதைக்கதைகளாகிவிடும்.
“நீங்கள் ஏன் MALEBRANCHE (மல்ப்ராஞ்ச்) படிக்கிறீர்கள்?” என்னை இப்படிக் கேட்டவர் ஒரு சாதாரணரில்லை- என் நண்பர் அவர்; மேலும் 17ம் நூற்றாண்டின் தத்துவத்திலும் மல்ப்ராஞ்சிலும் ஆழ்ந்த அறிவுடையவர். நான் சொன்னேன் ‘நீங்கள் இதைக் கேட்டு சற்று புன்னகைக்கலாம்; மீபொருண்மையாளர்களுடன் நான் அமைதியாக இருக்கிறேன். ஆன்மீக சூழல்கள் எனக்குப் பிடிக்கின்றன. அவற்றில் அனைத்தும் சரியாக இருக்காது என்றாலும், நான் அவற்றைத் தவிர்க்க விரும்பவில்லை- அந்தக் கூர்மை, அந்த மயக்கம், அந்த விழைவு அதை நான் கொண்டாடுகிறேன். ஒரு நாள் நான் இதைப் பற்றி எழுதுவேன். பதமாக இருக்கிறேன் என்று சொன்னால், நான் மனதளவில் சோம்பேறியாக இருக்கிறேன் என்று பொருளல்ல. மீபொருண்மை அப்படி ஒன்றும் எளிதானதுமில்லை. எதில் எனக்கு மகிழ்ச்சி? எங்கே நான் இருக்க வேண்டும் என்ற கட்டளையுள்ளதோ, எங்கே இருப்பதால் நான் மிகுந்த மகிழ்வை அடைகிறேனோ, மெல்லிய ஆனால், நல்ல காற்றில், வரலாற்றுக் குவியலின் சிக்கல்களைச் சிந்தித்துக் கொண்டு, பொருளற்ற குழப்பங்களைச் சுவைத்துக் கொண்டு, இறுதியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டு அங்கே மன நிறைவுடன் இருக்கிறேன். நான் கேள்விகள் என்றுதான் சொன்னேன்- பதில்கள் என்று சொல்லவில்லை; ஏனெனில், என்னிடம் பல பதில்கள் உள்ளன என்று நான் சொல்லக் கூடாது; நேரமும் குறைந்து வருகிறதே. ஆயினும், அந்தக் கேள்விகளுக்கே நம்மை ஆன்மீகத்தில் புடம் போடும் திறன் இருக்கிறதே; அந்தக் கேள்விகளுடன், தங்கள் நூலில் போராடியவர்களுடன் தான் எனக்கு இணக்கம். அவர்களை விரும்புகிறேன். டெக்சன் ராக் (Texan Rock Band) இசைக்குழு ஒரு முறை பாடினார்கள் “பேய், பிசாசுகள் உங்களுடன் இருந்தால், உங்களுக்கு அனைத்தும் இருக்கிறது.” நான் என் நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு, ஒரு அறிக்கையாளராக என்னை நினைத்துக் கொள்கிறேன். ஒரு நீள் மர மேஜையைச் சுற்றி அமர்ந்து கொண்டு சிறந்த விற்பன்னர்கள் என்றென்றுமே தங்களுக்குள் விவாதித்துக்கொண்டு எப்போதாவது ஒரு சிறு தெளிவைப் பெறும் இந்த இடையறா நிகழ்வில் நான் அடக்கமாக ஒரு மூலையில் இருந்து அதைக் கவனிக்கிறேன். (ஹ்யூமை புரிந்து கொள்வதற்கான என்னவொரு முயற்சி). கேள்வி கேட்க முயலாத இந்த கலாசார சமுதாயத்தில், கேள்விகளே சாதனைதானே?
என் நோக்கத்தில், நிச்சயமாக, தப்பிக்கும் கூறும் உள்ளது. நம்முடன், இந்த உலகம் அளவிற்கதிமாய் இருக்கிறது என்று வேர்ட்ஸ்வொர்த் புலம்பிய போது, அதை இன்றைய அளவிற்கு, அவர், உணர்ந்திருப்பாரா? இப்போது க்ராஸ்மியரில் (Grasmere) அருகலை (WiFi) இருக்கிறது. நம் அன்றாட வாழ்வின் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. இயற்கைக்கு முற்பட்ட நபர் தான் அதைப் பின்னோக்கித் தள்ள முடியும். அமைதி எங்குமில்லை. மேலும், யுத்தங்கள்! நானும் எனது நண்பரும் MALEBRANCHE பற்றி கடிதத் தொடர்பில் இருக்கையில், இஸ்ரேலின் பாதுகாப்பு என்று சொல்லியோ, அல்லது ஒரு குறிப்பிட்ட கொள்கையாக இஸ்ரேலின் பாதுகாப்பு பற்றிய உணர்வுடனோ, காஸா அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது; அருகிலிருந்தும், தொலைவிலிருந்தும் இஸ்ரேலின் வான்வெளிகள் தாக்குதலுக்கு உள்ளாகின. மேற்குக் கரையில் யூதர்கள், பாலஸ்தீனியர்களை படுகொலை செய்து கொண்டிருந்தார்கள். தன்னுரிமையை விரும்பிய உக்ரனை, ஒரு கொடுங்கோலன் துவம்சம் செய்து கொண்டிருந்தான். ஃபாஸிஸ்ட்டான ஒரு முட்டாள், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டான். மேற்கு சீனாவில் வதை முகாங்கள். சூடான் ஒரு இறைச்சிக்கூடமாக இருந்தது. இந்தக் குறிப்பிட்ட பல பெரும் சிக்கல்களில், சரியென்றும், தவறென்றும் எனக்கு கருத்துக்கள் உண்டு; ஆனால், மொத்தத்தில் உலகம் இரசிக்கத்தக்கதாக/ வாழத்தக்கதாக இல்லை. என் கொள்கைகளும், என் விஸ்வாசங்களும் , இந்தக் கொந்தளிப்புகளிலிருந்து, மனதளவிலும், உணர்வளவிலும் என்னை போதுமான அளவு விலக்கவில்லை என்ற போதும், சில நேரங்களில் நான் மறைந்து கொள்ள ஓரிடம் தேவைப்பட்டது. செய்திகள் அண்டாத மறைவிடம் வேண்டும். இந்த சகாப்தத்தின் இருளிலிருந்து தப்பிக்கும் ஒரு குகையாக தத்துவம், அதுவும் MALEBRANCHEன் மிக அருமையான நூல் எனக்குக் கை கொடுத்தது. நான் தொடர வேண்டிய பகுதிக்குள் நுழைந்தேன். அது, தற்காலிகத் தங்குமிடமானது.
அவர் 1638ல் பாரிசில் பிறந்தார். பல கல்விக்கூடங்களில், அரிஸ்டாட்டிலையும், கல்வியியலையும் கற்பித்தார்கள். அது அவருக்குப் பிடித்தமாக இல்லை. 1660ல், அப்போதைய கால கட்டத்தில், லூவ்ரே மற்றும் அரசு நூலகம் அமைப்பில் ‘ஓரடோரி’யில் பாதிரியார் தகுதிக்கான புதுப்பித்தலுக்காக அவர் சேர்ந்தார். அங்கே ஆகஸ்டினியனிசம் (பாவம், அருள், இரட்சிப்பு ஆகியவைகள் பற்றிய கோட்பாடுகள்) அவரது அறிவிற்கு விருந்தாக அமைந்தது. 1664ல் அவர் பதவியேற்றார். (அவரைப் போற்றிய ஹ்யூம், அவரை தந்தை என்றே அழைத்தார்)
டெகார்ட்டின் ஒரு அருமையான நூலை, தற்போது ‘லத்தீன் குவார்ட்டர்’ என்று அழைக்கப்படும், பாரீசின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள தெருவில், ஒரு புத்தகக் கடையில் தற்செயலாகக் கண்டெடுத்தார். டெகார்த்துக்கும் அரிஸ்டாடிலின் சிந்தனைகள் உவப்பாக இல்லை. அவரது எழுத்துக்கள் மல்ப்ராஞ்சைக் கவர்ந்தன. அவை ஏதோ ஒரு விதத்தில் 1கார்டீசியன் புரட்சியின் இடையீடுகளாகவும், அதன் இறையியல் தாக்கங்களாகவும் இருந்தன.
இவரையும் ஆன்டொயின் அர்னால்ட் விமர்சித்தார். அர்னால்ட் ஒரு கத்தோலிக்க மெய்யியலாளர்; கணித நிபுணர். அவரது காலத்தைச் சேர்ந்தவர்களால் அறிவுஜீவி என்று சொல்லப்பட்டவர். இவருக்கும் மல்ப்ராஞ்சிற்கும் இடையே நடந்த ஆக்ரோஷமான விவாதங்கள், அவை சுருக்கமாக இருந்த போதிலும், ‘17ம் நூற்றாண்டில் நடந்த அறிவான நிகழ்ச்சி’ என்று ஸ்டீவன் நாட்லர் (Steven Nadler) சொன்னார். அந்த நூற்றாண்டில் அறிவு மேம்பட்டு வந்தது; இந்த இருவருக்கிடையேயான தொடர் உரைகளும், விவாதங்களும், லைப்னிட்ஸ்,(Leibniz) ஜான் லாக்,(John Locke) ந்யூட்டன் போன்றோரை மிகவும் கவர்ந்தன.

1674-75ல் MALEBRANCHE ‘The Search After Truth’ என்ற, விவரங்கள் நிரம்பிய, பருத்த புத்தகத்தை வெளியிட்டார். மரபான, ஆழம் மிகுந்த அனைத்து மெய்யியல் சிந்தனைகளும் இதில் கையாளப்பட்டுள்ளன: உண்மையின் இயற்கை, ஞானத்தின் தோற்றம், காரணத் தத்துவம், ஆன்மாவிற்கும், உடலிற்கும் உள்ள உறவு, இந்த உலகில் கடவுளின் இருப்பும், அவரது செயல்பாடுகளும் போன்றவை. இது ஒரு அருமையான நூல்; ஆகஸ்டியனையும், டெகார்ட்டையும் இணைக்கும் முயற்சி; சிந்தனையைத் தூண்டும் விஷயங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதில், மெய்யியலின் வரலாறு சொல்லப்படாததே என்னை அதில் லயிக்கச் செய்தது. அவர் ஒரடோரியில் 50 ஆண்டுகள் வசித்தார்; 1715ல் இறந்தார்.
அவரது மேலான சுவர்க்க வாழ்வும், கருத்துக்களும் நம்மை ஈர்ப்பதற்கு முன்னர் ஒரு சாதாரண விஷயம் நம் கவனத்தில் வருகிறது. (அஷ்ட வக்ரர் என்ற நம்முடைய ரிஷியைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.) அவரைப் போலவே, முதுகுத் தண்டுவடக் குறைபாடோடு பிறந்தவர் இவர். அதன் அதீத வளைவு, அவரது மார்புப் பகுதியையும் மூழ்கடித்தது. 16 வயது வரை வீட்டிலேயே கல்வி கற்றார். அவரது இதய ஒலியைப் பார்க்கும் அளவிற்கு அவர் மெலிந்திருந்தார். உயரமானவர், துணிச்சல் மிக்கவர், பறவை போன்ற முகம், விந்தையாக ரஸ்ஸலை ஒத்திருந்தார். உட்காருவதற்கு சிரமப்பட்டார். வயிற்று வலியால் அவதிப்பட்டார். பாரிசில் முதலில் காஃபி அருந்தியவர்களில் அவரும் ஒருவர். சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சைகள், காய்ச்சல் அனைத்தும் அவரது ஆரோக்கியமின்மையைக் குறித்தன. தனது ‘The Search After Truth’ நூலில், அன்னையின் உணர்வு நிலைகள், கருவை பாதித்து உடல் சார்ந்த அசுரத் தன்மையுடன் சில குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம் என்று சொல்கிறார்.
இத்தகைய உடற் குறைகளுடன், அவர், சர்ச்சைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். 1கார்டீசியனிசத்திற்கு முன்பிருந்தே பேசப்பட்ட உடல்- மனம்- இருண்மையை இவரும் பேசினார். ஆனால், மூன்றாகப் பகுத்தார்- குருதி சுழற்சி உடலில், சிந்தனைகளும், ஆசைகளும் மனதில், ஆன்ம- கடவுள் இணைப்பு என்பது மூன்றாவது என்று விவரித்தார். எப்படி ஆன்மா, உடலுடன் இணைந்துள்ளதோ, அதே போல், அது கடவுளுடனும் பிணைப்பில் உள்ளது; கடவுளைக் கணக்கில் கொள்ளாமல், மனிதனைப் பற்றிய வரையறை சாத்தியமில்லை. இந்த வகையில், உடல் குறை கொண்ட இவர், கடவுளை தன் உடலிற்கு அருகில் கொண்டு வந்து விட்டார். பொருண்மை பற்றிய மதிப்பான தன்னுணர்வு கொண்ட இவரைப் போன்ற இன்னொரு மெய்யியலாளரைப் பார்ப்பது அரிது. “ஆப்பிளா, கல்லா எது உண்ணுவதற்கு நல்லது என்பதற்கு காரணங்களைத் தேடுவானேன்? சுவைத்துப் பார்த்தால் தெரிந்து விடப் போகிறது.”
இன்ப – துன்பத்தை சமமாகக் கருதும் கோட்பாட்டை MALEBRANCHE ஏற்கவில்லை. அவரது உடல் நிலை காரணமோ? ஓரிடத்தில் எழுதுகிறார் -செனெகாவின் எழுத்தில் ஒரு சுவைமிகு பகுதி உண்டு — இளைய கேட்டோவின் மேன்மையைப் புகழும் பகுதி. “அவனை, தெய்வங்கள், மனிதருக்குத் தந்த ஞானியின் உருவகமாகக் கூறுகிறார் செனெகா; “ஞானியான ஒருவருக்கு எவராலும் தீங்கும் அவமதிப்பும் ஏற்படுத்த இயலாது” என்பதை, கேட்டோ தனது வாழ்வியல் நடத்தையால் நிரூபித்தார்.” என்று புகழாரம் சூட்டுகிறார்.
தன்னை ஒருவன் இம்சை செய்த போதிலும், சினத்துடன்/ஆற்றாமையுடன் அதற்கு எதிர்வினை ஆற்றாத கேட்டோவின் தன்மையைப் புகழ்கிறார் செனெகா. ‘இது அதீதமான, இயற்கைக்கு மாறான ஒன்று’ என்று சொல்கிறார் MALEBRANCHE. “மனிதன், தான் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனில்லை; கேட்டோ, அப்படி மாற்றான ஒரு இயல்பைச் சொன்னால், அது நம்பத்தகுந்ததன்று. அவரை அடித்தவர்கள் அவரைக் காயப்படுத்தினார்கள் அல்லவா?” தன் சொந்த அனுபவத்தால், உயிரினத் தன்மையை MALEBRANCHE எடுத்துரைக்கிறார். ‘சமநிலையாளர்கள், பரிதாபத்திற்குரியவர்கள், அவர்கள் அறிவாளிகள் என்ற போதிலும்.’
‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் வள்ளுவர். “பாம்பு வந்து கடிக்கையில், பாழும் உடல் துடிக்கையில், யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு?’ என்று கேட்கிறார் கண்ணதாசன். MALEBRANCHE கண்ணதாசரின் வகை. ‘வலியின் உண்மைத் தன்மையை மறுப்பது அபத்தம்; வலி தன்னை பாதிக்கவில்லை என்று சுய நினைவுள்ள எந்த மனிதனும் சொல்வானா? யேசுவிடமிருந்து இதை கிருத்துவர்கள் அறியட்டும்- இழிவான மனிதர்கள், துன்புறுத்துவார்கள்; சில நல்ல மனிதர்கள் இந்தத் தொல்லைகளுக்கு ஆளாவார்கள்.’ இல்லை என்று நடிப்பதாலேயே, வலியிலிருந்து விடுபட முடியாது. மனதை, உடலிலிருந்து முற்றிலுமாக அன்னியப்படுத்த முடியும் என்ற தப்பான எண்ணங்களில், என்ன பெரிய ‘நாயகத் தனம்’ இருக்கிறது?’
இவ்வாறாக, ‘ஸ்டோயிசிசத்தின்’ கோட்பாட்டை அவர் மறுக்கிறார்- அது போலியானது- தன்னைத் தானே மிகைப்படுத்தி பாராட்டிக் கொண்டு, அசல் மனிதர்களின், அசல் காயங்களைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
செனெகாவின் திசைதிருப்பலை, கடுமையாக இவ்வாறு கண்டனம் செய்கிறார்:
“இந்த ஸ்டோயிசிசக் கூறுகளை மறுக்க நாம் ஒன்றை அறிய வேண்டும்- நாம், நம் உடலுடன், பெற்றோருடன், நண்பர்களுடன், நம் இளவரசருடன், நம் நாட்டுடன், பிரிக்க முடியாத பந்தத்தில் இருக்கிறோம்; அதைப் பிரிக்க முயல்வது கூட வெட்கங்கெட்ட செயலாகும்; நம் ஆத்மா, நம் உடலுடன், அதன் மூலம் கண்ணிற்குத் தென்படுபவைகளுடன், சக்தி மிகுந்த ஒரு கரத்தால், நம்மால் பிரிக்கவே முடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நம் உடலிற்கும், நம் காயங்களுக்குமான தொடர்பாடலை நாம் வலிந்து விலக்க முடியாது. நாம் பிறரால் காயப்படுவது உண்மைதான்; பிறரது வெறுப்பு நம்மை ஒன்றும் செய்யாது, நாம் அதனால் துன்புறமாட்டோம் என நினைப்பது இயல்பை மீறிய ஒன்று. கடவுள் நம்மை ஒரு சமூகத்தில் இருக்குமாறு தானே படைத்திருக்கிறான்? அவர்களுடன் தொடர்பும், உறவும் ஏற்படுகிறதல்லவா? கடவுளின் இந்த நோக்கத்தைத், தானே முயன்று இல்லாமல் செய்ய நம்மால் முடியாது. ‘வலி என்னைத் துன்புறுத்தவில்லை, இழி சொற்கள் என்னை புண்படுத்தவில்லை, ஏனெனில், நான் இவற்றிற்கு அப்பால் இருக்கிறேன்’ என்பதெல்லாம் மாயை. (வலி, இழி சொல் காயப்படுத்தும்; ஆனால், பழி வாங்கலைத் தவிர்ப்பதற்கும், நம் உள்ள அமைதிக்கும் ஸ்டோயிசிசம் தேவையில்லையா?)
மனிதன் பலவீனமானவன், அவன் உடல் இன்னல்களை அனுபவிக்கும் என்று அவர் உறுதியாகச் சொன்னார். அவர் வழமை வழி சிந்தனையாளரில்லை; அவர் கடவுளின் இயலாமையைப் பேசினார். அவரது சமகாலத்தவரான லைப்னிட்ஸ், ‘சாத்தியமான அனைத்து உலகங்களிலும், இதுவே சிறந்தது’ என்று முழங்கத் தொடங்குகையில், MALEBRANCHE, அழுகுபடுத்தும் தூண்டுதல்களைக் கையாளவில்லை. “எனக்கு தயக்கமில்லை; இந்த உலகம் ஒன்றும், சொல்லப் போனால், அப்படியொன்றும், சரியானதில்லை.” உலகம் சரியாக இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டாக அவர் சொன்னார் –“வாழ முடியாத வகையில், மிதமிஞ்சிய நபர்களுடன், இந்த உலகிற்கு வரும் குழந்தையே ஒரு அத்தாட்சி.” மனிதத்தன்மையற்ற பெரும்பீடத்திலிருந்து, இந்த மெய்யியலாளர்- தந்தை அல்லவோ மீயியற்பியலைக் காப்பாற்றினார்? அண்டவியல் மன்னிப்புக் கோரல்களை அவர் உற்சாகமாக நிராகரித்தார். “இந்த உலகம் ஒரு கைவிடப்பட்ட செயல்; கடவுளது செயலை விமர்சிக்க எங்களுக்கு பயமில்லை, அதிலுள்ள குறைபாடுகளைச் சொல்வோம்; இதனால், ஊழல் மலிந்திருக்கிறது என்றும்”. அழகான நிதானத்துடன், துணிச்சலுடன் பேசுகிறார். “நாம் வசிக்கும் இந்த உலகைவிட சரியான ஒன்றை கடவுள் படைத்திருக்க வேண்டும். பூமியை வளமாக்கும் மழை, பதப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில், சரிவரப் பெய்ய வேண்டும், தேவையில்லாமல் கடலில் பொழிவதை விட.” (கடலிலும் மழை பொழிதல் அவசியம் என அறிவியல் சொல்கிறது. அதைப் போலவே, நதி நீர் கலப்பதும் பல்லுயிருக்கான தேவை)
ஆகஸ்டீனின் இறையியல் மழுப்பலையும் இவர் ஏற்கவில்லை. ஆகஸ்டீன் சொன்னார் “நல்லதின் தனியுரிமை/ கூட விளைவது/ தீமை என இருப்பதால், தீமையை உண்டு பண்ண முடியாது; எனவே, தீமைக்கு கடவுளை பொறுப்பாக்க முடியாது.” ஆயினும், தனியுரிமை என்பது ஒரு விளைவைத் தவிர வேறொன்றுமில்லை, நேர்மறைக்கான சுட்டுதல் அது; அதற்குக் காரணங்கள் தேவையில்லை. இப்படிச் சொல்வதால், நம்முடைய பாதிப்புக்களுக்கு அவமானகரமான ஒரு சான்றை உருவாக்கிக் கொள்கிறோம். மல்ப்ரெஞ்ச்சின் உடற்பாதிப்பு, அவர் உடல் நலமில்லாமல் இருந்ததினால் அல்ல, நோய்க்கூறு இருந்ததினால். மேலும், தீமை இருந்தாலே, அது படைத்தவனின் பொறுப்புதான். இப்படிச் சொல்வதால், நான் இவரை இவான் கரமாசெவ் என்று சொல்ல வரவில்லை. ஆனால், மரபான இறையியல், கடவுளை தீமைக்குப் பொறுப்பாக்குவதை மறுத்த நிலையில், நேர்மையுடன், உலகின் குறைபாடுகளைச் சொன்னவர் இவர். இப்போதைக்கு இதைத் தரவுகளின் அடிப்படையில் ஒத்துக் கொள்வோம். வால்டருக்கு, லைப்னிட்சின் கருத்துக்களிலிருந்து ‘கேன்டிட்’ கதாபாத்திரத்தை உருவாக்குவதை விட, MALEBRANCHEன் கருத்துக்களை அவ்வாறு சொல்வது சிரமமாக இருந்திருக்கும். (மீபொருண்மையின் நம்பிக்கைகளை அந்தக் கதாபாத்திரம் கேலி செய்யும்.) கடவுள் என்ற கருத்துருவையும், தீமைகளுக்கு அந்த கருத்தும் பொருந்தும் என்பதை இவர் நம்பினார். ஒரே கடவுள் என்ற தன்மையின் அம்சங்கள், அதன் வழிகளின் ஒற்றுமை, அந்த உடலற்ற தன்மை, அந்த எளிமை இவையே இறைவனைப் பற்றிய இவர் எதிர்பார்க்கும் கோட்பாடு. ‘கடவுளுக்கு தெய்வீக அம்சங்கள் வேண்டும்;அதன் வழி அவர் நடத்தை இருக்க வேண்டும். எளிமையாக, உலகளாவியதாக, ஒற்றுமைக் குணம் கொண்டதாக, சுருக்கமாகச் சொல்வதென்றால், எந்தெந்த நல்லியல்புகளை நாம் கடவுளிடம் காண்பதாகச் சொல்கிறோமோ, அவற்றைக் கொண்டே இந்த உலகை அவர் படைத்திருக்க வேண்டும். MALEBRANCHE, ‘தனி விருப்பம்’ மற்றும் ‘பொது விருப்பம்’ இரண்டிற்கும் வேறுபாடு உண்டென்று சொல்கிறார். கடவுள், தன் ஒழுங்கமைதியையும், எளிமையையும், கைக்கொள்ள வேண்டும்; அவர் ‘தனி விருப்பத்தின்’ பேரில் செயல்படக்கூடாது. ‘பொது விருப்பம்’ என இவர் குறிப்பிடுவது , ‘இயற்கை விதிகள்’. கடவுள், இந்த உலகின் விவரங்களில் கவனம் செலுத்தினால், அது அவர் தன்னைத் தானே மட்டுப்படுத்திக் கொள்வதாகும்; தன் முழு அறிவால், வரையற்ற ஞானத்தால் கடவுள் உருவாக்கிய பொது விதிகள்/விருப்பங்கள் அவருடைய மேன்மைக்கு எடுத்துக்காட்டு. இந்த வழியைக் கைக்கொண்டதால் தன்னைத் தானே ஒரு எல்லைக்குள் பிணைத்துக் கொண்டு விட்டார் இறைவன்; அவர் ஞானம் எதைத் தடை செய்கிறதோ, அதை அவரால் செய்ய முடியாது. அவருடைய ஞானமே, அவரை ஒரு ஆண்மையற்றவனாக்கி விடுகிறது. , அவரது தார்மீக ஒருமைப்பாடு, அவரை உருவாக்கத்திலிருந்து விடுவித்துவிட்டது. அவர் காட்சியிலேயே இல்லை!
இது ஒரு பகுத்தறிவாளரின் குறிப்பு. இது அறிவியல் சார்ந்த உலகக் கருத்து; ஆனால், அதிசயங்களுக்கு இது ஒத்துப் போகுமா? ‘உருவாக்கமே,’ அதிசயம் என்னும் வகைமையில் வரும்போது, இந்தக் கருத்தின் மதிப்பீடூ என்ன? சற்றே வளைந்த ஒரு தெரு, ‘தெய்வம்’ ‘இயற்கை மதம்’ என்ற பாதைக்கு இதிலிருந்து இட்டுச் செல்கிறது. இதைப் போன்றதொரு கருத்து ‘மைமானிடிசில் (Maimonides- யூத வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவர்; மருத்துவ நிபுணர்; யூத தத்துவங்கள், சட்டங்கள் ஆகியவைகளில் மேன்மை பெற்றவர். பல சிறப்பான நூல்கள் எழுதியவர்; 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்) காணக் கிடைக்கிறது. ஒரு நபருக்கு பாராட்டோ, தண்டனையோ, இயற்கை விதிகளால் கிடைக்கிறது. சட்ட விவரங்களின் படி, பொதுவான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கடவுளின் ‘தனி விருப்பம்’ என்ற கருத்தை மறுத்தவர், அதன் மூலம், அதிசயங்கள்’ என்பதையும் கேள்விக்கு உட்படுத்தியவர். இங்கேயும் ஒரு சிக்கல் எழுகிறது. இத்தகைய நேர்த்தியான ஒரு கட்டமைப்பு, மெய்யியல் ரீதியாகவும், அழகியல் ரீதியாகவும், உள்ளத்தை கொள்ளை கொண்டாலும், பொதுவில் நிலவும் நம்பிக்கைகளை கேள்வி கேட்கிறதே? , எனக்கென்ற கடவுள் என்ற நிறைவை இது கெடுக்கிறது; நான் அவனிடம் செய்யும் பிரார்த்தனைகளைச் சிதைக்கிறது. நம் வாழ்வின் அழுத்தம் மிகுந்த காலகட்டங்களில், காணாமல் போய்விட்ட கடவுளிடம் எந்த வேண்டுதலை வைக்கமுடியும்? (எனக்கு தோள் கொடுக்க அவர் வேண்டும்.)
மல்ப்ராஞ்சின் ‘தனி விருப்பம்’ மற்றும் ‘பொது விருப்பம்’ கோட்பாடுகள், அர்னால்டிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர் ஆக்ரோஷமாக, கடவுளின் ‘தனி விருப்பக்’ கொள்கையை முன்னெடுத்தார். “கடவுள் ஒரு விதி சமைத்துக் கொண்டார்; ஒரு பெண்ணின் கருவறையில், இந்த மனித உடல் தோன்றும்போதே, அவர், ஆத்மாவை உருவாக்கி, அதை அந்த சிசுவின் உடலுடன் இணைத்தார். இப்படி ஒவ்வொரு உடலுடன், ஒவ்வொரு ஆன்மாவை இணைத்த கடவுள் தன் விருப்பப்படியே அதைச் செய்தார் என்பது இதன் மூலம் புலனாகவில்லையா?” அர்னால்ட் ஒரு எடுத்துக்காட்டும் சொன்னார் “ஒவ்வொரு காலையிலும், நான் இறைவனைத் தொழ வேண்டும் என்பது பொது விருப்பத்தின் கீழ் வரும்; குறிப்பிட்ட தனி விருப்பின் பேரில், நான் அதைச் செய்யவில்லை என்பது இதன் பொருளலல்ல.” இது ஒன்றும் சிறப்பான உதாரணமல்ல. தனிப்பட்ட கடவுள் என்பதை மானுடவியல் மிகச் சிறப்பாகச் சொல்கிறது. தேவையைப் பொறுத்து, கடவுள் என்ற கருதுகோள் அமைக்கப்படுகிறது.
மல்ப்ராஞ்சில் இதற்கு மேலும், நம்மை, நம் பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கும் பல விவரங்கள் உள்ளன. சுய நேசம் இல்லாதவர் இருக்கிறோமா? ‘நம்முடைய இருப்பில் நாம் கொள்ளும் விருப்பத்திற்கும்’ ‘நாம் நலமாக இருந்து கொண்டிருக்க வேண்டும்’ என்ற விருப்பத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை இவர் சொல்கிறார். விசித்திரமான ஒரு உண்மைக் கோட்பாட்டையும் சொல்கிறார். அறிவோனும், அறியப்படுவதும், முற்றிலுமான இறையியல் மார்க்கங்களில், புறவயமாக அறிந்து கொள்ளும் சாத்தியங்கள் உள்ளதால், கடவுளின் கண்ணோட்டத்தை உணரக்கூடும் என்று சொல்வது, அறிவாற்றலை நிரூபிக்கும் புறவய நோக்கக் கருத்து; இது முக்கியத்துவம் வாய்ந்தது; இன்றைய உலகில், இறையியல், புறவய உண்மையின் எதிரி என்றும், புறவய உண்மை நம் அனைவருக்குமே எதிரி என்றும் பார்க்கப்படுவதால், இவரின் இந்தக் கோட்பாடு மிகத் தேவையான ஒன்றே.
‘The Search For Truth’ நூலில், மாண்டெய்ன் கேள்விக்கு (கேலிக்கு) உள்ளாக்கப்படுகிறார். “தன்னைப் புகழும் போதையை விட தானே தன்னை இகழ்ந்து கொள்ளும் போது மாண்டெய்ன் எனக்கு கர்வமுடையவராகவும், வீண் டாம்பீகத்துடன் காட்சி தருகிறார்.” கண்ணோட்டத்தைப் பற்றி வேறொரு பகுதியில் சொல்லும்போது, ‘நம்மைப் பற்றிய நம் உணர்வு நிலையைக் கொண்டு பிறரை நாம் மதிப்பிட முயன்றால், நாம் சரியான விதத்தில் செயல்பட மாட்டோம். அனைத்தும் என்னிடம் இல்லை;” எத்தகையதொரு அருமை இந்தச் சிந்தனை. அனைத்தையும் ஐயத்துடன் பார்க்கும், உயிர்ப்பான, மாண்டெய்னை, அது தரும் மகிழ்ச்சிக்காகப் படிக்கலாம்; ஆனால், எழுத்தின் கவர்ச்சி மட்டுமே போதுமா?; தன் காலத்தில் ஒரு அறிவாளி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால், அனைத்தையும் சந்தேக்கப்படத்தான் வேண்டும். தன் கருத்துக்களைப் பற்றி வாத விவாதங்கள் நடக்கும் பெரிய இடங்களுக்கெல்லாம் இவரும் போய் வந்தார். இடைக்கால இஸ்லாமிய மெய்யியலளர்கள் சிலர் ‘சந்தர்ப்பவாதத்தை’ முன்வைத்தார்கள்; அதன்படி, ஒவ்வொரு இயக்கமும் கடவுளின் நேரடிச் செயலே! விழும் இலைக்கும், அடிபடும் பந்திற்கும் கடவுளைச் சொல்வதை இவர் விரும்பவில்லை. இது ஹ்யூமை வசீகரித்தது. எனினும், இடையறா கடவுளின் இயக்க மறுப்பு (சிறு நிகழ்வுகள் உட்பட) எந்த அளவிற்கு ‘ தனி விருப்பம்’ என்ற MALEBRANCHEன் கூற்றை வலியுறுத்துகிறது என்பது கேள்விக்குறியே! அதைப் போலத்தான் ‘ இயற்கை விதிகளை’ப் பற்றிய இவரது செய்தியும். அதைப் பற்றி பின்னொரு சமயம் பார்க்கலாம். இப்போது சற்று விலகியிருக்கலாம்.
மீயியற்பியல், அரசியலுக்கு, தார்மீகத்திற்கு, அழகியலுக்குத் தேவையில்லை என்றால், அது எதற்குத்தான் தேவை?
அது அதற்காகவே தேவை; ஒரு மன அமைதி தரும் அறிவுப் பெட்டகம். உண்மை என்று தோற்றம் தருவதிலிருந்து, உண்மையைப் பிரித்தெடுத்து, அதை அறிந்து கொள்ளச் செய்யும் அற்புதமான மனிதக் கடப்பாடே அதன் தன்மை. ‘அனைத்தும் நீரே’ என்று தேல்ஸ் சொன்னபோது, எல்லாம் தண்ணீராகக் காட்சி தந்தது என்பது பொருளல்ல. அமெரிக்கர்கள் சொல்வார்கள் ‘அது என்னவோ அதுதான்’. மிகச் சரியான கூற்று- தேவையில்லாமல் ஒன்றை மற்றொன்றாக ஏன் குறுக்க வேண்டும்? அவையவை அதன் உயிரியல் தன்மையோடு இருக்கட்டுமே, மேல் பூச்சாக இதைச் சொன்னால் கூட. ஒரு மேஜையை, ‘மேஜை’ என்று சொல்வதில் என்ன அறிவொளி பிறக்கிறது? நான்கு கால்கள், மேலே மரச் சட்டம் என்பதும் விவரணையே. பொருள்வய சட்டகத்திலிருந்து, கருத்துரு சட்டகச் சாம்ராஜ்யத்திற்கு எடுத்துச் சென்று கொண்டே இருந்தோமென்றால், நாம் ஆதிக் கோட்பாட்டின் சுருக்கங்களை அறியக்கூடும். அறிவியல், வரலாறு இவைகளும் இந்தப் பகுப்பாய்வில் கலந்து கொள்ளட்டும்.
மேலும், கீழுமாக அனைத்தையுமே பகுப்பாய்வு செய்யத் தேவையில்லை. தினசரி வாழ்க்கை அற்புதமானது- ஒவ்வொரு நொடியிலும் அது தத்துவத்தை துணை கோரவில்லை. இதற்கு அர்த்தம், அர்த்தமற்று வாழ்வதென்பதில்லை.‘வெர்மீரி’ன் பால்காரி,(சிறப்பான ஓவியம் அல்லவா அது?) ஸ்பினோஸாவின் அண்டைவீட்டுக்காரியாக இருக்கலாம். ஆயினும், வாழ்வில் சில சூழல்கள், நம் திறனை, ஆழமாகச் சிந்திக்கும் திறனை கேள்வி கேட்கும்/ கஷ்டமாக இருக்கும் ஒன்றை விட்டு நாம் விலக மறுக்கிறோம் என்பதைக் காட்டும்; புரிந்த தருணங்களோ, தெளிவில்லா புரிதல்களோ, அதைத் தெளிவுபடுத்துவது நம் கடமை. தருணங்கள் கடந்து செல்லலாம்-அவற்றின் அர்த்தக் குறியீடுகள் நிலைக்கும். அவற்றிலிருந்து நாம் நம் நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்ளலாம்/சரி பார்க்கலாம்.
ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் நமது உயர்ந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்துவது சாத்தியமற்றது. ஆனால் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ விரும்புவோர், தங்கள் உயர்ந்த நம்பிக்கைகளை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளாமல், அவற்றின் அடிப்படையில் விழிப்புணர்வை புதுப்பிக்காமல் இருந்தால், அதுவும் தவறுதான்.
செய்திகளிலிருந்தும், உலகில் நடக்கும் அர்த்தமற்ற போர் நிலவரங்களிலிருந்தும் சிறு விடுமுறை எடுத்துக் கொண்டதால் நான் புத்துணர்வு பெற்றேன். படபடப்பு இருந்தாலும், இப்போது செய்திகளைப் பார்க்க முடியும்; முன்னர் சொன்ன அரக்கன் தேர்தலில் வென்றுவிட்டார். ஆனால், ஒரு குடிமகனாக நான் செயல்படுவேன்; நம்மை அடித்துக் காயப்படுத்துபவர்களை, நாமும் காயப்படுத்துவோம்.
சில பொது சிந்தனைகளும், இந்திய மெய்யியலும்
மூலக் கட்டுரையாசிரியர் சிறப்பாக பல மெய்யியலாளர்களின் கூற்றைத் தொகுத்து சிந்திக்கத் தக்க கட்டுரையைத் தந்திருப்பதற்கு அவரைப் பாராட்ட வேண்டும். ஆயினும், கீழைத் தத்துவங்களைப் பற்றி, குறிப்பாக இந்திய மெய்யியல் பற்றி, இன்று முழங்கும் “கேம்ப்ரியன் வெடிப்பு” பற்றி எதுவுமில்லை. “கேம்ப்ரியன் வெடிப்பு” என்பது முடிவில்லாத திறந்த அணுகுமுறை,
- பல துறைகள் இணைந்து பணிபுரிவது,
- விளக்கப்பட வேண்டியதும், விளக்குவதுமாகிய இரண்டையும் சமமாகக் கவனிப்பது..
ரிக் வேதத்தின் 10வது மண்டலத்தின் நாசாதிய சூக்தம் (நாசாதிய வரிகள்) பிரபஞ்ச தோற்றத்தின் உண்மையை அலசிப் பார்த்து இப்படிச் சொல்கிறது. ஒன்றேதான் இருந்தது; அது ப்ரும்மம். அதன் விருப்பத்தால் அசைந்து பிரக்ருதி என்னும் இயற்கையைப் படைத்தது. அதை தோற்ற மாயை என்றும் சொல்வார்கள். “இல்லாமையிலிருந்து அனைத்துமே தோன்றியது; இருளை இருளே போர்த்தியிருந்தது; புலன்கள் அல்ல; புலன்களின் ஆதாரங்களும் அல்ல, பிரபஞ்ச தோற்றம் என்பது” இரண்டற்ற ஒன்றை விளக்கி, அதன் மூலம் பிரபஞ்ச உண்மையை இந்த வரிகள் சொல்கின்றன.
இந்திய வழிமுறையில், மீபொருண்மை என்பது, “என்ன இருக்கிறது?” என்பது மட்டுமல்ல; “இதை அறிவதால், நான் எவ்வாறு மறுபிறவியிலிருந்து விடுபட்டு நிரந்தர இருப்பாக/ மோட்சத்தை/ அடைய முடியும்?” என்பதும் பேசப்படுகிறது.
மீபொருண்மையை அறிவது விட்டுவிடுதலையாவதற்கே என்பது இந்திய சிந்தனை. அதை அறிவது, அறிவின்பாற்பொருட்டு என்பது மேலைச் சிந்தனை.
ஸ்வேதஸ்வதார உபனிஷத் அருமையாகச் சொல்கிறது.
ज्ञः ज्ञेयमिति परं मन्यते
भेदं प्रकृतेः पुरुषस्य ।
सर्वं ह्येतत्परं ब्रह्म
नेह नानास्ति किञ्चन ॥
ப்ரும்மம் (சித்தன்), ப்ரக்ருதி (இயற்கை) இரண்டும் வேறுவேறல்ல. அறிபவன் உணர்கிறான், இரண்டற்று இருக்கிறான் என்று ஆழமாகச் சொல்கிறது.
கடோபனிஷத் மற்றும் கீதை இதை மேலும் விளக்குகிறது.
“ஆத்மாவை ரதத்தின் அதிபதியாகக் கொள்; உடல் அந்த ரதமே. (உடல் என்பது பொருள்/ மேட்டர்) புத்தி சாரதியாகவும், (அறிவு என்பது அலசி ஆராயும் தன்மை) மனம் கயிறாகவும் இருக்கின்றன. (மனம் என்பது இரண்டையும் பிணைக்கிறது.)
புலன்கள் குதிரைகள்;(ஐம்புலன்கள் செயல்பட்டு மூளைக்கு செய்திகளைச் சொல்கின்றன. கயிறு சரியாக பிணைக்கவில்லை என்றால் தறி கெட்டு ஓடும் குதிரைகள்;
ஊழ்/ கர்மவினை பற்றி திருவள்ளுவர் சிறப்பாகச் சொல்கிறார்:
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.” (மூலக் கட்டுரை கர்ம வினையைக் கண்டுகொள்ளவில்லை)
திருமூலரின் திருமந்திரம், இறைவன், இயற்கை, நாதம், பேரறிவு, பேரானந்தம், என நாலே வரிகளில் அற்புதமாகச் சொல்கிறது.
“வேதாஞ்ச் சுத்தம் விளங்கிய சித்தாந்தம் நாதாங்கங் கண்டோர் நடுக்கற்ற காட்சியோர்/ பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய/ நாதாந்த பூரண ஞான நேயத்தரே”
இறைவன் வேதங்களின் எல்லையாக இருக்கிறான்; மும்மலங்களையும் நீக்கிய சுத்தப் பரம்பொருள்; நாதங்களின் எல்லையும் அவனே; அலைபாயும் எண்ணங்கள் இல்லாமல், அவனை நினைப்பவருக்கு, அவனே ஐம்பூதங்களின் ஞானத்தையும், உண்மையையும் உணர்த்தி, நாதத்தின் எல்லையைக் காண்பித்து, பேரன்பையும், பெரும் ஞானத்தையும் பெறும் ஞானியாக அந்த மனிதரை இறைத்தன்மை அடையச் செய்கிறான்.
1கார்டீசியன் புரட்சி- ரெனெ டெகார்ட் உருவாக்கிய சிந்தனை; மத- தத்துவ அரிஸ்டாட்டில் கருத்திலிருந்து விலகி, அறிவியல், பகுத்தறிவிற்கு முதல் இடம் கொடுத்த ஒன்று. மனம்- பொருள் இரண்டையும் பிரித்தது. இயற்கையைப் புரிந்து கொள்ள கணிதம் உதவும் என்று காட்டியது. நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன் என்பது அவரது புகழ் பெற்ற சொல்லாடல். நான் இருக்கிறேன், அதனால் சிந்திக்கிறேன் என்பது இந்திய மெய்யியலின் பெரும்பான்மைக் கருத்து.
உசாவி: Liberties
A Finer Place by Leon Wieseltier மற்றும் வேதாந்தங்கள், கீதை, திருமூலர், திருவள்ளுவர்.
முந்தைய பகுதி
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
