அந்தக் கீழ்நிலைப் பெண் பணியாளர்

மலையாள மூலம் : கே.சரஸ்வதி அம்மாள் [1919 –1975 ]
ஆங்கிலம்   :   ஜே.தேவிகா
தமிழாக்கம் : தி.இரா.மீனா

அரிசி கொதித்துப் பதமிழந்ததைக் கூடக் கவனிக்காமல், சுற்றுப்புறச் சூழ்நிலையை மறந்து பாரு அம்மா அப்படியே உட்கார்ந்திருந்தாள். அவள் வலப்பக்கத்தில் ஒரு பெரிய தென்னை ஓலை தொங்கிக் கொண்டிருந்தது. அவள் லேசாகத் தலையைத் திருப்பினால் போதும்; அந்த ஓலையிலுள்ள  இடைவெளி மூலமாக அடுத்த வீட்டில் நடப்பது முழுவதும் தெரிந்து விடும். சாலையின் மறுபுறம் சற்று உயர்வான பகுதி. அந்த வீட்டில் இருக்கும் மொத்த அறைகள், சமையலறை இருக்கும் பகுதி, குளியலறை –என்று எல்லாம் பாரு அம்மாவுக்கு அத்துப்படி. தான் இளம் பெண்ணாக இருந்த காலத்தில் அபூர்வமாக அங்கு தங்க வருபவரைப் பற்றிய ஞாபகங்கள் அவள் மனதிற்குள் பறக்கும். அந்தக் காலத்திற்குள் போய் விட்டால், அவள் மனம் அந்த வீட்டிற்குள், அதற்குள் மட்டுமே வாசம் செய்யும். 

இன்று அங்கு ஒரு கொந்தளிப்பு. தேவஸ்தானத்தின் கமிஷனர் தன் இரண்டு மகள்களோடு சுற்றுப் பயணம் வந்திருந்தார். 

சார்நிலை அதிகாரிகள் தங்கள் உயரதிகாரியைச் சந்தோஷப்படுத்தும் வகையில், பொறுப்புகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள். கோவிலைச் சுத்தம் செய்பவள் என்ற வகையில் அந்தப் பணி அவள் தலையிலும் விழுந்தது…

காலையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்து, அவளை நடுங்க வைத்தது. 

மூட்டு வலி அவளுக்கு மிக மோசமாகி விட்டதால், கடந்த இரண்டு நாட்களாக, அவளுக்குப் பதிலாக மகள் லட்சுமிக்குட்டிதான் கோவிலைப் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள். காலையில் எழுந்திருக்கும் போதே பத்து மணியாகி விட்டது. கோவில் மானேஜர் வந்த போது அவள் வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு, தன் வீங்கிய காலை நீவிக் கொண்டிருந்தாள்.

வீட்டிற்குள் வராமலேயே, எந்த முகாந்திரமுமின்றி, கட்டாயமான தொனியில், முகத்திற்கு நேராகத் தன் தேவையை முன் வைத்தார்..

பாரு அம்மாவிற்குச் சிறிது நேரம் பேச்சே வரவில்லை. இது கமிஷனர் மேனனின் விருப்பம். அது நிறைவேற்றப் படாவிட்டால்? அந்தக் கட்டளையின் நியாயம் அல்லது அநியாயம் பற்றி அவள் மனம் யோசிக்கவேயில்லை. எஜமானனைச் சந்தோஷப் படுத்துவதற்கான தனது கண்டுபிடிப்பு அது என்பதை மானேஜர் அவளுக்கு உணர்த்துகிற விதம்.

அவள் அமைதியாக இருப்பதைக் கவனித்து விட்டு, ” இந்த ஒரு தடவை, அது நடக்கட்டும். எஜமானனுக்குப் பணி செய்யக் கிடைத்த சிறிய வாய்ப்பில்லையா இது? அதனால் என்னவெல்லாம் பலன் கிடைக்குமோ? இந்த விஷயம் தொடர்பாக, அவர் போன எந்த இடத்திலும் இதுவரை பிரச்னைகள் இருந்தில்லை என்று டிரைவர் சொன்னார். இந்த ஓர் இடத்தில் மட்டும் தடை ஏற்பட்டதென்றால் விளைவுகள் என்ன என்று நினைத்துப் பார்க்க வேண்டும். நீங்கள்தான் தடங்கல் செய்தீர்கள் என்று யாராவது உங்களைச் சுட்டிக் காட்டுவார்கள்! அந்தப் பழிச்சொல்லை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.” என்று சொன்னார்.

“லட்சுமிக்குட்டி உங்கள் சகோதரியாக இருந்தால், என்ன செய்வீர்கள்? அவள் குரல் மெதுவாக உயர்ந்தது.

“சீ! ” அந்தக் கேள்வியால் அவர் மதிப்புக் குறைந்து விட்டது. “அப்பா இல்லாத அந்தப் பெண் என் சகோதரியா?”

அந்தச் சமமாக நினைக்காத பார்வை பாரு அம்மாவை அமைதியாக்கி விட்டது. அதைக் கவனித்து விட்டு, “லட்சுமிக்குட்டியைச் சீக்கிரம் அனுப்பி வைக்கிறேன். மாலை வழிபாட்டிற்குப் பிறகு, தன் மகள்களை கோவிலில் விட்டுவிட்டு அவர் இங்கு தனியாகத் திரும்பி வருவார். நான் வந்து அவளை அழைத்துப் போகிறேன். நீங்கள் எதுவும் வம்பு செய்தால்..”

அந்த முக்கியமான தருணத்தில், அவள் தப்பிக்கும் வழியைத் தேடிவிடக் கூடாது என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளும் வகையில் அச்சுறுத்தும் பாணியிலான குரலில் சொன்னார்: கமிஷனர்— எஜமானரின் வெறுப்பிற்கு ஆளாவீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு எதிராகப் போலீசில் வழக்குத் தொடுக்கலாம்— பிறகு அந்தப் பெண் மிகுந்த தொல்லைக்கு ஆளாகலாம்— போலீஸ்காரர்கள்…அவர்கள் எல்லோரும் அவளைப் பங்கு போட்டுக் கொள்வார்கள். இது எவ்வளவோ உயர்ந்தது. எதிர்காலத்திற்கும் உதவியாக இருக்கும்.”

பயனில்லாத அந்த வார்த்தைகளைக் கேட்ட பாரு அம்மா எதுவும் பேசவில்லை. எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது என்பது போல மானேஜர் அங்கிருந்து போய் விட்டார். 

அதன் பின்பு அவளுக்கு அமைதியே இல்லாமல் போனது. கிருஷ்ணாஷ்டமி — இந்தப் பிரளயத்திற்கு ஒரு முடிவு தர வேண்டும். நேரடியாக எதையும் அவளால் யோசிக்க முடியாத நாள்! வருடம் முழுவதும் அவள் வாழ்வது இந்த நாளின் ஞாபகத்தில்தான்! அவளுக்குப் பதினேழு வயதாகும் போது நிகழ்ந்த ஒன்றின் நினைவுநாள். செப்டம்பர் மாதத்தின் அஷ்டமி ரோகிணி நாள்.

==========

பாம்புக் கடி விஷம் தீர்க்கும் வைத்தியர் கிராமத்திற்குக் கண்டிப்பாகத் தேவை என்ற சூழல் உருவான போது கிருஷ்ணப் பிள்ளை அங்கு வந்தார். மிகச் சிறந்த வைத்தியர் என்று பேரெடுக்கும் வகையில் அவருடைய திறமைகளும், அதிர்ஷ்டமும் சேர்ந்து அவருக்கு உதவின. அங்குள்ள நடுத்தரப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் ’பாம்புக் கடி விஷம் இங்கு சரி செய்யப்படும்’ என்று பாம்பு படமெடுக்கும் சித்திரம் ஒன்றைச் சதுரமான பலகையில் வரைந்து, அவருடைய வீட்டின் முன்னால் தொங்க விட்டார். அதுதான் மக்களிடமிருந்து அவருக்குக் கிடைத்த சான்றிதழ்.

அந்த வைத்தியரின் குடும்ப வாழ்க்கையும் அதிர்ஷ்டவசமானதாக இருந்தது. மிக நல்ல குணம் படைத்த மனைவி. ஆனால் மூன்று வயதுக் குழந்தையை விட்டு விட்டு இறந்து போனாள்; வைத்தியரும், கிராமமும் அழுது தீர்த்தனர். 

அவருடைய இரண்டாவது மனைவிக்குப் ’பாம்பு’ என மக்கள் பட்டப் பெயர் வைத்தனர். ’என் நோயாளிகளிடமிருந்து நான் எடுத்த விஷமெல்லாம் ஒரு மனித வடிவமாக அவளுக்குள் வந்து விட்டது’ என்று வைத்தியரும் நினைத்தார். மிக அமைதியாக இருந்த அந்த வீட்டில், சண்டைகளும், இரைச்சல்களும் இயல்பாகி விட்டன. வீடு எப்போதும் விஷ ஜூவாலைகளால் நிறைந்து இருந்ததாக நினைத்தார். வருடங்கள் கடந்தன. மகளைப் பற்றிய வேதனை மனதை வாட்டியது. 

ஒருவருடைய பெற்றோரின் புண்ணியங்கள் அல்லது தனிப்பட்ட ஒருவரின் நல்ல கர்மாக்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் உறுதி செய்வதில்லை;  ஒரு வரையறுக்க முடியாத பலம் அதைக் கட்டுப் படுத்துகிறது என்பதைச் சிற்றன்னையின் கட்டுப்பாட்டிலிருந்த பாருக்குட்டி உணர்ந்திருந்தாள். அவள் வாழ்க்கை இப்போது முழு நரகமாகி விட்டது. இருந்த போதிலும் தற்கொலை மூலம் இதிலிருந்து அவள் தப்பிக்க நினைக்கவில்லை. தொடக்கத்தில் சிற்றன்னையின் மிகக் கடுமையான வசைகளால் வாடிப் போயிருந்த அவள், மெல்ல மெல்லக் கொடூரமான அந்த நடத்தைகளுக்குத் தன்னைப் பழக்கிக் கொண்டு விட்டாள்.

எல்லாவற்றையும் பொறுமையோடு ஏற்கப் பழகி விட்டாள்—அவள் வழியில் வருகிற அபூர்வமான நொடிப் பொழுதிலான சந்தோஷங்களைக் கூட. அந்த ஒரு காரணம்தான் அவள் உயிரும், உடலும் வாழ,வளரக் காரணமானது. 

அவள் தந்தை இறந்து ஐந்தாறு வருடங்கள் ஆன பிறகு, சிற்றன்னை அவர்கள் வீட்டிற்கு எதிரிலேயே ஒரு சின்ன இடம் வாங்கி, ஒரு புது வீடு கட்டினாள். அதற்கு உதவியாக இருந்த அவள் தம்பி அவர்களுடன் வந்து தங்கி விட்டான். அது பாருக்குட்டிக்குப் பெரிய சிக்கலானது. 

புது வீடு கட்டப்பட்டவுடன் முன்சிப் தன் குடும்பத்தோடு அங்கு வந்து விட்டார். 

அது பாருக்குட்டியின் பதினேழாவது பிறந்தநாள். அன்று முழுவதும் அவள்  எதுவும் சாப்பிடவில்லை. மாலைக்குள் தளர்ந்து விட்டாள்; வராந்தாவில் உட்கார்ந்திருக்கும் போது, தந்தையின் ஞாபகம் வர அழுதாள்.

பக்கத்து வீட்டுச் சுவரில் சாய்ந்து கொண்டிருந்த மூன்று குழந்தைகள் “ஏய், இங்கே பார், இங்கே பார் ” என்று கத்திக் கொண்டிருந்தன. அவள் தலையை உயர்த்தி அவர்களைப் பார்த்தாள். பின்னால் அவர்களின் பாட்டி  நின்று கொண்டிருந்தாள்.”அழாதே, இங்கே வா. உனக்கு என்ன வேண்டுமோ நான் தருகிறேன், ”என்று கனிவாகச் சொன்னாள்.

ஆமாம், அவளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தந்தாள். அவள் உடலுக்குச் சாப்பாடு தேவையாக இருந்தது; ஆனால் வேறு ஏதோவும் தேவையாக இருந்தது —அன்பு, வாத்சல்யம்— மனதுக்கும், உடலுக்கும் தேவைப்பட்டன. அந்தப் பாட்டியிடமிருந்து அவையும் அவளுக்குக் கிடைத்தன. அவளுடைய இடத்தில் வேறொருவர் இருந்தால், அந்த நிறைவேற்றத்தின் விளைவுகள் முழுமையாக வெறுக்கத் தக்கவை என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் ஒருவர் பசியால் வாடும் போது, ஒருவர் விஷம் கலந்த உணவு தந்தால் அதைச் சாப்பிட்டு இறப்பது பரவாயில்லை. வயிறு நிறைவின் மகிழ்ச்சி சாவின் வேதனையைத் தீர்த்து விடாதா? பாருக்குட்டி நினைத்தாள்.

அந்த வீட்டில் முன்சிப் தவிர அவர் மனைவி, மூன்று குழந்தைகள், அவருடைய வக்கீல் சகோதரன், அவர்களின் தாய், இரண்டு அல்லது மூன்று வேலைக்காரர்கள் ஆகியோர் இருந்தனர். பாட்டி ஏழைக் குடும்பத்தில் பிறந்து செல்வந்தர் வீட்டில் வாழ்க்கைப்பட்டவள். அதனால் அவளுக்கு ஏழைகளின் மேல் எப்போதும் இரக்கம் இருந்தது, குறிப்பாக வாழ்ந்து கெட்டவர்களிடம்.

பாருக்குட்டி குழந்தைகளைப் பார்த்துக் கொண்டாள்; எப்போதாவது பெருக்கித் துடைத்து, துணி துவைப்பாள். பாட்டியின் காலை,மாலை வழிபாட்டிற்குப் பூக்கள் பறித்து வந்து தருவது அவளுக்குப் பிடித்தமான வேலை. பகல் முழுவதும் அங்கேயே இருந்து விட்டுப் படுப்பதற்கு மட்டுமே வீட்டிற்குப் போவாள். அடுத்த வீட்டில் வேலை பார்த்துக் கொண்டு, குடும்பத்திற்கு அவள் அவப்பெயர் தேடித் தருவதாக அவர்கள் பழி பேசுவார்கள். ஆனால் அந்த நாளின் நினைவுகள், இந்த அம்புகள் ஆழமாக நெஞ்சைத் துளைக்காமல் கவசம் போலப் பாதுகாத்து விடும்.

இப்படிப், பாலையாக இருந்த அவள் வாழ்க்கையில் இப்போது வெளிச்சம் வந்தது.

ஆனால் விரைவில், முன்சிப்புக்கு இடமாற்றம் ஆகி, அவர் குடும்பத்தோடு போய் விட்டார். தன் தொழிலில் வருமானம் நன்றாக வளர்ந்ததால் வக்கீல் தன் தாயுடன் அங்கேயே தங்கி விட்டார். தாயும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. 

பாருக்குட்டி அவர்களிருவரையும் நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என்று முடிவு செய்து விட்டாள். அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் அவள் தீவிர கவனம் காட்டினாள்.         

அஷ்டமி ரோகிணி நாளில், அலுவலகத்திருந்து திரும்பிய பிறகு, தேநீர் குடித்து விட்டு, நடைப் பயிற்சிக்குப் போகும் போது பாருக்குட்டி மீது அவன் பார்வை பட்டது. அப்போதுதான் குளித்து விட்டு வந்திருந்த அவள் தன் நீண்ட கூந்தலை தளர்வாக முடிந்திருந்தாள். வெள்ளை முண்டும், நீல நிற ரவிக்கையும் அணிந்திருந்தாள். கையிலிருந்த தட்டில் பலவகையான புஷ்பங்கள்— செம்பருத்தி, மந்தாரம், துளசி, மல்லிகை, பவழமல்லி என. பதினேழு வயது இளமை, அவளது பாவங்களில் வெளிப்பட்ட மலர்ச்சி –அவர்கள் மாடிப் படியில் சந்தித்துக் கொண்டனர்.

படியின் ஓரத்தில் ஒதுங்கி, அவனுக்கு வழிவிட்டு, தலை குனிந்து வணக்கம் சொன்னாள். அவளிடம் ஏதாவது கேட்க வேண்டுமென்பதற்காக, “அம்மா எங்கே?” என்று கேட்டான்.

அவள் நின்று திரும்பிப் பார்த்து, “அம்மாச்சி குளிக்கிறார்கள்” என்றாள்.

படியில் ஏறித் திரும்ப அவளருகே வந்து தட்டைப் பார்த்து “ஏன் இன்று இவ்வளவு புஷ்பங்கள்? ஏதாவது விசேஷமா?” என்று கேட்டான்.

அவனைப் பார்த்தபடியே “இன்று அஷ்டமி ரோகிணி அல்லவா? இந்த அளவே போதாதென்று அம்மாச்சி சொல்வார்கள்!” என்றாள்.

அவனால் தன்னைத் தடுத்துக் கொள்ள முடியவில்லை.ஏதோ ஒன்று அவனை நிற்கத் தூண்டியது. எதுவென்று புலப்படவில்லை — புஷ்பங்களின் வாசனை, அல்லது அதை ஏந்தியிருந்த பெண்ணின் அழகு..

“அஷ்டமி ரோகிணி நாளில் யாரை வழிபடுவார்கள் என்று உனக்குத் தெரியுமா?”

இளம் எஜமானனின் அன்றைய மனநிலையைப் பார்த்து பாருக்குட்டி அதிசயப்பட்டாள்— மகிழ்ச்சியுடன்,”உம், இன்று கிருஷ்ண ஜெயந்தி. அவனை அலங்கரிக்கத் தான் இந்த புஷ்பங்களை நான் கொண்டு போகிறேன்” என்றாள்.

கோபாலன் நாயர் மிக அருகில் வந்தான். “சரி, எனக்கும் அவன் பெயர்தான். நீ என்னையும் கும்பிடலாம். எனக்குப் புஷ்பங்கள் மிகப் பிடிக்கும்.”

என்ன இது? இதையெல்லாம் பார்த்தால் அம்மாச்சி என்ன நினைப்பார்கள்? ஆச்சர்யமும், குழப்பமும் ஏற்பட “ உங்களுக்குப் பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜைக்கு நேரமாகி விட்டது.” என்றாள்.

“எனக்குக் காகிதக் கட்டுக்களோடுதான் பழக்கம், புஷ்பங்கள் பற்றி எனக்கு என்ன தெரியும்?” அவளது ஆச்சர்யத்தை மிக வேடிக்கையாகப் பார்த்தான். “நீயே அழகான ஒன்றை எடுத்துத் தருகிறாயா?”

அம்மாச்சி இதைக் கவனித்து விடுவதற்கு முன்னால் இந்த இடத்திலிருந்து போய் விடவேண்டும் என்பதே அவள் பிரார்த்தனையாக இருந்தது — அவள் இளமை பிரார்த்திப்பது வேறாக இருக்கலாம். கொஞ்சம் மல்லிகையையும், பவழ மல்லிகையையும் எடுத்துக் கொண்டு, “தயவுசெய்து இதை எடுத்துக் கொள்ளுங்கள்,”என்றாள்.

அவன் கையை நீட்டினான் ,ஆனால் புஷ்பங்களை எடுப்பதற்காக இல்லை, அவளுடைய கையைத் தொடுவதற்காக. வினோதமான பதட்டமென்று சொல்ல முடியாது ,ஆனால் உள்ளூரக் கிளர்ந்த சந்தோஷத்தால் கையிலிருந்த தட்டு விழுந்தது. அம்மாவின் காலடிச் சத்தத்தைக் கேட்ட கோபாலன் நாயர் “அம்மா வருகிறார்கள். வேகமாக எல்லாவற்றையும் எடுத்து விட்டு பூஜைக்குத் தயாராகு, சீக்கிரம்!” என்றான்.

அது அஷ்டமி ரோகிணி, என்பதால் பூஜை முடியச் சிறிது நேரமானது. சாதாரணமாகப் பூஜை அறைக்குள் போனால், பாருக்குட்டியின் மனம் முழுவதும் கிருஷ்ணன் நிறைந்திருப்பான். ஆனால் இப்போது, அவள் எவ்வளவு முயற்சி செய்தாலும், கிருஷ்ணனின் ’அதே பெயர் கொண்டவன்தான்’ புன்னகையுடன் முன்னால் நிற்பதைப் பார்க்க முடிந்தது. கடவுளை நமஸ்கரிக்கும் போது ஒரு விதக் களிப்பு உடலில் ஊடுருவியது. முதல் முறையாக ஓர் ஆணின் தொடுவுணர்வை அறிந்த அவள் கரங்களைக் கூப்பிச் சுயநலமின்றி, ’கடவுளே, இவர் தன் வாழ்க்கையின் உச்சம் தொட உதவுவாய். என்னிடமிருந்து நல்லவற்றை மட்டும் இவர் அனுபவிக்கட்டும்; என்னால் அவர் ஒரு போதும் கஷ்டப் படக்கூடாது.’ என்று பிரார்த்தித்துக் கொண்டாள். 

கடவுளுக்கு அவள் பிரார்த்தனை கேட்டு விட்டது—முற்றிலும் எதிர்பாராத விதமாக, மூத்த குழந்தைக்கு உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது என்று முனிசிப்பிடமிருந்து தந்தி வந்ததால் அடுத்த நாள் காலையில் அம்மா புறப்பட்டுப் போக வேண்டியிருந்தது.

அம்மா வேகமாகப் பயணத்திற்குத் தயாரானாள். “நான் எப்போது திரும்பி வருவேன் என்று தெரியாது. கோபி சாப்பாடில்லாமல் கஷ்டப்படக் கூடாது. நான் சமைப்பதைத் தவிர வேறு எதையும் அவன் சாப்பிட மாட்டான். ஆனால் உன் சாப்பாட்டைப் பொறுத்துக் கொள்வான். வேலை முடிந்து வந்தவுடன், அவனுக்கு மாலையில் சாப்பாடு கொடுத்து விட்டு, நீயும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குப் போ. இது பற்றி யாரும் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார்கள். அவனுடைய விருப்பங்களைத் தெரிந்து கொள்.” என்றாள் அம்மா.

பசி என்ற வார்த்தையே மறந்து போகுமளவிற்கு தெய்வமாக இருந்தவள் பேசின கடைசி வாக்கியத்தை அவள் என்ன அர்த்தத்தில் சொல்லி இருந்தாலும், பாருக்குட்டி அவள் வார்த்தைகளைப் பின்பற்றினாள். சுயநலம் இல்லாமல் அவனுடைய ஆசைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றினாள். அந்தக் கடமைகளை நிறைவேற்றியதின் விளைவுகள்… 

ஆமாம், பகிர்ந்து கொள்ள அவளுக்கு யாருமில்லை. அவள் விருப்பப் படவுமில்லை. 

ஒரு மாதத்தில் திரும்பி வருவதாகச் சொன்ன அம்மா, வராமல் போக பாருக்குட்டிக்குள் பதட்டம் வளர்ந்தது. அதிர்ஷ்டவசமான, பணக்கார, இளம் பெண்ணிற்குக் கணவனாக வேண்டியவனின் பாதையில் தான் குறுக்கே நிற்கிறோமோ என்று அவள் கவலைப் பட்டாள். ஆனால் அதைவிட அதிகமாகத், தனக்கு நன்மை செய்தவளின் பாசத்திற்குத் தான் திருப்பிக் காட்டும் பதில் அவளது அன்பான மகனை அவளிடமிருந்து பறித்துக் கொள்வதுதானா என்று பயந்தாள். காதலின் வேகத்தில் கூட, நடைமுறை அறிவுத்திறம் அவளுக்குள் ஆழமாக வேரூன்றி இருந்தது. அந்தரங்கமாக அரங்கேறிய காதல் நிகழ்வுகள் திருமணம் என்ற வெளிப்படையான நாடகத்தின் முதல் அங்கமாக இருக்காது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். சந்தோஷ அனுபவங்களைத் தந்த கொடையாளி பிரியும் போது, அந்த ஞாபகங்கள் அவளுக்குப் பரவசம் தராதா என்ன?

வக்கீல் மிகச் சாமர்த்தியசாலியாக இருந்ததால் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஒருவர் கூடச் சந்தேகப் படாமல் இருந்திருக்கலாம். காரியங்கள் எந்தத் தடையுமின்றி — பொது வாழ்வில் முன்பு அவர்கள் எஜமானும், பணிவான வேலையாளும், அந்தரங்கத்தில் அன்பான காதலர்கள், ஓருயிர் ஆத்மா.

அவளுக்குக் களிப்பளித்த அந்தக் கனவு மிகக் குறுகிய காலமே. ஒரு நாள் கோபாலன் நாயர் அவளிடம், “நான் போன பிறகு என்ன செய்வாய்?” என்று கேட்டான்.

அது அவளை உலுக்கி விட்டது. சில கணங்கள் அமைதிக்குப் பிறகு “வேலை பார்த்துப் பிழைப்பேன்,” என்று பதில் சொன்னாள்.

“இந்த வீட்டில் யார் வந்து தங்குகிறார்களோ அவர்களிடம், இல்லையா?”

அவன் என்ன சொல்ல வருகிறான் என்றுணர்ந்து, பாருக்குட்டி அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள். அவள் கண்களில் வெளிப்பட்ட அந்த தீட்சண்யம்– ஓர் ஏழைப் பெண்ணின் கர்வம்! “உழைத்து முன்னேற நினைப்பவர்களுக்கு   அதற்கான வழி கிடைக்கும். என் குடும்பத்தில் யாரும் உடலை விற்றுப் பிழைக்கவில்லை,” என்று சொன்னாள்.

அது, ஒரு பதினேழு வயதுப் பெண்ணிடமிருந்து வந்ததைக் கேட்டு அவன் வெட்கப்பட்டான். ஆனால் கற்பு குறித்த அவளது உறுதி அவன் சுயநலத்தைத் திருப்திப் படுத்தியது. “ நீ வாழ்வதற்கு உதவும் வகையில்– இங்குள்ள கிருஷ்ணன் கோவிலில், சுத்தம் செய்யும் வேலையை உனக்கு  வாங்கித் தர முயற்சிக்கிறேன். தேவஸ்தானக் கமிஷனரிடம் பேச வேண்டும்; அல்லது அம்மாவை விட்டுப் பேசச் சொல்ல வேண்டும். அம்மாவும் , அண்ணனும் கூடிப் பேசி, அவருடைய மகளோடு என் திருமணத்தை நிச்சயித்துள்ளனர். எனது திருமணத்திற்கு முன்பே உனக்கு வேலைக்கான உத்தரவு வந்துவிடும். அதுவரை உன் செலவுக்குத் தேவையானதைச் செய்து விட்டுத்தான் கிளம்புவேன்,’ என்று அன்பாகச் சொன்னான். 

இந்த வகையில் அந்த இடத்திற்கும், தனது வக்கீல் வேலைக்கும் கோபாலன் நாயர் விடை கொடுத்தான். தன்னால் தீர்க்க முடியாத எந்தப் பிரச்னையையும் மனதில் வைத்துக் கொள்ளாத பாருக்குட்டி கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல், தொடர்ந்து அழுதாள். அந்தச் சூழல் நாயரின் மனதை ஆழமாகப் பாதித்தது.

ஒரு மாதத்திற்குப் பிறகு அவன் கொடுத்த வாக்கு உண்மையானது. அடுத்த நான்கு மாதங்களில், அவனுடைய கொடை இன்னொரு வழியில் இன்னும் தெளிவாகியது.“வக்கீல் எஜமானனை என் மகள் மிக மிக நன்றாகப் பார்த்துக் கொண்டதால் அவள் தாயாகி விட்டாள்?”மாற்றாந்தாய் தொடர்ந்து ஏளனம் செய்து கொண்டிருந்தாள். அவள் அந்த வார்த்தைகளுக்கு கவனம் கொடுக்கவில்லை. 

ஆனால் அவள் அந்தக் குழந்தையை தனது ஓர் அங்கமாக மட்டும் நேசிக்காமல், பல விஷயங்களின் ஞாபகார்த்தமாகவும் நேசித்தாள்.

அதற்குப் பிறகு, பாருக்குட்டியின் மனதில் ஞாபகங்களை புதுப்பித்துக் கொண்டு பதினெட்டு அஷ்டமி ரோகிணிக்கள் வந்து போயின, ஒவ்வொரு புத்தாண்டின் போதும், அவள் திருவோணத்தை ஞாபகம் வைத்திருக்க மாட்டாள், ஆனால் கிருஷ்ணாஷ்டமியை நினைவு வைத்திருப்பாள். அந்தப் புனித நாளில் வழிபாட்டின் போது, மனிதர்கள் அவன் முன்னால் தங்கள் சுயநலமான பிரார்த்தனைகளை முன் வைக்கும் போது, அவளுக்கு ஒரே ஒரு சுயநலமற்ற வேண்டுதல் மட்டும்தான் அவனிடம்—கைகளைக் கூப்பிக் கொண்டு பக்தியில் தன்னை மறந்த அவளின் வழிபாடு. அது எப்போதும் ஒன்றேதான்—தனது குழந்தையின் தந்தை உயிரோடிருந்தால், அவருக்கு உலகின் அத்தனை சந்தோஷங்களையும் தர வேண்டும்.அவர் உயிரோடு இல்லையெனில், அவர் சொர்க்கம் சேரவேண்டும்.

இன்று காலையும், அவள் அதே நினைவுகளுடன்தான் எழுந்தாள்.ஆனால் மானேஜரின் வருகை அத்தனையையும் குளறுபடியாக்கி விட்டது.

பாரு அம்மா திணறிப் போனாள். காதல் அனுபவங்களைப் பெற்று மகிழ்ந்த இந்த வீட்டில் அவளுடைய காதல் ஆண்டு நிறைவின் போது அவள் மகள் இவ்வாறான விதிக்கு ஆளாக வேண்டுமா? ஏனிப்படி? தெய்வத்தின் தண்டனையா?

அந்த வீட்டில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை நினைவு கூர்ந்தாள். அந்த நாளில், எதிர்பாராத வகையில், முழுமையான ஒரு புதிய மகிழ்ச்சி, மயக்கம், என்று ஒரு புதிய உலகம் அவள் கண்களைத் திறந்தது. அந்த உலகின் சொந்தக்காரன் மிகச் சீக்கிரத்தில் அதைப் பூட்டிச், சாவியைப் பையில் போட்டுக் கொண்டு தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிப் போய் விட்டான். ஆனால் அந்த அனுபவங்கள் அவள் ஞாபகங்களிலிருந்து மங்கவில்லை. ஆனால்,முரண்பாடாக அவள் மகளின் விதி என்னவாக இருக்கப் போகிறது? வம்புப் பேச்சுகளை விட்டு விடலாம், காலப் போக்கில் அவை மறைந்து விடும். ஒரு நாளைக்காக, அந்த நாளுக்கு மட்டும் யாரோ ஒருவர்—அவர் ஒரு சக்கரவர்த்தியாகக் கூட இருக்கலாம்—அவருடைய பசியைத் தீர்க்க, அவள் தன் கன்னிமையை இழக்க வேண்டுமா? அவள் பெண்மைக்கு நிறைவு தரும் எந்த ஞாபகங்களும் அவளுக்கு இருக்காது. மற்ற நினைவுகளிலிருந்து அவள் மனதைக் காப்பாற்றும் எந்த அன்பான உறவும் அங்கு இல்லை.

ஞாபகங்களின் தொடர் கசிவுகளிலான வாழ்க்கை என்பது சாவிற்குப் பிறகுதான் மறையும் என்பதைப் பாரு அம்மாவால் கண்ணாரப் பார்க்க முடிந்தது. கையறு நிலைத் தத்தளிப்பு! 

ஒரு மென்மையான தாயின் மனதிற்குப் பொருந்தாத ஓர் எண்ணம் அவள் மனதில் திடீரென எழுந்தது. ரத்தம் கொட்டி, வேதனையில் துடிக்கும் மகளின் உடலை அவள் கற்பனை செய்து பார்த்தாள். ஆமாம், அது போராட்டமும், வலியும் நிறைந்ததுதான். ஆனால் அது கணநேரம்தான். அதன் பிறகு அவள் எங்கே போவாள்? ஒரு கொலை தண்டிக்கப்படாமல் போக முடியுமா? எமனின் தூதர்கள் தங்கள் சிகப்புத் தொப்பியுடன்; உறுதியான இரும்பாலான கைச்சங்கிலி கொண்ட தோள்களோடு; கருங்கல்லாலான இருட்டுச் சிறை ; கருப்பு கோட் அணிந்த  நீதிபதிகளின் பேச்சுத் திறமை. அதற்கு அப்பால்? பாரு அம்மா மனதில் எல்லாமும் ஓடியது. ஆனால் சிற்றன்னையிடம் கிடைத்த பயிற்சி மிக மோசமானதையும் கூட அற்பமாகப் பார்க்க பழக்கி விட்டது.

குளித்து விட்டுக்,கையில் பூத் தட்டோடு லட்சுமிக்குட்டி புத்துணர்ச்சியோடு வந்தாள். வேறு ஏதோ நினைவிலிருந்த அவளை உலுக்கி “அம்மா, குளிப்பதற்கு முன்னாலேயே கோவிலில் வேலைகளைச் செய்து முடித்து விட்டேன். நான் கோவிலுக்குச் சாயங்காலம் வர வேண்டியதில்லை என்று மானேஜர் சொல்லி விட்டார். நான் சொல்வது கேட்கிறதா? கமிஷனரும், அவர் மகள்களும் கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். நான் அந்த மாதிரிப் பெண்களை இதுவரை பார்த்தேயில்லை! அவர்கள் தந்தையின் சாயல் ஒரு பொட்டுக் கூட அவர்களிடம் இல்லை. அவர்களின் புடவைகள் மிகப் பளிச்சென்று இருந்தன! அவர்களைப் பார்த்தால் நீ அசந்து போய் விடுவாய்! அவர்களின் தலைக்குப் பூ அலங்காரம் செய்ய வேண்டுமென்று மானேஜர் சொன்னார்! இங்கே பார், கமிஷனர்—எஜமானர் அருகில் நெருக்கமாக –இவ்வளவு நெருக்கத்தில்– நான் நின்று கொண்டு அவர்களுக்கு அலங்காரம் செய்தேன்!”

பாரு அம்மா தடுமாற்றமின்றி அவளையே பார்த்தாள். மானேஜர் ஏன் அதை செய்யச் சொன்னார் என்று பார்த்தாள் கண் முன்னால் அந்தக் காட்சி விரிவது போல அவள் உணர்ந்தாள். பாவம் அந்தப் பெண்! ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணாகப் பிறந்த காரணத்தை இதுவரை அவள் அறியாமல் இருந்தது அதிர்ஷ்டம்தான். “வேகமாக மாலையைக் கட்டு, விளக்கேற்றும் நேரமாகி விட்டது” என்று சொன்னாள். 

ஈர உடைகளைக் களையாமலே லட்சுமிக்குட்டி அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டு உள்ளே போனாள். சோறு வெந்து விட்டதா என்று பாரு அம்மா பார்க்கவில்லை. பானையை அப்படியே வைத்து விட்டு, வெளியே வந்து, பக்கத்து வீட்டைப் பார்த்தாள். 

அந்தி பூஜைக்கான சமயமாகி விட்டது. அந்த இரண்டு இளம் பெண்களும் மிக நேர்த்தியாக உடை அணிந்திருந்தனர். கடைசி நிமிட மேக்கப்.. எவ்வளவு அதிர்ஷ்டவசமான வாழ்க்கை அவர்களுடையது! லட்சுமிக்குட்டி சொன்னது போல அவர்களிருவரும் அம்மாவின் அச்சாக இருக்க வேண்டும். லட்சுமிக்குட்டியின் தந்தை எனப்படுபவனும் கூட, எல்லாவித சௌகர்யங்களும் கொண்டிருக்கிற வீட்டின் அதிபராக இப்போது இருக்க வேண்டும்…பாரு அம்மா கோவிலை நோக்கித் திரும்பி, கண்களை மூடிக் கொண்டு, கைகூப்பி பிரார்த்தனை செய்தாள். தன் ஞாபகங்கள் அனைத்தையும் கடவுள் காலடியில் சமர்ப்பித்தாள். 

சாணம் பூசிய சுவற்றில் சாய்ந்து கொண்டு, கிருஷ்ணனின் சிலையை ஒரு மரப் பலகையில் வைத்து, லட்சுமிக்குட்டி அலங்கரித்துக் கொண்டிருந்தாள். கோவிலிலிருந்து அந்த நேரத்திற்கான சங்கொலி எழுந்தது. அவள் மனதிலும் பக்தி அலையின் ஓட்டங்கள்.. 

உள்ளங்கைகளை இறுக்கியபடி, லட்சுமிக்குட்டியின் பின்னால் நின்று பாரு அம்மா மகளின் வழிபாட்டைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் மனம் பக்தியில் கவனமற்றிருந்தது. ஒரு கால் தடத்தின் ஒலி ; அவள் திரும்பிப் பார்த்தாள். மானேஜரின் கருமையான உருவத்தைப் பார்க்கா விட்டாலும், அவளுக்குத் தெரியும்…அவள் குனிந்தாள்.. கிருஷ்ணனின் சிலையை ஒரு மாலையால் அலங்கரித்துக் கொண்டிருந்த  லட்சுமிக்குட்டி பெரிய அலறலோடு சாய்ந்தாள்.

கணப்பொழுதில் வீட்டின் முன்னால் கூட்டம் கூடியது.

தர்மத்தின் வழி நின்று, அப்பாவிகளைக் காப்பாற்ற அவதாரங்கள் எடுத்த கடவுள் படத்தின் முன்னால் பாரு அம்மா கைகூப்பி நின்றாள். குழப்பம் எதுவும் அவளுக்கு இல்லை. தரையில் ரத்தம் பெருகக் கிடந்த மகளையும் பார்த்துக் கலங்கவில்லை. பதினெட்டு வருடங்களுக்கு முன்னால் அஷ்டமி ரோகிணி நாளில் கிருஷ்ணனின் பெயர் கொண்டவனைப் பார்த்த காலத்திற்குள் போய் விட்டாள். 

“கமிஷனர் வருகிறார், கமிஷனர் வருகிறார்” என்று மனிதர்கள் கிசுகிசுத்துக் கொண்டே வழி விட்டனர். “என்ன நடக்கிறது இங்கே?” என்று வந்தவர் கேட்டார். 

அந்தக் குரல் பாரு அம்மாவின் பிரார்த்தனையைக் கலைத்தது; அது எங்கிருந்து வருகிறதென்று பார்க்கத் தலையைத் திருப்பினாள். 

தாழ்வாக இருந்த உத்தரத்தின் இரும்புக் கிராதியைக் குனிந்து கடந்து, வராந்தாவிற்குள் வந்தார் கமிஷனர். ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு அவரைத் தொடர்ந்தது. கஷ்டத்திலிருக்கிற ஓர் ஏழையின் வீட்டிற்கு மிகச் சாதாரணமாக வந்த அவருடைய கருணையுள்ளத்தை உள்ளூர்வாசிகள் பாராட்டினார்கள். தரையில் ரத்தப் பெருக்கில் கிடந்த உடலைப் பார்த்து விட்டு, “யார் இதைச் செய்தார்கள்?” என்று கேட்டார்.

கடவுளின் உருவத்தை வணங்கி விட்டு, அவரைத் திரும்பிப் பார்த்து, “நான்” என்றாள்.

“ஏன்?”

“சிதைந்து போவதற்குச் செத்துப் போவதே மேல்.”

அவளுடைய பாவமும், குரலும் அவர் இதயத்தைப் பிளந்தன. இந்தக் கொடூரமான செயலுக்கு அவர்தான் காரணம் என்று அவை சுட்டிக் காட்டுகின்றவோ என்று கூடச் சந்தேகப்பட்டார். தனது உள்ளக் கொதிப்பை வெளிப் படுத்தாமலே,“ நீங்கள் அந்தப் பெண்ணுக்கு என்ன உறவு?” என்று கேட்டார்.

அவள் முகத்தில் நடுக்கமான ஒரு புன்னகையைப் பார்த்தார். தான் ஒரு கீழமைப் பணியாளர் என்பதை மறந்து விட்டு அவள் சிரிக்கிறாளா?  “இவள் என் மகள். இந்த வீட்டில், இருபது வருடங்களுக்கு முன்னால், ஒரு பெண்மணி சில காலம் தங்கியிருந்தார். அவர் பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அந்தக் குடும்பத்தின் மேல் எனக்கு பெரிய விசுவாசமுண்டு. அதனால் என் மகளுக்கு அவர்கள் பெயரை வைத்தேன்.’ 

கமிஷனரின் மனம் தன் இளமைக் காலத்திற்குள் போனது. தெளிவற்ற பலப் பல பெண்களின் நினைவு கூர்தல்களுக்கு மத்தியில், மெதுவாக, ஒரு பதினேழு வயதுப் பெண்ணின் உருவம் எழும்பியது. அவதூறுகளுக்கு அஞ்சாமல், தான் கட்டாயப் படுத்த வேண்டிய தேவையேயில்லாமல் விருப்பத்தோடு தன்னைத் தந்து — பாருக்குட்டி! அவர்கள் பிரிந்த பிறகு, காரணமேயில்லாமல் சில காலம் மனதில் அவள் உருவம் வந்து கொண்டிருந்தது ;ஆனால் மெல்ல, மெல்ல அது மங்கி, மறைந்தே போனது.

தன் முன்னால் நின்ற அந்தப் பெண்மணியை, அவர் கூர்மையாகக்  கவனித்தார். தனது அனுமானம் தவறானது என்று சந்தேகப்பட்டார். அந்தக் கூந்தல் இப்போது குறுகியிருந்தாலும், எப்படி அவ்வளவு சின்னதாகி விட முடியும்? அந்த முகம், எப்படி இவ்வளவு அழகற்றதாக மாற முடியும்? பெருமையாகத் தன் தூய்மை நிலைப் பிரதிக்ஞையை அவன் முன்னால் வெளிப்படுத்திய, புத்துணர்ச்சி நிரம்பி வழிந்த, துடிப்பான அந்த இளம் பெண்ணின் முகத் தோற்றத்திற்கு என்ன ஆனது?

திடீரென, அவர் கண்கள் தரையில் இறந்து கிடந்த அந்தப் பெண்ணின் மேல் பட்டன. தாயின் இயற்கைப் பேறு அவன் உயிர் தந்த மற்றொரு உயிரிக்கு மாற்றப்பட்டதா…தனக்குள்ளே அதிர்ந்தார். அவருடைய அனுமானம் சரியெனில், அன்று மாலையில் மானேஜரால் அவருக்கெனச் சுட்டிக் காட்டப்பட்ட பெண் யார்? 

பதவியின் கண்ணியத்தோடு, தனது குரலில் வெளிப்பட்ட நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு “உங்கள் பெயர் என்ன? ” என்று கேட்டார்.

குனிந்து, தன் வீங்கிய முழங்காலைத் தடவிக் கொண்டு, அமைதியான, உறுதியான குரலில் பாரு அம்மா சொன்னாள், “ என் பெயர் பாரு அம்மா. இளம் பிராயத்தில் எல்லோரும் என்னை பாருக்குட்டி என்று கூப்பிடுவார்கள். இப்போது கோவிலைப் பெருக்கும் பாரு அம்மா என்று கேட்டால் மட்டும்தான் மனிதர்களுக்குத் தெரியும்.”


நன்றி : Swatantryavaadini , Posted on August 2020 By Devika– The Woman Subordinate

இச்சிறுகதை 1946 ல் Adichutalikkari என்ற தலைப்பில் வெளி வந்தது. கே.சரஸ்வதி அம்மா பெண்ணியவாதி. சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை ஆசிரியர் என்ற பன்முகம் கொண்டவர். கீழ்ஜீவனக்காரி, கலா மந்திரம்,பொன் மகுடம் உள்ளிட்ட பன்னிரண்டு சிறுகதைத் தொகுப்புகள், பிரேமபஜனம் ( Premabhajanam )என்னும் நாவல் தேவ தூதன் என்னும் நாடகம், புருஷன்மாரில்லாத லோகம் என்ற கட்டுரைத் தொகுப்பு ஆகியவை அவருடைய படைப்புகள் வரிசையில் அடங்குபவை.



Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.