ஆறாவது லார்ஜ்

கரோனா நேரத்தில் நடந்த சாவு என்பதால் பெரிதாகக் கூட்டமில்லை என்று சொல்வதற்கில்லை. சும்மா நாளில் அப்பா இறந்திருந்தாலும்  கூடப் பெரிதாக ஓன்றும் கூட்டம் வந்திருக்காது என்றே கதிர்வேலனுக்குத் தோன்றியது. 

கதிர்வேலனை அவனது அப்பா “வேலு” என்றுதான்  கூப்பிடுவார். ஜாலியாய் இருக்கும்போது வேலு. மற்ற நேரம் “குள்ளப் பயலே” என்பார். அவரோடு சேர்ந்து அவனது அண்ணன் இளங்கோவும்  நேரம் கிடைக்கும்போதெல்லாம், “டேய்  குள்ளக்  கம்முனாட்டி என்று திட்டிவிட்டு ஓடிவிடுவான்.

பழைய நினைவுகளை இப்படி அசை  போட்டுக்கொண்டே சென்னையிலிருந்து தஞ்சாவூர் நோக்கிக் காரில் சென்றுகொண்டிருந்தான் கதிர்வேலன்.

“டேய் அப்பா செத்துட்டார் போலருக்கு டா? குளிச்சிட்டு உப்புமா சாப்ட்டு உக்கார்ந்திருந்தார். ஏதோ  பாட்டெல்லாம் முணுமுணுத்துக்கிட்டு  இருந்தார். டயாலிசிஸ் ஆரம்பித்து விடவான்னு கேட்டேன். வேணாம் கொஞ்ச நேரம் உக்கார்ந்திருக்கேன்னார். சரின்னு காப்பி போட்டுக்கிட்டு வந்து ஹாலில் பாக்கறேன்…. தலை குனிஞ்சி கட்டில்ல உக்கார்ந்திருந்தார். உடம்பு லேசா ஒருபக்கம் சாய்ஞ்சி இருந்துச்சி. பக்கத்துல  போயித்  தொட்டேன், சரிஞ்சி கட்டிலில் சாய்ஞ்சிட்டார். எவ்வளவு தட்டி எழுப்பினாலும் பதிலே இல்லடா… நீ கொஞ்சம் கிளம்பி வாயேன்….” என்று ஃபோனில் அம்மா  திக்கிக் கதற, உடனே அண்ணனுக்குப் ஃபோன் செய்து, மருத்துவ நண்பர் ஒருவர் உதவியோடு அப்பாவின் இறப்பை  உறுதி செய்யப்பட்டு அவர் கையொப்பமிட்ட சான்றிதழ் ஒன்றை  அரை மணியில் வாட்ஸ்-ஆப்பில்  அனுப்பப்பட, கதிர்வேலனுக்கு அரசாங்கத்தின் அனுமதி இணைய வாயிலாகக் கிடைத்தது. 

முதல் முறையாக ஆள் அரவம் இல்லாத சாலையில் சென்னையிலிருந்து தஞ்சை வரை தனியே கார் ஓட்டும்  அனுபவம் கதிர்வேலனுக்கு மிகவும்  வித்தியாசமான  அனுபவமாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்  ஒருவர் தென்படவில்லை. வழிநெடுக நடுநடுவே தென்படும் சிறு நகரங்கள் அனைத்தும், ஆங்கில “ஸாம்பி” படங்களில் வருவது போலப்  புழுதிக் காற்றுடன் ஒருவர் கூட இல்லாமல் இருந்தது மிகவும் வினோதமான ஒரு உணர்வாக அவனுக்குப் பட்டது. காரில் பாடல்கள் எதுவும் போடாமல், வழிநெடுக பழைய நினைவுகளை அசை  போட்டபடி ஒரே சீராகச்  சென்றுகொண்டிருந்தான். அவ்வப்போது வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு ஒவ்வொன்றாய் பதட்டமில்லாமல் ஹெட்-ஃபோனில் பதிலளித்துக்கொண்டே ஓட்டினான். பெருந்தொற்று கரோனா காலத்து லாக்-டவுன்  என்பதால் யாருக்கும் வெளியூர் அனுமதி கிடைக்காத வருத்தத்தை நிறைய பேர் பகிர்ந்த வண்ணம் இருந்தார்கள்.  

பெரம்பலூர் தாண்டிப் பின் -மதியம் திருவையாறு திருமானூர் பாலம் கடக்கையில், பாலத்தின் மறுகரையில் காவல் சோதனைச்சாவடி இருப்பது கண்டு ஒற்றைக்கையால் மாஸ்க் எடுத்து மாட்டிக்கொண்டு ஆயத்தமானான். வண்டி எண், இறப்புச் சான்றுக்கான கடவுச் சீட்டு சோதனை முடிந்து தஞ்சாவூரை அடையும் போது ஆங்காங்கே ஒன்றிரண்டு மளிகைக் கடைகளில் ஒரு சிலர் மட்டும் தென்பட வண்டியை நேரே மருத்துவக் கல்லூரிச் சாலை புறநகர் பகுதி விளிம்பில் இருந்த மசூதித் தெரு நோக்கி ஓட்டினான். இன்னும் பத்து நிமிடங்களில் வீட்டுக்குச்  சென்றுவிடலாம் என்று இருந்தபோது காரை ஒரு மரத்தடியில் நிறுத்தி, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழமாக இழுத்தான்.

பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுடன் சைக்கிளில் சென்று சினிமா பார்த்ததெல்லாம் நினைவுக்கு வந்து போனது. அவருக்கு சினிமா என்றால் உயிர். அநேகமாக எல்லா படங்களும் பார்க்கவில்லையென்றாலும், தேர்வு செய்த படங்களைத் தியேட்டர் சென்று கதிர்வேலனை அழைத்துக்கொண்டு போய்ப் பார்ப்பார். சில சமயம் அண்ணன் இளங்குமரனும் சேர்ந்துவ வருவான். அவனுக்குச் சினிமா அவ்வளவு விருப்பம் இல்லையென்றாலும் சில சமயம் வருவான். அவனது சினிமா ரசனையைப் பற்றி அப்பா அவ்வப்போது கிண்டலாய் ஒரு விஷயம் சொல்வார். 

கதிர்வேலன் பிறந்த வருடம், கைக்குழந்தையாய் இருந்த அவனை அம்மா தூக்கிக் கொள்ள, இளங்கோ அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு சோழன் தியேட்டர் சென்றாராம். படத்தின் முக்கியமான ஒரு சோகக்  காட்சியின் போது  இருவருக்கும் நடுவே அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்த ஐந்து வயது அண்ணன்  இளங்கோ அரையிருட்டில் குனிந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருக்க, அப்பா மிகவும் மனம் நெகிழ்ந்து அம்மாவிடம், “ஐயோ, பையனுக்குப் படம் புரியுது போல டீ, எப்டி  அழுவறான் பாரு?” என்று சொல்ல, அதற்கு அண்ணன், “இல்ல, எனக்கு ரொம்ப நேரமா பசிக்குது” என்று அழுதானாம்.

அதை ஒவ்வொரு முறையும்  சொந்தக்காரர்கள், நண்பர்கள் என்று எல்லோரிடமும் அப்பா சொல்லும்போது நானும் அம்மாவும் சிரிக்க, அண்ணன்  என்னை மட்டும், “வெச்சிக்கிறேன்டா உன்னைய, தனியா மாட்டுவேல்ல…. செத்தே” என்பதுபோல் முறைப்பான்.

சிகரெட் முக்கால் கரைந்தபோது அண்ணனிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. 

“தம்பி, எங்கடா இருக்கே?”

“பத்து  நிமிஷ தூரத்துலதான்  இருக்கேன்…”

“சரி,  நீ நேரா வீட்டுக்குப் போ. உன்னோட லோக்கல் நண்பர்கள் நீ ஃபோன் பண்ண கையோட சரியான நேரத்துக்கு உதவ வந்துட்டாங்க. சித்தப்பா திருச்சிலேர்ந்து கார்ல  வந்துட்டிருந்தப்ப அவர வல்லத்துக்கிட்ட செக்போஸ்ட்ல மடக்கி வைச்சிருக்காங்களாம். நான் போய் அழைச்சிட்டு வரேன். வீட்ல ரொம்பக் கூட்டம் இருக்காது. லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல உன் நண்பர் கிரியோட போய் அனுமதி லெட்டரை எழுதிக் கொடுத்துட்டேன். முப்பது பேருக்கு மேல கூட்டம்  சேரக்கூடாதுன்னு  சொல்லிட்டாங்க. ஆறு மணிக்கு மேல யாரும் பார்க்க வரமுடியாது. அப்பாவோட சேர்ந்து ரிட்டையர் ஆன ஆஃபீஸ் ஆளுங்க கொஞ்சம் பேர் காலைல வருவாங்க. நம்ம குமார் காப்பி வாங்கப் போயிருக்கான். நீ போ… வரேன்” என்றார்.

சிகரெட்டை உடனே அணைக்காமல், உதடு சுடும்வரை இழுத்துவிட்டு ஃபில்டர் பற்றிக்கொள்ள ஆரம்பித்தபோது கீழே போட்டு மிதித்து அணைத்தான். நாவெல்லாம் ஒருவித கசப்பு அப்பிக்கொண்டிருந்தது. காலையிலிருந்து சரியாகத் தண்ணீர் குடிக்காமல். வரிசையாய் ஃபோன் பேசிக்கொண்டே வண்டி ஒட்டியதில் நாவெல்லாம் வறண்டு போயிருந்தது. தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தைக்  கழுவிக்கொண்டான். தமிழ் பல்கலைக் கழகத்திற்கு ஒட்டிய அடர்ந்த யூகலிப்டஸ் காட்டிலிருந்து வீசிய தைல மணம், ஈரம் படிந்த முகத்திற்கு இதமாக இருந்தது.

தெற்கு நோக்கி ஒரு பறவைக்  கூட்டம் தலைக்கு  மேலே கடந்து சென்றது. தூரத்தில் ஒரு பருத்த உருவம் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததைப் பார்க்க அவனுக்கு அப்பாவைப் போலவே இருப்பதாகத் தோன்றியது. அப்பா அலுவலகத்திலிருந்து ஒய்வு பெறும்  கடைசி நாள்வரை சைக்கிளில் தான்  சென்று வந்துகொண்டிருந்தார். பதினைந்து வருடங்கள் முன் ஒருமுறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டபோது மெட்ராஸ் மெடிக்கல் மிஷனில் வைத்தியம் பார்த்தபோது டாக்டர் கூட, அவர் சைக்கிள் ஓட்டுவதைப்  பாராட்டி, ஒருவகையில் அந்தச் செயல்பாடுதான் அவரை அன்றுவரை காப்பாற்றியதாகவும்  கூறினார்.

கதிர்வேலனின் கார் தெருவுக்குள் நுழைந்தபோது அந்தத் தெருவின் முகப்பின் இருபுறமும் இருந்து இரண்டு நாய்கள் கத்திக்கொண்டே காரைத் துரத்திக்கொண்டு வந்தன. அதில் கருப்பு நிற நாய் வண்டிக்கு முன்னே வந்து அடிபட்டிவிடும் அளவுக்குக்  கூடவே ஓடி வந்தது. காரின் வேகத்தைக் குறைத்து அந்தத் தெருவின் கடைசியில் இருக்கும் அப்பாவின் வீட்டிற்கு  இரண்டு வீடுகள் முன்னமேயே வலதுபுறம் காரை ஒதுக்கி  நிறுத்திவிட்டுப் பார்த்தான். வீட்டு வாசலில் அவனது பள்ளி, கல்லூரி நண்பர்கள் நின்று அவன் இறங்கியத்தைப்  பார்த்துக் கையசைத்து அருகில் வந்தார்கள். நண்பர்களில்  ஒருவன், ஐந்நூறு ரூபாய்த் தாள்களாய்  ஒரு கற்றையைப்  அவன் கையில் திணித்தான். 

அமைதியாய் நண்பர்களிடமிருந்து விலகி உள்ளே சென்றான் கதிர்வேலன்.   வீட்டினுள் அம்மா சுவற்றில் சாய்ந்து அமர்ந்து, இவனைப் பார்த்தவுடன் அப்பாவின் சடலம் நோக்கிக் கலங்கிய கண்களுடன் கை காட்டினாள். வடக்குப்  பக்கம் தலைவைத்து ஐஸ் பெட்டிக்குள் அப்பாவின் பருமனான உடலை அடைத்து வைத்திருந்தார்கள். கண்ணாடிப் பெட்டி  வழியே பாதி உடல் சரியாகத் தெரியாத அளவுக்கு உள்ளே ஐஸ் உறைந்து மசமசவென்று இருந்தது. தெற்கிலிருந்து ஒரு ஜன்னல் வழியே தங்க நிறத்தில் மின்னிய வெயில் அப்பாவின் ஐஸ் பெட்டியின்  காலருகில் இறங்கி அந்த அறை  முழுக்க ஒருவித மாய ஒளியைப்  பரப்பியது.


அம்மாவுக்கு உதவியாய் ஓன்றிரண்டு உறவினர்கள் பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்தார்கள். அண்ணனின் மனைவி சுவற்றோரம் சாய்ந்து அம்மாவுக்கு சற்றுத்  தள்ளி அமர்ந்திருந்தாள், அண்ணனின் மகள்  பக்கத்து அறைக்குள் கல்லூரியின் ஆன்லைன் வகுப்பைக்  கைப்பேசியில் வைத்து கவனித்துக்கொண்டு இருந்தாள். வீடு மொத்தமும் ஒருவித ஒட்டடை கலந்த பழைய வாடையுடன் சேர்த்து ஊதுவர்த்தி மணம் எல்லாம் கலந்து கதிர்வேலனுக்கு தலை சுற்றியது. 

அம்மா அழுது ஓய்ந்திருந்தாள். அவள்  முகத்தில் பயம் கலந்த களைப்பும், ஒருவித விடுதலை உணர்வும் ஒன்று கலந்து இருப்பதாய்ப் அவனுக்குப் பட்டது. யாரும் பெரிதாக அழவெல்லாம்  இல்லை. காரணம், சிறுநீரகம் இரண்டுமே செயலிழந்து, மூன்று மாத  ஆஸ்பத்திரி வாசத்தால் நம்பிக்கையிழந்து, ஒரே மாதத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ரத்த சுத்தீகரிப்பு சிகிச்சை செய்யப்பட்டு, “இனிமே வீட்டுக்கு கூப்பிட்டுப் போயிடுங்க ஸார், போறவரைக்கும் போகட்டும், ஒருநாளைக்கு மூன்றுமுறை வீட்டிலேயே வெச்சி டயாலிலிஸ் பண்ணணும். அதுக்கான ஏற்பாடு எல்லாம் பண்ணிடறோம், நீங்க கிளம்பலாம், அடுத்த ஆறு மாதமே ஜாஸ்திதான் ” என்று டாக்டர் கதிர்வேலனிடம் சொல்லி அதன் பிறகு அப்பா ஒன்றரை வருடங்கள் இருந்தார். 

மாடியேற முடியாததால், அவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வரும்போது, புதிதாக ஒரு தரைதள வாடகை வீடு மாற்றி நேரே வேறு வீடுதான் வந்தார். அப்போது கரோனாவெல்லாம் இல்லை. எங்கோ சீனாவில் இருப்பது பற்றிய செய்திகள் மட்டும் அவ்வப்போது தொலைக்காட்சியில் வரும். அதன்பிறகு ஆறே  மாதங்களில் கரோனா பெருந்தொற்று ஒரு மாத லாக்-டவுன் என்று ஆரம்பித்து மாதக் கணக்கில் போய், ஊரே அமிழ்ந்து கிடந்த சமயத்தில்தான்  அப்பாவின் மரணம் நிகழ்ந்தது. 

கதிர்வேலனின் அப்பாவிடம் பிரச்னைக்குரிய சில குணங்கள்  இருந்தன. அதில் ஒன்று, “யார் தயவும்  எனக்குத் தேவையில்லை” என்கிற தோரணை, மற்றொன்று பொருட்களின் மீதான பற்று. சொந்த வீடு கட்டி வாழ்ந்து, அந்த வீடு கட்டிய கடனால் வட்டியில் மூழ்கி, இறுதியில் அந்த வீட்டை விற்றால்தான் வாழமுடியும் என்கிற நிலை வந்தபோது,  வீட்டை விற்றுவிட்டு, ஏகப்பட்ட சொந்த வீட்டுப் பொருட்களுடன் வேறு வீடு வாடகைக்குப் போனார்.அவருக்கு அவ்வளவு எளிதில்  எதையும் தூக்கி எறிய மனது வராது. மகன்கள் இருவரும் திருமணமாகி, கதிர்வேலன் சென்னைக்கும், அண்ணன்  இளங்கோ தன்  மனைவி மற்றும் மகளுடன் அதே ஊரில் அருகில்  இருக்க, பல வருடம் அப்பா யாரிடமும் பெரிதாகப் பேசியெல்லாம்  உறவாடியதில்லை. அவரது அகராதியில் யாருக்கும் பெரிதாக மரியாதையெல்லாம் இல்லை. மத்திய அலுவலக வேலையில் நாற்பத்தியேழு வருடங்கள் பணியாற்றிய பெருமையுடன் ஓய்வு பெற்றபோது  இளங்கோவுக்கு ஏழு  வயது மகளும் கதிர்வேலனுக்கு ஆறு மாதக்  குழந்தையாய் ஒரு மகனும் இருந்தனர். அந்தநேரம் அப்பா, வாழ்ந்த வாழ்க்கை, கேள்வி கேட்பதற்கு ஒருத்தர்கூட இல்லாத வாழ்க்கை. யாரும் அவரைப் பார்க்க வரக்கூடாது, அவரும் எங்கும் போகமாட்டார். அம்மா அடிமைச் சேவகம் செய்துகொண்டு கூடவே இருக்கவேண்டும்.

அவ்வப்போது கதிர்வேலன் தஞ்சை வரும்போது, “சொந்த வீடு மாதிரி இவ்ளோ பொருள் வெச்சிக்கிட்டு அழாதீங்கப்பா, குறைச்சிக்கங்க, ரெண்டு பேருக்கு எதுக்கு இவ்வளவு சாமான்? நிறைய குறைங்க. ஒரு காலத்துல கல்யாணம் ஆனப்ப சில வருஷம் அண்ணனும் உங்களோட கூட இருந்தார். அப்ப  ஓகே. இப்பவும் அவ்ளோ பாத்திரங்கள் தேவையா? அந்த ரெண்டாவது பெட்ரூம்ல ஒரு டைனிங் டேபிள் தண்டமா கிடக்கே, அது இருக்க சொல்ல எதுக்குப்  புதுசா ஒரு டைனிங்  டேபிள் ஆர்டர் செஞ்சி ஆளைக் கூப்பிட்டுப்  பண்ணீங்க….? அதுல  மேல  க்ரானைட்  கல்லு வேற போட்டிருக்கீங்க. கேட்டா, க்ளீன் பண்றது ஈஸிங்கறீங்க. வேற வீடு மாத்தணும்ன்னா யார் இதெல்லாம் தூக்கிட்டு அலையுறது? என்றதற்கு, “காசு குடுத்தா தூக்கி எடுத்துக்கிட்டுப் போய் எங்க சொல்றமோ அங்க வைக்க ஆளிருக்கு. உன்கிட்ட உதவின்னு வந்து நின்னா அப்ப  கேள்வி கேளு. இப்ப வேலை மயிரைப் பாரு” என்பார் அப்பா.

கதிர்வேலனின் கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்லாமல் அப்பா இப்படித்தான் அதிரடியாகப் பேசி அவனை  வாயை மூட வைப்பார். இருந்தும், கதிர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைக் கிடுக்கிப்பிடியான  கேள்விகளோடு திணறடிப்பான். மாறாக இளங்கோவை, அப்பா சர்வ சாதாரணமாக வாயடைத்துவிடுவார். அவனும், அவர் வாயில் எதற்குப் புகுந்து புறப்படவேண்டும் என்று அமைதியாக அவர் செயல்களுக்கு எந்தவித எதிர்வினையும்  செய்யாமல் நழுவிவிடுவான்.

ஒருமுறை இளங்கோவின் மாமனார் தஞ்சாவூரில் இறந்துபோனபோது, சென்னையிலிருந்து தஞ்சைக்கு இரவோடு இரவாகக் கிடைத்த பஸ்  ஏறிய கதிர்வேலன், அதிகாலை தஞ்சையில் இறங்கி நேரே அப்பா வீடு சென்றபோது அப்பா எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் வழக்கம்போல பக்திப்  பாடல்களைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். விசாரித்தபோது அம்மா அண்ணனோடு சாவு வீட்டுக்கு நள்ளிரவே போய்விட்டதாகவும், போவதற்கு முன் இன்று அவருக்குத் தேவையான உணவைச் சமைத்து வைத்துவிட்டுதான் அம்மா போனதாகச் சொன்னார். சில கணங்கள் அமைதியாய் அவரையே பார்த்த கதிர்வேலன், ” சரி, நான்  குளிச்சிட்டு வரேன். நீங்களும் இன்னொரு பாத்ரூம் போய் ரெடியாவுங்க, ஆட்டோ புடிச்சிப்  போலாம்” என்று சொன்ன மறுகணம், “அதான் உங்கம்மா போயிருக்கால்ல, அது போதும், நானெல்லாம் வர்ல” என்று அவன்  முகத்தைப் பார்க்காமல், பாடலின் ஒலி  அளவை லேசாகக் குறைத்தார்.

“இப்டி பண்ணா எப்படிப்பா? உங்களுக்குள்ள ஆயிரம் பிடிக்காம இருக்கலாம். இறந்தவர் உங்க சம்பந்தி முறை. போகலேன்னா நல்லாருக்குமா? நாளைக்கு நம்ம வீட்டுப்  பிரச்சனைக்கு உதவ யார்னா வருவாங்களா?” என்று கதிர்வேலன் கேட்ட வேகத்திற்கு, “நான் செத்தா  ஒருத்தனும் வரவேண்டாம். எனக்கு ஒருத்தர் தயவும் வேணாம். என்னைய நிம்மதியா எழவெடுக்காம விட்டாலே போதும். நீ வேணா போய்த்  தொலை. இப்ப என்னைய ஆள  விடு” என்றார்.

அதன்பிறகு நடந்த விவாதத்தில் ஒருவழியாக வேண்டா வெறுப்பாய் அந்தச் சாவுக்கு வந்து சென்றது கதிர்வேலனுக்கு நன்றாகாவே நினைவிருக்கிறது. மேலும் அப்பா அவரது வாழ்நாள் முழுக்க ஒருவர் சாவிற்கும் சென்று வந்ததாய் எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் பிடிபடவில்லை. அவன் ஆறாவது படிக்கும்போது தருமபுரியில் இருந்த அவனது தாத்தா சாவிற்கு அப்பா அம்மாவோடும் அண்ணனோடும் சேர்ந்து அவனும் பஸ்ஸில் சென்று வந்தது மட்டும் லேசாய் நினைவில் இருந்தது.

மாலை ஆறு மணிக்கு கதிர்வேலனின் கல்லூரி நண்பர்கள் இரண்டு பேர் பெரிய மாலையுடன் காரில் வந்து இறங்கினார்கள். வாசலில் ரோட்டை மறைத்து ஷாமியானா பந்தலோ, வழக்கத்திற்கு அதிகமாக நிற்கும் வாகனங்களோ இல்லாததால் வீட்டைக் கண்டுபிடிக்கத்  திணறியதாகச் சொன்னார்கள். அந்த ஊரில் யாரும் பெரும்பாலும் மாஸ்க் அணியாமல்தான் சுற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு கார் நிறுத்தினால் இன்னொரு கார் செல்லச் சிரமப்படும் அந்தக்  குறுகலான ரோட்டில் அப்படியொரு வீட்டை கூகிள் மேப்பில் அனுப்பினாலும் துல்லியமாக நிறைய பேரால் கண்டுபிடிக்க இயலவில்லை. அந்தி சாயும் நேரத்தில், அப்பாவின் அலுவலக நண்பர்கள் மூவர் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கி மாலையுடன் உள்ளே சென்று அப்பாவுக்கு இறுதி மரியாதை  செலுத்திவிட்டு வந்தனர்.  

அண்ணன்  சித்தப்பாவோடு கொல்லைப்புறம் மாமரத்தடியில் அமர்ந்து காப்பி அருந்திக்கொண்டிருக்க, சித்தப்பா ஏதோ  பழைய கதைகளை  சன்னமான குரலில் அண்ணனோடு பேசிக்கொண்டிருந்தார். மாமரத்தின் சற்றுத் தள்ளிகே கொல்லைப்புற வேலியருகே ஒரு பெரிய சட்டியில் ஆட்டுக்  கால் சூப் கொதித்துக்கொண்டிருந்தது. அந்த வீட்டின் வளாகத்தில் மாடி, கீழே மற்றும் அருகே எட்டு ஒண்டுக்  குடித்தனங்கள் இருந்தன. அங்கு பெரும்பாலும் கூடியிருந்தவர்கள், கறிக்கடைக்காரர், மெடிக்கல் காலேஜ் ரோட்டோரம் ஆட்டுக்  கால் சூப் விற்பவர், ஒரு ஆட்டோ டிரைவர், சைக்கிளில் சென்று மீன் விற்கும் வியாபாரி, கல்லூரி மாணவிகள் இரண்டுபேர் என்று பகுத்துக்  குடியிருந்தனர். அதில் முன்புறம் பெரியதாய் இருந்த பிரதான வீட்டில் தான் அப்பாவின் உடல் கிடத்தப்பட்டிருந்தது.

அப்பா ஆஸ்பத்தியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி, மாடி ஏறாமல் இருக்க, வீடு பார்த்து அலைகையில், அவர் நோயாளி என்கிற ஒரே காரணத்தால் நல்ல நிறைவான வீடுகளில் ஒருத்தர் கூட வாடகைக்குத் தர  முன்வராத போது,  பாய்தான்  வீடு வாடகைக்குக்  கொடுத்தார். அதையும்  தாண்டிக்  குடியேறிய ஒரு வாரத்தில் அதே வளாகத்தில் இருக்கும் அனைவருமே எந்நேரமும் இவர்களுக்கு உதவக்கூடிய முனைப்புடனும் கனிவுடனும் இருந்தனர். அப்பாவுக்கு இதெல்லாம் புரிந்ததா என்று கூடத் தெரியவில்லை. காற்றோட்டமாகவும் விஸ்தாரமாகவும் இருந்த பழைய வீட்டைப் பற்றிய நினைவிலேயே அவர் எப்போதும் ஏங்கிக்  கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை. பழைய வீட்டிலிருந்த தனிமையின் சுதந்திரமும், எப்போதும் இருக்கும் அமைதியும் இங்கு அவருக்கு அறவே இல்லை. எப்போது பார்த்தாலும், வண்டி செல்லும் சத்தம். யாராவது சத்தம் போட்டுச் சண்டையிட்டுக் கொள்வது, பின்னிரவில் குடித்துக்கொண்டு கூப்பாடு போடும் சிலரின் கூச்சல் என்று சகலவிதமான அவஸ்தைகளும் ஒன்று சேர்ந்து அவர் இயல்பு வாழ்க்கையில் இறங்கியது ஒருவிதமான  தாளமுடியாத துயரம் தான்.

அந்திமாலை இறங்கி இருட்டியிருந்தது. ஜன நடமாட்டம் தென்பட்டு, நாய்கள் ஒன்றிரண்டு ஏதாவது  தின்னக்  கிடைக்குமா என்பதுபோல் சற்றுத் தள்ளி நின்று ரோட்டில் காம்பவுண்ட் சுவரோரம் நிற்கும் கதிர்வேலனைப் பார்த்துக்கொண்டிருந்தன. அவன் நண்பர்கள் சற்றுத் தள்ளி கார் அருகே  புகைத்துக் கொண்டிருந்தார்கள். 

ஃபோனைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த கதிர்வேலன் அருகே அப்பா அலுவலக நண்பர்கள் இருவர் அருகில் வந்து நின்றனர். “வணக்கம் தம்பி, நான்தான் செல்வகணேசன். நியாபகம் இருக்கும்ன்னு நம்பறேன். நல்லாருக்கீங்களா? வீட்ல நல்லாருக்காங்களா? பையன் என்ன படிக்கறான்? கரோனாங்கறதுனால யாருக்கும் அனுமதி அவ்ளோ சீக்கிரம் கிடைக்கலன்னு பேசிக்கறாங்க. நல்லவேளை , எப்டியோ வந்து சேர்ந்தீங்க தம்பி. நாளைக்குப்  பார்த்து எல்லாம் கூட இருந்து முடிச்சிருங்க. நாங்க வர்றது கஷ்டம், வேறு சில நண்பர்கள் வருவாங்க. பாவம், டயாலிசிஸ் ஒரு நாளைக்கு மூணு தடவ, ஒரு வருஷமா பண்ணா ஒடம்பு என்னத்துக்கு ஆவும், ரொம்பவே  கஷ்டப்பட்டுட்டார், போய் சேர்ந்தவரை நல்லது தம்பி. இந்த வீடு இன்னும் கொஞ்சம் நல்ல வீடா இருந்துருக்கலாம், பழைய வீடு, ஒரு சின்ன மழை  பேஞ்சா செவுத்துல கை  வெச்சாலே லேசா ஷாக் அடிக்கும்ன்னு அம்மா சொன்னாங்க. சரி, போனது போவட்டும். எல்லாம் முடிச்சிட்டு அவரோட டெத் சர்ட்டிஃபிக்கேட்  எடுத்துக்கிட்டு சாவகாசமா ஆஃபிஸ் வாங்க தம்பி. ஆவுறதப் பார்க்கலாம்….”என்று சொன்னவரிடம் கதிர் இடைமறித்து, “ஸார், அவர் ஒடம்பு முடியாம ஆஸ்பத்திரியில கிடந்தப்ப நாங்க தேடி அலையாத வீடு இல்ல. அவர் நோயாளிங்கறதுனால ஒருத்தர் கூட வீடு தர  முன் வரல. காலம் பூரா அவர் எந்த ஜாதித் திமிர்ல சுத்திக்கிட்டு ஜாதி பாராட்டிக்கிட்டு அவர் கூட பொய்யா ஒரு போலியான வாழ்க்கைவாழ்ந்துக்கிட்டு  இருந்தார்களோ  அவங்களில்  ஒருத்தர்  வீடு தரவேண்டியது தானே. தரல. இவ்ளோ ஏன்? உங்க ஆஃபிஸ் கும்பலில் எத்தனையோ பேருக்கு ரெண்டு வீடு இருக்குல்ல. அதில் ஒண்ண  வாடகைக்குத் தரவேண்டியது தானே? இப்ப வந்து என்னவோ பேசறீங்க? உங்களுக்கு என்ன தெரியும்னு இப்டி நினைச்சதைப்  பேசுறீங்க?” என்று சொல்ல, செல்வகணேசன் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக்  கொண்டார்.

மற்றொருவர், “தம்பி நான் குணபாலன். அப்பா டிவிஷன்ல க்ளார்க். எனக்குத் தெரிஞ்சி அப்பா ஒருத்தர் மட்டும்தான் எங்க டெலிகம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட்ட்ல நாற்பத்தியேழு வருஷ சர்வீஸில் இருந்தவர். மொத்த இந்தியால இத்தனை  வருஷ சர்வீஸ் உள்ள ஆட்களை விரல்  விட்டு எண்ணிரலாம்.  அவர் இருந்த டிவிஷன்ல அவர் நினைச்சிருந்தா எப்டியோ வாழ்ந்திருக்கலாம். மனுஷன் ஒத்த பைசா லஞ்சம் வாங்க மாட்டார். யாரிடமும் தேவையில்லாத பேச்சு  பேசமாட்டார். அவராச்சு அவர் வேலையாச்சுன்னு ஆளு சும்மா கன் மாதிரி இருப்பார். வேலைல கேட்ட சந்தேகத்தையே திரும்பக் கேட்டா கொஞ்சம் கடுசிடுன்னு  பதில் சொல்லுவார். அவர் கடைசி காலம் மட்டும் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம். நாங்கல்லாம் இங்கதான் இருக்கோம். ரிட்டரையர் ஆன பிறகு ஒருநாள் கூடக்  கூப்பிட்டுப் பேசினதில்ல அவர். நாங்களும் கூப்பிட பயப்படுவோம். “ஃபோன் என்பது தகவல் பரிமாறிக்கக்  கண்டுபிடிக்கப் பட்ட ஒரு சாதனமே  தவிர, சும்மா வெட்டி ஜல்லியடிக்க இல்ல…” என்று சொல்லுவார். ஆனா பாருங்க, அவருக்குத் தேவையான உதவித் தகவல் அவர் எங்கள்ட்ட சொன்னாத்தானே தெரியும். மனுஷன் சொல்ல மாட்டார். நல்லா பாட்டு கேப்பார், சினிமா பார்ப்பார். சாரும் நானும் சகட்டு மேனிக்கு ரிலீஸ் ஆவுற எல்லா படங்களையும்  ஒண்ணு  விடாம ஒரு காலத்துல பார்த்திருக்கோம், அதெல்லாம் ஒரு காலம்தான். சரி. பாருங்க…” என்று சொல்லி நகர்ந்தார்.

 அவர்கள் இருவரும் கிளம்பியவுடன்  கதிர்வேலன் மெல்ல நடந்து நண்பர்கள் அருகே சென்றான். தனது காரைத் திறந்து டாஷ்போர்டில் இருந்த சிகரெட் ஒன்றை எடுத்து வெறுப்புடன் பற்ற வைத்தான்.  நண்பன் வைத்தி மெதுவாக அவன் அருகில் வந்து  “இதுக்கு மேல யாரும் வர மாட்டாங்க மாப்ள. இன்னும் ஒரு மணிநேரத்துல ஓட்டல் எல்லாம் ஊரடங்கு டைமுக்கு மூடிருவாங்க. குமார சாப்பாடு வாங்க அனுப்பிருக்கேன். உன் கார் டிரைவிங் சீட் பின்னால மேன்ஷேன் ஹவுஸ் பிராந்தி ஒரு ஃபுல்  எறக்கி வெச்சிருக்கேன். தண்ணி பாட்டில் இருக்கு. பிளாஸ்டிக் கப் மட்டும் கிடைக்கலடா. புது பஸ் ஸ்டாண்ட் போறேன். அங்க கிடைக்கும். ஒரு பத்து வாங்கிக்கிட்டு வந்து  கார்ல போட்டு வைக்கிறேன். வேறென்ன வேணும்ன்னாலும் கால் பண்ணு..” என்றான்.

ஊரடங்கு காரணமாக நண்பர்கள் காலையில் வருவதாகச் சொல்லிப் பிரிந்து சென்றார்கள். அவர்கள் போன பிறகு அண்ணனின் மனைவி வெளியே வந்து “காலைல காரியம் பண்றவங்க ரெண்டு பேர் வீட்டுக்கு வருவாங்க. சம்பிரதாயங்கள் எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க. நீங்க எதுவும் எதிர்த்துப் பேசாம அவங்க  சொல்றத கேட்டு நடந்துட்டா போறும்” என்று சொல்ல, கதிர்வேலன் வேண்டா வெறுப்பாய்  தலையை ஆட்டிக் கொண்டான்.

பகலில் தொடர்ந்து ஐந்து மணிநேரம் ஒரு இடத்தில்  காரை நிறுத்தாமல் சென்னையிலிருந்து ஒட்டிக்கொண்டு வந்தது அவனுக்குச் சலிப்பைத் தந்தது. நா வறண்டு விட்டிருந்தது. காரிலிருந்து இறங்கி நின்றுகொண்டான். தெருவின்  தூரத்து விளக்கு வெளிச்சத்தில் இரண்டு நாய்கள் வாயில் ஏதோ  துணியைக் கவ்வி  விளையாடிக்கொண்டு சுற்றின. கோடை என்பதால் மரங்கள் கொஞ்சம் கூட அசையாது அப்படியே நின்றன. உள்ளே அண்ணன்  அண்ணி எல்லோரும் அப்படியே அமர்ந்தபடியே உறங்கிக் கிடந்தார்கள். சித்தப்பா உறவினர் வீட்டிற்குக் கிளம்பிப் போய்விட்டார். குமார் கொண்டு வந்து தந்த இரவு உணவை வராண்டாவில் படியிலும் அமர்ந்து  விழித்திருந்தவர்கள்  உண்ண ஆரம்பித்தார்கள். சாப்பிடச் சொல்லி அண்ணண்  அழைத்தபோது கதிர்வேலன் வேண்டாமென்று மறுத்துவிட்டான். அண்ணன்  பாத்து நிமிடங்கள் கழித்து  ஒரு இட்லிப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டுப் போனான். அடுத்த ஐந்து நிமிடங்களில் வைத்தி வந்து ஒரு டஜன் பிளாஸ்ட்டிக் கப்புகளைக் கொத்தாகக் காரின் உள்ளே வைத்துவிட்டு விடைபெற்றான்.

அடுத்து ஒரு சிகரெட்டைக் காரின் பின்னால் சென்று பற்ற வைத்துக்கொண்டான். தூரத்தில் சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் மெதுவாக வர இருளில் மறைந்துகொண்டு நிற்க, அவர் சாவு வீட்டைப் பார்த்துக்கொண்டே மெதுவாகக் கடந்து சென்றார். பிறகு சிகரெட்டை சுண்டி எறிந்துவிட்டு காரின் உள்ளே ஏறி அமர்ந்துகொண்டு பின்னால்  கையை விட்டு பிராந்தியை எடுத்து ஒரு கப்பில் ஊற்றினான். காரின் உள்ள விளக்கைப்  போடாமல் கப்பை வீட்டுப்  பக்கம் திருப்பி எதிர் வெளிச்சத்தில் அளவு பார்த்துக்கொண்டே கவனமாக ஊற்றினான். தண்ணீரையும் எதிர் வெளிச்சத்தில் ஊற்றி நிரப்பிக்  கையைக் கிழே இறக்கிவிட்டுப்  பின்னால் தெரிந்த வீட்டைப் பார்த்தான். உள்ளே அப்பாவை வைத்திருந்த ஐஸ் பெட்டி, பாதி  திறந்திருந்த கதவின் வழியே தெரிந்தது. கண்களை மூடிக்கொண்டு பிராந்தியை ஒரு மிடறு குடித்தான். லேசாக வேர்த்ததால் காரின் என்ஜினை  எழுப்பி ஏஸியைப் போட்டுக்கொண்டான். இரண்டே நிமிடங்களில் சூழல் குளிர்ச்சி கார் முழுக்கப் பரவியது. இருபது  நிமிடங்களில் நான்கு ரவுண்டுகள் பிராந்தி உள்ளே சென்றதும் லேசாக ஒரு மிதப்பு வந்தது. காரினுள் பாடலை எழுப்பி  உடனடியாக ஒலியின்  அளவைக் குறைத்தான். 

 “…..ஏழை மனதை மாளிகை ஆக்கி

இரவும் பகலும் காவியம் பாடு

நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து

நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்து பார்த்து நிம்மதி நாடு….. 

மயக்கமா கலக்கமா…” என்று பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆதரவாய்ப் பாடினார்.

அடுத்த இரண்டு ரவுண்டுகள் பிராந்தியைப் வேகமாகப் போட்டுவிட்டு அந்தப் பாடலையே  இன்னொருமுறை கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்தான். பாடல் மெல்லியதாய் வைத்திருந்ததால் தூரத்தில் தெரு நாயின் அழுகுரல் கேட்டது. பாடலை நிறுத்திவிட்டு அமைதியாய்க்  கவனித்தான். நாயின் அழுகுரல் நின்று சுவர்க்கோழியின் சத்தம் விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தது. முழுதாக முப்பது நொடிகள் கூட ஆகியிருக்காது. பின் சீட்டிலிருந்து, “ஏன் பாட்ட நிறுத்திட்டே வேலு… போடுய்யா…. நல்ல பாட்டு” என்று அப்பாவின் குரல் கேட்டது. 


ஒரு நொடி அவனுக்கு சோரேரென்றது. தலையை சிலுப்பிக்கொண்டு நிதானித்து காரின் லைட்டைப் போடப் போனான். “உன்ன லைட்டப்  போடச்  சொல்லலை வேலு, பாட்டைப்  போடச்  சொன்னேன்” என்றார் அப்பா. தண்ணி போடுவதற்குத் தோதாக காரை இருட்டில் நிறுத்தி இருந்தால் கதிர்வேலன் திரும்பிப் பார்த்தபோது நல்ல இருட்டாகத்தான் இருந்தது. காரின் பின்னால் ஐம்பதடித் தொலைவில் இருந்த தெருவிளக்கிலிருந்து கசிந்த வெளிச்சத்தில் அப்பாவின் வழுக்கைத் தலையில்  லேசாக மின்னியதை உணர முடிந்தது. அவ்வளவுதான். போதையின் குழப்பத்தில்  மெதுவாகத் திரும்பி வீட்டைப் பார்த்தான். வாசல் கதவின் வழியே அப்பாவை வைத்திருந்த  ஐஸ்பெட்டி தெரிந்தது. அதன்  அருகிலிருந்த நாற்காலியில் அண்ணன்  சாய்ந்து படுத்திருந்தார். உள்ளே வெளிச்சத்தைக் குறைத்து வாசல் கதவு முக்கால் திறந்திருக்க வீடே அமைதியாய் இருந்தது. கதிர்வேலன் அரண்டுபோய்க்  குழப்பத்துடன் பாடலைப் போட்டான். போதை நன்றாகத் தலைக்கு  ஏறிவிட்டிருந்தது. பின்னால் திரும்பாமல் அப்படியே அமர்ந்திருந்தான். 

பாடல் முடிந்ததும் அப்பா, “நன்றிப்பா. உங்க ரெண்டு பேரையும்  நான் இன்னும் கொஞ்சம் கவனம்  குடுத்து வளர்த்திருக்கலாம். அப்ப  புரியல. எப்டியெல்லாமோ  ஓடிடுச்சி வாழ்க்கை. நான் நினைச்சது தான்  கரெக்டுன்னு கடைசிவரை இருந்துத் தொலைச்சிட்டேன். நீ விரும்பிய படிப்பை உனக்குக் கொடுக்காம நான் சொன்னதைச் செய்ன்னு மிரட்டிட்டேன். அவனோ பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத அளவுக்கு அவனைப் போட்டு அடிச்சி மிரட்டி, என்னடா வேலு வாழ்க்கை இது? நிதானிக்கறதுக்குள்ள எல்லாமே முடிஞ்சிருது பாரு. சரிடா ….. பார்த்துக்க…. ” என்று கூறி நிறுத்திக்கொண்டார். இரண்டு நிமிடங்கள் கதிர்வேலன் அமைதியாய் உட்கார்ந்திருந்தான். பிறகு மெல்லத் திரும்பிப் பார்த்தான். வழுக்கைத் தலையில் அப்போது மின்னிய வெளிச்சம் இப்போது இல்லை. நிச்சயம் இல்லைதான். உறுத்துப் பார்த்தான். “அப்பா” என்று மெதுவாக அழைத்துப் பார்த்தான். பதிலே இல்லை.

அதிகாலைகாரின் ஜன்னல் கண்ணாடியைத் தட்டி அண்ணன்  எழுப்பிவிட்டான். “நைட் என்ன ரொம்ப நாழி முழிச்சிருந்தியா…? கார்லேயே  படுத்துட்டே…? சரி தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன். காரோட  ஜன்னல் கதவை லேசா இறக்கி விட்டிருந்தே… சரி ரைட்ன்னு விட்டுட்டேன். யார்னா ஃப்ரண்ட்ஸ் இருந்தாங்க போல, ரொம்ப நாழி பேசிட்டிருந்தாப்ல இருந்துச்சி…?” என்றான். கதிர்வேலன் பதிலேதும் சொல்லாமல் பின் ஸீட்டைத்  திரும்பிப் பார்த்தான். அமைதியாய் இரண்டு நிமிடங்கள் அமர்ந்திருந்தான். “சரி கொல்லைப்புறம் போய்க்  குளிச்சிட்டு ரெடியாவு… காரியம் பண்ற ஆட்கள் நேரத்தோட வந்துருவாங்க. அவங்க சொல்றதெல்லாம் கேட்டுக்க. அவங்கள எதிர்த்து ஒரு வார்த்தை கூடத் தப்பித்தவறிப்  பேசிடாத. மொட்டையெல்லாம் வேணாம் மீசையை மட்டும் எடுத்தா போதும்ன்னு அவரே சொல்லிட்டார். நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு ஒத்துழைப்பு குடுத்தா மட்டும் போதும்.. நீ மந்திரமெல்லாம் மதிக்கிற ஆளில்லதான். ஆனா எதுவும் செஞ்சிக் கலைச்சிடாத. அப்பாவுக்கான காரியங்களை ஒரு குறையும் இல்லாம செய்யணும்னு  அம்மா முடிவோட  இருக்காங்க.  அவங்க சொல்றத செஞ்சிட்டு விட்டுரு.  அவரே இன்னிக்கு ரெண்டு மூணு சாவுக்குப் போகணுமாம். சீக்கிரம் முடிச்சிக்குவார். சொல்றது புரியுதா?” என்றான்.

சரியென்று தலையசைத்துக்  கொண்டு எழுந்து காரைச் சார்த்திவிட்டுக் கொல்லைப்புறம் நோக்கி நடந்தான்.

ஏழு மணிக்கு நண்பர்கள் எல்லோரும் வர, முறைப்படி ஐயர்  சொல்வதற்கு எல்லாம் அமைதியாகத் தலையாட்டி, அப்பாவின் உடலை நண்பர்கள் தூக்கி அந்த மினி லாரியில் வைக்க, பத்து  பேர் மட்டும் பின்னால்  வர, வண்டி நேரே ரெட்டிப்பாளையம் மின் தகன மயானம் போய் நின்றது. இருவரும் மீசை மழிக்கப்பட்டு, கடைசியாய் அப்பாவின் முகம் பார்த்துக் கொள்ளச்   சொல்ல, கதிர்வேலன் கடைசி முறை முகம் பார்த்துக்கொண்டான். அண்ணன் கலங்கியபடி முன்னால்  வந்து முகம் பார்த்துக்கொண்டான். மயான ஆட்கள் எரியுலைக்குள் அப்பாவின் உடலை உருட்டித் தள்ளி, திரும்பிப் பார்க்காமல் செல்ல சொல்ல, அப்படியே நண்பர்கள் வந்து இருவரையும் அணைத்துக்   காரில் ஏற்றிக்கொண்டு வெளியே சென்று மெயின் ரோட்டுக்குத் திரும்பியபோது தூரத்தில் மயானத்தின் புகை போக்கி வழியே திபுதிபுவென்று புகை வானில் கலந்த வண்ணம் இருந்தது. 

வீட்டிற்கு  வந்தவுடன்  அப்பா இல்லாத வீடு ஒரு மாதிரி வெறுமையாய் இருந்தது. அவரைக் கிடத்தியிருந்த ஹாலை  நன்றாகக் கழுவி விட்டிருந்தார்கள். எல்லோரும் அமைதியாய் ஏதோ  வேலையில்  ஈடுபட்டிருந்தார்கள். ஒருவகையில் அம்மாவின் முகத்தில் ஒரு விடுதலை உணர்வு இருப்பதாகத் தீர்மானமாகக் கதிர்வேலனுக்குப் பட்டது. வெளியே கழற்றி வைத்திருந்த கண்ணாடிக்  கூண்டை எடுக்க ஆள் வந்திருந்தார்கள். மாலை  நேரம் வரை  ஒருசில சொந்தக்காரர்கள், நண்பர்கள் என்று வெவ்வேறு நேரத்தில் வந்து துக்கம் விசாரித்துச் சென்றார்கள். மதிய உணவு வாங்கித் தந்துவிட்டு வாசலில் நின்ற நண்பர்கள் இரவு பார்க்கலாமென்று கதிர்வேலனிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

இறுதி  நாட்களில் அப்பா என்னவெல்லாம் சொன்னார், எப்படியெல்லாம் நடந்துகொண்டார், எதையெல்லாம் விரும்பிக் கேட்டார் என்று அம்மா தனக்கு ஞாபகம் வந்த விஷயங்களையெல்லாம் பகிர, பொழுது சாய்ந்து மாலை சரியாக ஐந்து மணிக்குக் காலையில் மந்திரங்கள் சொன்ன இரு ஐயர்களில்  ஒரு ஜுனியர் ஐயர், சட்டை போடாமல் வெள்ளைத்  துணியை உடம்பில் சுற்றிக்கொண்டு வீட்டினுள் வந்தார்.

வந்தவர் கதிர்வேலன் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. அண்ணியோ அண்ணனோ அவனைப் பற்றி நிச்சயம் ஏதாவது சொல்லி வைத்திருக்கவேண்டும்  என்று அவனுக்குத் தோன்றியது.  ஐயர் அம்மாவின் கையில் பணிவாய் ஒரு கூழாங்கல்லைக் கொடுத்து, “இது மந்த்ர ஜபம் பண்ணின கூழாங்கல். வடமூலையில் ஒற்றை முக விளக்கேற்றி வைங்கோ. அதுக்குப் பக்கத்துல ஒரு தட்டுல இந்தக் கூழாங்கல்லை வைங்கோ. அடுத்த  ரெண்டு நாட்களுக்கு இறந்தவாளோட ஆத்மா இதுல வந்து உக்காந்துண்டு இருக்கும். அதன் பிறகு அவரோட பாப  புண்யங்கள் பொறுத்து அவரோட பரலோகப் ப்ரயாணம்  ஆரம்பிக்கும். நாமல்லாம் இருக்கறதுக்குப் பேரு இகலோகம்.மூன்றாவது காலைல என்னோட வந்த விக்னேஸ்வரன்  மாமாவுக்கு கோ தானம் பண்ணினேள்ன்னா அப்பாவோட ஆன்மா சரயு நதியைக் கடக்க அந்த மாடு உதவுமாக்கும்.” என்றார். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். 

கதிர்வேலன் மனதிற்குள், “கூழாங்கல்  எல்லாம் எதுக்கு மாமா. நேத்து ஆறாவது லார்ஜ்ல அப்பா  காருக்குள்ளேயே வந்து உக்காந்துண்டிருந்தார்…” என்று சொல்லி அலற விடலாமா என நினைத்தான். பின் எல்லோர் முகத்தையும் பார்த்து அமைதியாய் இருந்துகொண்டான்.

கதிர்வேலன் தன் மனைவியிடம் நடந்த விஷயங்களைப்  பகிர்ந்து கொண்டு வெளியே சென்று மறைவில் நின்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். 

அப்பாவுடனான பழைய நினைவுகளையெல்லாம் அசை போட்டுகொண்டு காரில் சென்று அமர்ந்தான். அப்பா எப்படி விரும்பினாரோ அப்படித்தான் செத்தார் என்று அவனுக்குத் தோன்றியது. யாரும் வேண்டாமென்று ஒதுங்கி யாரையும் அண்டவிடாமல் தான்  வாழ்க்கையைக் கழித்தார். அவர் நினைத்தது அவரின் சாவிற்கும் பெரிதாக யாரும் வரவில்லைதான்.

தூரத்தில்  வைத்தி பைக்கில் புழுதி கிளப்ப வருவது தெரிந்தது. இவன் காரைத் துரத்திய அதே நாய்கள் அவன் பைக்கையும் துரத்திக்கொண்டு தலை தெறிக்க ஓடிவருவதைப் பார்க்க முடிந்தது. கண்களை மூடிக்கொண்டு காரின் இருக்கையைச்  சாய்த்துக் கொண்டான். வைத்தி ஒரு அரைவட்டம்  அடித்து பைக்கை சுவற்றோரமாக நிறுத்திவிட்டு, காரினுள் ஏறி “என்ன மாப்ள, அப்புறம்?” என்றான்.

“பின்னாடி இருக்குற சரக்கையும் கப்பையும் எடுத்து ஒரு ரவுண்டு ஊத்து மாப்ள” என்று சொல்லிக்கொண்டே காரில் பாடலை உயிர்ப்பித்தான் கதிர்வேலன்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “ஆறாவது லார்ஜ்”

  1. கதை 2020 நடக்கிறது.
    அழகுற கதை சொல்லி,வாசகனின் எண்ணத்தை தடம் மாறி விடாது துவக்கம் முதல் முடிவு வரை படிக்க வைத்த பெருமை கதை ஆசிரியருக்கு.
    மன நிறைவு.
    கதிர்வேல் போல் பலரும் உள்ளனர். மரணம் குறித்து இவ்வளவு ஆழமான சாத்தியங்களை விவரித்த பாங்கு அருமை..வாழ்த்துக்கள் தோழரே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.