பாவனாசம் வழக்கமாக அரட்டையடிக்கச் செல்லும் டெய்லர் கடைக்குச் சென்ற போது சபை ஏற்கெனவே களை கட்டியிருந்தது. அப்படித் தாமதமாகப் போய் களைகட்டி நிற்கும் சபையைப் பார்க்கும் போது எதையோ இழந்து விட்டது போலத் தோன்றும். எல்லோரும் அப்போதே வந்திருப்பார்களோ என்று இப்போதும் தோன்றியது பாவனாசத்திற்கு. ஆனால் பொதுவாக அப்படி நடக்காது. யாராவது ஒருவன் முதலில் வந்திருப்பான். அப்புறம் ஒருவன் என்று ஒவ்வொருவராய்ச் சேர்ந்திருப்பார்கள். இதற்குப் பின்னாலும் கூட யாராவது வரக் கூடும். ஆனால் கூட்டம் சேரச் சேர டெய்லர் விநாயகத்திற்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். ஏற்கெனவே அவன் கடைக்குப் பெண்கள் உடை தைக்க வர மாட்டார்கள். இத்தனைக்கும் அவன் தொழில் கற்ற மாஸ்டர் லேடீஸ் ஸ்பெஷலிஸ்ட். அவரே கூட வேலை நிறைய இருந்தால் விநாயகம் கடைக்கு அனுப்புவார். எப்படியோ விநாயகம் ஜெண்ட்ஸ் ஸ்பெஷலிஷ்ட் என்று பெயர் வாங்கி விட்டான். அதற்கு அவன் கடையில் கூடுகிற கும்பலும் காரணம்.
உண்மையில் அவன் கடை போட்ட புதிதில் பாவனாசம்தான் ஒரு பேன்ட்டை ஆல்ட்டரேஷன் பண்ணித் தர முடியுமா என்று கேட்டான். செய்து கொடுத்தான். அடுத்து ஒரு புதுப் பேன்ட்டுக்குக் கொடுத்தான். அந்தப் பெல் பாட்டம் பேன்ட்டில் அடியில் ஜிப்பெல்லாம் வைத்து அசத்தி நன்றாகத் தைத்திருந்தான். அதைப் பார்த்து குழுவிலேயே பணக்கார ஃப்ரெண்ட்டான காசியும் இரண்டு பேண்ட் தைக்கச் சொன்னான். வழக்கமாக அவன் பாளையங்கோட்டை ஸ்டார், அல்லது ஃபிட்மேன்ஸ் டெயிலரிடம்தான் தைப்பான். அந்த அளவுக்கு விநாயகமும் தைத்துக் கொடுத்தான். அப்படி ஒன்றிரண்டாக நிறையப் பேர் வர அவன் பிரபலமாகி விட்டான். காசிதான் முதன்முதலில் அவன் கடைப்பக்கமாய் ஒதுங்கி நின்று சிகரெட் குடிக்க ஆரம்பித்தான். விநாயகமும் தீப்பெட்டி தர, ஒரு ஸ்டூலை எடுத்து கடை முன் நீட்டிக்கொண்டிருக்கும் சாய்ப்பிற்குக் கீழ் போட்டு அவனை உட்காரச் சொல்ல என்று மரியாதையும் அன்புமாய் நடந்து கொண்டான்.
அதெல்லாம் நடந்து ஆண்டு விழா கொண்டாடி ஆயிற்று. விநாயகத்திற்கு இப்போதெல்லாம் கூட்டம் கூடுவதைக் கண்டு எரிச்சலே வருகிறது. காணாததற்குக் காசி, கடையில் காஜா போடும் பையனை அனுப்பி டீயும் சிகரெடும் வாங்கித் தரச் சொல்லுவான். அவனுக்கு மட்டுமென்றால் பரவாயில்லை. வெட்டிக் கூட்டம் போடும் பலருக்கும் வாங்கி வரச் சொல்லுவான்.
இன்று சபையில் பேசு பொருள் விநாயகத்தின் கல்யாணம். அநேகமாய் அதுதான் கடை முன் கூடும் சபையினரில் நடக்கும் இரண்டாவது கல்யாணம். காசிக்குச் சமீபத்தில்தான் கல்யானம் நடந்தது. வள்ளியூரில் வைத்துக் கல்யாணம். ஒரு பஸ்ஸையே அமர்த்தியிருந்தான். அங்கே நெடுஞ்சாலை விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தான். சீட்டுக் கச்சேரியும் பாட்டும் கிண்டல் பேச்சுமாக ஒழுங்காகத்தான் போய்க் கொண்டிருந்தது. யாரோ ஒருத்தன் எங்கேயோ போய் கொஞ்சம் சரக்குப் போட்டுக் கொண்டு வந்து விட்டான். வந்தவன் பண்ணிய அலம்பலால் சீட்டுக் கச்சேரி கலைந்து ஆளாளுக்கு நடு ராத்திரியில் அந்தக் கடையைத் தேடிக் கிளம்பி விட்டார்கள். கூட்டம் குறைந்து விடவே பாவனாசம் கிடைத்த இடத்தில் வசதியாகப் படுத்து விட்டான்.
போனவர்கள் கடையைக் காணாமல், வேறு எங்கோ காய்ச்சுகிற இடத்திற்கே போய் எதையோ மாட்டி விட்டு வந்தார்கள். பாதிப் பேருக்கு ஏதோ அலர்ஜி போலக் கை காலெல்லாம் ஊறல். மீதிப் பேர் வாந்தி. இந்தக் களேபாரத்தில் கல்யாணம் காலை ஆறு மணிக்கு. இனிப் படுத்துத் தூங்கின மாதிரித்தான் என்று பாவனாசம் தொட்டியில் அடித்துப் போட்டிருந்த தண்னீரில் குளித்து விட்டு புது மாப்பிள்ளை காசிக்கு வேண்டியதைச் செய்யப் போய் விட்டான். அவன் வரச் சொல்லி முதலிலேயே சொல்லி இருந்தான். காசி மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருந்தான், “என்னடா இவனுக கடையைத் தேடி ஊரையே கலக்கி இருக்கானுக போல, என் பண்ணையார் மாமனார் காது வரை விஷயம் போய்ட்டு,.. எல்லாரும் எந்திரிச்சானுகளா, நல்ல வேளை நீ போகலை,“ என்றான். அவனிடம் விஷயத்தைச் சொன்னால் மிரண்டு விடுவான் என்று நினத்து, “வந்துட்டாங்க, வந்துட்டாங்க, நீ ரெடியாகு, என்று அவனை குளிக்க அனுப்பினான். இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் “முதலிலேயே இதெல்லாம் பழக்கம் உண்டுன்னு சொல்லியிருந்தா அருமையான முறையில் ஏற்பாடு பண்ணியிருக்கலாமே,” என்றார்.
“அதெல்லாம் இல்லீங்க ஒண்ணு ரெண்டு பேர்தான் எப்பவாவது சாப்பிடுவாங்க” என்றான். அவர் வாயை மூடிச் சிரித்ததிலேயே அவருக்கு விஷயம் பூராவும் தெரியும் போல, என்று புரிந்து கொண்டான். “ஒண்ணு ரெண்டு பேரா, ஒரு பட்டாளமே ஓடைக்கரைப் பக்கம் போயிருக்கு, சவம் அது சரக்கா, நான் ஹைவேஸ் பங்களா போய்ட்டுத்தான் வாரேன். எல்லாம் பிடில் வாசிக்கிற மாதிரி கைய மாத்தி கையைச் சொறிஞ்சிக்கிட்டு இருக்காங்க, கொஞ்சம் துளசிக் குளையத் தேச்சுக் குளிச்சிக்கிடச் சொல்லிட்டு வந்திருக்கேன், ஆனா சரியான மருந்து மாட்டுக் கோமியம்தான், அதைத் தேச்சுக் குளிச்சிட்டுக் கல்யாண வீட்டுல வந்து நின்னா மணக்கும்ல்லா,” என்று ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்.
பாவனாசத்துக்கு வெட்கமாகப் போயிற்று. நல்லவேளை அவன் சாப்பிடவில்லை. ஏதோ ஒரு தன் பயம் இன்றைக்குச் சாப்பிட வேண்டாம் என்று மனக்குறளி சொல்லியது. அது மனக்குறளியோ மனக்குரலியோ சபையில் பேசினால் நல்ல பேராகச் சூட்டுவார்கள் நண்பர்கள். சபையில் ரொம்பநாளைக்கு அந்தப் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. சரக்கு சாப்பிடாதவர்கள், சாப்பிட்டுப் பிடில் வாசித்துக் கொண்டிருந்தவர்களைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள்.
இன்றைக்கு விநாயகத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள், “ஏய், தையலு, கல்லிடைக் குறிச்சியில் கல்யாணம் வச்சா மணி முத்தாறு அருவிக் குளியல் உண்டுடே, அதுக்கு இங்கேயிருந்தே சரக்கு வாங்கிட்டுப் போயிரணூம் எல்லாம் உன் செலவுதான் பாத்துக்க,” என்று சிலரும், முதல் நாளே மாஞ்சோலை போயிரலாம், என்று இன்னிம் பெரிய பிளான் போட்டார்கள். டெயிலர் விநாயகத்தின் முகத்தில் ஈ ஆடவில்லை. உம்மென்றிருந்தான். அவனுக்கு சொந்தம் என்று அதிகம் கிடையாது. கல்யாணத்திற்கு வந்தால் இந்த மாதிரி சினேகிதர்கள் வந்தால்தான் சபை நெறைஞ்சிருக்கும். இவனுகளைப் பகைச்சுக்கிடவும் முடியாது.
“ பார்ட்டி உண்டு , இங்கே எங்கேயாவது வச்சுக்கிடலாம், தூக்கிச் சுமக்கவும் வேண்டாம் காய்ச்சுகிற இடம் தேடி அலைஞ்சு லோல் படவும் வேண்டாம் என்ன விநாயகம்,”. என்று காசிதான் ஒரு குட்டிப் பஞ்சாயத்துப் பேசி முடித்தான். காசி பேசி விட்டால் விநாயகம் மறுப்புச் சொல்லவா முடியும். லேசாகத் தலையை ஆட்டினான். உள்ளூரில் எங்கே எப்படி என்று ஏதேதோ யோசனைகள் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். விநாயகத்துக்கு நல்ல நேரமோ என்னவோ கல்யாணம் வரை அப்படி ஒரு பார்ட்டி அமையவே இல்லை.
ஆனால் டெய்லர் விநாயகம் கல்யாணத்திற்கு ஒரு பட்டாளமே போயிருந்தது, கல்யாணம் முடிந்த கையோடு மணிமுத்தாறு அருவிக்குப் போகும் திட்டத்தோடு. மாமனார் வீட்டில் கார் இருக்கு, வாங்கித் தருகிறேன் என்று வீராப்பாக விநாயகம் சொல்லி இருந்தான். அங்கே போனப்புறம்தான் அங்கே மாட்டு வண்டி கூட இல்லை என்று தெரிந்தது. ஆளுக்கொரு சைக்கிளை இரவல் வாங்கித் தருகிறேன் எட்டு மைல்தான் போய் விட்டு வாருங்கள் என்று மாமனார் சொல்லி விட்டார். பெண் ரொம்ப அழகாயிருந்தது. பெண்ணைப்பார்த்து உண்மையில் விநாயகம் பயந்து போய் விட்டான். பாவனாசத்திடம் காதைக் கடித்து நீ என் கூடவே இரு என்றான். “ஏன்டா நான் அருவிக்குப் போய் விட்டு வருகிறேன்,” என்றான். ஆறும் வாய்க்காலும் இங்கேயே பக்கம்தான். போய் ஒரு முங்கு போட்டுட்டு வா என்றான். நல்ல வேளையாக சைக்கிள் தெரியாத ஒரு அப்பாவி விநாயகத்துக்குத் துணையாக மாட்டினான். தாமிரபரணி ஆற்றில் போய் சுகமாய் ஒரு குளியல் போட்டு விட்டு வந்து புது மாப்பிள்ளையுடன் சாப்பிட்டார்கள். அருமையான சாப்பாடு. நல்ல கவனிப்பு. பெண்ணே பரிமாறினாள். தெரிந்த யார் ஜாடையிலோ இருந்தாள் பெண்.
அருவிக்குப் போனவர்கள் நல்ல பசியோடும் வாசனையோடும் வந்து சாப்பிட்டதும் கிளம்பினார்கள். அவர்களுடன் கிளம்பின பாவனாசத்தைக் கையைப் பற்றிக் கொண்டு, “நீ இருந்துட்டுப் போ, உன்னைத் தனியாக் கவனிச்சுக்கறேன் எனக்கென்னவோ பயமா இருக்கு,” என்று மீண்டும் வற்புறுத்தினான் விநாயகம். “இதுல என்னடா பயம் நான் எது வரைக்கும் துணைக்கு இருக்க முடியும், நீ கதவைத் தாழ்ப்பாள் போட்ட பிறகு உங்களைத் தவிர யாருக்குத்தான் என்ன வேலை, அதெல்லாம் சுமுகமா நடக்கும்டா” என்றான் பாவனாசம். அவனுக்கு சிரிப்பதா கோபப் படுவதா எதுவும் புரியவில்லை.
நல்ல வேளையாக பெண் வீட்டுக்காரர்கள் சிலர், உற்சாகமாகச் சீட்டுக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் பாவனாசம்.
அவர்களாகவே.“ சார் உங்களுக்கும் ஒரு கை போடவா,” என்றார்கள். பார்த்துக் கொண்டிருந்த விநாயகமும், அதுதான் சாக்கு என்று, “உட்காரு மாப்பிள்ளை காசு நான் குடுத்திருதேன்,” என்று சட்டைப் பாக்கெட்டில் பணத்தைத் திணித்து விட்டு நலுங்கு உருட்டப் போனான். அதற்கும் துணைக்கு வா எனக் கூப்பிடவில்லை. இப்படியெல்லாம் தானே முன் வந்து கையையும் வாயையும் கொடுப்பவன் இல்லை விநாயகம்.சிக்கனமான ஆள்தான். சரி நேரம் போனால் சரிதான். ஆனால் எப்படி எப்படி விளையாடுவார்களோ, கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்ததில் அப்படி ஒன்றும் கூறாக விளையாடுபவர்கள் போலத் தெரியவில்லை. எல்லோரும் சீட்டுக்களைக் கவனத்துடன் போடுபவர்கள் போலத் தெரியவில்லை ஏதோ வைக்கோல் படப்பில் இருந்து கூளத்தைப் பிய்த்து மாட்டுக்குப் போடுபவர்கள் போல சீட்டுக்களைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாது, உட்கார்ந்து விளையாடினால்தான் தெரியும். சீட்டு விளையாட்டில் கெட்டிக்காரத்தனம் எப்போதும் கை கொடுக்காது. யோகமும் வேண்டும். உண்மையில் விளையாடத் தெரியாதவனுக்குத்தான் சீட்டு நன்றாகப் பிடிக்கும் யோகமோ யோகமாய் ஜோக்கரும் ரம்மியுமாக வந்து அப்பும். எதைக் கழிக்க எதை வைத்துக் கொள்ள என்று தெரியாது.
சரி விளையாடிப் பார்ப்போம். நம்ம காசா போகப் போகுது. விநாயகம் காசுதானே. உட்கார்ந்தான். இன்னொரு புதிய ஆளும் “நானும் வாரேன் ஆட்டத்தை முதலில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். சரி என்று சீட்டைக் கலைத்து பிளேஸ் எடுங்க என்று நீட்டினார் இருப்பதிலேயே நாகேஷ் போன்ற பாவமான ஒல்லி ஆள். `ஆகா பழம் தின்னு கொட்டை போட்ட ஆளா இருக்காரே, ஜாக்கிரதையா விளையாடுரா பாவனாசம்,’ என்று மனக்குரலி சொல்லியது. “எப்படி சார், ஈ. டி, அதுதான் எண்ட்ரி டபுள் கம்பல்சரி, வச்சு விளையாடலாமா என்றார் அவரே. ஒரு முடிவுக்கு வந்திட்டாங்க போலியே, லாபமோ நஷ்டமோ எல்லாருக்கும்தானே, என்று நினைத்துக் கொண்டே “உங்க இஷ்டம், ஆனா கம்பல்சரி வேண்டாம், கார்டு சுமாரா இருந்தா, ஸ்கூட் விட்டுக்குவோம்,” என்றான். கார்டு நன்றாக வரவில்லையெனில், அந்த விளையாட்டில் இருந்து மட்டும் ஒதுங்கிக் கொள்வது ஸ்கூட். அதற்குச் சாதாரண விளையாட்டு என்றால் 25 பாயிண்ட் எண்ட்ரி டபுள் என்றால் 50 பாய்ண்ட்.

ஆளுக்கொரு சீட்டை உருவி அவரவருக்கு வந்த சீட்டுப் பிரகாரம் உட்காரச் சொன்னார் அவர். “எப்படி சார் உங்க ஊர்ல எது பெருசு இஸ்பேட் ஆஸா, ஹார்ட்டின் ஆஸா என்று கேட்டார். “எங்க பழக்கம் ஆட்டின் ஆஸ்தான்” என்றான். இங்கேயும் அப்படித்தான் என்றபடியே, அவர்தான் கலைத்துப் போட்டார். புது ஆளைக்கண்டால் ரூல்ஸ் பேசிக் கொள்வது வழக்கம்தான். முதல் ஆட்டத்தில் இவன் கையில் இணை சேராத ஒரே ஒரு இரண்டு இருக்கும்படி விளையாடினான். நாலு பாய்ண்ட் கொடுத்தான். அடுத்த கேம் துணிந்து இறங்கினான். ரம்மியே சேரவில்லை. ரம்மி வந்தால் டிக் இல்லையென்றால் ஆட்டமே குளோஸ். ஒரு ரவுண்டு முடிந்ததும் இவனுக்கு முந்தின ஆள் ஒரு சீட்டைக் கழித்தார் அதுதான் இவனுக்கு ரம்மி. அப்படியே எடுத்து டிக் அடித்தான். நாகேஷ், “வைக்கோல்ப் படப்பு, வைக்கோல்ப் படப்பு உருகிப் போட்டுட்டியா, அவரு போன ஆட்டையில் இரண்டு ஆட்டின் கழிச்சாரே.. அப்பவே அது தூண்டில்ன்னு தெரியலையா, எண்ட்ரி டபுள் ஆட்டையில் யாராவது இரண்டைக் கழிச்சு விடுவாங்களா அவரு டேஞ்சர் கேம் ஆடுதாருன்னு, புரியலையா” என்று சத்தம் போட்டார். அவருக்கு கையில் செமத்தியான பாயிண்ட் இருந்தது.
அடுத்த இரண்டு ஆட்டங்களும் அவனே ஜெயித்தான். நாகேஷுக்கு கடும் எரிச்சல். முந்தின கை இப்படிக் கவனமில்லாமல் சீட்டைக் கழிக்கிறானே என்று எரிச்சல்.ஆட்டம் மும்முரமாக இருந்தது. விநாயகம் நினைவே இல்லை. அடுத்த சில ஆட்டங்கள் பாவனாசம் நிறைய பாய்ண்ட் கொடுத்தான். ஆட்டத்தின் போக்கில் நாகேஷ் பாய்ண்ட்டும் பாவனாசம் பாய்ண்ட்டும் அருகருகே வந்தன. அநேகமாக மற்றவர்கள் ஆட்டம் இழந்து வெளியேறி வேடிக்கை மட்டும் பார்த்தனர். ரெண்டும் சரியான கைகள் என்று பாராட்டினார்கள் மற்றவர்கள். நூறு ரூபாய் பெட் கட்டி விளையாடினார்கள். பத்துப் பேர் ஆயிரம் ரூபாய், பெரிய தொகை. நாகேஷ் ஒரு யோசனை சொன்னார்,” எண்ணூறு ரூபாயை இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்வோம். மீதமுள்ள இருநூறு ரூபாய்க்கு விளையாடுவோம் என்றார். பாவனாசம் எப்போதுமே காசுக்காக முண்ட மாட்டான் இந்த மாதிரி பிரித்துக் கொள்வோம் என்றால் சம்மதித்து விடுவான்.
இருநூறு ரூபாய்க்கு கடும் போட்டியாக இருந்தது. அங்கே நலுங்கு முடிந்து. ஒலுசைச் சடங்குகள் ஆரம்பித்திருந்தன. பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவருக்கொருவர் சந்தனம் பூசுவதும் தலைக்கு எண்ணெய் வைப்பதும் என ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும் ஒலுசைச் சடங்கில் புதுப்பெண் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டது. கூடவே அவளது தோழிகளின் கிண்டலும் உற்சாகமூட்டுதலும் பார்த்து விநாயகம் ஆடிப் போய் விட்டான். அவன் கண்கள் பாவனாசத்தைத் தேடின. அவன் சீட்டில் மூழ்கி விட்டான். ஒரு ஆட்டம் நீண்டு கொண்டே போனது. இரண்டு பேரும் ஏற்கெனவே செட் சேர்ந்த சீட்டுக்களைக் கலைத்துக் கலைத்து மாற்றிச் சேர்த்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இருநூறு ரூபாய்க்கு இந்தப் பாடா என்று பாவனாசம் நினைக்கையில் நாகேஷ் டிக் அடித்து விட்டார்.
இருநூறு ரூபாய் அவருக்கே அதிகம் கிடைத்தது. பாவானாசம் களைத்துப் போய், “நல்லா விளையாடினீங்க சார்,” என்றான் அவரும், “நீங்க என்ன லேசுப்பட்டவரா உள்ளே இருந்து ஜோக்கர் வந்துதானே ஜெயிச்சேன். நீங்க ஒரு கார்டு கூட கொடுக்கலையே,” என்றார். அதற்குள் மாப்பிள்ளை உங்களைக் கூப்பிடறாரு என்று ஒரு பெண் வந்து பாவனாசத்திடம் சொன்னது. எழுந்து வேகமாக விரைந்தான். அப்போதும் பாவனாசத்தின் காதுக்குள் என்னவோ பயமாருக்குடா, அவ என் கன்னம், முன் கையெல்லாம் சந்தனம் தடவினா, பதிலுக்கு என்னையும் செய்யச் சொன்னார்கள் அவ கை, கன்னம் எல்லாம் அப்படி மெல்லிசா இருக்குடா, எனக்கு அவளைத் தொடவே நடுங்குதுடா, என்னடா செய்யறது, ” என்றான் விநாயகம். “அதெல்லாம் தானா சரியாப் போயிரும்ன்னு சொல்லுவாங்கடா, ஆனா பொறுமையா நடந்துக்கோ, ரொம்ப ஆசைப் படற மாதிரி காட்டிக்காதே, நிறையப் பேசு, “ என்றெல்லாம் சொன்னான். அதெல்லாமே அவனுக்கு அப்போது தோன்றியதுதான். அவனுக்குமென்ன கல்யாணமா ஆகியிருக்கு.
ஒருவழியாக மணமகளை மாடியில் மணமகனின் அறைக்குள் அனுப்பி வைத்தார்கள் பெண்கள். கலகலப்பான பெண்களைப் பார்த்து பாவனாசமே சற்று மிரண்டு விட்டான். நாகேஷ், “என்ன சார் மாப்பிள்ளை என்ன சொல்லறார்” என்று பாவனாசத்தின் தோளைத் தட்டினார். “வாருங்களேன் ஆற்றங்கரை வரை போய்ட்டு வருவோம், அந்தப் படித்துறையில் உட்கார்ந்து காத்து வாங்கினபடி ஒரு தம் போடலாம்,” என்று அழைத்தார். வளர்பிறை நிலா கிட்டத்தட்ட பௌர்ணமி போல வெளிச்சமாயிருந்தது. தண்ணீர் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் தென் மேற்குப் பருவக்காற்று ஓய்ந்திருக்கவில்லை. சிகரெட் பற்ற வைப்பதே சிரமமாயிருந்தது. நாகேஷ்தான் பக்குவமாகப் பற்ற வைத்தார். ஒரு முழு சிகரெட் கூடக் காலியாகியிருக்காது பேட்டரி விளக்குடன் இரண்டு பேர் இவர்களைத் தேடி வந்தார்கள்.
“தம்பி வாங்க சாந்தி முகூர்த்தத்தில் என்னவோ சிக்கல் போல பெண் அழுது கொண்டே வந்து கொஞ்சம் களேபாரமாயிருக்கு நீங்க ரெண்டு பேருமே வாங்க, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க யாரையும் காணலை,” என்றார் வந்தவர். நாகேஷ் மெதுவாக, “மாப்பிள்ளை கொஞ்சம் முரடரா,” என்றார் பாவனாசத்திடம். “அதெல்லாம் இல்லை, அவன் கொஞ்சம் பயந்து போயிருந்தான், பொண்ணு நல்ல லட்சணமா, வாட்ட சாட்டமா இருக்கா அதனாலோ என்னவோ அவனுக்கு கொஞ்சம் காம்ப்ளெக்ஸ்,” என்று சொல்லிக் கொண்டே விரைந்தான்.
மாப்பிள்ளை ஒரு அறையில் தனியாகக் கைகளைக் குளிருக்கு இதமாக தொடைகளுக்கிடையில் கொடுத்தவன் போல அமர்ந்திருந்தான். பக்கத்தில் ஒருவரும் இல்லை. பெண் பட்டகசாலையில் இருக்க வேண்டும். அவளைச் சுற்றி ஏகப்பட்ட பெண்கள் சமாதானப்படுத்துகிற தொனியில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். கல்யாண மேடை வீட்டு முற்றத்திலேயே போட்டிருந்தது. மண்டபமெல்லாம் கிடையாது. வீடு பெரிய வீடுதான்.
மணமேடையில் சில குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பாவனாசம் தலையைப் பார்த்ததும் பெண்கள் அமைதியானார்கள். பாவனாசத்திற்கு அந்த முதிர்ச்சி எங்கிருந்து வந்தது தெரியவில்லை. “என்னடா நடந்தது, நீ என்னமும் கோவிச்சுக்கிட்டியா, ரொம்ப ஆத்திரமா எதுவும் நடந்துக்கிட்டியா,” என்று கேட்டான். இல்லை இல்லையென்று தலையாட்டினான். இரண்டு பிரம்மச்சாரிகள் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்தார்கள். நல்ல வேளையாக நாகேஷ் வந்தார். அவர் கொஞ்சம் பெரிய ஆள். கல்யாணம் ஆனவர். அவர் அப்படி இப்படி விவரம் சேகரித்து வந்திருந்தார்.
“ஒண்ணுமில்லை சார், இவுக மேல ஒண்ணும் தப்பில்லை. பொண்ணுதான் புரிஞ்சிக்கலை போல. தம்பிக்கு ஆரம்பிச்சதுமே உச்சம் வந்திருக்கும் போல, அது பொண்ணுக்கு ஏமாத்தமா இருந்திருக்கும்லா,அதைக் கமுக்கமா பெரியவங்க கிட்ட சொல்லிருக்கலாம். இல்லை, ஆசை வெட்கமறியாதுன்னு மறுபடி முயற்சி பண்ணிருக்கலாம். அது அவசரப்பட்டு என்னை ஒரு வெத்து மாப்பிள்ளைக்கி கட்டி வச்சிட்டீங்கன்னு அழுதுக்கிட்டே அறையைத் திறந்துட்டு வந்து ரசாபாசமாக்கிட்டு போலத் தெரியிது. என் வீட்டுக்காரி கிட்ட விவரம் சொல்லி அனுப்பி இருக்கேன்,” என்றவர் விநாயகத்திடம், “தம்பி முதல் தடவையில இதெல்லாம் இந்த விஷயத்தில் சகஜம் தம்பி,” என்றார். “இல்லை அண்ணாச்சி நான் அதுதான் எனக்கு பயமாயிருக்குன்னு இவன் கிட்ட சொன்னேன், அண்ணாச்சி என்று அழாத குறையாகச் சொன்னான்.
“அதெல்லாம் இல்லை தம்பி, சமயத்தில் இப்படி மீன் சரியா மாட்டாது தம்பி. அப்புறம் பார்த்தீங்கன்னா ஒருநாளிலேயே பெரிய கெழுத்தி மீனா ரெண்டு மூணு மீனு புடிச்சிரலாம் தம்பி, எனக்கே இப்படி ஆகியிருக்கு, எம் மருமக கொஞ்சம் அவசரப்பட்டுட்டா, அது வந்துங்க சார், கூடச் சேர்ந்த புள்ளைங்க ஏதாவது ஆசையாப் பேசிருக்குங்க, அதைக் கேட்டுட்டு கற்பனையை வளத்திருப்பா.. நான் சொல்லி அனுப்பிருக்கேன். நீங்க, பயப்படாதீங்க, நீங்க முகூர்த்த அறையில் இருங்க, திரும்ப வருவா, தம்பி கெத்த விட்டுக் கொடுக்காதீங்க, நாங்க ரெண்டு பேரும், இங்கதான் இருப்போம்.” என்று அவன் காதில் என்னவோ சொன்னார். விநாயகம் நடுக்கத்துடன் போனான்.
சொன்னது போலவே பெண்கள் இரண்டாம் முறையாகப் பெண்ணை அழைத்து வந்து அறைக்குள் அனுப்பினார்கள். காலையில் மூஞ்சிக்கருக்கலில் பெண்கள் பட்டாளம் வந்து அறைக் கதவைத் தட்டிப் பெண்ணை அழைத்துப் போனார்கள். சற்று நேரத்தில் விநாயகம் வெளியே வந்தான். மணவாளன் அண்ணாச்சி, அதுதான் நாகேஷ், “என்ன தம்பி எத்தனை மீன் புடிச்சீங்க, ஒண்ணா ரெண்டா,” என்று மெதுவாக ரெட்டை விரலைக் காட்டினார். விநாயகம் லேசான வெட்கத்தோடு, இரண்டையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டான்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
