வரலாற்றுவமைக்குப் பரணர்

தமிழ் இலக்கணத்தில் உம்மைத் தொகைக்கு எடுத்துக்காட்டாக அளிக்கப்படும் தொடர்களில் ஓன்று ‘கபில பரணர்’ என்பது. சமமான கவித்துவம் உடைய புலவர்கள் என்று கபிலரையும் பரணரையும் கொள்ளலாம்.  ‘குறிஞ்சிக்குக் கபிலர்’ என்ற வாக்கிற்கு ஏற்பக் குறிஞ்சித் திணையை விரிவாகப் பாடியவர் கபிலர். பெருங்குறிஞ்சி என்று அழைக்கப்படும், ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடியதாகக் கருதப்படும், குறிஞ்சிப்பாட்டு என்ற நீண்ட பாடலைப் பாடியவரும் அவரே. பரணரின் கவித்துவமோ வேறு வகையானது ; சற்றுப் புதுமையானது. அகத்திணைப் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகளையும், தொன்ம இழைகளையும் தவறாமல் வைப்பதோடு, அவற்றைக் கவிதைக்குள் இயல்பாகப் பொருந்துமாறும் செய்தவர் அவர். அவற்றையெல்லாம் உவமையாகவே உபயோகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்கொலை புரிந்த நன்னனைப் பற்றியும், அவனை நுட்பமாகப் பழிவாங்கிய, வாக்குச் சுத்தம் உடைய கோசர்களைப் பற்றியும், தித்தனின் உதவியுடன் கோசர்களைக் கொன்று பழிதீர்த்துக் கொண்ட அன்னி மிஞிலியைப் பற்றியும் வெவ்வேறு பாடல்களில் குறிப்பிடுகிறார் பரணர். எலிசபெத் காலத்துப் பழிவாங்கல் நாடகங்களை நினைவுபடுத்தும் கவிதைகள். இங்கு அனைத்துத் தகவல்களும் உவமைகளாகவே வைக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும். ‘உவமைக்குக் காளிதாசர்’ என்று பொதுவாகச் சொல்வது போல, ‘வரலாற்று உவமைக்குப் பரணர்’ என்று தனித்துச் சொல்லி விடலாம்.  ‘மனத்தால் அறியக்கூடிய உவமை’ என்று உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிடும் உவமை வகையில் பரணரின் உவமையை அடக்கி விடலாம் என்று தோன்றுகிறது.

மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே.

மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.

குறிஞ்சித் திணையைச் சேர்ந்த இந்த இரண்டு குறுந்தொகைப் பாடல்களும் பரணரின் கவிதையாற்றலுக்குச் சான்றுகள். இரண்டு பாடங்களில் மூன்று உவமைகள் – அவற்றில் இரண்டு வரலாற்றுப் புனைவின் தொடர்ச்சியாக அமைந்தவை.

தன் காவல் மரமாகிய மாமரத்தின் பசிய காயைத் தின்ற குற்றத்துக்காக ஒரு பெண்ணைக் கொன்ற நன்னன், எத்தகைய நரகத்துக்குப் போவானோ, அத்தகைய நரகத்துக்கு அன்னையும் போவாளாக! என்று முதல் பாடலில் ஆத்திரத்துடன் தோழி கூறுகிறாள். ஒரு நாள் மலர்ந்த முக்த்துடன் விருந்தினன் போல் வந்த தலைவனின் வரவுக்குப்பின், போர்முகத்தில் உள்ள ஊரைப் போல் அன்னை துயில் மறந்தாள் என்பது தோழியின் ஆத்திரத்துக்குக் காரணமாக அமைகிறது. ‘தோழி இரவுக் குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது’ என்ற துறை விளக்கத்தைக் கவனத்தில் கொண்டால், கவிதையினுள் பயணிப்பது எளிதாகி விடுகிறது. ஒரு சிறிய கவிதையினுள் இரண்டு வெவ்வேறு வகையான உவமைகளை வைத்துள்ள பரணரின் கவித்திறன், வியப்பை அளிப்பதாகவும் ஆகிவிடுகிறது.

பெண்கொலை புரிந்த நன்னனைப் பற்றிய வரலாற்றுப் புனைவு அடுந்த கட்டத்திற்கு இரண்டாவது பாடலில் எடுத்துச் செல்லப்படுகிறது. தலைவனின் மார்பை அணைய விரும்பும் தலைவிக்குத் தோழி சொல்வதாக அமைவது. அந்தப் பாடல்.’ நன்னனது நறுமணமுள்ள மாமரத்தை வெட்டிப் போரில் அவனை விரட்டியடித்த , ‘ஒரு சொற் காரர்’ (சத்திய புத்திரர் ?) என்னும் பெயர்பெற்ற, கோசர்களைப் போல சிறிது சூழ்ச்சியும் காதலில் வெற்றி பெற, செய்ய வேண்டியிருக்கிறது

என்று தொழி தலைவிக்கு அறிவுரை சொல்வது போல் அமைகிறது கவிதை.

‘பெண்கொலை புரிந்த நன்னன்’  ஒன்று மொழிக் கோசர்’ ஆகியோர் பற்றிய குறிப்பைத் தொடர்ந்து எடுத்துச் செல்கிறார் பரணர். தன்னுடைய அகநானூற்றுப் பாடலில் (196) அன்னி மிஞிலி, தித்தன் என்பவன் உதவியுடன், கோசர்களைக் கொன்று தன்னுடைய வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்வதைக் குறிப்பிடுகிறார். அந்த வெற்றிச் செருக்கில் அவள் தலைநிமிர்ந்து நடந்ததைப் போல், தலைவனை வென்று அதனாலேயே தலைவியையும் வென்று விட்ட இளமைச் செருக்கால் பரத்தை தலை நிமிர்ந்து நடப்பதாகச் சொல்கிறார். நன்னன் – கோசர் – அன்னி மிஞிலி – என்று பழி வாங்கும் வட்டம் ஒன்று முடிவுறுவதை உவமைகள் மூலமாகக் கவிதையில் நிகழ்த்தி விடுகிறார் பரணர். அகக் கவிதையினுள் இத்தகைய உவமைகளின் பொருத்தப்பாடு பற்றிய சிந்தனை எதுவும் வாசக மனத்தில் எழவிடாமல் தடுத்து விடுகிறது பரணரின் நுட்பமான பிரதிபை. வலுவந்தமாகப் பூட்டப்பட்ட படிமங்களின் சேர்க்கையாக ஒரு காலத்தில் கருதப்பட்ட ஆங்கிலக் கவிஞர் ஜான் டண்ணின் கவிதைகள், நவீன வாசிப்பில் ஏற்படுத்திய அனுபவக் கிளர்ச்சியைப் பரணரின் கவிதைகளும் அளிக்கத் தவறுவதில்லை.

(தொடரும்)

தமிழ்க் கவிதை சில குறிப்புகள் - ந.ஜயபாஸ்கரன்

எழுது சித்திரம் மருதத் திணை

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “வரலாற்றுவமைக்குப் பரணர்”

Leave a Reply to leftcreator00b14841cbCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.