சாயா – தோசை – ஆப்ரேஷன் சிந்தூர்

வீட்டுக்காரம்மாவின் சிறு கோரிக்கையாக ஆரம்பித்து, பேசிப்பேசி வாய்ப்பு இருந்தால் போகலாம் என தீர்மானிக்கையில் இணைய புலி, இலக்கிய இமயம், பைக் சிந்தனை சிற்பியும் சேர்ந்து கொள்வது என தீர்மானம் ஆனவுடன் மூன்றுநாட்கள் மட்டுமே அவரது கால்ஷீட் கிடைத்ததால் காசியில் விஸ்வநாதர் தரிசனமும், கங்கை குளியலும், திரிவேணி சங்கம குளியலும், அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானை தரிசிப்பதும், என்ற குறைந்த பட்ச பயணத்திட்டத்தில்  துவங்கினோம்.

வாரணாசி என்ற காசி

காசியில் திட்டமிட்டதை தவிர கால பைரவர், காசி விசாலாட்சி அம்மன், அன்னபூரணி அம்மன் தரிசனம் மற்றும் காசியில் இருந்து புறப்படுக்கையில் சோழி அம்மன் தரிசனம் மற்றும் அகோரி பாபா ஆலயமும் கூடுதல் தரிசனமாக கிடைத்தது.

நாங்கள் போய் இறங்கிய அன்று ஷ்ராவன மாதத்தின் முதல் திங்கட் கிழமை. ஒவ்வொரு கோவிலும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. நண்பர்கள் இன்றைக்கு கோவிலை தவிர்த்து விடுங்கள் என்றனர். இருப்பினும் சுற்றுக் கோவில்களை பார்த்து வருவோம் என கிளம்பினால் காசி விஸ்வநாதர் அவரை முதலில் பார்க்க அழைத்துவிட்டார்.

விஸ்வநாதர் தரிசனத்திற்கு செல்லும் வழியில் அம்மா அன்னபூரணியின் திவ்ய தரிசனம். நூறு ரூபாய் கட்டணத்தில் அன்னபூரணி தாயாரின் முன்பாக நின்று தரிசனம் செய்யும் பேறு கிட்டியது.

பின்னர் நீண்ட வரிசையாய் இருந்தும் தள்ளுமுள்ளு இன்றி காசி விஸ்வநாதரை கண்குளிர தரிசிக்க முடிந்தது. கிடடத்தட்ட நான்கு ஜன்னல்களிலும் விஸ்வநாதரை பார்க்க இயல்வதால் கூட்டத்தை எளிதாக சமாளிக்கின்றனர்.

காசி கோவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் இப்போதுதான் முதல் முறையாக செல்கிறோம். சென்றமுறை  சென்றதைவிட மிகப்பெரிய கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்து வந்தோம். மிக அருமையாக வடிவமைத்து நிறைய இடத்துடன் பக்தர்கள் எளிமையாக தரிசனம் செய்ய வழி வகை செய்துள்ளனர்.

அடுத்ததாக, கால பைரவர் தரிசனம். சரியான கூட்டம். இருப்பினும் அருமையான தரிசனம். காசியில் தண்டணம் என்பது மூத்தோர் வாக்கு. கால பைரவர் சந்நிதியில் தரிசனம் முடிந்து வருகையில் முதுகில் சிறு தடியால் அடித்து ஆசி அளிக்கின்றனர். காசிக்கயிறும் கட்டிவிட்டு தட்சணை பெற்றுக்கொள்கின்றனர். கொஞ்சம் அசந்தால் 1,000, 2,000 என நம்மிடம் கறக்க வாய்ப்பு உண்டு. கவனமாக இருத்தல் வேண்டும்.

அடுத்ததாக,  காசி விசாலாட்சி அம்மன் தரிசனம். சரியான வழிகாட்டி பலகைகள் இன்றி நிறைய சுற்றி பின்னர் கடைசியாக கண்டுபிடித்தேன். திவ்ய தரிசனம். அதற்குள் உடம்பின் ஒவ்வொரு பாகமும் ஓய்வுக்கு ஏங்க, சைக்கிள் ரிஷாவில் கூடடைந்தோம்.

இன்னும் மனிதர்கள் இழுக்கும் சைக்கிள் ரிஷா புழக்கத்தில் இருக்கிறது. திருவிழா காலங்களில் ஆட்டோ மற்றும் கார்களை தொலைவாகவே நிறுத்தி விடுவதால் இதை தவிர வேறு வழியில்லை.

பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்கள் நூற்றுக்கணக்கில். ஒவ்வொரு வண்டிக்கும் கியூ ஆர் கோட் கொடுத்து ஏரியா பிரித்து விட்டிருக்கின்றனர். ஆக, சண்டை இன்றி அவரவர் ஏரியாவில் மட்டுமே சுற்றுகின்றனர்.  நால்வர் சவுரிகயமாக பயணம் செய்யலாம்.  பெட்ரோலில் இயங்கும் ஆட்டோக்களை கிட்டத்தட்ட காண இயலவில்லை. இது உண்மையில் மிகப்பெரிய சாதனை. மூச்சு திணறல் இன்றி சுற்ற முடிகிறது.

காசி நகரம் அதன் பழமையில் இருந்து வெகு வேகமாக வெளியேறி நாகரிக வேடம் பூணுகிறது. காசியின் அழகே அதான் பழமையான கட்டிடங்கள் தான். அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. இது நல்லதா இல்லை பழமையை அப்படியே வைத்துக் கொள்வதா என்ற பேச்சு வார்த்தைக்கெல்லாம் இடம் இன்றி புதிது புதிதாய் கட்டிடங்கள் வந்து கொண்டிருக்கிறது. பழையதை அழித்தும், மறைத்தும்.

வளர்ச்சியின் வேகத்தில் புராதனத்தை இழந்து கொண்டிருக்கிறது காசி. ஒரே ஆறுதல் முழுவதும் மாற இன்னும் பலகாலம் பிடிக்கும் என்பது மட்டுமே.

முன்னர் கண்டதைவிட சுத்தம் குறைந்து இருப்பதாகவே பட்டது எனக்கு.

நாங்கள் செல்கையில் கங்கையில் வெள்ளம் என்பதால் மக்கள் குளிக்கவில்லை. ஆகவே, குப்பைகளும் குறைவு. அதைவிட நதி கொண்டு சென்ற குப்பைகளே அதிகம். கங்கையின் புது வெள்ளத்தில் குளிக்க வசதியாக எங்கிருந்தோ வந்த ஒருவர் உதவினார். மூன்றாவது படியிலேக்கூட நிற்க இயலாத அளவு நீரின் இழுவை.

கங்கை கரையில் ஹனுமான் காட் பகுதியில் இருக்கும் ஒரு படித்துறையில் சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் நூலை வெளியிட்டு அறிமுகம் செய்து பேசினேன். மகிழ்ச்சியான ஓர் தருணம்.

ஆந்திரா மக்களை காசி, அயோத்தியா என கிட்டத்தட்ட எங்கும் காண முடிந்தது.

காசியில் வந்திறங்கிய முதல்நாள் லஸ்ஸி குடித்து சம்பிரதாயத்தை முடித்தோம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குடித்த அதே கடை. சுவையில் கொஞ்சமும் குறைவின்றி.

வழக்கமான சங்கர மட தங்கல். (1700 ரூபாய் ஒரு இரவுக்கு குளிர் சாதன அறை)

எளிமையான மதிய உணவு. சாம்பார், கத்தரிக்காய் பொரியல், ரசத்துடன். அட்டகசமான சுவை, 120 ரூபாய்க்கு.

பின்னர் அங்கிருந்து பிரயாக்ராஜ் போகும் வழியில் காலை உணவு.

இப்போதெல்லாம் சைவ உணவு கடைகள் பெருகி இருக்கின்றன ஒவ்வொரு ஊரிலும், பயணம் செய்யும் வழிகளிலும்.

இட்லி மற்றும் தோசைகள் உடன் கொடுக்கும் சட்னி, சாம்பார் எல்லாம் நாம் நம் பெற்றோர்களை, மனைவியை சாப்பாடு சரியில்லை என கொடுமைப் படுத்தியதற்கான தண்டனை என்பதை உணர இயலும்.

மற்றபடி வட இந்திய உணவு வகைகள் ஒவ்வொன்றும் அட்டகாசம். ரொட்டி, சப்பாத்தி மற்றும் வட இந்திய சமையல் சாப்பிட பிடிப்பவர்களுக்கு சொர்க்கமாய் அமையும்.

ஒவ்வொரு ஊரிலும் குடித்த சாயா சுவையில் ஒவ்வொரு ஊரும் இன்னொன்றை மிஞ்சுகிறது. மகரிஷி வால்மீகி விமான நிலையம் முன்பாக கிடைக்கும் சாதாரண டீக்கடை சாயாகூட சிறப்பாக இருந்தது.

இரண்டாம் நாள் காலை காசியில் மேலே சொன்ன சோழி அம்மன் மற்றும் அகோரி பாபா ஆலய தரிசனத்துடன் காரில் பிரயாக்ராஜ் பயணம்.

பிராயாக் ராஜ்

பிரயாக் ராஜ் அனுபவம் குறித்து தனியாக எழுதி உள்ளேன். அதில் சொல்லாமல் விட்டது புனித நீராட எதுவாக அவர்கள் செய்திருக்கும் அமைப்பு.

கிட்டத்தட்ட நாலு நாவாய்களை ஒன்று சேர்த்து சதுர வடிவில் கட்டி, மத்தியில் வலையுடன் மரப்பலகை இட்ட தெப்பத்தில், இடுப்பளவு ஆழத்தில் நம்மை வசதியாக திரிவேணி சங்கம புனித நீராட வகை செய்திருக்கிறார்கள்.

அங்கேயே 108 சக்தி பீடங்களில் ஒன்றான அரூபமான ஒரு அம்மன் (அலோபி அம்மா) தரிசனம். காசி விசாலாட்சி அம்மனும் ஒரு சக்திபீட கோவில்தான்.

சக்தி பீட தரிசனம் முடிந்து வெளி வருகையில் அருமையான மழை.  அப்படியே அயோத்தியா கிளம்பி போகும் வழியில் மதிய உணவு.

பரத குண்ட் மற்றும் அயோத்தி

அயோத்தியாவின் எல்லையில் பரத குண்ட் எனப்படும் சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ ராமனின் தம்பியருள் ஒருவனான பரதன் வாழ்ந்த இடம்.

வாழ்ந்த இடம் என்பது சாதாரண வார்த்தை. அண்ணனின் அரியணையில் தான் அமரமாட்டேன் என சொல்லி அயோத்தி நகரில் கூட வாழாமல், ஊரின் ஒதுக்குப்புரத்தில் ஒரு துறவியைப்போல் அண்ணனின் வனவாசம் முடிந்து வரும்வரையில் அண்ணனின் பாதுகைகளையே அண்ணனாகவும் , அரசனாகவும் கருதி அதையே அரியணையில் ஏற்றி அண்ணன் திரும்பி வரும்வரையில் ஒரு காபந்து அரசை நடத்தி அண்ணனுக்காக காத்திருந்த இடம்.

அங்கு இரு தழுவல் சிற்பங்களை காணலாம்.

ஒன்று ஆஞ்சநேயர் சஞ்சீவி மழையை தூக்கி செல்லகையில் அண்ணனுக்கு இவனால் தீங்கு நேருமோ என அஞ்சி அனுமன் மீது பானம் விட அனுமன் கீழே இறங்கி தனது பயணத்தின் பயனை சொல்ல பரதனும், அனுமனும் ஆரத் தழுவும் காட்சி.

இன்னொரு சிற்பத்தில் போரில் வெற்றி பெற்று ஸ்ரீ ராம பிரான் அயோத்தி ஊர் திரும்பியபின் போரில் உதவிய அனுமனுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால் ஆரத்தழுவி அனுமனை ஆசீர்வதித்த சிற்பம். ராமாயாண கால கோவிலும், பாதுகாவும் கண்டுவிட்டு மனம் முழுக்க மகிழ்வுடன் அயோத்தியா நகர் நுழைந்தோம்.

புதிதாய் அமைந்த தர்ம பாதையில் ஒரு சிறு பயணம் செய்துவிட்டு தங்குமிடம் சென்று சேர்ந்தோம். இங்கும் சங்கர மடத்தின் வேத பாட சாலையில் தங்கல்.

காலை ஐந்து மணிக்கு எழுந்ததும் முதலில் சரயு நதியில் புனித நீராடல்.

பின்னர் அறைக்கு திரும்பி உடைகள் மாற்றி அயோத்தி ராமனை அவனது பிரம்மாண்ட ஆலயத்தில் காண புறப்பட்டோம். வழியெங்கும் கோவில் தரிசனம் தடையின்றி நடக்க வேண்டுமே என்ற தவிப்பு. ஆனால், அனைத்தும் தேவையே இல்லாத கற்பனை என்பதை அங்கு சென்றதும் உணர முடிந்தது. அவ்வளவு அருமையான ஏற்பாடு. செருப்பு, மொபைல் மற்றும் இதர மின்னணு சாதனங்கள் வைப்பு அறையில் வைத்து செல்ல சிறப்பான ஏற்பாடு. எத்தனை கூட்டம் வந்தாலும் சமாளிக்க எதுவாக பணியாளர்கள். சிறப்பான பாதுகாப்பு, பாதுகாப்பு சோதனைகள் இவைகளைக் கடந்து ராமனின் ஆலய வாசலில் காலை வைக்கையில் இதுவரை கண்டிரா பேரானந்தம். இன்னும் ராமனை காணவில்லை, அதற்குள்ளேயே இவ்வளவு உணர்வுகள். படிகளை கடந்து அவன் சந்நிதியில் உள்ளே நுழைந்ததுமே ராமனின் பிரம்மாண்டமான திவ்ய தரிசனம். கன்குளிர காணுதல் செய்தேனா என இன்னும் சந்தேகம் இருக்கிறது. இத்தனைக்கும் ஒருவரும் என்னை பிடித்து தள்ளவில்லை, கன்குளிர காணுவதற்கு வேண்டிய அளவு நேரமும் இருந்தது. இருப்பினும் முழு திருப்தியாய் கண்ட உணர்வில்லை. ஆக, மீண்டும் வரிசையில் நின்று இன்னொருமுறை ஆற அமரக் கண்டு வந்தேன். ஜென்ம சாபல்யம் என்பதன் பொருள் விளங்கியது.

எத்தனை ஆண்டு கால தவம்? எத்தனை கோடி மக்களின் பிரார்த்தனை?, எத்தனை லட்சம் மக்களின் பேருழைப்பு?, எத்தனை ஆயிரம் மக்களின் உயிர் தியாகம்?

இது அத்தனையும் திட உருவெடுத்து நிற்பதே ஸ்ரீ ராமனின் அயோத்தியா ஆலயம்.

இன்று நாம் காணும் பிரமாண்ட ஆலயம் சக்ரவர்த்தி திருமகன் எப்படிப்பட்ட கோவிலில் எழுந்தருள வேண்டுமோ அப்படிப்பட்ட கோவிலில் எழுந்தருளி இருக்கிறார். 

கண்ணும், மனதும் நிறைய கண்டுவிட்டு இதர அயோத்தியாவின் கோவில்களை கண்டுவிட்டு இல்லம் திரும்பினோம்.

ஜெய் ஸ்ரீ ராம்.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.