தெலுங்கு: பலகும்மி பத்மராஜு
ஆங்கில வழி தமிழாக்கம்: தி.இரா.மீனா

கோதாவரி பொங்கிக் கொண்டிருந்தது. தண்ணீரின் கொந்தளிப்பும், நெருப்பு வளையங்கள் போன்ற சுழற்சியும் மிக தைரியமானவர்களையும் கூட அச்சப்படுத்துவதாக இருந்தது. என்றாலும் சலவைத் தொழிலாளிகள் விடியற்காலையில் ஆற்றின் நடுப் பகுதிக்கு நீந்திப் போய், மரங்களையும், கிளைகளையும் ஆற்றின் கரையில் கொண்டு வந்து சேர்த்தனர். அந்திக்குள் கரை முழுவதும் கிளைகளும், கம்புகளும் நிறைந்து விட்டிருந்தன.
ஆண்கள் தைரியமாக நீரோடைக்குள் போக, பக்கவாட்டிலிருந்து பெண்கள் தண்ணீரில் மிதந்து வந்து கொண்டிருந்த மரக்கட்டைகளைக் கொக்கிக் கம்புகளை வைத்து இழுத்துக் கொண்டிருந்தனர். இந்த மாதிரி சில நேரங்களில் கோதாவரி மிகத் துடிப்புடன் இயங்கும். உப்பிப் போனது போலான தோற்றத்திலிருக்கும். ஆறு கொந்தளித்து, காட்டு மரங்களை அடித்துத் துவம்சம் செய்து கொண்டு வரும் போது ஆண்கள் அதைத் தடைப்படுத்தி எல்லாக் கட்டைகளையும் கரையில் சேர்ப்பார்கள். அந்த வகையில் மனிதன் இயற்கையின் மீது தன் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்கிறான்.
அந்த மாதிரியான சேகரிப்புக்கு வெறும் பலம் மட்டும் போதுமானதில்லை, மிகுந்த செயல் திறனும் தேவையானது. நடு நீரோடையில் மரத்தைப் பிடித்து நிறுத்தும் போது, ஆற்றின் கட்டுப் படுத்தும் நிலைக்கு நம்மைத் தயார் படுத்திக் கொண்டால் ஒழிய, நம்மால் மரத்தை நிறுத்த முடியாது. இந்த விளையாட்டில் இருக்கிற ஒரு சவால்தான் சலவைத் தொழிலாளியின் சாமர்த்திய அளவுகோல்.
ஜெயிப்பவன் இங்கு கதாநாயகன். அதனால் வாழ்க்கையைப் பணயம் வைத்து நீர்ச் சுழலுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.
ஜனங்களின் வசைகளுக்குப் பெயர் போன, ஒரு பிடிவாதமான பெண் ராமி. எல்லோருடனும், எல்லாவற்றிற்கும் சண்டை போடுவாள். விடியும் முன்பே ஒரு கொக்கிக் கம்போடு அவள் ஆற்றுப் பகுதிக்குப் போவாள். அதன் அர்த்தம் தான் போகும் ஆற்றின் அந்தப் பகுதிக்கு யாருமே வரக்கூடாது என்பதுதான். யாராவது அதை தைரியமாகச் செய்ய முன் வந்தால், அது அவளுடன் சண்டைக்கான அழைப்பாகத்தான் இருக்க முடியும். கூரிய நாக்கு அவளுக்கு. போலீஸ்காரர்கள் இரண்டு அல்லது மூன்று முறை அவளை பயமுறுத்த முயற்சி செய்து, முடியாமல் அது அவள் பழக்கம் என்று கைவிட்டு விட்டனர். ஆற்றையோ அல்லது மரங்களையோ தன் உரிமை மானியம் என்று அவள் சொல்வதில்லை. ஆனால் அவள் முதலில் போய் ஆக்கிரமித்துக் கொள்ளும் பகுதியில் மற்ற மனிதர்களுக்கும் உரிமையுண்டு என்பதை அவளிடம் திட்டவட்டமாகச் சொல்ல எந்த வழக்கறிஞராலும் முடியவில்லை. சரி, தவறு என்று எதுவாக இருந்தாலும் ஜனங்களுக்கு அவள் பேச்சைக் கண்டு பயம்; அவளிருக்கும் ஆற்றுப் பகுதிக்கு வரப் பெண்களுக்கும் கூட தைரியமில்லை.
வெங்கடு மிக வேடிக்கையான மனிதன். ஒரு சண்டையை மிகச் சுலபமாக உருவாக்குபவன். சலவைத் தொழிலாளிகளின் குடியிருப்புப் பகுதியில் உள்ள இளம் பெண்களுக்கு அவனை மிகவும் பிடிக்கும். அவர்களின் கதாநாயகன் அவன். ராமிக்கும், அவன் அப்பாவிற்கும் இடையே நீண்ட காலப் பகை. ஒரு தடவை வெங்கடுவின் அப்பா ராமியின் வீட்டிற்குத் தீ வைத்திருக்கிறார். வெங்கடுவைப் பார்த்தாலே போதும் ராமிக்குப் பற்றிக் கொண்டு வரும், அவனைச் சபிப்பாள். ஆனால் பெருந்தன்மையால் அவன் அதைப் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டான். ராமியிடம் எல்லாப் பெண்களுக்கும் ஒவ்வாமை என்பதால் அவளை ’ டாம்பாய்’ என்று கூப்பிடுவார்கள்.
ஆற்றிற்கு வரும் பெண்களை ராமி பயப்படுத்தி அனுப்பி விடுவாள் என்று வெங்கடுவிற்குத் தெரிந்தது. அச்சூழ்நிலையை நேரில் பார்த்து விட வேண்டுமென்று அவன் போனான். கிளைகளைப் பொறுக்குவதில் ராமி கவனமாக இருந்தாள். கரையில் நின்று கொண்டிருந்த இரண்டு, மூன்று பெண்கள் ராமியைப் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தனர். வெங்கிடு ஒரு கொக்கிக் கம்பைக் கையில் எடுத்துக் கொண்டான்.
அதைப் பார்த்த ராமிக்கு வெறி வந்தது.’ ஏய், கயவனே! ஒரு பெண்ணுடன் போட்டி போடுகிறாயா?’
வெங்கடு: நீ….ஒரு பெண்ணா? எனக்குத் தெரிந்த வரையில் இல்லை… கவனமாகப் பேசு, இல்லையென்றால் நீயும் ,உன் கொக்கிக் கம்பும் நடு ஆற்றில் மிதப்பீர்கள்.’
ராமி: இந்த இடத்திற்கு முதலில் வந்தது நான். நீ எதற்கு இங்கு வந்தாய்? உனக்கு வெட்கமில்லையா?
வெங்கடு: இந்த ஆற்றுப் பகுதி என்ன உன் அப்பாவின் சொத்தா?
ராமி : முதலில் வந்தது நான்.
வெங்கடு: நான் பிறகு வந்தேன்.
ராமி: அகங்காரம் பிடித்தவனே..ஒரு பெண்ணோடு தகராறு செய்கிறாயா?
வெங்கடு: நீ பேசாமல் அமைதியாக இருந்தால், நான் இங்கிருந்து போய் விடுவேன்.
ராமி: சீ, அமைதியாக இருப்பதா? நான் என்னுடைய எல்லாக் கிளைகளையும் பொறுக்கிக் கொண்டுதான் போவேன்.
வெங்கடு : சரி. உன் எல்லைக்கு அப்பால் இருப்பதை.. நான் எடுத்துக் கொள்வேன்.
ராமி: என் எல்லைக்கு அப்பால் என்பது, நடு ஆறுதான்!
தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அந்த இடத்தை விட்டுப் போவது என்பது வெங்கடுவால் முடியாதது. தன் மிதவையைக் கரையில் தூக்கியெறிந்து விட்டு, தன் கொக்கிக் கம்பால் கிளைகளை இழுத்தான்.
எப்படி அவளை அடிபணிய வைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் வயதுடைய பெண்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனிடம் பணிந்து விடுவார்கள். இவள் மட்டும்தான் எதிர்ப்புக் காட்டுகிறவளாகத் தெரிகிறாள். அவர்களிடையே குடும்பத் தகராறு இருந்த போதிலும் அவன் வெளிப்படையாக அவளை அவமதித்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் யாரையுமே அவன் அவமதித்ததில்லை. ஆனால் இப்போது இவளை எப்படியாவது பணியச் செய்தாக வேண்டும்.
வெங்கடுவை விட மேம்பட்டவளாக, ராமிதான் கரையிலிருந்து கிளைகளைச் சேகரித்துக் கொண்டு போனாள்.அந்தச் செயலில் வெளிப்பட்ட அவளுடைய திறமையின் நயத்தை அவன் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுடைய கொக்கிக் கம்பு தொட்ட குச்சிகளில் பெரும்பான்மை நீரோடைக்குள்ளேயே நழுவி விழுந்து விட்டன. அவள் தொட்ட குச்சி எதுவானாலும் அது கரையை வந்தடைந்தது. அவன் எவ்வளவு முயற்சி செய்தாலும், அவன் பிடியிலிருந்து அவை தப்பின. ஆற்றின் கரையில் இருந்துதான் அவை சேகரிக்கப்பட்டன என்ற உணர்வு அவனுக்கு எழவில்லை. அவளுடைய நிபுணத்துவத்தைப் பார்த்து வியந்தபடி உட்கார்ந்திருந்தான்.
அன்று கோதாவரி மிக உக்கிரமாக இருந்தது. கருமையான மேகங்கள் வானத்திற்கு உறை போட்டிருந்தன. கடுமையான காற்றோடு லேசான சாரல். அன்று ஆற்றிற்குள் இறங்க பெரும்பாலான சலவைத் தொழிலாளிகள் அஞ்சினர்.
மிதவையை நெஞ்சில் வைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கிவிட வெங்கிடு முடிவு செய்து விட்டான். ஒரு பெண்ணோடான போட்டியில், ஆற்றின் கரையில் உட்கார்ந்திருக்க அவனுக்கு விருப்பமில்லை. அவனைப் போல வேறு சிலர் ஆற்றிலிறங்கத் தயாராக இருந்ததால் அவனுக்கும் தைரியம் வந்தது. சிலர் அவனைத் தொடர்ந்தார்கள். தன் குச்சிகள் அனைத்தையும் ராமியின் பக்கம் தள்ளினான். அவள் ஓர் உறுதியோடு அவற்றைப் பிடித்துக் கொண்டாள். மதியமானவுடன் மற்றவர்கள் போய் விட்டார்கள்; ராமியும் வெங்கடுவும் மட்டுமே இருந்தார்கள். அவன் மிகக் களைப்பாக இருந்த போதிலும் அவளுக்கு முன்னால் கிளம்ப அவனுக்கு விருப்பமில்லை.
இருள் மெல்ல மெல்லப் படர்ந்தது. காற்று பலமாக அடிக்க, தூறலும் கனமாகிக் கொண்டிருந்தது.
’எவ்வளவு நேரம் இங்கிருப்பாய்?’
’எவ்வளவு நேரம் இங்கிருப்பாய்?’
வெங்கடு மீண்டும் தண்ணீருக்குள் இறங்கப் போனான். கரையில் நின்று கொண்டு ராமி கிளைகளை லாவகமாக இழுத்துக் கொண்டிருந்தாள்.
’கவனமாக இரு! வழுக்கித் தண்ணீரில் விழுந்து விடப் போகிறாய்.’
’உன்னை நீ கவனமாகப் பார்த்துக் கொள்; நான் தவறி விழுந்து விட்டால் கூட வெளியே இழுக்க நீ வர வேண்டாம்.’
’தைரியமாகத்தான் பேசுகிறாய். நீ தவறி விழுந்து விட்டால், தனியாளாக நின்று நான்தான் உன்னை வெளியே இழுக்க வேண்டும்.’
ஒரு பெரிய மரம் முன்னால் மிதக்க வெங்கடு அதை நோக்கி நீந்தினான். அந்த மரம் மிகப் பெரியது ,அவன் மிகக் களைப்பாகி விட்டான். ராமியுடன் போட்டி இல்லையெனில், அவன் ஆற்றிற்குள் குதித்திருக்க மாட்டான். எப்படியோ மரத்தைப் பிடித்துக் கொண்டு, கரையை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தான். இருட்டு பரவி விட்டதால் கரை மிக மங்கலாகத் தெரிந்தது. இடுப்பு வரை தண்ணீர் நிற்க, ராமி ஒரு பெரிய கிளையை இழுக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தாள்.
’அது மிகக் கனமானது, விட்டு விடு’ அவன் கத்தினான்.
’நீ உன் மரத்தைப் பார்த்துக் கொண்டால் போதும்.’ அவள் பதிலடி கொடுத்தாள்.
அவள் என்ன அவனுக்கு உறவா?பிடிவாதமான பைத்தியக்காரி–அவளுக்குத் தெரியாதா? இறப்பதற்காக,அவள் ஆழத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறாள். ஆனால் அவனால் கரையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
அவள் ஒரு தடவை தத்தளித்துப், பின் சமாளித்துக் கொண்டு விட்டாள். வெங்கடு கத்த நினைத்து, அதை அடக்கிக் கொண்டான்.அந்தப் பக்கம் பார்க்காமல் இருக்க முயற்சித்தான். கரையை நோக்கி அவன் நீந்திக் கொண்டிருந்தான்.
இதற்கிடையில், ஏதோ ஒன்று நழுவிக் கீழே விழும் சப்தம் கேட்டது. நெஞ்சு படபடக்க, அவன் கைகள் மரத்தைக் தவற விட்டன. அவன் நிமிர்ந்து பார்த்த போது ராமி அங்கேயில்லை.
அவன் தன்னால் முடிந்த அளவு வேகமாகக் கரையை நோக்கி நீந்தினான். மூன்றடி தூரத்தில், கீழ்நிலை நீரோட்டத்தில் ஒரு தலை சுழல்வதை அவனால் பார்க்க முடிந்தது. ராமியை அவன் ஒரு கையால் தூக்கினான். அவள் தன் இரு கைகளால் அவன் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டாள். அவர்கள் இருவரும் மூழ்கினர்; ஆனால் அவன் கஷ்டப்பட்டுத் தன்னை விடுவித்துக் கொண்டு, மிதந்து வந்து மூச்சு விட்டான். ராமி மயக்கமானாள். ஒரு கையால் தன்னைச் சமாளித்துக் கொண்டு, மெல்ல அவள் கழுத்தை தன் கழுத்தோடு அணைத்துக் கொண்டான். நீர் வேகம் அவர்களிருவரையும் கரையிலிருந்து தள்ளியது. கரையைத் தன்னால் அடைய முடியுமா என்று நினைத்தான். அவன் கைகள் நிச்சயமற்றும், மூச்சு நிதானமின்றியுமிருந்தது. கண்களை மூடிக் கொண்டே, இரண்டு உடல்களையும் கரையை நோக்கி இழுத்துப் போனான். வெகு காலத்திற்குப் பிறகு அவன் கை கரையைத் தொட்டது போல உணர்ந்தான். கடும் முயற்சி செய்து அவன் கையைத் தூக்கிக் கரையின் மேல் வைத்தான்.
ஒரு பெரிய மண்கட்டி வேகமாக அவர்களைத் தள்ள, மீண்டும் புதைந்தனர். அவன் மயக்கமாவது போல உணர்ந்து பின் மீண்டான். எப்படியோ, இரண்டு உடல்களையும் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டான். மூச்சை பலப்படுத்துவதற்காகச் சிறிதுநேரம் மல்லாந்து படுத்திருந்தான். மெலிதான முனகல் ராமியிடமிருந்து வெளிப்பட்டது. எழுந்து, அவளை இங்கும் அங்கும் திருப்பினான். தன்னுணர்வற்ற நிலையில் ராமி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். அந்தத் தொடுதல் அவள் சொல்ல நினைத்த எல்லாவற்றையும் அவனுக்குப் புரிய வைத்ததானது.
ராமியைத் தோளில் சுமந்தபடி, அவன் சலவைத் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிக்குப் போனான். நினைப்பதற்கே வினோதமானது ! தன்னை அவன்தான் காப்பாற்றினான் என்பது அவளுக்கு வெளிப்படையாகவே தெரியும். அவன் அதைப் பல வார்த்தைகளால் சொல்லி விட்டான்.
அவளோடு அவனுக்குப் போட்டியிருந்தது. அது எப்படி உருவானது? இத்தனை நாட்களாக அவன் ஏன் அவளை வெறுத்தான்? அவள் கர்வமானவளாக இருந்தால், அவன் ஏன் கவலைப்பட வேண்டும்?அவளை கட்டுப்படுத்த அவன் நினைத்தான், ஆனால் கிடைத்த தோல்விதான் அவனுடைய ஏமாற்றத்திற்குக் காரணமாகி விட்டது.
கிளைகளைச் சரியாகப் பிடிப்பதில் அவளோடு யாரும் போட்டி போட முடியாது. அவள் ஒரு நேர்மையான பெண். கொஞ்சம் பிடிவாதம்தான்; அதனாலென்ன? அவன் மட்டும் பிடிவாதக்காரனில்லையா?
அவள் தண்ணீரில் நழுவி விழுந்தாள், அவன் காப்பாற்றினான். இதற்கு முன்னால் அவன் இப்படியொரு நல்ல காரியத்தைச் செய்ததில்லை. இந்த முறை எப்படியோ அவள் அவனால் அடக்கப்பட்டு விட்டாள். ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகு, அவளைக் காப்பாற்றியதால் அவனுக்கு அவள் மீது உரிமை இருக்கிறது என்று நினைத்தான். அவளை வென்று விட்டதாக அவன் நினைத்தான்
உலகத்தில் வேறு எந்தப் பெண்ணிடமும் இல்லாத அழகு, மென்மைத் தன்மை அவளிடம் இருப்பதைப் பார்த்தான். அவள் தன் இரண்டு கைகளால் அவன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். அந்தத் தொடுதலில்— பல விஷயங்கள்— காப்பாற்றியதற்கு நன்றி, பந்தயத்தில் தோற்றதை ஒப்புக் கொள்ளுதல். மென்மையாக அவளைப் படுக்க வைத்து விட்டு, வெங்கடு அவள் பெற்றோரை அழைத்தான்.
ஒரு பெரிய கூட்டம் அவர்களைச் சுற்றி நின்றது. ராமியின் அம்மா, நெஞ்சில் அறைந்து கொண்டு பித்துப் பிடித்தவள் போல அழுதாள். அவள் அப்பா செயலற்றுத் தரையில் விழுந்தார்.அங்கு கூடிய மூத்தவர்கள் அவளை எழுப்ப முயற்சித்தனர்— சிலர் தண்ணீர் தெளித்தனர். சிலர் இளம் சூட்டுத் தீயால் அவளை உஷ்ணப்படுத்தினர். ’இந்தக் கேடு கெட்டவன் என் மகளைக் கொன்று விட்டான்! ’ என்று ராமியின் அம்மா ஓலமிடத் தொடங்கினாள்.
வெங்கடு இந்த ஓலத்தைச் சட்டை செய்யவில்லை.அவனுடைய களைப்பான விழிகள் ராமியின் மீதே இருந்தன.
ராமி லேசாக அசைந்து கண்களை அரையாகத் திறந்தவுடன் வெங்கடு அவளருகே போனான். அவன் ஒருவனால் மட்டுமே வலி நிறைந்த அவள் கண்களில் தெரிந்த அன்பைப் பார்க்க முடிந்தது. ஒரு கணம் அவன் இதயம் துடிக்க மறந்தது.
இந்தப் பார்வைதான் ராமியின் அம்மா மனதில் சந்தேகத்தை வலுப்படுத்தியது. ‘இந்தக் கொடியவன்தான், யாரும் அருகில் இல்லாத சமயம் பார்த்து என் மகளைக் கொன்று விட்டான்!’ என்று சொல்லி அவள் பெரிதாக அழத் தொடங்கினாள்.
வெங்கடு அசையாமல் நின்று விட்டான். அவனுடைய உதவிக்கு பரிசு இதுதானா?
ராமி கஷ்டப்பட்டு மூச்சு விட்டாள். வெங்கடுவின் பழைய கணக்குகள் எல்லாம் ராமியின் அப்பாவிற்கு ஞாபகம் வந்தது.
’போலீசைக் கூப்பிட்டு உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று கோபத்தோடு சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார். மிகக் களைப்படைந்தவனாக அவன் உணர்ந்தான். ராமியோடு கோதாவரி ஆற்றில் மூழ்கியிருக்கலாம். மிகப் பெரிய போராட்டத்திற்கு இடையில் அவளைக் காப்பாற்றியும், அதில் எந்தப் பலனுமில்லை என்று தான் தெரிகிறது. மிஞ்சியிருப்பது குற்றம் செய்தவன் என்ற சந்தேகம் மட்டும்தான்.
தனக்கும் , ராமிக்கும் இந்தக் கொடுமையான உலகத்தில் இடமில்லை என்றே வெங்கடுவிற்குத் தோன்றியது.
மொழிபெயர்ப்பு
சிறுகதை : தெலுங்கு
மூலம் : பலகும்மி பத்மராஜூ
ஆங்கிலம் : டாக்டர் டி. ஆஞ்சயநேயலு
தமிழில் : தி. இரா. மீனா
நன்றி : wisdom library
wisdomlib – the greatest source of ancient and modern knowledge
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
