தெலுங்கு மொழியின் உ.வே.சா.

சி.பி. பிரவுன் (சார்லஸ் பிலிப் பிரவுன்) (1798 -1884)

உ.வே.சா. (1855 – 1942) என்ற பெயரைக் கேள்விப்படாத தமிழர்கள் இருப்பார்களே தவிர, ‘சி.பி. பிரவுன்’ (1798 -1884) என்ற பெயரைக் கேள்விப்படாத தெலுங்கர்கள் இருக்க மாட்டார்கள். 

தன் சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்து தெலுங்கு மொழி இலக்கியத்திற்கு உழைத்த ‘சார்லஸ் பிலிப் பிரவுனை’ ‘தெலுங்கு சூரியனாக’ இரு தெலுங்கு மாநில  மக்களும் புகழ்ந்து போற்றுகிறார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1817 ல் தெலுங்கு எழுத்துக்களைப் கற்பதில் தொடங்கியது பிரவுனுடைய உழைப்பு. 

பிரவுனுக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் தெலுங்கு மொழியைக் கற்ற ஆங்கிலேய அதிகாரிகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களுக்கும் பிரவுனுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. பாரத தேசம் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்ததால் ஆங்கிலேய அதிகாரிகள் வேலை நிர்வாகத்திற்காக அந்தந்த பிராந்திய மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டி வந்தது. ஆனால், பிரவுன், உத்தியோக நிர்வாகத்தைத் தாண்டி சுமார் அறுபதாண்டு காலம் தெலுங்கு மொழியைத் தொடர்ந்து கற்றார். 

பிரவுனுக்கு முன்னால் 1782 ல் ‘கர்னல் காலின் மெக்கன்சி’ என்ற ஆங்கிலேயர் தன் 28 வது வயதில் இந்தியாவுக்கு வந்து அதன் பிறகு முப்பதாண்டு காலம் இந்தியாவிலேயே வாழ்ந்து 1821 ல் கல்கத்தாவில் மரணமடைதார். அவர் ஆங்கில அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் முதல் தலைமை மதிபீட்டாளராகப் பணிபுரிந்தார். மெக்கன்சி. தென்னிந்தியாவிற்குப் பயணம் செய்து, உள்ளூர் சரித்திரம், சாசனங்கள், நாணயங்கள், சிற்பங்கள், சித்திரங்கள், ஓலைச்சுவடி நூல்கள் என்று பலவற்றையும் சேகரித்தார். தன் சொந்த பணத்தைச் செலவு செய்து, ‘காவலி பொர்ரய்யா’ சகோதரர்களின் உதவியோடு முடிந்தவரை தான் சேகரித்தவற்றை வரிசைப்படி தொகுத்துப் பாதுகாத்தார். தென்னிந்திய வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான அடிப்படை செய்திகளைச் சேகரித்தவர் ‘காலின் மெக்கன்சி’. அவற்றில் பலவற்றுக்கும் தூய பிரதிகள் எழுதச் செய்து பதிப்பித்தவர் சி.பி. பிரவுன். மெக்கன்சி, உள்ளூர் வரலாற்றை இந்தியாவில் உருவான காகிதங்களில் எழுதச் செய்ததால் அந்த எழுத்துக்கள் காலப்போக்கில் அழிந்து விடும் என்று நினைத்த பிரவுன், உள்ளூர் வரலாற்றின் பிரதிகளை மீண்டும் இங்கிலாந்தில் உருவான காகிதத்தில் இந்தியன் இங்க்கால் எழுத வைத்தார். அந்த வரலாறு இன்னும் சிதையாமல் உள்ளது. இவரைப் பற்றி இங்கு குறிப்பிடுவது ஏன் முக்கியமாகிறது என்றால், கர்னல் காலின் மெக்கன்சியின் மரணமும் சி.பி. பிரவுன் செயலில் இறங்கியதும் கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகள் வித்தியாசத்தில் நிகழ்ந்தது. அதனால் சி.பி. பிரவுன் செய்த முயற்சியை மெக்கன்சி செய்த முயற்சிகளின் தொடர்ச்சியாகக் கருத வாய்ப்புள்ளது. ஆனால் அளவைக் கணக்கிட்டால் சி.பி. பிரவுனின் உழைப்பு அந்நாட்களில் மெக்கன்சி செய்த உழைப்பை விடச் சில ஆயிரம் மடங்கு அதிகம்.

தெலுங்கு மொழி பேசும் மக்கள் தினமும் நினைத்துப் போற்றவேண்டிய 18 – 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய அதிகாரிகளாக நால்வரைச் சொல்கிறார்கள். கர்னல் மெக்கன்சி, சி.பி. பிரௌன், கோதாவரி நதிக்கு அணைகட்டிய சர் ஆர்தர் காட்டன், ராயலசீமா விவசாயிகளுக்கு உதவி புரிந்த தாமஸ் மன்ரோ. அந்நாட்களில் ஆங்கிலேயே அதிகாரிகள் பெரும்பாலும் நீதி, நேர்மை அற்றவராகவும், கர்வம் கொண்டவர்களாகவும் இருந்த போதிலும் இந்த நால்வரும் தெலுங்கு மக்களுடைய வரலாற்றில் ஒரு பகுதியாகி விட்டார்கள். 

இந்த நால்வரிலும் சிறப்பாகப் புகழ்பெற்றவர் சி.பி. பிரவுன். 19 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெலுங்கு மொழி இலக்கியத்திற்கு அதிக அளவில் சேவை புரிந்த மகநீயர் ஒரு தெலுங்கர் அல்ல. ஆங்கிலேயரான சி.பி. பிரவுன். அவர் ஆற்றிய சேவைகளைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சி.பி. பிரௌன் சில ஆயிரம் ஓலைச் சுவடிகளைச் சேகரித்தார். சேகரிப்பதோடு நின்று விடாமல் அவற்றைச் சீர் செய்து குறைநீக்கி, செய்யுட்களுக்கு எண்ணிக்கையிட்டு அத்தியாயங்களாகப் பிரித்து, பொருளடக்கம் உருவாக்கி, தூய பிரதிகளைத் தயாரித்தார். ஒரே நூலுக்கு ஐந்தாறு கையெழுத்துப் பிரதிகள் கிடைத்தால் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து சான்றுகளோடு  கூடிய பிரதியை நகலெடுக்கச் செய்தார். பின்னர் அவற்றைப் பதிப்பித்தார். அந்நாட்களில் சி.பி. பிரவுன் இந்த அளவு உழைத்ததால்தான் காசி கண்டம், பத்ம புராணம், மகாபாரதம், பாஸ்கர ராமாயணம், விஷ்ணு புராணம், ஸ்ரீ காளஹஸ்தி மாகாத்மியம், வேமனா செய்யுட்கள் போன்ற காவியங்களும், இதிகாசங்களும் இன்று நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. அதனால் தான் அவரை ‘ஆந்திர பாஷோத்தாரகர்’ என்கிறார்கள். மனு சரித்ரம், வசு சரித்ரம் போன்ற காவியங்களை முதல் முறையாக விளக்கவுரையோடு அச்சிட்டவர் பிரவுன். அவை மட்டுமின்றி, சமத்காரமான தனிப்பாடல்கள், நாடோடிப் பாடல்கள், பழமொழிகள், முதுமொழிகள் போன்றவற்றையும் பெரு முயற்சி செய்துச்  சேகரித்தார். இவை பிரவுன் செய்த இலக்கியச் சேவைகளில் சில மட்டுமே. ஒரே வார்த்தையில் கூற வேண்டுமென்றால் தெலுங்கு இலக்கியத்தில் பிரவுன் முத்திரை பதிக்காத தெலுங்கு காவியம் எதுவுமில்லை எனலாம். மேலும், தந்திரம், மந்திரம் தொடர்பான சமஸ்கிருத நூல்களையும் சேகரித்து சிலவற்றுக்கு அவரே ஆங்கில மொழிபெயர்ப்புகளைச் செய்து வெளியிட்டார். 

சுமார் எண்பத்து நான்கு சதகங்களை (நூற் செய்யுட்கள் கொண்டது ஒரு சதகம்) சேகரித்து பிழை நீக்கி நகலெடுத்துப் பதிப்பித்தார். அவற்றுள் ‘வேமனா சதகம்’ முக்கியமானது. ‘வேமனா செய்யுட்கள்’ என்றவுடன் சி.பி. பிரவுன் கட்டாயம் நினைவுக்கு வருவார். 

பழந்தெலுங்கு இலக்கியங்களைச் சேகரித்ததோடு நின்று விடாமல், பிரவுன் சுயமாக தெலுங்கு இலக்கணம் எழுதினார். தெலுங்கு கற்கும் வெளிநாட்டவருக்காக 1840 ல் இலக்கண நூலை அச்சிட்டார். அதோடு பிரவுன் தெலுங்கு ஆங்கிலம், ஆங்கிலம் தெலுங்கு அகராதிகளை வடிவமைத்து வெளியிட்டார். சி.பி. பிரவுனுக்கு முன்பாக இரண்டு, மூன்று அகராதிகள் இருந்தன என்றாலும் பிரவுன் அவற்றை விட இருமடங்கு சொற்களைச் சேர்த்து தன் நிகண்டுவைத் தயாரித்தார். பண்டைய நூல்களில் காணப்பட்ட சொற்களோடு கூட சாமானிய மக்கள் பேசும் சொற்களையும் சேர்த்து, தான் தயாரித்த அகராதியை ஆதாரத்தோடு கூடியதாக உருவாக்கினார். 

தெலுங்கு கற்கும் மேற்கத்தியவர்களுக்காக பாடப் புத்தகங்களை அவரே எழுதினார். அந்த நாட்களில் இத்தனை விரிவாக முயற்சித்து, உழைக்கையில், பலரையும் கலந்து பேச வேண்டி வந்தது. அவ்வாறு பல அறிஞர்களோடு உரையாடிய கடிதப் போக்குவரத்துகளைப்  பின்னர் ‘பிரௌன் கடிதங்கள்’ என்ற பெயரில் இருபது தொகுதிகளாக உருவாக்கினார். ஒவ்வொன்றும் நானூறு பக்கங்கள். மொத்தம் எட்டாயிரம் பக்கங்கள் 

பண்டைய நூல்களின் சேகரிப்பு, சீரமைப்பு, பதிப்பித்தல் போன்ற பணிகளைச் செய்தபடியே தன் அரசாங்க உத்தியோகத்தையும் கவனித்த பிரவுன் ஒரு தனி மனிதரா, ஒரு அமைப்பா, ஒரு இயந்திரமா என்று வியப்பு ஏற்படுகிறது. சி.பி. பிரவுன் செய்த பணிகளை நோக்குகையில் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இத்தனை சாதிக்க இயலுமா என்று தோன்றுகிறது. பல அமைப்புகள் ஒன்றிணைந்து சில தசாப்தங்கள் செய்ய வேண்டிய இலக்கியச் சேவைகளை பிரவுன் ஒருவராகச் செய்தார். அத்தனை உழைப்பு, தெலுங்கு மொழி இலக்கியத்திற்காக வேறு எந்த ஒரு வெளிநாட்டவரும், வேறு எந்த ஒரு இந்திய மொழிக்கும் இது வரை செய்ததாகத் தெரியவில்லை. அவருக்கு இதுதான் வேலையா என்றால் அப்படியில்லை. அவர் பிரிட்டிஷ் ஆட்சியில் நீதித் துறையிலும், வருவாய்த் துறையிலும் பணி புரிந்தார். சொந்த ஆர்வத்தால் தெலுங்கு மொழி இலக்கியத்திற்குச் சேவை செய்தார். யாரும் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. ஏராளமான நூல்களைக் கண்டுபிடித்துத் தன் சொந்த கைக்காசைச் செலவு செய்து பதிப்பத்தார். மாதச் சம்பளம் போதவில்லை என்றால் கடன் வாங்கினார். மாதம் ஐம்பதோ, அறுபதோ சம்பளமாகப் பெற்ற பிரவுன் மாதம் நூறு ரூபாய் கடன் வாங்கி ஓலைச்சுவடிகளைச் சேகரித்தார். 

கடப்பாவில் தன் சொந்த வீட்டை ‘மொழி இலக்கியத் தொழிற்சாலை’யாக மாற்றினார். எந்நேரமும் அவரிடம் இருபது, இருபத்தைந்து பண்டிதர்கள் பணி புரிந்தனர். அவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்ததும் பிரவுனின் சொந்த பணத்திலிருந்தே. ஒரு முறை அந்தக் கடன்கள் எல்லாம் திரண்டு அறுபதாயிரமாயிற்று என்று பிரவுன் தெரிவிக்கிறார். இதெல்லாம் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை. 

சி.பி. பிரவுன் பற்றிய விவரங்கள் பல நூல்களின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. அவர் தன் வாழ்வின் இறுதி நாட்களில் ‘இலக்கிய சுய வரலாறு’ (Literary Biography) என்ற சிறிய நூலை எழுதினார். அதில் அவர் செய்த தெலுங்கு மொழி இலக்கியச் சேவைகளைப் பற்றிய விவரங்களை அதிகம் அளித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை மிகக் குறைவாகவே கூறியுள்ளார். ‘ஞானமர்த்தி அனுமத் சாஸ்த்ரி’ எழுதிய ‘தி பிரவுன் சரித்ரம்’ என்ற 96 பக்க நூல், ‘பண்டி கோபால ரெட்டி’ ஆய்வு செய்த ‘பிரவுன் கடிதங்கள்’ என்ற நூல், ‘கொத்தபல்லி வீரபத்திர ராவ்’ எழுதி, ஆந்திர பிரதேஷ் சாகித்ய அகாடமி பிரசுரித்த ‘சி.பி. பிரவுன்’ என்ற 3௦௦ பக்க நூல், சி.பி. பிரவுன் எழுதிய ‘வேமன சரித்ரம்’ ஆங்கில மொழிபெயர்ப்பு, அவர் வடிவமைத்த அகராதிகள், தத்தாசாரியார் கதைகள் போன்ற நூல்கள் எல்லாம் பிரவுனைப் பற்றிய வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன.   

‘சார்லஸ் பிலிப் பிரவுன்’, 1798 ம் வருடம் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். 1884 ல் இங்கிலாந்தில் மரணமடைந்தார். 

சி பி ப்ரௌனின் தந்தையார் ‘ரெவரெண்ட் டேவிட் பிரவுன்’ தன் 25 ம் வயதில் 1786ல் இந்தியாவுக்கு வந்தார். கிழக்கிந்தியக் கம்பெனி அரசு தம்முடைய ராணுவத்தில் பணிபுரிந்து மரணித்தவர்களின் பிள்ளைகளுக்காக நடத்திய பள்ளியில் பணி புரிவதற்காக டேவிட் பிரவுனை இந்தியாவுக்கு அனுப்பியது. இங்கிலாந்தில் இருந்தபோதே ‘டேவிட்’ கிறிஸ்தவ மத போதனையில் பயிற்சி பெற்றிருந்தார். அதோடு கூட கிரேக்கம், லத்தீன் மொழிகளையும் கற்றிருந்தார். கல்கத்தா வருவதற்கு முன்பே பெங்காலி மொழியைப்  படித்திருந்தார். அப்போது டேவிட் ப்ரௌனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது. கல்கத்தா வந்த சில மாதங்களிலேயே டேவிட் பிரவுனின் மனைவியும் குழந்தையும் ஒருவர் பின் ஒருவராக மரணித்தனர். பின்னர் அவர் ‘ப்ரான்சஸ் கௌலி’ என்ற ராணுவ அதிகாரியின் மகளை மணந்து கொண்டார். 

டேவிட் பிரவுனுக்கும், கௌலிக்கும் பிறந்த இரண்டாவது மகன் சி.பி. பிரவுன். சிபி பிரவுனுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி, இரு சகோதரிகள் இருந்தனர். டேவிட் தன் வீட்டிலேயே ஒரு பள்ளியைத் தொடங்கி இங்கிலாந்திலிருந்து வந்த உத்தியோகிகளுக்கு உள்ளூர் மொழிகளைக் கற்றுத் தந்தார். ஹிந்து மத வழிமுறைகளைப் புரிந்து கொள்வதற்காகவும் பைபிள் மொழிபெயர்ப்புக்கு உதவும் என்பதாலும் சமஸ்கிருதம் கற்ற சிபி பிரவுனின் தந்தை டேவிட், தன் பிள்ளைகளுக்கும் வீட்டிலேயே கல்வி போதித்தார். கிறிஸ்தவ மத போதனையும் செய்தார். அவ்விதம் அவருடைய பிள்ளைகள் ஹீப்ரு, சிரியன், அராபிக், பார்சி, கிரேக்கம், லத்தீன் மொழிகளில் தொடக்க அறிவினைப் பெற்றனர். சிபி பிரவுனின் அறிவுக் கூர்மையை கவனித்த தந்தை அவருக்கு ஆங்கில இலக்கியமும் கற்றுத் தந்தார். டேவிட்டுக்கு கல்கத்தாவில் சொந்த வீடும் பல்வேறு மொழி நூல்களைக் கொண்ட ஒரு நூலகமும் இருந்தது. தன் மூன்று புதல்வர்களையும் மதபோதனைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது டேவிட்டின் விருப்பம். ஆனால் அவர் 1812  ஜூன் மாதம் உடல்நலம் குன்றி மரணமடைந்தார். அதன் பின்னர் அவர் மனைவி கௌலி தன் குழந்தைகளோடு இங்கிலாந்துக்குத் திரும்பினார். அப்போது சி.பி. பிரவுனுக்கு  பதினான்கு வயது. கிழக்கிந்திய கம்பெனி டேவிட்டின் பிள்ளைகளுக்கு அரசாங்கப் பதவி கொடுக்க விரும்பியது. சிபி பிரவுனும் அவருடைய சகோதரர்களும் லண்டனில் அரசு ஊழியம் செய்யும் குடிமைப் பணிக்கான பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தனர். செய்யப்போகும் வேலை இந்தியாவில் என்பதால் அவர்களுக்கு ஹிந்தியும் சமஸ்கிருதமும் கற்பித்தார்கள். அரசியல், பொருளாதாரம், வரலாறு, நீதித் துறை, போன்றவற்றில் பயிற்சி அளித்தார்கள். தென்னிந்திய மொழிகள் எதுவும் கற்றுத் தரவில்லை. அவ்விதம் நான்காண்டுகள் லண்டனில் படித்தபின் சி.பி. பிரவுனையும் அவருடைய சகோதரர்களையும் 1817 ல் ‘கர்நாடகா’ என்ற கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பினர். சிபி பிரவுனை மதராஸ் குடிமைப் பணிக்கும், அவருடைய சகோதரர்களை  பெங்கால் குடிமைப் பணிக்கும் ஒதுக்கினார்கள்.  

அதனால் சார்லஸ் பிலிப் பிரவுன் 1817 ல் ஆகஸ்ட் நான்காம் தேதி மதராசில் வந்திறங்கினார். அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் குடிமைப் பணிக்கான பயிற்சிக் கல்லூரியில் மூன்றாண்டுகள் பயின்றார். கல்லூரியில் சேர்ந்ததும் அவரைத் தெலுங்கு மொழி கற்கும்படிக் கூறினர். அவருக்கு ‘வெலுகபூடி கோதண்டராம பந்துலு’ தெலுங்கில்  அரிச்சுவடி பயில்வித்தார். அதற்கு நன்றியாக, பிரவுன், தான் வேலையில் சேர்ந்த பிறகு தன் ஆசிரியரை குண்டூர் மாவட்டம் ‘பல்நாடு’ தாலுக்காவில் போலீஸ் துறையில்  ‘ஹெட் ஆமீன்’ பதவியில் அமர்த்தினார். சில காலத்திற்குப் பிறகு பிரவுன், தெலுங்கோடு கூட மராட்டி மொழியும் கற்றார். தெலுங்கு மொழி கற்பதில் நல்ல முன்னேற்றம் காட்டிய பிரவுனுக்கு மாதம் 75 வராகன் அதாவது சுமார் 253 ரூபாய்கள் அதிகமாக கொடுக்கவேண்டும் என்று போர்டு சிபாரிசு செய்தது. பிரவுன் மராட்டியில் சிறப்பாக முன்னேற்றம் பெறவில்லை.

1820 ல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மதராஸ் கவர்னராக இருந்த சர் தாமஸ் மன்ரோ   மாணவர்களை முன்னிட்டு உரையாற்றினர். அது பிரவுனை மிகவும் கவர்ந்தது. உள்ளூர் மொழிகளைக் கற்பது அரசு செயல்பாடுகளுக்கு உதவும் என்பது மட்டுமே பிரயோஜனம் அல்ல என்றும், மக்களின் மொழியை அறிந்து கொள்வதால் மக்களோடு நெருக்கிப் பழகி அவர்களுக்குத் தேவையான முன்னேற்றச் செயல்களைச் செய்ய உதவும் என்றும் மன்ரோ கூறினார். மக்களோடு இணைந்து செயலாற்றினால் சிறப்பாக ஆட்சி புரிய முடியும், மக்களிடம் நல்ல பெயர் எடுக்க முடியும் என்றார். அந்த உரை பிரவுனின் சிந்தனையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரவுனுக்குத் தெலுங்கு மொழியின் மேல் ஆர்வம் வளர்வதற்கு அது வழிகாட்டியது. அந்தந்த தேசத்தவர்களின் தனிப்பட்ட சிறப்புகளைப் புரிந்து கொள்வதற்கு, அந்தந்த தேசத்தில் தங்கி வாழ்வதும். அவர்களுடைய இலக்கியப் படைப்புகளைப் படிப்பதும் அவசியம் என்று உணர்ந்தார். 

பிரவுன் 1820  ஆகஸ்டில் கடப்பாவில் கலெக்டருக்கு உதவியாளராகத் தன் முதல் பணியில் அமர்ந்தார். அந்தக் கலெக்டர் தெலுங்கில் சரளமாகப் பேசகக் கூடியவர். அதைப் பார்த்த பிரவுன் தானும் தெலுங்கை நன்றாகப் பேச வேண்டும் என்று விரும்பினார். தான் சந்தித்தவர்கள் பேசும் தெலுங்கை உன்னிப்பாகக் கவனித்து அவர்களோடு உரையாடி இரண்டாண்டுகளில் கலெக்டரை விட நன்றாகத் தெலுங்கு பேசத் தொடங்கினார் பிரவுன். 

தெலுங்கு மொழியின் மீது பிரவுன் காட்டிய ஆர்வத்தை இரண்டு பிரிவுகளாகப் பார்க்கலாம். முதலாவது, அவர் ஆங்கிலேயர்களுக்காகக் காட்டிய ஆர்வம். இரண்டாவது தெலுங்கு மொழி பேசுபவர்களுக்காகக் காட்டிய ஆர்வம். ஆங்கிலேயர்களுக்காக பிரவுன் தெலுங்கு இலக்கணத்தையும் சொற்களையும் வடிவமைத்துக் கொடுத்தார்.

உள்ளூர் மக்களின் வாழ்க்கை நிலையை ஊன்றிக் கவனிக்கத் தொடங்கிய பிரவுன், கடப்பாவைச் சுற்றியுள்ள பகுதியில் இரண்டு பள்ளிகளைத் தொடங்கினார். தன் சொந்தச் செலவில் ஆசிரியர்களை நியமித்து தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பாடம் கற்பிக்கத் தொடங்கினார். பள்ளியில் படிக்க வந்த பிள்ளைகளுக்கு இலவச உணவு வழங்கினார். கடப்பாவில் உத்தியோகமும் சமூக சேவையும் செய்து வந்த பிரவுனுக்கு வலது கையாகத் துணை நின்ற நாராயணரெட்டி, அந்தப் பள்ளியில் பயின்ற மாணவரே. இரண்டாண்டுகள் பிரவுன் கடப்பாவில் பணி புரிந்தார். 

1822 அக்டோபரில் கடப்பாவிலிருந்து ‘பந்தர்’ (மச்சிலிப்பட்டணம்) ஜில்லா கோர்ட்டுக்கு பதிவாளராகப் பணி மாற்றம் செய்யப்பட்டார். கோர்ட்டில் பயன்படுத்தும் தெலுங்குச் சொற்களையும், உள்ளூர் வாசிகள் பேசும் சொற்களையும் ஒரு நோட்டில் எழுதி வந்தார். உத்தியோக விஷயத்தில் கண்டிப்பானவராக இருந்ததால் சில முறை இன்னலுக்கு உள்ளானார். 1823 ல் பந்தர் நீதிமன்றத்தில் பணி புரிந்த போது ஆறு வாரங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மதராஸ் சென்றார். தெலுங்கு இலக்கியங்களைத் தேடும் பணியை  பிரவுன் விரும்பி ஏற்ற தருணம் அது. ‘ஹிந்து மேனர்ஸ் அண்ட் கஸ்டம்ஸ்’ என்ற நூல் பிரவுனுடைய தேடலுக்கு ஒரு வழிகாட்டியாக மாறியது. பிரவுனை விட நூறாண்டுகளுக்கு முன்பாகவே ‘அபே துபாய்’ என்ற பிரெஞ்ச் மதகுரு பாரத தேசத்திலிருந்து எடுத்துச் சென்ற ‘வேமனா’ செய்யுட்களை மூலமாகக் கொண்டு     வெளியிட்ட நூல் அது. அந்த நூலில் இருந்த ‘வேமனா’ பற்றிய குறிப்புகள் பிரவுனை ஈர்த்தன. அதன் பிறகு சி.பி. பிரவுன் செய்த அறுபதாண்டு கால தெலுங்கு இலக்கியச் சேவைக்கு இது முதல் வித்து என்பது ஆய்வாளர்களின் கருத்து.

(இங்கு வேமனாவைப் பற்றி ஒரு சிறு குறிப்பு: இவர் ஒரு சித்தர். நம் பட்டினத்தாரைப் போல மூட நம்பிக்கைகளை ஏளனம் செய்தும், எளிய தெலுங்கில் தத்துவங்களை உரைத்தும் செய்யுள் இயற்றினார். யோகி, தத்துவ ஞானி, சமூக சீர்திருத்தவாதி, இரும்பைத் தங்கமாக மாற்றிய ரசவாதி, மூலிகை வைத்தியம் செய்த மருத்துவர், ஆசுகவி, நம் அருணகிரிநாதரைப் போல விலைமகள் மோகத்திலிருந்து தடுத்தாட்கொள்ளப்பட்ட பக்தர் என்று பன்முகம் கொண்டவராக மக்கள் வேமனாவைப் போற்றுகின்றனர். வேமனாவின் கவிதைகளில் சிலவற்றையாவது அறியாத ஒரு தெலுங்கர் கூட இருக்கமாட்டார் என்பது உண்மை. தெலுங்கு மொழி கற்கும் மாணவர்களுக்கு முதலில் கற்பிக்கப்படுவது வேமனா செய்யுட்களே என்பது இதன் புகழை வெளிப்படுத்துகிறது).

நம் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதஐயரைப் போலவே, பல தெலுங்கு இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்தார் பிரவுன். விடுமுறை கழிந்து ‘பந்தர்’ திரும்பியதிலிருந்து தன் நீதிமன்ற வேலை முடிந்த பின் தினமும் வேமனா செய்யுட்கள் எங்கே கிடைக்கும் என்று தேடுவதில் கழித்தார். கிடைக்குமிடங்களுக்குச் சிலரை அனுப்பிப் பிரதிகளை வரவழைத்தார். பந்தர் கோர்ட்டில் பணிபுரிந்த ‘திப்பபட்ல வேங்கட சிவ சாஸ்திரி, அத்வைத பிரம்மய்ய சாஸ்திரி’ ஆகிய இருவரும் பிரவுனுக்கு வேமனா செய்யுட்களின் பொருளை அறிய உதவினர். தெலுங்கில் பழங்கால இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்ற விருப்பம் பிரவுனுக்கு இருந்தது. ஆனால், அவற்றின் பதிக்கப்பட்ட தூய பிரதிகள் கிடைக்கவில்லை. கையெழுத்துப் பிரதிகள் கிடைத்தாலும் அவற்றில் நிறைய பாட பேதங்களும் தப்புகளும் தென்பட்டதை உணர்ந்தார்.

ஆரம்ப நாட்களில் பண்டிதர்களோடு பிரவுனுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி ‘இலக்கிய சுய வரலாறு’ என்ற நூலில் ஆர்வமூட்டும் செய்திகளைத் தருகிறார் சி.பி. பிரவுன். அவருக்குக் கற்றுக் கொடுக்க வந்த பண்டிதர்கள் பிரவுன் கூறும் அறிவுரைகளை ஏற்க விரும்பவில்லை. “முதலில் நீங்கள் இலக்கணம் படியுங்கள். அதன் பிறகு செய்யுளுக்குப் பொருள் சொல்கிறோம்” என்றார்கள் பண்டிதர்கள். பிரவுன் அதை ஏற்கவில்லை. “அதற்குக் கால தாமதம் ஆகும். நீங்கள் பொருள் மட்டும் கூறுங்கள். இலக்கணம் தானாகப் புரியும்” என்று பிடிவாதமாக இருந்தார் பிரவுன். 

இவ்விதமான அனுபவங்களோடு ஓராண்டு காலத்தில் 1152 வேமனா செய்யுட்களைச் சேகரித்து அவற்றுக்குப் பதவுரை, பொழிப்புரை எழுதச் செய்தார். அவற்றை பிரவுன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். “கிடைத்த எந்த இரண்டு பிரதிகளிலும் ஒரே விதமான செய்யுள் அமைப்பைக் காண முடியவில்லை. அதுபோன்ற வேறுபாடுகள் இரண்டிலிருந்து எண்ணூறு செய்யுட்கள் வரை தென்பட்டன” என்று “வேமனா பத்யமுலு” என்ற முதல் பதிப்பின் முன்னுரையில் பிரவுன் குறித்துள்ளார். 1829 ல் வெளிவந்த அந்த பதிப்பில் 693 செய்யுட்கள் பிரவுன் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் கிடைக்கின்றன. 

பந்தரிலும் இரண்டு இலவச பள்ளிக்கூடங்களை நிறுவினார். அப்போது அவர் வயது 26 ஆண்டுகளே. செய்யுட்களுக்குப் பொருளறிய முற்பட்டபோது, அப்போது கிடைத்த அகராதிகள் போதவில்லை என்றுணர்த்து புதிதாக தெலுங்கு ஆங்கில நிகண்டுவின் தயாரிப்பையும் அதே காலத்தில் தொடங்கினார். 

1824 நவம்பரில் ராஜமகேந்திரவரத்திற்குப் பணி மாற்றம் பெற்றார். அங்கு கலெக்டருக்கு முதன்மை உதவியாளராகவும், மாஜிஸ்திரேட்டாகவும் பணிபுரிந்தார். ராஜமண்ட்ரியில் இருந்த போது மூவர் எழுதிய (நன்னயா, எல்லாபிரகடா, திக்கனா) ஆந்திர மகாபாரதம் கிடைக்கப்பெற்று அதை வாசிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு செய்யுளுக்கும் எண்ணிக்கை இடச் செய்தார். புதிய சொற்களின் பொருளை உதவிக்கு இருக்கும் அறிஞர்களிடம் கேட்டு அறிந்து ஒரு நோட்டில் எழுதிக் கொண்டார். அவ்வாறு எழுதிச் சேர்த்த சொற்களைக் கொண்டு ‘ப்ரௌண்ய நிகண்டு’ உருவானது. 1826 ல் மீண்டும் கடப்பாவுக்கு பணிமாற்றம் கிடைத்துச் சென்றார். அங்கு மூன்றாண்டுகள் ஜில்லா கோர்ட்டில் பணி புரிந்தார். தான் சேகரித்த நூல்களையும் மொழிபெயர்ப்புகளையும் ‘மதாராஸ் காலேஜ் போர்டு’க்கு பதிப்பிப்பதற்காக அனுப்பினார். அந்த சமயத்தில் ஆயிரம் வராகன் கொடுத்து பதினைந்து ஏக்கர் தோட்டமும் அதன் நடுவில் ஒரு பெரிய மாளிகையும் வாங்கினார். அந்த பங்களாவில் பள்ளிக்கூடம், நூலகம், பண்டிதர்கள் நகலெடுக்கும் இடம் எல்லாம் இருந்தன. அந்த பங்களாவுக்கு ‘பிரவுன் காலேஜ்’ என்று பெயர் ஏற்பட்டது. ஒரு பல்கலைக்கழகத்தில் நடக்க வேண்டிய செயல்பாடுகள் பிரவுன் பங்களாவில் நடந்தன. தெலுங்கு நூல்களின் சீரமைப்புக்காக பிரௌன் பல பண்டிதர்களை நியமித்தார். அவர்கள் பிரௌனுக்கு ஏதாவது கடிதம் எழுத வேண்டி வந்தால், ‘உங்கள் காலேஜ் பண்டிதர்’ என்று குறிப்பிட்டார்கள். ‘பிரௌன் காலேஜ்’ இருந்த இடத்தில் தற்போது ‘சி.பி. பிரௌன் மொழி ஆய்வு மையம்’ உள்ளது. அங்கிருந்து தான் ‘ஜூலூரி அப்பய்யா’ என்பவர் வசு சரித்ரம், மனு சரித்ரம் ஆகியவற்றுக்கு விளக்க உரை எழுதினார். ‘கம்பம் நரசிம்மாசார்யுலு’ என்பவர் ‘ராகவ பாண்டவ்யம்’ என்று நூலுக்கு வியாக்யானம் எழுதினார். ‘பைடிபாட்டி வேங்கட நரசய்யா’ என்பவர் வேமனா செய்யுட்களுக்கு பிழை நீக்கினார். 

பண்டைய நூல் பிரதிகளைச் சேகரிப்பதில் பிரவுன் பலவித வழிமுறைகளைக் கடைப்பிடித்தார். “உள்ளூர் மக்கள் புனிதமானதாகவும் ரகசியமானதாகவும் கருதிய  நூல்களின் பிரதிகளைப் பணத்தால் அன்றி, அன்பையும் கௌரவத்தையும் பகிர்ந்துப் பெற முடிந்தது” என்று பிரவுன் எழுதுகிறார். அவர் 1872 ல் எழுதிய அவருடைய இலக்கிய வாழ்க்கை வரலாற்றில், “ஹிந்துக்கள் தங்களிடம் இருக்கும் கையெழுத்துப் பிரதிகளைக் கடன் கொடுக்கச் சம்மதிப்பதில்லை. அவற்றை விற்பது என்ற சொல்லே அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் சிரமப்பட்டு கடன் பெற்றப் பிரதிகளைச் சொன்ன நேரத்தில் திருப்பிக் கொடுத்தால் தாமாகவே முன்வந்து உதவி புரிவர். எங்கோ மூலையில் இருக்கும் குக்கிராமங்களுக்கு கையெழுத்துப் பிரதிகளுக்காக நான் தெலுங்கில் கடிதம் எழுதி அனுப்புவேன். என் விண்ணப்பங்களை உள்ளூர் நீதிபதிகளின் மூலம் அனுப்புவேன்” என்று பதிவு செய்கிறார் பிரவுன். 

இங்கு இன்னொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும். பிரவுன், தெலுங்கில் இதிகாசங்களை மட்டுமின்றி, புராணங்கள், பிரபந்தங்கள், ‘சதகங்கள்’ (நூறு செய்யுட்கள்), ‘சாட்டு பத்யங்கள்’ (தனிப்பாடல்கள்) போன்ற பலவற்றையும் சேகரித்தார். இருவரிச்  செய்யுட்களைச் சேகரிக்கச் சிறப்பான முயற்சிகள் செய்தார். சிருங்கார பிரபந்தங்களையும் கதை பிரபந்தங்களையும் தேடிச் சேகரித்தார். தன் கண்ணில்பட்ட நாடோடித் தலைவர்களைக் கொண்டு கதைகளைப் பாடச் செய்து அவற்றையும் சேகரித்தார். ஒரு நாடோடிப் பயணியைக் கொண்டு, ‘பால விக்கிரமாதித்தியனின் திருமணக் கதை’யைப் பாடச் சொல்லிக் கேட்டார். அதேபோல் ராமதாசு என்ற கதைப் பாடல் பாடுபவரைத் தன்னோடு இருத்திக் கொண்டு அவருக்குத் தெரிந்த பாடல்களை எல்லாம் எழுதச் செய்து சேகரித்தார். ராமதாசு, ‘பொப்பிலி கதை, கொமர ராமனின் கதை, காமம்மா கதை’ போன்றவற்றைப் பாடினாராம்.

பிரவுன் எந்த ஊரில் பணி புரிந்தாலும் கடப்பா பங்களாவில் முழுமையான இலக்கிய பணிகள் நடந்து வந்தன. 1829 ல் பிரவுன் திருச்சிராப்பள்ளிக்கு பணி மாற்றம் பெற்றார். 

அந்நாட்களில் பண்டிதர்கள் ஓலைச்சுவடிகளை புனிதமாகப் பாதுகாத்து வந்ததால். இயந்திரத்தில் அச்சிடுவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களைச் சம்மதிக்கச் செய்து அச்சிடுவது பிரவுனுக்குச் சிக்கலாக இருந்ததாகக் குறித்துள்ளார். இரண்டாவது முறை பந்தரில் பணிபுரிந்தபோது 1831 ல் ‘ஏனுகுல வீராசுவாமி’ என்பவர் காசியிலிருந்து திரும்பி வருகையில் பந்தரில் சி.பி. பிரவுனைச் சந்தித்தார். (‘ஏனுகுல வீராசுவாமி’ எழுதிய ‘காசி யாத்திரை’ மிகவும் புகழ்பெற்றப் பயண நூல்). பிரவுனுக்கு உதவி புரியவும் அவரிடமிருந்து உதவி பெறவும் நிறைய பேர் ஆர்வம் காட்டி கடிதம் எழுதி வந்தனர். பிரவுன் யாரிடம் பேசினாலும் தெலுங்கு இலக்கியச் சேகரிப்பு பற்றியே இருக்கும். ஏனுகுல வீராஸ்வாமியிடம், “நீங்கள் மதராஸ் சென்றபின் ‘லங்கரு பாப்பையா’ என்பவரிடம் ஸ்கந்த புராணம் ஓலைச்சுவடி இருக்கிறதாம் அவரிடம் பேசி அந்தப் பிரதியை எனக்கு அனுப்ப இயலுமா?” என்று பிரவுன் கேட்டார். 

1833 ல் குண்டூர் ஜில்லாவில் கடுமையான பஞ்சம் நிலவியது அப்போது அங்கு பணியில் இருந்த பிரவுன், பிரிட்டிஷ் அரசாகத்திற்குப் பஞ்சம் குறித்து விளக்கமான அறிக்கை அனுப்பினார். மீண்டும் பந்தரில் பணி புரிந்தபோது அங்கு ஒரு அச்சகம் தொடங்கி பிரிண்டிங் வேலைகளில் ஈடுபட்டார். ‘வசு சரித்ரம்’ நான்கு பக்கங்கள் டம்மி பிரின்ட் செய்து பார்த்தார். அந்த அச்சகத்தை நிர்வகிப்பதற்கு நியமித்த ஆங்கிலேய ஆசாமி செய்த ஊழலால் பதிப்பகத்தை மூட வேண்டி வந்தது. 

1834 ல் பிரவுனுடைய அரசுப் பணியில் ஒரு கரும்புள்ளி விழுந்தது. ஜில்லா ஜட்ஜாக பிரவுன்  வெளியிட்ட தீர்ப்புகள் குறித்து சில ஆங்கிலேயே அதிகாரிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குப் புகார் அளித்து அவரைப் பதவி விலக வைத்தனர். பிரவுனுக்கு டிஸ்மிஸ் உத்தரவு வந்தது. அவர் தன் மீது சுமத்திய குற்றத்திற்கு விவரம் அளித்தபோதும் மேலதிகாரிகள் திருப்தி அடையவில்லை. லண்டனுக்குச் சென்று விண்ணப்பித்துக் கொள்வதற்காக டிசம்பர் மாதம் லண்டனுக்குப் புறப்பட்டார். செலவுக்குப் பணமின்றி அவர் தன் நூலகத்தில் இருந்த சில ஆங்கில நூல்களை விற்கவேண்டி வந்தது. மூன்றாண்டுகள் லண்டனில் கழித்தார். அவர் மீதிருந்த வழக்கை நீக்கி விட்டு மீண்டும் பணி புரிய இந்தியாவுக்கு அனுப்பினர். ஆனால் இந்த முறை அவருக்குப் ‘பெர்சியன் மொழிபெயர்ப்பாளர்’ போன்ற சிறிய பதவிகளை அளித்தனர். பிரவுன் பின்னாட்களில் மதராசில் ஒரு பங்களாவை விலைக்கு வாங்கினார். 

பிரவுன் தன்னிடம் பணி புரிந்த எழுத்தர்களுக்கும், பண்டிதர்களுக்கும் சம்பளம் கொடுத்த  விவரங்களைத் தன் நூலில் குறித்துள்ளார். எழுத்தர்களுக்கு அவர்கள் செய்யும் வேலைக்குத் தகுந்த சம்பளம் கொடுத்தார். இருநூறு செய்யுட்கள் அதாவது எண்ணூறு சொற்கள் எழுதினால் ஒரு ரூபாய் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் அவர்கள் எழுதிய செய்யுட்களைக் கணக்கெடுத்து அத்தனை ரூபாய்கள் கொடுத்து வந்தார். நூல்களைப் பிழை நீக்கிச் செப்பனிட்ட பண்டிதர்களுக்கு மாதம் பதினைந்து ரூபாய் சம்பளம் அளித்தார். குடும்பத்தையும் சொந்த ஊரையும் விட்டு வந்து அவரிடம் பணி புரிந்த பண்டிதர்களுக்குக் கூடுதல் சம்பளம் அளித்தார். சிலருக்கு ஆயிரம் தெலுங்கு செய்யுட்களுக்கு ஐந்து ரூபாயும், ஆயிரம் சமஸ்கிருத சுலோகங்களுக்கு ஆறு ரூபாயும்   கொடுத்தார். 

பிரவுன் தன் சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா வீதம் ஏழைகளுக்கு தானமளித்தார். ஒவ்வொரு மாதமும் ஊனமுற்ற நூறுபேருக்கு பதினைந்து ரூபாய் வீதம் தானமளித்தார். கடன் வாங்கித் திருப்ப முடியாமல் சிறை சென்ற பதினோரு பேருக்கு 355 ரூபாய் கொடுத்து விடுவித்தார். ஒவ்வொரு முறையும் ஐந்நூறு ரூபாய் தானத்திற்கே செலவாகிறது என்று பிரவுன் குறிப்பிடுகிறார். 1846 ல் மதராசில் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக ஒரு நிலையான வேலை கிடைத்த பின் புத்தகப் பதிப்பகப் பணிகள் மேலும் வேகம் பிடித்தன. 

பழங்கால ஓலைச்சுவடிகளைச் சேகரித்த பின் அவற்றைச் செப்பனிட்டுத் தூய பிரதிகளைத் உருவாக்க வேண்டி வருவதை பிரௌன் உணர்ந்தார். ஆனால், பண்டைய நூல்களைச் சீர்செய்து தூய பிரதிகளை எழுதும் பணியில் ஈடுபடாமல் எத்தனை பிரதிகள் கிடைத்தனவோ, அனைத்தையும் தனித்தனியாகக் கணக்கில் கொள்ளவேண்டும் என்று சில நவீன ஆய்வாளர்களின் கருதுகின்றனர். ஆனால், பிரவுன் தனக்குத் தெரிந்த முறைப்படி,  ஓலைச் சுவடிகளைச் சேகரிக்கையில் சான்று கொண்ட பாடங்களோடு கிடைத்த எல்லா படைப்புகளையும் சீர் தூக்கிச் செப்பனிட முயற்சித்தார்.

‘மனு சரித்ரம்’ என்ற நூலை எவ்விதம் சீர் செய்தார் என்பது பற்றி பிரவுன் கூறிய விவரங்களைப் பார்ப்போம். “உதாராணத்திற்கு தெலுங்கு இலக்கியத்தில் சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘ஸ்வரோசிஷ மனு சரித்ர’ என்ற நூல் தொடர்பான சில நிகழ்வுகளை விவரிக்கிறேன். இருப்பதில் ஆதாரத்தோடு கூடிய ஓலைச்சுவடிப் பிரதிகளில் இருந்து காகிதத்தில் ஒரு நகல் எடுத்தெழுதச் செய்து, அந்தப் பக்கங்களில் இடையில் வெள்ளைக் காகிதங்களை வைத்துக் கட்டி, செய்யுட்கள் எல்லாவற்றுக்கும் எண்ணிக்கை   குறிப்பிட்டு அந்தப் பிரதிகளை பைண்டு செய்வித்தேன். அவ்வாறு உள்ளூர் வாசிகளிடமிருந்து எனக்கு பன்னிரெண்டில் இருந்து பதினைந்து பிரதிகள் வரை கடனாகக்  கிடைத்தன. அவற்றுள் சில முழுவதுமாக இருந்தன. ஒரு குமாஸ்தா நான் புதிதாக  எழுதச் செய்த பிரதிகளோடு அமர்ந்திருப்பார். அவர் முன்னால் இருவர் அமர்ந்திருப்பார்கள். அவ்வாறு அவர்களிடம் வந்து சேர்ந்த பழைய ஓலைச் சுவடிப் பிரதிகள் ஐந்தோ, ஆறோ இருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் சந்தஸ் வியாகரணங்களோடு பண்டிதர்களான மூன்று ஆச்சார்யர்கள் அங்கே அருகிலேயே அமர்ந்திருப்பர். மீதி உள்ளவர்களுக்கு தெலுங்கு மட்டுமே தெரியும் ஒவ்வொரு உதவியாளரும் ஒவ்வொரு செய்யுளாகப் படிப்பார். அவ்வாறு பத்து பன்னிரண்டு முறை படிப்பார்கள். ஒவ்வொரு சொல்லையும் குமாஸ்தா எழுதிக் கொள்வார். ஆச்சார்யர்கள் ஒவ்வொரு வரியின் செயல்பாட்டிலும் தம்முடைய தீர்ப்பைக் கூறுவார்கள். அவர்களில் ஒருவர் பாடங்கள் எழுதிய பிரதியை எடுத்து எண்ணிக்கை குறிப்பிட்டு முடிவு செய்த தூய பாடங்களைப் படிப்பார். அவற்றை நகலெடுப்பாளர் எழுதிக் கொள்வார். எழுதப்பட்ட அத்தனை பிரதிகளிலும் சிலவற்றில் மட்டுமே இறுதி மூன்று சொற்களோ வரிகளோ  இருக்கும். மீதி உள்ளவற்றில் பாதியை விடச் சற்று அதிகமான பகுதிகளே கிடைக்கும். ஒரு சொல்லிலோ அல்லது ஒரு செய்யுளிலோ ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், அவை தொடர்பான விவாதத்தில் முடிவான முதல் பாடம் பற்றித் தெலுங்கில் எழுதி வைக்கக் வேண்டும் என்று கட்டளையிட்டேன். அதன் மூலம் வியாக்கியானமும் வடிவமைப்பும் எளிதாக இருக்கும் என்று எண்ணினேன். ஓலைச்சுவடிகளில் எழுத்துக்கள் நுட்பமாக இருந்தால், கண்ணுக்கு சிரமம் ஏற்படும். அதனால் காவியங்களைச் சோதிக்கும் முன்பு அவற்றின் பிரதிகளை ஆங்கிலக் காகிதங்களின் மீது புரியும்படி கையால் எழுதச் செய்தேன். சரியான முடிவை எடுப்பதற்கு வசதியாக ஒவ்வொரு சொல்லுக்கும் எண்ணிக்கை குறிப்பிடச் செய்தேன். மிகவும் பிடித்த செய்யுள் படைப்புகள் சிலவற்றில் சிக்கலான பகுதிகள் இருந்தன. அவற்றைச் சரி செய்வதற்கு தெலுங்கில் விளக்க உரைகள் எழுதச் செய்தேன். என் நிகண்டுவில் இருக்கும் விவரங்களையும் வாசகங்களையும் ஆராயாமல் கடினமான பகுதிகள் குறித்து முடிவெடுக்கக் கூடாதென்று அவர்களிடம் கூறினேன்” என்று பிரவுன், தான் ஓலைச்சுவடிகளைப் பிரதி எடுத்த விதத்தை விளக்கியுள்ளார்.  

‘வைத்யம் அத்வைத பிரம்ம சாஸ்த்ரி’ என்ற ‘பிரம்மய்யா’, வேமனாவின் செய்யுட்களை மிகவும் கவனமாக சரி செய்து விளக்கங்களோடும் யாப்பிலக்கணங்களோடும் (சந்தஸ்) அழகாகவும், குறைகள் இருந்தாலும் இருந்த நிலையிலேயே பக்தி காவியமாக அவற்றைப் பதிப்பித்து வேமனாவின் படைப்புக்களை சாஸ்வதமாக அப்படியே வைக்க வேண்டும் என்று கூறினாராம். 

பண்டைய நூல்களின் சீரமைப்பு பற்றியும், அவற்றின் விளக்கங்கள் பற்றியும் பிரவுன் என்ன நினைத்தார் என்று அறிந்து கொள்வதற்கு அவர் 1834 ம் ஆண்டு ஜனவரி 3 ம் தேதி ‘பைடிபாட்டி வெங்கட நரசய்யா’வுக்கு எழுதிய கடிதம் நமக்கு உதவுகிறது. 

“வேமனாவின் செய்யுட்களைப் பற்றி நீங்கள் இத்தனை தூரம் சிரத்தையோடு முயற்சிக்கிறீர்கள். அது குறித்து எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது கொஞ்சம் தொல்லையானது என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பணி என்பதால் சற்று விரைவாகவே சீர் திருத்தி அனுப்புங்கள். குறைகள், பாட பேதங்கள் கண்ணில் பட்டால் அவற்றின் பக்கத்தில் தாங்கள் சீர்திருத்திய சொல்லையோ அல்லது ‘இது ஐயத்தோடு கூடியது’ என்ற சொல்லையோ எழுதிக் கொண்டு வாருங்கள். “இந்தச் செய்யுள் புரியவில்லை. இதன் பொருளை முடிந்த வரை எழுதியுள்ளேன்” போன்ற சொற்களை எழுதி வாருங்கள். நல்ல செய்யுட்களைத் திருத்த வேண்டி வந்தால் வருத்தப் படவேண்டுமே தவிர தவறாகப் பொருள்படும் செய்யுட்கள் வந்தால் வருத்தப்படத் தேவையில்லை. அதைத் தவிர தற்போது கையெழுத்துப் பிரதியில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் வரிசைப்படி எழுதி வையுங்கள். கையெழுத்துப் பிரதி குற்றங்களற்று இருக்கவேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன். இடையிடையில் வைத்த காகிதங்கள் உடையாமல், கிழியாமல், கீழே விழுந்து விடாமல் திடமாக இருக்கும்படிப் பார்க்கவும். எந்தெந்த பிரிவின் வேலைகள் முடிந்தனவோ, அவை கெடாமல் நீங்களே கவனம் எடுத்துப் பாதுகாப்பாக வைக்கவேண்டும். இந்தக் கையெழுத்துப் பிரதி என்னுடைய முக்கியமான ஆவணமாக உள்ளதால், இது கீழே விழுந்து காணாமல் போனால் ஒரு நாளும் மீண்டும் கிடைக்காது. முடிந்த வரை எடுத்தெழுதிய நூலை மீண்டும் சரி பார்த்துக் கொண்டு, ‘ஜூலூரு அப்பையா சாஸ்திரி’ யைக் கூட கையெழுத்துப் பிரதியை ஒரு முறை பார்க்கும்படியும் சரி திருத்தும்படியும் கேட்டுக்கொண்டு, அதன் பிறகு எனக்கு அனுப்புங்கள். ஆனால் தொலைந்து போகாமல் அதற்கு இன்னொரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டு அனுப்புங்கள். மேலும் சில கடினமான செய்யுட்கள் கிடைத்தால் அவற்றின் பொருள் புரிந்த உடனே உடனுக்குடன் அதில் எழுதி வையுங்கள். இதன் பிறகு சத்துவ குணத்தை விவரிக்கும் நூல்களுக்கு சுலபமான விளக்கவுரைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் தற்போது கஷ்டமான செயுட்களுக்கு மட்டும் நீங்கள் விளக்கம் எழுதினாலும் எனக்கு மகிழ்ச்சியே. அவை மக்களின் வழக்கு மொழியில் இருந்தாலும் சரி. பல நூல்களின் கவியின் உள்ளம் வெளிப்படுவது சிரமமாக இருப்பதால், நீங்கள் சொற்களின் பொருளைக் கட்டாயம் எழுதி வாருங்கள்” என்று எழுதியுள்ளார். இதிலிருந்து பழம்பெரும் நூல்களின் ஓலைச்சுவடிகளைப் பொருள் கொள்வதற்கு பிரவுன் கடைப்பிடித்த வழிமுறையை அறிய முடிகிறது. 

ஆமுக்தமால்யதா, மனு சரித்ரம், உத்தர ராமாயண த்விபத ஹம்ச விம்சதி, சசாங்க விஜயம், சுமதி சதகம் முதலிய நூல்களின் சொற்குறிப்புகளை பிரவுன் தயாரிக்கச் செய்தார். அத்தகைய சொற்குறிப்புகள், அந்தந்த கவிஞர்களின் தனித்தன்மையை அறிவதற்கு வசதி ஏற்படுத்தும் என்றும், பிற கவிஞர்களின் சொற்களோடு ஒப்பிட்டு பார்ப்பதற்குப் பயன்படும் என்றும் பிரவுன் கருதினார். பிரவுனுடைய காலத்தில் அது மிக நவீனமான புதிய சிந்தனை. பிரவுன் காட்டிய வழியில் பயணித்துத் தெலுங்கு அறிஞர்கள் சிலர் பண்டைய நூல்கள் சிலவற்றின் சொற்பயன்பாடுகளுக்குக் குறிப்புகள் பிரசுரித்து பண்டைய படைப்பாளிகளின் எழுத்துக்களை ஆய்ந்துள்ளனர். 

விவரித்துக் கூறும் அறிஞர்களின் முன்பாக அமர்ந்து பண்டைய நூல்களைக் கற்பதென்பது  அனைவருக்கும் இயலாத செயல். பண்டைய படைப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் எல்லோரும் தாமாகவே அவற்றைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு வசதியாக பதவுரை, பொழிப்புரை எழுதி வைக்க வேண்டும் என்றும் பிரவுன் விரும்பினார். புத்தகங்களின் உதவியுடன் தெலுங்கு இலக்கியத்தைப் படித்தறிவதற்கு பிரவுன் அடித்தளம் அமைத்தார்.  

பிரவுன் வடிவமைத்த தெலுங்கு ஆங்கில நிகண்டுவும், ஆங்கிலம் தெலுங்கு நிகண்டுவும்   அவருக்கு நிலையான புகழை எற்படுத்தித் தந்தன. தான் தெலுங்கு கற்றுக் கொள்வதற்காக தெலுங்கு ஆங்கில அகராதியைத் தயாரித்த பிரவுன், அந்த நிகண்டுவின் முன்னுரையில் இவ்விதம் கூறுகிறார். “1820 ல் என்னுடைய கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் அப்போதைய கவர்னர் சர் தாமஸ் மன்ரோ என்னை ஒரு தெலுங்கு ஜில்லாவுக்கு (கடப்பா) அனுப்பினார். அவ்விதம் நான் தெலுங்கு மக்களின் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டி வந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு மக்களிடையே உண்மையில் நான் நீதிபதியாகப் பணி புரிந்தேன். மக்களோடு தொடர்புடைய உரையாடலிலும் பதிலிலும் தினமும் எதிர்கொள்ளும் சொற்களைக் கொண்டு சொற்களஞ்சியத்தை உருவாக்கிக் கொண்டேன். எனக்கு அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்களோடு பழக்கம் இருந்தது. அவர்களில் அறிஞர்கள், அரசர்கள், படிப்பறிவில்லாதவர்கள், கைதிகள் போன்ற பலர் இருந்தார்கள். என் பார்வைக்கு வந்த வர்த்தகர், மருத்துவர், வேட்டைக்காரர், நாவிதர், கவிஞர், ஓவியர் எல்லோருமே எனக்கு ஆசிரியர்களானார்கள். நான் முதலில் மிகவும் இடர்ப்பாடுகளோடு எளிதாகப் புரியும்   படைப்புகளையும், அதன் பிறகு சிறிது சிறிதாகச் சிறந்த படைப்புகளையும் படிக்கத் தொடங்கினேன். அந்த நூல்களில், இலக்கணம் தொடர்பானவையும், தெலுங்கு மரபு மொழிகள், பழமொழிகள் தொடர்பாகவும் எனக்கு நேர்ந்த பல ஐயங்களுக்கு விடைகள்  கிடைத்தன. இதற்கு எனக்குப் பல ஆண்டுகள் பிடித்தன. ஆனால் என் இலக்கை அடைவதற்கு நான் பட்ட சிரமம் பலனளித்தது என்றே நினைக்கிறேன்” என்று கூறுகிறார். 

பிரவுன் வடிவமைத்த தெலுங்கு ஆங்கில அகராதிக்கு முன்பாகவே ‘அலெக்சாண்டர் டங்கன் கேம்பல்’ என்பவர் 1821 ல் தெலுங்கு ஆங்கில அகராதியை வெளியிட்டிருந்தார். பிரவுன் தயாரித்த அகராதியின் பக்கங்களுக்கிடையே வெள்ளைக் காகிதங்களை வைத்துக் கட்டச் செய்தார். ‘டங்கன் கேம்பல்’ தயாரித்த அகராதியில் 14862  சொற்கள் இருந்தன. பிரவுன், 1829 ம் ஆண்டு மே மாதம் தன்னால் புதிதாக 16203  சொற்களைச் சேர்க்க முடிந்தது என்று கூறினார். எட்டு ஆண்டுகளில் நான்கு மடங்கு தெலுங்குச் சொற்களைச் சேகரித்ததாக பிரவுன் தெரிவித்தார். அகராதியின் வடிவமைப்பில் பிரவுனுக்கு ஆதரிசமாக இருந்தது ‘சாமுவேல் ஜான்சன்’ எழுதிய ஆங்கில அகராதி. 

பிரவுனின் தெலுங்கு அகராதியில் காணப்படும் சிறப்பு என்னவென்றால், சந்தர்ப்பத்திற்கேற்ப சொற்பிரயோகங்களை அளிப்பது. உதாரணத்திற்கு, ‘பிந்துவு’ (புள்ளி) என்ற தெலுங்கு சொல்லுக்குப் பொருள் அளிக்கையில் ஒரு சமஸ்கிருத ‘சுபாஷிதம்’  சுலோகத்தை எடுத்துரைக்கிறார். அந்த சுலோகத்தின் பொருள் என்னவென்றால், “சிந்தா’ (கவலை) என்ற சொல்லுக்கும் ‘சிதா’ என்ற சொல்லுக்கும் நடுவில் இருக்கும் ஒரு புள்ளிதான் வேறுபாடு. ‘சிதா’ இறந்த உடலை எரிக்கும். ‘சிந்தா’ உயிரோடிப்பவரை எரிக்கும்”.  

ஒரு சொல்லுக்கு வழக்கத்தில் இருக்கும் பல அர்த்தங்கள் தொடர்பான பல உதாரணங்களை தொகுத்துக் கூறுவது பிரவுன் அகராதியில் இருக்கும் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதற்கு முன் தெலுங்கு நிகண்டுவை வடிவமைத்த ‘டங்கன் கேம்பல்’, ‘மாரிஸ்’ போன்றவர்கள் இதே முறையைக் கடைப்பிடித்தாலும், பிரவுன் கொடுத்த அளவு உதாரணங்களை அளிக்கவில்லை. பிரவுனுடைய தெலுங்கு அகராதியில் மதராஸ்  தெலுங்கு பேசுபவர்களிடம் வாடிக்கையாக இருந்த சொற்கள் தென்படுகின்றன. அதோடு சொற்களின் பொருளை எளிதாகப் புரிந்து கொள்வதற்கு கோட்டுச் சித்திரங்களை பயன்படுத்தினார். அக்காலத்தில் அது புதிய முயற்சி. அந்தக் காலத்தில் தெலுங்கு மொழியை சங்கிலிபோலச் சேர்த்து எழுதும் பழக்கம் இருந்தது. ஆங்கிலம் தெலுங்கு அகராதியில் ‘டு செபரேட்’ என்ற சொல்லுக்குப் பொருள் எழுதுகையில், “உதாரணத்திற்கு, ஆங்கிலத்தில் சொற்களைத் தனித் தனியாக எழுதுவார்கள். தெலுங்கில் சொற்களை சங்கிலி போலச் சேர்த்து எழுதுவார்கள்’ என்று விவரிக்கிறார். பிரவுன் பதிப்பித்த ‘வேமனா செய்யுட்கள், தெலுகு வாசகமு’ முதலான நூல்களில் ஆங்கிலத்தில் இருப்பது போல் தெலுங்குச் சொற்களைத் தனித்தனியாக அமைத்தார். தெலுங்கை ‘சங்கிலிக்கட்டு’ முறையிலிருந்து தனியாக எழுதும் முறைக்கு மாற்றியதில் பிரவுனுக்கும் ஒரு இடம் உண்டு என்று கூறலாம். 

‘ஹம்ச விம்சதி’ நூலில் சில சொற்களுக்கு அறிஞர்கள் பொருள் கூற இயலாமல் போனபோது, அந்தந்த தொழில் செய்பவர்களிடம் கேட்டு அவற்றை அறிந்ததாக பிரவுன் கூறுகிறார். தொழில்களின் அருஞ்சொற்பட்டியின் தேவையை பிரவுன் அறிந்திருந்ததை இது காட்டுகிறது. 

முகலாயர்களின் ஆட்சி நீண்ட காலம் நீடித்ததால் பாரதிய மொழிகளில் பிறநாட்டுச் சொற்கள் நுழைந்தன என்றும் நவீன தெலுங்கு மொழியில் அவ்விதம் பார்சி, அரபு மொழிச் சொற்கள் சேர்ந்தன என்றும் ஆங்கிலேயர் ஆட்சியால் ஆங்கிலப் பதங்கள் சேர்ந்தன என்றும் அடையாளம் கண்ட பிரவுன், ‘மிஸ்ரபாஷா நிகண்டு’ (கலப்பு மொழி அகராதி) ஒன்றைத் தயாரித்தார். அவர் வாழ்ந்த காலத்தில் நீதி மன்றங்களில் விவகாரத்தில் இருந்த மொழிக்கு எடுத்துக்காட்டாக சில வாக்கியங்களைக் குறிப்பிட்டார். அதோடு அந்தத் தலைமுறைக்கும் அடுத்து வரப்போகும் தலைமுறைக்குமாக ஒரு எச்சரிக்கையும் விடுத்தார். “தெலுங்கு பேசும்போதும், எழுதும்போதும் இந்தக் கலப்பு மொழிச் சொற்களைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்” என்பதே அந்த எச்சரிக்கை.  

பிரவுன் தெலுங்கில் ஏதோ சில கடிதங்களைத் தவிர பெரிதாக எதுவும் எழுதவில்லை என்று அவரைப் பற்றி சிலர் விமரிசனம் செய்கின்றனர். ‘எழுதும் வேலைகளை எல்லாம்   அறிஞர்கள் செய்தனர். பிரவுனுக்குப் பெயர் வந்துவிட்டது’ என்று சிலர் கூறுகின்றனர். அகராதிகளின் கையெழுத்துப் பிரதிகளை எடுத்துப் பார்த்தால் பிரவுனுடைய உழைப்பு எத்தனை மகத்தானது என்பது புரியும். பண்டிதர்கள் செய்த முயற்சி என்று பார்த்தால் பிரவுனின் தூண்டுதல் இல்லாமல் அதையெல்லாம் தாமாகவே எந்த பண்டிதரும் செய்ததாகத் தெரியவில்லை.  

கையெழுத்துப் பிரதிகளைச் சேகரித்தது, பண்டிதர்களை ஓரிடத்தில் சேர்த்தது, நகலெடுப்பதற்குத் தேவையான உபகரணங்களை ஏற்பாடு செய்தது எல்லாமே பிரவுனின் உழைப்பு. முடிவான தூய பிரதிகளில் அவற்றைத் தயாரித்த பண்டிதரின் பெயர் இருப்பதைக் காண முடிகிறது. பண்டிதர்களிடம் வேலை வாங்கிக் கொண்டு அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய சம்பளத்தைத் தாமதமாகக் கொடுத்த சந்தர்பங்கள் இருக்கலாமே தவிர அவர்களை ஏமாற்றிய சம்பவம் எங்கும் நிகழவில்லை. 

பிரவுன் கையெழுத்துப் பிரதிகளை எவ்வாறு சீர் செய்தார் என்பது பற்றியும் விமரிசனங்கள் உள்ளன. தமிழ்த் தாத்தா உ.வே.சா. பண்டைய தமிழ் இலக்கியங்களைச் சீர் செய்து செப்பனிட்டுப் பதிப்பித்தார். 1894 ல் புறநானூறு தொடர்பான பதின்மூன்று ஓலைச் சுவடிகளை அவர் பிழை நீக்கிச் சீர் செய்துப் பதிப்பித்தார். அவருடைய வழிமுறையும் பிரவுனுடைய வழிமுறையும் வேறுபடவில்லை. உ.வே.சா மீதோ, பிற இந்திய மொழிகளில் பண்டைய படைப்புகளைச் சீர்செய்து பதிபித்தவர்கள் மீதோ பிரவுனுடைய ஆதிக்கம் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் பிரவுன் கடைப்பிடித்த வழிமுறைகளையே கடைப்பிடித்தனர் என்னும் போது, அதைவிடச் சிறந்த முறை வேறில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பிரவுனைக் குறை கூறுபவர்கள் வேறு மேலான வழிமுறையை எடுத்துரைக்கலாமே என்று சிலர் கருதுகின்றனர்.  

பைபிள் தலைப்புகளைத் தெலுங்கில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற விருப்பமே   பிரவுன் தெலுங்கு கற்றுக் கொள்வதற்கு முக்கியமான காரணம். பண்டிதர்களுக்குப் பொருள் கொடுத்துத் தொடங்கிய மொழிபெயர்ப்பைத் தான் திரும்ப எழுதிப் பார்த்துப் பயின்றதாகவும், பைபிளில் ஒவ்வொரு சொல்லுக்கும் சரியான மொழிபெயர்ப்பை முடிவு  செய்ததாகவும் பிரவுன் தன்னுடைய இலக்கிய வாழ்க்கை வரலாற்றில் கூறுகிறார். ஆனால் பலவித காரணங்களால் பிரவுனுடைய ‘பைபிள் தலைப்பு மொழிபெயர்ப்பு’ நூல்  வெளிச்சத்திற்கு வரவில்லை. 

பிரவுன் தன்னுடைய உத்தியோக வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களைச் சந்தித்தாலும் தெலுங்கு மொழிச் சேவையில் இருந்து விலகவில்லை. பிரவுனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தென்பட்ட குறைகளைக் பெரிதாகக் கொள்ளாமல் அவருடைய உழைப்பை மட்டும் ஆராய்ந்தால், பல விவரங்களை அறிய முடியும். தெலுங்கில் இருக்கும் பல வித பண்டைய படைப்புகளை, அந்தந்த படைப்பாளர்களின் காலத்திலேயே இடம், பிரதேசம்  என்ற காரணங்கள் காட்டாமல் சேகரித்தார். பிரவுனுடைய சேகரிப்பு முறை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது.   . 

தனக்குத் தெலுங்கில் புலமை இல்லை என்றும் தான் ஒரு ஆங்கிலேயன் என்றும்    பிரவுன் உணர்ந்திருந்தார். அவர் தயாரித்த அகராதியில் செயற்கைச் சொற்களையும் அவற்றின் பொருளையும் விலக்கிவிட்டதாகத் தெரிவிக்கிறார். புதிய சொற்களைப் பரப்பும் அதிகாரம் வெளிநாட்டருக்கு இல்லை என்றும், பழக்கத்தில் இருந்த மொழியை மாற்றுவதற்கும் அவற்தைச் சீர் செய்வதற்கும் தன்னால் இயலும் என்று தான் கனவு காணவில்லை என்றும் பிரவுன் தெரிவிக்கிறார்  

1825 ல் தெலுங்கு இலக்கியம் அழிவு நிலையில் இருந்தபோது முப்பதாண்டு காலம் தான் அதற்கு உயிரூட்டியதாகவும், தான் தெலுங்கு மொழியைக் கற்ற போது தெலுங்கு இலக்கியம் ‘மினுக் மினுக் என்று பொந்திலிருந்து எரியும் விளக்கு’ போலிருந்ததாகவும் பிரவுன் கூறியவற்றை அப்படியே ஏற்க இயலாது என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பழந்தெலுங்கு இலக்கியங்களைச் சேகரித்துத் தொகுத்தபோது தன்  கண்ணில்பட்ட ஒவ்வொரு தெலுங்குச் சொல்லையும் அகராதியில் சேர்ந்தார். அதன் மூலம் தெலுங்குச் சொற்களுக்கு சிறப்பான அருஞ்சொற்பட்டி கிடைத்தது. அவ்விதம்  பிரவுன் தெலுங்கு மொழிக்கு அரிய சேவை செய்துள்ளார். மகாபாரதம் ஓலைச்சுவடிகளை சீர் செய்வதற்கு அந்த நாட்களில் 2714 ரூபாய் செலவானதாகத் தெரிவிக்கிறார் பிரவுன். நூல்களைச் சேகரிப்பதிலும் சீர் செய்வதிலும் முப்பதாயிரம் ரூபாய் வரை செலவானதாகக் கூறுகிறார். 

பிரவுன் பணி ஓய்வுக்குப் பிறகு இங்கிலாந்தில் செய்த முயற்சி தொடர்பான கடித ஆதாரங்கள் திருப்பதியிலும், அதற்கு முன்பு செய்த முயற்சிக்கு ஆதாரங்கள் சென்னையிலும் கிடைத்தாலும் பிரவுனின் முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைக்க வேண்டியை மதிப்பான ஆய்வு நடக்கவில்லை என்று சிலர் கருதுகின்றனர்.   

பிரவுன் விடியற்காலையே எழுந்து விடுவார். முடிந்த நாட்களில் குதிரை சவாரி செய்வார். மணம் புரிந்து கொள்ளவில்லை என்பதால் குடும்பப் பொறுப்புகளின் சுமை பிரவுனுக்கு இல்லை என்றே கூற வேண்டும். ஆனால் அவருடைய இங்கிலாந்து பயணத்திற்காகவும் பிற செலவுகளுக்காகவும் அவருடைய தாய் செய்த கடனை அடைத்தார். தினமும் கவிதைகள் எழுதும் வழக்கம் அவருக்கு இருந்தது. ஆனால் அவற்றைப் பின்னர் எரித்து விட்டார். அதில் ஒரே ஒரு கவிதை மட்டும் எஞ்சியது. ஒரு முறை குதிரை மீது செல்கையில் கீழே விழுந்து கை முறிந்ததால், இடது கையால் தெலுங்கு மொழிக்குச் சேவை புரிந்தார். 

சூழ்நிலையைப் பொறுத்து சிக்கனமாகவும் தாராளமாகவும் அவர் இருந்ததாகத் தெரிகிறது. 1833  ல் கடப்பாவில் வறட்சி உருவான போது ஏழைகளுக்குத் தன் செலவில் உணவளிக்கும் ஏற்பாடு செய்தார். “தர்மப் பள்ளிகளை உருவாக்கி அதில் பயிலும் மாணவர்களுக்கு காகிதம், பேனா போன்றவற்றை அளித்தேன்” என்று கூறியுள்ளார். தன்னிடமிருந்த நூல்களைத் தகுதியானவருக்கு இலவசமாகக் கொடுத்தார். தான் சேகரித்த புத்தகக் கட்டுகளை ‘மதராஸ் சாஹித்ய’ சங்கத்திற்கு அன்பளிப்பாக அளித்தார். அந்த நூல்களை ‘மதராஸ் ப்ராச்யுத லிகித புஸ்தக பாண்டாகார’த்தில் பார்க்கலாம். பல நூல்களில் பிரவுன் எழுதிய குறிப்புகளை இன்றும் காண முடிகிறது.  

பிரவுனிடம் உதவி கோரி பலர் அவரிடம் வந்தடைந்தனர். சிலர் நேராக வந்தார்கள் சிலர் விண்ணப்பம் அனுப்பினார்கள். அவ்வாறு தன்னிடம் வந்த விண்ணப்பக் கடிதங்கள் சிலவற்றைப் பிரதி எடுத்து பாதுகாப்பாக வைத்தார். பிறந்தது முதல் பார்வையற்ற ஒரு கவிஞர் பிரௌனைப் புகாழ்ந்து எழுதி அனுப்பிய கவிதை அவற்றுள் ஒன்று. 

அகராதி தயாரிப்புப் பணியில் முழுவதும் ஆழ்ந்திருந்த பிரௌன் அரசாங்க வேலையை ஓய்வாகக் கருதினார் என்றால் தெலுங்கு மொழியின் சேவைக்கு எத்தனை முக்கியத்துவம் அளித்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 

ஐம்பது வயது வரை ஆரோக்கியமாக இருந்த பிரவுன் 1848 ல் காலரா நோயால் பாதிக்கப்பட்டார். 1849 ல் குதிரையிலிருந்து கீழே விழுந்து அடிபட்டார். 1853 ல் ஏற்பட்ட மூளைக் காய்ச்சலால் பக்கவாதம் ஏற்பட்டது. நீலகிரிக்குச் சென்று ஒரு மிஷினரியின் இல்லத்தில் ஓய்வெடுத்தார். திரும்பி வந்த பின் அஜீரணத்தால் கடுமையாக அவதிப்பட்டார். 1854 ல் பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பினார். ஆண்டுக்கு 9௦௦ பவுண்டுகள் அவருக்குப் பென்ஷன் தொகை கிடைத்தது. லண்டனில் இருந்த சகோதரிகள் தம்மோடு வந்து தங்கும்படி அழைத்தனர். லண்டனுக்குத் திரும்புவதற்கு முன்பு ‘இலக்கிய சுய சரிதம்’ எழுதி நண்பர்களுக்குப் படித்துக் காண்பித்தார். இறுதியாக 1855 ல் சிப்பாய்க் கலகத்திற்கு முன்பாகவே இந்தியாவிடமிருந்து விடைபெற்று லண்டனுக்கு நிரந்தரமாகத்  திரும்பிச் சென்றார். அவர் செல்வதற்கு முன் தெலுங்கு இலக்கண நூல்  இரண்டாம் பதித்து நடந்து கொண்டிருந்தது. கடைசி சில பக்கங்களை முடித்து அச்சகத்திற்கு அனுப்பிவிட்டு லண்டன் சென்ற பின் முன்னுரை எழுதி அனுப்புவதாகக் கூறிச் சென்றார். அங்கு சென்ற பின், மேலும் சுமார் முப்பது ஆண்டுகள் 1884 டிசம்பர் 12 ல் மறையும் வரை தெலுங்கு இலக்கிய சேவையில் நாட்களைக் கழித்தார். தெலுங்கு மொழியில் ஐயம் ஏற்பட்டால், இந்தியாவிலிருந்து லண்டனில் இருந்த பிரவுனுக்குக் கடிதம் எழுதி தெளிவு பெறுவது வழக்கமாக இருந்தது. 

ஒரு சுவாரசியமான சம்பவம் பார்ப்போம். 1839 ல் அவர் பணி புரிந்த போது நடந்த ஒரு வழக்கின் ஆவணங்களை லண்டனுக்கு வரவழைத்துப் படித்தார். அந்த வழக்கு ஒரு மந்திரவாதி தொடர்பானது. அவன் வெங்கட சுப்பம்மா என்ற பெண்ணை பலி கொடுத்து மந்திர, தந்திர சக்திகளைப் பெற விரும்பினான். அந்தப் பெண்ணின் பிணத்தை ஒரு ஆலயத்தில் கட்டித் தொங்கவிட்டான். பிரவுன் அந்த வழக்கின் காகிதங்களை ஆராய்ந்து, அதிலிருந்த மந்திர, தந்திரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1864 ல் ‘தெலுகு ஸ்பெல்ஸ்’ என்ற பெயரில் ‘மதராஸ் ஜெர்னல் ஆஃப் லிட்ரெச்சர் அண்ட் சயினிஸ்’ ல் ஒரு கட்டுரையாக வெளிட்டார். தன் உறவுக்காரப் பெண் மரியத்திற்கு அவள் கேட்டபடி தன் எண்பதாவது வயதில் சம்ஸ்கிருதம் கற்றுத் தந்தார். முதுமையடைந்து 1884  நவம்பர் 3 ம் தேதி தன் 86 வது வயதில் உயில் எழுதினார். அதில் நூல்கள், இலக்கியம் ஆகியவையே இடம் பெற்றன. தன் சேமிப்பை சேவகர்களுக்கும் சகோதரி மகன்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார். எல்லாவற்றையும் ஒரு கிரம வரிசை முறையில் முடித்துவிட்டு சி.பி. பிரவுன் 1884  டிசம்பர் 12 அன்று கண் மூடினார். 

தனக்குப் பிறகான தெலுங்கு தலைமுறை மக்களுக்காக பிரவுன் கடுமையாக உழைத்தார் என்று சொல்வது மிகையில்லை. சி.பி. பிரவுன் செய்த தெலுங்கு இலக்கியச் சேவை  சொல்லுக்கு அடங்காதது. ‘நான் ஒரு தெலுங்கன். தெலுங்கு மொழி எனக்குத் தாய் போன்றது. தெலுங்கு இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் அதிகம்’ என்று எண்ணும் ஒவ்வொரு மனிதரும் தினம் நினைத்துக் கை கூப்பி வணங்க வேண்டிய மகா மனிதனாக சி.பி. பிரவுனை நன்றியோடு நினைத்து அவருடைய பிறந்த நாளான்று விழா எடுத்து அவரைப் பற்றி பேசி அவர் நினைவைக் கொண்டாடுகிறார்.    

இந்த இடத்தில் ஆதங்கமான என் எண்ணத்தையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பதவியும், பணமும், இளமையும் இருந்து, தெலுங்கு மொழிமேல் ஆர்வம் கொண்டு சிபி பிரவுன் செய்த சேவையை மறவாமல் இன்றளவும் தெலுங்கு மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ‘தெலுங்கு இலக்கியத்தின் பாதுகாவலர்’ என்று போற்றுகிறார்கள். ஆனால் நம் தமிழ்த் தாத்தா மகநீயர் திரு உ.வே. சாமிநாத ஐயர் மாட்டுவண்டியில் பயணம் செய்து, மரத்தடியில் சமைத்துண்டு, ஓலைச்சுவடிகளைக் கேட்டுப் பெற்று, தானாகவே அவற்றைச் செப்பனிட்டுப் பதிப்பித்து தமிழ் இலக்கியத்தைப் பாதுகாத்தார். அவரைப் போற்றியோ புகழ்ந்தோ பேசுவதற்கு எது நம்மைத் தடுக்கிறது? சி.பி. பிரவுன் பற்றிப் படிக்கும் போதும், எழுதும் போதும் இதே எண்ணம் என் மனத்தை நோகச் செய்து கொண்டே இருந்தது. தமிழ்த் தாத்தாவைத் தலை தாழ்த்திக் கைகூப்பி  வணங்குகிறேன். அவர் இல்லை என்றால் நமக்கு கண்ணகி ஏது? கோவலன் ஏது? அவளுக்குக் கோவில் ஏது? அவர்களை வைத்து வாய் கிழியப் பேசும் நாத்திகவாதிகளுக்கு மேடை ஏது? சிலப்பதிகாரத்திற்கும் மணிமேகலைக்கும் விளக்கவுரை எழுதிப் பிழைக்கும்  அறிஞர்களுக்கு இருப்பு ஏது?


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.