இணையை இழந்த பெண் கிரவுஞ்சப் பறவையின் ஓலம் எழுப்பிய சோகம், சுலோகமாய்ப் பரிணமித்ததை ஆதி கவியைப் பற்றிய புனைவு சொல்கிறது. துயரம் வழிந்து விடாமல் கலை உருவம் பெறுகிற போது, துயரமும் காப்பாற்றப் படுகிறது; கவிதையும் காப்பாற்றப்படுகிறது என்று தோன்றுகிறது. பிரக்ஞை பூர்வமாக இல்லாத, இயல்பான சொல் கவனம் தேவைப்படுகிறது இங்கு. ‘நீ போஜனப் பிரியனாக இருந்தால் உன் தொண்டையிலே கத்தியை வை’- என்ற பழைய ஏற்பாட்டின் நீதிமொழி நினைவுக்கு வருகிறது.
குறிஞ்சித் திணையின் கூடலை மனத் திளைப்புடன் பாடும் கபிலர், மரணத்தின் துயரத்தை அடக்கமான குரலில் பதிவு செய்கிறார். புறநானூற்றில் கையறு நிலைத்துறையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள 41 பாடல்களில் ஒன்பது பாடல்கள் பாரி மறைவுக்குப் பின் கபிலர் இரங்கிப் பாடியவையாக அமைபவை. பெரிதும் பறம்பு மலையை நோக்கிப் பாடிய இந்தப் பாடல்களில், பறம்பு பாரிக்கான குறியீட்டுப் பொருளாக மாறி விடுகிறது. பாரிமகளிரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையை நீங்குகிறார் கபிலர். நினைவிலிருந்து அகலாத பாரியைப் போலப் பறம்பும் கண்ணை விட்டு அகல மறுக்கிறது.
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற
களிறு மென்று இட்ட கவளம் போல,
நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல்
வார் அசும்பு ஒழுகும் முன்றில்,
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.
உணர்ச்சிக் கலப்பற்ற சொற்களில் ஒரு இழப்பும், அதன் அழியாத நினைவும் உணர்த்தப்படுகின்றன. கள் குடித்துக் குடித்துக் கோதுடைய அடி மண்டிகள் அருவியென ஒழுகும் முற்றத்தில், தேரைப் பரிசிலாக வீசும் பாரியின் குன்றம் இங்கு நிற்கிறவர்களுக்கும் தோன்றும். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்க்கின்றவர்களுக்கும் தோன்றும். இந்த அளவில் ஒரு துயர்க் காட்சி சித்திரம் போல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதியமானின் மறைவுக்குப்பின் அவ்வையார் பாடுகிற கையறு நிலைக் கவிதையின் உணர்ச்சிப் பெருக்கம், கபிலரின் இந்தக் கவிதையில் இல்லை. பாரியின் கொடையைக் குறித்த சொல்லைத் தவிர (தேர் வீசு)
பாரி பற்றிய சொல் வேறு இல்லை. ஆனால் பாரியின் நுண்ணுருவம் கவிதை முழுழும் வியாபித்து நிற்கிறது . மறைய மறுப்பவற்றின் துயர் அழுத்தம், மிகக் குறைந்த சொற்களில் கவிதையாக உருவெடுக்கிறது. சிந்தாத கண்ணீர் கவிதையில் உறைந்திருப்பதை உணர முடிகிறது. கவிதை பலவேறுபட்ட வழிகளில் வார்த்தைக்கும் வஸ்துவிற்கும் இடையிலுள்ள தூரத்தை அழிக்க முயல்கிறது என்று அக்தாவியோ பாஸ் சொல்வதாகப் பிரம்மராஜன் குறிப்பிடுகிறார். வார்த்தை – வஸ்து கிடைவெளி அழிப்பைக் கபிலர் கவிதையில் உணர முடிகிறது .

பிரிவுத் துயரத்தை, மிகையுணர்ச்சி இல்லாமல் கலையாக்கும் அற்புதத்தைக் காளிதாசரிடமும் காண்கிறோம், அதிலும் நாடகத்தில். அவருடைய சாகுந்தலம் (தமிழில் மறைமலையடிகளால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ) நாடகத்தின் பிரசித்தி பெற்ற நான்காம் அங்கத்தில் இந்த அற்புதம் நிகழ்கிறது. சகுந்தலை கண்வ முனிவரின் ஆசிரமத்தைப் பிரிந்து துஷ்யந்தனின் அரண்மனைக்குச் செல்ல இருக்கும் தருணம். இந்த அங்கத்தின் நான்கு சிறந்த சுலோகங்களும் காளிதாசரால் கண்வ முனிவருக்கே அளிக்கப்பட்டிருக்கின்றன:
தபோவனத் தருக்களே!
உங்கள் தாகம் தணிப்பதற்கு முன்
தான் நீர் பருக நினையாதவள்;
அலங்கார ஆசை இருத்தும்
இளந்தளிர்களை
உங்கள் பால் உள்ள அன்பால்
கிள்ளச் சகியாதவள்;
நீங்கள் பூத்துப் பிஞ்சுவிடும் காலத்தை
உற்சவ காலமாகக் கொண்டாடுகிறவள்;
அத்தகைய சகுந்தலை பதிவீடு செல்கிறாள்
அவளை வாழ்த்தி வழியனுப்புங்கள்
என்று கண்வ முனிவரின் கவிதை ஆசிரம இயற்கையோடு இசைந்த சகுந்தலையை நம் கண்முன் நிறுந்துகிறது. தோழியர் அநசூயா, பிரியம் வதா – இருவரிடமிருந்தும் விடைபெறும் சகுந்தலை, தன் சகோதரியான வன ஜ்யோத்ஸ்னா என்னும் முல்லைக் கொடியைப் பிரிய மனமின்றிக் கண் கலங்கி நிற்கிறாள் . தருக்களிடமும் கொடிகளிடமும் விடை பெற்றுத் திரும்புகிறவளை, அவள் உடை பற்றி இழுக்கிறது.அவளது வளர்ப்பு மகனான மான்குட்டி. கண்வ முனிவர் மனம் நெகிழ்ந்து சொல்கிறார் :
குழந்தாய்!
கூரிய குசப்புல் குத்திய இந்த மான்குட்டியின்
முகத்தின் மீது இலுப்பெண்ணெய் தடவிப்
புண் ஆற்றினாய் அல்லவா?
சாமையை உன் கையால் ஊட்டி வளர்த்த வளர்ப்பு
மான்குட்டி உன் விழியை விட்டு நீங்காது
( இந்த மொழிபெயர்ப்புகள் திரு. க. சந்தானம் செய்தவை)
இவையெல்லாம் சகுந்தலையின் துயரை மிகுவித்துக் கொண்டே செல்கிறது. இறுதியில் வளர்ப்புத் தந்தை கண்வ முனிவரை ஆலிங்கனம் செய்து கொண்டு, அவருடைய இளைத்திருக்கும் தேகம் குறித்துக் கலங்கும் போது:
பர்ணசாலையின் வாசலில் நீ பலியிட்ட
புல்லரிசி முளைத்திருப்பதைப் பார்க்கும் போதெல்லாம்
என் துயரம் எப்படிக் குறையும் ?
என்று தானும் கலங்குகிறார் கண்வர். உணர்ச்சிமயமான கணங்களில் மிகை தவிர்த்து அவலத்தின் கூர் முனையை இயல்பாகக் கடக்கிறார் காளிதாசர், கபிலரைப் போல.
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
