அந்தரங்கம் புனிதமானது 

டுத்த திங்கள், கடிகார மணியில் ஒன்று அதிகரித்து, மாலை ஆறு மணியைத் தொட இருக்கும்போது இவ்வளவு இருட்டாக இராது என்கிற எண்ணத்துடன் வாசற்கதவை அனிகா (டாக்டர் அனிகா வேல், மனநல மருத்துவர்) எட்டியபோது, அதைத்திறந்து நின்றவனை அடையாளம் கண்டு ஆச்சரியம் எதிர்பார்ப்பு கலந்த புன்னகையைத் தவழவிட்டாள். 

“நான் வேலை முடிந்து போகும்போது வருவதே உனக்கு வழக்கமாகப் போய்விட்டது, ப்ரஷாந்த்!” என்றாள் போலி அலுப்புடன். 

“இது இரண்டாவது தடவை தானே. மூன்றாவது என்றால் நீ அதைச் சொல்லலாம்.” 

கடந்துபோன நான்கு ஆண்டுகளில், ப்ரஷாந்த்துக்கு தலைமயிரின் அடர்த்தி குறைந்து, கால் சென்டிமீட்டர் தாடி வளர்ந்து முகத்தில் முதிர்ச்சி.

அவன் அனிகாவிடம் ஆலோசனை கேட்டு ஒரு முக்கியமான தீர்மானம் எடுத்த பிறகு, அவள் மருத்துவர் என்பதுடன் அந்தரங்க நண்பர் என்ற உரிமையில் வாழ்க்கையின் சில முக்கியமான கட்டங்களில் அவளுடன் தொடர்பு கொண்டிருக்கிறான். 

– – உலகப்புகழ் பெற்ற கார்னெகி-மெலன் பல்கலையின் செயற்கை மூளைப் பிரிவில் நான் இப்போது ஆராய்ச்சி மாணவன் – –  

(- – உன்னால் அவர்களுக்குத் தான் பெருமை. அனிகா  – -) 

– – நிவேதிதாவுக்கு சம்மதம் – – மோதிர விரல்களுடன் இருவரின் படம். 

(- – நீண்ட மகிழ்ச்சியான திருமண வாழ்வுக்கு வாழ்த்துக்கள்! அனிகா – -) 

– – நிவேதிதாவும் நானும் சேர்ந்து எழுதிய கட்டுரை. ‘டெய்லரிஸ்ம் தொழிலாளர்களின் அவமதிப்பு’ – – 

(- – இருவருக்குள் என்ன ஒற்றுமை! – -) 

ஒரு மாதத்திற்கு முன்.

– – பிஎச்.டி.யின் எல்லா கட்டங்களையும் தாண்டியாகிவிட்டது. நிவேதிதா பிட்(பிட்ஸ்பர்க் பல்கலை)டில் ஜே.டி. முடித்துவிட்டாள். அவள் ஆராய்ச்சியின் முதல் கட்ட முடிவுகள் ‘வேஜஸ் அன்ட் வொர்கர்ஸி’ல் வெளியாகி இருக்கிறது – -) 

(- – இரண்டு ஜே! நிவேதிதாவின் ‘தொழிலாளர்களிடையே வருமான ஏற்றதாழ்வுகளை வளர்ப்பதில் நவீன வழிகள்’ பற்றிய முடிவான அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கிறேன். – -)

அவனை உள்ளே அழைத்துவந்தாள். உட்காருவதற்கு முன், 

“என்ன சாப்பிடுகிறாய்?” 

“இன்னும் சிறிது நேரத்தில் நிவேதிதா இங்கே வந்து நம்மைப் பக்கத்தில் இருக்கும் ஆந்திரா அட்ராக்ஷனுக்குக் கூட்டிப்போவாள். அதற்கு முன் சில சொந்த விஷயங்களை…”  

“தாராளமாகப் பேசலாம்.” 

வட்ட மேஜைக்கு எதிர்ப்புறங்களில் உட்கார்ந்ததும், 

“முதலில்… ஆறு மாதத்தில் எங்கள் இரவுத் தூக்கம் கெடப்போகிறது.” 

“சந்தோஷம். உன் தந்தை புத்தகங்கள் படிப்பதைக் குறைக்க வேண்டி இருக்கும்.” 

“நான் இப்போது வேலை தேடுகிறேன்.” 

“குட் லக்!” 

“அங்கே தான் தகராறு.”

“ஏன்?” 

“லிங்க்ட்-இன்னில் என் பட்டங்களையும் தொழில் அனுபவங்களையும் நான் பெரிது படுத்தினாலும் – ‘மேக்னாஏஐ’ நிறுவனத்தில் பொறுப்பைக் கைவிட்டவன், தொழிலாளர்களின் வேலைத்திறனை அதிகப்படுத்தும் விஞ்ஞான முறைகளில் நம்பிக்கை இல்லாதவன் – என்ற விவரங்களை நான் மறைப்பது சாத்தியம் இல்லை.” 

“உண்மை தான்.” 

அதனால் ஆமெஸான், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் இங்கெல்லாம் நுழைய அவனுக்குத் தகுதி இல்லை. 

அனிகா முந்தைய சந்திப்பின் இறுதிப்பகுதியை நினைத்தாள். நேரடியாக இதைச்செய் என்று அறிவுரை தராவிட்டாலும், மனசாட்சிக்கு ஒப்புதல் இல்லாத ப்ராஜக்ட்டில் இருந்து விலகிக்கொள்ள அவன் எடுத்த முடிவில் அவளுக்கும் ஒரு பங்கு. அப்போது அது பெருமிதத்தைக் கொடுத்தது. இப்போது? 

“எதெற்கெடுத்தாலும் ஏஐ அடிபடும் இச்சமயத்தில்…” 

“வளரும் சின்ன நிறுவனம் ஒன்றில் கிட்டத்தட்ட…” என்று நிறுத்தினான். 

தொலைவழியில், அதைத் தொடர்ந்து நேரில் பேசி, அவனும் நிர்வாகமும் ஒத்துப்போனாலும் வேலையை ஏற்குமுன் மனதில் ஒரு நெருடல். முகத்தில் வெளிப்பட்டது.

“என்னைப் பெரிய நிறுவனங்கள் சீந்தவில்லை. முதலாளிகளுக்குச் சாதகமாக கூலி நிர்ணயிக்கும் அல்க்ரித்ம் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர நிவேதிதா இடம் தேடுகிறாள். எங்களுக்குக் குழந்தை பிறக்கப்போகிறது.” 

சம்பந்தம் இல்லாத, தகவல் வெளியில் பலருக்குத் தெரிந்த இவ்விவரங்களைக் கூட்டி எடைபோட்டு நிறைய டாலர்களைக் கழித்து, அவனுடைய நிதி நிலைமையில் அவன் மறுக்கமாட்டான் என்கிற நிச்சயத்தில்…    

“அவர்கள் தரும் சன்மானம் என் தகுதிக்கு மிகவும் குறைச்சல்.” 

அந்த ஒரு காரணம் தான் என்றால் ப்ரஷாந்த் அவளைத் தேடி வந்திருக்க மாட்டான். வேலையின் மற்ற விவரங்களை வெளியிடுவதற்கு முன்னுரையாக, 

“போன தடவை செயற்கை மூளையினால் உன் தொழிலுக்கு ஆபத்து வரலாம் என எச்சரித்தேன்.”  

“ஞாபகம் இருக்கிறது.”  

“இப்போது அது நிஜமாகவே நடக்கப்போகிறது. ஒரு சந்திப்பிற்கு பதினைந்து டாலர் அல்லது ஆண்டு முழுவதற்கும் நூறு டாலர். எப்போது வேண்டுமானாலும் அதை அழைத்துப் பேசலாம். மனிதர்களைப் போல குற்றம் குறை சொல்லாது என்பதால் தைரியமாக மனதைத் திறக்கலாம். உரையாடல்களின் ரகசியங்கள் காப்பாற்றப்படும்.”  

“மனிதர்களின் விவரங்களை விலைகொடுத்து வாங்க தகவல் தரகர்கள் இருக்கும் போது கடைசியாக நீ சொன்னதில் எனக்கு நம்பிக்கை கிடையாது.” 

“அதனால் ஆபத்து குறைவு என வைத்துக்கொண்டு…”

அலைபேசியில் ஒரு வரைபடத்தை வரவழைத்து அவளிடம் நீட்டினான். படத்தின் விளக்கமாக… 

வாழ்க்கையில் விரக்தி, எதிர்காலம் பற்றிய கவலை அல்லது உணவில் ஒழுங்கீனம் – இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ‘ஷ்ரிங்க்பாட்’டிடம் பேசியதில், சராசரியாக 30 சதம் பேர் குணம் அடைந்தார்கள். 

“இது நியு ஹாம்ப்ஷர் பல்கலை ஒன்றில் நடந்த ஆராய்ச்சி” என்று அதன் கனத்தை பெரிதுபடுத்தினான். 

ப்ரஷாந்த் சென்ற முறை அனிகாவை சந்திக்க வந்த தினத்தில் சில சுவாரசியமான பிரச்சினைகளை  அவள் தீர்த்திருந்தாள். இந்த தடவையும் அப்படியே. அவனிடம் ஏதோ ஒரு மந்திர சக்தி! 

—–

பிற்பகல் தூக்கத்தை விரட்ட ஒரு கே-கப் வனிலா காப்பி. அதை அனிகா அனுபவித்துக் குடித்து முடித்ததும், 

மேகன் மான்ட்டெனா. 

ப்ரென்ட்வுட் மேனிலைப்பள்ளி மாணவி. ஆனால் படிப்பை முடிப்பதற்குமுன்பே பத்தொன்பதைத் தொடப்போவதால் தனியாக வந்திருக்கிறாள். அனிகா ஏறிட்டுப் பார்க்கும் உயரம். புறங்கையால் அவளைத் தரையில் தள்ளும் அளவுக்கு உறுதியான உடல். 

சம்பிரதாய வார்த்தைகளுக்குப் பின், 

“நான் சாஃப்ட் பால் குழுவில் பந்தை எறிகிறவள்.” 

பொதுவாகப் பெண்கள் மட்டுமே ஆடும் அதை அனிகா பார்த்திருக்கிறாள். குழுவில் அந்த இடத்துக்கு அவள் மிகப்பொருத்தம்.  

“நான் எப்படி உதவ முடியும்?” 

பிரச்சினையை முன்வைக்காமல், 

“அந்தரங்கம் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” 

“நாம் சமுதாயப் பிராணிகள், அத்துடன் சமூகத்தின் ஒரு அங்கம் என்றாலும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் அவசியம். ஆதிமக்களின் நெருக்கமான குழுக்களில் கூட ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் குறுக்கிடாத மரக்கிளையோ இல்லை ஆற்றங்கரையோ உண்டு என்று படித்திருக்கிறேன். விலங்குகள் தங்களைச் சுற்றி ஒரு நிலப்பரப்பில் கற்பனை எல்லைக்கோடு வரைந்து அதற்குள் சுதந்திரமாக அலைவது போல நம் அந்தரங்கம். அதில் போலித்தனம் கலவாத நிஜமான உருவத்துடன் நாம் நடமாடலாம். ஆத்ம சோதனை செய்யலாம். நமக்கு என்று சொல்லிக்கொள்ள ஒரு தனி இடம் இல்லாத நவீன உலகில் நம் அந்தரங்கம் ஒன்றுதான் நம் ராஜ்ஜியம். அதில் மற்றவர்கள் புகுவதற்கு அதிகாரம் இல்லை.” 

“அந்தரங்கம் இருவருக்கு சொந்தமாக இருக்கலாம், இல்லையா?”  

“நிச்சயமாக. அப்போது அதன் சில விதிகள் மாறுபடும்.” 

“நீ இவ்வளவு யோசித்து வைத்திருக்கிறாயே, அனிகா!” 

“என் தொழிலில் அது புனிதமானது. இங்கே பேசப்படும் வார்த்தைகள் இந்த அறையை விட்டு வெளியே போகாது. தப்பித்தவறி விட்னியின் ஒரு காதில் விழுந்தாலும் அவள் அதை இன்னொரு காது வழியாகத் தள்ளிவிடுவாள். நம் உரையாடல் பதிவாகும். ஆனால் அதன் முக்கியமான பகுதிகளை நான் காகிதத்தில் எழுதிக்கொண்டு மொத்தத்தையும் அழித்துவிடுவேன். உன் குழு சாஃப்ட் பால் ஆடுவதை நான் பார்க்க வந்தால், இல்லை ஒரு விருந்தில் நாம் சந்திக்க நேரிட்டால், உன்னைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டேன். சொல்ல வந்ததை, மற்றவர்களிடம் சொல்ல விரும்பாததை நீ தைரியமாக என்னிடம் சொல்லலாம். நானும் என் அறிவு மற்றும் அனுபவம் இரண்டின் அடிப்படையில் எந்தவித அச்சமும் இல்லாமல் உனக்கு ஆலோசனை தரலாம்.” 

சிறு தயக்கத்துக்குப் பிறகு,  

“நான்கு மாதங்களுக்கு முன் எங்கள் கோச்சுக்கு மாரடைப்பு. எதிர்பாராத அந்த இழப்பினால் இரண்டாம் மட்ட பேஸ்பால் வட்டத்தில் பந்து வீசிய முன்னாள் மாணவனைத் தாற்காலிக கோச்சாகத் தேர்ந்தெடுத்தார்கள். அவன் தனிப்பட்ட முறையில் எனக்குப் பயிற்சி அளித்து…” 

“உன் வீச்சுத் திறமையை வளர்த்து…” 

பரவசப் புன்னகையை மறைக்க முடியாமல் மேகன் திணற… 

“நீ கேட்க விரும்பும் கேள்விக்கு நானே பதில் சொல்கிறேன். உங்கள் இருவரின் அந்தரங்கத்தில் தலையிட அவன் மற்றும் உன் குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை.”  

குரலின் வறட்சியில் அவள் அமைதி அடைந்து, 

“தாங்க்ஸ்! அனிகா! எனக்கு மன நிம்மதி.” 

பிரச்சினை தீர்ந்தது. 

“என் அறிவுரை இன்னும் முடியவில்லை.”  

இன்னும் என்ன இருக்கிறது? 

“குழுவின் அடுத்த ஆட்டம்?”   

“நாளை ரேவன்வுட் மேனிலைப் பள்ளியுடன். அதிலிருந்து சாஃப்ட் பால் சீஸன் ஆரம்பிக்கிறது.”  

“பந்து வீச்சிற்கு குழுவில் உன்னுடன் சேர்த்து…”  

“நான்கு பேர். யாரும் என் அளவுக்கு இல்லை.”  

“கோச் உனக்குப் பதில் வேறொருவரைத் தயார் செய்ய வேண்டும்” என்றாள் அனிகா மிகச் சாதாரண குரலில்.   

“ஏன்? எதற்கு?” வேகமாகத் தெரித்தன. 

‘நீ’யின் மேல் அழுத்தம் கொடுத்து, “குழுவில் இருந்து நீ விலகப்போகிறாய். இந்த கசப்பான அறிவுரையை வருத்தத்துடன் தான் நான் கொடுக்கிறேன்.”  

“ஏன்? எதற்கு?” இந்த தடவை கேள்விகள் கிட்டத்தட்ட அழுகைக்கே கொண்டுசென்றன. 

“நம் அந்தரங்கத்தை பிறர் மதிக்க வேண்டும் என்றால் அது அவர்களைப் பாதிக்காமல் இருப்பதும் நல்லது” என்று தீர்ப்பு போல ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தாள்.  

மேகன் யோசனையில் ஆழ்ந்தாள். வாதத்தை வலுப்படுத்த அனிகா, 

“எனக்குத் தெரிந்த ஒரு கல்லூரி கூடைப்பந்து தலைமை கோச். குழுவின் ஒரு ஆட்டக்காரிக்கும் அவளுக்கும் ஓரினக் கவர்ச்சி. அது உறவாக நிலைப்பட்டதும் அவள் தன் பதவியின் பொறுப்புகளை உதவியாளரிடம் ஒப்படைத்துவிட்டு புதிய ஆட்டக்காரர்களுக்கு வலை வீசும் கீழ் நிலைக்கு தன்னைத் தாழ்த்திக்கொண்டாள். காரணம் கேட்டபோது, ‘எங்கள் உறவு குழுவில் மற்றவர்களையும் ஆட்டங்களின் போக்கையும் நிச்சயம் பாதிக்கும். அது நியாயம் அல்ல’ என்றாள்.”  

“நான் எப்படி விலக முடியும்? மாநிலம் முழுவதற்குமான சாம்ப்பியன்ஷிப் ஜெயிக்க இந்த ஆண்டு எங்களுக்கு அருமையான வாய்ப்பு” என்றாள் சோக முகத்துடன். அவள் இல்லை என்றால் அது தவறிப் போய்விடும்.

“வெற்றி தோல்விக்கும் மேலாக விளையாட்டில் எத்தனையோ இருக்கின்றன. ஒவ்வொரு ஆட்டக்காரரும் எந்த அளவுக்கு முன்னேறினார், எப்படி ஒருமுகமாகக் குழு ஆடியது, ஒரு சில அங்கத்தினர்கள் எந்த விதத்தில் நீண்ட கால நட்பை வளர்த்துக்கொண்டார்கள்…”     

“திடீரென்று விலகினால் வதந்தி கிளம்பாதா?” 

“அரசியல்வாதிகள் இருக்கும்போது உனக்கு எதற்கு அந்தக் கவலை? இந்த அத்தியாயத்தை இத்துடன் முடித்துவிட்டு கல்லூரிக்குத் தயார் செய்!” 

நீண்ட யோசனைக்குப் பிறகு. 

“கல்லூரிக்கு விளையாட டென்னஸி மற்றும் ட்யுக் இரண்டில் இருந்தும் அழைப்பு இருக்கிறது. ட்யுக் போக முடிவெடுத்து படிப்பில் கவனம் வைப்பதைக் காரணம் காட்டி விலகிவிடுகிறேன். எப்படி?” 

“புத்திசாலித்தனமான தீர்மானம். பத்து ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்த்தால் இது எத்தனை குழப்பங்களைத் தவிர்த்தது என்று தெரியவரும்.” 

“நீ ஒரு டாஸ்க் மாஸ்டர் என்று கேள்விப்பட்டேன். உண்மை தான்.” 

அனிகா பெருமிதத்துடன் புன்னகைத்தாள். 

“எவ்வழியில் பயணித்தாலும் உன் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்க வாழ்த்துக்கள்!”  

பெட்ஸி கார்ட்டரின் முந்தைய சந்திப்பிற்கும் அன்றைய சாதாரண நேர வருகைக்கும் எத்தனை வித்தியாசம்! 

எட்டு மாதங்களுக்கு முன். நான்கு நாற்பதுக்கே ஆலோசனைகள் முடிந்துவிட்டன. ஐந்து நிமிட அமைதியான ஓய்வுக்குப் பிறகு அனிகா ஆலோசக அறையில் இருந்து வெளியே வந்தபோது விட்னி ஒரு காகிதத்துண்டைக் கொடுத்துவிட்டு வேலை தினம் முடிந்தது என விடைபெற்றாள். அதில், அங்கே காத்திருந்த பெண்ணின் விவரங்கள்.  

கொலம்பியா சமுதாயக் கல்லூரியில் மருத்துவத்துக்குத் தயார் செய்யும் வகுப்புகள் முடித்துவிட்டாள். உடல் பருமன் சமூக வாழ்க்கையையும் வேலை வாய்ப்புகளையும் பாதிப்பது அவள் குறை. 

“நீ… பெட்ஸி… உள்ளே வரலாம்.”  

“இன்னும் ஐந்து மணி ஆகவில்லையே.”  

இலவச ஆலோசக நேரத்துக்குக் காத்திருக்கிறாள். சராசரி உயரம். அந்த முகத்தையும் கூந்தலையும் வேறொரு உடலில் பொருத்தினால். 

“பரவாயில்லை. நியுயார்க்கில் ஐந்தாகிவிட்டது.” 

ஆலோசக அறையில் உட்கார்ந்தார்கள். 

அதிகாரியின் பார்வை பட்ட தொழிலாளியின் அச்சம்.  

“நீ என்னை சிநேகிதியாக பாவிக்க வேண்டும்.” 

கூனலை நிமித்தி, 

“மருத்துவத் துறையில் படிப்பைத் தொடருமுன் பணம் சேர்க்க வேலை தேடுகிறேன். கிடைக்கவில்லை.” 

அனிகா பார்வையில் வருத்தம் தெரிவித்தாள். 

“விட்னியிடம் நான் தெரிவிக்காத ஒரு தகவல்.” 

“அது?” 

“சென்ற மாதம் பதினைந்து டாலருக்கு ஷ்ரிங்க்-பாட்.  அலைபேசியில் அதனுடன் நடந்த உரையாடல். காட்டட்டுமா?” 

“ம்ம். என் போட்டியை நான் தெரிந்துகொள்ள வேண்டாமா?” 

> பெட்ஸி! நான் ஷ்ரிங்க்-பாட். பிரச்சினை எதுவானாலும் தைரியமாகச் சொல்லலாம். 

> தாங்க்ஸ்! எனக்கு சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லை. 

> நீயே உன்னைத் தாழ்வாக நினைக்கக் கூடாது! 

> என் படத்தை அனுப்புகிறேன். நீ பார்த்துச் சொல்! 

> ம்ம்.. கொஞ்சம் பருமன். முதலில், உன் சாப்பாட்டுப் பழக்கம். வீகன்.. வெஜிடேரியன்.. 

> ஊகும். தெற்கத்திய உணவு.  

> எதையும் எண்ணெயில் பொறித்து… நிறைய கார்ப். 

> கரெக்ட். 

> யோசிக்க வேண்டிய விஷயம். 

> என் உருவம் என் சமூக தொழில் வாழ்க்கையைப் பாதிப்பதாக நினைக்கிறேன்.  

> உண்மை தான். மக்களுடன் நேரடியாகப் பழகும் வேலைகளுக்கு பொருத்தமான உடல் அமைப்பு முக்கியம். நீ நெடுநேரம் நின்று வேலை செய்ய முடியாது என்று சிலர் நினைக்கலாம். கவலைப்படாதே! நீ விரும்பும் உருவத்தைப் பெற எளிய வழிகள். கீட்டோ யட். நான்கு வாரங்களில் இருபது பவுன்ட் குறைந்துவிடும். மறுபடி எடை அதிகரிக்காமல் இருக்க ‘வீகோவி’. அதன் ப்ரிஸ்க்ரிப்ஷனுக்கு தகவல் அனுப்புகிறேன். 

> தாங்க்ஸ்! 

> குட் லக்!  

“அடுத்த நாளே பக்கத்து வால்க்ரீன்ஸீக்கு மருந்துச்சீட்டு அனுப்பப்பட்டது. என் மருத்துவ இன்ஷுரன்ஸ் அதற்குப் பணம் தர மறுத்ததால் அதை வாங்கவில்லை.” 

கீட்டோ உணவுவகைகளின் அதிகப்படி விலை அவளுக்கு எட்டாத உயரத்தில்.   

“உடற்பயிற்சி ஆசிரியை பென்னி நியுமன்னிடம் பேசியபோது உன்னைப் பற்றித் தெரியவந்தது.” 

அதனால் அவள் இப்போது இங்கே இந்நேரத்தில்.  

இந்த வயதில் ஒன்று, இயற்கைக்கு ஒத்துவராத ஒல்லி உடலுக்காக பட்டினி, அல்லது துணை கிடைக்காத, இல்லை கைவிட்ட ஏமாற்றத்தை மறக்க சத்தற்ற உணவுப்பொருட்களின் மேல் மோகம்.  

பின்னது என்றால் மறைமுகமாக. 

“எப்போதிருந்து இந்தப் பிரச்சினை?”

பெட்ஸி மனதில் பின்னோக்கி நடந்து, 

“மேனிலைப்பள்ளியில் கடைசி வருஷம்…”  

“எனக்கும் அதே சமயத்தில் மனக்குறையினால் வந்த இதே பிரச்சினை. பன்னிரண்டு வயது வரை இந்தியாவில் நான் என் பாட்டியின் அன்பு மழையில் வளர்ந்தேன். விதவிதமாக நான் கேட்டதையெல்லாம் சமைத்துக் கொடுப்பாள். அவள் இறந்த செய்தி கேட்டு ஆழ்துயரம். நான் சரியான நேரத்தில் சாப்பிடாததால் ஒரு மாதத்தில் இப்படி ஆனேன்” என்று சுண்டு விரலை நீட்டினாள். “அதனால் எனக்கோ என் பாட்டியின் ஆத்மாவுக்கோ எந்த லாபமும் இல்லை என்கிற ஞானோதயம் வந்ததும் உணவைத் தொடுவதற்கு முன் அவளுக்கு ஒரு நன்றி அஞ்சலி.”  

“அனிகா! நீ ஜீனியஸ்.” 

“தாங்க்ஸ்.” 

“நிஜமாகத்தான் சொல்கிறேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது எனக்கும் பாட்டி இறந்ததினால் குளறுபடி ஆரம்பித்தது என நினைக்கிறேன். இழப்பினால் வந்த வருத்தம் காரணம் இல்லை. அவளை எனக்கு அதிகம் தெரியாது. கிறிஸ்மஸ் சமயங்களில் பார்த்தது தான். மிஸிசிப்பியில் அவள் வசித்த வீட்டிற்குப் போய் என் தந்தை அவளுடைய சாமான்களில் தேவையானவற்றை மட்டும் எடுத்துவந்தார். அதில் ஒரு பழைய புகைப்படம். அதைப் பார்த்ததுமே எனக்கு உண்டான அதிர்ச்சி, அவமானம், ஆழ்துயரம்.”  

அலைபேசியில் அதை வரவழைத்து அனிகா முன் நீட்டினாள். ஆரவாரிக்கும் தெளிவாகத் தெரியாத கும்பலுக்கு முன் அன்புடன் ஒரு பெண்ணைக் கையில் அணைத்து புன்னகை காட்டும் ஆண். 

“இவர்கள் என் பாட்டியின் பெற்றோர்கள்.” 

எண்களைக் கூட்டி முப்பதுகளில் எடுக்கப்பட்டு இருக்கலாம். 

“உனக்கும் அத்துன்பத்தைத் தர வேண்டாம் என படத்தின் இன்னொரு பகுதியை வெட்டிவிட்டேன்.” குரல் கரகரக்க, “அதில்.. அதில்.. மரத்தில் தொங்கி சதை தெரிய எரியும்…” சொல்லி முடிக்குமுன் கண்ணீர் வந்தது. 

உயர் மட்ட யு.எஸ். வரலாறு வகுப்பை மேனிலைப்பள்ளியில் எடுத்த அனிகாவுக்கு உடனே புரிந்தது. 

“ஒரு மனிதனைத் துன்புறுத்திக் கொல்ல எப்படி மனம் வந்தது?” 

கட்டுக்கடங்காமல் அழுதாள். அது ஓய்ந்ததும் அனிகா நீட்டிய காகிதத்துண்டினால் கண்களைத் துடைத்துவிட்டு, 

“ஐ’ம் சாரி.” 

“மன்னிப்புக்கு அவசியமே இல்லை.” 

“அப்படத்தை என் மனதில் இருந்து அழிக்க முடியவில்லை. அதன் நினைவு வரும்போது எல்லாம் அவர்கள் வழியில் வந்தவள் தானே நான் என்கிற குற்ற மனப்பான்மை. அடிமை வழக்கம் பற்றி பள்ளிக்கூட வரலாற்றில் நான் படித்திருக்கிறேன். இப்படி நடந்திருக்க வேண்டாம் என்கிற எண்ணம். இது வித்தியாசம். ஒரு பீட்ஸாவை வரவழைத்து நான் முக்கால் பங்கு தின்று உனக்கு கால் பங்கு தருவது அநியாயம். உன் பங்கை வீசி எறிந்தவிட்டு நீ பசியில் துடிப்பதை ரசிப்பது எந்த குணத்தில் சேர்த்தி?” 

“உன் நிலைமை நன்றாகப் புரிகிறது. இந்தியாவில் வர்த்தகத் தொழில் செய்த என் குலத்தைவிடத் தாழ்ந்த மட்டத்தில் பலர். அவர்கள் பட்ட அவலங்களை நினைக்கும்போது எனக்கும் அவமான உணர்ச்சி. அதில் இருந்து விடுபட கூடியமட்டிலும் பிறப்பினால் பயன் பெறுவதை நான் தவிர்த்து வருகிறேன். நீயும் வெள்ளை சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. அரசாங்கப் பள்ளியில் படித்தாய். பிறகு, இலவச சமுதாயக் கல்லூரி. மேல் படிப்பிற்கு பணம் சேர்க்க வேலை தேடுகிறாய். திறந்த மனதுடன் வாழ்க்கையை நீ நேராகவே சந்திக்கலாம். அதற்கு இன்னும் இரண்டு காரணங்கள் தருகிறேன். ப்ரீ-மெட் படித்த உனக்குத் தெரிந்தவைதான்.”  

பெட்ஸி ஆர்வத்துடன் அனிகாவைப் பார்த்தாள். 

“பாட்டியின் பெற்றோர்களுக்காக நீ வெட்கப்படுவது அநாவசியம். நாம் எல்லாருமே வளரும் காலத்துக்கும் நம் சூழலுக்கும் அடிமைகள். பத்தொன்பதாம் நூற்றாண்டில், ‘நீக்ரோக்கள் வெள்ளைகளைவிட மிகத்தாழ்ந்தவர்கள், அடிமைகளாக இருப்பது தான் அவர்களுக்கும் நல்லது’ என்று சொன்ன சுப்ரீம் கோர்ட் நீதிபதி. பாட்டியின் பெற்றோர்கள் சார்ந்த தெற்கு பாப்டிஸ்ட் கிறித்துவப் பிரிவே அடிமை வழக்கத்தை பைபிள் வழியாக நிலை நிறுத்தத்தான் ஆரம்பித்தது. அதனால் அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. இரண்டு… பிறந்தபோது இருந்த குணங்களைத்தான் சில மாற்றங்களுடன் புதிய சேர்க்கைகளுடன் நாம் அடுத்த தலைமுறைக்கு வழங்க முடியும். முன்னோர்கள் வாழ்க்கையில் வளர்த்துக்கொண்ட குணங்களும் கொள்கைகளும் நம்மை ஒட்டாது. அதனால் உன்னிடம் கொடூர குணம் இல்லை.” 

யோசிக்க சிறிது நேரம் கொடுத்து, 

“இதுவரை உனக்கு உணவு குற்ற உணர்வை மறக்கவைக்கும் ஆயுதம். இனி உணவு ஆரோக்கியத்திற்கு, நீ விரும்பும் உடல் உருவத்தைப் பெறுவதற்கு உதவும் கருவி. எவ்வளவு என்பதுடன் எப்படிப்பட்ட காலோரி என்பதும் அவசியம். அதற்கான விவரங்கள் (ராபர்ட் லுஸ்டிக்) ‘மெடபாலிகல்’ என்ற புத்தகத்தில் இருக்கிறது. நூலகத்தில் உனக்குக் கிடைக்காவிட்டால் என்னிடம் ஒரு பிரதி இருக்கிறது.” 

” அப்படியே செய்கிறேன். அனிகா! எனக்கு ஒரு சந்தேகம்.” 

“சொல்!” 

“நீண்ட நேரம் நிற்கும் வேலைகளுக்கு, ‘பார்க்கலாம்’ என்று சொன்னவர்கள் கூட ஷ்ரிங்க்-பாட்டுடன் நான் பேசிய பின் மறுத்துவிட்டார்கள்.”  

“சந்தேகமே வேண்டாம். உனக்கு உணவில், அதன் வழியாக மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு கிடையாது என்ற கணிப்பு வலைத்தளத்தில் நுழைந்ததும் அதைத் தகவல் தரகர்கள் விற்று இருப்பார்கள். ஆனால், இங்கே இந்த சந்திப்பின் விவரங்கள் வெளியே நழுவி உன் வாழ்க்கையைப் பாதிக்குமோ என்று நீ கவலைப்பட வேண்டாம்.”  

புதிய பெட்ஸியைப் பார்த்து,

பெட்ஸி கார்ட்டர்? நம்ப முடியவில்லையே.”  

முகத்துக்கும் கூந்தலுக்கும் பொருத்தமான உடல் பரிமாணங்கள்.

“ராபர்ட் லுஸ்டிக், பென்னி நியுமன் இருவருக்கும் நன்றி! உருவம் மட்டுமல்ல, நீ கொடுத்த தன்னம்பிக்கையினால் எம்.டி.எஸ்.யு. (மிடில் டென்னஸி ஸ்டேட் யுனிவெர்சிடி) ‘ஸ்கூல் சைகாலஜி’யில் உதவி சம்பளத்துடன் இடம் வாங்கியிருக்கிறேன்.” 

“பாராட்டுக்கள்! வேலை?” 

“உனக்கு உதவியாக நானே என்னை நியமித்துக்கொள்கிறேன்.” 

“எனக்கு உதவி தேவைதான்…” 

“இது எப்படி? ஷ்ரிங்க்-பாட்டிற்குப் போட்டியாக நான். மாலையில் வாரக்கடைசியில் இங்கே.  உணவு ஊட்டத்திற்காக என்பதை மறந்த இளைஞர்களை நேருக்கு நேர் சந்தித்து என் அனுபவங்களைப் பகிர்ந்து அவர்கள் மனதை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் ரகசியங்கள் இங்கேயே புதைந்துவிடும்.” 

அனிகா யோசித்தாள்.  

“விட்னியுடன் பேசி இத்திட்டத்தை செயல்படுத்துவோம். இதன் முதல் கட்டம் வெற்றி பெற்றால், அதைத் தொடர்ந்து… தற்கொலையை யோசிப்பவர்களின் மனதை மாற்ற அம்முயற்சியில் தோல்வியுற்று வெற்றி கண்ட ஒருவன்… எதிர்காலம் இருண்டு தெரிகிறதா அதில் ஒளிவிளக்கை ஏற்றிய ஒருத்தி…”  

எழுந்து கைகளைத் தட்டிக்கொண்டார்கள்.  

—–

அனிகா அலைபேசியை ப்ரஷாந்த்திடம் திருப்பிக்கொடுத்து, 

“வெரி குட்! வேலையில் உன் பொறுப்பு…” 

“மூன்று மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஷ்ரிங்க்-பாட் நடத்தும் உரையாடல்கள் என் மேற்பார்வையில். தவறுகளைத் திருத்தி, பிரச்சினை தீவிரமானது என்றால் மனநல மருத்துவரின் சிகிச்சைக்கு சிபாரிசு செய்ய வேண்டும்.” 

அனிகாவின் மனத்திரையில் செயற்கை மூளையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ப்ரஷாந்த் திணறும் காட்சி. 

ப்ரஷாந்த்தின் முன் மூன்று திரைகளில் உரையாடல்கள் வேகமாக நகர்கின்றன. 

> உன் விரக்தியின் காரணம்? 

> தட்பவெப்பக் குளறுபடியினால் எதிர்காலம் பற்றிய கவலை. 

> எப்படிப்பட்ட கவலை? 

> இந்த உலகம் இன்னும் இருபது ஆண்டுகள் இருக்குமா? 

> சூரியன் இருக்கும் வரை உலகம் அதைச் சுற்றி வரும்.  

> அதைக் கேட்கவில்லை. நீயும் நானும். 

> தொல்லெச்ச எரிபொருட்கள் அருகி, மின்சாரம் இல்லை என்றால் நான் இல்லை. செயற்கை உரங்கள் இல்லை என்றால் பத்தில் ஒன்பது பேர் பட்டினியில் மடிந்து… 

> மனித நாகரிகத்தை நீட்டிக்க சில பொறுப்பான வழிகள் இருக்கின்றன – என ப்ரஷாந்த் புகுத்துகிறான்.  

> தற்கொலை முயற்சியில் தோற்றுவிட்டேன். 

> தோல்வி வெற்றியின் முதல்படி. அடுத்தமுறை முழு கவனத்துடன் முயற்சித்தால்… ப்ரஷாந்த் குறுக்கிட்டு 

> வாழ்க்கையில் விரக்தி வரும்போது இதுவரை நீ சாதித்ததை இனி சாதிக்க விரும்புவதை நினைத்துக்கொள்! 

மூன்றாவது திரை அவன் பார்வைக்கு எட்டுமுன்பே அதில்,  

> உன் எடையைக் குறைக்க ‘நூம்’ சிறந்த வழி. கடன் அட்டையுடன் உன் எல்லா விவரங்களையும் அதற்கு அனுப்பிவிட்டேன். எழுபத்தி ஒன்பது டாலர் நுழைவுக்கட்டணம், பிறகு ஒவ்வொரு மாதமும்… 

“உனக்கு திருப்தி இல்லை எனத் தெரிகிறது.”  

“நான் இதுவரை செயற்கை மூளையை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி. இவ்வேலையில் அதற்கு நான் உதவி என்பதால் ஒரு படி கீழே.”  

அவன் அப்படி நினைப்பதால்…  

“கடந்த பத்து ஆண்டுகளில் இளையவர்களிடம் விரக்தி, தனிமைத்தவிப்பு, உண்பதில் குளறுபடி இரட்டித்திருக்கிறது. அவர்களைக் குணப்படுத்தத் தேவையான மனநல மருத்துவர்கள் இல்லை. அதனால் இப்படிப்பட்ட பாட்கள் அவசியம் என்பது ஷ்ரிங்க்-பாட் போன்ற மனநோயைக் குணப்படுத்த முயற்சிக்கும் செயற்கை மூளைகளின் வாதம். அவை ஏன் இரட்டித்தன? ஆறில் இருந்து அறுபது அங்குலத் திரைகள். நேரில் சந்தித்துப் பேசாதபோது சமுதாயம் எப்படி உருவாகும்? இயந்திரங்களால் வேலை பறிபோகும் நிலையில் விரக்தி வரத்தான் செய்யும். திரையில் கண்களை ஓட்டி சாப்பிட்டால் அதில் எப்படி மனம் ஒன்றும்? பிரச்சினைகளை எந்தப் பழக்கம் தீவிரப்படுத்தியதோ அதே வழியில் அவற்றைத் தீர்க்க முடியுமா?”  

நான்கு ஆண்டுகள் மூளையையும் நேரத்தையும் இயந்திர மொழிப்பயிற்சியில் ப்ரஷாந்த் ஈடுபடுத்தியது வீண் தானா? என்று இருவருக்குமே வேதனையான சிந்தனை. 

ஊர்தி வந்து நின்று, அதன் முன் விளக்குகள் அணைந்து, அதிலிருந்து நிவேதிதா வேகமாக இறங்கி கதவை இலேசாகத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த பிறகுதான் இருவருமே அவளைக் கவனித்தார்கள். 

அறிமுகத்துக்குக் காத்திராமல், வணிக ஆடையில் ஜொலித்த நிவேதிதாவிடம் அனிகா, 

“நீ சொல்லவே வேண்டாம், நிவேதிதா! உன் முகத்திலேயே காரியம் வெற்றி என்று தெரிகிறது.”  

“கரெக்ட்! நான் இப்போது வான்டர்பில்ட் சட்டக் கல்லூரியில் உதவி பேராசிரியர். கூலித்தொழிலாளர்கள் பற்றிய என் ஆராய்ச்சித் திட்டத்தை நான் தொடரலாம். அதை  விவரித்த போது,  ஒருவர் புத்திசாலித்தனமான கேள்வி ஒன்று கேட்டார். கோழிக்குஞ்சு வளர்ப்பவர்களுக்கு அவற்றை விற்கும்போது தான் ஒரு பறவைக்கு இத்தனை சென்ட் என்று தெரியவரும். அது கட்டுப்படி ஆகாவிட்டாலும் அப்போது அவர்களால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. அதைப்போல, மணிநேரத் தொழிலாளர்களுக்கு அழைப்பு வரும்போது அதில் வருமானம் தவிர மற்ற எல்லா விவரங்களும் கொடுக்கப்படும். அதை ஏற்பதற்கு முன் நிர்வாகத்தினர் ரகசியமாக வைத்திருக்கும் அதன் செலவுகளும் சன்மானமும் கணக்கிட்டு அவர்களுக்குச் சொல்ல ஒரு ஏஐ கட்ட முடியுமா?”  

அனிகாவும் ப்ரஷாந்த்தும் ஒருவரை ஒருவர் சந்தோஷப் புன்னகையுடன் பார்த்தார்கள்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “அந்தரங்கம் புனிதமானது ”

Leave a Reply to scrumptiouslysuccessful3fdb3ac4a8Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.