ஆங்கிலம் : பென் ஒக்ரி
தமிழாக்கம் : வெங்கட பிரசாத்

பதிப்புக் குறிப்பு: குகே வா தியாங்கோ கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர். ஆஃப்ரிக்க இலக்கியத்தில் ஒரு முன்னோடியாகக் கருதப்படுபவர். ஏகாதிபத்தியம், காலனியம் ஆகியவற்றின் தாக்கத்தால் பீடிக்கப்பட்டு இருந்த ஆஃப்ரிக்க இலக்கியம் விடுபட்டு தன்னியல்பாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற கருத்தைத் தொடர்ந்து முன்வைத்ததோடு, இங்கிலிஷின் பிடியிலிருந்து கென்ய நாகரிகம் விடுபடுவதையும் முக்கியமான சிகிச்சையாகக் கருதியவர். கடந்த மே 28, 2025 அன்று காலமானார். பிரிட்டனில் இங்கிலிஷ் எழுத்தாளராகப் பெயர் பெற்றுள்ள பென் ஒக்ரி, நைஜீரியாவில் பிறந்தவர். குகே வா தியாங்கோவை நினைவு கூர்ந்து ஒக்ரி எழுதிய ஒரு இங்கிலிஷ் கட்டுரையைச் சார்ந்து கீழே உள்ள கட்டுரையை தமிழில் தருபவர் வெங்கட பிரசாத்.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் உருவான ஆப்பிரிக்க எழுத்தாளர்களில், வலுவான அரசியல் பார்வை கொண்டவராக துளியளவு சந்தேகத்திற்கும் இடமின்றி அறியப்படுபவர் குகே வா தியாங்கோ (Ngũgĩ wa Thiong’o– 5 January 1938 – 28 May 2025). பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கென்யா இருந்தபோது பிறந்த அவர், காலனித்துவ எதிர்ப்புவாதியாகவும், கம்யூனிஸ்டாகவும், சர்வாதிகார எதிர்ப்புவாதியாகவும், ஆப்பிரிக்க இலக்கியங்களுக்கு ஆப்பிரிக்க மொழிகளையே பயன்படுத்த வேண்டும் என்பதை கடும் தீவிரமாக வலியுறுத்த செய்தார்.
அவரின் ஆகச் சிறந்த படைப்புகள் அரசியல் மற்றும் தனி மனித வாழ்க்கையும் சந்திக்கும் மையப்புள்ளியில் அமைந்துள்ளன. அவரது முதல் கட்டுரைத் தொகுப்பான ‘வீடு திரும்புதல் (Homecoming)’, வாசிக்க தூண்டுவதாகவும், சீரிய விமர்சனப் பார்வையும் ஒருங்கே கொண்டது. அவரது ஆரம்பகால நாவல்களான ‘அழாதே செல்லமே’ (Weep Not, Child’) மற்றும் ‘ஒரு கோதுமை மணி (A Grain of Wheat’)” ஆகியவை காலனித்துவத்தின் மற்றும் மௌ மௌ கிளர்ச்சி தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை ஆராய்கின்றன. இருந்தாலும், அவரின் மதிப்பும் புகழும் அவரது அரசியல் நிலைப்பாடுகளாலேயே வளர்ந்தது. முதலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக, பின்னர் எழுபதுகளில் கென்யாவில் இருந்த சர்வாதிகாரத்திற்கு எதிராக. அவருடைய முழங்கும் அரசியலுக்காக அன்றி கிக்குயு (Kikuyu) மொழியில் “விரும்பும் போது என் திருமணம்” (I Will Marry When I Want’) என்ற நாடகத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த நாட்களில் தனது நினைவுக் குறிப்பை கழிப்பறை காகிதத்தில் எழுதினார்.

நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோது, ஒரு பொதுநல புரட்சியாளரைச் சந்திப்பேன் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அதற்கு மாறாக அன்பான, ஈடுபாடுள்ள ஒரு மனிதரைச் சந்தித்தேன். எனது சில எழுத்துக்களைப் அவர் படித்திருந்தார். மேலும் என்னை பாதித்த ஆளுமையின், சிந்தனையின் தாக்கங்கள் குறித்துக் கேட்டார். அவரது அன்பும், நகைச்சுவையும், நட்பும் என்னை இயல்பாகவே ஆச்சரியப்படுத்தின. அவர் வெள்ளையர்கள் மற்றும் கறுப்பர்கள் இருவருடனும் இயல்பாகப் பழகினார். அவர் ஒரு நல்ல மதுவை விரும்புவார், உரையாடலை ரசிப்பார், மேலும் இலக்கியம் குறித்த சிற்றுரையாடல்களில் உண்மையான ஈடுபாடு கொண்டிருந்தார்.
லண்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரே நான் அவரை முதன்முதலில் அறிந்தேன். ஆப்பிரிக்க மையத்தில் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவரை எப்பொழுதும் சூழ்ந்திருப்பார்கள். அவர்கள் அவரின் சிறை காலத்தை எளிதாக்க விரும்பினார்கள். அவரோடான பல்வேறு இலக்கிய உரையாடலில் ஒன்று பசுமையாக நினைவிருக்கிறது. அப்போது நான் எனது முதல் இரண்டு நாவல்களை மட்டுமே வெளியிட்டிருந்தேன், இருபது வயதின் தொடக்கத்தில் இருந்தேன்.
நீங்க எந்த நாவல்களை படிப்பீர்கள்? என்று கேட்டார்
“உங்கள் அனைத்தையும்”
“வேறு?”
“டால்ஸ்டாய் , தஸ்தயேவ்ஸ்கி”
“எந்த தஸ்தயேவ்ஸ்கி?”
“குற்றமும் தண்டனையும்”
“அந்த புத்தகத்தை நீங்க படிச்சது உங்களுடைய இரண்டாவது நாவல் எழுதுவதற்கு முன்னாடியா இல்ல பின்னாடியா?”
கேட்டதும் உறைந்து போனேன். ஆக சிறந்த புத்தகங்களின் வாசிப்புக்கும், அதற்கு பிறகு நாம் எழுதுவதில் உள்ள தரத்திற்கும் இருக்கும் உள்ளார்ந்த தொடர்பை அந்தக் கேள்வி உணர்த்தியது.
உடனடியாக, நான் எழுதிய நாவல் அந்த நியாயத்தை செய்ய தவறியதை எண்ணி வெட்கினேன். அவர் கேட்ட கேள்விக்கு நேர்மையான பதிலை அளித்தேன்.
தன்னுடைய எளிமையான கேள்விகளால் குகே உங்களை உடைத்து விடுவார். மிக மென்மையான வழிகளில் தூண்டி, ஆப்பிரிக்க இலக்கியம் மொழி, உண்மையின் நம்பகத்தன்மை குறித்த தன்னுடைய கூர்மையான கருத்துக்களுக்கு நம்முடைய தெளிவான பதிலை கொண்டு வர முயல்வார். அவரருகில் இருக்கையில் நம்மால் மந்தமாக இருக்க முடியாது.
சமயங்களில் நான் விளையாடும் இடங்களுக்கு வருவார். விளையாடும் பொழுதுகளின் இடையில் புத்தங்களை குறித்து விவாதிப்போம். அச்செபே எழுதிய “சிதறிப்போதல் ” (Things Fall Apart) நாவல் சாதித்ததைப் பற்றி அவருக்கு நம்பமுடியாத பிரமிப்பு இருந்தது. பல்கலைக்கழகங்களில் டிக்கன்ஸ், கொன்ராட் போன்றவர்களின் இலக்கியங்கள் மட்டுமே கற்பிக்கப்பட்ட காலத்தைத் திரும்பிப் பார்த்து, ஆப்பிரிக்கர்களின் தங்கள் சொந்தக் கதைக்கான ஏக்கத்தை வெளிப்படுத்தும் மொழியைக் கண்டெடுத்த இந்த நாவலை முதல் முறையாகப் படிப்பது எவ்வளவு சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது என்பதை அவர் பகிர்ந்து கொண்டார்.
அந்த நேரத்தில் அவர் சற்று பருமனான உருவத்துடன், விசாரிக்கும் கண்களோடு, எளிதில் சிரிக்கும் இயல்புடன் இருந்தார். அவர் ஆப்பிரிக்க மேல்சட்டையும் மேற்கத்திய கால்சட்டையும் அணிவது வழக்கம். அவரது அரசியல் சிந்தனைகளின் பெரும்பகுதியை இளமையிலேயே கடந்து விட்டிருந்தாலும், தன் படைப்புகள் அழைத்துச் செல்லும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அவர் திறந்த மனதுடன் இருந்தார் என்ற உணர்வு மற்றவருக்கு ஏற்பட்டது.
ஜேம்ஸ் குகே என்ற பெயரில் தொடங்கி, குகே வா தியோங்கோ என்று அவரின் எழுத்து வாழ்க்கை பரிணாமம் அடைந்தது. ஆங்கிலத்தில் எழுத தொடங்கி கிக்குயு மொழியில் வந்து சேர்ந்தார். பெரும்பாலும் தன்னையே மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அவர் அமெரிக்காவில் மிகவும் கொண்டாடப்படும் ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் ஒருவராக மாறுவதை அவரின் முதலாளித்துவ எதிர்ப்பு நிலைப்பாடு சற்றும் தடுக்கவில்லை. இவையெல்லாவற்றிலும், மாறாத ஒரே விஷயம், அவர் ஆடம்பரமற்ற, அனைவராலும் விரும்பப்படும் மனிதராக, எப்போதும் சாமானிய மக்கள் மீது அக்கறை கொண்டவராக இருந்தார்.
அவரது வாழ்க்கையின் இறுதிக்காலத்தில், நோபல் பரிசு வெல்லும் அனைத்து சாத்தியங்களும் உள்ளவராக இருந்த போதும், போர்ஹேஸைப் போலவே, ஒவ்வொரு அக்டோபரிலும் நிறம் மாறி விழும் இலைகளைப் போல் எதிர்பார்ப்பின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் தாங்க வேண்டியிருந்தது. குடும்ப சோகங்களும் அவரது பிற்காலத்தை வெகுவாக பாதித்தன. ஆனால் கால்லூ மாநாட்டின் போது கேம்பிரிட்ஜ் கல்லூரியில் அவருடன் அமர்ந்திருந்தது என்றும் நீங்காமல் என் நினைவில் இருக்கிறது. நாங்கள் இசை மற்றும் இலக்கியத்தைக் குறித்து பேச ஆரம்பித்தோம், அவர் முதல் முறையாக பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார். அப்போது அவர் எழுபது வயதின் நடுப்பகுதியில் இருந்தார். ஒரு ஒலிப்புக் குறியைக் கூட வாசிக்க முடியாத நிலையிலிருந்து, சில மாதங்களுக்குள் மோட்ஸார்ட், ஷோபேன், பாக் ஆகியோரின் சில பாடல்களை வாசிக்கும் நிலைக்கு வருவதின் அதிசயத்தைப் பற்றி பேசினார். இந்த அனுபவமிக்க புரட்சியாளர் தனது புது திறமையைப் பற்றி பேசும்போது இளமையின் பிரகாசத்தை அடைவதைக் காண உணர்வுபூர்வமாக இருந்தது. அவருடைய அறையின் ஒரு மூலையில் இருக்கும் பியானோவில் இருந்து, முகத்தில் மெல்லிய புன்னகையுடன் பாக்கின் இசைக் குறிப்புகள் மிதக்க, அவர் இசைக்கும் காட்சி இன்றும் என் நினைவில் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது.
***
ஆங்கில மூலம்: https://www.theguardian.com/books/2025/may/30/ngugi-wa-thiongo-remembered-ben-okri
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
