ஆராதனை- புத்தக அறிமுகம்

மலர் ஆசிரியர் : எஸ். சிவகுமார்

தொடர்புக்கு- 9980992830

லா.ச.ரா எழுதியிருப்பார்: ‘கமலி, அலமேலு போன்ற பெயர்களில் இருக்கும் பாதுகாப்பு உணர்வு, நவ நாகரீகப் பெயர்களில் உண்டாவதில்லை.’

லலிதம் என்று சொல்லிப்பாருங்கள்- மென்மை, இனிமை, நளினம், இசைவு, அடர்த்தி என்று பரிமாணங்களைக் காட்டும். பொதுவாக கணபதியை, கௌரி புத்ரன் என்றும், முருகனை சிவகுமார் என்றும் சொல்வோம் அல்லவா? முருகன் என்றால், அழகு மட்டுமல்ல, முத்தமிழும் தானே! முருகுவும், லலிதமும் இணைந்தால், அது இயலென, இசையென, நாட்டிய நாடகமென மலர்ந்து பரிவாதினியாழின் நயம் போல  ‘பரிவாதினி இசை மலர்-பாகம் 1’ என்பதாக உங்கள் கரங்களில் தவழும்.

அம்பாள், பூப்பாவாடை அணிந்திருக்கிறாள்; தாழம்பூ கமழ்கிறது; அன்னப்பட்சி முகப்பு கொண்ட இரு குத்துவிளக்குகள், ஐந்து முகங்களிலும் ஒளி சிந்துகிறது; தம்பூராவின் ஸ்ருதி அலையலையாக நிறைக்கிறது; ஆயிரம் இதழ்கள் சீராக மலர்ந்த தாமரையில், மகரந்தத்தை மொய்க்கும் வண்டுகளைப் போல, இந்த இசை மலர் என்னும் தேன் கிணறு, வாசிப்பவருக்கு வற்றாது வழங்குகிறது. இசைக் கட்டுரைகள், இசை தொடர்பான கதைகள், கர்நாடக, ஹிந்துஸ்தானி, மேலை இசை பற்றி சிறப்பான இணைப்புகள், சர்ச்சைகள், நகைச்சுவைகள், விமர்சனங்கள், புகழ் வெளிச்சம் படாத மேதைகள், பொடி சங்கதிகள், பொதுக் கட்டுரைகள், அந்தக் காலத்தில் வெளியான விளம்பரங்கள், இசைக் கலைஞர்களின் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள்.. எதைச் சொல்ல, எதை விட?

மணியம் செல்வனின் ஓவியம் அசத்துகிறது.  நதிநீரும், குடியிருப்புகளும், கோயிலும், உதிக்கின்ற செங்கதிரும், நாகஸ்வரம் வாசிப்பவர்களும், இரசிகர்களும், இரு குடையோடு எழுந்தருளும் தெய்வமும், தம்பூராவும், அதன் ப்ரிடையின் அருகே பொருத்தமாக ஸ்ருதி சேர்ந்து பாடுவதின் அவசியத்தை உணர்த்தும் விதமாக கச்சேரி செய்பவர்களும், அனைத்திற்கும் மேலாக இசையின் மகாரசிகரும், இசையை தம் கதைகளில் சரியாகப் பயன்படுதியவரும், என்றென்றும் கொண்டாடத்தக்கவருமான தி ஜாவும் மலர் பொதிந்த இலையாகக் கட்டியம் சொல்கிறது. உள் அட்டைகளில் காலத்தால் அழியாத கலைச் சிற்பங்கள், பின்னட்டையில் நூலைப் பற்றிய அறிமுகம் என்று இசைப்பயணம் களை கட்டுகிறது.

செவியால் நுகர்ந்து ஆன்மாவை நிறைக்கும் இசையை எழுத்தில் கேட்க முடியுமா? முடியும் என்று சொல்கிறார் லா,ச.ரா.’ எழுத்துக்கும் ஸ்வரம் உண்டு, அனுஸ்வரங்கள் உண்டு, கால ப்ரமாணம் உண்டு, லயமுண்டு, மோன ஸ்வரங்கள் வேறுண்டு’ (ப 212) இந்த வாக்கியத்தை அப்படியே நிரூபிக்கிறது இந்த மலர்.

கமகங்களை, அழுத்தமாகவும், குழைவு குறையாமலும் இசைக்கும் பாடல்கள் நெஞ்சை அள்ளும். அப்படித்தான் தி ஜா கேட்ட பேகடா- அது மூங்கில் கணு போல, வளைந்து, ஆற்றின் அக்கரையைத் தீண்டுவது போல நம்மை மூச்சடைக்க வைக்கும். சேதுபதி அருணாசலத்தின் கட்டுரை, (ப -7)

தி. ஜாவின் இசை ரசனைக்கும், எழுத்து வன்மைக்குமான சிறப்பான ஒரு அஞ்சலி.

நடந்தாய் வாழி காவேரி என்ற தி ஜாவின் பயண நூலிற்கு நான் எழுதிய விமர்சனம் முன்னர் பதாகை இணைய இதழில் வெளியானது அதில் ஒரு பகுதியின் தொடக்கம் இப்படி இருக்கும். அத்தியாயம் “9 புதுப் புகார் -அசாவேரி ‘ஸாரி வெதலின இ” காவேரி ஜொ டரே’ இந்த அருமையான அசாவேரி நிச்சயமாக தி ஜா தான் பாடி இருக்கக்கூடும். காவிரியின் வனப்பை அழகை, வர்ணனை செய்து, அவள் பஞ்சநதீஸ்வரரைப் பார்க்க வரும் அழகை, தியாகராஜ சுவாமிகள் பாடவேண்டும், அதை இவர்களின் எழுத்தில் தேனாய் பருகவேண்டும்.” (https://padhaakai.com/2021/07/11/banumathy/) இதை தி ஜா பாடுவதிலும் வல்லவர் என்று சேதுபதி அருணாசலம் கூறியதுடன் இணைப்பதற்காகத் தந்துள்ளேன்.

புதுக்கோட்டை மாமுண்டியா பிள்ளையிடம் கொண்ட நட்பால், அந்த சிக்கலான லயக் கட்டால் ஈர்க்கப்பட்ட கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர், பாடிய ஒரு பல்லவி. அது ஒரே விளம்ப காலத்தில் இடைஞ்சலாக இருந்ததால், அதை வாங்கி வாசிக்க மறுத்த  திருக்கோடிகாவல் கிருஷ்ணைய்யர் என்ற இரு அற்புதக் கலைஞர்கள், வெற்று அகங்காரத்திற்குள் செல்லவில்லை.; கோனேரிராஜபுரம் தன் பாணியை மாற்றிக்  கொண்டு கோலோச்சினார்; வித்வான்களுக்கு இதுதான் அழகு.(ப19) ரஹ்மத்கானும் அவரை வழி நடத்தியிருக்கிறார்.

மதுர மணி என்று தி ஜா கொண்டாடிய மதுரை மணி.அய்யருக்கு இயற்கையாகவே ஓட்டமெடுக்கும் மத்யம கால சாரீரம். அதில் வித்தை செய்திருக்கிறார் அவர். அந்த ஓட்டத்தில் நின்று கார்வை கொடுத்து ரசிகர்களை புல்லரிக்கச் செய்திருக்கிறார். அதிலும் அபூர்வ ராகங்களை அனாயாசமாகக்  கையாண்டவர். ஸ்ருதியில் நிலைத்தவர், கற்பனைக்கும், மனோதர்மத்திற்கும் அவரிடம் என்றுமே வறட்சி இருந்ததில்லை.(ப-24) அமரர் எஸ். நீலகண்டன் எழுதியுள்ள கட்டுரையைத் தவறவிடக்கூடாது. லலிதாராமும், அவர் நண்பரும் இணைந்து வழங்கிய மதுரை மணி அவர்களின் கச்சேரிகளும், குறிப்பாக அந்த கொல்கத்தாவின் மழைக் கச்சேரியும், திருச்செந்தூர் கச்சேரியும் நினைவில் எழுகின்றன.

‘பன்னிரண்டு ஜோடி நாகஸ்வரங்கள் ஒரே ஸ்ருதியில், கம்பீர நாட்டை மல்லாரியை வாசிக்க ஆரம்பித்தன. 24 நாகஸ்வரங்களும் மேல் ஸ்தாயிக்குச் செல்லும்போது உயர்ந்தும், மந்தரத்தில் தாழ்ந்தும், பக்கவாட்டில் ஆடியும் வாசித்தபோது, சிங்கார வடிவேலனுடன், நாமுமல்லவா ஆடுகிறோம்? (ப-30)

டைகர் வரதாச்சாரியார் எழுதியுள்ள கட்டுரையில் எத்தனையெத்தனை ஆளுமைகளைப் பற்றி சுவையாக எழுதியிருக்கிறார்: ’அக்காலத்தில் முகவீணை என்ற சின்ன நாகஸ்வரம் போன்ற குறுங்குழல் வெகுவாக வழங்கி வந்தது. நாதமுனி பாண்டு கோஷ்டி, பலஹம்ஸா என்ற இராகத்தை 4 மணி நேரம் வாசித்த அப்பாயி, திருவெற்றியூர் ராமச்சந்திரன், பஞ்சதாளேஸ்வர பிருதாங்கித வீணை நீலகண்ட சாஸ்திரி, புரவலர் கலவல கண்ணன் செட்டி, பெரிய சிங்கராசாரியார், சின்ன சிங்கராசாரியார், ஹரிகதை பஞ்சாப கேச சாஸ்திரிகள், கிருஷ்ண பாகவதர், சதுச் சாஸ்த்ர பண்டிதரான லக்ஷமணாச்சாரியார், நாமக்கல் நரசிங்க ஐயங்கார், மடவார்விளாகம் முத்தையா பாகவதர், துரைசாமி ஐயர், பட்டணம் சுப்ரமண்ய ஐயர், த்ரிஸ்தாயியில் பாடிய திருவனந்தபுரம் மஹாதேவய்யர், திருமருகல் நடேசன்,  செம்பொன்னார்கோயில் ராமசாமி, சிக்கில் சிங்காரம், பல்லவி வேணு, மாசிலாமணி முதலியார், பிரும்மானந்த பரதேசி பாடிய கரஹரப்ரியா.. அவர் எங்கெங்கெல்லாம் சென்று, இசையைப் பயின்றிருக்கிறார் என வியக்கிறோம் அத்தனையையும், தன் பாட்டில் வடித்து நமக்குத் தந்திருக்கிறார் என்ற ஆச்சர்யத்தில்தான் இதை எழுதுகிறேன். அதிலும், டைகர், பட்டணம் சுப்ரமண்யரைப் பற்றி சொல்வதைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்-‘ராக, தாள ஸ்வர பிம்பங்கள், மந்த்ர ஸ்தாயியில் கனமான ப்ரயோகங்கள், வக்ர சுத்த அவரோஹணம் கொண்டதாக கதனகுதூகலத்தை அமைத்தவர்’ அந்த ரகுவம்ச சுதாவில் வரும் சிட்டைஸ்வரங்கள் நினைவை விட்டு அகலுமா? ‘சா ரி ம கா ரி ஸ், ரீ ம ம தா த னீ, கா க ப ச நி த ப ப ம க ரி 

நாபி, ஹ்ருத், கண்ட, ரசன என்று தியாகராஜ சுவாமிகள் பாடிய கீர்த்தனம் அப்படியே பாலமுரளிக்கு பொருந்திப் போகிறது. அவர் குரல் நாண்களில் ஒலி அலைகள் சுனாதமாக அதிர்ந்து பரவச கீதமாக நம்மை தேவகானத்திற்கே எடுத்துச் சென்று விடுகின்றன. புதுமைகளில் நாட்டம் கொண்டவர், தெலுங்கு மொழி அறிந்திருந்த பாடகர் என்பதால் ராகத்துடன் பாவத்துடன் அர்த்தம் சிதையாமல் அவரால் பாட முடிந்து இருக்கிறது இன்று வரை அவரது ‘நகு மோமு வை’ ரசிக்காத மனிதர்கள் இல்லை. அதிலும் ‘ஒகிபோ தனஜே சேவர்ருலு காரே’ என்று  வார்த்தைகளிடையே இடைவெளி விட்டு ஆனால் அனுஸ்வரத்தால் இணைத்து அவர் செய்த ஜாலங்கள் அந்தக் கீர்த்தனையை மற்றோர் தளத்திற்கு எடுத்துச் சென்றன. பழம்பெரும் வித்வான்கள் அவர் ஒரு ராகத்தின் ஆதாரமான ஸ்வரங்களை தவிர்த்தோ குறைத்தோ வேறு ஸ்வரங்களை எடுத்தாளும்போது அதை ரசிக்கவில்லை.
எங்கள் உறவினர் ஒருவர் சிறு ஸ்பூனால் பாயாசம் கொடு, பெரிய கரண்டியால் ஊறுகாய் போடு என்று கேட்பார். ஒருக்கால் பழம் பெரும் வித்வான்களின் எண்ணமும் சரிதானோ?

அடுத்து வரும் பல கட்டுரைகள் சுவையான செய்திகளைத் தந்துள்ளன. கெம்பே கவுடரின் தயிர் பாட்டு, பிடாரம் கிருஷ்ணப்பா, வீணை சேஷண்ணா, கோயம்புத்தூர் தாயி, ஆலத்தூர் சகோதரர்கள், பழனி சுப்பிரமணிய பிள்ளை, தேனுகா, ஓலேட்டி, ராஜரத்தினம் பிள்ளை, புல்லாங்குழல் மாலி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் என சரம்சரமாக சூட்டிக் கொள்ளச் சொல்கிறது.

முத்துசுவாமி தீக்ஷதரின் தந்தையான ராமசாமி தீட்சதரைப் பற்றிய டாக்டர் அரவிந்த் அவர்கள் கட்டுரை மரபணு வழியாகக் கடத்தப்படும் கலை , குணாதிசயங்களை உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது,

இசையும் எனக்கது இசையும், என்றும் என் மனம் தான் அதில் அசையும் என்று வாழ்ந்த திருவையாறு செல்லமையர் பற்றிய எஸ் சிவகுமாரின் கட்டுரை அற்புதமாக வந்திருக்கிறது.

அரங்கிசை நாட்கள் பற்றி சுஜாதா விஜயராகவன் சுவைபட சொல்லி உள்ளார். அப்படி ஒரு அரங்கிசை நிகழ்விற்கு ஒரு முறை நானும் சென்று புல்லாங்குழல் ரமணி வாசித்த ராகங்கள் என்னவென்று புரியாமல் முழித்திருக்கிறேன்.! பவானி வாஞ்சிநாதன் அடைந்த சிறப்புகளும், அவர் பலவற்றை அறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்புகளும் நன்றாகச் சொல்லப்பட்டுள்ளன. அந்தக் கட்டுரையில் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, மதுரை சோமு, சிவானந்தம் தம்பதியர் தஞ்சாவூர் உபேந்திரன், தியாகராஜ பாகவதர் என்று கண்ணைக் கவரும் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மறைமலை அடிகளின் மகள் திருமணத்திற்கு வந்தவர்கள் யாரார் தெரியுமா? திரு வி க, பரலி நெல்லையப்பர், நெல்லை சுந்தர ஓதுவார், பேராசிரியர் சாம்பமூர்த்தி
அதிலும் பேராசிரியர் சாம்பமூர்த்தி வயலின் மட்டுமின்றி புல்லாங்குழலும் வாசிப்பார் என்பது அப்போதுதான் தெரியவந்திருக்கிறது.

தாடி வாத்யார் பெயரில் வந்துள்ள அத்தனை கட்டுரைகளும் சுவையோ சுவை. குறிப்பாக விகடம் ராமசாமி சாஸ்திரிகள் கட்டுரை நல்ல கலகலப்பு. ஓவியர் மாலி ராமசுவாமி சாஸ்திரிகளின் பல முக பாவங்களை புகைப்படமாக எடுத்து விகடனில் வெளியிட்டுள்ளார். 12 புகைப்படங்களும் உங்களையும் புன்னகைக்கச் செய்யும்.

சுருதி மாதா, லயம் பிதா என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பழனி சுப்பிரமணிய பிள்ளை, புதுக்கோட்டையின் மாபூண்டியா பிள்ளை, தக்ஷிணாமூர்த்தி பிள்ளை, நாராயணசாமி அப்பா, சிவக்கொழுந்து பிள்ளை போன்ற பெரியோர்களுக்கு எல்லாம் சிறப்பான ஒரு அஞ்சலி கட்டுரை எழுதி இருக்கிறார்.


மீண்டும் வருகிறார், தாடி வாத்யார் -டி சி ஆர் ஜொஹானெஸ், வயலின் மாசிலாமணி முதலியார் இருவரும் சங்கீதத்தை பற்றி ரசமாக உரையாடி இருக்கிறார்கள். முன்னவரின் மொழிபெயர்ப்பை, கட்டுரையைப் படித்து ஆனந்தப்படுங்கள்.

எஸ் சிவகுமார் அவர்களின் சங்கீத நினைவுகள் ஒரு பொக்கிஷம். தன் குடும்பத்திலே, தன் வாழ்விடத்திலே, அவர் கேட்ட கச்சேரிகள், அவரது தாய் மாமாவான கே வி மகாதேவன், பேராசிரியர் சாம்பமூர்த்தி ,வரகூர் முத்துசாமிஐயர் ,புல்லாங்குழல் மாலி, பாப்பா வெங்கட் ராமையா, திருவீழி மிழலை சகோதரர்கள், வீருசாமி பிள்ளை, மதுரை மணி, கே.வி.நாராயணசாமி, தி.ஜா, சேஷ கோபாலன் என்று முத்துச்சரங்களாக கோர்த்திருக்கும் நினைவலைகளில், தந்தை தாய் தாத்தா புகைப்படங்கள் என்று அசத்தியிருக்கிறார். அதுவும், எதிர்பாராத விதமாக திஜா தினமணி ஆபீஸில் இவரை சந்தித்ததும், தன் எழுத்துக்களைப் பற்றி பேசாமல் இசையின்பால் அதிக ஈர்ப்புடன் திஜா உரையாடியதும், கலாக்ஷேத்ரா கச்சேரிகளுக்கு சேர்ந்து போவோம் என்று திஜா இவரை அழைத்ததும், ஆறு மாதங்களுக்குள்ளாகவே தி ஜா மறைந்ததும் ……..எனக்கு மனம் ஆறவில்லை.

சேஷகோபாலனைப் பற்றி சற்று காட்டமாக திஜா சொன்னதும், சிவகுமார் அவர் இளம் கலைஞர் என்று பதில் சொன்னதும், தன் கருத்திற்காக  தி ஜா வருந்தியதும்… என்ன ஒரு மகத்தான மனிதர் அவர் என்று நினைக்கத் தோன்றியது.

கும்பகோணம் வரலட்சுமி-பானுமதி இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? ஜி கே சேஷகிரி, அவர் பார்த்த நாட்டியங்கள், அவற்றை அவர் விவரித்திற்கும் விதங்கள் அற்புதம்.

“கோபாலி மேடைக்கு வருவது தெரியும் உட்கார்ந்து இருப்பது தெரியும் ஆனால் உட்காருவது தெரியாது மைனா கிளையில் உட்காருவது போல்.”- மரப்பசு தி ஜா.
அப்படித்தான் வீணை காயத்ரியும். மண்ணுக்கு வந்த சரஸ்வதி என்று சிவகுமார் கொண்டாடுவதில் எந்த தவறுமில்லை. வானவெளியில் சஞ்சரிக்கும் ராக தேவதைகள், இவர் வீணைத் தந்திகளை மீட்டியவுடன் அதில் மாயமாகப் பொங்கிவரும். ஸ்வரங்கள், கமகங்கள், என்று இசைக்கும் விரல்கள். அவர் தானம் வாசித்தால், இன்பத் தேன் வந்து பாயும் காதினிலே.

தோடி  மேல் சஞ்சாரத்தில் சிந்துபைரவியும், காம்போதி மேல் சம்சாரத்தில் செஞ்சுருட்டியும் ,சங்கராபரணம் மேல் சம்சாரத்தில் ஹமீர்கல்யாணியும், பைரவி மேல் சஞ்சாரத்தில் கரகரப்பிரியாவும் இதைப் போன்ற பலவிதப் பிரயோகங்கள் பழக்கத்தில் வந்துவிட்டன இன்று என்று ஆதங்கப்படுகிறது சங்கீத சர்ச்சை கட்டுரை.
சரஸ்வதி பாயின் ஹரிகதா அனுபவங்கள், சமுதாயத்தில் நிலவிய/நிலவுகின்ற ஆண் பெண் இருவரின் திறமையைப் பற்றி அந்தந்த துறையைச் சேர்ந்தவர்களே, பெண்ணை தவறாக எடை போட்டு ஒதுக்கி இருக்கிறார்கள்/இன்றும் ஒதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள் எனபதைக் காட்டுகிறது. எல்லாவற்றையும் மீறி அவர் சாதித்துக் காட்டியதும், அவரது திறமையை அடையாளம் கண்டு கொண்ட பிரம்மஸ்ரீ திருவாதி கிருஷ்ணாசார் அவர்களும் நம் போற்றுதலுக்கு உரியவர்கள்.


பல இசை மேதைகள், அவர்களைப் பற்றிய குறிப்புகள், தஞ்சை நால்வர், கிட்டப்பா, பொடி சங்கதிகள், சங்கீத சர்ச்சைகள், என்று பலதும் இந்த மலரில் வாசம் வீசுகின்றன.

இசையின் ஊற்றுக்கண் தேடி ஒரு பயணம் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரை. அறிவுத் தேடலில், ஆழ்கடல் முத்தெடுக்க, எடுத்ததை பகிர்ந்தளிக்க, மேலும் மூச்சடக்கி சாகரத்தில் பயணிக்க, சுப்பராம தீக்ஷதரும், பாத் காண்டேயும் நிகழ்த்திய உரையாடல் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்

கல்கி-மணிக்கொடி சங்கீத யுத்தம் அருமை. சிந்து பைரவி என்ற திரைப்படம் வந்தபோது, ராகமும் பாவமும் பொருள்படுகின்றதா அல்லது மொழியா என்ற கேள்வியை நான் கேட்டுவிட்டு படாத பாடு பட்டேன். எனக்கு முன்னோடியாக மணிக்கொடி காலத்தில் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள் என்பதில் ஒரு சிறு சந்தோஷம்.

ரித்விக் கட்டக், ரஷித் கான்,  ஏ டி கண்ணன் சலீல் சௌத்திரி இவர்களுக்கும் வாதாபி கணபதி என்ற ஹம்சத்வனி ராகப் பாடலுக்கும் என்ன சம்பந்தம்? சிவகுமார் விளக்குகிறார்.

இசைக் கச்சேரிக்கு முன்பான விருந்தில் பாயசம் பரிமாறும் வேளையில், மகாராஜபுரம் ராமையா இரண்டு நிமிடங்கள் பாடியதைக் கேட்ட பூச்சி ஸ்ரீநிவாசையங்கார், தன் இரவு நேரக் கச்சேரியை மறுநாள் காலைக்கு மாற்றிக் கொள்கிறார். என்ன ஓரு அருமையான கலா ரசனை! மேடைக்கு வராத மேதைகள் பற்றிய சிவகுமாரின் கட்டுரை மனதை கனக்கச் செய்கிறது.

இவரது மற்றொரு கட்டுரையான “கிட்டாரும் சித்தாரும்” நுணுக்கங்களும், நுட்பங்களும் பிணைந்திருக்கும் சிறப்பான ஒன்று. அலெக்சாண்டர் ஸ்கிரியபின், வெங்கடகிரி அப்பா, ரவிசங்கர், யஹூதி மெனுஹின், எல் சுப்பிரமணியம், எல் சங்கர், எம் பி ஸ்ரீனிவாசன் ஆகியோரின் இசையைப் பற்றியும் ஃபியூஷன் இசைக்கு ஆதரவாகவும் எதிராகவும் எழுந்த குரல்களைப் பற்றியும் சிறப்பாகச் சொல்கிறது.

சிவன் எழுதிய கட்டுரை ஒரு அரிய தகவலைச் சொல்கிறது மைசூரில் பீதோவனுக்கு நடந்த ஆராதனையே அது.  பியானோவை கற்றுக்கொள்ள ஆசைப்பட்ட அரசர் கிருஷ்ணராஜ உடையார், அரசாங்க அலுவலகளால், அதைச் செய்ய முடியவில்லை .பியானோ இசையை கற்றுக்கொள்ளச் சொல்லி வீணை சேஷண்ணாவைக் கேட்டுக்கொள்கிறார். தன் ஆசிரியரையே பிரமிக்க வைக்கிறார் வீணை சேஷண்ணா. மார்கரேட் இ கசின்ஸ் என்ற பெண்மணி கீழை மற்றும் மேலைநாட்டு இசை பற்றி மிகச் சிறப்பாக வெளியிட்ட புத்தகம் பற்றியும் கட்டுரை சொல்கிறது.

யுவன் சந்திரசேகர் அற்புதமான ஒரு கட்டுரையை  பீம்சென் ஜோஷியைப் புகழ்ந்து எழுதி இருக்கிறார். “அபூர்வமான அழுத்தம் கொண்ட வெண்கலக் குரல், முதல் கீற்றிலேயே உயிரின் ஆழத்தில் சென்று செருகிக் கொண்டது”

லலிதாராம் எழுதியுள்ள தில்ரூபா இசைக் கலைஞர் அங்கமாலி ஜோஸைப் பற்றிய கட்டுரை, அறியாத பல தகவல்களைக் கொண்டிருக்கிறது.  திண்ணமாக தில்ரூபாவின் அழகியலை போற்றிக் காப்பதற்காகவே வாய்ப்புக்களைத் தவறவிட்ட ஜோஸ், கர்நாடக இசையில் அபூர்வமான மனிதர். காட்டில் காய்ந்த நிலவின் அருகே நம்மை அழைத்துச் சென்றுவிட்டார் லலிதாராம். இந்தக் கட்டுரையில் அங்கமாலி ஜோஸின் இளவயது புகைப்படம், திரை இசை அமைப்பாளர் ஜி ராமநாதன், லயோலா வாசிக்கும் பாலமுரளி, சௌடையா ,என் எஸ் கிருஷ்ணன், டி எஸ் துரைராஜ், சரோஜா, அனைவரின் புகைப்படங்கள் சிறப்பாக வந்துள்ளன.

குரல் வளத்துக்கும் ஸ்ருதிக்கும் காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் வட இந்திய சங்கீதத்தையும் ராகபாவங்கள் இழையும் கீர்த்தனைகள் மிகுந்திருக்கும் கர்நாடக சங்கீதத்தையும் ஹார்மனி என்றும் மெலடி என்றும் குறிப்பிடும் கட்டுரைகள் சிறப்பாக வந்துள்ளன.

திறமையுடனும் ,குறிக்கோளுடனும், அயராத உழைப்போடும் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மலர் அனைத்து இல்லங்களிலும் குடி கொள்ள வேண்டிய தேவ மலர். இதழாசிரியர் எஸ். சிவகுமார், மனமுவந்து எனக்கு மலரை அனுப்பிய லலிதாராம் இருவருக்கும் சிறப்பு நன்றிகள்.

தொகுதி 1 இப்போது விற்பனையில். விலை – ரூ 500.

இரண்டாம் தொகுதியை முன்கூட்டியே பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியாய் இரண்டு தொகுதியும் சேர்த்து 900ரூ-க்குக் கிடைக்கும்.

புத்தகம் வெண்டுபவர்கள் – 9980992830 என்ற எண்ணுக்கு வாட்சாப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புள்ள பதிவு:

:


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “ஆராதனை- புத்தக அறிமுகம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.