பொற்பாதை

“பாரத நாடு, பழம் பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்.”-பாரதி

இந்தியர்களில் பெரும்பான்மையோருக்கு தங்கள் பாரம்பரியம், பண்பாடு, கலைகள், கல்வி, ஞானம், வணிகம், வீரம் பற்றிய சற்று இகழ்வான மனநிலை இருக்கிறது. நம்மவர்கள் அதன் சிறப்பை எடுத்துச் சொன்னால், கேலிப்புன்னகையுடன் அதைப் புறக்கணிப்பவர்கள் பலர். “பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்று போற்றுபவர் சிலர். ஆனால், மேலை அறிஞர் சொன்னால், ‘அவங்களே சொல்லிட்டாங்கப்பா’ என்று ஏற்றுக் கொள்வார்கள். எப்படியோ, நாம் வரலாறை அறிந்து கொள்வது நன்மைக்கே!

ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவரும், இந்தியாவில் தில்லி அருகில். பண்ணை வீட்டில் முப்பத்தாறு வருடங்களாக வசித்துவருபவரும், உலக இலக்கிய விழாக்களில் சிறப்பு நிறைந்த ஜெய்ப்பூர் இலக்கிய விழா நிறுவனரும், “White Mughals” (2002), “The Anarchy” (2019) போன்ற புகழ் பெற்ற நூல்களின் ஆசிரியருமான வில்லியம் டால்ரிம்பில் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட நூல், இந்தியா எப்படி ஒரு காலத்தில் ‘விஸ்வகுருவாக’ இருந்தது என்பதை, சரியான தகவல்கள், மற்றும் தரவுகளுடன் சுவையாகவும், தரமாகவும் ஆவணப்படுத்துகிறது.

சீனாவின் ‘பட்டுப் பாதையை’ வியந்தோதும் மேலை நாட்டினர், இந்திய துணைக்கண்டத்தின் மேன்மைகளை இருட்டடிப்பு செய்து விட்டார்கள் என அவர் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லாமல் இல்லை. ஆன்ம பலமும், மெய்யியல் சிந்தனைகளும், இயற்கை வழிபாடும், அறம் சார்ந்த வாழ்க்கையும், மறம் சார்ந்த திறமையும், கல்வியும், கேள்வியும், கலை ஞானங்களும், அறிவியல் சிந்தனைகளை , வழிபாட்டுடன் இணைத்த அற்புதமும், உலக வணிகத்தில் மேலோங்கி இருந்ததும், தங்களது சிற்ப, நாட்டிய, இசைக் கலைகளை ஆலயங்களின் மூலமும், பௌத்த மடாலயங்களின் மூலமும் பரப்பியதுமான இந்தியர்களின் பெருமையை இந்த நூல் நல்ல முறையில் எடுத்துரைக்கிறது. ஆசியாவின் மிகப் புராதனமான பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமான இந்தியா உலகிற்கு அளித்துள்ள கொடைகள் ஏராளம். நம் நாட்டின் கடல் வணிகப் பாதைகள், கிழக்கிலும், மேற்கிலுமாக விரிந்து திரை கடலோடி திரவியம் தேடியதையும் அவர் நிறுவுகிறார்.

கிமு250 முதல், கிபி 1200 வரை இந்தியக் கப்பல்கள் செங்கடல், சீனா என்று பயணப்பட்டிருக்கின்றன. கப்பல்களில் பயணித்தவர்கள், முன்னோடியான வர்த்தகர்கள், வானியல் நிபுணர்கள், சோதிடக் கலை வல்லுனர்கள், மருத்துவர்கள், இயல், இசை, நாடகக் கலைஞர்கள், சிற்பிகள், சித்திரம் வரைபவர்கள், அறிவியலாளர்கள், கணித நிபுணர்கள், மத குருமார்கள், துறவிகள், இந்தியாவின் பல்வேறு தத்துவத் துறைகளில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்கள், புத்த மத அறிஞர்கள், இஸ்லாமிய ஆன்றோர்கள் என்று வில்லியம் ஆதாரங்களுடன் சொல்கிறார். இஸ்லாம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், மைய ஆசியாவிலிருந்தும் இந்தியாவிற்குள் வந்தது. மிக எளிமைப்படுத்தப்பட்டதை விட சற்று மிகையாக, ஜாவா தீவிற்கு இஸ்லாத்தைக் கொண்டு சென்றவர்கள் குஜராத்தின் ஸுஃபி ஆன்மீகவாதிகள் என்று எழுதுகிறார். இஸ்லாத்தின் பல்வேறு பிரிவுகள் தொலை தூரங்களிலும் பரவின.

பீட்டர் ஃப்ராங்கோபேனுடனான (Peter Frankopan) தனது ஆழ்ந்த உரையாடல் இந்த நூலை எழுதும் வேகத்தைத் தந்ததாக வில்லியம் குறிப்பிடுகிறார். ஃப்ராங்கோபேன் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் வரலாற்று நிபுணராகப் பணியாற்றுபவர். அவர்  “உலகின் புதிய வரலாறு”-2015 என்ற தனது நூலில், பெர்சியா, மத்திய ஆசியா, சீனா ஆகிய நாடுகள், புராதன காலத்திலும், இடைக் காலத்திலும் செழிப்புற்று நல்ல நிலையில் மிளிர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சீனாவின் பட்டுப்பாதையை விதந்தோதுகிறார்; ஆனால், இந்தியாவின் மேன்மைகளைப் பற்றிய சிறு குறிப்பும் இல்லை. இந்த விடுபடல்களைச் சரி செய்யும் நோக்கத்துடன் தனது இந்த ‘பொற்பாதை’ எழுதப்பட்டதாக வில்லியம் சொல்கிறார். ‘இந்தோஸ்பியர்’ பரந்துபட்டு இருந்திருக்கிறது; எகிப்தின் புறக் காவல் நிலையங்கள், எதியோப்பியா, ரோம சாம்ராஜ்யம், தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றுடன் வணிக- வர்த்தகங்கள் மட்டுமில்லாது, அறிவுப் பெருந்தொகையையும் இந்தியர்கள் வழங்கியிருக்கிறார்கள். அறிவுக் களஞ்சியமாக, பண்பாட்டுச் சீரமைப்பாக, இந்தியா வழங்கிய நன்கொடைகளை, ஆசியாவின் பிற பகுதிகள் ஆவலுடன் பெற்றுக் கொண்டன. இத்தகைய நிலையிலிருந்து அன்னியர் படையெடுப்பால் வீழ்ந்த பாரத ஞானமும், செல்வமும், அதன் இருப்பை உலகம் மறக்க முயன்ற ஒன்றாக மாற்றிவிட்டது. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட பாரதம் இன்று வேற்றுமைகளைப் பற்றியே பேசுகிறது. அன்னிய கலாசாரம், நம் மொழியை, குறிப்பாக சம்ஸ்க்ருதத்தை புறம் தள்ளியது; முதலில் பெர்சியர்கள், பின்னர் ஆங்கிலேயர்கள் நம் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணிகள்.

ரோமானியர்களுடன் நம் வர்த்தகம் செழிப்பாக இருந்த காலம். அவர்கள், நம் மிளகை, மசாலாப் பொருட்களை, தந்தங்களை, பருத்தியை, நவரத்தினங்களை, தேக்கை, சந்தனக் கட்டைகளை பெருமளவில் தங்கம் கொடுத்து வாங்கினார்கள். நமது வணிகம் பொருள் மிகுதி நிலையை நமக்குத் தந்தது. ரோமில், ப்ளினி,மூத்தவர்  கோபத்துடன் புலம்பினார் “ இந்தியாவுடனான நம் வர்த்தகத்தில், ஒவ்வொரு ஆண்டும் நம் அரசு 55 மில்லியன் செஸ்டர்கள் இழந்து வருகிறது.” ரோம அரசைத் தாண்டி, வேறு எந்த நாட்டிலும், ரோம நாணயங்கள் இந்திய அருங்காட்சியகத்தில் இருப்பதைப் போல  இல்லை.

மேற்கு ரோமானிய அரசு வீழ்ந்தது; இந்தியாவின் வர்த்தகம் சரிந்தது; மாற்றுச் சந்தைகளைத் தேட வேண்டி வந்தது; அரசர்களும், வணிகர்களும்  புதிய வாய்ப்புக்களைத் தேடி பெருமளவில் கடலோடத் தொடங்கினார்கள். தமிழர்கள், ‘தங்க நிலம்’ என்று சிறப்புப் பெயரிட்டு அழைத்த அன்றைய பர்மா, மலேசியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், கம்போடியா, ஜாவா மற்றும் இன்றைய இந்தோனேஷியாவின் பிற பகுதிகளுக்குச் சென்றனர். இதை ‘கிழக்கத்திய எல்டோராடோ’ என்று சொல்கிறார் நூலாசிரியர். துணிவும், அறிவும், வீரமும் நிறைந்த தமிழினத்தைப் பற்றி பெருமை கொள்வோம். வணிகம் பயணித்த பாதையில் ஆன்மீகம் சேர்ந்தது. இந்துமதத்தின் பல அம்சங்கள், மற்றும் பௌத்தத்தின் கூறுகளை பரப்புவதற்கு துறவிகளும், அறிஞர்களும் சென்றார்கள். இந்து மதக் கோயில் தொகுப்பான, அருமையான அங்கோர்வாட் நம் அமைப்பே! போரோபுதூரில் உள்ள புத்தர் கோயில் சிறப்பாக வடிவெடுத்தது. அரசர்களின் ஆதரவு இருந்தாலும், பொது மக்கள் ,இந்தத் தத்துவங்களின் பால் ஈர்க்கப்பட்டே பெருமளவில்  செயற்பட்டார்கள். 

சீனாவிற்கும் நாம் சென்றோம். ‘இந்தோஸ்பியர்’ விரிந்து கொண்டே போனதைப் பற்றி மட்டுமல்ல, அதனுடன் மனிதர்களைப் பற்றியும் சொல்கிறார் வில்லியம். முனிவர்களும், தவயோகிகளும் இந்தியாவை வெளி நாட்டினருக்கு சிறப்பாக அறிமுகம் செய்தார்கள். புத்த நூலான ‘தாமரை சூத்திரங்களை’ குமாரஜீவா (கி பி 344-413) சம்ஸ்க்ருதத்திலிருந்து சீன மொழியில் மொழியாக்கம் செய்தார். ஷுவாஞ்செங் என்ற சீன அறிஞர்,( Xuanzang (A.D. 602-664) 17 ஆண்டுகள், 6000 மைல்கள் இந்திய நிலப்பரப்பில் பயணித்து, நம் நாலந்தா பல்கலையின் நூலகத்திலிருந்து தன் கைப்பட பிரதியெடுத்த அறிவுப் பொக்கிஷங்களை மூட்டை மூட்டையாக சீனாவிற்கு கொண்டு சென்றார். (https://youtu.be/yZV4S2N1dyo?t=2229) நாலந்தாவின் நூலகம், அலெக்சான்ட்ரியாவின் நூலகத்திற்கு இணையான பெருமை வாய்ந்தது. சீனாவின் ஒரே பெண் முடியாட்சியாளரான வூ ஜேடியன் அசைக்க முடியாத ஆளுமையாகவும், கொடூரகுணம் கொண்டவராகவும் இருந்திருக்கிறார். அவர் பௌதத்தை அரசு மதமாக அறிவித்து இந்திய   பௌத்தர்களை ஆலோசகர்களாக நியமித்தார். அவரது காலத்திற்குப் பிறகு இந்திய சிந்தனைகளைப் புறம் தள்ளி, கன்ஃப்யூசியம் வேகமாக வளர்ந்தது.

நூலின் இறுதிப்பகுதி இந்தியர்கள் மேற்குலகை தங்கள் கணிதம், மெய்யியல், மொழியியல் ஆகியவற்றால் வசப்படுத்தியதைச் சொல்கிறது. அரேபிய அறிஞர்களான புதிய கலிபாக்கள், (Al-Andalus) ஆல்-அன்டுலஸ் Moorish Spain – போன்றவர்கள் இந்தியக் கணிதத்திலும், வானியல் அறிவிலும் தங்கள் மனதைப் பறிகொடுத்தார்கள். இந்தியர்களின் மகத்தான கண்டுபிடிப்பான பூஜ்யம், முதலில் அராபிய நகரங்களிலும், பின்னர் யூரோப்பாவிலும் வெகுவாக அங்கீகரிக்கப்பட்டு, அதன் அற்புதமான செயற்பாடுகளின் பயனை பலத் துறைகளில் பயன்படுத்த வழிவகை செய்தது. உலகிற்கே பொதுவான மொழியாக பூஜ்யம் வடிவெடுத்ததில் பாரதத்தின் பங்கு அளப்பரியது. இதை எடுத்துச் சொன்னதற்கே இந்தியா, வில்லியம் டால்ரிம்பில்லுக்கு நன்றிக்கடன் பெற்றுள்ளது. நாம் நம் கண்ணோட்டத்தை சரி செய்துகொள்ளவும்,, மேலும் ஊக்கம் பெறவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த நூல் சிறப்பான பங்காற்றியுள்ளது. பல உரையாடல்கள், இந்த நூலைப் பற்றி வெளிவந்துள்ளன.

வானியல்- சூடாமணி உள்ளமுடையான்:

இந்தப் பகுதி மேற்குறிப்பிட்ட நூலில் இல்லையென்றாலும், இது தொடர்புடைய இந்திய வானியல் கணித மேன்மையைச் சொல்வதால், இதை இங்கே எழுதுகிறேன். தமிழ் பாரம்பர்ய அறக்கட்டளை 03/05/25 அன்று நேரலையில், மிகச் சிறந்த அறிஞர்களான திருவாளர்கள்.டாக்டர் வி, ராமனாதன், டாக்டர். வெங்கடேஷ்வரா, பேராசிரியர் எம் டி ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் உரையாடலை வழங்கியது. உரை, இந்திய வானியல், எண்ணெழுத்து, தமிழில் திருக்கோட்டியூர் நம்பி எழுதிய சூடாமணி உள்ளமுடையான் (12-13 நூற்றாண்டு) ஆகியவற்றைப் பற்றிய சிறப்பான ஒன்றாக அமைந்தது.

எழுத்துக்களுக்கு எண்களும், எண்களுக்கு எழுத்துக்களும் நம் பண்டைய ‘க்ரிப்டோக்கள்’ என்றே சொல்லலாம் எனக் கூடத் தோன்றியது. வானில் தென்படும் கோள்களையும், நட்சத்திரங்களையும் ஊன்றிக் கவனித்து வந்த இந்தியர்கள், எண்களைக் கையாண்டு மூன்று முக்கிய சுவடிகளை, வாக்கியங்களைத் தந்திருக்கிறார்கள்.

பூத சங்க்யா, ஆர்யபடீயா,கடபயாதி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை.

பூத சங்க்யாவில்,பௌதீகமாக நாம் அறியும் பொருட்களுக்கு எண்கள் தரப்பட்டுள்ளன.

0-ஆகாயம்

1-நிலா

2-கண்கள்

3-அக்னி

4-வேதங்கள்

5-இந்திரியங்கள்

6- இரசம், பருவங்கள்

7-ஸ்வரங்கள், மலைகள், ரிஷிகள்

8-திக்பாலர்கள்

9- நவ நிதி

எண்களைக் கொண்டு எழுத்தாக்கிச் சொல்லப்பட்டது பிங்கலாவின் ‘சந்த சூத்திரங்கள்’ பாஸ்கரா-2 தான் எழுதிய நூல் எந்த வருடம், தனது 36வது வயதில் எழுதப்பட்டது என்பதை வாக்கியங்களில் சொல்கிறார்-  சிறிதளவில் சொல்கிறேன்- ‘ரஸ குண பூர்ண மஹிசாம- இது எண் 1036

சாகா ந்ருபா சமயே- எண் 1114 பொ யு

எண்ணும் எழுத்தும்

KA1KHA2GA3GHA4N’A5CA6CHA7JA8JHA9NA10
द्11थ12दा13ध1415ஞ
TA16THA17DA18DHA19N_A20PA21PHA22BA23BHA24MA25
YA30RA40LA50VA60S’A70S_A80SA90HA100

अ र उ ….. 100…….102… 

எண்களால் எழுத்தைச் சுட்டும் செய்யுள்களை இயற்றி வானியல் கணிதங்களை வடிவமைத்திருக்கிறார்கள்.

நாம் பூமியிலிருந்து கோள்கள், விண்மீன்கள் இவைகளின் இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் கொண்டு பார்க்கும் போது அவைகள் தங்கள் பாதையில் சீராகப் பயணித்துக் கொண்டிருந்தாலும், பெரும்பாலும் ஒன்றே போல இருப்பதில்லை. கிரகங்களின் பெயர்ச்சி என்று இந்த இயக்கங்கள் அறியப்படுகின்றன. அதிலும் பூமியைச் சுற்றும் நிலாவின் இயக்க மாறுபாடுகள் கவனிக்கத்தக்கவை. ஒரு நட்சத்திரத்தை அலகாக எடுத்துக் கொள்வோம். பக்கவாட்டு இயக்கத்தில்  நிலாவிற்கு பூமியைச் சுற்றி வர 27.321662 நாட்கள் ஆகிறது. 27 நட்சத்திரங்களை ‘நினைவில் கொள்ள வேண்டும். இரு கோள்களுக்கிடையேயான மிக நீண்ட தூரம் அளவீடு செய்யப்படுகிறது. நிலாவிற்கும் அதன் ‘அபோஜி’க்கும் இடையே முரண்பாடுகள் இருக்கும். அவை இரண்டும் இணைவதற்கான நாட்களை 27.554550 என்று கணக்கிட்டார்கள்.  நிலவின் தீர்க்கரேகைக்கும், அதன் அபோகிக்கும் இடையே உள்ள  மாறுபாடுகளை, முரணான எண்களான 9, 110, 449 மாதங்களில் கணக்கிட்டார்கள். உதாரணமாக  9 மாதங்களை 27.321662வால் பெருக்கினால் என்ன வருகிறதோ அது அடிப்படை எண் 

9*27.554550=247.19095 நாட்கள் =248 (முழு எண்)

110 *27.554550= 3031.0005 நாட்கள்= 3031

ஒரு குறிபிட்ட நாளில் சூர்ய உதயத்தின் போது நிலவு எதிர்கொள்ளும் அதன் அதிக பட்ச தூரநிலையையும் கணக்கிட்டார்கள்.  தீர்க்க ரேகைகளை கணக்கிட்டார்கள்.

இந்தக் கணிதம் நமது தமிழ் நூலான சூடாமணி உள்ளமுடையானில் செய்யுள் வடிவில் இருக்கிறது வாக்கிய பஞ்சாங்கம் இக்கணக்கைக் கொண்டு வரையப்பட்டது.  நிலவின் கச்சிதமான தீர்க்க ரேகை, அந்தந்த நாட்களின் சூர்ய உதயத்தின் போது எவ்வளவு என்று கணக்கிட வாக்கியங்களின் எண்களைப் பின்பற்றினார்கள். அதாவது, வாய்ப்பாடு போல அது தயாராக உதவியது. கலியுகத் தொடக்கத்தில் சூர்ய உதயம் நடந்து (பிப் 18,3102 கி மு) எத்தனை நாட்கள் கழிந்துள்ளன என்பது ஒரு ஆதார அலகாக பயன்படுத்தப்படுகிறது. அதன்படி சூர்யனின் சுழற்சி ஒரு யுகத்தில், 43,20,000 என்றும் சந்திரனின் சுழற்சி, 5,77,53,336 என்றும் சொல்கிறார்கள்.

சூடாமணி உள்ளமுடையான் என்ற தமிழ் வானியல் கணித நூல் 61 கையெழுத்துச் சுவடிகளாக இருந்திருக்கிறது. அதில் 19 சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகாலில் இன்றும் இருக்கிறது.

அந்தச் சுவடிகளில் வெவ்வேறு தலைப்புகளில் அத்தியாயங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உப தலைப்பு எண் 8 ல் சூர்யன், சந்திரன், கோள்கள் இவற்றின் சுழற்சி பரஹித கணிதம் என்று எழுதப்பட்டுள்ளது. அத்தியாயம் 9 கிரஹணங்களைப் பற்றி தெளிவாகச் சொல்கிறது.

நாகுபௌர், தமிழ் வானியல் பற்றி சிறப்பாக எழுதியுள்ளார். அவர், லே ஷான்டி என்ற ஃப்ரெஞ்ச் அறிஞர் தமிழ் வானியலைப் பற்றிய அறிவினை வியந்து பரிட்சை செய்து பார்த்ததையும் குறிப்பிடுகிறார். பாண்டிச்சேரியில், ஞானமுத்து என்ற வல்லுனரை அழைத்து டிச1768ல் சந்திர கிரஹணத்தைப் பற்றியும், அது பற்றும் காலம், நீடிக்கும் காலம், விடுபடும் காலம் இவற்றைப் பற்றியும் சொல்லச் சொல்கிறார். ஞானமுத்து தரையில் அமர்ந்து கொண்டு  சிப்பிச் சோழிகளைக் கொண்டு கணக்கிட்டு துல்லியமாக, விரைவாக அவற்றை விவரிக்கிறார். சிறந்த கணித அறிவும், வேகமும், எளிய கணக்கீட்டு முறையும், வானியல் நிபுணத்துவமும் கொண்டவர்கள் தமிழர்கள் என்று இந்த ஃப்ரெஞ்ச் அறிஞர்கள், அதிகாரிகள் போற்றுகின்றனர்.

பாரதியை விட நம் நாட்டின் சிறப்பை யார் எடுத்துச் சொல்ல முடியும்? சாரத்திலே மிகு சாத்திரங்கண்டு என்றல்லவா எழுதுகிறார்?

பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு.
சரணங்கள்
ஞானத்திலே பரமோனத்திலே – உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலேஅமுதாக நிறைந்த
கவிதையிலே உயர்நாடு – இந்தப் (பாருக்)
தீரத்திலே படைவீரத்திலே – நெஞ்சில்
ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
தருவதிலே உயர்நாடு – இந்தப் (பாருக்)
ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே – புய
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
காக்கத்திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினிலேஉயர் நாடு – இந்தப் (பாருக்)
வண்மையிலே உளத்திண்மையிலே – மனத்
தண்மையிலே மதிநுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்
உணர்வினிலே உயர்நாடு – இந்தப் (பாருக்)
யாகத்திலே தவவேகத்திலே – தனி
யோகத்திலே பலபோகத்திலே
ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார் தம்
அருளினிலே உயர்நாடு – இந்தப் (பாருக்)
ஆற்றினிலே சுனையூற்றினிலே – தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈந்திடுங் காலி
இனத்தினிலே உயர் நாடு – இந்தப் (பாருக்)
தோட்டத்திலே மரக்கூட்டத்திலே – கனி
ஈட்டத்திலே பயிர் ஊட்டத்திலே
தேட்டத்திலே அடங்காத நதியின்
சிறப்பினிலேஉயர் நாடு – இந்தப் (பாருக்)

உசாவிகள்:
தமிழ் பாரம்பர்ய அறக்கட்டளை உரை
வில்லியம் டால்ரிம்பில்லின் நூல் மற்றும் அதன் காணொலிகள், உரையாடல்கள்.



Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “பொற்பாதை”

  1. மிக அருமையான நூல் உரை. பல நுணுக்கமான விஷயங்களை நுட்பமானவைகளை எளியோரும் புரியும் வண்ணம் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. விஞ்ஞானத்தில் கணிதத்தில் சிறப்பாக விளங்கிய நமது நாடு காலங்களில் நம்பிக்கை என்ற பெயரில் மூடநம்பிக்கைகளுக்குள் விழுந்ததே இந்த வீழ்ச்சிக்கு காரணமாக கூட இருக்கலாம். இருப்பினும் நமது பண்டைய கால விஷயங்களை கற்றறிந்து அவற்றை மீண்டும் புதுப்பிக்க இன்றைய சமூகம் எழட்டும். ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.