விளைவு

2025, ஜனவரி மாதம்

பட உதவி : Matter and Mind: The Vaisheshika Sutra of Kanada, Subhash Kak

காற்றில் ததும்பும் குப்பையில் எறியப்பட்ட மீன்களின் அழுகிய வாடை, உப்பு கலந்த ஈரம், வியர்வை நாற்றம், மனிதர்களின் உடல்கள், பசியின் கூர்மை அந்த தொழிலாளர் கூடத்தினை நிரப்பியிருந்தது. ரமேஷ் சிங்கின் வயிறு குமுறியது, மூன்று நாட்களாக வயிறு சரியில்லை. வெறும் மீன் துண்டுகளும், காய்ந்த ரொட்டியும் கடும் களைப்பைத் தந்தன.

தெற்கே கடல் ஓசை, வடக்கே மின்மினி வெளிச்சம் போன்ற கேம்ப் விளக்குகள், மேற்கே உயரமான பனை மரங்கள், கிழக்கே பிடித்துக் கட்டிய படகுகள். கென்யாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்த லாமு தீவில், மீன் பதப்படுத்தும் கிடங்கின் குறுகிய மூங்கில் சுவர்கள் அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தன.  சுற்றுலாவும், மீன்பிடித்தலும் அங்கு முக்கிய தொழில்கள், பக்கத்தில் ட்ஸாவோ தேசியப் பூங்காவில் வனவிலங்குகளைச் சுற்றிப்பார்க்க ஆட்களைக் கூட்டிச் செல்லும் தொழிலும் செய்வார்கள்.

தீவின் மூன்று நூற்றாண்டு பழமையான ஸ்வாஹிலி-அரபு கட்டிடக்கலை, செதுக்கப்பட்ட மரக்கதவுகள், வெள்ளைச் சுண்ணாம்புச் சுவர்கள் இங்கு இருக்கும் அழகென்றால், இந்த அழகின் பின்னால், லாமுவில் இயங்கும் இருண்ட உலகத்தின் ஆழத்தில் சிக்கியிருந்த சக கேம்ப்வாசிகளின்  நெருப்பு போலச் சிவந்த கண்கள் ரமேஷுக்கு கசப்பைத்  தந்தன. பலரைப் போலவே அவர்களும் சூழ்நிலையின் பலிகள், ஆனால் அவன்?  இல்லை, அவன் சூழ்நிலைகளை உருவாக்குபவன் எனத் தன்னுள் சொல்லிக் கொண்டான். சிமோன் கோமுவும், கிருபாவும், திரிபாதியும் உருவாக்கிய  சூழ்நிலையின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என அவன் புத்தி சொன்னது. அது பெரும் எடையென அவன் மேல் கவிழ்ந்தது.

மீன்களின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்து கல் போன்ற கட்டிகளை எடுத்து பாத்திரத்துக்குள் அடுக்கிய  ரமேஷின் விரல்கள் வலித்தன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும் கடின உழைப்பு, ஓய்வில்லை, உறக்கமில்லை.  மூன்று வாரமாக முழுமையான தூக்கம் இல்லை.விரல்களில் பதிந்த உப்பின் வலி, விலாவில் ஏறிய என்றோ உண்டான காயத்தின் எரிச்சல். 

எரிசக்தியின் கனவு இன்னமும் நினைவில் இருக்கின்றது. அது நடக்கும், நடக்கத்தான் வேண்டும்,இங்கிருந்து தப்பிக்க முடியும் என நம்பினான். ஒரு பரிசோதனக் கூடம் மட்டும் கிடைத்தால் நனவாகி விடும். நான்கு வருடமும் ஒரு சிறிய வாய்ப்பினை எண்ணித்தான் காத்திருந்தான். வேதியியல் ஒரு நாளும்  கைவிடாது. இங்கிருந்து ஒரு படகை எடுத்துச் சென்று விடலாம் என நம்பினான். 

“கிருபா மூடனே… உன் தவறினால் எனக்கு எத்தனை கஷ்டம்… உனக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது..”  எண்ணங்கள் சிதறின.

அவன் புலம்பலை காதில் வாங்கி “யார் கிருபா…” என அருகில் இருந்தவன் கேட்டான்.

“என் உயிர் நண்பன். அவன் ஒரு புகைப்படக்காரன், லாமுவில் அவன் புகைப்படம் எடுத்துக் கொடுத்தால் அதைக் கண்டு பணம் அள்ளிக் கொடுக்காத சுற்றுலாப்பயணியே இல்லை. ஒரு காலத்தில் டிஸ்கவரி சானலுக்கு புகைப்படம் எடுத்து விருது வாங்கியவன்… ட்ஸோவோவின் சிங்கங்களை, லாமுவின் தெருக்களை, இந்தியப் பெருங்கடலை அவன் கேமரா போல் வேறு எந்த கேமராவும் லாமுவில் தொட்டதில்லை. ஆனால் ஒரு முட்டாள். என் நிம்மதியைக் கெடுத்தவன். நான் இங்கே மாட்டிக் கொள்ள அவன்தான் காரணம்.”  ரமேஷ் பெருமூச்சு விட்டான்.

“நீ என் நண்பனை நினைத்து ஏன் கஷ்டப்படுகின்றாய்? காலத்தில் திரும்பப் போக முடியுமா என்ன? கற்பனையில் மட்டுமே திரும்பப் போக  முடியும். நாளைக்கு உன் கதையை ஒருவன் வாசித்தால், வாசிப்பவன் காலத்தில் திரும்பிப் போகலாம், நீ போக முடியாது.  புலம்பாமல் சொல். உடல் களைத்து, உள்ளமும் புலம்பிச் சாகனுமா?  அது சரி நீ இத்தனை புகழும் உன் நண்பன் என்ன ஆனான்?”

“அவனைக் கடைசியாகக் கிழக்கு  ட்ஸோவோவில் பார்த்தேன். ஆனால் இன்றும் இங்கே என் நிம்மதியைக் கெடுத்துக் கொண்டு என் தலைக்குள் இருக்கின்றான்.. நீ எந்த ஊர்…” ரமேஷ் தன்னுடன் பேசுபவனை உற்றுப் பார்த்தான்.

“நானா.. என் ஊரா… எனக்கு எல்லாமே மறந்து விட்டது… இந்த கேம்ப்தான் என் ஊர்…”

“உனக்கு உன் ஊருக்குப் போக ஆசையில்லையா…”

“எனக்கு ஆசை உண்டு…. கோமுவின் பிறந்தநாள் அன்று எல்லாருக்கும் கேக் தருவார்கள். அதற்கு ஆசை உண்டு”

“அவ்வளவுதானா.. நான் வேதியியலில் நோபல் வாங்கிய பேராசிரியர் திரிபாதியை போலப் பெரிய ஆளாவேன்.. என் கனவுகள் பெரியது..”

“திரிபாதியா…உனக்குப் படிக்க பிடிக்கும் அல்லவா? நீ படிப்பதைப் பார்த்திருக்கின்றேன். என்னிடம் திரிபாதியின் நாவல் ஒன்று உள்ளது, வேண்டுமா..” பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் கேட்டான்.

ரமேஷுக்கு படிப்பது அந்த கேம்பில் சின்ன நிம்மதி. படிக்கும் செய்திகள், கற்பனைகள் ஏதோ ஒரு நம்பிக்கையைத் தந்தன.

“ஆம், படிக்கப் பிடிக்கும். அடிப்படையில் நான் ஒரு வேதியியல் ஆசிரியர், உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடமெடுப்பேன். நான் சொல்லும் திரிபாதி வேதியியல் துறை சார்ந்தவர்.  அவர் நாவல் எழுத மாட்டார்.” என்றான்.

“ பழைய சொந்தக் கதைகளில் கனவுகள் காணாதே, பழைய பெருமை வேலையைக் கெடுக்கும். இன்றைக்கு  நீ அடிமை, சிமோன் கோமுவின் லேபர் கேம்பில் சிக்கிக் கொண்டவன், ஏதோ ஒரு விதத்தில் கோமுற்கு உன்னிடம் மோதல், அதன் விளைவை உடல் உழைப்பால்  கழிக்கின்றாய். வேறு எதையும் பேசாதே. கோமுவுக்குத் தெரிந்தால் அடிவிழும்…இந்தா இதுதான் திரிபாதி எழுதிய நாவல்…. நேற்றைக்கு வந்த கோமுவின் நண்பர்களுக்குப் படகு ஓட்டினேன். அவர்கள் படகில் தவறவிட்டுப் போனார்கள். பேராசிரியர் திரிபாதி என்றுதான் போட்டிருந்தது ”

“இங்கே கொடு “ எனப் புத்தகத்தினை வாங்கி கொண்ட ரமேஷ்  “அட்டை கிழிந்துள்ளதே…” எனக் கேட்டான்.

“படகிலிருந்து இறங்கும் பொழுது வந்தவர்களின் பெட்டியைத் தூக்கி வந்தேன் அல்லவா? ஒரு பெட்டியை கைதவறி கீழே போட்டு விட்டேன். பின் பக்கம் ஒரு குச்சியால் அடி விட்டார்கள். உட்கார்ந்தால் ஒரு பக்கம் வலிக்கின்றது. புத்தகத்தின் அட்டையைக் கிழித்து வலிக்கு ஆறுதலாக கால்சட்டைக்குள் வைத்துள்ளேன்.. அட்டை வேண்டுமா? ”  கேட்டான்.

ரமேஷ் மறுப்பாகத் தலை அசைத்தான். புத்தகத்தினைத் திருப்பிப் பார்த்தான். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி திரிபாதி  சாகும் முன் கடைசியாக எழுதிய புத்தகம்  எனப் போட்டிருந்தது.  அவர் பெயரைக் கண்டதும் அத்தனை வலியிலும் அவனுக்குப் புன்னகை வந்தது, கசப்பில் ஊறி இருந்தாலும், அவன் உதடுகளில் சிரிப்பு படிந்தது.

“நான் இவரைப் போல.. தெரியுமா? உலகை மாற்றும் கண்டுபிடிப்பைச் செய்ய வல்லவன்…”  அவன் குரலில் பசியை, வலியைத் தாண்டிய உறுதி வந்தது..

பக்கத்தில் இருந்தவன் “ஹெ ஹெ…”  என இளித்தான். அவன் முகத்தில் கிண்டல், கேலி இருந்தது.

முதல் பக்கத்தில் “புலனறிவின் போதாமையாலும், ஏற்கனவே உள்ள அனுபவங்களால் உருவான மனப்பதிவுகளின் போதாமையாலும் தவறான அறிவு (அவித்யா) உருவாகின்றது. – வைசேசிக சூத்திரம் (9.2.10)” என போட்டிருந்தது. அந்த நாவலென்னும் புனைவின் சாராம்சம் சொல்லும் வரிகள். மீண்டும் ஒரு முறை வாசித்தான். பேராசிரியருக்கு எல்லாமே சூத்திரம். வேதியியலும் சூத்திரம், புனைவும் சூத்திரம் என சொல்லிக் கொண்டான்.

அதன் அர்த்தம் எத்தனை சரி என நினைத்து  உச் கொட்டினான். பக்கத்தில் இருந்தவனை நோக்கி கண்ணைத் திருப்பினான். இவர்களிடம் “அவித்யா”  நிரம்பியுள்ளது  என அவர்கள் மேல் பரிதாபம் கொண்டு பார்த்தான்.

படிக்க ஆரம்பித்தான், மூன்றாம் அத்தியாயம் வந்து விட்டான், வாசிக்கையில் அவனுக்குத் தலை சுற்றியது. பாழ்வெளியில் தூக்கி எறியப்பட்ட உணர்வு. நினைவுகள் சிதறின, காலம் கலைந்தது, இடம் மாறியது. அவன் கேட்ட ஒவ்வொரு வார்த்தையும், பார்த்த ஒவ்வொரு காட்சியும், படித்த ஒவ்வொரு வரியும் ஆகாயத்தில் விரிந்தன. வெளியில் நீந்துவது போல உணர்ந்தான். வெள்ளை வெளியில் மிதப்பது போல இருந்தது. ரமேஷ் கண்ணிலிருந்து கண்ணீர் பெருகியது. கடல் அவனை அழைப்பது போல இருந்தது. மூச்சு தடுமாறி காற்றுக்கு நுரையீரல் தவித்தது, தீ அவன் நெஞ்சில் எரிந்தது,  உடல் நிலம் நோக்கி இழுத்தது,  மெல்லச் சரிந்தான்.நெஞ்சில் அசாதாரண வலி ஏற்பட்டது. “கிருபா அங்கே இருக்கின்றான்..கிருபா நிற்கின்றான் …சிமோன் என்னை விட்டு விடுங்கள், நான் கிருபாவை போய் கூட்டி வருகின்றேன். என்னை விட்டு விடுங்கள்..” என வார்த்தைகள் வெளியே வந்தன. யாரும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. தரையில் சரிந்தான், புத்தகம் அவன் கைகளிலிருந்து நழுவி விழுந்தது.

“டேய் எழுந்திரு.. “ அருகில் இருந்தவன் உலுக்கினான்.

இன்னொருவன் மூக்கில் கை வைத்துப் பார்த்தான், “இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவான். புத்தகம் படிக்கையில் ஹார்ட் அட்டாக் . அவனுக்கு வெளியில் நடப்பதற்கும், மனதில் நடப்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பான், புத்தகத்தில் எதைக் கண்டு இதயம் நின்றதோ…. கடலில் போகையில் ஆகி இருந்தால் கடலில் வீசியிருப்பார்கள். நமக்கு வேலை குறைவு. இங்குச் செத்தால் நமக்குத்தான் வேலை”  எனச் சொன்னான்.

ரமேஷ் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நினைவுகள் தன்னை விட்டு அகழ்வதைக் கண்டான்.  “சிமோன் என்னை விட்டு விடுங்கள்…சிமோன் என்னை விட்டு விடுங்கள்,.நான் செய்ததெல்லாம் தப்பு..கிருபா …கிருபா என்னை காப்பாற்று .”  எனச் சொல்ல நினைத்தான். அது அவன் உதடுகளை நீங்கும் முன் இல்லாமல் ஆனான். இல்லாமல் ஆகும் முன் அவன் நினைவில் 4 வருடம் முன்பு ஜனவரி 14 ல் நடந்தது மட்டுமே நின்றது.

2021 ஜனவரி 14

சிமோன் கோமுவின் குரல் ரமேஷை நோக்கி கணீரென ஒலித்தது “ உன்னைப் பிடித்து வரச் சொன்னதன் காரணம் தெரியுமா?”

அந்த அறையில் ரமேஷ் தனியாக நிரப்பிக் கொண்டு இருக்கவில்லை. சிமோன் கோமுவும், அவரது ஆட்களும் இருந்தார்கள்.

“தெரியாது சார்…உயிர் போய்விட போகுது, தயவுசெய்து சார் ,நிறைய வலிக்குது, அடிக்க வேண்டாமென்று சொல்லுங்கள், ..” ரமேஷ் கெஞ்சினான்.

“ நீ டிசம்பர்  மாதம் 27ம் தேதி எங்கே இருந்தாய் …” சிமோன் கோமுவின் குரல் கரகரப்புடன் ஒலித்தது. “கத்தியைக் கவனமாகப் பிடி.. வெட்டி விடாதே..” அவர் வேலையாளை முறைத்தார். ரமேஷின் கழுத்தில் கத்தியை வைத்திருந்த சிமோனின் பாதுகாவலன் கத்தியை எடுத்து ரமேஷின் இடுப்பில் வைத்தான்.

வீட்டின் மேல் தளத்தில் அமைந்திருந்த சிமோனின் அலுவலகத்தின் திறந்த பால்கனியில் இருந்து தெரிந்த கடல் அலைகள் ஒலி அவருடைய கோபத்திற்கு இசையமைத்தது. வெளியே மாங்க்ரோவ் மரங்களுக்கிடையே பறவைகள் கூட்டம் பறந்து கொண்டிருந்தது. பின்னணியில் மாலை நேரச் சூரியன் மஞ்சள் நிறமாக மாறிக்கொண்டிருந்தது. அலுவலகத்தின் உள்ளே, செதுக்கப்பட்ட மர சுவர்களும், அரபு-ஸ்வாஹிலி கலப்பு கலாச்சாரம் கொண்ட அலங்காரங்களும், பாரம்பரிய மேசைகளும் சிமோனின் அதிகாரத்தை உணர்த்தின.

லாமு தீவில், இந்திய பெருங்கடலின் கரையோரம் சிமோன் கோமுவின் பிரம்மாண்டமான வீடு அமைந்திருந்தது. பழைய அரபுப் பாணியிலான வீட்டின் வெள்ளைச் சுவர்களும், செதுக்கப்பட்ட மர ஜன்னல்களும், பச்சை நிறக் கதவுகளும் சூரிய ஒளியில் ஜொலித்தன. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட லாமுவின் குறுகலான தெருக்களில் கழுதைகள் மட்டுமே பயணிகளைச் சுமந்து சென்றன. மோட்டார் வாகனங்கள் அனுமதிக்கப்படாத இந்த பழங்கால நகரத்தில், சிமோனின் வீடு கடலை நோக்கியபடி பனை மரங்களால் சூழப்பட்டிருந்தது.

வியர்வையில் நனைந்திருந்த ரமேஷின் உடலிலிருந்து லாமுவின் கடுமையான வெப்பம் வெளிப்பட்டது. வேர்க்குருவில் நிரம்பிய அவன் முகத்தில் அச்சம் தெளிவாகத் தெரிந்தது. எதிரே, பழைய கடல் கப்பலின் மரத்தால் செய்யப்பட்ட மேசைக்குப் பின்னால் சிமோன் அமர்ந்திருந்தார். அவரது முகத்தில் கோபமும், வருத்தமும் மாறி மாறி தெரிந்தது. அவருடைய கண்கள் ரமேஷை கூர்மையாக வெட்டின.

“பேராசிரியர் திரிபாதி எனக்கு நெருங்கிய நண்பர். லாமுவில் பிறந்து, லண்டனில் சாதித்து, மீண்டும் இங்கே வந்தவர். நாங்கள் இருவரும் கென்யாவின் எதிர்காலத்திற்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். அவர் வீட்டில் என்ன நடந்தது? ” சிமோன் கேட்டார்.

“நான் ஒன்னும் பண்ணலை சார். நான் அவரது விசிறி. நானும் அவரை போலவே வேதியியல் பாடம் எடுப்பவன்தான்” ரமேஷ் குழைந்த குரலில் சொன்னான். அவனுக்குப் பின்னால் ஜன்னல் வழியாக மாலை நேர கடல் அலைகள் தெரிந்தன.

“முட்டாள். நீ ஹை ஸ்கூல் டீச்சர், அவர் வேதியியலில் நோபல் பரிசு வென்றவர். நீ அவரை போலவா… அவரை என்ன செய்தாய்.. அவர் மேல் என்ன கோபம். டிசம்பரில் அவரை போய்  பார்த்தாய் அல்லவா..”

“சார் , நான் டிசம்பரில் போனேன், பேசிக் கொண்டிருந்தேன். என்னைப் பற்றிக் கேட்டார். அவர் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் ஒரு அறிவியல் பேப்பரைக் காட்டினார்.  உலகத்தினை மாற்றும் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அதைப் பார்த்து என் கருத்தைச் சொன்னேன். புதிய எரிபொருள் எனத் தலைப்பு இருந்தது..அப்புறம் நான் அவர் போன வருடம் எழுதிய வேதிவினைகள் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி விட்டு வந்து விட்டேன்”

“அது எனக்குத் தெரியும்.. நீ வந்து போனதை என்னிடம் சொன்னார். உனக்கு அந்த பேப்பரில் இருந்த எதுவுமே புரியவில்லை.. நீ உண்மையிலேயே வேதியியல் ஆசிரியரா என என்னிடம் கேட்டார்…ஏன் பொய் சொல்கின்றாய்…”

ரமேஷ் தலைகுனிந்தான். இதை எதிர்பார்க்கவில்லை. ..”சார் அது வந்து மறந்திட்டேன். அதுதான் மாத்தி சொல்லிட்டேன். அந்த பேப்பரில் நிறைய வேதியியல் சமன்பாடுகள் இருந்துச்சு, எனக்கு உடனே புரியல, இரண்டு நாள் பொறுமையாக படிச்சா புரிஞ்சுடும் சார், அதுதான் அப்படி சொல்லிட்டேன் போல. நான் அவரை அதற்குப் பின் பார்க்கவில்லை…”

இடுப்பில் கத்தி வைத்திருந்த பாதுகாவலன், கத்தியைத் திருப்பி அதன் பிடியால் ரமேஷ் தலையில் இடித்தான். ரமேஷ் கீழே விழுந்தான். முகத்தில் மிதித்தான்.

“அந்த பேப்பரில் என்ன இருந்தது என நினைத்தாய்…” சிமோன் கேட்டார். அவர் குரலில் கொஞ்சம் கேலி இருந்ததோ என ரமேஷ் நினைத்தான்.  அடிவாங்குவதைக் கண்டால் அவருக்குக் கேலியாக இருக்கின்றது..

“அறிவியல் சார்…”

“அப்படியா.. எவ்வளவு நாளாக ஆசிரியனாக இருக்க..”

“கிட்டத்தட்ட ஆறு வருஷமா…”

“இதுவும் பொய்.  சரி எழுந்து நில்.. இனி கேட்கும் கேள்விக்குப் பொய் சொல்லாதே.. “ சிமோன் கோமுவின் குரல் இடியென ஒலித்தது.  எது பொய் ஆறு வருஷமாகத்தானே இருக்கேன் என ரமேஷ் குழம்பினான்.

“பத்தாம் தேதி இரவு ஏன் அவர் வீட்டுக்குப் போனாய்…”

“நான் போகலை சார். இரவு  நான் தூங்கிட்டேன், மறுநாள் பள்ளி இருந்துச்சு”  ரமேஷ் பதறினான்.

தலையில் திரும்ப ஓர் இடி விழுந்தது.. ரமேஷுக்கு பொறி கலங்கியது.கீழே விழுந்தான். கத்தியை முகத்தில் நீட்டி எழுந்து நிற்கச் சொன்னான். திருப்பி இடுப்பில் கத்தி வைத்தான்.

தூரத்தில் நின்ற இன்னொரு பாதுகாவலன் நடந்து வந்து கையில் இருந்த செல்போனில் வீடியோவை போட்டான். அதில் ரமேஷின் ஸ்கூல் டிஷர்ட்டினை போட்டுக் கொண்டு படகில் ஏறும் கிருபாவின் படம் இருந்தது

“அது என் சிசிடிவி படம். எனக்குத் தெரியாமல் ஊரில் எதுவும் நடக்குமா, தெரியுமா.. மீண்டும் பொய். உன்னைப் போய் ஆசிரியர் ஆக்கி உள்ளார்கள், உண்மை பேசுவாயா? தலையில் தொப்பி போட்டு, முகத்தில் துணி கட்டி மறைத்துள்ளாய். ஆனால்  அந்த டீசர்ட் உன்னோடதுதானே. உன் ஸ்கூல் லோகோ போட்டிருக்கே. ஏன் அவர் வீட்டுக்கு நள்ளிரவில் போனாய்?  என்னக் காரணம்?”

ரமேஷின் முகம் மாறியது. சிசிடிவி கேமரா இருப்பது அவனுக்குப் புதிய செய்தி.  இத்தனை நாளாக அவனுக்கு இது தெரியவில்லை.  சிமோன் அவரது ரகசிய நடவடிக்கைகளுக்கு வைத்திருக்கின்றார்.

“சார்..”

“சொல்”

“படகு  என்னுதுதான். ஆனால்  ஓட்டினது கிருபா… நான் இல்லை”

“திரும்ப பொய். உன் பள்ளிக் கூட டீசர்ட்டில், உன் போட்டை எடுத்துக் கொண்டு கிருபா எதுக்கு போகனும், அதுவும் வீட்டின் பின்புறம் வழியாக, அவனிடம் வீட்டு சாவியே இருக்கே…அவன் பேராசிரியர் வீட்டில் வேலை செய்கின்றானே.  அன்றைக்கு அவன் இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு போனதாக பேராசிரியரே என்னிடம் இரவு தூங்கும் முன் போன் பேசுகையில் சொன்னாரே.. நீ உண்மையே பேச மாட்டாயா?”

“இல்லை சார், சத்தியமா கிருபாதான், அவன் என் நண்பன், அவன் ஏன் நள்ளிரவில் போனான் என எனக்கு தெரியாது?”

“சரி அவனையே கேட்கலாம்…அவன் எங்கே? திரும்பி பொய் சொன்னே காலையோ , கையையோ உடைத்து விடுவேன்..”

“அவன் கிழக்கு  ட்ஸோவா  சபாரி பூங்காவில் இருக்கான்…”

“அவனுக்கு போன் போடு”

“சார் அங்கே போன் எடுக்காதே… என்னை விடுங்கள், நான் போய் அவனைக் கூட்டி வருகின்றேன்..”

சிமோன் கண்ணைக் காட்ட, இன்னொரு அடி விழுந்தது

இந்த முறை ரமேஷால் எழ முடியவில்லை.. அழுதான்..

“கிழக்கில் யார் சபாரி பொறுப்பு” சிமோன் அவரது பாதுகாவலனைக் கேட்டார்.

“ஓமர், போன் பண்ணிக் கேட்கவா?” பாதுகாவலன் மெல்லிய குரலில் கேட்டான்.

“போன் பண்ணாதீர்கள், நாங்கள் மெய்ன் எண்ட்ரன்ஸ் வழியாகப் போகவில்லை, சிங்கங்கள் இருக்கும் இடத்துக்குப் போக ரேஞ்சர் கண்ணில் தெரியாமல் போக ஒரு வழி இருக்கின்றது… அதன் வழியாகப் போனோம்…நான் வந்திட்டேன்” ரமேஷ் பதறி போய் சொன்னான். கிருபாவால் போன் எடுக்க முடியாது. அவன் போன் எடுக்கவில்லை என்றால் திரும்ப அடிவிழும் என ரமேஷுக்கு  தெரிந்து இருந்தது

“நீயும் போனாயா. அப்புறம் நீ ஏன் வந்து விட்டாய்…” சிமோன் கேட்டார்.

ரமேஷ்  உள்ளே சின்னக் குழந்தைகளின் உள்ளத்தில் வரும்  பயம் உறைந்தது. இந்த மனிதர்களை ஏமாற்ற முடியாது என உணர்ந்தான். ஆனால் உண்மையைச் சொன்னால்…? அவன் மனதில் அந்த எண்ணமே மரணத்தைத் தழுவியது. கிருபாவின் முகம் திடீரென அவன் கண்முன் தோன்றியது. நம்பிக்கையும், ஏமாற்றமும் கலந்த அந்த முகம். சிசிடிவியில் சிக்கிய முட்டாள்,  என் டீசர்ட்டை போட்டு என்னை மாட்ட வைத்து விட்டான். அவன் செய்த பிழைக்கு நான் கொடுக்கும் விலை என வருந்தினான். அவனை வெட்ட வேண்டுமென நினைத்தான். ஆனால் அதை உடனே அவன் அழுத்தி வைத்தான். உயிர்பிழைப்பதே முக்கியம்.

ரமேஷுக்கு அடுத்து என்ன சொல்வது எனத் தெரியவில்லை..பாதுகாவலன் தூக்கி நிறுத்தி இடுப்பில் கத்தியை வைத்தான். கத்தி அழுந்தியது.

ரமேஷ் அழுது கொண்டிருந்தான்.

“சொல்.ஏன் நீ மட்டும் வந்து விட்டாய்.. அவன் என்ன செய்கின்றான்..” சிமோன் மீண்டும் கேட்டார்.

அந்நேரம் கூட இருந்த வேலையாள் பலமாக தும்மினான். கை தவறிக் கத்தி இடுப்பில் இறங்கியது. ரமேஷ் அலறி மயங்கி விழுந்தான்.

சிமோன் கோபத்துடன் பாதுகாவலனைப் பார்த்தார்.

“சாரி சார்..தும்மல் வந்திடுச்சு, ஆழமாக இறங்கவில்லை, அரை இஞ்ச்தான் இறங்கியிருக்கும், பயத்தில்தான் மயங்கி விட்டான். சார் இவன் பொய்யாகவே பேசுகின்றான். சபாரி பூங்காவுக்கு யார் போனாலும் நமக்குத் தெரியாமல் போகாது..”

“அவன் ஒரு புகைப்படக்காரன், அவனுக்கு அங்கே நம்மை விடக் கூட இடம் தெரியும்..அதுதான் யோசிக்கின்றேன்” சிமோன் குரலில் குழப்பம் இருந்தது.

“அவன் எங்கே ஓடப் போகின்றான், பிடிக்கலாம் சார்..ரமேஷிடம் இரண்டு போன்கள் உள்ளன், ஒன்று அவன் பெயரில் உள்ள போன், அது லாமு போன், இன்னொன்று ஏதோ நைரோபி போன். இரண்டையும் சோதனை செய்தால் எல்லா குறுஞ்செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன். கால் ஹிஸ்டரியும் அழிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் நைரோபியில் இருந்து கண்டுபிடிக்கலாம். இவனிடம் ஏதோ சிக்கல் உள்ளது. ”  என உறுதியாகச் சொன்னான்.

ஆமோதித்து தலையை அசைத்தார்.  “ரமேஷை  மீன் தொழிற்சாலையில் அடைத்து வை. கிருபாவை பிடிக்கும் வரை அங்கேயே வேலை செய்யட்டும். அவனை வெளியே விடாதே. இழுத்துக்கொண்டு போ. இருவரும் சாவுக்குக் கெஞ்ச வேண்டும்.”   சிமோனின் குரலில் கட்டளை தொனி இருந்தது.

“ கிருபா இன்னேரம் லாமுவிலோ, ட்சாவோவிலோ புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பான், இவன் இங்கு அடிவாங்கி மயங்கிக்  கிடக்கின்றான். எல்லாம் விதி.. இதற்கெல்லாம் யார் காரணம் சொல்ல முடியும் ”    சிமோன் கோமுவின் பாதுகாவலன் சலிப்புடன்  சொன்னான்.

கதவுக்கு வெளியே இருந்து ஓடி வந்த இருவர் ரமேஷை தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

“கிருபா துரோகி…நீ இங்கே இருந்து இருந்தால் நான் தப்பியிருப்பேனே.. சிங்கங்களுடன் இருக்கிறாயே… ” ரமேஷின் உதடுகள் புலம்பின. அவனைத் தூக்கிக் கொண்டு போகும் ஆட்கள் அதைக் காதில் வாங்கவே இல்லை. ஜனவரி  நான்காம் தேதி அன்று கிருபா கிழக்கு ட்சாவோவுக்கு போனதை நினைத்துப் பார்த்தான் , அவன் கண்களில் உடல் வலியைத் தாண்டி புது வலி ஒன்று வந்தது.

ஜனவரி  4, 2021

“ரமேஷ் நான் கிழக்கு ட்சாவோவுக்கு கிளம்பறேன்….நம்ப வழக்கமாக சந்திக்கும் ஸ்பாட்டில்தான் இருப்பேன்…சம அசைன்மெண்ட்.. நம்ம லேப் அமைக்கப் பணம் வேணுமுனு சொன்னேல.. இது ஹெல்ப் பண்ணும்…ஒரு போட்டா அசைன்மெண்ட் வந்திருக்கு.. யாரோ ஒரு நைரோபி குரூப் போன் செய்து சொன்னார்கள்.. நல்ல சம்பளம் கொடுப்பதாக சொல்லியுள்ளார்கள். சரி பார்க் உள்ளே போக போறேன்..இதுக்கப்புறம் போன் சிக்னல் எடுக்காது… நீ லேப் எக்யூமெண்ட் மொம்சாவில் வாங்கியதும் நேரா பார்க்குக்கு அவசியம் வா..”  என ரமேஷுக்கு அலைபேசியில் வாய்ஸ்மெயிலும், வாட்ஸ் அப்பில் செய்தியும் அனுப்பி விட்டு   கிழக்கு ட்சாவோ சபாரி பார்க்கின் விரிந்த சவானா காடுகள் நோக்கி வண்டியை கிருபா திருப்பினான்.

காலையிலிருந்து மாலை வரை பல புகைப்படங்கள் எடுத்தான்.  தன் கைக்கடிகாரத்தில் கிருபா நேரம் பார்த்தான். மாலை 3:30 எனச் சொன்னது.   மாலை வெயிலில் தங்க நிறத்தில் மின்னின. கென்யாவின் மிகப்பெரிய தேசியப் பூங்காவான ட்சாவோவின் நீண்ட புல்வெளிகள் காற்றில் அலைகள் போல அசைந்தன. அக்கேசியா மரங்கள் தங்கள் குடை போன்ற கிளைகளால் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிழல்களைப் பரப்பின. இந்த வெப்பமான, வறண்ட மண்ணிலும் உயிர்களின் பன்முகத்தன்மை வியக்க வைத்தது. தங்கள் பெரிய உடலைச் சூரிய ஒளியில் ஆட்டியபடி, தூரத்தில் யானைகள் கூட்டம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

கிருபா தனது ஜீப்பை உயரமான புல்வெளியில் நிறுத்தி,  கேமராவை எடுத்துக் கொண்டிருந்தான்.  ஆளுயர புல்வெளிகளுக்கிடையே ஒரு சிறு குன்றின் மேல் அமர்ந்து, தூரத்துக் காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தான். அது அவன் ரமேஷுடன் வந்து படம் எடுத்த இடம். மிகப் பழக்கமானது. ரேஞ்சர்களிடம் சொல்லி வந்தால் அவர்களுக்குத் தனியே பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் யாருக்கும் தெரியாமல் அங்கு வரும் வழியை லோக்கல் ஆட்கள் உதவியுடன் அமைத்துக் கொண்டார்கள்.  அவனது முகத்தில் ஒரு குழந்தை போன்ற மகிழ்ச்சி. இந்தச் சவானா புல்வெளியில் யாருமற்று இருக்கையில் அவனுக்கு அதிக மகிழ்ச்சியாக இருந்தது. இயற்கையின் அமைதியும், பரந்த வெளியும் அவனது புகைப்படக் கலைக்குப் புதிய உணர்வைத் தந்தன.

அவர்களின் பழைய நினைவுகள் கிருபாவுக்கு புன்னகையைக் கொண்டு வந்தன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இதே சவானாவில், மூன்று இளம் சிங்கங்களைக் கண்டு, அவர்களுக்குத் தங்கள் கனவுகளின் பெயர்களைச் சூட்டியிருந்தார்கள்: டாலர், பவுண்ட், யென். உலகை வெல்லும் தங்களின் பொதுவான கனவுகளின் அடையாளங்கள்.

“திரிபாதி வீட்டில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு, தனியாக எங்கேயும் போகப் பயமாக இருக்கிறது…” கிருபாவின் குரலில் உண்மையான கவலை தெரிந்தது. அந்த இரவை நினைக்கும்போதே அவனுக்குத் தூக்கம் வராத இரவுகள் அதிகம்.

“கவலைப்படாதே,” ரமேஷ் அமைதியாகச் சொன்னான். அவன் குரலில் ஒரு விசித்திரமான தன்மை இருந்ததை கிருபா கவனிக்கவில்லை. “நீ போய் வா. எல்லாம் சரியாகிவிடும்.”

அருகில் சருகொன்று உடையும் சப்தம் கேட்டு அவன் கவனம் கலைந்தது. நினைவுகளிடம் இருந்து மீண்டும் புகைப்படத்துக்கு வந்தான்.. “ரமேஷ் வருவானா? மொம்சாவில் இருந்து எக்யூப்மெண்ட் வாங்கிவிட்டு ஊருக்குப் போய்விட்டானா?” என்ற எண்ணங்கள் அலை அலையாய் எழுந்தன. திரிபாதி விவகாரத்துக்குப் பிறகு, அவர்களிடையே ஒரு நுண்ணிய இடைவெளி உருவாகியிருந்தது. சொல்லப்படாத வார்த்தைகள், பகிரப்படாத ரகசியங்கள்.  இன்னமும் அரை மணி நேரமே, இங்கிருந்து கிளம்ப வேண்டும்.

கிருபா தண்ணீர் குடித்துவிட்டு, கேமராவின் லென்ஸை மாற்றினான். “சூரியன் இன்னும் கொஞ்சம் தாழட்டும், அந்த ஒளியில் சிங்கங்களைப் படம் எடுக்கலாம்” என்று திட்டமிட்டான்.

அப்போதுதான், தூரத்தில் புழுதி கிளம்பியது. ஒரு ஜீப் அவன் இருக்கும் திசையில் வந்துகொண்டிருந்தது. உற்றுப் பார்த்தபோது, அவன் உள்ளுணர்வு சொன்னது . அது ரமேஷ்தான். திடீரென அவன் மனதில் ஒரு சின்ன மகிழ்ச்சி பரவியது. “வா நண்பா, நம் டாலரை, பவுண்டை, யென்னைப் பார்! ஆறு வருடத்தில் எவ்வளவு வளர்ந்துவிட்டன. இப்போது முழு வேட்டைக்குத் தயாராக இருக்கின்றன. நீயும் வந்துவிட்டாய், இனி நம் இருவரின் படங்களும் அற்புதமாக இருக்கும்.”  என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

ஜீப் நெருங்கி வந்து நின்றது. ரமேஷ் வண்டியிலிருந்து இறங்கி, கையில் ஒரு சிறிய குளிர் பெட்டியுடன் நடந்து வந்தான். அவன் முகத்தில் புன்னகை இருந்தது, ஆனால் அவன் கண்களில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது . ஒரு இருண்ட, ஆழமான பார்வை. கிருபா அதைக் கவனித்தான், ஆனால் அது எக்யூப்மெண்ட் வாங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இருக்கலாம் என நினைத்தான். நண்பனை சங்கடப்படுத்த விரும்பாமல், அதைப் பற்றிக் கேட்கவில்லை.

“உன்னைத் திடீரென்று சர்ப்ரைஸ் செய்யலாம் என்று நினைத்தேன்,” ரமேஷ் குளிர் பெட்டியைத் திறந்தபடி சொன்னான். அதில் பீர் பாட்டில்கள் இருந்தன, பனிக்கட்டிகள் மத்தியில் குளிர்ந்திருந்தன.

 “இப்போது தனி ஆற்றல் இருக்கும்,” கிருபா மகிழ்ச்சியுடன் சொன்னான். “உன் கேமராவை எடுத்துக்கொண்டு வா, அந்த மேட்டுக்குப் போகலாம். அங்கே இருக்கும் ஆறு சிங்கங்களில் எது உன் டாலர், எது பவுண்ட், எது யென் என்று சொல்ல முடியுமா பார்க்கலாம்!”

“அவர்களைத்தான் தேடி வந்திருக்கிறேன்,” ரமேஷ் புன்னகையுடன் சொன்னான். குளிர் பெட்டியிலிருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்து, தன் கையால் திறந்து, “இந்தா, வெயிலில் நீண்ட நேரம் நின்றால் சோர்வாக இருக்கும்” என்று நீட்டினான்.

கிருபா நன்றியுடன் அதை வாங்கி, ஒரு பெரிய மூச்சில் குடித்தான். குளிர்ந்த பீர் வெப்பமான சவானாவில்  வரப்பிரசாதம் போல் இருந்தது. பீரை ருசித்தபடி “நினைவிருக்கிறதா ரமேஷ்? டாலர், பவுண்ட், யென்? நாம் அவற்றுக்குப் பெயர் வைக்கும்போது, அவை நம் கனவுகளுக்கு ஏற்ற பெயர்கள் என்று நினைத்தோம், இன்றைக்கும் அதே வேட்டையில்தான் உள்ளோம். அவர்கள் மூவரும் தனித்தனி குணம் கொண்டவர்கள், அவர்கள் இயங்குவதும் தனித் தனியாகத் தெரியும்” கிருபா நினைவுகளில் மூழ்கியவாறு சொன்னான்.

ரமேஷ் ஜீப்பின் அருகே நடந்து, அதன் ரேடியோவைப் பார்த்தான். அவன் கண்களில் ஏதோ ஓர் உறுதி மின்னியது. “ஆமாம், டாலர் எப்போதும் கேமராவை நேராகப் பார்ப்பாள். பவுண்ட் அமைதியானவள். யென் என்றும் துடிப்பானவள், துறுதுறுப்பானவள்.”

அவர்களுடைய பழைய கனவுகள், நம்பிக்கைகள், இலட்சியங்கள் எல்லாம் அந்தப் பெயர்களில் அடங்கியிருந்தன. சிறிது நேரத்தில், திடீரென கிருபா தன் தலையில் வித்தியாசமான உணர்வை உணர்ந்தான். கண்கள் கனத்தன. பார்வை மங்கலானது. அவனுக்குள் ஓர் அசாதாரண உணர்வு பரவியது, இது சாதாரணச் சோர்வல்ல என்பதை அவன் உணர்ந்தான்.

“என்னடா ஆச்சு… எனக்கு…” அவன் தடுமாறிக் கேட்டான், குரலில் அச்சம் கலந்து.

“பீர்ல ரூப்பி கலந்திருக்கு. சீக்கிரமே தூங்கிடுவே,” ரமேஷ் சொன்னான், இப்போது அவன் குரலில் உணர்வே இல்லை, இயந்திரம் போல ஒலித்தது.

கிருபா எழுந்து தடுமாறினான். அவன் கண்கள் ரமேஷை நம்ப முடியாமல் பார்த்தன. பள்ளிக்கால நண்பனின் முகத்தில் அவன் கண்டது துரோகம், பேராசை, வெற்றியின் மெல்லிய புன்னகை.

“ஏன்… ஏன்டா இப்படி…” அவன் குரல் வெறும் மூச்சாக வெளிவந்தது.

“திரிபாதியின் சூத்திரம் என்னிடம் இருக்கிறது, கிருபா. அது என்னுடையது,” ரமேஷ் குளிர்ந்த குரலில் சொன்னான். “நான் இதை விட்டுக் கொடுக்க முடியாது. இதன் மதிப்பு உனக்குப் புரியாது. இங்க நீ சபாரியில செத்தினா யாருக்கும் சந்தேகம் வராது,  ஒரு விபத்துனு முடிச்சிடுவாங்க… விசாரணையெல்லாம் இருக்காது.”

ரமேஷ் ஜீப்பின் ஒரு புறத்தைக் குழியில் இறக்கி , அதை வேண்டுமென்றே பக்கவாட்டில் திருப்பினான். ஜீப் ஒரு புறமாகச் சாய்ந்தது, அதன் சக்கரங்கள் காற்றில் சுழன்றன. பின்னர் அவன் ரேடியோவை எடுத்து, அதைக் கல்லால் அடித்து உடைத்தான். அவன் கண்களில் முன்னெப்போதும் இல்லாத தீவிரம் தெரிந்தது.

கிருபா மாற்றத்திற்கு முயன்றான், ஆனால் அவன் உடல் அவனுக்கு கீழ்ப்படியவில்லை. அவன் தரையில் சரிந்தான், விழி பிதுங்கிய கண்களில் ஆழமான துயரம்.

“நான் இங்கே இருப்பது நைரோபி குரூப்புக்கு தெரியும், அவர்கள் போலீஸுக்கு போவார்கள்…” கிருபாவின் குரல் வெறும் முணுமுணுப்பாக மாறியது.

“இல்லை. உன்னை நைரோபி எண்ணில் இருந்து அழைத்தது நான்தான். நீ இங்கே ஏன் வந்தாய் என்பது என்னைத் தவிர யாருக்கும் தெரியாது… என்னை போலீஸ் பிடிக்கும் என கவலைப்படாதே. நான் யாரிடமும் சிக்க மாட்டேன்.. நான் புத்திசாலி கிருபா, உன்னை போல் இல்லை…”  ரமேஷ் மெல்லச் சிரித்தான்.

“ஏன் இப்படி.. நீ… நீ…  நண்பனா… நைரோபியில் நான் இருக்கையில் பள்ளிக் காலத்திலிருந்து… முதல் கேமரா வாங்க நீதானேடா காசு கொடுத்தே…உனக்கு லாமுவில் வேலை வாங்கி கொடுத்தேனே. என்னை விட்டு விடு, நான் எங்காவது ஓடி விடுகின்றேன்…ப்ளீஸ்..”  கிருபா தன் சக்தி அனைத்தையும் திரட்டி கெஞ்சினான்.

“பணம், கிருபா. சிமோனுக்கு எதிர்காலத்தில் சந்தேகம் வந்தாலும் உன் மீதுதான் வரும், உன்னிடந்தான் பேராசிரியர் வீட்டு சாவி இருக்கின்றது. நீ இங்கே பார்க்கில் ஒரு விபத்தில் இறந்தால் சிமோனுக்கு  சந்தேகம் வந்தால் கூட அது  ஒரு லாஜிக்கல் முடிவுக்கு வந்திடும். உன்னால நான் மாட்டிக்க கூடாது இல்லை” ரமேஷின் குரலில் சிறிதளவு குற்ற உணர்வும், நியாயப்படுத்தலும் கலந்திருந்தன. “இந்த உலகம் அப்படித்தான் இயங்குகிறது. இதை நாம் இருவரும் அறிவோம்.”

கிருபாவின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவன் தனது கேமராவை பார்த்தான்.அவன் வாழ்க்கையின் ஒரு பகுதி, அவனது கனவுகளின் கருவி. அது தரையில் கிடந்தது, குறுகிய இடைவெளியில், ஆனால் எட்ட முடியாத தூரத்தில். அவன் கண்கள் மெல்ல மூடத் தொடங்கின.

ரமேஷ் கிருபாவின் உடலை இழுத்து, ஜீப்பிலிருந்து தூரப் புல்வெளியில் தள்ளினான். மறுபடியும் எழுந்திருக்க முடியாத நிலையில் அவன் இருந்தான். சின்னக் கத்தியொன்றை எடுத்து அவன் காலில் கீறி விட்டான், ரத்தம் சிவந்த கோடாக வெளியேறியது.

“டாலர்… பவுண்ட்… யென்… சாப்பிட வாங்க…” அவன் விசித்திரமான சிரிப்புடன் சொன்னான். “நான் கூப்பிட்டால் வருமா எனத் தெரியவில்லை, ரத்தம் அழைக்கக் கூடியது” என ரமேஷ் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, தன் ஜீப்பில் ஏறி காத்திருந்தான்.

பத்து நிமிடத்தில் புல்வெளியின் அடர்த்தியிலிருந்து, தாழ்ந்த உறுமல் சத்தம் கேட்டது. கிருபா தன் கால்களை அசைக்க முயன்றான், ஆனால் உடல் எதுவும் செய்யவில்லை. அவன் கண்களில் மரணபயம் தெரிந்தது. அவனுக்கு ஒவ்வொரு மூச்சும் கடினமாக இருந்தது.

பதுங்கி வரும் சிங்கங்களின் உருவங்கள் புல்லின் அசைவில் தெரிந்தன. டாலர் முதலில் வெளிப்பட்டாள், அவள் பெரிய தலை பொன்னிறமாக மின்னியது. பவுண்ட் இடது புறமாக வந்தாள், அடர்ந்த உடல் சூரிய ஒளியில் தெளிவாகத் தெரிந்தது. யென் வலது புறமாகச் சுற்றினாள், வேட்டையாடும் வேகத்தில் அவள் கண்கள் மின்னின.

ரமேஷ் பாதுகாப்பான தூரத்திற்குப் பின்வாங்கினான். கிருபாவின் பார்வை ஏமாற்றமும், துரோகமும் நிறைந்திருந்தது. கடைசி நிமிடத்தில் அவன் கேமராவை எடுக்க முயன்றான், இறுதி படத்தையாவது எடுத்துவிட வேண்டும் என்ற ஆசையில். ஆனால் அவன் கைகள் அசைய மறுத்தன.

டாலரின் பற்கள் அவன் முகத்தருகே வந்தது. அந்த வேகம், பல்லின் கூர்மை, முன்னே விழுந்த அதன் நாக்கு அத்தனையும், படம் பிடித்திருந்தால் அது “மரணம்” என்ற தலைப்பில் இருந்திருக்குமா… அவன் நினைத்து முடிப்பதற்குள் அவன் முகம் மீது பற்கள் இறங்கின. திரிபாதியின் முகம் மட்டுமே ஞாபகம் வந்தது. “இங்கே வா” என அழைத்தார். அந்த அழைப்பு அது வரை ஓசையில்லாமல் அவன் காதில் இருந்திருக்கின்றது, டாலரின் காரணத்தினால் காதில் கேட்கின்றது என நினைத்தான். ரமேஷும், அவன் துரோகமும் அவன் நினைவில் இல்லை. திரிபாதியின் அழைப்பு மட்டுமே தன் இந்த நிலைக்குக் காரணம் என ஓர் எண்ணம் வந்தது.  அதன் பின் வலி மட்டுமே அவனிடம் மிஞ்சியது. பிறகு அதுவும் இல்லை.

சிங்கங்களின் சத்தம் புல்வெளியில் எதிரொலித்தது. ரமேஷ் திரும்பி நடந்தான். எதிர்காலம் அவனுக்காகக் காத்திருக்கின்றது எனச் சொல்லிக் கொண்டான். கிருபா இருக்கும் திசையைப் பார்த்து “சாரி கிருபா… எனக்கு வேறு வழி தெரியவில்லை…” என்றான். வண்டியை மொம்பாசா பார்த்துத் திருப்பினான்.  ” என் வெற்றிக்குக் காரணம் என் அறிவும் திறமையும். உன் சாவுக்குக் காரணம் உன் முட்டாள்தனம். . திரிபாதி வீட்டில் சொதப்பி விட்டாய்.. அதுதான் உனக்கு இந்த முடிவு. உனக்கும் இந்தக் காரணம் புரியும். ” என முணுமுணுத்தான்.  கிட்டத்தட்ட டிசம்பர் மாதம் இருபத்தி ஏழாம் நாள் நள்ளிரவில் கிருபா தன் வீட்டுக்கு வந்து நின்றது அவனுக்கு ஞாபகம் வந்தது.

டிசம்பர் 27, 2020

“திரிபாதி வீட்டில் என்ன நடந்துச்சு..” ரமேஷின் குரலில் கடும் சினம் இருந்தது.

“சாரி ரமேஷ்…தப்பு நடந்து போச்சு..”  கிருபாவுக்கு மூச்சு வாங்கியது. வேர்த்திருந்தது, கையெல்லாம் நடுங்கியது. ரமேஷ் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து தன் போனை எடுத்து கடிகாரத்தினைப்  பார்த்தான். 2:30am என நேரம் காட்டியது.

“ஏண்டா பதட்டம் ஆகறே.. என்ன காரணம்? …நான் சொன்ன மாதிரி அவருடைய கம்யூடரின் அருகே இருந்த ப்ரிண்ட் அவுட்டை எடுத்துக் கொண்டாய் அல்லவா… அவருடைய கம்யூட்டரில் வைரஸ் ஏற்றினாய் அல்லவா…. யாரும் பார்த்திட்டாங்களா? ”

“டேய் நீ சொன்ன மாதிரிதானே மாத்திரை கொடுத்தேன். அந்த கிழம் சாப்பிடவில்லை போல.. நான் கம்யூட்டரில் வைரஸ் ஏற்றுகையில் பின்னால் வந்து நின்று, சப்தம் போட ஆரம்பித்தது…பயத்தில் அவரை தள்ளினேன், படிகளில் உருண்டு விழுந்து விட்டார்… மூச்சுப் பேச்சே இல்லை…”

“என்னடா சொல்லறே… அந்த ஆள் நோபல் பரிசு வாங்கினவர்டா..ஏதாவது சந்தேகம் வந்தால் அங்கு வேலை செய்த எல்லாரையும் சிமோன் கோமுவின் ஆட்கள் அடித்து துவைத்து விடுவார்கள். அது சிமோனின் வீடு, அவர் சிமோனின் நண்பர்.”

“நான் அவரிடம் ஒரு மாதமாக வேலைக்கு இருக்கேன். நான் கரெக்டாக ஒன்பது மணிக்கு அவருக்கு மாத்திரையெல்லாம் எடுத்துக் கொடுத்து விட்டு கிளம்பிட்டேண்டா.. நமது பிளான் படி மாத்திரையை மாத்தித்தான் கொடுத்தேன். நீ அதை சாப்பிட்டால் அவர் தூங்கிடுவார்னு சொன்னியே…நான் திரும்ப நள்ளிரவு போய் கதவு திறந்தால் தூங்கிக்கொண்டுதான் இருந்தார். அப்புறம் பார்த்தால் பின்னால் நிற்கின்றார். என்னடா மாத்திரை கொடுத்தே…. உன் தப்புதான்..”

 “நீ அவர் மாத்திரை சாப்பிடுவதை பார்த்தியா…”

“எப்படிடா பார்க்க முடியும்… அந்தாளுதான் கிளம்பு, நான் சாப்பிட்டுக்கறேன் சொன்னானே..”

“முட்டாள், ஏதாவது காரணம் சொல்லி இருந்திருக்கனும்….”

“இந்த படத்தை பாரு, கிழே விழுந்த பின்னாடி எடுத்தேன்…” தன் போன் கேமராவினை காட்டினான்.

ரமேஷ் உற்றுப்பார்த்தான். “படியில் இருந்து உருண்டு விழுந்த போஸில்தான் இருக்காரு, வயசானவர், இருட்டில் கண் தெரியாமல் விழுந்தார், ஆக்ஸிடெண்ட் என நினைக்க வாய்ப்பு உள்ளது. சரி போட் எங்கே. இது என்ன என்னோட டீ சர்ட்…இதை ஏண்டா போட்டு போனே..”

“நான் கிளம்பும் போது நீ தூங்கிட்டே.. சட்டையில் கெட்ச் அப் சிந்திட்டேனா, அதுதான் உன் டீசர்ட் எடுத்து போட்ட்டுட்டு போனேன்..”

“ஏண்டா பொன்னு பார்க்கவா போறே..என்னடா இது.. என்கிட்ட சொல்லறது இல்லையா..”

“உனக்கு முக்கியம் எனில் நீ முழிச்சி இருந்திருக்கலாம் இல்லையா, ஏன் தூங்கினே,.. நானே பயந்து போய் இருக்கேன்.. கேள்வியா கேக்கற…”

“சரி விடு. உன்னைச் சந்தேகப்பட மாட்டாங்க. உங்கப்பாவும், திரிபாதியும் நைரோபியில் ஒன்னா படிச்சவங்க. நீ அவர் எப்ப இங்க வந்தாலும் ஹெல்ப் பண்ணற, அதனாலே உன் மேல சந்தேகம் வராது..”

“இந்த கம்யூட்டர்ல என்னடா இருக்கு”

“பெட்ரோல், டீசல், நிலக்கரி , இயற்கை எரிவாயு போல எரிசக்தியைத் தரும் புதிய ஆற்றல் ஒன்றை வேதியியல் சாலையில் தயாரிக்கலாம் என்கின்றார், அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? நான் அவரிடம் ஹைஸ்கூல் பேப்பருக்காக பேட்டி எடுக்கப் போகையில் என்னிடம் அந்த காகிதத்தைக் காட்டி படிக்கச் சொன்னார். எனக்கு எல்லாம் புரிந்து விட்டது” – ரமேஷின் கண்களில் கனவு விரிந்தது.

“உனக்குப் புரிந்து விட்டதல்லாவா, அப்புறம் ஏன் அதை நான் எடுத்து வரனும், அவரை வேறு…” குழப்பமாய் கிருபா கேட்டான்.

“அறிவியல் ஆய்வெல்லாம் ஒரு முறை படித்துப் புரிந்து கொள்ளக் கூடியதல்ல…”

“எனக்கு இதெல்லாம் புரிவதில்லை. இப்ப என்ன ஆப்ஷன் இருக்கு….”

“நம்மிடம் எந்த ஆப்ஷனும் இல்லை, சிமோன் திரிபாதியின் நண்பர், பார்ட்னர்.திரிபாதி இயற்கை எரிவாயு சர்வே எடுக்க சிமோனுக்கு உதவுகின்றார். நாம் யாருக்கும் சந்தேகம் வராமல் தப்பினால் போதும் ”

“சிமோன் என்னை முழுக்க நம்புகின்றார். அவரும் அப்பாவுடன் பள்ளிக்கூடம் படித்தவர்.. அவருக்கு என் குடும்பத்தைத் தெரியுமே.”

“உங்கப்பாவை தெரியும்… உன்னை தெரியாதே..அதனால்தான் நாம் கவனமாக செய்யனும், சிமோனுக்கு சந்தேகம் வந்தால் நம்மை கொன்றுவிடுவார், இல்லாவிட்டால் அவருடைய மீன் தொழிற்சாலையில் அடிமையாக்கி விடுவார்.”

“என்னிடம் நிறையச் சொல்லிக் குழப்பாதே…”

“திட்டப்படி நான் கொடுத்த மூன்று மாத்திரைகளை அவர் தினமும் இரவு சாப்பிடும் மாத்திரைக்குப் பதிலாகச் சாப்பிட்டு இருந்தால்… அவர் எழுந்திருக்க முடிந்து இருக்காது…நீயும் கம்யூட்டரில் காப்பி செய்து விட்டு, அவர் கம்யூட்டரில் வைரஸ் போட்டு விட்டு எல்லா பைலையும் அழித்து விட்டு வந்திருக்கலாம். ”

“ நான் என் வேலை முடிந்த பின்னர் அங்கேயே தங்கி இருந்திருக்கனுமா?” கிருபாவின் குரலில் எதையோ தவறவிட்டுவிட்டோமோ என்ற தவிப்பு இருந்தது.

“என்றைக்காவது அங்குத் தங்கி இருக்காயா?” ரமேஷ் எதிர்க்கேள்வி கேட்டான்.

“இல்லை”

“அப்புறம் நீ அங்கேயே தங்கியிருந்தால் சந்தேகம் வந்திருக்கும். அதுதான் என் வீட்டுக்கு வந்து விட்டு நள்ளிரவில் திரும்பப் போகச் சொன்னேன்.  மாத்திரையும் வேலை செய்ய மூன்று மணி நேரம் ஆகும்” ரமேஷிடம் மீண்டும் நம்பிக்கை திரும்பி வந்திருந்தது.

“இனி என்னடா செய்வது”  கிருபாவுக்கு ரமேஷின் ஆமோதிப்பு தேவைப்பட்டது.

“ஒன்றும் செய்ய முடியாது”

“நம் உயிர் போய் விடக் கூடாது…” கிருபா தனக்குத் தேவையானதை முன் வைத்தான்.

“பயப்படாதே,. ஒரு விதத்தில் மரணம் சிமோன் வீட்டில் நடந்தது நல்லதுதான்.. விஷயம் யாருக்கும் தெரியாமல், தன் பெயர் கெடாமல் சிமோன் பார்த்துக் கொள்வார்…நாம் திரிபாதியின் ஆராய்ச்சியைத் தொடர பணம் திரட்டனும்.  எவ்வளவு பணம் வேண்டுமென பட்ஜெட் போடறேன்” ரமேஷ் தீர்மானமாக சொன்னான்

“ஓர் உயிர் போயிடுச்சுடா.. எனக்கு என் மேலேயே பயமா இருக்கு..”

“அடப்பாவி படியில் பிடித்துத் தள்ளி விட்டு , இப்ப வந்து நல்ல பிள்ளை மாதிரி பேசற…சரி தூங்கு.. நான் பார்க்கின்றேன்..”  ரமேஷ் கேலியாக சொன்னான்.

“நீ என்ன பண்ணப் போற…”  ஆளை விட்டால் போதும் என்ற இடத்தில் கிருபா இருந்தான்.

“உனக்கு என்னடா வேதியியல் தெரியும்? நீ போய் படு… டென்ஷன் ஆகாதே… நாளைக்கு எப்படியும் கோமுவின் ஆட்களும், போலீசும் விசாரணைக்கு வருவார்கள். உன்னிடம் வீட்டுச் சாவி இருப்பதால் அவசியம் உன்னைத் தேடி வருவார்கள். அவர்கள் முன்னால் பதற்றப்படாமல் இருக்கும் வழியை யோசி… நான் வேதியியல் நிபுணன், என் வேலையைச் செய்கிறேன். நமக்குப் பணமழை பெய்ய வேண்டுமல்லவா?”

சொல்லும்போது ரமேஷின் முகத்தில் ஓர் இறுக்கம் படர்ந்தது. உதடுகளின் ஓரங்களில் அடக்க முடியாத ஆர்வம் துடித்தது. இறுகிய கைகளின் நரம்புகள் , அவனது உடல் முழுவதும் ஒரு வேட்டைக்காரனின் விழிப்புணர்வு பரவியிருந்தது. அதற்கு முந்திய மாதம் டிசம்பரில் பேராசிரியரைச் சந்தித்தது நினைவுக்கு வந்தது. அன்று பேராசிரியரின் உற்சாகமும், உலகத்தையே புரட்டிப் போடும் படைப்பு என்று சொன்னதெல்லாமும் சேர்ந்து, வேட்டையில் மானைப் பிடித்த சிங்கம் போல் தன்னை அறியாமலேயே அவன் நிமிர்ந்து நின்றான். அந்த டிசம்பர்  மாதம் 20 தேதியை இனி காலமெல்லாம் மறக்க இயலாது எனச் சொல்லிக் கொண்டான். வாழ்வினை மாற்றிய நாள் என அவன் மனம் சொன்னது.

டிசம்பர்  20, 2020

“உங்கள் நேரத்திற்கு நன்றி, பேராசிரியர் திரிபாதி. இது எங்கள் பள்ளி இதழுக்கு ஒரு சிறந்த கட்டுரையாக அமையும், நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானியைப் பேட்டிக் கண்டது எனக்கும் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது” என்று ரமேஷ் கூறினான். பேராசிரியரைத் தனது பள்ளி இதழுக்குப் பேட்டி எடுக்க வந்திருந்தான்.  “இங்குத் தங்குவதெல்லாம் எப்படிச் செல்கின்றது. வசதியாக இருக்கின்றதா?”

“நான் உன்னிடம் பேட்டியில் சொன்னது போல எனக்கு லாமு புதிதல்ல,பிறந்தது இங்குதான்.  நானும் சைமன் கோமுவும் நெடு நாள் நண்பர்கள். நைரோபியில் படித்தோம். லண்டனில் படித்தோம். நான் அங்கேயே இருந்து விட்டேன். அவன் ஊருக்கு வந்துவிட்டான். அவன் அழைப்பில் இங்கு மூன்று மாதமாக இருக்கின்றேன். கல்லூரியில் சபாடிக்கலில் இருக்கின்றேன்..” பேராசிரியர் பதில் அளித்தார்.

ரமேஷ் கவனமாகத் தனது குறிப்பேட்டைப் பையில் வைத்தான். அவன் கண்கள் திரிபாதியின் மேசையில் சிதறிக் கிடந்த காகிதங்களின் மீது தங்கின. “புதிய எரிபொருள் மூலம்” என்ற தலைப்பு அவனைக் கவர்ந்தது.

பேராசிரியர் அவன் கண் செல்லும் திசையைக் கண்டார். “அது என் படைப்பூக்கம் மிக்க வேலை. இப்பொழுது இதில்தான் வேலை செய்து கொண்டு உள்ளேன். இதை இன்னமும் யாரிடமும் சொல்லவில்லை.  உன்னிடமே முதலில் சொல்கின்றேன். இதன் காரணமாக என் வாழ்வு முற்றிலும் மாறப் போகின்றது.  இந்தப் படைப்பு உலகையே புரட்டிப் போடப் போகின்றது படித்துப் பார்க்கின்றாயா? இப்போதைக்கு இது இந்த காகிதத்திலும் , இந்த கம்ப்யூட்டரிலும் மட்டுமே உள்ளது. ஆகவே இங்கேயே படிக்க வேண்டும். வெளியில் இதைப் பற்றிப் பேசக் கூடாது..” பேராசிரியர் மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.

ஆவலுடன் தலை அசைத்தான். தொழில் முறை விஞ்ஞானி ஒருவரின் வேலையைப் படிக்கும் வாய்ப்பு வந்தது அவனுக்கு மிகச் சந்தோஷமாக இருந்தது. பேராசிரியர் அந்த ப்ரிண்ட் அவுட்டை அவன் கையில் கொடுத்தார்.

புரட்டினான், பதினான்கு பக்கங்கள், ஏகப்பட்ட வேதியியல் சமன்பாடுகள், நிறையப் புதிய எரிபொருளின் குணம் , செயல், அது வேலை செய்யும் முறை பற்றிய விளக்கம் இருந்தது. பத்து நிமிடம் புரட்டிப் பார்த்தான். அவனையே பேராசிரியர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் முகத்தில் ஓடும் அசைவுகளை அவர் படித்துக் கொண்டிருந்தார் என ரமேஷுக்கு தோன்றியது.

அவரிடம் திரும்பக் கொடுத்தான். “அருமையான வேலை சார். நன்றாக வரட்டும். இது சாத்தியமா.?” எனக் கேட்டான்.

“உனக்குப் புரிகின்றதா?.. நீ என்ன நினைக்கின்றாய்..” பேராசிரியர் கேட்டார். அவர் முகத்தில் ஓர் ஆர்வம் இருந்தது.

“கிரிஸ்டல் க்ளியராக புரிகின்றது சார். நானும் வேதியியல் நிபுணன்தானே. பார்த்ததும் புரிந்து கொண்டேன்..இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினால் உலகே மாறிப்போகும்.” ரமேஷ் தன் வேதியியல் அறிவினை முன் வைத்தான்.

ஏதோ சொல்ல வந்த பேராசிரியர், அவனுடைய பதிலைக் கண்டு சொல்ல வந்ததை நிறுத்திக் கொண்டார்.”நீ சொல்லு, நான் மேம்படுத்துகின்றேன்.. “ என திரிபாதி சொல்கையில் அவர் கேலியாகச் சிரிப்பது போல ரமேஷுக்கு இருந்தது.

ஈகோ அதிகமான மனிதர் என மனதில் சொல்லிக் கொண்டான்.

வெளியே யாரோ கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது..

“சைமன் கோமு வந்துள்ளார். உன்னிடம் அப்புறம் பேசுகின்றேன்.. நீ எனக்கு என்ன மேம்படுத்தவேண்டும் என சொல்லு..” என சொல்லி விட்டு “கிருபா..” என சப்தம் கொடுத்தார். கீழே இருந்து கிருபா ஓடி வந்தான்.

“உன் நண்பனுக்கு நீ கேட்ட மாதிரி பேட்டிக் கொடுத்துள்ளேன். அவனும் என் வேதியியலை மேம்படுத்தச் சொல்லி வழிகாட்ட உள்ளான்..நீ கிளம்பு , சைமன் வந்துள்ளான், நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.. காலையில் வழக்கம் போல் வா..” எனச் சொல்லி விடை கொடுத்தார்.

கிருபாவும், ரமேஷும் படிகளில் இறங்க வந்த பொழுது, அந்த குறுகிய படிகளில் கனத்த உடம்புடன் சைமன் கோமு படி ஏறிக் கொண்டிருந்தார். அவர் பின்னாலும், முன்னாலும் அவருடைய பாதுகாவலர்கள் கைகளில் துப்பாக்கிகளுடன் படி ஏறினர். லாமு பகுதியின் பெரும் செல்வந்தர். அவர் ஆளுகையில்தான் தீவு இயங்கியது என்றே சொல்லலாம். ரமேஷும், கிருபாவும் ஒதுங்கி நின்றனர்.

மேலே வந்த கோமு கிருபாவின் முதுகில் தட்டிக் கொடுத்தார். ரமேஷை பார்த்து சின்ன சிரிப்பொன்றை வழங்கினார். முகத்தில் நட்பிருந்தது. “இவன்தான் அந்த ரமேஷா..” கேட்டார். ரமேஷ் பணிவுடன் தலை அசைத்தான்.

“கிளம்புங்கள்… அப்புறம் பார்க்கலாம்..” என படியைக் காட்டினார். கிருபாவும்,ரமேஷும் படிகளில் இறங்கி வெளியேறி கதவைச் சாத்தும் வரை நின்று பார்த்தார்.திரும்பிய சிமோன் திரிபாதி இரண்டு கண்ணாடிகளில் விஸ்கி ஊற்றுவதை கண்டார். நண்பனைக் கண்ட மகிழ்ச்சியில் அவர் முகம் மேலும் ஒளிக் கொண்டது.

“நம்முடன் பள்ளியில் படித்தவனின் மகன்..” என கிருபா போவதைப் பார்த்து திரிபாதி சொன்னார்.

“அதனால்தான் உனக்கு உதவியாக வேலைக்கு வைத்தேன்.. சூட்டிகையான பையன்..லாமுவில் பெரிய புகைப்படக் கலைஞன்.. எப்படி வேலையில் பொறுப்பாக இருக்கிறானா?”

“என் சாப்பாடு, மாத்திரைகளைக் கவனமாகக் கையாள்கின்றான், பொறுப்பானவன்..அவனிடம் வீட்டுச்சாவி ஒன்றைக் கொடுத்துள்ளேன்..அவன் புகைப்படங்களைக் காட்டினான். ஆறு வருடமாகக் கிழக்கு ட்ஸோவோ பூங்காவில் ஒரு சிங்கக் குடும்பம் ஒன்றைப் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளான். அதன் பெயரைக் கேட்டாயா.. டாலர், பவுண்ட், யென்… சிங்கங்களில் கரன்சி காணும் தலைமுறை”

“நல்ல தலைமுறை போ.. சரி உன் வேலை எப்படிப் போகிறது…”

“நன்றாக போகின்றது.. இந்த விஸ்கியில் நனையும் பனிக்கட்டியைப் போல செல்கின்றது.,.”

“கிருபாவுடன் உன் இளம் ரசிகன் வெளியேறுவதைப் பார்த்தேன்,” என்று சிமோன் கூறினார், வழங்கப்பட்ட பானத்தை ஏற்றுக்கொண்டார். “இவன்தான் அந்தப் பேட்டி எடுக்க வந்த பள்ளி ஆசிரியரா?, என்ன இதழ்”

“ஆமாம் உள்ளூர் உயர்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர். பள்ளி இதழுக்காக என்னை நேர்காணல் செய்ய வந்தான்,” என்று திரிபாதி சிரித்தார், தனது செதுக்கப்பட்ட மகாகனி நாற்காலியில் அமர்ந்தார். “ஆனால் அவன் எனது உண்மையான வாழ்க்கையைவிட எனது புனைவு விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டினான்.”

“புனைவு விஞ்ஞானியா?” என்று சிமோன் கேட்டார், தனது விஸ்கியை மெல்ல உதடுகளில் வைத்து அதன் சிறு துளியைச் சுவைத்தார்.

“கேம்பிரிட்ஜில் நாம் படிக்கையில், அந்த ஷேக்ஸ்பியர் கற்பிக்கும் உதவி ஆசிரியர் பீட்டர் என்னைச் சபித்தது ஞாபகம் இருக்கிறதா, நான் என் வாழ்நாளில் ஒரு கவிதையோ, கதையோ எழுத மாட்டேன் எனச் சொன்னான்? எனக்குக் கற்பனை இல்லை திட்டினான்தானே! அது என் மனதிலேயே நின்று விட்டது.  அவனைத் தோற்கடிக்க நான் ஒரு பெரிய நாவலை எழுதுகிறேன். புரட்சிகரமான ஆற்றல் மூலத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு விஞ்ஞானியைப் பற்றி, அவரது குடும்பம், விவாகரத்து, பெற்றோர், குழந்தைகள், புலம்பெயர்ந்த வாழ்க்கை, ஆப்பிரிக்க அரசியல், ஐரோப்பிய அரசியல், இது ஒரு பெரும் திட்டம்! இலக்கியத்திலும் நான் நோபல் வாங்குவேன்..” பேராசிரியரின் கண்கள் கனவில் விரிந்தன.

“அந்தப் புனைவை ரமேஷிடம் காட்டினாயா…”

 “நான் ரமேஷுக்கு  அதிலிருந்து சில பக்கங்களைக் காட்டினேன். எனது நாவலின் கதாபாத்திரம் மாற்று எரிபொருள் ஆதாரங்களில்  முன்னேற்றம் செய்யும் பகுதி.”

சிமோன் சிரித்தார். “அவர் அது உண்மையென நினைத்தானா?”

“முற்றிலும்,” திரிபாதி தலையசைத்தார். “நான் அவனுக்கு எனது கதாபாத்திரம் எழுதிய புனைவு ஆராய்ச்சிக் கட்டுரையைக் காட்டினேன்.கதைக்காக நான் கண்டுபிடித்த சமன்பாடுகள் கோட்பாடுகளுடன். அவனது முகத்தைப் பார்த்திருக்க வேண்டும், சிமோன். அவன் உண்மையான அறிவியல் ஆராய்ச்சியைப் பார்ப்பதாக நினைத்து மயங்கினான்.”

“நீ அவனைத் பிழைத் திருத்தவில்லையா?”

“நான் என் புனைவுக்கு அவனது எதிர்வினையைப் பார்க்க ஆர்வமாக இருந்தேன், பார்த்த பின்பு சொல்லலாம் என நினைத்தேன்,” என்று திரிபாதி தோள்களை உயர்த்தினார். “ஆனால் சொல்லும் முன் அவன் எனக்கு என்னை மேம்படுத்தும் விதம் பற்றிச் சொல்ல ஆசைப்பட்டான்..”

சிமோன் உடல் குலுங்கிச் சிரித்தார். அவர் சிரிப்பு அவர் நாற்காலியை அசைத்தது. “நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியை மேம்படுத்தும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். நீ கொன்னுட்ட போ” என்று சிமோன் கூறினார், அவரது குரல் லாமுவின் பழைய கட்டிடத்தின் அமைதியுடன் கலந்தது. “உன் நாவல் வெளிவந்ததும், நாம் அதை  ரமேஷுக்குக் கொடுப்போம்… அவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்… ஹா ஹா!” சிமோன் சிரிப்பில் தன் விஸ்கி தளும்புவதைக் கண்டார்.

திரிபாதி ஜன்னலுக்கு வெளியே கொஞ்சத் தூரத்தில் தெரிந்த கடலை பார்த்தார். அருகில் படகினை அவிழ்த்துக் கிளம்பத் தயாராகும்  கிருபாவை பார்த்தார். எனக்கு ஒரு மகன் இருந்து இருந்தால் இவன் போல இருப்பான் என நினைத்தார். அவனுக்குப் பக்கத்தில் கடல் காற்றில் முடி பறக்க ரமேஷ் வேட்டைக்கு தயாரான விலங்கு போல நின்றிருந்தான். ரமேஷ் அவரிடம் பேட்டி எடுத்த பொழுது இருந்த ஆர்வமும், உற்சாகமும் போய், ரமேஷிடம் இறுக்கம் வந்திருந்து இருந்தது. அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

தன்னை ஒரு பார்வை தொடுவதை உணர்ந்த ரமேஷ், மேலே பார்த்தான், தூரத்தில்  பலகனியில் நிற்கும் திரிபாதி தெரிந்தார். விரிந்த இந்தியப் பெருங்கடலை நோக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு நான் தெரிவேனா எனக் கேட்டுக் கொண்டான். படகையும், அதை அவிழ்த்துக் கொண்டிருந்த கிருபாவையும் பார்த்தான்.  இந்தப் படகும், கிருபாவும், திரிபாதியும் என் வாழ்வினை மாற்ற ஏதோ ஒரு வகையில் காரணம் ஆவார்கள் எனத் தனக்குச் சொல்லிக் கொண்டான். அவன் மனம் வேட்டைக்களம் ஒன்றை உருவாக்கியது. அவன் படித்த “புதிய எரிசக்தி “ ஆய்வின் வேதிவினைகளை வேட்டை விலங்காக வைத்தான். வேட்டைக்குத் தயாரானான்.

தன்னை பார்த்து நிற்கும் ரமேஷை பேராசிரியர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“வெளியே என்ன பார்க்கின்றாய்..” சைமன் கோமு கேள்வி எழுப்பினார்.

“அதோ அங்கே…படகுத்துறையில் ரமேஷ் கிருபாவுடன்  நிற்கின்றான். பொருள் காரணமாகவே, செயல் கொண்டு, குணம் வழியே அறிவு உருவாகும் என வைசேசிகம் சொல்லும்,பதிப்பிக்கப்பட்டால், புனைவும் ஒரு பொருள் அல்லவா? அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்து இந்த நாவல் படிக்க முடிஞ்சா, அவன் குணத்துக்கு அவன் நெஞ்சே நின்று விடக்கூடும்…”  சொல்லி விட்டு கையில் இருந்த விஸ்கியை கடலை நோக்கி உயர்த்தினார். “என் புனைவுக்கு..” என்றார்.  தூரத்தில் ரமேஷும் இவரை நோக்கி கையை ஆட்டினான்.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.