இந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்ட மாமனிதர்  ஜே .பி.

சுதன்ஷு ரஞ்சன் என்னும் ஒரு  பத்திரிகையாளர் சமூகப் பொறுப்பாளி ஆங்கிலத்தில்  எழுதிய Jayaprakash Narayan –Prophet of Peoples Power  என்னும் நூலை சமீபத்தில் படித்தேன். நேஷ்னல் புக் டிரஸ்ட்  இந்தியா வெளியிட்ட புத்தகம்.  2002 ல்  முதற்பதிப்பு கண்ட படைப்பு. 295 பக்கங்கள். வாசகனை  உள்ளே அனுமதிக்கும் நேர்த்தியான ஆங்கிலம்.

எனக்கு ஜேபியை நிரம்பப்பிடிக்கும். நான் காந்தி அமைதி நிறுவன அமைப்பில் என்  கல்லூரி நாட்களில் தொடர்புடையவன்.தருண் சாந்தி சேனா அமைப்பில் பங்கேற்றவன்.  தேச பிதா காந்தியின்  அணுக்கம் மகாதேவ  தேசாயின் புதல்வர் நாராயண் தேசாய் தலைமையில் பெல்காம் அருகே கடோலி கிராமத்தில் ஒரு மாதம் நடைபெற்ற அகில இந்திய கல்லூரி மாணவர்கள் முகாமில் (1972) பங்கேற்றவன். அந்த முகாமில் ’ நாடு விடுதலை அடைந்து 25 ஆண்டுகளில் நாம்  வென்றதும் தோற்றதும்  என்ன? என்பதே பேசப்பட்ட பொருள்.

1975 கோடையில் கோவை வ. உ .சி மைதானத்தில் ஜேபி முழுப்புரட்சியைப் பேச வருவார் எனக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கன மக்கள் கூட்டத்தில் நானும் உண்டு. அவர்  கோவைக்கு  எங்கே வந்தார். தேசத்திற்கு நெருக்கடி நிலைதான்  பிரகடனமாயிற்று.  வரலாற்றில்   பாரதிய ஜனதாக்கட்சி  சொகுசாய்ப்பயணிக்கத் தளம் அமைத்துக்கொடுத்தவர்  இந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் என்று நான் வசை கூறுவதுண்டு….

இனி ’ஜெயப்பிரகாஷ் நாராயண் –மக்கள் யுத்தத்தின் தீர்க்கதரிசி’ என்னும் நூலுக்கு வருவோம்.

தன்னைப்புறக்கணித்துப்போய்விட்ட முதற்காதலிக்கு இந்நூலை சமர்ப்பித்துள்ளார் நூலாசிரியர்  சுதன் ஷூ ரஞ்சன்.  இந்நூல் பேசுவது ஜெயப்பிரகாஷின் வரலாறு.  பிகாரில் பலியா மாவட்டம் சீதப்தியாரா என்னும் ஊருக்கருகில்  அமைந்த பாபர்பனி என்னும் இடத்தில், ஹர்சுதயாள், பூல்ராணி தம்பதியர்க்கு 11.10.1902 அன்று ஜெயப்பிரகாஷ் நாராயண் நான்காவது  குழந்தையாகப்பிறந்தவர்.

1920 ல் மகாத்மா காந்தி  பாட்னா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பல்லாயிரக்கனக்கான மக்கள் கூடி அவர் உரையைக்கேட்கிறார்கள். ஜெயப்பிரகாஷ் முதன் முதலாக காந்தியைப்பார்க்கிறார். ’படிப்பதைத் தொடர்வதா இல்லை விடுதலைப்போரில் இறங்குவதா’ என குழம்பிப்போகிறார். 1921 ஜனவரியில் ஜவகர்லார் நேருவும் மவுலானா அப்துல் கலாம் ஆசாதும்  பாட்னா வருகிறார்கள். மவுலானாவின் பேச்சு ஜேபியை சிந்திக்க வைக்கிறது. ‘பிரிட்டிஷாரின்  மெக்காலே கல்விமுறை நம்மை அடிமைகளாய்க் கட்டிப்போடுவதற்காகத்தான்..அதனை  விரைவில் தொலைப்பது  ஒன்று மட்டுமே விவேகம்’ என்பதை ஜேபி உணர்கிறார்.

பிராஜ் கிஷோர் என்னும் பிகார்   காங்கிரஸ் மாநிலத்  தலைவரின் மகளான பிரபாவதியைத் திருமணம் செய்துகொள்கிறார். மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லத் திட்டமிடுகிறார். ஜப்பான் வழியாகப்பயணித்து அக்டோபர் 8, 1922ல் சான்ஃப்ரான்சிஸ்கோ நகருக்கு வந்து சேருகிறார். அப்போது ஜேபிக்கு  இருபது வயது. ஒருநாளைக்கு பத்து மணி நேரத்துக்கு மேலாக உழைக்கிறார். வார ஓய்வு என்பதே கிடையாது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் மாணவராகிறார். ஓட்டல்களில் பாத்திரங்கள் துலக்குகிறார். வெயிட்டர் வேலை செய்கிறார்.  ஷூ துடைக்கிறார். ஓட்டல்களில் டாய்லெட் சுத்தம் செய்கிறார். அமெரிக்கக்  குளிரில் கட்டில் இல்லாமல் தூங்குகிறார். கலிஃபோர்னியா  பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டணம் இருமடங்காகிறது.  அயோவா வுக்கு குடி பெயர்கிறார். அயோவா பல்கலைக்கழகக் கட்டணம் அவரால்  சமாளிக்க முடிகிறது. பின்னர் இங்கிருந்து விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து  சமூக அறிவியல்  படிக்க ஆர்வம் கொள்கிறார். அமெரிக்க பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினர் ஆப்ரகாம் லேண்டியொடு தொடர்பு ஏற்படுகிறது. மார்க்ஸ், லெனின், பிளெகானோவ், எம் என் ராய், ரோசா லக்செம்பர்க் ஆகியோரின் நூல்களைக் கற்கிறார். லெனின் 1924 ல் மரணமடைகிறார். 1925ல் ஜேபி கம்யூனிஸ்ட்  உறுப்பினர் ஆகிறார். சிகாகோவின் கோமெஸ்  அவரை  மார்க்சியம் பயில மாஸ்கோ செல்லப் பணிக்கிறார். சோவியத் அரசு உணவு தங்குமிடம் கல்வி அனைத்தும் இலவசமாய்த் தருகிறது. ஆனால்  பயணக்கட்டணம் தர மறுக்கிறது. பொருளாதாரச்சுமையை  ஜேபியால் சமாளிக்க இயலவில்லை.  ஒஹையோ பல்கலைக்கழகம் சென்று படித்து   BA  ஆகி 13/8/29 ல் MA வும் ஆகிறார்.  ஜேபியின் தாயார் உடல்நிலை சரியில்லாது போகவே இந்தியா திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

ஏழு ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருந்தார். ஐந்து பல்கலைக்கழகங்களில் பயின்றார். உடலுழைப்பு ஒன்று  மட்டுமே   மனித வாழ்க்கையை  முற்றாய்ப்  புரிந்துகொள்ளத் துணை செய்யும் என்பதனை ஜேபி   அமெரிக்காவில் தெளிந்தவர். சோஷாலாஜி ஆசிரியர் எஃப் ஈ. டம்லி ‘ the germs of leadership’ the ideals of human welfare’  அமையப்பெற்ற மனிதர் ஜேபி என்று  புகழாரம் சூட்டினார்.  இந்தியாவுக்குத்திரும்பும் சமயம் ஜேபி லண்டனில்  சிறிது காலம் தங்கியிருந்தார். அங்கு டாக்டர். ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார். பொதுவுடமை இயக்கத்தின் கிளெமென்ஸ் தத்தைச் சந்தித்துப் பேசினார். ரஜினி பாமே தத்தின் சகோதரரே இந்த கிளெமென்ஸ் தத் ஆவார். இருவருமே பிரிட்டனின் பொதுவுடமை இயக்கத்துத் தலைவர்களாவர்.

ஜெயப்பிரகாஷ் அமெரிக்காவில் இருந்த காலங்களில் அவரின் மனைவி பிரபாவதி மகாத்மாவின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார்.ஜேபியின் அனுமதியோடுதான் இது நிகழ்ந்தது. ஜேபி தாயகம் திரும்பியதும் பிரபாவதி  கணவரிடம்  ’  தாம்பத்திய உறவை மட்டும்  இனி ஒரு போதும் தான்  வைத்துக்கொள்வது  இல்லை’ என்கிற விரதம் எடுத்திருப்பதைக்குறிப்பிடுகிறார். ஜேபி சற்று அதிர்ச்சியுறுகிறார். சபர்மதி ஆஸ்ரம வாழ்க்கை பிரபாவதியை மாற்றியிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்கிறார். இதனைக்கேள்வியுற்ற காந்திஜி’ உமக்கு அது அவசியம் தேவை எனில் நீர் மறுமணம் செய்து கொள்ளலாம்’ என்கிற யோசனையை வைக்கிறார்.’ மறுமணம் செய்துகொள்ளத் தன்னால் முடியாது’ என்று ஜெபி மறுத்துவிடுகிறார். பிரபாவதியின் சுயமுடிவுதான் இந்த விரதம்.   காந்திஜிக்கும்   தான் எடுத்த இந்த முடிவுக்கும் சம்பந்தமில்லை என்பதை தன் கணவருக்கு பிரபாவதி  எடுத்துச்சொல்கிறார். காந்திஜியும் கஸ்தூரிபாவும் பிரபாவதியை தன் சொந்த மகள் போல் பாசம் காட்டி அரவணைக்கிறார்கள்.

வாழ்க்கை முழுவதும் ஜேபியோடு நிழல் போல் இருந்தவர் பிரபாவதி. ஒரே அறையில் இருவரும் படுத்துக்கொள்வார்கள். படுக்கை மட்டும் வேறு வேறு. பிரபாவதியே ஜேபிக்கு உணவு சமைத்துக்கொடுப்பவராக  இறுதிவரை இருந்தார். ஜேபியும் பிரபாவதியும் இணையற்ற தம்பதியராய் கடைசிவரை வாழ்ந்தவர்கள்.

அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய போது  பரிசுத்த கம்யூனிஸ்ட் ஆக இருந்த ஜேபி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பாட்னாவில் 5/6/1974 ல் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அவரே சொல்கிறார்.

‘When I returned from America I was a pure communist .But I joined the congress. Why did  (I) not join the Communist Party?.They said Mahatma Gandhi was the agent of hoarders, capitalists. Jogelkar delivered a lecture at Chaupati,Bombay ,that Gandhi was an agent of the capitalists and the   congress was  the organization of the  Capitalists. ( Iபக்கம் 38)

ஜெயப்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவுத்தலைவராய் செயல் பட்டார். அலஹாபாத்தில் ஜவஹர்லால் நேருவோடு இணைந்து பணியாற்றினார். பிரிட்டிஷ் லேபர் பார்ட்டி, பிரிட்டிஷ் டிரேட் யூனியன் காங்கிரஸ் ஆகியற்றோடு  ஆழ்ந்த தொடர்பு வைத்திருந்தார். பிரபாவதியும்  நேருவின் துணைவியார் கமலாவும் மிக அன்யோன்யமாகப் பழகிக்கொண்டனர். ஜேபி நேருவை’ மரியாயதைக்குரிய சகோதரா’ என்றுதான் விளித்துக் கடிதம் எழுதுவார்.

1932ல் சென்னையில் ஜேபி  முதன்முதலாய்க் கைது செய்யப்படுகிறார். அது பற்றி ‘ ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ காங்கிரசின் மூளையே சிறையில்’  என்று  செய்தி வெளியிட்டது. ராஜாஜி  ஜேபியின் கைது  செல்லாது என்று உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.  கைது ஆணை  பம்பாய் ஆட்சியர்களால் வெளியிடப்பட்டது அதற்கு  உயர்நீதி மன்றம் செவிசாய்க்கவில்லை.  ஜேபி விலங்கு பூட்டி சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டார். இயற்கை அழைப்புக்கு மண் சட்டி கொடுத்திருந்தார்கள். ஜேபியின் துணைவியார் பிரபாவதி  அலஹாபாத்தில்  கைது செய்யப்பட்டு லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார். கணவனும் மனைவியும் தேசத்திற்காகா ஆங்காங்கே சிறைவாசம் இருந்தார்கள்.

கான்பூர் சதி வழக்கு மற்றும் மீரட் சதி வழக்கு தவிர்த்து  விடுதலை இயக்கத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு ஏது பங்கு என்று நூலாசிரியர் சுதன்ஷூ ரஞ்சன்  காட்டமாய்க்குறிப்பிடுகிறார்.அமெரிக்காவிலிருந்து ஜேபி திரும்பியபோது பொதுவுடமை இயக்கத்தார்  இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்று இருந்தால் தானும் அவ்வழி சென்று இருக்கமுடியும் என்பதே ஜேபியின் கருத்து என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். 1928 ல்  நடந்த ஆறாவது கம்யூனிஸ்ட் இண்டர்நேஷ்னல் காங்கிரஸ்  தேசிய சக்திகளை ஜனநாயக சோஷலிச சக்திகளை சமூக ஃபாசிஸ்ட் ( Social Fascist)   என்று மட்டம்தட்டி தீர்மானித்ததை ஜேபி ஏற்க மறுக்கிறார். இது லெனினைப் புறந்தள்ளி ஸ்டாலினைத் தூக்கிப்பிடித்த செயல் என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

17 மே 1934ல் பாட்னா   அஞ்சுமான் இசுலாமியா ஹாலில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி ( CSP)   துவக்கப்பட்டது. பாட்னா மாநாட்டில் ஜெயப்பிரகாஷ்  அமைப்புச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பம்பாய் நகரில்   சோஷலிஸ்ட்  மாநாடு கூடியது. ஜேபி பொதுச்செயலர் ஆனார்.  நரேந்திர தேவா,மசானி, அசோக் மேதா,அச்யுத் பட்வர்தன், ராம் மனோகர் லோகியா ஆகியோர் பிரதான உறுப்பினர்களாயினர். சர்தார் வல்லபாய் படேலுக்கு ’ காங்கிரஸ் சோஷலிச கட்சி’ பிடிக்கவில்லை.  ’சோஷலிஸ்ட்கள்  ஜவஹர்லால் நேருவின் பெயரையும் உபயோகித்துக்கொண்டு  வருகிறார்கள்.  CSP  யைத்  துவக்கியவர்கள்  கழிசடைகள்’ என்றார் படேல். இந்தியப் பொதுவுடமைக்கட்சி ஜூலை 1934ல் தடை செய்யப்பட்டது. பி .சி ஜோஷியும் ஜேபியும் நண்பர்கள். ஈ.எம் எஸ் நம்பூதிரிபாட், ஏ கே கோபாலன், கிருஷ்ண பிள்ளை, ஜீவானந்தம், சுந்தரையா, சோகன் சிங் ஜோஷ் ஆகியோர் சி எஸ் பி யில்  இணைந்தார்கள். இணைந்தாலும் இந்தியப் பொதுவுடமை இயக்கத்திலும்  தொடர்பு வைத்துக்கொண்டனர்.  சோஷலிஸ்ட்  கட்சியைக் கம்யூனிஸ்ட்களின் ஆளுகைக் கீழ்க் கொண்டு வரும் ஒரு சதித்திட்டத்தை கம்யூனிஸ்ட்கள் ரகசியமாய் வைத்திருப்பது அம்பலமாகியது.   இடதுசாரிகள் முற்றாய்   சி எஸ் பி யிலிருந்து விலகிக்கொண்டார்கள். சோஷலிஸ்ட்கள்  காங்கிரஸ் கட்சியில்’’  பிரஷர் க்ரூப் ஆக  நின்று செயல் பட்டார்கள். இதற்கிடையில் இரண்டாம் உலகப்போர்  துவங்கலானது.   இந்தியா  அதனில்  பங்கேற்பதை ஜேபிவிரும்பவில்லை.டிசம்பர் 31, 1939 ல்  ஜேபி ஒரு அறிக்கை வெளியிட்டார்.’ ஏகாதிபத்தியங்களின் யுத்தம் இது. பிரிட்டிஷாருக்காக இந்தியர்கள் சண்டையில் இறங்க முடியாது.  சண்டையில்  இந்தியா இணைவது  பிரிட்டிஷாருக்குக் கீழாகத்  தொடர்ந்து இந்தியா இருத்தலையே சாத்தியமாக்கும். விடுதலை பெற்ற இந்தியாவாகவே இருந்தாலும்  ஏகாதிபத்திய யுத்தத்தில் அது என்ன செய்து விட முடியும்.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழித்துக்கட்டச் சாத்தியமானால் அதனைப்பயன் படுத்திக்கொள்ளலாம்’

யுத்தத்தில் இந்தியா பங்கு கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி ஜேபி இந்திய நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். பிரிட்டிஷ்  அடிமை விலங்கை ஒடித்தெறிய அறைகூவல் தந்தார். காவல் துறையை  நீதிமன்றத்தைப்புறக்கணியுங்கள் என்றார். மக்களாட்சி மலரட்டும் என்று கோஷமிட்டார். அவருடைய வன்முறைக்குத்தூண்டும் பேச்சுக்காக அவர் கொடுஞ் சிறையில் அடைக்கப்பட்டார். நீதி மன்றத்தில் ஜேபியின் எழுத்து பூர்வமான வாக்குமூலம் அவரின் நெஞ்சுரத்தை வெளிப்படுத்தியது.

‘My country is not a party to this war in any manner, for it regards both German Nazism and British imperialism as evils and enemies. It finds that both sides in this war are driven by selfish ends of conquest and domination, exploitation and oppression. ( பக்கம் 67)

ஹசாரிபாக் சிறையிலிருந்து  ஜேபி தப்பித்துச்செல்கிறார். அன்று தீபாவளித் திருநாள். பதினேழு அடி உயரமுள்ள  சிறைச்சுவரத் தாண்டியாகவேண்டும். அறுவர் சிறைச்சாலையை விட்டு வெளியேறினார்கள். ஷாலிகிராம் சிங்,யோகேந்திர ஷுக்லா, சூர்யநாராயண சிங்,ராம் நந்தன் மிஷ்ரா,குலாப் சந்திர குப்தா இவர்களோடு ஜேபி ஆக மொத்தம் ஆறுபேர். நடனமும் பாட்டுமாய்ச் சிறைசாலை இருந்தது.. கொசு வலையைத் தொங்கவிட்டு உள்ளே ஆட்கள் இருப்பதுபோல் காட்சியை உண்டாக்கினார்கள்.   வெளிச்சுவர் அருகே பிரமிட் போன்ற அமைப்பை அவர்களே தங்களுக்குள்  ஏற்படுத்தினார்கள். தலை அணியும் ஆடையைப் பயன்படுத்தி துணி ஏணி  அமைத்துக் கொண்டார்கள்.சிறையிலிருந்து தப்பினார்கள்.  இரண்டு நாட்கள் ஓடி ஒரு சிறு கிராமத்தைக்கண்டார்கள். நாற்பத்தைந்து மணி நேரத்திற்குப் பிறகு முழு உணவு அவர்களுக்குக் கிடைத்தது. பழந்துணியும்  காலுறையும் அவர்களுக்குப் பெறமுடிந்தது.  சில சமயம் மாட்டு வண்டியிலும் பயணித்தனர்.நான்கு தினங்கள் காட்டில் பயணித்து  ஒரு மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் ஒருவரிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டு மட்டும்  இருந்தது. ஆனால் அதை எங்கே சில்லறை மாற்றுவது. சாத்தியமே இல்லை. ஒரு நாலணா நாணயத்தைக்கொண்டு அனைவரும் இரண்டு நாள் பசி தீர்த்துக்கொண்டார்கள். ஜேபி மிக அயர்ந்து போயிருந்தார். தோழர்கள் அவரைக் கைத்தாங்கலாய் அழைத்து வந்தனர். ஜேபி சிறையைவிட்டு தப்பிச்சென்றது அறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம் தப்பிச்சென்றவர்களின் தலைக்கு விலை வைத்து அறிவிப்பு செய்தது. அவர்களை  உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடித்து தருவோர்க்கு ரூபாய் ஐயாயிரம் பரிசு  என்றறிவிக்கப்பட்டது. ஜேபியின் தலைக்கு மட்டும் பத்தாயிரம் ரூபாய் எனப் பின்னர்  உயர்த்தி அறிவித்தார்கள்.

 டில்லிக்குச்  சென்றுவிட்ட ஜேபி  ஆஃப்கன் மக்களின் உதவியை நாடலாம் என்று திட்டமிட்டு டில்லியிலிருந்து ராவல்பிண்டிக்கு ரயிலில் பயணமானார்.  ரயிலில் முதல்வகுப்பு.  ஜேபி  நன்கு முகச் சவரம் செய்துகொண்டு ஆங்கிலேய உடுப்பை அணிந்திருந்தார்.இரண்டு சீக்கியர்களும் ஒரு ஆங்கிலேயரும் அவர் பயணம் செய்யும் பெட்டியில் ஏறினார்கள். ‘ இது நேபாளமும் இல்லை பிகாரும் இல்லை. இது பஞ்சாப். சுட்டுவிடுவோம் உம்மை’ என்று விரட்டினார்கள். லாஹூர்  சிறையில் அடைக்கப்பட்ட ஜேபி சித்திரவதை செய்யப்பட்டார். தனிமைச்சிறை. ஒரு வார்த்தைகூட பேசமுடியாத  சூழலில் விடப்பட்டார்.  எண்ணற்ற கேள்விகள் அவரைத்துளைத்தன. சிறையிலிருந்து எப்படித்தப்பினாய். ஏன் தப்பினாய், பின் எங்கே தங்கினாய் யார் உனக்கு உதவினார்கள் நேபாளத்திற்கு ஏன் சென்றாய், ராவல்பிண்டியில் உனக்கு  என்னவேலை என்று அவரைத் துளைத்து எடுத்தார்கள். ‘காந்திக்கும் நேருவுக்கும் பிறகு நீதானே  மரியாதைக்குரிய தலைவர். உண்மையைச்சொல் எங்கள் வேலையை நாங்கள் காப்பாற்றிக்கொள்ளவேண்டாமா, எங்கள் குடும்பம் பசியாறவேண்டாமா என்று வினாக்கள்  காவலர்களிடமிருந்து வந்துகொண்டேயிருந்தன.  ஜேபி லாஹூர் சிறையிலிருந்து ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டார். லோஹியாவும் அவருடன் ஆக்ரா சிறக்கூடத்திற்கு அனுப்பப்பட்டார்.இரண்டு பிரதான விஷயங்கள் அவரைச்சிறையில் வாட்டி எடுத்தன. ஒன்று  உலக யுத்தத்தில் காங்கிரசின் நிலைபாடு இரண்டு இந்தியாவை இரண்டாகப்பிரித்து விடுதலை அளிப்பது.

 ராஜாஜிதான் தேசப் பிரிவினையை ஏற்கிறார். இந்தியா இரண்டு நாடுகளாய்ப்பிரியும் என்கிறார். ஜேபி சொல்கிறார். ஒரு உய்ர்நிலைப்பள்ளி மாணவன் கூட அறிவான், இப்படி இந்தியாவைப் பிரிப்பது சமூகத்தில் எத்தகைய பெருங்குழப்பத்தைக் கொண்டுதரும் என்பதை.  சுதன்ஷு ரஞ்சன் இந்த இடத்தில் ‘Vivisection of this country ‘   என்கிற சொற்களைப்பயன்படுத்துகிறார். முப்பதொரு மாதங்களுக்குப்பிறகு  ஏப்ரல் 11, 1946 ஜேபி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்.

காந்திஜியின்  அகிம்சை வழி மீது ஆழ்ந்த பற்றுதல் உடையவர் ஜேபி. ஆயின் அவர் ஒரு வினா வைக்கிறார்.  பிரிட்டிஷாரோடு அகிம்சையைக் கடைப்பிடித்துப் போராடுகிறோம்.  ஜப்பானியர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்தால் பிரிட்டிஷார் தரும் ஆயுதம் வைத்து விடுதலைபெற்ற இந்தியர்கள் போராடுவதா? ஜப்பானியர்கள் மனிதர்கள் இல்லயா?  ஆங்கிலேயர்கள் ஜப்பானியர்களை  ஆயுதம் வைத்து எதிர்ப்பது  வன்முறையல்லவா?. இவை அனைத்துமே மொத்தமாய் முட்டாள்தனம்.’

‘Can freedom  come through  dialogue?’   என்று வினா வைக்கிறார் ஜேபி.

இந்தியாவில்  நடைபெற வேண்டிய இரண்டாவது புரட்சி பற்றி ஜேபி குறிப்பிடுகிறார்.

‘இந்த போராட்டத்தில் நாம் கைதாகக்கூடாது. நாம் சிறை  பிடிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்,கமிஷனர்,, ஆளுனர் வைசிராய் முதலானோர்  ஒவ்வொருவரும் கைது செய்யப்படவேண்டும்’ என்றார் ஜேபி.

All India Railway mens’  Federation, All  India Postal Employees and the Grade IV Staff Union,All India Ordinance Factories  Union, Defence Employees Federation   ஆகிய தொழிற்சங்கங்கள்  ஜேபியின்  வழிகாட்டுதலில்  இயங்கின. உலக அளவில் ஜேபி தொழிற்சங்கத் தலைவரானார்.  இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் ஜேபி பெரு நகர நிறுத்தங்களில் தொழிலாளர்கள் பலரோடு  பேச்சுவார்த்தை நடத்தினார். அஞ்சல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தினார்.

இந்தியாவை இரண்டாகப் பிரிப்பதில் காந்திஜிக்கு விருப்பமேயில்லை. காங்கிரஸ் இந்தியப்பிரிவினையை  ஏற்கக்கூடாது. அப்படி ஒரு சிந்தனை எழுமானால்  பிரிட்டிஷார் இங்கிருந்து  விடைபெற்றபிறகே  அது பற்றி யோசிக்கவேண்டும் என  காந்திஜி எண்ணினார். ஆனால் காங்கிரஸ் காரியக்கமிட்டி  காந்திஜியின் கருத்தை கணக்கில் கொள்ளவில்லை.சர்தார் படேலும் ஜவஹர்லால் நேருவும் காந்திஜியின் கருத்தை ஏற்கவில்லை. இவற்றை எல்லாம் கண்ட மவுண் பேட்டன் காந்திஜியிடம், ‘ Congress is with me, not with you’   என்று  ஏளனமாய்க் குறிப்பிட்டார். பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது இந்தியர்கள் கல்வி கற்றார்கள், இந்து முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருந்தார்கள் என்கிற இரண்டு விஷயத்தை அவர்கள் தொடர்ந்து சொல்வதை  ஜேபி ஏற்க மறுத்தார். பிரிட்டிஷார் ஏதாவது செய்திருக்கிறார்கள் என்றால், அது இந்தியாவை இரண்டாக உடைத்தது மட்டுமே என்று ஜேபி குறிப்பிடுகிறார்.

இந்து முஸ்லிம் கலவரத்தைக்கண்டு மனம் கொதித்துப்போனார் ஜேபி. பாட்னா நகரத்துக்கு அருகே  ஹில்சா காவல் நிலையத்துக்குக் கீழ் வரும் டெல்ஹதா கிராமத்திற்கு விஜயம் செய்கிறார்.

‘ What kind of insanity overwhelmed you, all of a sudden,became animal from man. You changed from human beings  in to ogres?’  பாதிப்புக்குள்ளான இசுலாமியர் பகுதியைப் பார்த்து குமுறுகிறார் ஜேபி. அதேபோல்  நவகாளியில் நிகழ்ந்துவிட்ட சோகத்தைக்கண்டு,’ இந்தியநாடே பற்றி எரிவதா, இந்த நாடே சாம்பலாகி முடிவதா, எத்தனை வீடுகள் பொடிக்கப்பட்டிருக்கின்றன, எத்தனை  மனிதப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது  இங்கே,

‘I shall not take even a drop of water  in this place, it will also appear like blood instead of water’   என்று ஜேபி சோகத்தில்   பொங்குவதை  நூலாசிரியர் அற்புதமாய் வாசகர்க்குக் கொண்டு சேர்க்கிறார்.

உலகில் எந்த எந்த  நாட்டில்  யார் யாரெல்லாம் புரட்சியைத் தலைமை தாங்கி நடத்தினார்களோ  அவர்களே ஆட்சியாளர் ஆனார்கள். ருஷ்யா, அமெரிக்கா, சீனா,  துர்க்கி, அல்ஜீரியா, க்யூபா எந்த நாட்டு வரலாரும் அப்படித்தாண் ஆனால் இந்திய தேசத்தில் மட்டும்தான் மகாத்மா காந்தி  அதிகாரம் எனக்கு  வேண்டாம் என்று ஒதிங்கிப்போனார்.  மகாத்மா சரித்திரம் படைத்தார் என்கிறார் சுதன்ஷு ரஞ்சன்.

பாகிஸ்தானைப் பிரித்துக்கொடுத்தால் மட்டுமே ஆயிற்று என்று ஒங்கிஅடித்த ஜின்னாவைப்பார்த்து ஜேபி’  ‘Mr. Jinnah  is a deliberate traitor to his country a Mir Jafar of the present day. Let Muslims remember that it is not the sons of Mir jafar who rule Bengal today but dirty kin of Clive’( பக்கம் 105)   என்று  வசை பாடுவதைப் பார்க்கிறோம்.

மகாத்மாஜி  கொலையுண்டபோது  பதறித்துடித்தார் ஜேபி.  ரமண மகரிஷியையும், அரவிந்தரையும் விண்ணப்பித்துக் கேட்டுக்கொண்டார்.’மிக  இக்கட்டான நேரமிது.  நாடு உங்களிடமிருந்து  வழிகாட்டலை எதிர்பார்க்கிறது. நீங்கள் தனிமையில்  தவமியற்றிக்கொண்டு இருக்காதீர்கள். தேசத்திற்கு ஆன்மிக புத்துயிர்ப்பு தாருங்கள்’

நல்ல உணவும், நல்ல உடையும், நல்ல இருப்பிடமும்  அமைந்து விட்டால் போதுமா இவை பெற்ற  விலங்குகளாக மனிதர்கள் வாழ்வதுசரியா, நல்ல மனிதர்கள் உருவாக வேண்டுமே. அரசியல் பணியில் அறத்தின் பங்களிப்பு என்ன? என்று ஜேபி குமுறினார்..  மக்கள் அரசாங்கத்தையே  நம்பி வாழ்பவர்களா உருவாகக்கூடாது. அரசினும் மக்கள் உயர்ந்த அதிகாரம் பெற்றவர்களாகப் பரிணமிக்க வேண்டும்.  நாடு விடுதலை பெற்ற பிறகு   CSP, காங்கிரசோடு    இணைந்திருப்பதில் நியாயமில்லை என்பதை உணர்ந்துகொண்டார் ஜேபி. இந்திய விடுதலைக்குப் போராடிய இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம்  என்பது வேறு  நம் கண் முன்னே இன்று நிற்கும் காங்கிரஸ் வேறு என்பதனை தெளிவுபடுத்திக்கொண்டார்.  ஜேபியின் CSP  என்பது SP   ஆனது.

காந்திஜி சோஷலிசத்தைத் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது  தத்துவ அளவில் ஏற்றுக்கொண்டார். வன்முறையில் சோஷலிசத்தை நடைமுறைப் படுத்துவதை அவர் அங்கீகரிக்கவில்லை.  1952 ஜூன் 23லிருந்து ஜூலை 13 வரை ஜேபி உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதம் முடித்து மார்க்சியத்திலிருந்து  முழுதுமாக தன்னை விலக்கிக்கொண்டார். மனிதன் நல்லவனாக இருப்பதே மிக மிக முக்கியம் என்பதனை அறிவித்தார்.  அவரின் வார்த்தைகளிலேயெ அதனைக்காண்போம்.

‘For many years I have worshipped at the shrine of the goddess- dialectical materialism- which seemed  to me intellectually  more satisfying than any other philosophy. But  while the main quest of philosophy remains unsatisfied, it has become patent to me that materialism of any sort robs man of the means to become truly human. …………….It may be that in the kingdom of  dialectical materialism, fear makes men  conform and party takes place of  God.’ ( பக்கம் 126)

1953  பிப்ரவரியில் ஜவஹர்லால் நேரு  ஜேபியை  மந்திரி சபையில் இணையுமாறு அழைக்கிறார். ஜேபி அதற்கு இசையவில்லை. 14 நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை நேருவுக்கு அனுப்புகிறார். தனியார் வங்கிகளை இன்ஸூரன்ஸ் கம்பெனிகளை, நிலக்கரிச்சுரங்கங்களைத்  தேசிய மயமாக்குவது என்று இருந்தன அந்த நிபந்தனைகள்.

வினோபாவின் சர்வோதய செயல்பாடுகள்  ஜேபியை மிகவும் கவர்ந்தன.  மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இயற்றிய சட்டம் செய்யாததை வினோபாவின் வார்த்தைகள் செய்துகாட்டுவதை ஜேபி  நேரில் கண்டார். 1951ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வோதயா மாநாட்டில் கலந்துகொள்ள வினோபா நூற்றுக்கணக்கான மைல் கால் நடையாகவே நடந்து வருகிறார். ‘தாம் வைத்திருக்கும் நிலத்தில் ஆறில் ஒரு பங்கை ஆறாவது மகன் ஒருவன் இருக்கிறான் என்று எண்ணித் தானமாக வழங்க வேண்டுகோள் வைக்கிறார். ராமச்சந்திர ரெட்டி என்பவர் 100 ஏக்கர் நிலத்தை  அந்த மாநாட்டிலேயே வழங்கி பூதான இயக்க வரலாற்றைத்துவக்கி வைக்கிறார்.

1953ல் ரங்கோனில் நடைபெற்ற ஆசிய சோஷலிச மாநாட்டில் ‘ பூதான் இயக்கம்’ என்பது நிலப்பிரச்சனைக்கு நல்ல தீர்வைக் கொண்டுவரும் என்று  ஜேபி முழங்குகிறார்.  சோவியத் பற்றி ஒரு விமரிசனம் வைக்கிறார். அது நம்மை உலுக்குவதாக அமைந்து நிற்கிறது. ஆயிரமாயிரம் கம்யூனிஸ்ட்கள் இந்தியாவிலிருந்து  மாஸ்கோ சென்று சென்று வந்திருக்கிறார்கள் ஆனால் சோவியத் ஒன்றியம்  சிதறும் வரை அவர்கள்  அங்கு  நடக்கும் உண்மையை எங்கே  மூச்சு விட்டார்கள்.  வரலாற்றில் சோவியத்  உடைந்த பிறகு  அவர்களே’ அப்போது எங்களை எப்படிச்சொல்ல சொன்னார்களோ அதைத்தான் வெளியில் சொன்னோம்’ என்று அசடு வழிந்தார்கள். ஆனால்  1953 லேயே ஜேபி பேசுவது இதுதான்.

 ‘It was hoped that after a socialist government had been established in such a lerge country as Russia we would have furher development of  the science of socialism,of its philosophy , of its historical interpretation  and so on, but we find that in Russia of interpreting history , they are busy distorting history , and if you start distorting history , you cannot interpret history’  ( பக்கம் 177)

ஜேபி தனக்குச் சொந்தமான  நிலத்தில்   50 ஏக்கர் நிலத்தை பூதானமாக வழங்கிகிறார்.1954 ஏப்ரலில் புத்த கயாவில் நடைபெற்ற சர்வோதய மாநாட்டில் ஜேபி கலந்து கொள்கிறார். வினோபாவின் பூதான இயக்கத்தின் மீது தனது மரியாதையைப்பதிவு செய்கிறார். 

1960 ஏப்ரல் 9 ல் நடைபெற்ற  திபேத் பற்றிய  மாநாட்டில் ஜேபி ’ திபேத்தில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். சொல்லொணாத்துயரங்கள் அரங்கேற்றப்படுகின்றன. பல லட்சம் சீன மக்கள் திபேத்தில் குடியமர்த்தப்படுகிறார்கள். திபேத்திய கலாசாரத்தை அழித்தொழித்து  திபேத்தைச் சீனக்காலனியாக சீனர்கள் மாற்றுகிறார்கள்’ என்று முழங்குகிறார். 

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கத் தகுதி பெற்ற  கிழக்கு பாகிஸ்தானின்  ஷேக்முஜிஃபிர் ரஹ்மானை மேற்கு பாகிஸ்தானின் யாஹ்யாகான்  ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார். ஜனநாயகம் நசுக்கப்படுகிறது. சொந்த மக்களையே ராணுவம் கொன்று குவிக்கிறது கிழக்கு பாகிஸ்தானிய .மக்கள் பசியோடு பட்டினியோடு இந்தியா நோக்கி ஓடிவருகிறார்கள்.  Refugee Relief  stamp ஐ  ஒவ்வொரு தபால் அனுப்பும்போதும் சேர்த்து  சேர்த்து   நாம்  ஒட்டி அனுப்பியது நினைவுக்கு வரலாம். தவிர்க்கவே முடியாத நிலையில்  இந்தியா தலையிட்டு பங்களாதேஷ் உருவானது. பிரதமர் இந்திராகாந்தியை ஜேபி மனதார பாராட்டினார். 

ஏப்ரல் 1972ல்  சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள்  250க்கு மேற்பட்டோர்  குவாலியர் நகரில் ஜேபி முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்.  அனைவரும் அமைதி வழிக்குத்திரும்பினார்கள்  

1973  ஏப்ரல் 15  காலை 8.45   ஜேபியின் துணைவியார்  பிரபாவதி காலமாகிறார்.

இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்படுவதை காங்கிரஸ்கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் அற்றுப்போனதை ஜேபி  கவனிக்கிறார். மற்றுமொரு விடுதலைப்போராட்டம் இங்கு தவிர்க்க முடியாது என்று முழங்குகிறார். குஜராத்திலும் பிகாரிலும் மாணவர்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தது. மாணவர்கள் பீகார் சட்ட சபையை முற்றுகையிட்டார்கள் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. மனித உயிர்கள் சில பலியாயின. போலிசாருக்குக்  கண்டதும் சுட ஆணை பிறப்பிக்கப்பட்டது. இறந்தவர்கள் எண்ணிக்கை 25 கூடிப்போனது. ஆக்ராவில் பெண்கள்  லஞ்சம் ஊழல் இவற்றிர்க்கு எதிராய் அமைதிபேரணி நடத்தினார்கள்.

இந்திய ஜன நாயகத்தைக் காப்பாற்ற அதனை வலுவாக்க ‘CITIZENS FOR DEMOCRACY’   என்கிற அமைப்பை  14 ஏப்ரல் 1974 ல் டில்லியில் ஜேபி  உருவாக்கினார்.  1965ல்  பிலிபைன்ஸ் அரசின் மாக்சேசே  விருது ஜேபியின் மக்கள் சேவைக்காக வழங்கப்படுகிறது.

1974   ஜூன் ஐந்தில்  பாட்னாவில்  மிகப்பெரிய பேரணி ஜேபியின் தலைமையில் நடைபெற்றது. சட்டசபையைக் கலைத்துவிடவேண்டும் என்பதே பிரதான கோரிக்கை. லட்சக்கணக்கான மக்களின் கையொப்பம் பெற்று அந்த விண்ணப்பங்கள் முன்னே டிரக்கில்  அணிவகுத்துச்செல்ல  ஜேபி பின் செல்கிறார். ஏழு கிலோமீட்டர் நீளமான மக்கள் கூட்டம். பீகார் கவர்னரிடம் மகஜர் அளிக்கப்படுகிறது. அன்று  மாலை காந்தி மைதானத்தில் மாபெரும் கூட்டம். ஜேபி முழுப்புரட்சி மட்டுமே இனி நமது திட்டம் என்கிற கோரிக்கையை அறிவிக்கிறார்.  பசி, விலைவாசி உயர்வு, லஞ்சம்,வேலையில்லாத்திண்டாட்டம், இதுவே நாடெங்கும் காட்சியாவதை இனியும்  சகித்துக்கொள்ள முடியாது என்கிறார் ஜேபி. 

12 ஜூன் 1975 ல் அலஹாபாத் உயர்நீதிமன்றம் ராஜ் நாராயண் தொடுத்த வழக்கை ஏற்றுக்கொண்டு  பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் செல்லாது எனத் தீர்ப்பு அளிக்கிறது. ஜக் மோகன் லால் சின்ஹா என்னும் நீதிபதியே தீர்ப்பை வழங்கியவர். உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துகொள்ள 20 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதுவரை  பாராளுமன்ற உறுப்பினராயும்  இந்திராகாந்தி தொடர முடியாது  எனத் தீர்ப்பு வந்தது.

ஜூன் 25 ராம்லீலா மைதானத்தில்   மக்களைப்பார்த்து ஜேபி கேட்கிறார்’   பிரதமர்  இந்திராகாந்தி  நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்து  நம்மை எல்லோரையும் சிறையில் அடைத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?’என்று  வினா வைக்கிறார். மக்கள் கூட்டம் ஆரவாரம் செய்து எங்கள் ஒத்துழைப்பு உங்களுக்குண்டு என்கிறது. அன்று இரவே  உள்நாட்டில் தேசிய  நெருக்கடி நிலையை அறிவிக்கிறார் பிரதமர் இந்திராகாந்தி. விடியற்காலம் நான்கு மணிக்கு  எல்லாம்  பார்லமெண்ட் வீதியின் காவல் நிலையத்தில் ஜேபி   அடைக்கப்படுகிறார். நான்கரை மாதங்கள் தனிமைச்சிறை. சித்திரவதை. ஜுலை 21 டைரியில் எழுதுகிறார்’ ’என் உலகம்  என்னைச் சுற்றிலும் நொறுங்கிக் கிடக்கிறது’.

 அக்டோபர் 5ல்  டாக்டர்கள் ஜேபியின் இரண்டு சிறுநீரகங்களும் பழுடைந்துவிட்டதை அறிவித்தனர். பிரிட்டிஷார் கூட  இப்படி என்னைச் சித்திரவதை செய்ததில்லை என்றார் ஜேபி.

இந்திராகாந்தி  39 வது சட்ட திருத்தம் கொண்டு வருகிறார். பிரதம மந்திரி, லோக்சபா சபாநாயகர், இவர்கள் மீது நீதிமன்றத்தில்  யாருமே வழக்குத்தொடர முடியாது என்று. நீதிமன்றத்தில்  32 நாட்கள் விவாதம் தொடர்ந்தது. அலாஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு செத்துப்போனது. உச்ச நீதிமன்றம் இந்திரா காந்திக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதியது.

தேசமே இருளில் தத்தளித்தது. நாட்கள் சென்றன.

ஜனவரி 18 , 1977   பிரதமர் இந்திரா காந்தி  லோக்சபாவுக்கான தேர்தலை அறிவிப்பு செய்கிறார். சர்வாதிகாரமா ஜனநாயகமா என்பதே தேர்தல் விவாதமாகியது. இந்தியாவின் ஒரே ஒளி ஜேபி என்று மக்கள் முழங்கினர். ஜகஜீவன் ராம் காங்கிரசை விட்டு வெளியேறி  அரசு எதிர்ப்பாளர்களோடு சேர்ந்துகொண்டார். அவர்தான் நெருக்கடி நிலை அறிவிப்பு ஆவணத்தைத் தூக்கிப்பிடித்து அலைந்தவர்.  தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்திராகாந்தியும் சஞ்சய் காந்தியும் தோல்வியுற்றனர். காங்கிரஸ் 153 சீட்டுக்களை மட்டுமே பெறமுடிந்தது. அதுவும் தென் இந்தியாவிலிருந்து மட்டுமே.

மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். ஜகஜீவன் பாபுவுக்கு  பிரதமர்  ஆக ஆசையுண்டு அது நிறைவேறவில்லை. ஜேபிதான் எல்லாவற்றுக்கும் பின்னால் இருந்தார். நாடாளுமன்றத்தில் ஜேபி ‘ என் கடமை முடிந்தது இனி  நான் இறக்கலாம்’ என்றார்.

இந்திராகாந்தி  இல்லத்திற்குச் சென்ற ஜேபி,  ‘ இந்து,  நீ மக்களுக்குச் சேவை செய்வதில் தயக்கம் காட்டிவிடாதே. அதுவே ஆகப் பெரிய அறம்’ என்கிறார். இந்திராகாந்தி  மனம் உடைந்து போய்க் காணப்பட்டார். 

ஜேபி விழைந்தது எதுவும் நிகழவில்லை.

ஜூன் 5 1978 ல் ஜேபி   ஜனதா அரசாங்கமும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தைத்தான்  பின்பற்றுகிறது. மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். மக்கள் எதிர்பார்த்ததை ஜனதா அரசு கொண்டு தரவில்லை’ என்று அறிவிப்பு செய்கிறார். யார் தன்னை பிரதமர் ஆக்கினாரோ அவரையே மொரார்ஜி தேசாய் ‘ Out sider’  என இழிவாக அழைத்தார். ஜேபி நொறுங்கித்தான் போனார்.

பொருளாதார உச்சவரம்பு என்பதை   சமூகத்தில் கல்வியில் பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படும் சலுகையின் போது கணக்கில்  கொள்ளவேண்டும் என்றார் ஜேபி. 

சமூகத்தில் முன்னேறிய வகுப்பாரும், பின் தங்கிய வகுப்பாரும் அவரைச் சரியாக புரிந்துகொள்ளவில்லை. முழுப்புரட்சிக்கு அறிவிப்பு  செய்த   தஸ்தாவேஜுகளை வீதியில் மக்கள்  தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

மார்ச் 22ல்  ஜேபியின் உடல் நிலை மோசமாகியது. அவர் இறந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் அறிவித்து அஞ்சலியும் செலுத்தினார்கள். ஆனால் அவர் இறக்கவில்லை. உயிரோடுதான் இருந்தார். பிரதமர் மொரார்ஜி  தேசாய் நிகழ்ந்துவிட்ட  தவறுக்கு மன்னிப்புக் கேட்டார்.

அக்டோபர் 8  ஐந்து மணி நாற்பது நிமிடத்திற்கு ஜெபியின் உயிர்,   ஜஸ்லோக் மருத்துவ மனையில் பிரிந்தது. பிரதமர் சரண் சிங்கும் ஜனாதிபதி நீலம் சஞ்சீவி ரெட்டியும் பாட்னாவில் நடைபெற்ற ஜேபியின்  இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். இந்திராகாந்தியும், மொரார்ஜி தேசாயும் உச்ச நீதிமன்ற  13 நீதிபதிகளும்  மொத்தமாய் வந்திருந்து  மரியாதை செய்தார்கள்.

அமெரிக்காவைத் தனது இரண்டாவது தாயகம் என்று அழைத்தவர் ஜேபி –  இப்படி அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மிம் கார்ட்டர்   இந்திய ஜனாதிபதி சஞ்சீவிரெட்டிக்கு  எழுதிய  தனது அஞ்சலிக்கடிதத்தில்  குறிப்பிட்டிருந்தார்.

நூலாசிரியர் சுதன்ஷூ ரஞ்சன், வாழ்க்கை வரலாற்றுப்  படைப்பை அற்புதமாய் முடிக்கிறார்.  ’என் வாழ்க்கை’   செப்டம்பர் 9 1975ல் ,   ஜேபி   சிறையில்   எழுதிய  கவிதை.   அதன் இறுதி வரிகள்.

So I am satisfied with my failures
And this unsuccesful life
Will be blessed a hundred times
If for the dear young fellow seekers
The path strewn with thorns
Is made somewhat easy.’

 இனியும்  ஒரு ஜேபி இந்த மண்ணில் வருவாரா ? ஏங்கித்தவிக்கிறது  வாசக மனம்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.