அல்காரிதம்-ஒரு மனித வாழ்க்கை

மேலே குறிப்பிட்டுள்ள இவற்றில் எவற்றையாவது ஒன்றை க்ளிக் செய்யாமல் பெரும்பாலான இணையதளத்திற்குள் நுழைய இயலாது— ஏனெனில், அன்றாடம் மனிதர்களிடமிருந்து பெறக்கூடிய ”தகவல்” எனும் Data இன்றியமையாத ஒன்று. There’s No Technology without Data. 

சில ஆண்டுகளாகவே நம்முடைய அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, உணவு, உடை, மற்றும் தற்போது இன்றியமையாத ஒன்றான ”நுகர்வு” என விரிந்து கொண்டே செல்லும் இவையாவையும் இன்றைய தொழில்நுட்பமானது AI எனும் ஒரு குடையின் கீழ் எடுத்துக்கொள்கின்றது. அதாவது மனிதன் மட்டுமே பரிமாறக் கொள்ளக்கூடிய, மனிதனால் உருவாக்கப்பட்ட மொழி—நவீன தொழில்நுட்பமான யந்திரம்—மூலமாக இன்று நேரடியாக தொடர்பு கொள்ள முடிகின்றது. குறிப்பாக இந்த Generative AI—Deep fake, Facial Recognition, Healthcare system, மற்றும் Digital welfare system—நம்முடைய தினசரி வாழ்க்கையில் algorithm-களின் பயன்பாடு, மற்றும் நாளாக நாளாக உருமாறிக்கொண்டேயிருக்கின்றது. இந்த automated system-த்தின் எல்லைகளற்ற அதன் தன்மையானது மனித குலத்திற்கு எவ்வகையில் உதவுகின்றன என கூறும் புத்தகமே Code Dependent. இதில் கூறப்படும் உண்மை சம்பவங்கள் யாவும் Silicon Valley-யிலிருந்து கூறப்படுபவை அல்ல. ஒரு சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப்பாடங்களாக Food delivery workers, கார் ஓட்டுநர், இந்தியாவின் கிராமப்புறத்திலிருக்கும் மருத்துவர், பல்கேரியாவிலிருக்கும் ஈராக் அகதி, லண்டனிலிருக்கும் கவிஞர், அம்ஸ்டெர்டமிலிருக்கும் மகனின் தாய், நாடுகடத்தப்பட்ட சீன ஆர்வலர் என இவர்களின் வாழ்க்கையில் AI-யின் ஆதிக்கத்தை குறிப்பிடும் புத்தகமாக இருக்கின்றது. 

மஹாராஷ்டிரா மாநிலத்தின் நந்தூர்பார் மாவட்டத்தில் சிச்படா எனும் கிராமம் மேற்கு இந்தியாவின் வளமான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. நந்தூர்பார் மாவட்டத்திலுள்ள சுகாதார மையங்கள் மருத்துவர்களில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த கிராமத்தில் சிச்படா கிறிஸ்டியன் மருத்துவமனை உள்ளது. டாக்டர் அஷிதா சிங் மற்றும் அவரது கணவர் டாக்டர் தீபக் ஆகிய இருவர் மட்டுமே மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள். பெரும்பாலான நோயாளிகள் பழங்குடிமக்களாகிய ஃபில் இனத்தவர்கள்—விவசாயிகள். சோளம், தினை, கரும்பு, வெங்காயம் மற்றும் பூண்டு என இவற்றின் சாகுபடி முறைகளில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். குறிப்பிட்ட பருவகாலங்களில் மட்டுமே வேலையென்பதால் இவர்களுக்கு நிரந்தர வருமானம் என எதுவுமிருப்பதில்லை. விவசாயத்தின் போது புலம்பெயரும் குடும்பமாக தற்காலிகமாக ஒரு குடியிருப்பை அமைத்துக் கொண்டு  கரும்பு தோட்டங்களிலோ அல்லது வயல்வெளிகளிலோ ஜன்னல் அல்லாது களிமண் சுவற்றாலான ஒரு குடிசையில் வசித்துக் கொண்டு முழு நேர விவசாயமாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இன்றளவும் வறுமையால் ஆம்புலன்ஸுக்கு பதிலாக  ‘Bamb-ulances’ என உள்ளூர் மக்களால்  கூறப்படும் மூங்கில் மற்றும் போர்வையால், உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு தோலில் சுமந்து வரப்படுகிறார்கள். காயம் ஏற்பட்ட சுவடுகள் போல ஃபில் இனமக்களின் வாழ்வில் ஊட்டச் சத்து குறைபாடு, மிதமிஞ்சிய மதுப்பழக்கம் மற்றும் காசநோய் என கொடிய தொற்றுகளும், இவர்களின் வறுமையும் எப்பொழுதும் விட்டு விலகுவதில்லை. 

ஒரு நாள் காலையில், ஃபில் இனத்தவர்களில் பதினான்கு வயதுள்ள பார்வதி, ஒரு நோயாளியாக மூன்று மணி நேரமாக மோட்டார் சைக்களின் பின் அமர்த்தப்பட்டு, ஒரே டாக்டரான அஷிதாவும், ஆறு பேர் ஜூனியர் டாக்டர்களாக பணிபுரியும், இதுவரையில் ரேடியாலாஜிஸ்ட் இல்லாத மருத்துவமனைக்கு அழைத்துவரப்படுகிறார். அஷிதா மற்றும் அவரது கணவர் ஒரு தனியார் மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு ரூ.50 மற்றும் அடுத்தமுறை பார்வைக்கு வரும் நோயாளிகளுக்கு ரூ.20 கட்டணம் மற்றும் மருந்துகள், சிகிச்சைகள், பரிசோதனைகள் என தீவிர சிகிச்சைக்கு மிக குறைந்த பட்சமாக ரூ.3000 முதல் ரூ.5000 என மொத்த மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளையும் நோயாளிகள் குணமாகும் வரைக்கும் அளித்துவருகின்றார்கள். ஒரு ஐந்து வயது குழந்தையின் எடையை மட்டுமே கொண்ட பார்வதியால் தன் உடலை தன் படுக்கையிலிருந்து எளிதில் திருப்பவதற்குகூட இயலாத பலவீனமான நிலையில் சேர்க்கப்பட்டார். மேலும் நோயாளியின் மார்பு பகுதியில் இருந்த காயம் போன்ற வடு, நோயாளியின் தீவிரத்தை அறிந்த டாக்டர் அஷிதா, TB-யின் தொற்று என உறுதிபடுத்துவதற்காக எக்ஸ்ரே எடுத்தார்.  TB-யின் தொற்றை உறுதிப்படுத்தும் விதமாக பாதிக்கப்பட்ட நுரையீரலில் தோன்றும் அறிகுறிகள் ஸ்கேனில் மிக தெளிவாக இல்லை. ஆபத்தான நிலையில் நோயாளியை மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் அளவிற்கு அதற்கான நேரமுமில்லை மற்றும் அது மேலும் நேர விரயமும் கூட. அஷிதாவின் கண்முன்னரே பல நோயாளிகள் இந்த பாக்டீரியாவால் பலி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் மேலும் தனது அனுபவத்தால் இதன் தீவிரத்தை நன்கறிந்த அஷிதா, TB என அறிந்துகொண்டு அதை உறுதிப்படுத்திவதற்கு இரண்டாவது நபருடைய கருத்தும் அவசியமாயிற்று. 

இந்நிலையில், TB-யின் அறிகுறிகளை கண்டறியும் qTrack app எனும் செயலி அஷிதாவால் சில வாரங்களாக பரிசோதினையில் இருந்தது. இந்த செயலியில் Sputum test data மற்றும் TB-யினுடைய பல எக்ஸ்ரேவின் தகவல்களை machine-learning algorithms மூலமாக தேர்வு செய்யப்பட்டு தற்போது அஷிதாவின் நேரடி பரிசோதனையிலிருக்கும் qTrack app இந்த அவசரமான காலகட்டத்தில் உதவி புரிந்தது. ஒரு ரேடியாலிஜிஸ்ட் கண்டறிவதைப் போல எக்ஸ்ரேவிலிருந்து மிக துல்லியமாக கண்டறிந்து Type 1 Juvenile diabetic, suspected tuberculosis case என்று செயலியில் தெரியவந்தவுடன் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு விரைவாக குணமடைந்தது. Glucometer மூலமாக தன்னுடைய சர்க்கரையின் அளவை தெரிந்துகொண்ட பார்வதி மூன்று வாரங்களுக்குப் பிறகு பள்ளிக்கு செல்லத்தொடங்கினாள். 

இந்த diagnostic algorithm system, மனிதர்கள் போன்று முடிவெடுக்க இயலாதது. இது நோயினைப் பற்றி தெரிந்து கொள்ளப் பயன்படும் ஒரு கருவி மட்டுமே. ஒரு AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் நோயின் தீவிரத்தை மிக துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார் டாக்டர் அஷிதா. 

2020-ஆம் ஆண்டு கொரோனாவின் துவக்கத்தில் PCR டெஸ்ட் பரவலாக பயன்பாட்டிற்கு வருவதற்கு முன் Qure.ai app என்கிற செயலி அறிமுகப்படுத்தப்படுகின்றது. அஷிதாவிடம் பயன்பாட்டிற்கு அறிமுகமாகும் இந்த கொரனோ வைரஸை கண்டறிய உதவும் செயலியில் சில முக்கியமான அடிப்படை தவறுகள் இருப்பதை கண்டறிகின்றார். அதாவது, TB நோயாளியின் எக்ஸ்ரே, Covid 19 பாதிப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த குழப்பமானது ஏற்கனவே தொற்று நோய் நிபுணர்களால் அறிந்த ஒன்று, கொரோனா வைரஸ் குடியேறிய நுரையீரலும், TB-யால் பாதிக்கப்பட்ட நுரையீரலும் ஒரே மாதிரி காணப்படும். இதன் வேறுபாட்டினை பெரும்பாலான மருத்துவர்களால் எளிதில் கண்டறிய இயலாது. மருத்துவர்களால் பயிற்சியளிக்கப்பட்ட இந்த AI தொழில் நுட்பத்தின் நடைமுறை பிரச்சனைகளை Qure.ai செயலியின் கம்பெனிக்கு தெரியப்படுத்தி செயலியில் Tuberculosis filter ஒன்று அறிமுகப்படுத்திய பின்னரே அறுபது நாடுகளில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. Qure.ai பெங்களூரை மையமாக கொண்ட இந்நிறுவனத்தில் 60 மில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடாக அமெரிக்க நிறுவனமான Sequoia Capital and Pharmaceutical அளித்தது.

“இந்த automated bias system நான் தீர்மானிக்கும் முடிவில் எந்த வித மாற்று கருத்தையும் அல்லது குறிக்கீடும் ஏற்படுத்த நான் அனுமதிப்பதில்லை—ஏனெனில் அதனைப் பற்றிய விழிப்புணர்வு இருப்பதால், அவற்றை பரிசோதனையாக மட்டுமே பார்க்கிறேன்—ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது” என்கிறார் டாக்டர் அஷிதா. ஏனெனில் ”இப்போதுள்ள புதிய இளைய தலைமுறையின் மருத்துவர்கள், மிக விரைவான மருத்துவ தீர்வு, அதற்கான உடனடி பலன் எதிர்பார்க்கிறார்கள், நோயாளி மற்றும் மருத்துவருக்குமான மன நிலை, அவர்கள் கடந்த நிகழ்வுகள், உடல் பரிசோதனைகள் என அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மேலும் பல இடங்களில் சிறந்த மருத்துவத்திற்கான அடித்தளம் இல்லாததால் இந்த AI, மருத்துவர்களுக்கு எஜமானாகும் அபாயத்தை பார்க்கின்றேன்”. அரசாங்கத்தால் மானியம் வழங்கப்படுகிறது, தற்போதுள்ள சுகாதார கட்டமைப்பின் தேவையை பூர்த்தி செய்கின்றது. இருப்பினும், எதிர்காலத்தில் என்னுடைய நோயாளிகளுக்கு எத்தகைய செலவீனங்களை அதிகரிக்குமாயின் நான் முன்னர் கூறியதுபோல் (Qure.ai மற்றும் இதன்சார் நிறுவனத்தின் ஒத்துழைப்பின் அவசியமின்றி) இதிலிருந்து வெளியேறிடுவேன் என்கிறார் டாக்டர் அஷிதா.

ஒரு AI  அடிப்படைதொழில் நுட்பத்தின் பயன்பாடுகள் பற்றியும், அவற்றுள் கவனிக்கப்பட வேண்டிய அதன் இயலாமை பற்றிய புரிதல் இன்று அவசியம் என்கிறார் எழுத்தாளர் மதுமிதா முர்கியா. குறிப்பாக AI system ஒரு விதத்தில் Faceless Boss என்கிறார். ஒரு தொலைபேசியின் வழியே அதிகாரபூர்வமான அறிக்கையிடுகின்றது: machine learning தொழில்நுட்பத்தின் வாயிலாக ஓட்டுநர்களுக்கு அன்றாடம் வேலை வழங்குதல், தொழிலாளர்களின் அடையாளங்களை சரிபார்த்தல், அடுத்தடுத்த வரும் பணிக்கான ஊதியத்தை தீர்மானித்தல், மோசடிகளை கண்டறிதல், போனஸ்கள் மற்றும் பணி நியமனம் மற்றும் பணி நீக்கத்தில் முடிவெடுப்பது என ஒட்டு மொத்தமாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. இந்த செயலிக்கு பெருக்கெடுத்து வரும் தொடர் தகவல்களால் அவர்களின் அன்றாட வாழ்வாதாரத்தின் விதிமுறைகளை எழுதி, அவற்றை நொடிக்கொருமுறை திருத்தி கொண்டேயிருக்கின்றது.

2019-ம் ஆண்டு அர்மின் எனும் 28 வயது இளைஞனான, கணிணி பயிற்சி பெற்ற பொறியாளர் பெர்க்கலே (Berkeley)-யிலிருந்து Pittsburgh-ற்கு தானியங்கி கார்கள் தயாரிக்கும் நிறுவனமான Ford மற்றும் Volkswagen குழுமத்தின் நிதியுதவியுடன் தொடங்கிய நிறுவனத்தில் பணிபுரிகின்றான். இந்நிறுவனத்தில், பயணிகளுக்கும் மற்றும் சுயமாக இயங்கும் காருக்கும் இடையே ஒரு தகவல் தொடர்பை ஒருங்கிணைக்கும் விதமான ஒரு குழுத் தலைவனாக பணியாற்றினான். அதாவது மனிதனுக்கும் யந்திரத்திற்கும்—ஒரு மொழிபெயர்ப்பாளர். 2018-ன் போது Uber பரிசோதனையின்போது தானியங்கி கார் தவறுதலாக ப்ளாட்பார்மில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரை உயிர்பலி கொடுக்க நேர்ந்தது. 

”Code, unlike the physical joists of a bridge is not neutral”என்ற கூற்றை முன்வைக்கிறார் எழுத்தாளர் மதுமிதா முரிகியா.

தொழில்நுட்ப உலகில் அர்மின் போன்றவர்களால் அறிந்த ஒன்றான code writing என அவற்றால் ஏற்படும்  நிஜ உலகில் உருவாகும் விளைவுகளிலிருந்து என்றுமே மன்னிப்பு கிடையாது என எண்ணங்கள் எழ  ஆரம்பித்தது அவருள். 2020-ஆம் ஆண்டு அவன் பணிபுரியும் நிறுவனத்தின் தயாரிப்பான தானியங்கி கார்கள், மக்களின் வாழக்கூடிய நகரங்களின் சூழலுக்கு எந்தவொரு துணையும் புரியாது என தன் வேலையை கைவிட்டார். அச்சமயத்தில் UberEats-ல் Food Delivery என உணவு விநியோகப்பாளராக தன் பணியை துவங்கிய அர்மின், தொடக்க கால கட்டமுதலே அடுக்கடுக்கான சோதனைகள் எழத்தொடங்கின. வேலையில் சேர்ந்த  நாளன்று, முதல் கட்டமான  Algorithmic Identity Check-ற்காக செல்பி எடுத்து செயலியால் சரிபார்க்கப்படும். அர்மின் பயன்படுத்துகையில் அவரது ID, செயலியால் சரிபார்க்கப்பட முடியாமல் போயிற்று. இவை ஒரு செயலியின் அடிப்படையில் நிகழும் algorithmic error என்கிறார். அதாவது, இவருடைய நிறம், முக தோற்றம், தலைமுடி பற்றிய போதிய தகவல்கள் இச்செயலியின் அடிப்படையில் கவனிக்கப்படாமை இதன் காரணம் மற்றும் இவர் பிறந்ததோ கலிபோர்னியா, தற்போதுள்ள பணியோ தென்னாப்பிரிக்காவில். அர்மின் கூறுகையில், மனிதர்களின் பல்வேறு நிறங்கள் ஒரு முக்கியகாரணம் எனவும் தன்னுடைய நீண்ட முடியோ அல்லது தாடியாகவும் இருக்கலாம் என்கிறார். நான்காவது முறையாக அவரது தலையையும் தாடியியையும் தண்ணீரில் நனைத்துக் கொண்டு முற்றிலுமாக படிய வைத்து, தன்னுடைய வாயை அகலாமாக திறந்த போது அந்த செயலியின் Facial recognition உறுதிபடுத்திக் கொண்டபின் அவரது வேலையை தொடங்களாயிற்று. மற்றொரு சோதனையாக, அர்மினுக்கு பல மாதங்களாக மூடியிருந்த Mc Donald’s கடையிலிருந்து அடுத்தடுத்தாக ஆர்டர்கள் வந்த வண்ணம் இருந்தன. தனக்குவந்த முதல் ஆர்டரிலேயே சூழலை அறிந்து கொண்ட அர்மின், அலைபேசியில் 20 நிமிடம் காத்திருந்து Uber –ரிடம் உண்மை நிலையை புரிய வைத்தார் ஆனாலும் அவர்களால் தொழில் நுட்பத்தின் தகவல்களின் அடிப்படையில் எந்தவொரு திருத்தமும் செய்ய இயலாது என தெரிவித்து,  45 நிமிடத்திற்கு மேலாக இதை பற்றி அலைபேசியில் தெரிவித்ததற்காக டாலர் இரண்டு ரூபாய் கிடைத்தது. நேர்மை மற்றும் பொறுப்பான நடத்தைக்கு வெகுமதி கிடையாது எனவும், இந்த செயலியின் அடிப்படைத் தகவலில் ஒரு சிறிய திருத்தத்தை செய்ய இயலாதளவிற்கு எந்த ஒரு மனிதனுக்கு உரிமை இல்லை மற்றும் இவற்றின் பலவீனங்களை குறித்து ஒருவரும் கண்டுகொள்வதில்லை எனவும் இவை வேதனையளிக்கிறது என்கின்றார்.

கலிபோர்னியாவில் அர்மின் ஒரு சைக்ளிஸ்ட், பிட்ஸ்பர்க்கிற்கு வந்தவுடனேயே பலரை ஒன்று திரட்டி சைக்கிள் ஓட்டுவபவர்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் பிரத்யோகமாக செயலி என உருவாக்கிய மிக தீவிரமான கணிணி பொறியாளர். ஒருநாள் தனது சைக்கிளில் சுற்றிக் கொண்டிருக்கையில் மதியம் 2 மணிக்கு தனது அலைபேசியின் செயலியில் உணவுக்கான ஆர்டர் வந்தது. அர்மின் வழக்கமாக செல்லும் வழியிலிருந்து 6 நிமிடப் பயண மட்டுமே, வழக்கம்போல் செயலியில் காரில் செல்லும் பயணநேரம் கணக்கில் கொள்ளப்பட்டது. தன்னிடம் சைக்கிள் இருப்பதால் இது பதினைந்து நிமிடமாகும் என தெரிந்து உணவகத்திலிருந்து ஆர்டர் பெறுவதற்காக காத்திருந்த பொழுது, இரண்டாவது ஆர்டர் அதே உணவகத்திலிருந்து கிடைத்தது அதையும் எடுத்துக்கொண்டார் அர்மீன். 

உணவு பெறப்படும் வரை அவர்கள் செல்லக்கூடிய இடம் அவர்களுக்கு தெரியாமல் Uber algorithms அவற்றை மறைத்துவைத்திருக்கும். இதன் செங்குத்தான பாதையின் பயணம் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை இருப்பினும் உணவகத்திலிருந்து ஆர்டர்கள் டெலிவரிக்காக புறப்பட்டது. இருப்பினும் அர்மீனுக்கு செயலியை பற்றிய ஒரு புரிதல் இருந்தது. இந்த செயலியால் உயரமான பாதைகள், வளைவுகள் பற்றி அவற்றால் அறிந்து கொள்ள முடியாது என்று. முதல் ஆர்டர், செங்குத்தான மலையின் உச்சியிலிருந்தது அர்மீன் சென்றதை பார்த்த கார் ஓட்டுநர்கள் அவரை உற்சாக படுத்தியவாறு சென்றனர். பதினைந்து நிமிடத்தில் முதல் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்டவர் சைக்களில் வந்து கொடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை என கவலை கொண்டார். வியர்வையும், தாகமுமாய் இரண்டாவது ஆர்டர் நாற்பது நிமிடமாகியது. இவரிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கூறியும் ஆற்றுப்படுத்த இயலவில்லை.

இரண்டிற்கும் எடுத்துக் கொண்ட நேரம் தொன்னூறு நிமிடங்கள்—-செயலியில் குறிப்பிட்ட மொத்த நேரமோ ஆறு நிமிடங்கள். எண்ணியவையாவும் தவறு, அதாவது முதலில் ஆர்டர்களை காரில் சென்று கொடுத்திருக்கவேண்டும் என நினைத்த அர்மீன், பிறகு காரினால் கூட ஆறு நிமிடத்தில் கொண்டு சென்றிருக்க இயலாது இந்த செயலி கூறவது முற்றிலும் தவறு என விழித்துகொண்டார். மேலும் சென்றுவந்த தூரம் 2.1 மைல் ஆனால் ரசீதில் குறிப்பிடப்பட்ட தூரமோ 1.1 மைல். இது சைக்கிள் ஓட்டுவதற்கும், வாகனம் ஓட்டுவதற்கும் உள்ள வித்தியாசமல்ல. எல்லாவற்றிற்கும் மேலான ஒரு பிழை இருக்கிறது என்கிறார். 

இதன் முரண்பாடுகளை தெரிவிக்க முயன்று பல வாரங்களாக Uber நிறுவனத்திடமிருந்து automated response மட்டுமே கிடைக்கின்றது. 16 ஈமெயில்கள் 126 நிமிடங்கள் தொலைபேசியில் Uber வாடிக்கையாளர் என தொடர் அழைப்புகளால் சில டாலர்களாக 16.43 கிடைத்தன. ஆனால் இதற்கான நிரந்தர தீர்வை வழங்கவில்லை. இதற்கு முன் எடுத்த ஆர்டர்களை கவனிக்கும் பொழுது கூகுள் மேப் செயலியில் 7.6 மைல்கள் இருந்த பயணம் சாலையிலுள்ள தடைகள் போன்ற காரணத்தினால் 9.2 மைல்கள் நீண்டது, ஆனால் Uber Payment algorithm வழக்கபோல்  ஆறு மைல்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். மற்றொரு ரசீதில் 1.9 மைல்களுக்கு பதிலாக 1.5 மைல்களாகவும், மற்றும் 7.5 மைல்களுக்கு பதிலாக 6 மைல்களுக்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது என அதன் முரண்பாடுகளை அறிந்த கொண்ட அர்மீன் இது போன்று எத்தனை முறை நடந்திருக்கும், யாருக்கெல்லாம் குறைந்த ஊதியம் கிடைத்திருக்கும் மற்றும் கிடைக்கப்பெறாத தொகை எவ்வளவு என அதன் அடிப்படையில் இருக்கும் சிக்கல்களை அறிந்த அர்மீன் Uber Cheats எனும் செயலியை கூகுளில் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்கின்றார். உடனடியாக அமெரிக்கா, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தைவான் போன்ற நாடுகளிலிருந்து சுமார் ஆராயிரம் பேர் புகார்களாக Uber Cheats எனும் செயலியில் ஆதரவுகள் தெரிவித்தனர். தீவிரமாக இயங்கி கொண்டிருந்த சில மாதங்களிலேயே Uber வழக்கறிஞரால் வழக்கு தொடரப்பட்டு கூகுள் செயலியை நீக்கிவிட்டது. இதற்காக கூகுளிடம் முறையிட்ட பிறகு திரும்பவும் கிடைப்பதாக கூறினாலும் 2022 பிப்ரவரிக்கு பிறகு செயலி கிடைக்கவில்லை. அர்மீனால் செயலியை தனியொருவனாக பராமரிப்பு செய்ய இயலவில்லை. Uber—தன்னுடைய OWN CODE மூலமாக—எந்தவித முன் அறிவிப்பு, காரணமுமின்றி பணிநீக்கம் செய்ததாக அர்மீனிடம், ஓட்டுநர்கள் மூலமாக தெரியவந்தது. மேலும் சட்ட ரீதியாக இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பணவசதியும் இல்லை. இருப்பினும், அர்மீனுக்கு நடந்தவையாவும் Wired, Salon மற்றும் Daily Mail போன்ற பத்திரிக்கைகளால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு இந்த AI அடிப்படையாகக் கொண்ட ஒருசெயலி எவ்வாறு தெளிவற்ற நிலையில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை பலருக்கும் சென்றடைந்தது. 

பல்வேறு வகையான தகவல்கள் மற்றும் அதன் சேவைகளை ஒருங்கிணைத்து மிக எளிய வகையில் பயன்பாட்டிற்கு அளிக்கும் தளமான இந்த aggregator platforms. சில்லரை விற்பனை மற்றும் விநியோகத்தில் இன்றைய புதிய தலைமுறைகளின் வணிக மாதிரி— Aggregator platforms—Amazon, Uber, Flipkart, Swiggy etc.,

இன்று இந்தியாவில், தொழிலாளர்கள் அன்றாடம் படையெடுக்கப்படும், ஒரு நிரந்தர வருமானம் தரக்கூடிய பணியினை நிர்ணயித்து கொள்ள இயலும் என இயங்கிக் கொண்டிருக்கும் இந்த Gig Workers எண்ணிக்கை 2030 ஆண்டில் 23.5 மில்லியனாக இருக்கும் என  NITI ayog கணெக்கெடுப்பு கூறுகின்றது. ஆனால் அவர்களுக்கான நீண்ட நேர வேலை, நிரந்தர வருமானமின்மை, வேலையில் பாதுகாப்பற்ற தன்மை மற்றும் அதன் செயல்பாடுகள் இன்றளவும் ஒரு தெளிவற்ற சூழ்நிலையிலையிலே இருக்கின்றன. அமேசான் சேமிப்புக் கிடங்குகளில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லையென்று கூறப்படுகின்றது. Labor association of India மனேசரில் ஐந்து சேமிப்பு கிடங்குகள் விதிமுறைகளை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளன. அலுவல் சாரா பகுதி நேர தொழிலாளர் —gig worker—ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் உழைத்தால் ஆயிரம் ரூபாய் ஈட்டலாம் ஆனால் அன்றைய நாளின் இறுதியில் ரூபாய் எழுநூறு மட்டுமே எடுத்துக்கொள்ள  இயலும் என சென்னையிலுள்ள ஆட்டோ ஓட்டுநர் கூறுகின்றார்.

Zwigato எனும் ஹிந்தி திரைப்படம் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய படங்களில் ஒன்று. கொரனோ காலகட்டத்தில் தொழிற்சாலையில் மேலாளரான தன் வேலையை இழந்து Gig worker வேலைக்கு தள்ளப்படும் குடும்பத் தலைவன் ஒருவனின் கதையே. வேலைவாய்ப்பு, பெற்றோர்கள், சமூகத்தில் மனித நேயம், அரசியல், குடும்பம், தனி மனித சுதந்திரம், பெண்ணியம் என கோடி கணக்கானோர்களின் ஒரு குரல், ஒரு விழிப்புணர்வு, ஒரு முன் மாதிரி— Zwigato திரைப்படம்.

பாவ்லோ பெனாண்ட்டி எனும் பாதிரியார் மிக எளிமையான அறைகளடங்கிய தன்னுடைய ஆறு துறவிகளுடன் ஒரு குடும்பமாக ரோம் ஆலயத்தில் வசித்துவருகின்றார். இவர்கள் பிற பாதிரியார்கள் போல் கிடையாது. Franciscans என்றழைக்கப்படும் கொள்கையில் உறுதியுடன் இருப்பவர்கள். துறவிகளடங்கிய குடும்பத்தில் மிக இளைய துறவிக்கு வயது 25 மற்றும் கற்பித்தல், தொண்டு செய்தல் அல்லது சமூகப் பணி, அசிசியின் வாழ்க்கையை பின்பற்றுதல் மற்றும் துறவிகளை நிறுவுதல் போன்றவை அன்றாடங்கள் இவர்களில் மூத்தவரின் வயது 102. இத்துறவிகள் கற்றலின் இல்லம்: பணியிலிருக்கும் அல்லது முன்னாள் பேராசிரியர்கள், வேதியியல், தத்துவம், இசை மற்றும் தொழில்நுட்பம் என பல துறைகளின் நுண் திறமை வாய்ந்தவர்கள். இவர்களில் ஐம்பது வயதுடைய பாவ்லோ பெனாண்ட்டி பொறியாளர் மற்றும் அறநெறியாளர் (Ethicist). ஐநூறு வருடப் பழமையான Pontificial Gregorian University-யில் பணியாற்றும் ஒரு Ethics Professor மேலும் பட்டதாரி இறையியலாளருக்கு கற்பிப்பதோடு, பாதிரியாளர்களுக்கு Bioaugmentation, Nueroethics மற்றும் artificial intelligence என அதி நவீன தொழில்நுட்பத்தின் தார்மீகம் மற்றும் நெறிமுறை சிக்கல்கள் பற்றி கற்பிக்கின்றார்—பாவ்லோ பெனாண்ட்டி.

பிப்ரவரி 2022ஆம் ஆண்டு ஐரோப்பாவில் போர் தொடங்கிய சமயத்தில், இந்த சக்தி வாய்ந்த AI தொழில்நுட்பத்திடமிருந்து தற்போது மன்றாடிக் கொண்டிருக்கும் மனித நேயம் எவ்வாறு பயனடைய போகின்றது என்கிற தலைப்பில் போப் பிரான்சிஸ் மற்றும் பிராட் ஸ்மித் எனும் மைக்ரோசாப்ட் தலைவருடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. ஒரு AI தொழில் நுட்பம் போருக்கான காரணியாக உக்ரைன் மீது பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து கவலைகளை தெரிவித்தார் போப் பிரான்சிஸ். இச்சந்திப்பை ஒருங்கிணைத்தது மொழிபெயர்ப்பாளர், தொழில்நுட்பம், மதம் மற்றும் அறநெறியாளரான பாவ்லோ பெனாண்ட்டி.

இருப்பினும் ரோம் ஆலயத்திலுள்ள தலைவர்கள் AI தொழில் நுட்பத்தின் சமத்துவமின்மையை பற்றிய அச்சத்திலேயே இருந்தனர். அதாவது முதன் முதலாக தொழில்துறை புரட்சியின் போது சமூகத்தின் குழந்தைகளும் முதியோர்களும் அதிகளவு பயன்படுத்திக்கொள்ளப்பட்டனர் அல்லது விலக்கிவைக்கப்பட்டனர். இதேபோல், தற்போதுள்ள AI தொழில் நுட்பம் தன்னுடைய அதிகாரம் மற்றும் செல்வாக்கால் சமூகத்தில் பலவீனமாகவர்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதினர்.

AI தொழில் நுட்பத்தின் DNA நிறுவனங்களான Anthropic, Google and Open AI மைக்ரோ சாப்ட் நிறுவனத்துடன் இணைந்து நெறிமுறைகளின் விதிகளடங்கிய தொகுப்பு ஒன்றை உருவாக்கினர். அதற்கான வேலைகள்  தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வேலையில், இவை மனிதகுல மதிப்பை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என எச்சரித்தனர். பாவ்லோ கூறுகையில் உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களோடு ஒத்து இயங்கக்கூடிய மற்றும் அதன் சார்புகளை பிரதிபலிக்க க்கூடிய வகையில் AI நெறிமுறைகளை வடிவமைப்பதில் நுணுக்கமான மற்றும் ஜனநாயக முறையை பின்பற்ற வேண்டும்—இது மனித குலத்தில் தாக்கம் செலுத்த இயலும்— இந்நெறிமுறைகளுக்கான உருவாக்கத்தை கணிணி விஞ்ஞானிகளிடம் மட்டுமே கொடுத்துவிட கூடாது. இது அரசு மற்றும் தனியார் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒன்று: குடிமக்கள், மத நிறுவனங்கள், கல்வித்துறை, அரசாங்கம் மற்றும் துறைசார் நிறுவனங்கள் என்று பல தரப்பட்ட மக்கள் முன்வந்து விவாதிக்கப்பட வேண்டும் என்கிறார்.

”இதற்கு முன் மனிதர்களால் மட்டுமே எடுக்கப்பட்ட முடிவுகளை, தற்போது யந்திரங்கள் முடிவெடுப்பதற்கான உரிமைகள் அளித்திருக்கின்றோம். இவற்றை அடிப்படையில் நாம் கவனமுடன் செயல்படாவிட்டால் தற்போதுள்ள பிரச்சனைகளை விட மிகப் பெரிய அளவில் அவற்றால் உருவாக்க நேரிடும்”-Brad Smith, Microsoft.

உலகெங்கிலுமுள்ள சட்டம் இயற்றும் வல்லுநர்களால் AI பற்றிய தங்களுக்குள் எழுந்த கேள்விகளுக்குள் பல விரிவான உள்ளடங்கிய கேள்விகளால் கவலையடைந்தனர். 2022-ஆம் ஆண்டு நவம்பரில், Bletchley Park,  இரண்டாம் உலகப்போரின் போது Code Breaker-களாக இருந்த பிரிட்டனின் மையம். இங்கு நடைபெற்ற கலந்தாய்வில் இந்தியா, பிரேசில், மற்றும் நைஜீரியா முதல் சீனா வரை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என இருபத்து நான்கு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் Open AI, Google Deep Mind மற்றும் Microsoft போன்ற முக்கியமான நிறுவனங்களின் தலைவர்கள் விவாதித்தனர்.

AI-யின் தவறுகளுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? மனிதன் பயன்படுத்தும் தகவல்கள், கற்றல் மற்றும் பிறரிடம் தொடர்பு கொள்ளும் முறைகளில் எவ்வகையில் மாற்றம் விளைவிக்கும்? எவ்வாறு இந்த தொழில்நுட்பம் நம்முடைய பண்புகள், நம்பிக்கைகளை பாதிக்கும் மற்றும் அதன் விளைவாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? AI தோல்விகளை எவ்வாறு தவிர்ப்பது? நம்மைவிட புத்திசாலியாக நிரூபிக்கக்கூடிய அமைப்பை எவ்வாறு கட்டுப்படுத்துகிறோம் ? என கேள்விகள் எழுந்தன என்கின்றார் ஒரு டெக்னாலஜி ரிப்போர்ட்டரான இந்நூலின் எழுத்தாளர் மதுமிதா முர்கியா. Bletchley பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்து கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டார்கள் மற்றும் ஒரு AI வடிவமைப்பாளர் பின்பற்ற வேண்டிய ஆறு கொள்கைகளை ரோம் முன் மொழிந்தது, அவற்றில் சில தீர்வுகளும் கண்டன.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வாடிகனில் ஒன்று கூடிய, ஒரே கடவுள் கோட்பாடுடைய மூன்று மதங்களிலிருந்து—இஸ்லாமிய சட்ட அறிஞர், யூத மத குரு மற்றும் கத்தோலிக் பேராயர்—மனித குலத்தை காப்பற்றுவதற்காக மதங்கள் ஒன்றிணைந்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஒற்றுமை மிக அரியதொரு தருணம் என நூலின் இறுதியுரையில் கூறியிருக்கின்றார் மதுமிதா.

இருப்பினும் நடந்தவை அனைத்தையும் ஒரு மறுபரிசீலனைக்குட்படுத்துகின்றார் எழுத்தாளர். பிரதிநிதிகளின் கேள்விகளுக்கான பதில்கள் சிக்கல் அடங்கியதாகவும் நடைமுறை வாழ்க்கையில் எழும் கேள்விகள் மதத்தலைவர்களிடம் விட்டுவிடலாகாது என்கிறார். இதே தொழில்நுட்ப வல்லுநர்கள் மதுமிதாவிடம் கூறுகையில், கடந்த கால சாதனைகளுடன் தற்போதுள்ள ஒத்துழைப்பும், அறம் சார்ந்த தலைமையும் வெகு தொலைவில் இருக்கின்றது. மேலும்,ரோம் அழைப்பை பின்பற்ற யாரும் சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்தவில்லை—ஏனெனில் இது ஒரு தன்னார்வ உறுதி மொழி.

ஒரு சிறந்த AI வடிவமைப்பதென்பது ஒரு கூட்டு முயற்சி என வலியுறுத்தும் மதுமிதா “Code Dependent” புத்தகத்தில் அதற்கான பங்களிப்பாளர்களின் சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டாக காணலாம். நைரோபியிலுள்ள Data labours, பல்கேரியாவிலுள்ள ஈராக் அகதி, இந்திய கிராமத்திலுள்ள டாக்டர் அஷிதா, நாடு கடத்தப்பட்ட சீன ஆர்வலர், ஆம்ஸ்டார்டமிலுள்ள ஒரு தாய், பிரிட்டிஷ் கவிஞர், அர்மின் எனும் பொறியாளர் மற்றும் ரோமிலுள்ள பாதிரியார் என இவர்களின் வாழ்க்கைப் பாடங்களாக விளக்கியிருக்கின்றார். இன்றைய AI தொழில்நுட்ப உலகில், ஒரு தனிமனிதனுடைய உரிமை மற்றும் கட்டுப்பாடுகளை இழக்க நேரிட்டால் அதற்கான செயல்களுக்கு பொறுப்புகள் ஏற்பது எளிதல்ல என்றே தோன்றுகிறது.

AI தொழில்நுட்பத்தின் சமூக மதிப்பு குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறேன். இது எத்தகைய தனித்தன்மை வாய்ந்திருந்தாலும் சரி, சாமானியர்களுக்கு சிறந்த மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கான மனித நேயத்தை நல்லதொரு நிலையில் வைத்திருக்கும் வரை மட்டுமே அதற்கான  பயன் என்கின்றார்.

Code Dependent எழுத்தாளரான மதுமிதா முர்கியா, Financial Times-ன் முதல் Artificial Intelligence Editor மற்றும் பத்து வருடங்களுக்கு மேலாக AI மற்றும் சமூகத்தில் தொழில்நுட்பத்தால் ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் Wired மற்றும் Financial Times-ல் எழுதி வருகின்றார். இந்தியாவில் பிறந்து வளர்ந்து, பிரிட்டனில் Immunologist (நோய் எதிர்ப்பு நிபுணர்) கல்வி பயின்ற இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இந்நூலானது Womens Prize for Non-fiction 2024 குறும்பட்டியலில் இடம்பெற்றது குறிப்படத்தக்கது.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “அல்காரிதம்-ஒரு மனித வாழ்க்கை”

  1. எல்லாவற்றிற்கும் செயற்கை நுண்ணறிவின் மூலம் தீர்வு கண்டுவிடலாம் எனும் நிலையில் அதிலுள்ள அறம் சார்ந்த சிக்கல்களைப் பேசியிருப்பது புதியதொரு பார்வையைத் தருகிறது. இதைத் தெளிவாய்க் கடத்தும்படி கட்டுரையும் சிறப்பாய் அமைந்துள்ளது.

Leave a Reply to ர. யது நந்தன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.