
2025ஆம் ஆண்டு தமிழில் புதிய நாவல்கள் பல வெளியாகியுள்ளன. சில எழுத்தாளர்களின் முதல் நாவல்களும் அவற்றுள் அடங்கும். இந்த நாவல்களைப் பற்றிய சில அறிமுகக் குறிப்புகள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் குறிப்புகள் முழுமையான விமர்சனங்கள் அல்ல. வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட குறிப்புகள்.
பிறைக்குள் ததும்பும் பேரொளி – மானசீகனின் ‘மூன்றாம் பிறை’
கோ.கமலக்கண்ணன்

முகப்பிலேயே நாவலின் திறவுகோல் இருந்திருக்கிறது. இத்தனை பெரிய நாவலின் முதல் அத்தியாயம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் வாசிக்கும் அனைவருக்கும் எழுவது இயல்பு. முதல் அத்தியாயத்தை வாசித்தபோது அழகிய கனவுகளின் வர்ணனை என்றும் கனவின் வழியாக நிகழ்காலத்துக்கு வந்து முதன்மைப் பாத்திரங்கள் சிலவற்றை அறிமுகம் செய்யும் உத்தி என்று மட்டுமே கருதினேன். ஆனால் வாசித்துச் செல்லச் செல்ல நாவல் உச்சம் பெறும் பல்வேறு தருணங்களுக்கான திறவுகோல் அல்லது வரைபடம் அது என்பதை உணர்ந்ததும் சிறு திடுக்கிடல் ஏற்பட்டது.
முதல் அத்தியாயம் நாவலின் மையப் பாத்திரங்களின் வாழ்வை எப்படி இவ்வளவு சுருக்கிக் காட்டியது என்று உணர்ந்தபோது மலைப்பு தோன்றியது! முதல் அத்தியாயம் நினைவுத்தளத்தில் பதிந்து பரவி நாவல் நெடுக நிழல்போல துணை வந்திருக்கிறது. நாவலின் பாத்திரங்களின் துயரம் ஏற்கெனவே நமக்குத் தெரிந்தவர்களின் துயரமாக இருப்பதாகவும் புதிய துயரமாக விரிவதாகவும் இருநிலையில் வாசிப்பு செல்ல உதவியது. மலைப்பு தொடர்ந்தது!
ஒரு காட்சியில் நிறையழிந்து கால்களிடையே முகம் புதைத்து அமர்ந்த பாருவின் முதுகுக்கு உதுமான் முத்தமிடுகிறான். இரவில் நீரூற்றுகையில் சலசலக்கும் மருதாணிச் செடியென அவள் சிலிர்க்கிறாள். இந்த இடத்தில் வாசிப்பை நிறுத்தி கற்பனையில் ஆழாதவன் இழப்பது நல்லின்பச் சுவை. பல அத்தியாயங்களில் இத்தகைய வியப்புணர்ச்சி எழுந்து என் வாசிப்பு வேகத்தை மட்டுப்படுத்தியது. ஆணவத்துடன் வாசிக்காதே என்று என் அகக்குரலை உசுப்பிற்று.
மூன்றாம் பிறை பற்றிய எண்ணத் துளிகளைக் கட்டுரையாக எழுதலாம் என்று எண்ணியபோது எதைச் சொல்ல எதைவிட என்று உவகை அலைகள் நெஞ்சில் மோதின. சொல்லித் தீராத சிறப்புகள் ஏராளம். நாவலைப் பற்றிச் சொல்வதைவிட நாவலால் நெஞ்சில் கசிந்த ஈரத்திலும் உள்ளம் பதறிய உழப்பிலும் ஒட்டியிருந்த எண்ணங்களைச் சொல்லிவிடலாம் என்ற முடிவெடுத்து மனத்தின் நினைவுக்கிடங்கைத் தேடினேன். அவற்றில் சிலவற்றை மட்டுமே இங்கு பகிர்கிறேன்.
ஆசிரியர் பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கி உயிர்ப்பூட்டியிருந்தாலும் எந்த பாரத்தையும் அவற்றின் மேல் ஏற்றாமல் சன்னமான சொற்களால் நிகருலகை உருவாக்கி இருக்கிறார். தன் குரலின் சாய்வுகளை எந்தக் கதா பாத்திரத்தின் மீதும் செலுத்தாமல் விலகியே நின்றிருக்கிறார். நீர் ஒழுக்கின் விரைவோ, அழகோ, உடைப்போ நிகழும்போது விலகியவர் மெல்லுணர்ச்சிகள் தோன்றிவிடக் கூட இடங்களில் நின்று அணை கட்டி அங்கிருந்து விலகி விடுகிறார்.
அதற்காக ஆசிரியர் பேசவே இல்லையா என்றால் அப்படியும் இல்லை. யாண்டும், எஞ்ஞான்றும் குன்றாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். உவமைகள் வாயிலாக, நுண் சித்தரிப்புகள் வாயிலாக, நகைச்சுவை வாயிலாக. ஒரு இலக்கிய உரைநடையில் கதா பாத்திரங்களின் குரல்கள் உரையாடல் வழியாகவும் ஆசிரியரின் குரல் விதப்பு முறை வாயிலாகவும் அருகருகே வெளிப்பட்டபடி இருக்கும். இதற்கு இரட்டைக் குரல் என்று பெயர். இந்நாவலில் இந்த இரட்டைக் குரல் ஒன்றி பல்வேறு இடங்களில் ஒற்றைக் குரலாகச் சன்னமாக மயங்கி விடுகிறது. இதுவே இதன் தனிச்சிறப்பு. இதையே மூன்றாம் பிறை வாசித்த பலரும் ஆசிரியர் வளவளவென பேசிக்கொண்டிருக்கவில்லை என்று பாராட்டுகின்றனர்.
நாவலில் வரும் ஒற்றை வரி ஆச்சரியங்கள் ஏராளம். ‘உலகிலேயே புத்திசாலித்தனமான குழப்பவாதின்னா அது ஓஷோதான்’ என்று வாசகர்களைப் புன்னகை செய்வதாகட்டும். ‘மாமரத்துக் குயில் அவர்களுடைய வார்த்தைகளைப் பொறுக்கிக் கொள்ள காத்திருந்தது’ என்று காதலின் அழகைக் காட்சிப் படிமமாக்கும்போதும் அதில் கவித்துவத்தைப் பொருத்துவதாகட்டும் வீட்டாருக்கு ரசாக் ஏதோ கட்டளையாகச் சொல்வான். அவன் சொன்ன பின் அவனுடைய நாய் ‘ஆமாம் சொல்லிப்புட்டேன்’ என்பதைப் போல குரைப்பது, ‘முக்கொம்புவில் புதைமணல் – அமலா அங்குதான் இறந்தாளாம்’ போன்ற காலத்தில் நிலவிய பாதிப்பிலா மூட நம்பிக்கைகளைச் சுட்டி நம்பகத்தன்மையை அதிகரிப்பதாகட்டும் எல்லாம் சிறப்பாக வந்திருக்கின்றன.
உதுமான் ராவுத்தர் நாவலின் தூண்களுள் ஒருவர். பெண்ணின் தந்தையாகவும் பெண்களிடம் ஈர்ப்பு கொண்ட நாயகனாகவும் தன்னை உணர்ந்து தவிக்கும் இரட்டை நிலை அகவையில் மிளிர்கிறார். இளமையின் பிறழ்வுகளும் செல்வச் செழிப்பும் அவருக்குள் ஏற்றி வைத்த மிடுக்கை உழைப்பால் தகவமைக்கத் தெரியாத பொறுப்பின்மையும் அவரிடம் குழைகிறது. ஒரு நடுவயதுப் பெண்ணை ரசித்துப் பார்த்து மனம் மகிழும் அறிமுகக் காட்சி சிறப்பானது. அதில் தன் மகனோடு அமர்ந்து உணவு உண்பாள் அந்த மங்கை. அவன் கேட்கும் கேள்விக்கு அவ்வப்போது குலை தள்ளும் வாழையென சாய்வாள். அந்த உவமை ஆசிரியரின் குரலில் ஒலித்ததா இல்லை உதுமானின் மனக்குரலா என்று மயக்கம் உண்டானது. விதப்பு முறையின் இரட்டைக் குரல் ஒன்றாகிய தருணங்கள் இதைப் போல எண்ணற்றவை.
இருப்பில் மிடுக்கு, தீராக்காமம், இருதலைக் கொள்ளி நிலை, மோகமுள் குத்திய நெஞ்சம், ஓரிரு உற்றவர்களின் விசுவாசத் துணை யாவற்றையும் மீறி இறந்தபின்னும் கபுறுஸ்தான் அடக்கத்தில் இரண்டு பெண்களுக்கிடையே உறங்கும் உதுமான் எல்லோராலும் ரசிக்கப்படுவார். உதுமானின் காமத் தினவு அவருடைய பிள்ளைகளில் ஓங்கியும் அடங்கியும் திரிந்தும் இருப்பதைக் காண முடிகிறது. கரமசோவ் சகோதரர்களில் திமித்ரி, இவான், அலெக்ஸி மூவருமே தமது தந்தையின் வெவ்வேறு குணநீட்சிகளாகவே இருப்பதைப் போல. இந்த வார்ப்பு கதைக்களத்தின் நம்பகத்தன்மையை வெகுவாக மேம்படுத்துவதோடு சிறந்த வாசிப்பு இன்பத்தையும் நல்கியது.
பொதுவாக இஸ்லாமிய வாழ்க்கை முறையைப் புனைவாக்குவது சிக்கலான ஒன்று. ஆசிரியர் இஸ்லாமிய பின்புலம் கொண்டவராகவே இருந்தாலும் அதுதான் நிலைமை. அரபு நாடுகளின் இஸ்லாமும் இந்திய இஸ்லாமும் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இஸ்லாமிய சமூகங்களும் தன்னளவில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவற்றை உருவாக்கும்போது கடுமையான உழைப்பும் தைரியமும் தேவை. சுபைதா தன் மாமனாரைப் போற்றும்போது ‘தர்மர்’, ‘கர்ணர்’ என்றெல்லாம் போற்றுகையிலும் கல்லூரி கன்னியாஸ்திரி ஆசிரியைகளை வசைச்சொல்லால் சுட்டுவதும் இயல்பின் பிம்பங்கள். காதரின் நண்பர்கள் அவனது குடும்பத்தோடு கொண்டிருக்கும் நெடிய பந்தம் இஸ்லாமிய இல்லங்களின் நட்பு நிலைப்பாடு குறித்த ஒரு சோற்றுப் பதம்.
ஆசிரியர் வஹிதாவை வர்ணித்த எந்தப் பதத்தால் நான் அப்படியொரு முகத்தைக் கற்பனை செய்தேன் என்று தெரியவில்லை. திரானே அலிதோஸ்தியின் புன்னகை முகத்தை ஒட்டிய சாயல் கொண்டவளாக வஹிதாவின் பிம்பம் என்னுள் எழும்பியது. கண்ணீரைக் கட்டுப்படுத்தும் சிவந்த கண்கள், புன்னகையைத் தேக்கி வைத்தபடியே இருக்கும் முகத்தில் அழகின் விளைவும் புரிதலின்மையும் ஒருங்கே கிளர்த்திய துயரத்தின் தடைச்சாவடி. காதரிடம் தன் குழந்தையைப் போல் பரிவு கொள்ளும் தாய்மை சட்டென பாண்டியின் அமலா அக்காவை நினைவூட்டியது.
நாவலின் உயிர்வளி வஹிதாதான். வஹிதாவை கருணையே மிகுந்த காரிகையாக ஆசிரியர் படைக்கவில்லை. துள்ளலும் மலர்ச்சியும் அகன்று வாழ்வின் நெருக்கடிகளால் ஒதுங்கியபோதும் அகத்தின் தவிப்புகளோடும் வீட்டாரின் விருப்பு வெறுப்புகளோடும் அவள் மறுகுகிறாள். யாருக்கும் வராத தாழ்ச்சி அவளைக்கு வந்ததைப் போல ஓர் அழகியை ஊரார் சற்றே கூடுதல் ஏளனத்துடன் அவளைப் பார்க்கிறார்கள். அழகற்றதன் வீழ்ச்சியில் என்ன இருக்கிறது. அழகியின் முடக்கமே சிறுமை மாந்தரின் பெருவிழைவு.
இத்தனை வீழ்ச்சியிலும் வீட்டில் மலர்ந்திருக்கும் ரோஜாவைப் பார்க்கும் வஹிதாவுக்குச் சிறு பொறாமை உண்டாகிறது. அவளோ உலகத்தார் பார்வைக்கு மலர்ந்திருக்கும் ரோஜா. கணக்கு நேர்தானே! அதை ரசிக்கவும் நேசிக்கவும் கசக்கவும் அழியவேண்டும் என்று விரும்பவுமாக ஒவ்வொருவரும் அதன் மீது நோநோக்கு கொள்கின்றனர். தன்னடக்கத்தையும் காமத்தையும் ஒரு அழகி எதிர்கொள்வதன் பன்மயச் சிக்கல்களைத் தேவைக்கேற்ப கவித்துவமாகவும் பூடகமாகவும் இயல்பாகவும் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். அவளுடைய தாழ்ச்சிக்குக் காரணமாக புகுந்த வீட்டார் சுட்டியதெல்லாம் பொய்யென்று ஆகும் உணர்ச்சித் தருணத்தில் அவளுடைய நரம்புகள் வெடிக்கின்றன.
தன் வெற்றியைக் கூட வெளியில் பகிர்வதற்கு அருளப்படாத உயிரிகள் ஏன் மண்ணில் பிறக்கின்றனவோ! ஒருவேளை கண்ணீரின் மதிப்பைத் தெரிவிக்கவோ. கண்ணீரே வாழ்வின் உன்னதம், மரணத்தின் இருப்பை உணர்த்தும் மெய்யியல் ரசம், உலர்ந்த வாழ்வை ஈரமாக்கும் உயவுப்பொருள், அகக் கசடுகளை அகற்றும் தூய்மையாக்கி. நகைச்சுவையையும் வாழ்க்கைப் பாடுகளையும் மட்டுமல்ல கண்ணீரையும் துல்லியமாக எழுதிவிட்டார் மானசீகன். அதன் இடப் பொருத்தப்பாடும் வீரியமும் இந்தக் கட்டுரையை எழுதுகையிலும் என்னுள் சிலிர்ப்பை உண்டாக்குகிறது. வஹிதாவைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது. ஆனால் வாசிப்பு இன்பத்தை நல்கும் பகுதிகளைப் பேசிவிடக் கூடாது என்ற தன்னுணர்வு மட்டுமல்ல என்னைத் தடுப்பது. அழகைத் துயர் ஆட்கொள்ளும் அவலத்தைப் பேசி பேசி பெருக்க வேண்டாம் என்ற விழைவும்தான். இன்மையின் புன்கண்ணீர்
இறுதிப் பகுதியில் சுபைதா தன் பெரிய குடும்பம் சிதைந்து நிற்கும் இடங்களில் உதவியின்றித் தவிப்பதும் காலாவதியான உணவைத் தன் மகனுடைய பசித்த வயிறுக்காக மறுக்காமல் எடுத்துச் செல்வதும் தவிப்பை ஏற்றின. இருப்பின் வன்கண்ணீர்!
ஓரளவுக்கு மேல் உதவ முடியாத அண்ணன்கள், விலகி நின்று உள்ளே மறுகும் உதுமான் ராவுத்தர், அகத்திலேயே அக்காளை வணங்கும் காதர், நேசமிருந்தும் விலகி இருந்தாக வேண்டிய போத்தி, துணை வரும் இஸ்மாயில் என்று எல்லோரும் தன்னலத்தாலோ கெளரவத்தைக் காக்க விழைந்தோ தயக்கத்தாலோ அவளைக் கைவிடுகின்றனர். ஆண்களின் நிரை ஒருபுறமிருக்க பழம்பொருள் சேகர அறையில் சட்டென தலைதூக்கும் நாகம் போன்ற பதரக்கா, குத்திப் பேசி குலை நடுங்கச் செய்யும் மாமியாள், ஈன்றெடுத்த மகளே ஆயினும் பாதுகாப்பு, கடமை என்ற பெயர்களில் அவசரத்தில் வாழ்வை அடகு வைத்த சுபைதா என பெண்கள் பலரும் அவளை மட்டுப்படுத்தி நசுக்கி நோகச் செய்கிறார்கள்.
காதர் நேசிக்கும் பூவுக்கும் அவர்களுடைய புவனா மிஸ்ஸுக்கும் இடையிலான உரையாடல் பகுதிகளும் பூவின் சுட்டித்தனத்தை அடித்து நொறுக்கும் இன்பாவின் பேச்சும் சிறப்பானவை. பூ, காதர், இன்பா, கரோலின் ஆகியவர்களின் கதைகளையே தனி நாவலாக எண்ணலாம். வாசிப்பவர்களுக்கு இது நன்கு துலங்கும்.
நாவலில் மனிதர்கள் மட்டுமே கதா பாத்திரங்கள் அல்லர். மீரா, ஜில்பான்ஸ், ஜீப், உணவகம் என அனைத்துக்கும் உயிர்ப்பு அளித்திருக்கிறார் படைப்பாளர். ஒருபுறம் அஃறிணைகளின் தொடர் இருப்பு ஒரு நெடிய இழையாக நீள்கிறது. மறுபுறம் நட்பின், கூடா நட்பின் பல்வேறு முகங்கள் இழைகின்றன. நாவல் நெடுக அழகு, அழகின்மை பற்றிய தாக்கங்கள் வருகின்றன. அவ்விதமே காதல், காம வினை விளைவுகள் முன்வைக்கப்படுகின்றன. வாழ்ந்து தாழ்ந்த குடும்பத்தின் பொருளாதார வீழ்ச்சியும் காம வெகுளி மயக்கத்தால் நடக்கும் கொலையும் பேரிழப்புகளும் நாவலின் மைய இழையாகச் செல்கின்றன. செந்தமிழ் குன்றாத எழிலுடன் எங்கும் நிறைந்திருக்கிறது.
ஒரு விளையாட்டாக எத்தகைய செருக்கான கேள்விகளை நாவல் மீது போடலாம் என்று கற்பனை செய்து பார்த்தேன். பாவனை எண்ணங்கள் எழும்பின.
‘தமிழ்ச் செறிவு நிறைந்திருந்தால் அது நாவலாகிவிடுமா?’
‘கதா பாத்திரங்களைத் துல்லியமாக நிகர் மாந்தராக மாற்றினால் அது நாவலாகிவிடுமா?’
‘எண்ணூறு பக்கங்களில் 150 அத்தியாயங்கள் எழுதிவிட்டால் அது நாவலாகிவிடுமா?’
‘இதுவரை தமிழ் இலக்கிய பரப்பில் அதிகம் பேசப்படாத இஸ்லாமிய குடும்ப வாழ்வைப் பேசிவிட்டால் அது காலம் கடந்து நிலைபெற்றுவிடுமா?’
ஆம். இந்தக் கேள்விகளுக்கு நல்விடை பகர்ததால் மட்டுமின்றி இவை அனைத்தையும் கடந்த பல சாத்தியங்களைச் சாதித்ததால் மூன்றாம் பிறை நீண்ட காலம் இலக்கிய வானில் பொன்னொளி வீசும். மூன்றாம் பிறை பணிவுடன் வாசித்தால் உவகை தரும். ஆணவத்துடன் வாசித்தால் அதை அழித்துவிட்டு உவகை தரும்.
( மூன்றாம் பிறை | மானசீகன் | தமிழினி – விலை ரூ,990 )

இருளின் விழிகள் – என்.ஸ்ரீராமின் ‘இரவோடி’
விக்னேஷ் ஹரிஹரன்
தமிழ் நாவல்களின் வரலாற்றில் தொண்ணூறுகளின் பிற்பகுதியும் இரண்டாயிரத்தின் முற்பகுதியும் எத்தனை முக்கியமான திருப்புமுனையாக இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது வரையிலான தமிழ் நாவல்களின் ஒட்டுமொத்த வரையறைகளையும் மாற்றியமைத்த படைப்புகள் இந்த காலகட்டத்திலேயே உருவாயின. இவற்றில் பெரும்பாலான படைப்புகள் தமிழினி பதிப்பகத்தோடு தொடர்பில் இருந்த படைப்பாளிகளாலேயே உருவாக்கப்பட்டன என்பதும் நாம் அறிந்ததே. ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், சு. வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன் என நீளும் இந்த வரிசையில் பலர் இன்று தமிழின் முன்னோடிகளாக நிலை பெற்றுவிட்டனர். அவர்கள் தொடங்கி வைத்த நாவல்களின் அலை அடுத்த பத்து ஆண்டுகளுக்குத் தமிழில் செல்வாக்கோடு நிலைத்திருந்தது. அதற்குப் பிறகு இதே காலகட்டத்தில் தமிழுக்கு அறிமுகமான பின்நவீனத்துவ அலையால் ஈர்க்கப்பட்ட படைப்பாளிகள் நாவல்கள் எழுதத் தொடங்கினர். இரண்டாயிரத்தின் முற்பகுதியில் உருவான கணினிப் பரவலாக்கமும் இணையப் பரவலாக்கமும் இவர்களுக்கு புதிய வகையான எழுத்து முறைகளையும் இலக்கியக் கோட்பாடுகளையும் அறிமுகப்படுத்தியது. அதன் விளைவாக அவர்கள் நாவல் எனும் வடிவத்தில் பல்வேறு வகையான பரிசோதனைகளை செய்து பார்த்தனர். அவற்றுள் சில வெற்றிகரமான முயற்சிகளும் நிகழ்ந்தன. ஆனால் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வந்த படைப்பாளிகள் உருவாக்கிய செவ்வியல் நாவல்களின் அழகியலை முன்னெடுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை நாவல்கள் தமிழில் நீண்ட காலமாக உருவாகவில்லை. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகியிருக்கும் நாவல்களான என். ஸ்ரீராமின் ‘இரவோடியும்’ மானசீகனின் ‘மூன்றாம் பிறையும்’ இந்த செவ்வியல் அழகியலைப் பின்பற்றி எழுதப்பட்டிருக்கும் முக்கியமான படைப்புகள். (மேலும் சில படைப்புகள் இருக்கலாம். அவற்றை வாசிக்க வேண்டும்.) இதில் குறிப்பாக என். ஸ்ரீராமின் ‘இரவோடி’ முழுக்க செவ்வியல் அழகியலையோ பின்நவீனதத்துவ அழகியலையோ அக்ஷர சுத்தமாக பின்பற்றாமல் தனக்கே உரிய பிரத்தியேகமான கதை கூறல் முறையைக் கைக்கொண்டிருக்கிறது. என். ஸ்ரீராம் தமிழில் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்தான். அவரது சிறுகதைகளின் மூலம் கொங்கு வட்டாரத்தின் அசலான கதைசொல்லிகளில் ஒருவராக தன்னை நிறுவிக்கொண்டவர். தனக்கான தனித்துவமான களங்களையும், மொழியையும், பாணியையும் உருவாக்கிவிட்டவர். ஏற்கனவே ‘அத்திமரச் சாலையில்’, ‘மாயாதீதம்’ போன்ற குறுநாவல்களை அவர் எழுதியிருந்தாலும் அவரது முதல் நாவலாக இரவோடியையே சொல்ல முடியும். என். ஸ்ரீராம் எனும் படைப்பாளியின் தனித்துவமும் திறமையும் வெளிப்படும் நாவல் இது. என். ஸ்ரீராமின் முத்திரைகளாக அறியப்படும் விரிவான புறச்சூழல் சித்தரிப்புகளும், கொங்கு பிரதேசத்தின் கிராமிய வாழ்வும், நாட்டார் தெய்வ நம்பிக்கைகளின் வழியே உருவாகும் மாய யதார்த்த சூழல்களும், தனித்துவமான உதிரி மனிதர்களும் இந்த நாவல் முழுவதும் விரவியிருக்கின்றனர். மரணத்தின் வாயிலில் காத்திருக்கும் தன் தாத்தாவின் வாழ்வை அறிய முற்படும் அகிலின் தேடலில் தொடங்கும் நாவல் அவன் வழியே வீரானைச் சென்றடைந்து அவன் வழியே சாமானிய வாழ்விற்கு அப்பால் உள்ள சாமக் கோடாங்கிகளின் வாழ்வை சென்றடைகிறது. ஒளியின் யதார்த்தத்திற்கும் இருளின் மாயத்திற்கும் இடையே ஊசலாடும் தனித்துவமான சமூகமாக சித்தரிக்கப்படும் சாமக் கோடாங்கிகளின் வாழ்வு, நம்பிக்கைகள், சடங்குகள், சிக்கல்கள் என வளர்கிறது நாவல். ஆனால் எத்தனை வளர்ந்து சென்றபோதிலும் மையக் கதையின் சரடு அறுபடாமல் ஒற்றை இலக்கை நோக்கியே செல்கிறது. அந்த வாழ்வின் வழியே மரணம் எனும் பெருவிந்தையின் புதிய பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. “பாதியும் உறங்கிப் போகும்” பொழுதுகளில் விழித்திருப்பவன் காணும் காட்சிகளும், தெய்வங்களும், மனிதர்களும், மாயங்களும் அசாத்தியமானாவை. அவற்றை தனக்கேயுரிய சரளமான மொழியிலும், சுவாரசியம் குறையாத நடையிலும் எழுதியிருக்கிறார் என். ஸ்ரீராம். தன் இலக்கை நோக்கி அசாத்தியமான ஒருமையோடு விரையும் நாவலின் கதைச் சரடு சார்ந்த போதமே அதன் பலமும் பலவீனமும். அந்த போதம் நாவலுக்கு ஒரு திரில்லரின் (வேகப்புனைவு) வேகத்தைக் கொடுத்தாலும் நாவலெனும் வடிவம் அளிக்ககூடிய விரிவுக்கான சாத்தியங்களை முழுவதுமாக பயன்படுத்தவிடாமல் தடுக்கிறது. சாமக்கோடாங்கிகளின் வாழ்வை இந்த நாவலின் மையக் கதைக்களத்திற்கு அப்பாலும் விரிக்கக்கூடிய சாத்தியம் இந்த நாவலிலேயே இருந்தும் அது கவனமாக தவிர்க்கப்படுகிறது. ஒரு செவ்வியல் நாவலுக்கு உகந்த களமும் கதைமாந்தர்களும் அமைந்தும் இந்த நாவல் அதன் செவ்வியல் சாத்தியங்களை நிராகரிக்கிறது. மேலும் மிக நுட்பமான புறச்சூழல் சித்தரிப்புகளால் நிறைந்திருக்கும் இந்த நாவலில் கதைமாந்தர்களின் அகவுலகம் கனவுத்தன்மை மிகுந்த மாயத் தருணங்களால் மட்டுமே உணர்த்தப்படுகிறது. ஆனால் இந்த குறைகளுக்கும் அப்பால் என். ஸ்ரீராமின் இரவோடி இந்த ஆண்டு வெளியாகியிருக்கும் குறிப்பிடத் தகுந்த படைப்புகளில் ஒன்று. ஒரு சிறுகதை ஆசிரியராக தன்னை பல முறை நிரூபித்துக் காட்டியிருக்கும் என். ஸ்ரீராம், இரவோடியின் வழியே ஒரு நாவலாசிரியராகவும் தன் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். எந்தவொரு எழுத்தாளருக்கும் நாவல் என்பது ஒரு சவால்தான். ஏனெனில் அது கடும் உழைப்பையும் திறனையும் கோரும் கலை வடிவம். அந்த வகையில் என். ஸ்ரீராம் போன்ற ஒரு தனித்துவமான எழுத்தாளருக்கு நாவல் ஒரு சரியான களம்தான் என்பதை இரவோடி நிரூபித்திருக்கிறது.
( பரிசல் பதிப்பகம், விலை ரூ.700 )

மூன்று எழுத்தாளர்களின் முதல் நாவல்கள்: அறிமுகக் குறிப்புகள்
வினோத் ராஜ்
2024ஆம் ஆண்டின் இறுதியில், கணிசமான எண்ணிக்கையில் புதிய நாவல்கள் வெளியாகியிருந்தன. அவற்றுள் முதல் நாவல் எழுதியவர்களின் பெயர்களையே நான் முதலில் கவனிக்கத் தொடங்கினேன். என் கவனத்துக்கு வந்த முதல் நாவல் ஆசிரியர்களின் சில நாவல்களை வாங்கினேன். அவற்றுள் மூன்று நாவல்களை வாசித்தேன். நான் வாசித்த ஆக்கங்கள் அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘தீக்குடுக்கை’, செல்வக்குமார் பேச்சிமுத்துவின் ‘கெளிமதம்’ மற்றும் வயலட்டின் ‘இதோ நம் தாய்’ ஆகியன. மூன்று நாவல்களும் அதன் மொழியால் அவை சொல்ல தேர்ந்துக்கொண்ட வாழ்க்கைமுறையால் வெவ்வேறு விதமானவை.
அனோஜன் பாலகிருஷ்ணன் தன் சிறுகதைத் தொகுப்புகளால் கவனம் பெற்றவர். சதைகள், பச்சை நரம்பு மற்றும் பேரீச்சை ஆகியன அவரின் சிறுகதைத் தொகுப்புகள். மூன்று சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பின்னரே தன் முதல் நாவலை அவர் எழுதியுள்ளார். அதேப்போல, ஊதா ஸ்கர்ட் கதைகள் மற்றும் நட்சத்திரங்களுக்குச் செல்லும் வழி ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பிறகு தன் முதல் (குறு)நாவலை வயலட் எழுதியுள்ளார். வயலட் இரு நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. செல்வக்குமார் பேச்சிமுத்துவுக்கு ‘கெளிமதம்’ நாவல்தான் முதல் புத்தகம். இந்நாவலுக்கு முன்பாக அவர் நான்கைந்து சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ளார் என்று அறிகிறேன். எனினும், அவை தொகுப்பாக்கப்படவில்லை.
‘தீக்குடுக்கை’, ஈழப் போர் பின்னணியையும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்வையையும் அவர்தம் உளவியலையும் ஒன்றுசேர்த்து தொகுத்தளிக்கும் நாவல்.
‘கெளிமதம்’, தென்காசியையொட்டிய ஒரு கிராமத்தின் மனிதர்களையும் ‘ராக்கம்மா’ எனும் பெண்ணின் வாழ்க்கையையும் அப்பகுதியின் வட்டார வழக்கிலே கதையாகச் சொல்லிச் செல்வது போல் எழுதப்பட்டிருக்கும் நாவல்.
‘இதோ நம் தாய்’, மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றும் திருநங்கையின் எண்ணவோட்டங்களை மனப்பதிவைப் போலத் தொகுத்தளிக்கும் முயற்சி.
1. தீக்குடுக்கை – அனோஜன் பாலகிருஷ்ணன்
நம் வாழ்வில் நமக்கு நிகழும் நிகழ்வுகளும் நாம் அறிந்துக்கொள்ளும் சம்பவங்களும் தகவல்களும் அதனதன் போக்கில், நம் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல்தான் நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன. அவற்றுள், ஒரு படைப்பாளியின் கவனத்தை முழுமுற்றாக ஆக்கிரமிக்கும் சம்பவங்களும் அதைத் தொடர்ந்து அவனுக்குள் எழும் வாழ்க்கைக் குறித்த கேள்விகளும் தேடல்களும் அவனை ஏதேனுமொரு வடிவில், அதைப் படைப்பாக்கத் தூண்டும். ஒரு படைப்பாளி, தொடர்ந்து தன்னைப் பாதிக்கும் ஒன்றை, துன்புறுத்தும் ஒன்றை, மகிழ்விக்கும் ஒன்றைத் தன் அனுபவங்களுக்குட்பட்டு வரையறுத்துக்கொண்டு அவற்றைத் தம் படைப்பில் வெளிக்கொணர்வதென்பது இயல்புதான். அந்த வகையில், ஈழத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் வாழ்க்கையிலும் சிந்தனைகளிலும் எழுத்துக்களிலும் ஈழப் போரும் அதன் பின்னணியும் நீக்கமற நிறைந்திருப்பதைக் காணலாம்.
போர்கள் ஓய்ந்தாலும்கூட, போர்களும் போர்கள் தந்த வலிகளும் வடுக்களும் வழிவழியாக ஏதேனுமொரு வகையில், காலத்தைக் கடந்தும் நிலத்தைக் கடந்தும்கூட, நீங்காத காயங்களாகப் போரில் பங்குப்பெற்ற சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன. அஃது ஓர் ஆறா வடு, மீளாத் துயர், தீராக் கதை.
அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘தீக்குடுக்கை’ நாவலின் மையக் கதாபாத்திரமான ஆதன் இங்கிலாந்திலே பிறந்து வளர்ந்தவன். ஆனால், அவனின் வேர்கள், பெற்றோர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் இலங்கையில். பெற்றோர்கள் புலம்பெயர்ந்த நாட்டில் பிறந்து வளர்ந்த ஒருவன், தன் வேர்களின் மண்ணில் நிகழும் போரில் பங்கெடுக்கத் துணிந்து ஈழப் போரில் பங்குப்பெறுகிறான். அவனை அம்முடிவை நோக்கிச் செலுத்தியது எது? என்ற கேள்வி மிக முக்கியமானது.
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தாலுமேகூட, ஆதன் இங்கிலாந்தின் மற்றைய பிரஜைகளால் ஆசியன்/இலங்கை தீவுக்காரன் என்ற அடையாளத்துடனே குறிப்பிடப்படுகிறான். சிறுவயதில், பள்ளியிலிருந்து அவனுடைய அடையாளச் சிக்கல் அவனைத் துரத்தத் தொடங்குகிறது. அவை தரும் பாதிப்பில், ஆதனுள் எழும் கேள்விகளும் அவனின் தேடல்களும் அவனை ஈழத்தை நோக்கிச் செலுத்துகின்றன.
ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில், ஒரு குறிப்பிட்ட வாழ்க்கையைப் படம் பிடித்துகாட்டுவது போல, ஆதனின் புலம்பெயர் வாழ்க்கை இரு வெவ்வேறு வகைகளில் எடுத்தாளப்பட்டுள்ள பாங்கு நாவலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அவன் இங்கிலாந்திலே பிறந்து வளர்ந்தாலும், அங்குள்ளவர்களுக்கு அவன் புலம்பெயர்ந்தவன்தான், அதைப்போலவே, ஈழப் போரில் பங்கேற்று போரின் இறுதிக்கட்டங்களில் இலங்கை இராணுவத்திடம் மாட்டிக்கொள்ளும்போதும் அவன் புலம்பெயர்ந்தவன்தான்! ஆதன் வாழ்வின் அவலம் எனவும் முரண் எனவும் இதைக் கருதலாமா?
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, போரின்போது மிகக் குறுகிய மாதங்களுக்குள்ளாகவே அவன் இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்குள் பணிப்புரிய உட்படுத்தப்படுகிறான். ஆதன் வழியாக ஒரு புறம், ஈழப் போர் சார்ந்த தகவல்களும் விவரணைகளும் ஆதனுக்குள் முகிழும் கேள்விகளும் தேடல்களும் அவனின் உணர்வுகளும் கதைகளாகச் சொல்லப்பட, மறுபுறம் ஆதனைக் காணாமல் அவதியுறும் ஆதனின் காதலி எரிகாவின் மனவோட்டங்களும் ஆதனைத் தேட அவள் எடுக்கும் பிரயத்தனங்களும் சொல்லப்படுகின்றன. இந்த எதிரெதிர் திசைப் பயணமே முழு நாவலாகச் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இவர்களைத் தாண்டி, இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் காந்தன், ரிமாஸ் போன்றவர்களின் கதையும் நாவலில் இடம்பெறுகின்றன.
எல்லாவற்றையும் ஒருவாறாக ஒன்றிணைக்க முயன்றுள்ளார் அனோஜன். பலம்பெயர் வாழ்க்கை சார்ந்த சித்திரத்தை வாசகர்களுக்கு நிறைவுற வழங்க, எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டுமென்ற ஆசையில் வேகத்தில், காந்தன் மற்றும் ரிமாஸ் அத்தியாயங்களை அவர் இணைத்திருக்கிறார் என நினைக்கிறேன். ஆனால், அவை வாசிப்பின்போது கொஞ்சம் விலக்கத்தையே ஏற்படுத்துகின்றன. அவை ஏதோவொரு வகையில் முழுமையை எட்டவில்லை என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.
ஆதன் ஈழப் போருக்குச் செல்லத் துணிந்து, போரில் விடுதலைப் புலிகளுக்காகப் பங்கேற்பதுவும், அவனைத் தேடி இலங்கை செல்லும் எரிகா போர்முனைக்குச் செல்வதுவும் ஏனோ மிகையாகவே தோன்றுகின்றன.
ஆதன் எனும் கதாபாத்திரத்தின் வழியாக, ஈழப் போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகளையும் இலங்கை இராணுவத்தின் செயல்பாடுகளையும், புலம்பெயர் வாழ்க்கையினூடாக எழும் அடையாளச் சிக்கல்களையும் காதலையும் வெவ்வேறு விதமான வலிகளையும் வடுக்களையும் குற்றவுணர்வுகளையும் பேச முற்படும் நாவலில், வாசிப்பினூடாக ஆங்காங்கே சில கேள்விகள் எழுந்தபடியே இருந்தன.
மிகச் சில குறைகள் இருப்பினும், ‘தீக்குடுக்கை’ நல்ல முயற்சி என்பதில் ஐயமில்லை!
2. இதோ நம் தாய் – வயலட்
தமிழ்ப் புனைவெழுத்துக்களில், திருநங்கை/திருநம்பிகள், பால்புதுமையினர் வாழ்க்கை குறித்த சித்திரங்கள், சிறுகதை வடிவிலோ நாவல் வடிவிலோ எழுதப்பட்டிருக்கும் எண்ணிக்கையானது மிக மிகக் குறைவு என்றே கருதுகிறேன். எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய ‘வாடாமல்லி’ நாவல் திருநங்கைகளின் வாழ்வியலைப் பதிவு செய்த முதல் நாவல் என்று குறிப்பிடப்படுகிறது. அதைப்போல, திருநங்கையால் எழுதப்பட்ட முதல் நாவல், பிரியா பாவுவின் ‘மூன்றாம் பாலின் முகம்’ என்பதாகும். தங்களது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து எழுதிய திருநங்கைகள் என லிவிங் ஸ்மைல் வித்யா, கிரேஸ்பானு, தனுஜா ஆகியோரின் புத்தகங்களைக் குறிப்பிடலாம். போலவே, கவிதைகளில் திருநங்கை கல்கியின் ‘குறி அறுத்தேன்’ தொகுப்பு நினைவுக்கு வருகிறது. இவற்றையெல்லாம் தவிர்த்து, நவீன தமிழ் இலக்கியத்தில், திருநங்கைகளை முதன்மை பாத்திரமாக வைத்துப் படைக்கப்பட்ட ஆக்கங்கள் எனச் சொல்வதற்குத் தகுந்தபடி எதுவும் உடனடி நினைவுக்கு வரவில்லை. (இஃது என் வாசிப்பின், அறிதலின் போதாமையாகவும் இருக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை.)
இத்தகுப் பின்னணியில், வயலட்டின் ‘இதோ நம் தாய்’, திருநங்கை ஆனந்தி எனும் கதாபாத்திரத்தை முதன்மை பாத்திரமாகக் கொண்டு, அவளின் உணர்வுகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் பிரதியாக வெளியாகியுள்ளது. பக்க அளவில் மிகக் குறுகிய நாவல்தான் எனினும், அக்குறுகிய பக்கங்களுக்குள்ளாக, நம் மனப்பரப்பில் ‘இதோ நம் தாய்’ விரித்துக் காட்டும் உணர்வுகளும் வாழ்க்கையும் நம்மை மிகப் புதிய உணர்வுகளுக்கு இட்டுச்செல்கின்றன. ‘இதோ நம் தாய்’ நாவலின் தலைப்பே தன்னகத்தே பல்வேறு அர்த்தங்களையும் திறப்புகளையும் கொண்டதாக உள்ளது. நாவலை வாசிக்கும் ஒவ்வொருவரும் அதை உணரலாம்.
முன்கதை மற்றும் கதை என இரண்டு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் முன்கதையில், கதையின் நாயகியான ஆனந்திக்கு முன்னோடிகள் என்பவர்கள் போல, அவளின் வாழ்க்கையுடன் ஏதோவோர் விதத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் சிலரின் கதை, அவளின் நிகழ்கால வாழ்க்கையுடன் ஒன்றிணையும் விதமாக, ஆதியிலிருந்து அவளது நிகழ்காலம் வரை மிகச் சிறிய வரலாற்றுக் குறிப்புகளைப் போலச் சொல்லிச் செல்லப்பட்டுள்ளன. அந்த முன்கதையில் புத்தர், ஆனந்தர், அகத்தியர், ஐரோப்பியரும் பாலி மொழியில் தேர்ச்சியுடையவருமான ‘தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிஸ்’, தம்மபதம் மொழிபெயர்ப்பாளர் ப.ராமஸ்வாமி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஜே.ஜே.தாஸ் ஆகியோர் பாத்திரங்களாக அங்கம் வகிக்கின்றனர். முன்கதைக்கும் கதைக்கும் என்ன தொடர்ப்பு எனும் கேள்வி இப்பிரதியை வாசிக்கும் எவர்க்கும் இயல்பாக எழும்தான். ஆனால், அதற்கான பதில்கள், கதைப் பகுதியில் ஆனந்தியின் மனப்பதிவுகளாக வருகின்ற வாசகங்களில், அவளின் வாழ்க்கையில் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. வெவ்வேறு வகைகளில், முன்னோடிகளின் நிகழ்கால வடிவம் என்பது போலவே ஆனந்தி இருக்கிறாள்.
கௌதமிக்கு ஒரே மகனாகப் பிறந்தவன், ஏதோவொரு கணத்தில் தனக்குள் இருக்கும் பெண்மையைக் கண்டுக்கொண்டு, திருநங்கையாகிறா’ள்’. கௌதமியிடமிருந்து பிரிந்து சென்னையில் இருக்கும் அவள், மிகுந்த தயக்கங்களுடன் தன் அடையாளத்தை அம்மாவுடன் பகிர்ந்துக்கொண்டதிலிருந்து அவர்களுக்கு இடையிலான உறவில் கசப்பு ஏற்படத் தொடங்குகிறது. கௌதமியால் ஆனந்தியை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், ஒருவர் மீது இன்னொருவர், அவரவர் நம்பிக்கைகள் சார்ந்து தங்கள் விமர்சனங்களை வைத்தபடியே இருக்கின்றனர்.
ஆனந்தி, திருநங்கையாக மாறிய பிறகும்கூட, அவளுக்குள் தன் அடையாளம் சார்ந்த ஏதோவொரு கேள்வி தொடர்ந்தெழுந்தபடியேதான் இருக்கிறது. அவளைச் சுற்றி இருக்கும் எல்லோரும் ஏதோவொரு வகையில், அவளுக்குள் அக்கேள்விகளைப் பெருக்கியபடியே இருக்கிறார்கள். தன்னுள் பெண்மையைக் கண்டுக்கொள்ளும் அவளுக்கு ஆண்கள் மீது எந்த ஈர்ப்பும் வருவதில்லை. பெண்கள் மீதே ஈர்ப்பு இருக்கிறது. பெண்களையே காதலிக்கிறாள். ஒரே ஓர் இடத்தில் மட்டுமே அவள் ஓர் ஆண் மீதான தன் ஈர்ப்பைச் சுட்டிக்காட்டுகிறாள். அந்த ஆண், மொழிபெயர்ப்பாளர் ஏ.கே.ராமானுஜன். ‘கவிதைகளாகக் கவிதையாக மொழிபெயர்த்த ஒரே கவிஞன்’ என்று ஓரிடத்தில் ஆனந்தி அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறாள், எனவே அதுகூட அவரின் பாலினம் மீதான ஈர்ப்பு இல்லை. அஃது அவர் ஆளுமை மீதான அவளின் ஈர்ப்பு என்றே நாம் புரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. (ஆனந்தி ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.)
“ஆனந்தம் என்ற சொல்லுக்கு நன்மை பெருகுதல் என்றோ கேடு நிறைந்து அழிதல் என்றோ பொருள் கொள்ளலாமாம்.” என்றொரு வாசகம் நாவலில் உண்டு. இந்த வாசகத்தோடு ஆனந்தியையும் அவள் வாழ்வையும் இரு வகைகளில் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நாவலில் கதாபாத்திரங்கள் பெயர் தேர்வுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதை இந்த வாசகத்தின் பின்னணியில் பொருத்திப் பார்த்துக்கொள்கிறேன்.
கௌதமர் – கௌதமி, ஆனந்தர் – ஆனந்தி என்ற பெயர் தேர்வுகள். முன்கதையில், ஆனந்தர் சங்கத்தில் பிக்குணிகளைச் சேர்க்க சொல்லிக் கோரிக்கை எழுப்புதல், பெண்கள் அனைவருக்கும் ஆனந்தரைப் பிடித்துவிடுகிறது என்ற புத்தரின் எண்ணம், மொழிபெயர்ப்பு – தன்னைத் தானே மொழிபெயர்த்தல் என நாவலில் பல்வேறு விடயங்கள் ஒன்றுடன் ஒன்றைத் தொடர்புப்படுத்தும் வகையிலே அமைந்துள்ளன.
எவ்வளவோ விஷயங்களை மிகக் குறுகிய பக்கங்களுக்குள் சொல்லிச் சென்றிருக்கும் இந்நாவல், பல்வேறு விடயங்களை ஒன்றிணைத்துப் பார்த்து விவாதிக்க வழிவகுக்கும் பிரதியாக உள்ளது.
3. கெளிமதம் – செல்வக்குமார் பேச்சிமுத்து
ஒரு வாழ்க்கையை எழுத்து வடிவில் நாவலாகவோ சிறுகதையாகவோ பதிவு செய்ய முயற்சிக்கும்போது, வாழ்க்கையின் போக்கில் நிகழும் நிகழ்வுகளையும் நிகழ்வுகளின் போக்கில் மாறும் மனிதர்களையும், அவர்தம் மனங்களையும் வாழ்க்கையின் திசைமாற்றத்தையும் அதனதன் சாராம்சங்கள் கெட்டுவிடாமல் சொல்லிச் செல்வது என்பது மிக அவசியம். அப்படியாக, ஓர் எழுத்தாளன், தான் வாழ்ந்த வாழ்க்கையையோ தான் பார்த்த மனிதர்களையோ பற்றிச் சொல்வதற்குத் தேர்ந்தெடுக்கும் மொழியின் மூலம், அவன் சொல்ல விழையும் வாழ்க்கையையும் மனிதர்களையும் மிக நெருக்கமாக வாசகர்களுக்கு உணர வைக்கலாம். அந்த வகையில், செல்வக்குமார் பேச்சிமுத்துவின் ‘கெளிமதம்’ எனும் முதல் நாவல், கதையைச் சொல்ல தேர்ந்தெடுத்திருக்கும் மொழியால் வாசிக்கும்போது வெகு நெருக்கத்தை வரவைக்கிறது.
‘கெளிமதம்’ என்ற சொல்லுக்குக் ‘களிப்பால் வரும் திமிர்’ என்ற பொருள் அடிக்குறிப்பாக நாவலின் ஓர் அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அத்தியாயத்தை நெருங்கும் வரை, ‘கெளிமதம்’ என்ற சொல்லின் அர்த்தம் தெரியாமல்தான் நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். பொதுவாகவே வட்டார வழக்கைப் பயன்படுத்தி எழுதப்படும்/எழுதப்பட்டிருக்கும் படைப்புகள் மீது ஒரு குற்றச்சாட்டுச் சுமத்தப்படும். வேறொன்றுமில்லை, ‘அந்த வட்டார வழக்குப் புரியவில்லை’ என்பதுதான் அஃது. உண்மையில், புரியாமை என்பதுவும் அறியாமை என்பதுவும் வேறுவேறு. ‘கெளிமதம்’ என்ற சொல்லை அறியாமல்தான் நாவலை வாசித்தேன். அந்தச் சொல்லையும் அதன் அர்த்தத்தையும் அறிந்துக்கொண்ட கணத்தில் புரியாமல் இருக்க எதுவுமில்லை என்றாகிவிட்டது. நாவலை வாசிக்க வாசிக்க, வட்டார வழக்குகளும் அதைச் சார்ந்த பல்வேறு விடயங்களும் பிடிப்படத் தொடங்கின.
தென்காசியையொட்டிய ஒரு கிராமம்தான் இந்நாவலின் கதை நிகழும் களம். அக்கிராமத்தைச் சேர்ந்த ‘ராக்கம்மா’ என்பவளின் வாழ்க்கை சித்திரம்தான் முழு நாவலும். அவள் வாழ்வில் நிகழும் சம்பவங்களின் அடுக்குகளும் அவள் சந்திக்கும் மனிதர்களும் அவளை வெவ்வேறு திசைகளை நோக்கிச் செலுத்த, அவளின் வாழ்க்கை பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்குட்பட்டு, இறுதியில் எவ்வாறு முடிகிறது என்பதாக நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ராக்கம்மா விரும்பிய முருகன், அவளைவிடுத்து வேறொருத்தியைத் திருமணம் செய்துக்கொள்ள, ராக்கம்மாவின் பெற்றோர் அவளைக் கிழவனொருவனுக்கு இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துவைக்கின்றனர். அத்திருமண உறவில் அவள் கருவுற்று ஆண் குழந்தையைப் பிரசவிக்க, அந்தக் குழந்தை இறந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து, தனக்கு விருப்பமில்லாத அத்திருமண உறவில் இருந்துகொண்டே பண்ணையார் ஒருவருடன் உறவில் இருக்கத் தொடங்குகிறாள் ராக்கம்மா. பண்ணையார் மனைவிக்கு இவ்விடயம் தெரியவர, பண்ணையார் அவ்வுறவிலிருந்து விலகிக்கொள்கிறார். ராக்கம்மாவின் பெற்றோர்களுக்கும் கணவன் வேலுவுக்கும் அவளது இவ்வுறவு குறித்துத் தெரிந்தும்கூட அவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அவர்களுக்குக் கட்டுப்படாதவளாக, தன் போக்கில் தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழத் துணிகிறாள் ராக்கு.
தங்கச்சனின் அறிமுகம் கிடைப்பதிலிருந்து அவளின் வாழ்க்கை இன்னொரு திசையை நோக்கி நகரத் தொடங்குகிறது. அவனுடன் உறவுக்கொள்ளும் அவள், அவன் மூலமாகச் சாராயம் குடிக்கவும் காய்ச்சவும் பழக ஆரம்பிக்கிறாள். அவனுடனான உறவு வலுப்பட, அவனின் ஆலோசனையின்படி, நான்கைந்து பெண்களைக் குடிசைக்குக் கூட்டி வந்து பாலியல் தொழில் செய்யத் தொடங்குகிறாள். ஊராரின் எதிர்ப்புகள் அவளுக்குத் தொடர்ந்து நீடிக்க, அவளது ஊர் ஆட்களைத் தவிர்த்து, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வெவ்வேறு ஆட்களுடன் உறவுக்கொண்டு அவர்களின் தொடர்பைப் பெருக்கிக் கொள்கிறாள். அதன் மூலம் ஊராரின் வாயை அடைக்கிறாள். அவளை யாரும் எந்த வகையிலும் நெருங்க முடியாதபடிக்குத் தன்னை உயர்த்திக்கொள்கிறாள்.
அவளின் எழுச்சி மெல்ல மெல்ல சரிந்து ஒரு கட்டத்தில் வீழ்ச்சியடைகிறது. ஊரின் சில முக்கியப் புள்ளிகளுக்குள் இருக்கும் அவளை அடைய முடியாத ஏக்கம், அவள் மீதான வன்மம் ஆகியன அவளுக்குத் தொற்றுவியாதி இருக்கிறது என்ற கதையைக் கட்டிவிட வழிவகுக்க, அவளுக்கு இருக்கும் குடிப்பழக்கம் காரணமாக, மிகச் சரியாக அந்நேரத்தில்தான் அவள் நோய்வாய்ப்படுகிறாள்.
அவளின் இறப்புக்குப் பிறகு, அவள் மீது வன்மம் கொண்டு அலைந்த ஊராட்களில் சிலர் அவளை எவ்வாறு பழித் தீர்த்துக்கொண்டார்கள் என்பதுவும் அவளை அடையத் துடித்தவர்கள் எவ்வாறு அவளை அடைந்தார்கள் என்பதுவும் அதிர்ச்சியூட்டும் வகையில் நாவலின் இறுதிப்பக்கங்களில் வெளிப்படுகின்றன.
இரு நூற்று பத்துப் பக்கங்களில், 53 சின்னஞ்சிறு அத்தியாயங்களில் எழுதப்பட்டிருக்கும் நாவலில், எல்லாப் பக்கங்களிலும் ராக்கம்மாவின் சித்திரம் மெல்ல மெல்லத் திரண்டெழுந்து இறுதிப்பக்கங்களில் வாசகனுக்குள் முழுமையடைந்து பேருவாக நிற்கிறது. தமிழ் இலக்கியத்தில் இதுவரை எழுதப்பட்ட பெண் கதாபாத்திரங்களுள், மிக அசலான கதாபாத்திரங்களின் பட்டியலில் ராக்கம்மாவுக்கும் ஓர் இடம் இருக்கும். அதானாலேயே நாவலின் முடிவில், ராக்கம்மாவைத் தவிர்த்து, வேறெந்தக் கதாபாத்திரங்களும் துலக்கமாகத் தீர்க்கமாகத் தெரியாமல் போய்விடுவது மாதிரி தோன்றுகிறது. நாவலில் இஃது ஒரு குறை.
தனக்குத் தெரிந்த வாழ்க்கையையும் மனிதர்களையும் எவ்வித பாசாங்குமின்றிப் பாசாங்கற்ற மொழியைக் கொண்டு சொல்லிச் செல்வது என்பது அரிதினும் அரிது. தன் முதல் நாவலில், செல்வக்குமார் பேச்சிமுத்து அதைச் செய்திருக்கிறார். வட்டார வழக்கில், பேச்சு மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் கதாபாத்திரங்கள் எந்தப் பாசாங்குமின்றித் தங்கள் மொழி மூலம் தங்களை வெளிக்காட்டிக் கொள்பவர்களாக இருக்கின்றனர். மிகச் சரளமாக அவர்களின் உரையாடல்களில், அவர்களின் வார்த்தைகளில் வசவு சொற்கள் சேர்ந்தே இருக்கின்றன. அவை துருத்திக்கொண்டு தெரியவில்லை; ஆபாசமாகத் தோன்றவில்லை. ஒரு வட்டார வாழ்க்கையின் உயிருள்ள மொழியாகவே தோன்றுகின்றன. அந்த வகையில், வட்டார வழக்கைப் பயன்படுத்தி எழுதப்பட்ட முக்கியமான நாவல்களின் பட்டியலில் ‘கெளிமதம்’ நாவலுக்கும் ஓர் இடம் இருக்கும் என்பதை ஐயமின்றிச் சொல்லலாம்.
நாவலில் பல்வேறு பண்பாட்டுக்கூறுகள் பொதிந்துள்ளன. ஊர் மக்களின் கோயில் கொடை திருவிழா, வழிப்பாடு, சடங்குகள், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் எல்லாம் ஆங்காங்கே சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. மிகக் குறிப்பாக உணவைப் பற்றிய குறிப்புகள் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘பலாக்கா தொவரம்’ பற்றி நாவலில் வரும் குறிப்புகளும், சாராயம் காய்ச்சும் வழிமுறைகள் பற்றிய குறிப்புகளும் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் எழுத்தை நினைவூட்டும் வகையில் இருந்தன.
செல்வக்குமார் பேச்சிமுத்து, ‘கெளிமதம்’ எனும் தன் முதல் நாவல் மூலம், தமிழ் இலக்கிய உலகுக்குத் தன் வரவை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
***
- தீக்குடுக்கை – அனோஜன் பாலகிருஷ்ணன், சால்ட் பதிப்பகம்
- இதோ நம் தாய் – வயலட், சால்ட் பதிப்பகம்
- கெளிமதம் – செல்வக்குமார் பேச்சிமுத்து, யாவரும் பதிப்பகம்

இரவாடிய திருமேனி – வேல்முருகன் இளங்கோ
குணா கந்தசாமி
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கவிஞருடன் பேசிக்கொண்டிருந்தபோது முந்தைய தலைமுறையை ஒப்பிட்டு இந்தப் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஏன் “பெரிய” நாவல்கள் வரவில்லை என்ற பேச்சு வந்தது. இந்தத் தலைமுறை எழுத்தாளர்களிடம் பெரிய வாழ்க்கை இல்லை என்று நான் சொன்னேன், பெரிய கனவுகள் இல்லை என்று அவர் கூறினார். ஒருவிதத்தில் கவிஞர் கூறியது சரிதான். அப்படி ஒரு பெரிய கனவை சமகாலத்தில் காண முயற்சித்த படைப்பாக வேல்முருகன் இளங்கோவின் “இரவாடிய திருமேனி” நாவலைச் சொல்லலாம்.
வரலாற்றுப் பின்புலத்தில் தத்துவார்த்த ஊடு பாவோடு கிட்டத்தட்ட ஐநூறு பக்க நாவலை எழுதுவது என்பது மிகப்பெரிய உழைப்பைக் கோரக்கூடியது. சமகாலப் பின்புலத்தில் எழுதும்போது எழுத்தாளனுக்கு வாழ்க்கை அனுபவங்களும் நினைவுகளும் உடனடி உசாத்துணைகளாக இருக்கும். ஆனால் வரலாற்றுப் பின்புலத்தில் முழுக்க கற்பனையிலேயே நாவலை வரைவதற்குப் படைப்பூக்கமும் சோர்வின்மையும் கடும் உழைப்பும் வேண்டும். அந்த நோக்கில் தன்னுடைய இரண்டாவது நாவலிலேயே வேல்முருகன் இளங்கோ செய்திருக்கும் முயற்சி நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியது.
பொதுவாக நாவலின் மையத்தை ஒற்றை வரியில் சுருக்குவதில் முழுக்க உடன்பாடு இல்லையென்றாலும் ஒரு விவாத வசதிக்காக இரவாடிய திருமேனி நாவலின் மையம் என்ன என்பதை என் வாசிப்பில் இருந்து புரிந்துகொண்ட விதத்தில் சொல்கிறேன். அது , தொல்குடிகளான கடம்பர்களின் இன அழிப்புக்கு எதிரான பழிவாங்கல். இதன் சூத்ரதாரியாக இருப்பது அந்த அழிப்பில் தப்பிப் பிழைத்த கடம்பக்குடியின் மகளொருத்தி. பழி என்னும் ஊழ்வினையில் கள்வன், நாவிதர் போன்ற சமூகப் படிநிலையில் விளிம்பு நிலையிலிருக்கும் மனிதர்கள் கருவிகளாக்கப்படுகிறார்கள். கலையும் ஞானமும் குறைவுபட்டு இருக்கும் ஒரு காலத்தருணத்தில் தீக்கடம்பை என்னும் மலரின் வடிவத்தில் பழி அரங்கேறுகிறது. காவியம், மாயம், பூடகம், காலத்தைக் குலைத்துப்போடுதல் போன்ற உத்திகளின் வழியே கதை சொல்லப்பட்டிருக்கிது.
மேற்சொன்னது என்னுடைய வாசிப்பு. இதுபோல வேறுசில வாசிப்புகளும் இருக்கலாம். தன்னளவில் இது அரசியல் பிரக்ஞையுள்ள நல்ல கதைதான். ஆனால் விவரிப்பிலும் சொல்முறையிலும் இரவாடிய திருமேனி முழுமையைத் தவறவிட்டிருக்கிறது என்பது என் அபிப்ராயம்.
நாவலின் அர்த்த வரைபடம் அதன் பிற்பகுதியில்தான் உருப்பெறுகிறது. மையத்தை நோக்கிய பயணத்தில் நாவலின் கிளைகதைகள் அதன் ஆதார மையத்துக்குத் துணைபுரியாமல் துண்டுபட்ட சித்திரங்களாக இருக்கின்றன. கடம்பர்களின் பூர்வகதை சொல்லப்பட்ட பிறகுதான் கதைக்கு ஒரு பெறுமதி உண்டாகிறது.
மதுரை இதன் களமாகச் சொல்லப்பட்டாலும் நாவலுக்குள் தமிழ்த்தன்மை துலக்கம் பெறவில்லை. தமிழ் நிலப்பரப்புக்கு வெளியே ஏதோவொரு வேற்றுமொழி சமஸ்த்தானத்தில் கதை நிகழ்வதைப்போலத் தோற்றமளிக்கிறது.
வக்கிரத்தின் அழகியல் (Aesthetics of voyeurism and perversion?) என்பதைப்பற்றி வேல்முருகன் ஏதேனும் பேச நினைத்தாரா என்று தெரியவில்லை. காமமும் விரகமும் சில இடங்களில் கலையாகவும் பல இடங்களில கவிச்சியாகவும் இருக்கிறது. தீராத முலைகள்!
நாவலில் ஒர் இழையாக தத்துவார்த்த விசாரம் வருகிறது. ஆனால் இது பெரும்பாலும் மொழிச்சக்கையாக மனதில் பதியாமல் கண்களின் வழியே ஒழுகிவிடுகிறது. சொல்லப்போனால் ஆழங்கூடாத ஒரு philosophical naivety நாவல் முழுக்க விரவியிருக்கிறது.
மகாசங்கை நிர்மாணித்தல் மற்றும் ஞானவிசாரம் குறித்த பகுதிகள் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலையும் காட்டைக் குறித்த விவரணைகள் காடு நாவல் மற்றும் அவதார் திரைப்படத்தையும் நினைவூட்டுவதாக அமைந்திருக்கின்றன.
சாம்பான்-சுருளி-சங்கன் என்ற முக்கோணத்தில் கள்வர் வாழ்க்கை குறித்த சித்திரம், காட்டில் பெரியசாமி மந்திரத்தின் மூலம் ஆண் யானையைக் கட்டுவது மற்றும் அதன் பின்னிகழ்வுகள், காட்டின் அழகு குறித்த சில அபூர்வச் சித்தரிப்புகள், தினமும் இரவில் சாம்பான் கற்சிலையின் மூலம் கடம்பளை முலையாடுவது ஆகியவை சிறப்பாக எழுதப்பட்ட பகுதிகள்.
ஒரு நல்ல எடிட்டர் அமைந்திருந்து நாவலின் நீளம் குறைக்கப்பட்டு செப்பனிடப்பட்டிருந்தால் நாவல் இன்னும் கூர்மையடைந்திருக்கும். அருமையான தலைப்பும் அழகான அட்டைப்படமும் கெட்டி அட்டைப் பதிப்பும் சிறப்பாக இருக்கின்றன. எழுத்துப் பிழைகளை களைவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
0
( இரவாடிய திருமேனி, வேல்முருகன் இளங்கோ, எதிர் வெளியீடு, விலை ரூ.699/-)
டாங்கோ – குணா கந்தசாமி
சுனில் கிருஷ்ணன்

குணா கந்தசாமி எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். புதிய நாவலான “டாங்கோவை” அவரது இரு இலக்கிய நண்பர்களான கே. என். செந்திலும் பாலாவும் வரைவு வடிவத்தில் வாசித்தார்கள் என்பது அவரை புரிந்து கொள்ள உதவும். பாலாவும் செந்திலும் ஒரு கிடைமட்ட கோட்டின் இரு எல்லைகள் என்று வைத்துக்கொண்டால் குணா இவர்கள் இருவருக்குமான நடுப்புள்ளி. அவரால் சுக்கிலம் போன்ற முற்றிலும் நவீன வாழ்வின் சிடுக்கை பேசும் கதையை எழுத முடியும் திரிவேணி போன்ற மண்ணில் காலூன்றிய கதையையும் எழுத முடியும். இந்த வீச்சு அவரை எனக்கு முக்கியமான எழுத்தாளராக ஆக்குகிறது.
குணாவிடம் சம்பத் கோபிகிருஷ்ணன் போன்ற இருத்தலியல் எழுத்தாளர்களின் சாயல் உண்டு. வெறுமையும் தனிமையும் அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை. ஆனால் அக்காலகட்டத்து எழுத்துக்களில் இருந்து குணா வேறுபடும் புள்ளியை தொட்டு காட்ட வேண்டும். முந்தைய காலகட்டத்து வெறுமை பொருளியல் பற்றாக்குறையுடன் நெருங்கிய தொடர்புடையது. சுராவின் உருவகத்தை கடன்வாங்குவதென்றால் எதனாலும் நிறையாத ஒரு பள்ளம். “டாங்கோவின்” ஆனந்துக்கு என்ன தான் பிரச்சினை? அவனுக்கு என்ன தான் வேண்டும்? இன்று அவன் நல்ல வேலையில் இருக்கிறான். அவனால் எதையும் துய்க்க முடியும். பற்றாகுறை மட்டுமே நிலவிய கடந்தகாலத்தை கடந்துவிட்டான். ஆனாலும் ஓரு பெரும் வெறுமை அவனை சூழ்கிறது. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள அவனுக்கு முடியவில்லை. சுயேச்சையை கொண்டு அவன் செல்வது தன்னழிவின் பாதையை. அவனது வெறுமையும் தனிமையும் நுகர்வால் நிறையாதது. அவனுக்கு பெண் உடல் தான் வேண்டுமா? அதை அடைகிறான். ஆனால் அவனுக்கு அது நிறைவை தரவில்லை. அவன் வளரும் போது உடனிருக்காத தந்தையையும் தாயையும் தேடுகிறான். ஒரு குடும்பத்தை ஈட்டிக்கொள்ள முனைகிறான். பள்ளி கால தமிழ் ஆசிரியர் ராகவன், கல்லூரி ஆசிரியர், ஸ்பானிய பத்தி எழுத்தாளர் மத்தியாஸ், அடுக்கக உரிமையாளர் கிரிஸ்டோப் என வயதில் மூத்த அத்தனை பேரிடமும் தந்தையை கண்டடைய முற்படுகிறான். இந்திய முகமே தென்படாத சிறிய கடற்கரை நகரமான உருகுவே நாட்டின் மாண்டி வீடியோவில் அவன் காணும் காந்தி சிலை கூட அவனுக்கு தந்தையின் வடிவமாக தான் இருக்கிறார். அவர் முன்னால் லாகிரி பயன்படுத்தியதற்காக கூசுவான். அவரது இருப்பு அவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. காந்தி அவனுக்கு வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள தூண்டுகிறார். தன்னழிவின் பாதையிலிருந்து மீண்டு வர அவரது இருப்பும் உதவுகிறது.
நாவல் ஒரு தளத்தில் உறவின் கூடலையும் பிரிவையும் பேசும் காதல் கதை. இன்னொரு தளத்தில் குடும்ப அமைப்பை பற்றிய உரையாடல் நிகழ்கிறது. அதுவே இந்த நாவலின் சமூக தளம். இதற்கடுத்து மூன்றாவதாக ஒரு ஆன்மிக அடுக்கும் உள்ளது. இருத்தல் குறித்த விசாரணை ஒரு சரடாக நாவல் முழுக்க வருகிறது. இருத்தலியல் பிரதிகள் போல சூனியத்திற்குள் சென்று முட்டிக்கொள்ளாமல் மேலெழுகிறது. ஆன்மிகம் என்பது தன்னை கண்டடைதல் தான். தன்னை கண்டடைய தனக்குள்ளிருக்கும் இருளை எதிர்கொண்டு கடக்க வேண்டும்.
ஆனந்த் வாழ்வில் சந்தியா வருகிறாள். திருமண முறிவிலிருந்து மீண்டவள் இன்னொரு உறவுக்குள் வர தயாராக இல்லை. எந்த உறுதியும் கோராத, எந்த பிணைப்பையும் ஏற்காத உறவே அவளுடைய தேர்வு. குடும்பம் எனும் அமைப்பினால் பாதிக்கப்பட்டவள். சந்தியாவால் தன் வாழ்வு பொருளுடையதாக ஆவதை உணர்கிறான். அவளது அண்மையில் தன்னை ஒழுங்குக்குள் கொணர்ந்து பேணி கொள்கிறான். அவனை விட்டு சென்ற பிறகு திரும்பவும் இருளில் மூழ்குகிறான். இயல்பான நட்புடன் பழகி வந்த வேசையின் மீது திடிரென்று நாட்டம் கொள்கிறான். அவனது பள்ளத்தை உடலால் நிறைக்க முயல்கிறான். உடல் நலம் குன்றிய ஓரிரவில் அவன் வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்து செல்லும் இடம் நாவலின் மிக முக்கியமான தருணம். அவள் இரு குழந்தைகளுக்கு தாய் என்பதை அறிந்து கொள்கிறான். அதற்கு பின் அவளை நாடவில்லை. பல வகைகளில் பொருள் படதக்கது. அதுவரை பெண்ணாக தெரிந்தவள் தாயாக தன்னை வெளிப்படுத்துகிறாள். பிரபஞ்சத்தை தனது தோழமையாக வழிகாட்டியாக உணரும் புள்ளியில் நாவல் நிறைவடைகிறது.
“டாங்கோ” இருவர் ஒன்றாகும் ஒருவித நடனம். மரபான குடும்ப அமைப்புக்கு மாற்றான புதிய அமைப்பிற்கான உருவகமாக வாசிக்க முடியும். ஆன்மிக தளத்தில் இருமையொழிந்த நடனம் என்பதையும் குறிக்கிறது. நாவலின் முற்பகுதிகளில் வரும் கிறிஸ்டோப் மத்தியாஸ் ராகவன் எம்கே போன்ற பாத்திரங்கள் வழியாக குடும்ப அமைப்பின் மாறிவரும் இயங்குதளம் குறித்த ஒரு உரையாடல் நடக்கிறது. என்னளவில் அந்த பாத்திரங்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இந்த உரையாடலை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். கிறிஸ்டோப் குடும்பம் என்பது பாலியல் அமைப்பு அல்ல சமூக அமைப்பு என சொல்கிறார். பாலியல் சுதந்திரத்தை அனுமதிக்கும் சமூக அமைப்பாக குடும்பம் உருமாற முடியுமா என்றொரு கேள்வி எழுகிறது. ஏறத்தாழ ஆனந்தை போலவே தனியனாக இருப்பவர் மத்தியாஸ். இறந்து போன சகோதரியின் மகளை பேணும் பொறுப்பு அவரிடம் வந்ததும் பொறுப்புடன் நடந்து கொள்ள தொடங்குகிறார். கிறிஸ்டோபின் கூற்றை வலுப்படுத்தும் சித்திரமாக இதை காண முடியும்.
நாவலில் நிலம் முக்கிய பங்காற்றுகிறது. இரவு விளக்கில் மின்னும் நீர்பரப்பின் சித்திரம் அபாரமாக உள்ளது. றாம்பாலா காந்தியை கண்ணில் காண முடிகிறது. நாவலுக்குள் காந்தியின் இருப்பு ஆனந்துக்கு வாழ்வை பொருளுடையதாக ஆக்கிக்கொள்ள உந்துகிறது. வலுவான மைய முடிச்சு அற்ற சுயகூராய்வு நாவல் என்பதே இந்த நாவலின் வடிவம். அதுவே இதன் எல்லையும் கூட. அஜிதனின் ‘மைத்ரியுடன்’ பலவகையிலும் ஒப்பிடலாம். இரண்டு நாவல்களும் அபாரமான நிலைக்காட்சி விவரணை கொண்டவை. ஒரு பெண் வழியாக தன்னை கண்டடைவது என்பதை முன்வைப்பவை. மைத்ரி கொந்தளிப்பான மொழியில் உறவையும் பிரிவையும் சொல்கிறது என்றால் ‘டாங்கோ’ ஆர்பாட்டமற்ற அடங்கிய மொழியில் விலகிய தொனியில் அணுகுகிறது. வலுவான மைய முடிச்சு அற்ற தன்னை நோக்கும் நாவல்கள் தான் இரண்டுமே. வேறுபடும் புள்ளிகளும் உண்டு. சமகாலத்தின் வெறுமையை இருவிதமாக அணுகியுள்ளார்கள் என்று சொல்ல முடியும். விமர்சனம் என்பது பிரதியில் எது இல்லையோ அதை சுட்டுவது அல்ல. அதே போல் நான் எழுதி இருந்தால் என்ன எழுதி இருப்பேன் என்று சொல்வதும் அல்ல. அப்படி சொல்லும்போது அது என்னுடைய பிரதியாகும். அவனது மீட்சி வலுவாக சித்தரிக்கப்படவில்லை என்பதை வேண்டுமானால் ஒரு விமர்சனமாக வைக்க முடியும்.
0
( டாங்கோ, குணா கந்தசாமி, எதிர் வெளியீடு, விலை ரூ.225 )
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “தமிழ் நாவல்கள் 2025”