குழலினிது

“பிரகதீஷ், நாம நாளைக்கு சைட்டுக்குப் போறத்துக்கு முன்னாடி, ட்ரென்ச் பற்றி முதல் கட்ட அறிக்கைய சமர்ப்பிக்கனும்.” சண்முகநாதன் காலையிலேயே கூறினார்.

“என்கிட்ட இன்னும் ஒரு மணிநேரத்துல கொடுத்துடுங்க, நான் ஒருவாட்டி ரிவ்யூ செய்துகொடுக்கிறேன்.”

“கண்டிப்பாக சார், சப்மிட் பண்ணிடறேன்.” அவர் பார்வை என் மேசையின் மீது சென்றதைக் கண்டேன். கருப்புப் பெட்டியாக கணினி ஒன்று, சில கோப்புகள், சில அகழ்வுபொருட்கள். உடனே, “நாளைக்கு விடிகாலையிலேயே தானே கிளம்புறோம்? மாங்குடியடைய நாலு மணியாயிடும். நானும் நம்ம டிரைவரும் ஓட்டுறத பகிர்ந்துக்கலாம்னே இருக்கோம். உங்களுக்கு ஓக்கே தானே?” என்றேன்.

“போயிடலாம். எப்பவும் போல டிரைவர எங்க வீட்டுக்கு முதல்ல வரச் சொல்லிடலாம். போற வழியில நாங்க வந்து உன்ன பிக்கப் செய்துக்கறோம்.”

என் மேசையைப் பார்த்து, ”நித்திலனா” என்று மூச்சுவிட்டார். “என் மகளுக்கு நான் மாளிகைமேட்டு வேலையில் இருந்தபோது அந்த வயதுதான் இருக்கும்.”

என் பையன் நித்திலனின் படம். நான்காண்டுகளுக்கு முன்பு, அவன் இரண்டு வயதில் இருக்கும்போது எடுத்தது. என் எலும்பு சில்லிட்டு வலிப்பது போல உணர்ந்தேன். நித்திலனின் இரண்டாவது பிறந்தநாள். அவன் நடந்துபார்க்கத் தொடங்கியதால், ஷு ஒன்றைப் பரிசளித்தேன். ஒலிக்கும் ஷு. ஒரு பொருள் ஒலியெழுப்பினால் குழந்தைகள் அதை உயிரோட்டம் உள்ளதாக எண்ணி அதனோடு ஒட்டிக் கொள்கிறார்கள்.

சண்முகநாதன் ஏன் இதை இவனிடம் கேட்டோம் என்று நினைத்திருக்கக்கூடும். ”ட்ரென்ச் பிக்சர்ஸ் பாத்தீங்களா?” என்றார். இருபது ஆண்டுகள் அகழாய்வில் அனுபவம் உள்ளவர். மாளிகைமேடு தான் அவருடைய முதல் ஆய்விடம். அங்கிருந்து அவர் அகழ்ந்தெடுத்த ஒரு கனமான செங்கல்லை, அனுமதிபெற்று அவர் மேசையில் வைத்திருக்கிறார். ஜூனியராக ஆரம்பித்து, பின்னர், மாங்குடி, மாங்குளம், தலைச்சங்காடு என வரிசையாக செயல்திட்ட தலைமைக்கு முன்னேறியவர்.

”ஆமா சார், ஒரு தாழி இப்போதைக்கு கிடைத்திருக்கிறது. இது ஒரு பரியல் கிரவுண்டா இருக்கும்னு நினைக்கிறேன்.” தொடர்ந்தேன், “நாம நாளைக்கு போறதுக்குள்ள அங்க இன்னும் லேயர் த்ரீய எக்ஸ்பாண்ட் செய்திடுவாங்க. அதனாலதான் நேர சைட் போயிட்டு ஆர்ட்டிபாக்ட்ஸ நம்ம மேக்-ஷிஃப்ட் ரூம்ல பாதுகாப்பா நகர்த்தலாம்னு திட்டம்.”

தலையாட்டி ஆமோதித்து, ”இருபது ஆண்டுகள் கழித்து மறுபடியும் மாங்குடிய நம்ம ஸ்டடில எடுத்துக்கிட்டது, அ கிரேட் அண்டர்டேக்கிங்.” அவருடைய வழக்கமான உயிரூட்டமிக்க துள்ளலோடு சொன்னார்.

”ஆமா, அங்க இன்னுமே கூட நிறைய கிடைக்கலாம். வெறும் பீட்ஸ் தான் மொதல்ல எடுத்தோம். எப்பவும் போல சில பானைத் துண்டுகளும். இப்ப இந்தத் தாழி.”

கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் பணி. மதுரையருகில் மாங்குடி என்னும் சிற்றூரில். நாதன், இந்தச் செயல்திட்டத்திற்கு முதன்மை தொல்லியல் ஆய்வாளர், நான் துணை ஆய்வாளர். நாங்கள் முதற்கட்ட பகுப்பாய்வு செய்துகொண்டிருக்கும்போதே, அங்கு இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியிருந்தன. தற்போது மூன்றரை அடி உயரமுள்ள தாழி ஒன்று கிடைத்திருப்பதாக செய்தி. புகைப்படங்கள் அனுப்பியிருந்தார்கள். முதலில் அதன் கழுத்து மட்டும் வெளியே தெரிந்து, மீதி மண்ணுக்குள் புதைந்துள்ளவாறு ஒரு படம். மண் காய்ந்து திடமாக இருந்தது.

மேலும் படங்கள். சுற்றியிருக்கும் மண்ணை, பானை உடைபடாமல் மெல்ல அகற்றிய படங்கள். பெரும்பாறையை மேலிருந்து கீழாக செதுக்கிக் கோவிலாக்குவது போல, தாழி பழந்தூக்கம் கலைந்து தலையெழுந்து வந்தது. நாங்கள் வருவதற்கு காத்திருந்து, அதை இன்னும் திறக்காமல் வைத்திருந்தார்கள்.

“எப்பவும் போல நாம அங்கிருந்து அப்பப்ப மெசேஜ் அனுப்பிவிடுவோம். இறுதி ரிப்போர்ட் ரெடி செய்யுற வரைக்கும் காத்திருக்க வேண்டாம். இல்லன்னா டேட்டிங் பிராசஸ்ல தேவையில்லாம தாமதம் ஆகும்” என்று கூறி, தோள்மீது தொட்டுவிட்டு சென்றார்.

முதற்சுற்று அகழ்வில் சில பானையோடுகளும் சில கழுத்துமாலைகளும் அணிகலன்களும் கிடைத்தன. அந்தப் பொருட்களையெல்லாம் இங்கே சென்னைக்கு எடுத்துவந்தாகிவிட்டது, ஒவ்வொரு கூரான பானைத் துண்டுகளும் ஒவ்வொரு காலத்தைப் பிரதிபலிப்பதுபோல் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் தேதி போட்டு, அடையாளக் குறிப்பு எழுதி… கார்நீலியன் மணி மாலைகள், ஒவ்வொன்றாக துடைத்து, அளவுவாரியாக பிரித்து… கையில் தொடுவதற்கு வழவழப்பாக இருந்தன.

ஒருநாள் நித்திலனை ஒரு பிரத்தியேக குளியலுக்கு அமர்த்தியிருந்தேன்.

அபர்ணா, “குழந்தைக்கு வலிக்கும் பிரகதீஷ்,” என்றாள்.

தேங்காய் எண்ணெய் எடுத்து உள்ளங்கையில் தேய்த்து, நீட்டிய என் காலின் மீது குப்புற படுத்திருந்த அவனுடைய முதுகில் மெல்ல நீவிக்கொண்டே, “அதெல்லாம் எனக்குத் தெரியும்,” என்றேன். அவனது ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு எலும்பும் நீவப்படும்போது, என்னை யாரோ தணிவுறச்செய்வதுபோல் ஒரு தளையிழப்பு.

“உட்கார வெச்சே குளிக்க வச்சா என்னவாம்.”

“அதான் இன்னும் மூன்று நாளைக்கு நான் இங்க இருக்க மாட்டேனே. அப்ப எப்படி வேணுமோ உம் பிள்ளைய அப்படி குளிக்க வெச்சுக்கோ. நான் என் பிள்ளைக்கு இப்படித்தான் செய்வேன்.” தூக்கியதும், அம்மாவை ஒருகணம் கண்டு மீண்டபின் என்னைப் பார்த்துச் சிரிப்பவனின் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம்.

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும். மாசத்துல பாதிநாள் எங்கயாவது போய் குழிய தோண்டுறதே உனக்கு வேலைன்னு ஆகிப்போச்சு, மீதிநாள் மீட்டிங் பிரசன்டேஷன்னு வேறவேற ஊருக்கு பயணம்,” என்று அங்கலாய்த்து, ”இதெல்லாம் இன்னும் ஒரு வருஷமோ ஒன்றரை வருஷமோதான், அதுக்கப்புறம் நான் வேலைக்குத் திரும்பிடுவேன்” என்று புன்னகைத்தாள்.

வேலை முடித்த பின், பைக் எடுத்துக்கொண்டு ஆறரை மணியளவில் வீட்டை அடைந்தேன். என் அடுக்குமாடி நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, தனியான எலெவேட்டரில் செல்லாமல், இரண்டாம் மாடிக்கு படியில் ஏறியே சென்றேன். என்னுடைய செருப்பு மட்டுமே இருக்கும் காலணி அடுக்கில், ஷூவைக் கழற்றிவைத்தேன். ஒரே சமயம் ஒரு அறையில் மட்டுமே விளக்கு எரியும் வீடு. பெரும்பாலும் பயன்படுத்தப்படாத சமையலறை. ஓரத்தில் ஒட்டடை படிந்திருக்கும் பதினைந்து இருபது கிலோ டம்பெல்கள், இரண்டிரண்டு.

விடியற்காலை தான் கிளம்புகிறோம். இரவு முழுக்க இருக்கிறது. பொறுமையாக துணிகளை எடுத்துவைத்தால் போதும். என்ன வேண்டியிருக்கிறது நான்கு நாளைக்கு. எக்கியுப்மென்ட் எல்லாம் ஜாக்கிரதையாக முன்னரே தனிப்பெட்டியில் வைத்தாகிவிட்டது. கப்போர்டைத் திறக்கும்போது, கண்ணாடி மூன்றுநாள் முட்தாடியைக் காண்பித்தது. நாலு டீஷர்ட் எடுத்துவைத்தால் போதும். இரண்டு வெளிப்புறத்துக்கு. இரண்டு அறைக்கு உள்ளே, இரவுக்கு. அடியில் இருந்த குறுங்குர்த்தா தென்பட்டது – அபர்ணா பரிசளித்தது.

“கொஞ்சம் பிரைட்டா டிரெஸ் பண்ணாத்தான் என்னடா? எப்பப் பாத்தாலும் ரவுண்ட் நெக் இருண்ட டீஷர்ட் மட்டும்தானா?” என்று சொல்லி மெர்ருன் நிறத்தில் அந்த குர்தாவை எனக்கு அளித்திருந்தாள், நித்திலனின் முதல் பிறந்தநாளில்.

“லாங் குர்த்தாலாம் உனக்கு ஒத்துவராது. இதான் எடுப்பா இருக்கும்.” காலர் இல்லாமல் மூன்று பட்டன் மட்டும் வைத்தது. பட்டன் போடும் இடங்களில், அறைகளின் ஓரங்களில் நீண்டு போடப்படும் அலங்கார கோலநெளிவுகள் போல. என்னைப் பிரிந்து ஆறு மாதங்கள் ஆனபோதிலும், உலர்த்திய பின்பும் பாதி காயாத துணிபோல, அவள் ஃபெரோமோன்கள் இன்னும் துணியடுக்கில் சிறிது மிச்சம் இருந்தன.

நித்திலனின் முதல் பிறந்தநாள். டெல்லியில் பிரசெண்டேஷன் முடித்து, அறிக்கை கொடுத்துவிட்டு, மதியமே புறப்பட்டுவிட்டேன். விமான நிலையத்தில் காத்திருந்த ஒவ்வொரு நொடியிலும் அவன் தூங்கும் வீடியோவையே கண்டுகொண்டிருந்தேன். நம் கனவுகளை ஆக்கிரமித்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு கனவுகள் வருமோ.

கப்பர்டை மூடிவிட்டு, ஹாலுக்குச் சென்று, தொலைக்காட்சியில் நகைச்சுவை சானலை போட்டுக்கொண்டேன். மின்விசிறியின் சத்தமும் தொலைக்காட்சியின் பேச்சுகளுமே இரவின் வெள்ளத்தைக் கடக்க எனக்கு பொதுவாக கைக்கொடுத்தன.

அதிகாலை இரண்டேமுக்காலுக்கு சண்முகநாதன் ஓட்டுநருடன் எங்கள் டிப்பார்ட்மென்ட் காரோடு வந்துவிட்டார். என்னுடைய காரை விற்று நான்கு மாதங்கள் ஆகப்போகின்றன. புழுதித் தரையின் மேல் தார்ச்சாலைகள். சாலைகளின் ஓரத்தில் பறக்கும் பிளாஸ்டிக் குப்பைகள். இடுக்கிக்கொண்டு கட்டப்பட்டிருக்கும் வீடுகள். நெருக்கியும் நெருங்கியும் வாழும் எண்ணற்ற மக்கள். இப்படியாக மேம்பாலங்கள் மீதும் மேம்பாலங்கள் அடியிலும் ஓட்டிக்கொண்டு சென்னையிலிருந்து நீங்கினோம். கொஞ்சம் எனக்கு நிம்மதியான மூச்சு உள்ளேபோனது. விடியற்காலையிலேயே உளுந்தூர்பேட்டையில் டிபனும் காபியும் சாப்பிட்டோம்.

“பிரகதீஷ், இப்ப இன்னும் அந்த த்ரீ பி.யெச்.கே.ல தான் இருக்கீங்களா, மாறப் போறேன்னு சொல்லிட்டு இருந்தீங்க,” நாதன்.

“ஆமா பாத்திட்டு இருக்கேன் சார். சீக்கிரமே மாறனும்…,” உணர்வற்ற குரலில், அவர் கண் பார்க்காமல், என் காபி டம்ப்ளரைச் சுழற்றிக்கொண்டு ”ஒருத்தனுக்கு இந்த ரென்ட் அதிகம்.” என்றேன்.

“என் நீஸ் ஒருத்தி, கொஞ்சம் பெரிய வீடா பாத்திட்டு இருக்கா. ஸ்பேஸ் இருந்தா அவங்க குடும்பத்துக்கு சூட்டபிலா இருக்கும்னு. உங்க நம்பர் கொடுக்கட்டுமா?”

“தாராளமா சார்.” சண்முகநாதன் நேருக்கு நேர் அமர்ந்திருந்தார். பேசும்போது அவர் தலையைச் சற்றே சாய்த்துக்கொள்வது என் மாமனாரைப் போலவே இருந்தது.

“மாப்பிள்ளை ஒரு வெற்றிடத்தை நிரப்பிறத்துக்கு நாமளும் கொஞ்சம் மெனக்கெடனுமே,” நித்திலன் மறைவுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் என் மாமனார் வழக்கம்போல் ஆரம்பித்தார்.

வெடித்தேன். ”சார் உங்க வேலைய பாத்துட்டு இருக்கீங்களா, நாங்க பாத்துக்கறோம்.”

“உங்களுக்கு தெரியாதது இல்ல… அபர்ணாவைப் பற்றியும் நீங்க யோசிக்கனும்.”

என் கண்கள் அவர் பக்கம் நோக்கியிருந்தாலும் பார்வை வேறு ஏதோ ஆழத்தில் இருந்தது. பதில் எதுவும் வராததால் புரிந்துகொண்டோ புரியாமலோ அமைதியானார்.

நானும் அபர்ணாவும் அதைப் பற்றி யோசிக்காமல் இல்லை. ஆனால் அதை முன்னெடுக்க வேண்டும் என்றாலே ஒரு வெறுப்பு, அருவருப்பு. பாவம் என்பது போல் நினைப்பு. திரும்ப முடியா வீட்டைவிட்டுக் கிளம்பியது போல.

“மிஸ்டர் பிரகதீஷ், உங்க உடம்பு நார்மலாத்தான் இருக்கு.” யூராலஜிஸ்டைக் கூடப் பார்த்தேன்.

“சில்டினாபில் பத்தி யோசிச்சீங்களா?”

கீழேயே பார்த்துக்கொண்டிருந்தேன். சல்லடை துளைகள்போல் குத்தியது. அவர் போனமுறையும் பரிந்துரைத்தது தான். வையாகரா பயனுள்ளதாக இருக்கும். ஆனால், என் மனம் உடன்படாமல் உடல் மட்டும் இயங்கினால் அது நான்தானா என்ற குழப்பம் மிகுந்தது.

“இல்ல வேணாம் டாக்டர்.”

எங்கள் கார் காவேரி தாண்டி சென்றுகொண்டிருந்தது. பாலம் கடக்கும்போது, நீர்போக்கின் நடுவில் மணற்திட்டுக்கள் என்றல்லாமல், மணல் நடுவில் தண்ணீர்த் தீவுகள் தென்பட்டன. கடைசி பாதி தூரத்தை ஓட்டுநருக்கு ஓய்வளித்து, நான் ஓட்டிச் சென்றேன். மதுரையின் உள்ளே புகாமல், வைகையைக் கடந்து, திருமங்கலம் அருகே வளைந்து, இராஜபாளையம் சாலையில் சேர்ந்தோம். தெற்கே செல்லச்செல்ல, மண் செம்மை கருமை என மாறிமாறி அணிந்து வந்தது. இராஜபாளையம் தாண்டி தென்மலைகுன்று கண்ணில்படும்போது, சாலையில் திரும்பி மாங்குடி நோக்கிப் பயணித்தோம்.

காய்ந்த முட்செடிகள் நிறைந்துள்ள வெட்டவெளி, பச்சையும் வெள்ளையுமான வீடுகள், ஜவுளி வியாபாரம், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை என மஞ்சள் பெயின்ட் அடித்த சுவர்கள், மூலம் பௌத்திரம் என போஸ்டர் அடித்து, வாழைப்பழ தாரும் சிப்ஸ் பாக்கெட்களும் தொங்கும் பெட்டிக்கடைகள், ஆங்காங்கே சில தென்னைகளும் வேம்பும் குடிகொண்டுள்ள ஒருவண்டி சாலை, கடக்கும்போது தலைநிமர்ந்து பார்க்கும் நாய்கள், பள்ளிமுடிந்து சீருடையிலேயே பம்பரம் விளையாடும் சிறுவர்கள், இருயானை சிலைவைத்து வில்-மீன்-புலி சின்னத்தோடு அமைக்கப்பட்டுள்ள சங்க காலத்து புலவர் மாங்குடி மருதனாருக்கான நினைவுத்தூண் என கடந்து அகழாய்வு நிலத்திற்குச் சென்றோம்.

ஏப்ரல் வெயில் முன்மாலையிலும் இருந்தது. ஐந்து ஆண்கள் கைவைக்காத வெள்ளை உள்பனியனோடு உள்ளே நின்று மண் அகற்றிக்கொண்டிருந்தார்கள். மூன்று பெண்கள் தலையில் துணி கட்டிக்கொண்டு, பொருட்துண்டுகள் இருந்தால் தனியே எடுத்துவைத்து, மண்ணைப் புறந்தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

சதுரமாக வகுக்கப்பட்ட நிலத்துண்டுகள். ஒவ்வொரு துண்டுகளின் சுற்றுவட்டத்திலும் சிறுகுச்சிகள் அடித்து கயிறு. சதுரக்குழிகள் வெவ்வேறு ஆழங்களில் வெட்டப்பட்டிருந்தன. உள்ளே கருப்பு-வெள்ளை என நீளம் காட்டும் அளவைகள் ஓரமாக சாய்க்கப்பட்டு நின்றுகொண்டிருந்தன. சில சதுரங்கள் ஒரு மீட்டர் ஆழத்தில், சில நான்கைந்து மீட்டர் ஆழம் இருக்கும்.

நித்திலன் நடக்க ஆரம்பித்து சில வாரங்களில் அது ஆரம்பித்தது. இரவு பால் கொடுத்ததற்கு பிறகும் கூட ஒரு மணிநேரம் தொடர் அழுகை. அபர்ணாவிடம் இருந்து வாங்கி என் தோளில் சாய்த்துக்கொண்டேன். காலையில்தான் அழுகை நின்றது.

மறுபடியும் சில நாட்கள் கழித்து தொடர்ந்தது.

“போன வாரம் சோபாலேந்து விழுந்தான் டாக்டர்.”

“இது சாதாரணமாக எல்லா பெற்றோரும் சந்திக்கிறது தான், இதுக்கெல்லாம் உடனே கூட்டிட்டு வந்துருவீங்களா?”

“ரெண்டு நாள் ஃபுல்லா அழுதுட்டு இருந்தான் சார்.”

இப்போது என் தோளிலேயே உறங்கிகொண்டிருந்தான். என் இடதுதோள் புறத்தில் டீஷர்ட் ஈரமாகி இருந்தது.

“அப்படியா” என்றுவிட்டு, டாக்டர், நித்திலனை வாங்கிக்கொண்டார். மெல்ல வாயைத் திறந்து பார்த்தார். பின்னர் காதில். உடம்பைத் தொட்டுப் பார்த்தார்.

பரிசோதித்துவிட்டு, “பையன் சூப்பரா இருக்கான் சார். டோன்ட் வொரி,” என்றார்.

ஒரு வாரம் கழித்து அவன் காலையே தொட்டுத்தொட்டு அழ ஆரம்பித்திருந்தான். வீங்கினாற்போல இருந்தது. கண்ணீரோடு அபர்ணாவும் காரில் வந்தாள்.

வழக்கமான மருத்துவரிடம் ரெஃபரல் வாங்கி ஆர்த்தோபீடிக் மருத்துவரிடம் சென்றோம். எக்ஸ்ரே. பையாப்சி. ஆஸ்டியோசர்கொமா, தொடை எலும்பில் கான்சர் என்று கூறினார்கள். கண்கள் பார்க்கும் உலகம் சுருங்கி, கண்களுக்குள்ளேயே விழுவதுபோல இருந்தது. அருகில் அபர்ணாவின் அழுகை, நீருக்குள் அமிழ்ந்து கேட்பதுபோல ஒலித்தது.

நான் பள்ளி சேரும் காலத்தில், மிகவும் அடம் பிடித்துக்கொண்டிருந்ததால், என்னை யூனிபார்ம் போடாமல், வீட்டு உடையையே அணிய வைத்து, தையற்கடைக்கோ மளிகைக்கடைக்கோ போகலாம் என்று சொல்லி அழைத்துப்போவார்கள். பின்னர் பள்ளியிலேயே அழுகையோடு யூனிபார்முக்கு மாற்றிவிடுவார்கள். என் பையன், மருத்துவமனைகளின் நீல உடைகளிலும் வெள்ளை உடைகளிலும்.

அபர்ணா மருத்துவ அலைச்சல்களின் முழுபொறுப்பை ஏற்றுக்கொண்டாள். முதலில் கீமோ. பின்னர் சர்ஜரி செய்து டியூமரை எடுத்துவிடலாம் என மருத்துவர்கள் சொன்னார்கள். நான் வெவ்வேறு ஊர்களில் புதைந்து புதைந்து மீண்டுகொண்டிருந்தேன்.

“எப்படி நாம எல்லாத்தையும் தாண்டிப் போக முடியும், அபர்ணா?” என் கைகள் மெதுவாக நடுங்கின.

“தாண்டி போறதல்ல பிரச்சனை, நாம இருவரும் எங்கே போய்ச் சேரணும்னு தெரியலையே.”

தேவியாறு பெரும்பாலும் வற்றி வரண்டு, காய்ந்த பரந்த நிலம். ஒரு முதுமக்கள் தாழியை மட்டும் பக்கத்திலுள்ள தற்காலிக அறையில் வைத்திருந்தார்கள். மேலும் பல தாழிகளின் கழுத்துகள் மண்ணில் தென்பட்டன. முகத்தில் ஈரப்பசையில்லாத காற்று மெல்லிய சத்தத்தோடு அடித்துக்கொண்டிருந்தது. உயிருள்ள சில மனிதர்களுக்கு மத்தியில், தாழிகளில் மீண்டும் முளைத்துள்ள ஆடியமிழ்ந்துபோனவர்கள்.

எடுத்துவைத்த தாழியில் நாங்கள் எண்ணியது போலவே எலும்புத் துண்டுகள்.

சண்முகநாதன், “டேட்டிங் செய்ததுக்கு அப்புறம், கண்டிப்பாக இது ஒரு அற்புத கண்டுபிடிப்பா இருக்கும்” என்றார். அவை வளர்ந்த ஓர் ஆணுடைய எலும்புகள். அந்த எலும்புக் குவியலில் இருந்து, ஒவ்வொரு எலும்பாக கவனமாக எடுத்து நானும் நாதனும் பிரஷ்கொண்டு மெல்ல வருடி, உடற்பாகத்திற்கு ஏற்றவாறு மேசையின் மீது வைத்துக்கொண்டிருந்தோம்.

ஒரு சிறிய துண்டின் மீது கணமாக மண் ஒட்டியிருந்தது. அது ஆழத்தில் ஒண்டியாக இருந்தது. குஞ்சம் போன்ற பிரஷ்ஷைக்கொண்டு மண் மட்டும் அகலுமாறு அதைச் சாய்வாக வைத்து அழுத்தி நீவினேன். மண் மெல்ல மெல்ல இளகி, தளர்ந்து விழுந்தது.

”இதுல எதுவோ வித்தியாசமா இருக்கு, கொஞ்சம் பாருங்க நாதன்,” நீட்டினேன்.

அவர் அதை வாங்கிக்கொண்டு, “ம்ம்ம் சரிதான். ஜிக்சா பசில் பெட்டியில் வேறொரு அட்டைத் துண்டு மாதிரி… ஏதாவது சிதைந்த எலும்பு பாகமா இருக்கும். அழுத்தத்தினால முறிந்திருக்கலாம். இதுல அசாதாரணமா ஒன்னும் இல்ல.”

“இருக்கலாம்.” நான் திரும்ப வாங்கிக்கொண்டேன்.

அது கண்டிப்பாக எலும்புதான். ஆனால் அது அந்த வளர்ந்த மனிதனுடையது அன்று. உடைசல் போலவும் தெரியவில்லை. நுனிகள் மிக கச்சிதமாக இருந்தன. மேலும் துடைத்ததில், ஒரு பக்கத்தில், சிறிய வட்டமான துளைகளைக் கவனித்தேன். முதலில், சூக்குமமாய் தெரிந்து, பின்னர் தூலமாய் தெளிந்தன.

“உடைவென்றால் இவ்வளவு நேர்த்தியா இருக்குமா?” முணுமுணுத்தேன்.

என் நான்குவிரல்களை அவற்றில் ஓட்டினேன். அவை நம்ப முடியாத அளவுக்கு சீரான இடைவெளிகளில் இருந்தன. எலும்பில் மனிதர் உண்டாகிய துளைகள்.

அலுவலகம் முடித்து வீட்டிற்குள் நுழையும் போதே, அபர்ணாவின் குரல் வாசலில் கேட்டது. எல்லா அறைகளிலும் விளக்குகள் எரியவிடப்பட்டு இருந்தன.

”நித்து, எங்க ஸ்கூல் சொல்லு… ஸ்கூல்,” என்று அபர்ணா கேட்டுக்கொண்டிருந்தாள்.

“கூல்… கூல்…”

“கூல் இல்ல, ஸ்கூல்” என்று திரும்பவும் முயன்றாள்.

“கூல்… சூல்,” என்று அழுத்திக் கூறினான்.

பேச்சுக்கிடையிலே அவள் ஒவ்வொரு வாயாக ஊட்ட முயன்றுகொண்டிருந்தாள். ஒவ்வொரு அறைக்கும் ஓடியோடி, தரையெங்கும் தெரித்திருந்தன பருக்கைகள்.

“உன் பையன் ஒரு இடத்தில நிக்கிறானா பாரு” என்றாள்.

நான் சிரித்துக்கொண்டே என் கையில் வைத்திருந்த அட்டைப்பெட்டியைப் பிரித்தேன். அவன் ஹாலின் தரையில் உட்கார்ந்ததும், அவன் அருகிலேயே நானும் முட்டிப்போட்டு அமர்வதுபோல பாதி உட்கார்ந்தேன்.

”இன்னும் ஸ்கூலுக்குப் போறதே அடுத்த வருஷம் தான், அதுக்குள்ள மியூசிக்கா” என்றாள்.

புதிய கீபோர்டை வெளியே எடுத்து, ”அவனுக்கு எதெதுல ஆர்வம் இருக்குன்னு பாக்கணும்ல. அப்படி இல்லன்னா அவனே நிறுத்திறுவான்.”

ஆனந்தச் சிரிப்புடன், நித்திலன் சுட்டுவிரலை மட்டும் நீட்டி, மற்ற விரல்களை மடக்கி ஒவ்வொரு விசையாக அழுத்திப்பார்த்தான். மொத்தம் முப்பத்தியேழு விசைகள் கொண்டது; மூன்று ஆக்டேவ். அழுத்தும்போது அவன் உதடுகள் குவிந்து, யோசிக்கும் தன்மையை முகத்திற்கு வரவழைத்தன. கோடையில் மொட்டை போடுவதற்காக வளர்ந்திருக்கும் அலைகுழல்கள் அவன் அரைசெவியை மறைத்தன. நான் என் விரலைக் கொண்டுசென்று அழுத்தியபோது, அவன் கையால் என் விரலைத் தள்ளினான். மீண்டும் முற்பட்டேன். செல்ல முறைப்பு. மீண்டும் தள்ளினான். இனிய இசையெல்லாம் அவன்மூலம் தான் எழமுடியும் என்பது போல.

நாதன் நெருங்கி வந்து, “இந்தத் துளைகள்… வெட்டுகள்… எண்ணிச் செதுக்கியது?” என்று, குழப்பமுற்ற குரலில், “இது மட்டும் குழந்தையுடைய தொடை எலும்போ?” என்றார்.

நான் பதிலுரைக்கவில்லை. மெல்ல அந்த மென்மையான எலும்பை வருடும்போது, துளைகள் உள்ளிருந்து காற்று எழுந்து என் விரல்நுனிகளில் சுருண்டு திரும்பியதுபோல் இருந்தது. எடுத்து வைத்திருந்த வளர்ந்த மனிதனின் எலும்புகள் போல் என் எலும்புகள் கனத்திருந்தன. உறைந்து நின்றுகொண்டிருந்தேன். ஒழுங்கிலா மழலை என்னுள்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “குழலினிது”

  1. பழங்காலத் தாழிகளில் இருந்து வெளிப்படும் எலும்புகளைப் போலவே, கதாநாயகனின் நினைவுகளும் அவனுள் ஆழமாகப் புதைந்திருக்கும் உணர்வுகளையும் ஒவ்வொன்றாக வெளிக்கொணர்கின்றன. அகழாய்வுப் பணியின் ஒவ்வொரு அடுக்கும் அவனது துயரத்தின் அடுக்குகளை பிரதிபலிப்பது போல, கதையின் மொழிபும் நிகழ்காலத்திலிருந்து இறந்தகாலத்திற்கும், மீண்டும் நிகழ்காலத்திற்கும் நம்மை அழைத்துச் செல்கிறது, அதே நேரம் அறுபடாத இழையாக கதையோட்டத்தினை தக்க வைக்கின்றது.

Leave a Reply to நிர்மல்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.