பின்னோக்கி பார்க்கும்போது ஒரு பத்திரிகையை உருவாக்கி அளிக்கும் கனவு என்பது பள்ளிப் பருவத்திலேயே முளைவிட்ட ஒன்று என்பது உறுதிப்படுகிறது. பதினொன்றாம் வகுப்பின்போது நண்பன் மணிகண்டனும் நானும் சேர்ந்து, ஓவியம் வரைவதற்கான ஏட்டில் அப்படியொரு இதழை உருவாக்கினோம். இதழின் பெயர் நினைவில் இல்லை. இருவருமே ஓவியங்கள் வரைவோம், கவிதைகள் எழுதுவோம். இருவரின் கையெழுத்துமே ஒழுங்குடன் இருக்கும் என்பதால் இதழ் பார்க்கும்படியாகவும் படிக்கும்படியாகவும் அமைந்திருந்தது. பள்ளிக்கூடத்திலும் தட்டச்சுப் பயிற்சியகத்திலும் அந்த இதழுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால், இரண்டாவது இதழை நாங்கள் திட்டமிடவேயில்லை.
கல்லூரி முதலாம் ஆண்டின்போது முரளி, சம்பத், பரமசிவம் ஆகிய நண்பர்களின் ஆர்வம் காரணமாக ஒரு கையெழுத்து இதழைத் தொடங்கினோம். ‘எண்ணங்கள்’ என்று பெயரிடப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வெளியானது. இருபதுக்கும் அதிகமான இதழ்கள். ஓரிரு இதழ்களை ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகளையும் உருவாக்கிய நினைவு உள்ளது. ஆண்டு சிறப்பிதழும் அதிக பக்கங்களுடன் வெளிவந்தது. தொடக்கத்தில் இருந்த நண்பர்களுடன் மணி, பாரதிதாசன், கிரி, வீரபிரகாஷ், குரு ஆகிய சிலரும் இணைந்துகொண்டதில் ஆசிரியர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ‘எண்ணங்கள்’ இதழ் உருவாக்கம்தான் என்னை ‘உதயம்’ பக்தவத்சலம் அவர்களிடம் கொண்டு சேர்த்தது. நவீன இலக்கியம் அறிமுகமானது. சுப்ரபாரதிமணியனை அறிமுகப்படுத்தியது. விக்ரமாதித்யனையும் கி.ராவையும் வண்ணதாசனையும் சுந்தர ராமசாமியையும் வண்ணநிலவனையும் வாசிக்கச் செய்தது. கையெழுத்து பத்திரிகையாக இருந்த ‘எண்ணங்க’ளின் இரண்டு இதழ்கள் அச்சிலும் வெளியாயின.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயமோகன் அறிமுகமாகி, உதகை நாராயண குருகுலத்துக்கு செல்லத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பின் ‘சொல் புதிது’ இதழ் உருவானது. நித்ய சைதன்ய யதிக்கு இதழ் கொண்டு வருவதில் சிறிதும் ஒப்புதல் இல்லை என்பதை முன்பே ஓரிரு இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். எழுத்தாளனின் ஆற்றலை உறிஞ்சிவிடக்கூடிய பணி அது என்பதையும் சிற்றிதழ் நடத்துவதில் உள்ள சிரமங்களையும் சவால்களையும் நாங்கள் அறிந்திருந்தோம். ஆனாலும், விரிவாகவும் தீவிரமாகவும் திட்டமிட்டு இதழ் தொடங்கப்பட்டது. இதழுக்கான படைப்புகள், சந்தாக்கள், விளம்பரங்கள் என்று அனைத்துப் பணிகளையும் ஜெயமோகன் ஒருங்கிணைத்தார். எண்ணற்ற பக்கங்களை எழுதினார், மொழிபெயர்த்தார். இதழ் தொடர்பாக எழுதிய கடிதங்களே ஏராளம். செந்தூரம் ஜெகதீஷ், ரிஷ்யசிருங்கர், க.மோகனரங்கன், யூமா வாசுகி ஆகியோர் உடனிருந்தனர்.
கோவையில் நடைபெறவிருந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றைக் குறிப்பிட்டு ஜெயமோகன் அஞ்சலட்டை எழுதியிருந்தார். அந்த விழாவுக்கு வரவிருக்கும் ஒருவரை இதழின் அச்சுப் பணிக்காக சென்று சந்திக்கும்படி சொல்லியிருந்தார். முன்பின் அறிமுகமில்லாத, முகம் தெரியாத அந்த மனிதரை எப்படிச் சந்திப்பது என்பதைப் பற்றிய குழப்பம் இருந்தாலும் கோவை சென்றேன். விழா அரங்கத்தை அடைந்தேன். எனக்குத் தெரிந்த ஓரிரு நண்பர்கள் அங்கிருந்தனர். ஆனால், அவர்களுக்கும் நான் விசாரித்த நபரைத் தெரியவில்லை. விழா முடிந்தது. அனைவரும் கலைந்தனர். விருந்தினர்கள் உணவருந்தச் சென்றனர். அவர்களுடனே நடந்தேன். கண.குறிஞ்சியை அப்போதுதான் பார்த்தேன். அவரிடம் சென்று விசாரித்தேன். புகை பிடித்தபடி தனியே நடந்து வந்துகொண்டிருந்தவரை சுட்டிக் காட்டினார். தயக்கத்துடன் அணுகினேன். ஜெயமோகன் குறிப்பிட்டு எழுதியதைச் சொன்னேன். அதற்குள் உணவகத்தை நெருங்கியிருந்தோம். சாப்பிட்டுவிட்டு பேசலாம் என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். கோவை ரயில்நிலையத்தின் எதிரிலுள்ள கீதா உணவகம். உணவருந்திவிட்டு வெளியில் வந்தால் ஆசுவாசமாக அமர்ந்து ஓய்வெடுக்க மரநிழலும் பெஞ்சுகளும் உண்டு. புகைபிடித்தபடி அமர்ந்திருந்தார். நெருங்கினேன். விபரத்தைக் கேட்டார். இதழைப் பற்றிச் சொல்லத் தொடங்கினேன். “அத விடுங்க. உங்களைப் பத்தி சொல்லுங்க” என்றார். குடும்பம், பின்னணி, வாசிப்பு அனுபவம் என்று ஒவ்வொன்றாக கேட்டார். அண்மையில் படித்த நாவல் என்று ‘விஷ்ணுபுர’த்தைக் குறிப்பிட்டதும் அதைப் பற்றிய கேள்விகள் வந்தன. அதன் பிறகு நாவலைப் பற்றி மட்டுமே உரையாடல் நீண்டது. மூன்றரை மணிக்குப் பிறகு தன்னிடமிருந்த சிகரெட் பாக்கெட்டைக் கிழித்து அதில் இதழ் அச்சிட ஆகும் தொகையைப் பட்டியலிட்டுத் தந்தார். திருத்தமான கையெழுத்து, துல்லியமான கணக்கு. தேநீர் அருந்திய பின் விடைபெற்றேன். திரும்பி வரும்போதுகூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை, அப்போது சந்தித்த அந்த நபர்தான் என் இலக்கிய வாழ்வை உருவாக்கி வழிநடத்தப் போகிறார் என்று.
‘தமிழினி’ வசந்தகுமார் என்றொரு அண்ணாச்சியை, ஆசானை, வியத்தகு ஆளுமையை சந்தித்த அந்த நாளின் ஒவ்வொரு கணமும் இப்போதும் நினைவில் துல்லியமாக உள்ளது. புகைத்தபடியே ஒருசில சொற்களில் எழுப்பிய கேள்விகளின் வழியாக என்னை எடைபோட்ட விதமும் அதில் அவருக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக நான் பதில் சொன்னேன் என்ற நிறைவும் இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடக்கமாக அமைந்திருந்தன.
‘சொல்புதிது’ இதழ் வேலைகளின் பொருட்டு சென்னை சென்று வந்த நாட்கள் மிக முக்கியமானவை. அப்போது அண்ணாச்சியுடன் நிகழ்ந்த உரையாடல்கள் பெருமதிமிக்கவை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவை உருவாக்கியவை. நாவலாசிரியனாக வேண்டும் என்ற உறுதியை ஏற்படுத்தியவை.
‘எண்ணங்கள்’ கையெழுத்து இதழ், பக்தவத்சலத்தை சந்திக்கச் செய்து நவீன இலக்கியத்தை நோக்கி என்னை நகர்த்தியது. ‘சொல் புதிது’ இதழ் என்னை வசந்தகுமாரிடம் கொண்டு சேர்த்தது. இரண்டுமே என் வாழ்வின் முக்கியமான திருப்புமுனைகள்.
0
எழுத்தாளர்கள் பலரும் சிற்றிதழ்களை நடத்தியிருக்கிறார்கள். ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். பிரபல இதழ்களுக்கு சிறப்பாசிரியார்களாக, பொறுப்பாசிரியார்களாக பங்காற்றியிருக்கிறார்கள். எழுத்தாளனுக்கு இதுபோன்ற ஒரு பொறுப்பு இரண்டு விதமாகவும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு விருப்பமானதை, தான் சொல்ல நினைப்பதை எழுதவும் வெளியிடவும் வாய்ப்பாக அமையும் அதே நேரத்தில் இதற்கான வேலை கணிசமான உழைப்பைக் கோருவது. உடலையும் மூளையையும் சோர்வுறச் செய்யும் நெருக்கடிகளைக் கொண்டது. சந்தா கேட்க வேண்டும், அதை கணக்கு வைக்க வேண்டும், இதழ்களை சரியான முகவரிக்கு அனுப்ப வேண்டும், கிடைக்கவில்லை என்று வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்பவேண்டும், அச்சகத்துக்கு பணம் தரவேண்டும், அடுத்த இதழுக்கு படைப்புகளைக் கேட்டுப் பெற வேண்டும், அச்சுக் கோர்த்த பின் பிழை பார்க்க வேண்டும், இதழ்களை அஞ்சலில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கணிசமான வேலைகள் சேர்ந்துகொண்டே இருக்கும். முக்கியமானது பொருளாதார நெருக்கடி. விளம்பரங்கள், சந்தாக்களை வைத்துக் கொண்டு இதழை நடத்துவது சிரமம். நினைப்பதுபோல அமையாது. இதற்கு நடுவே சொந்தமாக எதையாவது எழுதுவது என்பதைப் பற்றி யோசிப்பதே கடினம். அச்சிதழ்களுக்கான இந்த சிரமங்கள் இன்று இல்லை. கணினி தொழில்நுட்பம், இணைய வசதிகள், தொலைதொடர்பு மேம்பாடு ஆகியவற்றின் காரணமாக மின்னிதழ்களை நடத்துவது இன்று எளிதாக உள்ளது. அதே சமயத்தில், மின்னிதழ்களுக்கான சவால்கள் வேறுவிதமானவை. செலவுகளை சமாளிக்கலாம் என்றாலும் இதழை வடிவமைத்து, படைப்புகளை தேர்வு செய்து, பிழை நீக்கி குறித்த சமயத்தில் பதிவேற்றுவதிலும் எண்ணற்ற தடைகளும் சவால்களும் உண்டு. இந்த சவால்களையும் மீறி இளைஞர்கள் பலர் இன்று ஆக்கப்பூர்வமான மின்னிதழ்களை இணைய இதழ்களை தொடர்ந்து நடத்துகிறார்கள். சிற்றிதழ்கள் ஏற்றிருந்த பணியை இன்று இணைய இதழ்களே இன்னும் விரிவான அளவில் ஏற்று நிறைவேற்றி வருகின்றன.

2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ‘சொல்வனம்’ இணைய இதழ். இந்த 17 ஆண்டுகளில் 340க்கும் கூடுதலான இதழ்கள் வெளிவந்துள்ளன. இணையத் தொழில்நுட்பம், கணினி வசதிகள் என்று இருந்தபோதும்கூட இத்தனை நீண்ட காலம் தொடர்ந்து தீவிரமும் ஆர்வமும் குறையாமல் இதழை உற்சாகத்துடன் நடத்துவது என்பது பெரும் சாதனையே. இலக்கியம் தவிர்த்து அறிவியல், வரலாறு, ஓவியம், இசை, தத்துவம், மருத்துவம் என்று பல்வேறு இயல்களிலும் பல முக்கியமான ஆக்கங்களை இதில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள். முக்கியமான பல மொழியாக்கங்கள் வெளிவந்துள்ளன. சிறப்பிதழ்களை ஒருங்கிணைத்து வெளிவரச் செய்திருக்கிறார்கள். குறிப்பான, புதிய எழுத்தாளர்கள் பலரும் ‘சொல்வனம்’ இதழிலிருந்து உருவாகியிருக்கிறார்கள் என்பது முக்கியமானது.
‘சொல்வனம்’ இதழுக்கும் எனக்குமான நேரடித் தொடர்பு என்று எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே உள்ளன. ‘கடைவழி’ சிறுகதை, கவிதைகள் சில, க.நா.சு, அ.முத்துலிங்கம் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள், விமர்சனங்கள் சில ஆகியன வெளிவந்துள்ளன. ‘மனைமாட்சி’ நாவலின் ஒரு பகுதியும் இடம்பெற்றது. டிசம்பர் 2014 இதழில் நேர்காணல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு ‘பாஸ்டன்’ பாலா கோவை வந்திருந்தபோது ‘த்யாகு’ புத்தக நிலைய நண்பர்களுடன் சேர்ந்து சந்திக்க வாய்த்தது. பாலா என்னுடைய அலுவலக நண்பர் ஹரியின் சகோதரர் என்பது அப்போதுதான் தெரியும். இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலா என்னைத் தொடர்புகொண்டு இந்த பொறுப்பாசிரியர் பணியைப் பற்றி பேசினார். உடனடியாகவே ஒப்புக்கொண்டேன். சில விஷயங்களை செய்து பார்க்கலாமே என்ற ஆர்வம்தான். ஆனால், நினைத்தபடி அனைத்தும் கைகூடி வராத நெருக்கடிகள். நண்பர்களின் ஒத்துழைப்புடன் இயன்றவற்றை ஒருங்கைணத்துத் தந்திருக்கிறேன்.
0
தமிழில் இப்போது எண்ணிக்கையில் அதிகமும் எழுதப்படுபவை குறுங்கதைகள். ‘குறுங்கதை’ வடிவம் நமக்கு புதியது அல்ல என்றபோதும் இன்றைய நிலையில் அதன் முக்கியத்துவம், தேவை, பங்களிப்பைப் பற்றிய ஒரு விவாதத்தை, உரையாடலை மேற்கொள்ளும் எண்ணம் இருந்தது. நண்பர்களுடன் நேரடியாக பேசும்போது பல்வேறு முனைகள் உருவாவதும் ஆழம்கொள்வதும் நடக்கும். ஆனாலும் அவற்றை ஓரிடத்தில் திரட்டலாம் என்ற எண்ணத்துடன், குறுங்கதை குறித்த உரையாடலை திட்டமிட்டேன். இளம் எழுத்தாளர்கள் சுநீல் கிருஷ்ணன், கார்த்திக் பாலசுப்ரமணியன், சுரேஷ் பிரதீப் ஆகிய மூவரும் உரையாடியுள்ளனர். குறுங்கதையின் பல்வேறு சாத்தியங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். குறுங்கதைகள் பற்றிய தெளிவையும் கூடவே சந்தேகங்களையும் இந்த உரையாடல் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
இரண்டாவதாக, நான் கவனப்படுத்த எண்ணியது தமிழில் நாடகங்களின் நிலையைப் பற்றி. தமிழில் நவீன நாடகங்களின் நிலை என்ன? என்ற கேள்வியை எழுப்பும் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. மிகச் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி, நெருக்கமான இளம் நண்பராக வாய்த்திருக்கும் விக்னேஷ் ஹரிஹரன் கட்டுரையை எழுதியிருக்கிறார். ஆழமான வாசிப்புக்கும் தேடலுக்கும் பிறகு தீவிரமான கேள்விகளை எழுப்பும் விதமாக இந்தக் கட்டுரையை தந்திருக்கிறார் விக்னேஷ்.
மூன்றாவதாக, மொழிபெயர்ப்புகள் சார்ந்த ஒரு பகுதியை இடம் பெற எண்ணினேன். தொடக்க காலம் முதலே தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஒரு பகுதியாக விளங்கி வரும் மொழிபெயர்ப்பு இப்போது மேலும் தீவிரமடைந்திருக்கிறது. எண்ணிக்கைகள் பெருகியுள்ளன. உலக இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள் பலவும் தமிழில் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பாளர்கள் கவனப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறார்கள். தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை சில கேள்விகளின் வழியாக வெளிப்படுத்தியுள்ளனர்.
அடுத்து, இந்த ஆண்டு ( 2025 ) புத்தகக் கண்காட்சியின்போது தமிழில் புதிய நாவல்கள் பலவும் வெளிவந்தன. சில எழுத்தாளர்களின் முதல் நாவல்களும் அவற்றுள் அடங்கும். அவ்வாறு வெளியான நாவல்களிலிருந்து சில நாவல்களை குறித்த அறிமுகக் குறிப்புகளை எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். வாசகர்களுக்கு இந்தக் குறிப்புகள் திறப்பாக அமையக்கூடும்.
சரவணன் மாணிக்கவாசகம் விரிவான அளவில் வாசிப்பவர். உலக இலக்கியம், தமிழ் இலக்கியம் என அனைத்திலும் உடனடியாகவும் வேகமாகவும் வாசிப்பதுடன் அவற்றைப் பற்றிய குறிப்புகளை எழுதுபவர். பல நேரங்களில் அவரது குறிப்பு கணினியில் உள்ள சுட்டியைப் போல வேறு திறப்புகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. அவரது வாசிப்பு அனுபவத்தில் தமிழின் நம்பிக்கைக்குரிய சில எழுத்தாளர்களைப் பற்றி ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார்.
0
இத்துடன் முடித்துக் கொள்ள நினைத்திருந்த வேளையில், நண்பர்கள் என்னுடைய நேர்காணல் ஒன்று இடம்பெற வேண்டும் என்று விரும்பினார்கள். சில நாட்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மணி உரையாடல். அமெரிக்காவில் நள்ளிரவைத் தாண்டியும் இங்கே எனக்கு அலுவலக நேரத்தைத் தொட்டும் நீண்டது உரையாடல். ஒரு சில கேள்விகள் முன்பே திட்டமிடப்பட்டிருந்தபோதும் உரையாடியபோது அவை பின்னகர்ந்து போய்விட்டன. நண்பர்களுக்கு நடுவிலான இயல்பான உரையாடலாகவே அமைந்திருந்தது. அதன் எழுத்து வடிவம் இங்கே இடம் பெற்றுள்ளது. முந்தைய நேர்காணல்களில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் திரும்பவும் இடம் பெற்றிருக்கும். தவிர்க்க முடியாது. ஆனால், சொல்லாத புதிய அனுபவங்களும் தருணங்களும் இந்த உரையாடலில் உண்டு. என்னை நானே திரும்பிப் பார்க்க வாய்ப்பளித்த இந்த உரையாடல் முக்கியமானது.
0
முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில், ஒத்த கருத்துள்ள ஆர்வமுள்ள நண்பர்கள் ஓரிருவர் சேர்ந்து கையெழுத்து பிரதி நடத்தியது போலத்தான், ‘சொல்வனம்’ இதழையும் நண்பர்கள் சேர்ந்து திட்டமிட்டிருப்பார்கள். சிறிய அளவில் அது தொடங்கப்பட்டாலும் மெல்ல மெல்ல அது விரிந்து, பல்வேறு பங்களிப்புகளும் சேர்ந்து இன்று தமிழின் தவிர்க்க முடியாத முன்னணி இணைய இதழாக ‘சொல்வனம்’ விளங்குகிறது. காலப்போக்கில் எழுத்தாளர்களை, மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கியுள்ளது. வெவ்வேறு இயல்கள் சார்ந்த முக்கியமான ஆக்கங்களின் பெட்டகமாகத் திரண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஒரு பெரும் சாதனை இதழாக ஐநூறாவது இதழ் வெளிவரும். ‘கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்போம்’ என்ற அவர்களது லட்சிய வாசகத்தை ஏற்கெனவே எட்டியிருந்த போதும் மேலும் அதில் உயரங்களை தாண்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.
வாய்ப்பளித்த சொல்வனம் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
0
விசாகப்பட்டணம், 10.05.2025
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

சிறப்பு