ஆறு மொழிபெயர்ப்பாளர்கள், மூன்று கேள்விகள்

இன்று தமிழில், எண்ணிக்கையிலும் தரத்திலும், நேரடிப் புனைவுகளுக்கு இணையாக மொழிபெயர்ப்புகளும் வெளிவருகின்றன. சிலர் மொழிபெயர்ப்பில் மட்டுமே ஊக்கத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். கவிதைகள், சிறுகதைகள் மட்டுமல்லாமல் பெருநாவல்களும் மிகச் சிறந்த முறையில், மூல மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. பல சமயம் சரியான அங்கீகாரம் கிட்டாமல் போகக்கூடும் என்று அறிந்தும் இதில் ஆர்வத்துடன் ஈடுபடும் எழுத்தாளர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பது ஆரோக்கியமான ஒன்று.

மொழிபெயர்ப்பு சார்ந்து புரிதலை அடையும்பொருட்டு தமிழின் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்பாளர்கள் சிலரிடம் கீழ்க்கண்ட மூன்று கேள்விகள் கேட்டு பதில்கள் பெறப்பட்டன.

  1. மொழிபெயர்ப்பதற்கான ஒரு நூலை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
  2. உங்களுக்குப் பிடித்த இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் ( பிறரது மொழிபெயர்ப்பில் )
  3. இப்போது நீங்கள் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூல்.

0

கோ.கமலக்கண்ணன்

திருச்சியைச் சேர்ந்தவர். தமிழக அரசின் அலுவலகப் பணி. ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ‘ஷோஷா’ நாவலை மொழிபெயர்த்ததின் மூலம் ஒரு மொழிபெயர்ப்பாளராக அறிமுகமானவர். குறைந்த கால அளவில் சிறந்த பல ஆக்கங்களை மிக நேர்த்தியாகவும் செறிவுடனும் மொழிபெயர்த்துள்ளார். பிற மொழியாக்கங்கள் – 

ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட், ஹேம்லட், லியர் அரசன், கலீல் கிப்ரானின் ‘முறிந்த சிறகுகள்’, ‘தீர்க்கதரிசி’, ஹெர்மன் ஹெஸ்ஸேவின் ‘சித்தார்த்தன்’, தல்ஸ்தோயின் ‘மாளாக் காதல்’, ஜான் ஸ்டெயின்பெக்கின் ‘எலிவளை வாழ்க்கை’, விக்டர் ஹியூகோவின் ‘ஒரு மரணதண்டனைக் கைதியின் இறுதி நாள்’, கசந்த்சாகீஸின் ‘சோர்பா என்ற கிரேக்கன்’, திக் நாட் ஹன்ச்சின் ‘போதிசத்வ வெளியில் வெண்முகில்கள்’.

‘மீள் வருகை’, ‘அபத்தமானவனின் கனவு’ ஆகியன மொழிபெயர்ப்புக் கதைகள் அடங்கிய தொகுப்புகள். இவை தவிர, மைக்கேல் ஹனகேவின் ‘கூண்டுப் பறவைகள்’ எனும் திரைக்கதை மொழிபெயர்ப்பும் உண்டு.

0

1. கறாரான அளவுகோல்கள் ஏதுமில்லை. புனைவின் மொழியை அறிந்துகொள்ளவே நான் மொழிபெயர்ப்பு செய்கிறேன். அதுவே முதன்மை நோக்கம். அவ்வகையில் உலகச் செவ்வியல் நூல்களை அதன் தனித்துவம், நடையொழுங்கு உள்ளிட்ட பண்புகளின் அடிப்படையில் தேர்வு செய்கிறேன். சில நேரங்களில் ’திரைக்கதை’ ‘நாடகம்’ போன்ற வெவ்வேறு வடிவங்களையும் தேர்வு செய்வதுண்டு. அப்படியாக அகத்தூண்டுதலே முதல் காரணம், புகழ்பெற்ற நூல், செவ்வியல் நூல், கடினமான நூல் போன்ற பிற அளவுகோல்களைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. ‘ஷோஷா’வைத் தேர்வு செய்தபோது தல்ஸ்தோயைப் போன்ற தெளிந்த நடையும் முதிர்ந்த பார்வையும் கொண்ட ஐசக் பாஷவிஸ் சிங்கர் தமிழுக்கு வந்ததில்லை என்பதும் அந்நூலின் உள்ளே வழங்கும் தனித்துவமான ஹசிதிய யூதர்களின் பண்பாடும் என்னை மொழிபெயர்க்கத் தூண்டியது. ’சோர்பா என்ற கிரேக்கன்’ மொழிபெயர்ப்பு செய்யத் தூண்டியது அந்நூலை இதுவரை யாரும் தமிழுக்குக் கொண்டுவரவில்லை என்பதும் அதைச் சுற்றி இருந்த புகழும். ஷேக்ஸ்பியரை மொழிபெயர்த்தது தமிழைக் கொஞ்சுவதற்காக. 

2. தமிழில் பல மொழிபெயர்ப்பாளர்களை வாசித்திருக்கிறேன். ரா.கி. ரங்கராஜன் தொடங்கி ஆர். சிவகுமார், எம். கோபாலகிருஷ்ணன் வரை பலரின் சொல்லாடல்களை ரசித்திருக்கிறேன். இருப்பினும் டி. எஸ். சொக்கலிங்கம் மொழிபெயர்த்த ‘போரும் வாழ்வும்’ நூலைப் பிடிக்கும். அதன் ஒருமையும், அதன் பின் துலங்கும் உழைப்பும் பிடிக்கும். 

3. பிராகிருத மொழியின் பேரிலக்கிய தொகை நூலான ‘காதா சப்த சதி’யை முழுமையாக (எழுநூறு அகத்திணைக் கவிதைகள்) Free Verseஆக மொழிபெயர்க்கத் திட்டம். தமிழின் சங்க அகத்திணைப் பாடல்களின் சாயல் அதில் வெளிப்படுவதும் மக்களின் இலக்கியமாக அது இருப்பதாலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. விரைவில் முடிக்க வேண்டும்.

0

அசதா

விழுப்புரம் மாவட்டம் முகையூரைச் சேர்ந்தவர். கவிஞரும் சிறுகதை ஆசிரியருமான அசதா தமிழில் சில முக்கியமான நூல்களை மொழிபெயர்த்துள்ளார். 

‘பிஷப்புகளின் ராணி’ என்ற கவிதைத் தொகுப்பும் ‘வார்த்தைப்பாடு’ எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

டேவிட் கிராஸ்மெனின் ‘நிலத்தின் விளிம்புக்கு’, மார்க்வெஸின் ‘முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்’, இவால்ட் ஃபிளிஸரின் ‘மந்திரவாதியின் சீடன்’, ஆகிய நூல்களைத் தவிர மொழிபெயர்ப்புக் கதைகள் அடங்கிய ‘நீலநாயின் கண்கள்’ எனும் தொகுப்பும் வெளிவந்துள்ளது. 

1. மொழிபெயர்ப்பதற்கான ஒரு நூலை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

அயல்மொழி நூல்களை வாசிக்கையில் குறிப்பிட்ட ஒரு நூலைக் குறித்து ‘இந்த நூல் தமிழில் வந்தால் நன்றாக இருக்குமே’ எனத் தோன்றும். நண்பர்கள் வாசிக்கும் பிறமொழி நூல்களிலும் இதுபோன்ற தெரிவுகளைச் சொல்வார்கள். சர்வதேச அளவிலோ உள்ளுர் அளவிலோ அப்போதைக்குப் பேசுபொருளாக இருக்கும் ஒரு நூலையும் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இப்படியாகக் கவனத்துக்குள்ளாகும் நூல்களை என்னளவில் கூர்ந்துநோக்கி மொழிபெயர்க்கத் தேர்ந்துகொள்வேன். காப்புரிமை தொடர்பான விஷயங்கள் முக்கியத்துவம் பெற்றுவிட்ட இப்போதையக் காலகட்டத்தில் பதிப்பகங்கள் நூல்களின் மொழிபெயர்ப்புகளுக்குக் காப்புரிமை பெறுகின்றன. அவற்றிலிருந்து என்னிடம் மொழிபெயர்க்க கேட்கப்படும் நூல்களில் பிடித்தமானதைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பேன். எப்படியாயினும் ஒரு குறிப்பிட்ட நூலின் முக்கியத்துவம், தமிழிலக்கியத்தில் அது பொருந்தக்கூடிய இடம் ஆகியவற்றை உத்தேசித்து, அந்த அடிப்படையிலே மொழிபெயர்க்க நூல்களைத் தேர்ந்தெடுக்கிறேன்.  

2. உங்களுக்குப் பிடித்த இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்           (பிறரது மொழிபெயர்ப்பில்).

த.நா. குமாரஸ்வாமி மொழிபெயர்த்த ‘தாகூர் சிறுகதைகள்’ நான் வாசித்த முக்கியமானதும் பிடித்தமானதுமானதுமான மொழிபெயர்ப்பு நூல்களில் ஒன்று. நூற்றுச் சொச்சம் சிறுகதைகளை எழுதிய தாகூரின் பத்துக் கதைகள் மட்டும் அடங்கிய நூல் இது. தாகூரின் படைப்பிலக்கிய முயற்சிகளுள் முதன்மையானது அவரின் சிறுகதைகள் என்பதை தாகூரின் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கும் ஒருவர் எண்ணுவது திண்ணம். தனது காலத்து வங்க மண்ணின் மனிதர்களை வைத்துப் படைத்த இக்கதைகளில் தாகூர் புனைவின் சில உச்சங்களை அனாயசமாகத் தொட்டிருப்பார். ‘காபூல்காரன்’, ‘மனைவியின் கடிதம்’ போன்ற காலத்தால் அழியாத கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. வங்கமொழியைக் கற்று நேரடியாக இக்கதைகளைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கும் த.நா. குமாரஸ்வாமியின் மொழிபெயர்ப்பு அவ்வளவு இயல்பாக அமைந்திருக்கும். இந்த நூல் தரும் இன்னொரு வியப்பு என்னவென்றால், செல்வந்தக் குடும்பத்தின் அறிவுஜீவிப் பிள்ளையான தாகூரால் வங்கத்தின் கிராமப்புற மக்களது வாழ்வையும், சிறுநகரங்களின் நடுத்தர வர்க்கத்தினரது வாழ்வையும் எப்படி இவ்வளவு அசலாகப் படைத்துக்காட்ட முடிந்திருக்கிறது என்பதுதான். நவீன வங்கச் சிறுகதைகளை வாசிக்க முனையும் ஒருவர் தவறவிடக்கூடாத நூல் இந்த ‘தாகூர் சிறுகதைகள்’ நூல். 

இன்னொரு நூலும் சிறுகதைத் தொகுப்புதான். லத்தீனமெரிக்க எழுத்தாளர் யுவான் ரூல்ஃபோவின் ‘எரியும் சமவெளி’ நூல். எஸ்.  பாலச்சந்திரன் இந்தக் கதைகளை மொழிபெயர்த்துத் தொகுப்பாக்கியிருக்கிறார். (இப்போது இல. சுபத்ராவின் மொழிபெயர்ப்பில் இக்கதைகள் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கின்றன). இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டில் நடந்த மெக்ஸிகப் புரட்சியைத் தொடர்ந்த நெருக்கடியான காலகட்டமே இக்கதைகளின் பின்னணி. எனவே, இக்கதைகள் நம்பிக்கையின்மை, துரோகம், துயரம் ஆகிய அகக் காரணிகளாலும் வறட்சி, வெம்மை, சண்டை, தப்பியோடுதல் ஆகிய புறக் காரணிகளாலும் கட்டப்பட்டிருக்கின்றன. நம்பிக்கைகளழிந்த ஒரு நிலப்பரப்பின் நீட்சியாக அந்நிலத்தின் மனிதர்களும் மாறிவிட்டதான ஒரு தோற்றம் இக்தைகளினூடாக எழுந்துவருகிறது. சொல்லும் மொழியினாலும் நுட்பத்தாலும் புதிய வகைமாதிரிகளாகத் தம்மை அறிவித்துக்கொள்பவை ரூல்ஃபோவின் கதைகள். அதேநேரம் அவை அழகியல் ரீதியாகவும் வெற்றி பெறுபவை. இக்கதைகளின் இந்த அழகியல் தன்மையே இவற்றை ஒருவர் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுவதாக இருக்கக்கூடும். மார்க்கேஸ் போன்ற மேதைகளுக்கு முன்னோடியாக தென்னமெரிக்க இலக்கியத்திலும் அதற்கு வெளியிலும் யுவான் ரூல்ஃபோ பெற்றிருக்கும் இடம் ஏதோ தற்செயலானது அல்லது என்பதற்கு அவரது இந்தக் கதைகள் சாட்சியமாக இருக்கின்றன. முதன்மையான லத்தீனமெரிக்கப் படைப்புகளில் ஒன்று இந்த ‘எரியும் சமவெளி’ நூல். 

3. இப்போது நீங்கள் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூல்.    ( இப்போது வெளியிட வேண்டாம் என்று நினைத்தால் பதில் தர வேண்டியதில்ல ).

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய மொழிபெயர்ப்பில் வெளியாகி கவனம் பெற்ற ‘மந்திரவாதியின் சீடன்’ என்ற ஸ்லோவேனிய நாவலின் ஆசிரியர் இவால்ட் ஃப்ளிஸரின் இன்னொரு நாவலான ‘ஆன்ம வணிகன்’தான் இப்போது நான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நாவல்.‘மந்திரவாதியின் சீடன்’ போலவே இந்த நாவலின் நாயகனும் ஆன்மிகத் தேட்டத்துடன் வேற்றுநிலங்களில் பயணிப்பவன் என்றாலும் நாவல் வேறுபல தளங்களில் விரிவுகொள்கிறது. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லவியலும். நாவல் வெளிவரும்போது நிச்சயம் அது வாசகரை ஈர்ப்பதாக அமைந்திருக்கும். 

0

கணேஷ் ராம்

கே.கணேஷ் ராம் : அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். தமிழ் இலக்கியச் சூழலில் கடந்த சில வருடங்களாக சிறந்த மொழிபெயர்ப்பு படைப்புகளை அளித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த எழுதிய “சுழலும் சக்கரங்கள்” (Spinning Gears -ரியுனொசுகே அகுதாகவா) சிறுகதைத் தொகுப்பு சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதைப் பெற்றது.

1. மொழிபெயர்ப்பதற்கான ஒரு நூலை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? 

மொழிபெயர்ப்பதற்கான பிரதிகளாக நான் பெரும்பாலும் வடிவம்/ உத்தி சார்ந்து புதுமைகளைக் கொண்டிருக்கும் பிரதிகளை தேர்ந்தெடுக்கிறேன். 

கதை சொல் முறையில் பல்வேறு சாத்தியங்களை உள்ளடக்கிய புனைவுகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. உனைவின் வெவ்வேறு வடிவங்களை பரிணாமங்களை -பரிசோதனை முயற்சிகளை-நிகழ்த்திக் காட்டும் கதை சொல் முறையை கையாளும் புனைவெழுத்தாளர்களை மொழிபெயர்ப்பதில் கவனம் செலுத்துகிறேன். 

இத்தகைய புனைவுகள் வாசகர்களின் பங்கேற்பையும் கோரு வதாக உள்ளன. அ நேர்கோட்டு கதைகள் , குறுங்கதைகள் ஆகியவற்றை தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறேன். 

கல்குதிரை யில் வெளிவந்து நூல்வனம் வெளியிட்ட  ” சுழலும் சக்கரங்கள்” எனும் என் முதல் மொழிபெயர்ப்பு தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அகுதாகவாவின் ” ஒரு மூடனின் நாட்குறிப்பு” என்ற கதையை எடுத்துக்காட்டாக கூற விரும்புகிறேன். கதை சொல்லி தன் வாழ்வின் நிகழ்வுகளை ஐம்பது புனைவுத்துண்டுகளாக அடுக்கியிருக்கிறார்.  கதை சொல்லி தன் வாழ்வையே சிறு சிறு துண்டுகளாக ( Fragments ) கலைத்துப் போட்டு புனைவாக்குகிறார். இத்தகைய நுண் வடிவங்கள் உடைய ( microforms) புனைவுகளையே நான் மொழி பெயர்த்து வருகிறேன். 

இத்தகைய பரீட்ச்சார்த்தங்களும் பரிசோதனை கூறுகளும் உடைய புனைவுகளை மொழிபெயர்க்கும் போது நம் இலக்கியத்தில் இதுவரை புழக்கத்தில் இல்லாத புதிய புனைவு மொழிகளையும் உத்திகளையும் மொழிபெயர்ப்பின் வாயிலாக அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவாகவும் அமைகின்றன. 

சமீப காலமாக  குறுங்கதைகள் ( Micro Fiction) எனக்கு இத்தகைய புனைவு வடிவங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றன. 

ஒரு பக்க கதைகள்  முதல் ஒரு பத்தி கதைகள் வரை எண்ணற்ற குறுங் கதைகளை மொழிபெயர்த்து வருகிறேன். 

மேலும் கடந்த ஆண்டு நூல்வனம் பதிப்பகம் வெளியிட்ட ” நடமாடும் நிழல்” தொகுப்பை தமிழில் குறுங்கதைக்கான முதல் பிரத்தியேக மொழிபெயர்ப்பு தொகுப்பாக அடையாளம் காணலாம். 

புனைவு வகைமைகளின் ( Genres of Fiction) எல்லைகளை உடைத்து கதை சொல் வடிவங்கள் ஒன்றோடு ஒன்று முயங்கி வகைமைகளைக் கடந்து ( crossing the boundaries of Genres) இன்னதென்று வகைப்படுத்த இயலாத  பிரதிகளையே தற்போது மொழி பெயர்த்து வருகிறேன். 

2. உங்களுக்குப் பிடித்த இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்? 

1. போர்ஹே கதைகள் , பிரம்மராஜன். 2002, சினேகா பதிப்பகம். 

2.  உருமாற்றம், பிரான்ஸ் காஃப்கா, ஆர். சிவகுமார், தமிழினி பதிப்பகம்.

3. இப்போது நீங்கள் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூல்? 

        ஆகுதாகவாவின் குறுங்கதைகளை  தற்போது மொழிபெயர்த்துள்ளேன். மேலும் அவரது குறு நாவல் ஒன்றை மொழியாக்கம் செய்து வருகிறேன்.

லதா அருணாச்சலம்

லதா அருணாச்சலம் தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், கட்டுரையாளர். ஆப்ரிக்க இலக்கியத்தை தமிழில் அறிமுகம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

அபுபக்கர் ஆடம் இப்ராகிமின் ‘தீக்கொன்றை மலரும் பருவம்’, அப்துல் ரசாக் குரானாவின் ‘சொர்க்கத்தின் பறவைகள்’, டிமிட்ரி வெர்கஸ்டின் ‘பிராப்ளம்ஸ்கி விடுதி’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்துள்ளார். ‘ஆக்டோபஸின் பேத்தி’, ‘ஆயிரத்தொரு கத்திகள்’ ஆகியன மொழிபெயர்ப்புக் கதைத் தொகுதிகள். 

  1. மொழிபெயர்ப்புக்காக ஒரு நூலை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்

ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு மொழிபெயர்ப்பாளரின் ஆர்வம், தேடல், மூலநூல் குறித்த பரந்த வாசிப்பு, நூலின் மூலமொழி, மற்றும் இலக்கு மொழியில் மொழிப்பெயர்ப்பாளரின் புலமை,ஆகியவை முக்கியமான காரணங்களாக அமைகின்றன. அவை மட்டுமின்றி மூலநூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கதைக்களன், அதன் பண்பாட்டு மாற்றங்கள், ஆசிரியரின் நோக்கம் குறித்த அடிப்படைப் புரிதல் போன்றவற்றையும் ஆய்ந்தறிதல் அவசியம். நான் பல வருடங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வாழ்ந்ததால் அந்நாட்டு மக்களின் வாழ்வியல், அவர்கள் பண்பாடு, இலக்கிய வரலாறு,மொழிப் பயன்பாடு போன்றவற்றின் மீது நேரடிப் பரிச்சயம் கொண்டிருந்தேன்..அதனுடன் இயல்பாகவே இலக்கியம் மற்றும்  எழுத்தின்பால் கொண்டிருந்த ஆர்வத்தாலும் இந்த மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டேன். என்னுடைய முதல் மொழிபெயர்ப்பு நாவல் தீக்கொன்றை மலரும் பருவம் பதிப்பாளரின் தேர்வாக இருந்த போதும் அது மகிழ்வுக்குரிய வகையில் எனது தேர்வாகவும் இருந்தது இனிய தற்செயல்.

 இருப்பினும் மொழிபெயர்ப்பாளர் விரும்பும் அனைத்துப் புத்தகங்களையும் அவர் நேரடியாக தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க முடியும் என்ற சூழல் நடைமுறையில் இல்லை என்றே கூறலாம். இதற்கு முக்கிய காரணம் காப்புரிமை. சில நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மற்றும் காப்புரிமை தேவையற்ற பழமையான செவ்வியல் நூல்கள் போன்றவற்றை மொழிபெயர்ப்பதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் சமகால இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க, அவற்றின் காப்புரிமை பெறுவது மிக அவசியம். சில வேளைகளில், மொழிபெயர்ப்பாளர் விரும்பும் நூலின் காப்புரிமை பெற இயலாத நிலை அல்லது அதிகக் காப்புரிமைத் தொகை கோரப்படுவதாலும் விருப்பமான நூலை மொழிபெயர்ப்பாளர் தேர்வு செய்ய இயலாமல் போவதுண்டு. 

தற்போது பதிப்பகங்கள் மொழிபெயர்ப்பாளர்களின் தேர்வுகளை முன்னிறுத்தி, அதன் காப்புரிமையைப் பெற்றுத் தர முயல்கிறார்கள். பன்னாட்டு புத்தக சந்தைகள் மூலம் புதிய நூல்களின் காப்புரிமை பெற்றுத் தரப்படுவதால், மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருப்பமான நூல்களை மொழிபெயர்க்கும் வாய்ப்பு ஓரளவு கிடைக்கிறது. இதுவரை வெளியான மற்றும் வெளிவரவிருக்கும் எனது மொழிபெயர்ப்பு நாவல் அனைத்தும் பதிப்பாளர்கள் காப்புரிமை பெற்று வழங்கியவையே. ஆனால், அவர்கள் வழங்கும் நூல்களிலிருந்து குறிப்பிட்ட நூலைத் தேர்வு செய்யும் உரிமையை நான் பணி மேற்கொண்ட பதிப்பகங்கள் எனக்கு அளித்தன.  தற்போது நான் மொழிபெயர்த்து கொண்டிருக்கும் சிமாமந்தா அடிச்சியின் Half of a Yellow Sun எனது விருப்பத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதிப்பகத்தார் அதன் காப்புரிமை பெற்றுத் தந்ததும் அதை மொழிபெயர்ப்பதும் மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.

எனது மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புகளில் உள்ள கதைகளில் சிலவற்றைத் தவிர மற்ற அனைத்துச் சிறுகதைகளும் என் தேர்வாகவே இருக்கின்றன. இதன் காரணமாக  எனது ரசனைக்கேற்ப ஆப்பிரிக்கச் சிறுகதைகள் மற்றும் உலகச் சிறுகதைகள் தொகுப்புகளை மொழிபெயர்க்கும் வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொண்டேன், . இப்படிக் கதைகளைத் தேர்வு செய்வதென்பது எனது நேரம் மற்றும் நீண்ட வாசிப்பைக் கோரக்கூடியது என்றாலும், அது எனக்குப் படைப்பூக்கத்துக்கு இணையான மகிழ்ச்சியை அளிக்கிறது.

என்னுடைய மொழிபெயர்ப்பு தேர்வுகள் பெரும்பாலும் சமகால இலக்கியத்தை ஒட்டியே உள்ளன. அதிக வாசகர்களால் அறியப்படாத ஆப்பிரிக்காவையும், அதன் பண்பாடுகளையும், தொன்மங்களையும் பிரதிபலிக்கும் கதைகளை வாசகர்களுக்கு அளிப்பது எனது விருப்பம் .அதே நேரத்தில், புதிய கூறுமுறைகளைக் கொண்ட வடிவங்கள், அதீதப் புனைவுச் சாத்தியங்கள், நடைமுறை வாழ்க்கையின் சமூக-பொருளாதார மற்றும் உளவியல் சிக்கல்களைப் பேசும் சிறுகதைகளும் நாவல்களும் எனது தேர்வுகளில் இடம்பிடிக்கின்றன

பிடித்த இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்.

தமிழில் மொழிபெயர்ப்பு பணிக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. பாரதியார், புதுமைப்பித்தன், க.நா.சு போன்ற முன்னோடிகள் முதல் இன்றைய சமகால மொழிபெயர்ப்பாளர்கள் வரை பலர் மொழியாக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்ளவும், பன்னாட்டு இலக்கியத்தை ஆராயவும், காலப்போக்கில் பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களை நான் ஒரு வாசித்த போது ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலும் புதிய நாட்டின் கலாச்சாரம், அரசியல் பின்னணி, தனிமனித உணர்வுகள், மக்களின் அன்றாட வாழ்க்கை, பெண்களின் நிலை மற்றும் காலத்தால் நிகழ்ந்த மாற்றங்கள் போன்றவற்றை வெளிப்படுத்தும் ஒரு சாளரமாகத் தோன்றியது.

இந்த அணுகுமுறையில், என்னைக் கவர்ந்த மொழிபெயர்ப்பு நூல்களில் ஒன்று எழுத்தாளர் அமரந்தா மொழிபெயர்த்த “சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்” என்ற லத்தீன் அமெரிக்கச் சிறுகதைத் தொகுப்பு. பெரும்பாலும் மேற்கத்திய நாடுகள், ரஷ்ய, ஜப்பானிய, அமெரிக்க இலக்கியங்களே அதிகம் மொழிபெயர்க்கப்பட்டு வந்த காலகட்டத்தில் நாம் அதிகம் அறிந்திடாத எழுத்தாளர்களையும் நிலப்பரப்பையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்,காப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ், போர்கேஸ்,ஹூலியோ கொர்த்தஸார்,ரூல்ஃபோ, இஸபெல் அயந்தே உள்ளிட்ட பல லத்தீன் அமரிக்காவின் முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கியது இந்நூலில் அந்நாட்டு மாய யதார்த்த எழுத்து வகைமை,சமூக அரசியல் விமர்சனம், வாழ்க்கை, மரணம், நம்பிக்கை போன்றவை கதைகளின் மையக்கருவாகப் எழுத்தாளப்பட்டிருக்கின்றன. ஸ்பானிஷ் மொழியின் சிக்கலான உச்சரிப்பு, அந்த நாடுகளின் அரசியல் கோட்பாடுகள் ஆகியவற்றை இலக்கியத் தரத்துடன் செறிவான மொழியில் மொழிபெயர்த்துள்ளார் அமரந்தா. நீண்ட காலமாக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வரும் இவரது அர்ப்பணிப்பும் அனுபவமும் இவர் கையாளும் மொழியிலும் தேர்வு செய்யும் கதைகளிலும் காணப்படும்.ஒரே தொகுப்பில் இவர் தேர்ந்தெடுத்த கதைகளின் மூலம் ஒரு மாபெரும் நிலப்பரப்பின் அனைத்து பண்பாட்டுக் கூறுகளையும் இலக்கியச் செழுமையையும் நமக்கு அறிமுகம் செய்யும் இந்நூல் எப்போதும் என் விருப்பத்துக்குரிய மொழியாக்கப் படைப்பாகும்.

எனது இரண்டாவது தேர்வாக நான் குறிப்பிட விரும்புவது மோ. செந்தில்குமார் மொழிபெயர்ப்பில் வெளியான ஆராச்சார் என்ற நூலாகும். இது மலையாள மொழியில் கே.ஆர். மீரா இதே தலைப்பில் எழுதிய நூலின் தமிழாக்கம். இந்த நாவலின் கதைக்களன் கல்கத்தா மற்றும் கதையின் கலாச்சாரப் பின்னணி வங்காளம். ஒரு பெண்ணின் பயணம் தொன்மங்கள், வரலாறு மற்றும் ஒரு குடும்பத்தின் வாயிலாக சமூகத்தில் நிகழும் தாக்கங்களையும் மாற்றங்களையும் தனது வலுவான கதை கூறும் முறையால் சிறப்பாக எழுதியுள்ளார் மீரா. 400 ஆண்டுகால தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணியிலிருப்பவர்களையும் அவர்களின் வழித்தோன்றலின் இறுதி வாரிசாக வரும் சேதனாவின் வாழ்க்கை உரையாடப்படுகிறது.ஆணாதிக்கச் சமுதாயத்தின் எதிர்நிலையில் நிற்கும் அடையாளமாகிறாள் சேதனா.பெண்ணியமும் நீதியும் பாலின சமத்துவமும் இக்கதையின் மையக் கருதுகோள்களாக  நிறுவப்பட்டுள்ளன. அதிகம் பேசப்படாத கதையை எடுத்துக் கொண்டாலும் இதனூடாக உலவும் சமூக அக்கறையும் கடினமான தனது கதைத் தேர்வினை மிக அழகிய கவித்துவமான மொழியில் கூறியுள்ளார் கே.ஆர். மீரா. மூலமொழியின் அழகு சற்றும் குலையாமல் தேர்ந்த சொற்களோடு அதே கவித்துவத்துடன் தொன்மை சார்ந்த அடுக்குகளின் விளக்கங்கள் அனைத்தையும் தமிழில் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார் மோ.செந்தில் குமார். கோட்பாடுகள் சார்ந்த ஆய்விதழின் முதன்மை ஆசிரியராக இருப்பதால் கூடுதல் பொறுப்புடனும் கச்சிதத்துடனும் இந்த மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. அண்மையில் வெளியான மொழிபெயர்ப்பு நூல்களில் என்னைக் கவர்ந்ததில் ஆராச்சார் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது, 

மொழிபெயர்ப்பு என்பது வெறும் மொழி மாற்றம் அல்ல, அது ஒரு பண்பாட்டு பரிமாற்றம். ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலின் வாயிலாக நாம் புதிய உலகங்களை கண்டுபிடிக்கிறோம்; புதிய யூகங்களை அணுகுகிறோம்;புதிய மனிதர்களை அறிந்தும் புரிந்தும் கொள்கிறோம்.

தற்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூல்

புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளர் சிமமந்தா அடிச்சியின் நாவல் Half of A Yellow Sun மொழிபெயர்ப்பை நிறைவு செய்திருக்கிறேன். புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் சிமாமந்தா ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான எழுத்தாளர். இந்தப் புத்தகத்தின் மையக் கருதுகோளாக நைஜீரியா உள்நாட்டு இனப்போரை எடுத்திக் கொண்டாலும் அரசியல், பெண்ணியம் , பின் காலனித்துவ விளைவுகள், சிதையும் பொருளாதாரம் மற்றும் தனிமனித உணர்வுகள் ஆகியவற்றையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியிருப்பார். போர் என்பதே மனித குலத்தின் தோல்வி என்பதை இந்த வலி மிகும் நாவல் வலுவாகச் சொல்லிச் செல்கிறது. இந்த நாவலை மொழிபெயர்த்தது எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது. இந்த நீண்ட நாவலை முடித்தவுடன் எனது விருப்பமாக சில சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வருகிறேன்.

0

மோ செந்தில்குமார்

மேட்டுப்பாளையம் அரசு சுலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிவரும் இவர், தமிழாய்வுச் சிந்தனைக்கு உரைகல்லாக விளங்கக்கூடிய ‘பெயல்’ ஆய்விதழின் முதன்மை ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறார். மலையாளச் சிறுகதைகள், கவிதைகள் பலவும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கே ஆர் மீராவின் ஆக்கங்கள்

ஆராச்சார், கபர், யூதாஸின் நற்செய்தி, மீராசாது, தேவதையின் மச்சங்கள் கருநீலம், சூரியனை அணிந்த ஒரு பெண்,

  1. மொழிபெயர்ப்புக்கான நூலை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்? 

மொழிபெயர்ப்புகளின் மீதான ஒவ்வாமையில்தான் நான் மொழிபெயர்ப்புப் பணிக்குள் நுழைந்தேன்.  எவருக்கும் தனக்குத் தெரிந்த இன்னொரு மொழியில் இருந்து தனது தாய்மொழிக்கு மொழிபெயர்த்து வரும் நூல்களின்மீது ஓர் அலாதி பிரியம் இருக்கும்.  எனக்கு அப்படித்தான்.  மூல மொழியில் வாசித்த சில முக்கியமான, வரலாற்றில் வாழும் படைப்புகளை மொழிபெயர்ப்பில் வாசித்தபோது மனச்சோர்வுதான் மிஞ்சியது.  மூலத்தின் உயிர்ப்பு காணாமல் போயிருந்தது. இலக்கியத்துக்கே உரிய மர்ம முடிச்சுகளை இவர்களே அவிழ்த்தும் குலைத்தும் இரண்டாம் நிலை அர்த்தங்களைத் தகர்த்தும் தட்டையாக்கியிருந்தனர். வாசகர் தாமும் சேர்ந்து எழுதிக்கொள்வதற்கு இடமின்றிச் செய்திருந்தார்கள்.  மலர் மணக்கிறது.  மலரின் இதழிலா அதன் மகரந்தம் உள்ள மையத்திலா எந்த இடத்தில் இருந்து மணம் வருகிறது என்று தெரியாது மலரின் எல்லாப் பக்கங்களிலும் அது மணக்கும்.  அதுபோன்று ஒரு மொழிபெயர்ப்பும் மூலத்தின் வாசனை குறையாது இருக்கவேண்டும் என்பது எனது பேராசை.  

மூலமொழி தெரியாவிட்டாலும் ஒரு மொழிபெயர்ப்பு தட்டையாகவோ வாசிப்புக்கு நெருடலாகவோ இருந்தால் அது சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை ஒரு தேர்ந்த வாசகர் உணர்ந்துகொள்வார்.  அவருக்கு அந்த மூல மொழி தெரியவேண்டியதில்லை.  நான் அறியாத மொழிகளில் இருந்து வந்தவற்றை வாசித்துப் பெற்ற அனுபவம் இது.  உங்களுக்கும் அப்படித்தானா என்று எனக்குத் தெரியாது.

மூலத்துக்கு நெருக்கமான ஒன்றைத் தந்துவிடவேண்டும் என்ற அக்கறையுடன் மொழிபெயர்ப்புச் செய்பவர்கள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள்.  அவர்கள் மதிப்புடையவர்கள்.  படைப்புக் குறித்த திறனாய்வு போன்றே மொழிபெயர்ப்புக் குறித்த திறனாய்வும் தமிழில் பெருகுவதற்கு விடவில்லை.  அப்படித் திறனாய்வு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை படைப்பிலக்கியம் போலவே.   நட்புகளுக்குச் சொரிந்து விடுவதாக மட்டுமே திறனாய்வு என்ற பெயரில் குழல் ஊதுகின்ற காட்சிகள்தான் அரங்கேறுகின்றன.   இது எந்த ஒரு மொழிக்கும் நல்ல போக்கன்று. 

  1. உங்களுக்குப் பிடித்த இரண்டு மொழிபெயர்ப்புகள். 

எனக்குப் பிடித்த இரண்டு மொழிபெயர்ப்புகள்.  இது ஒருவகையில் தப்பித்தல் செயல்பாடும்கூட.  முதலாவது, என்னை மொழிபெயர்ப்புக்கு ஈர்த்ததும் மலையாள இலக்கியத்துக்குள் என்னை ஈர்த்ததுமான கவிஞர் சிற்பி அவர்களின் அக்னிசாட்சி மொழிபெயர்ப்பு.  லலிதாம்பிகா அந்தர்ஜனம் அவர்கள் எழுதிய ஒரே நாவல்.  சுதந்திர பேராட்ட காலத்தில் நம்பூதிரி குடும்பங்களில் பெண்களின் நிலையை மிக நுணுக்கமாக எடுத்துரைக்கும் சிறிய நாவல்.  தங்கம் என்ற கதைப்பாத்திரம் வழியாக எடுத்துரைக்கப்படும் இக்கதை கவித்துவம் நிறைந்தது.  அதே கவித்துவத்துடன்  கவிஞர் சிற்பி அவர்கள் தனது மொழி ஆளுமையை நன்கு வெளிப்படுத்திச் செய்த மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு அது.   மூலமொழியில் சாகித்திய அகாதெமி விருதுக்கு உரியதாக ஆனது போன்றே மொழிபெயர்ப்பிலும் விருதுக்கு உரியதாக ஆனது.  கங்கையின் பேரழகுடன் தொன்மச் சித்திரமாகத் தொடங்கும் அந்தக் கதையின் பிரவாகத்தைத் தமிழில் ஆற்றொழுக்காகக் கொடுத்துள்ளார்.   அவர் தவறிய சில இடங்களையும் அடையாளம் கண்டு, மொழிபெயர்ப்பு ஒப்பீட்டு ஆய்வுக்கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டி எழுதியுள்ளேன்.  மிக அரிதாக நேரும் இடறல்கள் ஏற்கத்தக்கனவே.  ஏனென்றால், மூலத்தை மூலமாக எவராலும் இன்னொரு மொழிக்குக் கடத்திவிட முடியாது. மூலமொழி எழுத்துக்கும் மொழிபெயர்ப்புச் செம்மைக்கும் நற்சான்றாய் அமைகின்றது அக்னிசாட்சி.

இரண்டாவது மொழிபெயர்ப்பு வேறு தளம் சார்ந்தது.  இதை இங்கு முன்வைப்பதிலும் ஓர் அரசியல் உள்ளது.   சாகித்திய அகாதெமி வெளியீடாக வந்துள்ள அமைப்புமையவாதம் பின் அமைப்பியல் மற்றும் கிழைக்காவிய இயல் என்ற நூல்.  இது, உருது மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளரும் திறனாய்வாளருமான கோபிசந்த் நாரங்க் அவர்கள் இந்தி மொழியில் எழுதியது.  எச். பாலசுப்பிரமணியம் அவர்களின் மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைத்துள்ள அரிய நூல்.  தமிழில் கோட்பாட்டு வறட்சி அதிகம்.  கோட்பட்டுப் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு தனது அறியாமையை அம்பலப்படுத்தி உரையாடுபவர்கள், கோட்பாடுகளே வேண்டாம் அவை எதற்கு, படைப்பு உயிர்ப்போடு இருந்தால் போதாதா என்று எந்தக் கோட்பாட்டையும் வாசிக்காமல் உரையாடுபவர்கள், அரைகுறையாகச் சிலவற்றைத் தெரிந்துகொண்டு உரையாடுபவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் நிறையவும் கோட்பாடுகளை நன்கு கற்றுத் தேர்ந்து தமது எழுத்தில் திறனாய்வில் கோட்பாட்டு ஒளியைப் பாய்ச்சுபவர்கள் மிக அரிதாகவும் உள்ள நிலம் இன்றைய தமிழ் நிலம்.  கலையா? கருத்தா? என்ற பழைய உரையாடல் குரல்கள் உங்களுக்குக் கேட்டால் அதற்கு நான் பொறுப்பன்று.  அந்த உரையாடலுக்குள் நான் செல்லவில்லை.   எப்படி ஓர் இலக்கியப் படைப்பாளருக்கும் திறனாய்வாளருக்கும் பரந்துபட்ட ஆழங்கால்பட்ட இலக்கிய வாசிப்பு இன்றியமையாததோ அதேபோன்று கோட்பாட்டு வாசிப்பும் இன்றியமையாதது என்பதை இந்த நூலை வாசித்தால் தெளிவு பெற முடியும்.  அவ்வளவு ஆழமான சிந்தனைகளின் கருவூலமாக இந்த நூல் விளங்குகிறது. மேலைத் திறனாய்வுக் கோட்பாடுகளோடு கீழைத்தேயப் படைப்புச் சிந்தனைகளையும்கருத்தியல்களாக வெளிப்படுத்தும் அரிய நூல் இது.   நான்கு பகுதிகளாக அமைந்த இந்த நூல் அமைப்புமையவாதத்தை ஐந்து அத்தியாயங்களிலும் பின் அமைப்பியலை ஆறு அத்தியாயங்களிலும் கீழைக்காவிய இயல் மற்றும் அமைப்புமையவாதச் சிந்தனைகளை இரண்டு அத்தியாயங்களிலும் இன்றைய நிலை குறித்து ஐந்து அத்தியாயங்களிலும் விரிவாக உரையாடுகிறது.  சசூர் மொழியியலில் ஏற்படுத்திய புரட்சி, இலக்கியப் புலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை நிகழ்த்திவந்துள்ள வரலாற்றையும் மாறிவரும் அறிவு மரபையும் ஒருசேர அறிந்துகொள்ளத் துணை புரியும் இந்த நூலை எச். பாலசுப்பிரமணியம் நன்றாக மொழிபெயர்த்துள்ளார்.  கோட்பாடுகளின் கலைச்சொற்களால் நிறைந்த, பல்வேறு சிக்கல்கள் நிறைந்த, சிந்தனைகளின் முட்டி மோதல்களால் நிறைந்த ஒரு பனுவலைத் தமிழுக்குத் தந்தது பெரும் சிறப்பு.  இந்த நூலைத் தொடர்ந்து விரிவான கோட்பாட்டு நூல்கள் பலவும் தமிழுக்கு வரவேண்டியது மிகப்பெரும் தேவை என்பதை மொழிபெயர்ப்பாளர்கள் உணர்வார்களாக.  அப்போதுதான் இலக்கிய ஆக்கம் மட்டுமன்று திறனாய்வுச் சிந்தனையும் கூர்மைப்படும் என்பது என் எண்ணம்.

நான் மொழிபெயர்க்கத் தெரிவு செய்யும் நூலைப் பொருத்தமட்டில், அந்த நூல் உரையாடும் களமும் கருத்தியலும் அது வெளிப்படுத்தும் அரசியலும் எனக்கு உடன்பாடா என்று பார்ப்பேன். அடுத்ததாக அது தமிழ் மொழிக்குத் தேவையா என்று சிந்திப்பேன்.  ஏற்கெனவே இங்கே எழுதித் தேய்ந்துபோன கருத்தொன்றை அது முன்வைக்குமாயின் தவிர்க்கிறேன்.  இங்கே இட்டு நிரப்பப்படாத இடைவெளிகளை நிறைவு செய்யுமாயின் ஏற்கிறேன்.  இறுதியாக, அந்த எழுத்தின் கலையும் மொழியும் எனது மொழிபெயர்ப்புத் தகுதி எல்லைக்குள் உள்ளதா என்று பார்ப்பேன்.   கலைத்தன்மை இல்லாத எழுத்தைத் தவிர்க்கிறேன்.  என்னால் மொழிபெயர்க்க முடியாத குறிப்பிட்ட வட்டார மொழியில் எழுதப்பட்டுள்ளனவற்றை மிகத்தவறாக மொழிபெயர்த்துவிடக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன்.  கே.ஆர். மீராவின் எழுத்து எனக்கு என்னையே மொழிபெயர்த்துக்கொள்வது போன்றதொரு உணர்வைத் தருவது.  அதனால் சலிப்பே வராமல் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன்.  வேறுவேறு களங்களில் அக்களங்களுக்கு உரிய நுட்பமான அறிவுத்திறனோடும் கலைநேர்த்தியோடும் எழுதப்படும் பெருங்கதையாடல்களை அதிரச்செய்யும் எந்தவொரு கலக எழுத்தும் என்னை ஈர்க்கும்.  மீரா அப்படித்தான் ஈர்த்தார்.  பெரும் எண்ணிக்கையிலான வாசகர்களுக்கு மீராவின் எழுத்து பிடித்திருப்பதும் ஒரு காரணம்.

  1. இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூல்.

தற்போது மொழிபெயர்த்துக் கொண்டிருப்பது மலையாளத்தில் எஸ். ஹரீஷ் எழுதிய மீசை நாவல்.  வெளிவந்த காலத்தில் மலையாளச் சமூகத்தில் பெரும் சலனத்தையும் ஆதிக்கச் சமூகங்களால் எழுத்தாளருக்குப் பெரும் நெருக்கடியையும் உண்டாக்கியதொரு எழுத்து இது..  

0

இல சுபத்ரா

இல. சுபத்ரா, தமிழக அரசின் கல்வித்துறையில் பணியாற்றுகிறார்.

மொழிபெயர்த்திருக்கும் நாவல்கள் – அமிதபா பக்சியின் ‘பாதி இரவு கடந்துவிட்டது’, அனா பர்ன்ஸ் ‘ஆயன்’ 

மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புகள் – அது உனது இரகசியம் மட்டுமல்ல, எரியும் சமவெளி ( யுவான் ரூல்ஃபோ )

  1. மொழிபெயர்ப்பதற்கான ஒரு நூலை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

காலங்காலமாகவே மொழிபெயர்ப்புகள் பல்வேறு காரணங்களுக்காகச் செய்யப்பட்டு வருகின்றன. இலக்கியம் மட்டுமன்றி அறிவியல், வரலாறு, தத்துவம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொழிபெயர்ப்பு ஒரு முக்கியப் பங்கு வகிப்பதிலிருந்து நாம் இதனை அறிந்துகொள்ளலாம்.

இலக்கிய மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை, க.நா.சு, பிரம்மராஜன், அமரந்தா உள்ளிட்டோர்கள் அயல்மொழி இலக்கிய உலகங்களின் நடப்புகளையும் பாய்ச்சல்களையும் தொடர்ச்சியாக நமக்கு அறியத் தருவதை நோக்கமாகவும் கடமையாகவும் கொண்டு மொழிபெயர்த்தனர். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் தொடங்கி தற்காலத்திய ஜெயமோகன் வரை சொந்தப் படைப்புகளைத் தீவிரமாக எழுதிவரும் இலக்கியவாதிகளும் அவ்வப்போது மொழிபெயர்ப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டதை நாம் காண்கிறோம். தான் ரசித்த ஒன்றை, தான் கண்டறிந்த ஒரு புதுமையை நம்மிடமும் பகிர்ந்துகொள்ளும் நோக்கமே அதற்குக் காரணமாக இருந்திருக்கும் எனக் கொள்ளலாம். இஃதன்றி பதிப்பாளர்களின் தேர்வுகளின் அடிப்படையிலும் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.

எனது இதுவரையிலான மொழிபெயர்ப்பு நாவல்கள் பதிப்பகத்தின் பரிந்துரையில் செய்யப்பட்டவையே. ஆனால் அந்த இரண்டு நாவல்களின் களமும் கருவும் எனக்கு உவப்பானதாகவும் சவாலானதாகவும் இருந்தன.

பாதி இரவு கடந்துவிட்டது நாவலில் இந்திய சுதந்திர காலகட்டத்தில் ஜமீன்தார்கள் கையிலிருந்து வணிகர்கள் கைக்கு அதிகாரம் மாறிய சமூக மாற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களும் தாழ்த்தப்பட்டவர்களும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து முன்னேறுவது ஊடுபாவாக வந்துள்ளது. இதோடு கலையானது எளிய மக்களுக்கானதாகவும் இருக்கவேண்டும் என ராமாயணத்தை துளசிதாசர் அவதி மொழியில் எழுதுவதும் ஒரு கருப்பொருளாய் உள்ளது. ஆயன் நாவலில், பதின்பருவப் பெண்களை வன்தொடரல் எந்த அளவிற்கு உளச்சிக்கலுக்குள் தள்ளும் என்பது மையக் கருவாக உள்ளது. போர்களால் உயிர்கள் துச்சமாவதும், அரசாங்கமே ஒரு மாபெரும் கண்காணிப்புக் கருவியாய்ச் செயல்படுவதும் அழுத்தமாய்ச் சொல்லப்பட்டுள்ளது- இந்த இரண்டு நாவல்களில் இந்தப் பரிமாணங்கள் எனக்கு உவப்பானவையாக இருந்தன. இந்த இரண்டு நாவல்களிலுமே வரும் நீண்ட வாக்கியங்களும் பத்திகளும் எனக்கு மிகச் சவாலானதாக இருந்தன. இவையெல்லாம் சேர்ந்துதான் இந்த நாவல்களை நான் மொழிபெயர்க்கத் துணைநின்றன.

நான் மொழிபெயர்த்துள்ள சிறுகதைகளின் பொது அம்சத்தை அவதானிக்க முயன்றா அவற்றில் பெரும்பாலானவை பெண்களின் படைப்புகளாக உள்ளன. ஸோஃபியா ஸமடார், இஸபெல் அயாந்தே, நடாலி டயாஸ், வில்லா காதார், ஃபிளானெரி ஓ கார்னர், ஆலிஸ் மன்றோ, ஜினா பெரியல், கார்மன் மரய மஷாதோ என அவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளார்கள். காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாறு என் மொழிபெயர்ப்பில் வரவுள்ளதையும் இந்த இடத்தில் குறிப்பிடலாம். இந்தப் படைப்புகள் அனைத்திலும் உணர்வுபூர்வமான தருணங்களை நிதானமாகவும் அறிவியல்பூர்வமாகவும் கதைகளின் பெண்கள் கையாள முயலும் ஒரு தொனியும் இருப்பதையும் நாம் காண இயலும். மேலும் அவற்றில் சூழலியல் சார்ந்த அக்கறையும் வெளிப்படுகின்றன.

இங்ஙணம் சமகால சமூக மாற்றங்களையும் அரசியலையும் பேசும் படைப்புகளோடு அவ்வப்போது தஸ்த்யேவ்ஸ்கி, பால்ஸாக், ப்ரௌஸ்ட், ரூல்ஃபோ, ரில்கே போன்றவர்களையும் மொழிபெயர்க்கவே செய்கிறேன். மரணம், காமம், பசி உள்ளிட்ட அடிப்படை அகச்சிக்கல்களை இவர்கள் கையாளும் நுட்பங்களும் அதில் இழையோடும் பகடியும் தரும் வாசிப்பனுபவம் அலாதியானதல்லவா! அவற்றை மொழிபெயர்ப்பதும் அத்தகையதே. 

புனைவு, அபுனைவு, சமகாலப் படைப்புகள், செவ்வியல் படைப்புகள் என எல்லா வகையிலும் தொடர்ந்து மொழிபெயர்த்துக் கொண்டிருக்கவே விரும்புகிறேன். க.நா.சு, பிரம்மராஜன் உள்ளிட்டோர் வழியில் உலகெங்கும் நிகழும் புதிய புதிய இலக்கியப் பாய்ச்சல்களை தமிழுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதும் ஓர் அவா. அதில் பெண்களின் படைப்புகளுக்கும் அரசியல் பிரதிகளுக்கும் அதிக இடம் இருக்க வேண்டும்.

  1. பிடித்த மொழிபெயர்ப்புகள்
  1. நிலவளம் ( The Growth of the Soil )  நாவல், மூல ஆசிரியர் – நட் ஹாம்சன், தமிழில் – க.நா.சு
  2. மானக்கேடு (Disgrace)  நாவல், மூல ஆசிரியர் – ஜே எம் கூட்ஸி தமிழில் ஷஹிதா
  1. இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூல்

சர்வபள்ளி கோபாலின் கட்டுரைகள் தொகுப்பான ‘Imperialists, Nationalist, Democrats’ நூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திற்காக.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “ஆறு மொழிபெயர்ப்பாளர்கள், மூன்று கேள்விகள்”

Leave a Reply to sundararajanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.