வ. அதியமான் கவிதைகள்

கடைசி தீக்குச்சியில் ஒளிரும் காடு 

ஏன்
இத்தனை தயங்குகிறாய்?
ஏன்
இப்படி நடுங்குகின்றன
உன் விரல்கள்?

உன் கையில் எஞ்சியிருக்கும்
கடைசி தீக்குச்சிதான்
நான்
அதனால் என்ன?

எரிவதற்கென்றே பிறந்திருக்கிறேன்
இனியும் பொறுத்திருக்க பொழுதில்லை
இக்கணமே கொளுத்தி
எரியவிடு
என்னை

என் மூதாதையர்கள்
விட்டுச் சென்ற
ஒளி நடனத்தை
நானும்
தொடர்ந்து சென்று
நிறைவு செய்தாக வேண்டும்

இந்த நடுச்சாமத்தில்
எவ்வளவு நேரம் நடனமாடுவேன்
என்பது
உன்னை போலவே
எனக்கும் தெரியாது

என் ஒளி நடனம்
முடியும் நேரத்திற்குள்
இந்த பெருங்காடு
எத்தனை எத்தனை இலைகளை
உன் கண்களுக்கு காட்டுகிறதோ
அத்தனை அத்தனை பிறவிகள்
மட்டுமே
உனக்கு

ம்ம்ம்ம்…
சீக்கிரம் கொளுத்து


இரு வீட்டிற்கும் ஒரே வாசல்

உன் கண்களின்
இருக்கும் உலகத்திலிருந்து
இல்லாத உலகத்திற்கு
நழுவிச் சென்றுவிடுவதற்கு
அந்தரத்தில்
அக்கணத்தில்
எழும்
ஒரு குட்டி புள்ளிதான்
வாசல் திறக்கிறது

அதனால்

அந்த குட்டியூண்டு புள்ளியாக
ஆகிவிடத்தான்
அந்த பறவை
அந்தரத்தில்
அப்படி
பறக்கிறது
பறக்கிறது
பறக்கிறது
பறந்து கொண்டே இருக்கிறது


இந்த பூமிக்கும் ஒரு மூக்கு கண்ணாடி மாட்டிவிட விரும்புகிறோம்

எங்கள் வீட்டு நடுக்கூடத்தில்
தடித்த மூக்கு கண்ணாடி போட்டுக் கொண்டு
தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும்
பெயர் கூட தெரியாத
அந்த புதிய மனிதர் யார்?

எதையாவது வாசிக்கும் போதும்
குறிப்பாக எழுதும் போதும்
மட்டுமே
தன் மூக்கு கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொள்வார்
எங்கள் அப்பா

மூக்கு கண்ணாடி போட்டிருக்கும்
கொஞ்சம் நேரம் வரையில்
அவர்
எங்கள் அப்பா அல்ல
அதனால்
அந்த கொஞ்சம் நேரம் வரையில்
நாங்கள்
அவருடைய குழந்தைகளும் அல்ல
அதனால்
அந்த கொஞ்சம் நேரம் வரையில்
நாங்கள்
தகப்பன் அற்றவர்கள் ஆகிறோம்
அதனால்
அந்த கொஞ்ச நேரம் வரையில்
அவர்
குழந்தைகள் அற்றவர் ஆகிறார்

அத்தனை பெரிய அப்பாவை
அப்பா அல்லாமல் ஆக்கிவிட
ஒரு சின்னஞ்சிறு மூக்கு கண்ணாடியால்
முடிகிறது

என்றால்……


நாம் வீடு கட்டுவதற்கு இப்போது உடனடியாக தேவைப்படுவது ஒரு சிறு மழை மட்டும் தான்

உன்னிடம்
இரண்டு உள்ளங்கைகள் இருக்கின்றன
என்னிடமும்
இரண்டு உள்ளங்கைகள் இருக்கின்றன

குறுக்கும் நெடுக்குமாய் கோர்த்து
உயர தூக்கிப் பிடித்திருக்கும்
நான்கு உள்ளங்கைகள்
போதாதா?

சுவர்களும் அல்ல
கதவுகளும் அல்ல
ஜன்னல்களும் அல்ல
உன் தலைக்கு மேலாக விரிந்திருக்கும் வானத்தை
இல்லாமல் ஆக்கும்
சின்னஞ்சிறு கூரை தான்
ஒரு வீட்டை எழுப்பித் தருகிறது


இந்த உலகை உடைப்பதற்கு ஒரு சரியான துள்ளல் போதும்

ஒரே ஒரு குட்டி மீனின்
துள்ளலில்
அத்தனை பெரிய கோவில் கோபுரம்
சில்லு சில்லாய்
தெறித்து உடைகிறது
உனக்கே இது நியாயமாகப் படுகிறதா
தீர்த்த குளமே?


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “வ. அதியமான் கவிதைகள்”

Leave a Reply to கவிதாCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.