கண்ணீரில் சிரித்து வாழ்தல்

திரைப்படங்களில் நகைச்சுவை என்பது பெரும்பாலும் உடல் சார்ந்த சேட்டைகளையும், சரியான தருணங்களில் வெடியாக வரும் வசனங்களையும் நினைவூட்டுகிறது. சட்டெனச் சிரிக்கவைக்கும் இந்த வகை நகைச்சுவை, சில நேரங்களில் இரண்டாவது முறை காணும்போதே தன் கவர்ச்சியை இழந்துவிடுகிறது. ஆனால், காலத்தையும் கலாச்சாரத்தையும் கடந்து நிலைக்கும் நகைச்சுவை என்பது வாழ்வின் உண்மையான தருணங்களை வெளிப்படுத்துகிறது.

நகைச்சுவைக்காக மட்டுமே படைக்கப்படாத படைப்புகளில், நகைச்சுவை என்பது ஒரு கம்பீரமான விருந்தில் அழைப்பில்லாமல் நுழையும் விருந்தாளியைப் போன்றது – ஓரளவு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அது ஒரு வகையில் அவசியமானதாகவே இருக்கிறது. இது ஒரு பதற்றமான சூழலில் ஒரு பாத்திரம் நேரம் காலம் புரியாமல் வைக்கும் சங்கடமான குறிப்பாகவோ, அல்லது கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சூழ்நிலையின் நகைமுரணாகவோ இருக்கலாம். இத்தகைய படைப்புகளில் நகைச்சுவை, நமது குறைபாடுகள், பாதுகாப்பின்மை உணர்வுகள், முரண்பாடுகள் என மூன்றையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாகச் செயல்படுகிறது.

நாம் வாழ்க்கையில் எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும், நம்மைச் சுற்றி எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பது போன்ற கருத்தினை இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருக்கிறோம். ரால்ப் வால்டோ எமர்சனோ தி காமிக் என்ற தனது நகைச்சுவை பற்றிய நுட்பமான கட்டுரையில் “யதார்த்தம் பெரும்பாலும் நமக்கு ‘இரண்டுங்கெட்டான்’ நிலை என்கின்ற திரிசங்கு நிலையை வழங்குகிறது” என்கின்றார். இந்தத் திரிசங்கு நிலை ஒழுங்கிற்கான பாவனைக்கும், ஒழுங்கெனும் உண்மைக்கும் இடையேயான அதிர்ச்சியூட்டும், அதே நேரம் சில நேரங்களில் இனிமையான முரண்பாடு எனச் சொல்லப்படுகின்றது.

நகைச்சுவை இந்தத் திரிசங்கு நிலையிலிருந்துதான் உருவாகிறது என எமர்சன் வாதிடுகிறார். நமது உயர்ந்த இலட்சியங்களுக்கும், மனித வாழ்வின் குழப்பமான யதார்த்தத்திற்கும் இடையேயான இடைவெளியிலிருந்து எனச் சொல்கின்றார். நாம் பகுத்தறிவு கொண்ட உயிரினங்களாக நடிக்கிறோம், சரியானதைச் செய்ய முயல்கிறோம், ஆனால் இறுதியில் கிடைப்பது… சும்மா சுமாரான வாழ்க்கைதான்.

எமர்சன் குறிப்பிடுவது போல “ஒழுங்கினை நோக்கிய ஓட்டத்தில் வரும் இடைவெளி” என்பது, மனிதக் குறைபாடுகளைப் பிரதிபலிக்க உதவும் களமாக, அதிகார பீடங்களை நோக்கிய சவாலாக, வாழ்க்கையின் அபத்தங்களின் சமாளிப்பு எனப் பல வடிவங்களில் மனித உணர்வுகளை ஆராயும் நாற்றங்காலாக அமைகிறது. சில முக்கிய திரைப்படங்களில் நகைச்சுவை எவ்வாறு அவற்றின் அடிப்படைக் கருத்துக்களை ஆழப்படுத்தி, வலுப்படுத்துகிறது என்பதை ஆராய்வதற்கு எமர்சனின் கட்டுரையை ஒரு துவக்கப் புள்ளியாகப் பயன்படுத்தியுள்ளேன்.

கேலிக்கூத்து: பேர்வெல் 

லுலு வாங்கின் “தி பேர்வெல்” திரைப்படம், ஓர் வயதான பெண்மணி நோயுடன் போராடும் இறுதிக் கட்டத்தை உணர்வுப்பூர்வமாகவும், அதே நேரம் நகைச்சுவை கலந்தும் காட்டி கயிற்றின் மேல் நடக்கின்றது. இந்த உணர்வுகளின் துலாத்தட்டுகளை சமன்படுத்துவதன் வழியே பார்வையாளர்களுக்கு நெருக்கமான, ஆழமான அனுபவத்தை வழங்குகிறது. இதனால் மிகையான நாடகத்தன்மை இன்றி, படம் தனது உணர்ச்சிகரமான தருணங்களை நுட்பமான நகைச்சுவையுடன் இணைத்து மென்மையாக்குகிறது.

பாட்டியின் நோய் நிலையைக் குடும்பத்திடம் வெளிப்படுத்தாமல், சொந்தங்களைக் கடைசி முறையாக ஒன்றிணைக்க ஏற்பாடு செய்யப்படும் போலி திருமணம் இதற்குச் சிறந்த உதாரணம். எமர்சன் குறிப்பிடும் திரிசங்கு நிலைக்கு இது ஓர் அருமையான எடுத்துக்காட்டு ஆகும். வெளியில் விரிந்த போலியான நடிப்புக்கும், அதன் பின்னணியில் உள்ள, உச்சரிக்கப்படாத உண்மைக்கும் இடையேயான முரண்பாடு வெளிப்படுகின்றது.

மணமக்கள் இருவரிடையே இருக்க வேண்டிய காதல் இல்லையே எனப் பாட்டி வெளிப்படையாகத் தெரிவிக்கும் கருத்துக்கள், இந்த சூழலின் நகைமுரணை மேலும் உயர்த்துகின்றன. இது துயரமான யதார்த்தத்திற்கு இலகுவான தன்மையைச் சேர்க்கிறது. இந்த நகைச்சுவை தருணங்கள் படத்தின் உணர்வு ஆழத்தை மறைப்பதில்லை. மாறாக இந்தத் திரைப்படத்தின் கருப்பொருளான  அன்பையும், இழப்பையும், பண்பாட்டு இடைவெளிகளையும் மேலும் மெருகூட்டி அளிக்கின்றது.

பில்லிக்கும், அவளது பாட்டிக்கும் உள்ள உறவே இத்திரைப்படத்தின் மையமாக உள்ளது. இவர்கள் மத்தியில்  அன்பும், வலியும் கொண்ட  உரையாடல்கள் நிதமும் நடக்கின்றன. ⁠இவ்விருவருக்கும் இடையேயான காட்சிகள் – உரையாடல்களில் ஆகட்டும் , உடற்பயிற்சி காட்சிகள் ஆகட்டும் –  ஒரு விசனம் கலந்த அன்பை வெளிப்படுத்துகின்றது.

இந்தத் திரைப்படம் முழு நீள நகைச்சுவை ததும்ப இல்லை, அதே நேரம் அதன் மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் கூட,  அக்காட்சிகளின் மேற்பரப்பின் உள்ளே  மெல்லிய புன்னகையைத் தருவதாக உள்ளது. நகைச்சுவைக்கும், துயரத்துக்கும் இந்த நுணுக்கமான சமநிலை, திரைப்படத்தை உண்மையானதாக உணரச் செய்கிறது. சிக்கலான குடும்ப உறவுகளையும், இறப்பினைப் பல்வேறு பண்பாடுகள் அணுகும் விதங்களையும் சித்தரிக்கிறது. துயரம் மிக்க கருப்பொருளொன்றில் இலகுத்தன்மையை ஊட்டும் இயக்குநர் வாங்கின் திறன், திரைப்படம் சொல்ல வருவதைக் காலங்கள் தாண்டி நிலைத்திருக்கச் செய்கிறது.  பார்வையாளர்களைக் கண்ணீருடனும் ஆறுதல் உணர்வுடனும் விட்டுச் செல்கிறது.

துயர்வழி புன்னகை: மான்செஸ்டர் பை தி சீ

கென்னத் லோனர்கனின் ஆகச்சிறந்த படைப்பான ‘மான்செஸ்டர் பை தி சீ’ திரைப்படத்தில், தாங்க முடியாத துக்கத்தையும் குற்ற உணர்வையும் சமநிலைப்படுத்தும் நுட்பமான, ஆனால் முக்கியமான பங்கு நகைச்சுவைக்கு உண்டு. கடந்த கால துயரினால் சுமை கொண்ட லீ, தனது காயம்பட்ட உணர்வுகளினால் அழுத்தப்பெற்று, வாழ்க்கையில் அதைக் கடந்து செல்ல போராடுகிறார். அவரது உலகம் இருண்டது. அவரது மருமகன் பேட்ரிக்கை வளர்க்கும் பொறுப்பை ஏற்க தயங்குவது அவரது பதற்றத்தை இன்னும் அதிகரிக்கிறது. திரைப்படத்தின் கரு அத்தனை எடைமிகுந்ததாக இருந்தபோதிலும், அவர்களின் உரையாடல்களில் இயல்பாக நகைச்சுவை வெளிப்படுகிறது. அவர்களின் உரையாடல்கள் மாமனுக்கும் மருமகனுக்கும் இடையிலான இயல்பான கேலியும் கிண்டலும் கொண்டு சீண்டும் விதமாக உள்ளது. இந்த நகைச்சுவை அவர்கள் இருவருக்கும் இருக்கும் வலியை குறைப்பதில்லை. ஆனால் அவர்களின் இழப்பின் மத்தியில் அவர்களுக்கு மிகவும் தேவையான ஒரு சுமூக உணர்வைத் தருகிறது. 

படத்தின் நகைச்சுவையான தருணங்கள், கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்லாது பார்வையாளர்களுக்கும் உணர்வுப்பூர்வமான விடுதலையாக அமைந்துள்ளது. விடலைப்பையனான பேட்ரிக், லீயின் துன்பத்தின் முழு ஆழத்தையும் அறியாமல் நகைச்சுவையாகப் பேசுகிறான். இது படம் அதன் சோகத்தில் முற்றிலும் மூழ்கிப் போகாமல் தடுக்கிறது. அவர்களின் நகைச்சுவையான பரிமாற்றங்கள், பெரிதாக ஒட்டாமலும் அடக்கி வாசிக்கப்பட்டதாகவும் இருந்தாலும், அவர்களின் உறவுக்கு அவை ஒரு் நம்பகத்தன்மையை அளிக்கின்றன. அவர்களின் துக்கத்தை மிகவும் உண்மையானதாக உணர வைக்கிறன. துக்கத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு கதையில், நகைச்சுவை அமைதியான ஆனால் வலுவான நினைவூட்டலாகச் செயல்படுகிறது. எந்தத் துயருக்குப் பின்னும் வாழ்க்கை தொடர்கிறது என்பதை உணர்த்துகிறது.

காதலின் பின்னெச்சம்: எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைண்ட்

மிஷல் கான்றியின் “எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைண்ட்” திரைப்படம் காதல், நினைவுகள், தனிமனித அடையாளம் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் ஆய்வாகும். அடிப்படையில், இத்திரைப்படம் மனிதர்கள் ஏன் காதலில் விழுகிறார்கள், உறவுகள் எவ்வாறு வளர்கின்றன என்பதை ஆராய்கிறது – சில நேரங்களில் செழித்து, சில நேரங்களில் அவர்களை முதலில் ஒன்றிணைத்த அதே பண்புகளால் சிதைந்தும் போகின்றன. படத்தில் எதார்த்தம் மீறிய நகைச்சுவை இருந்தாலும் அது மாறான மனதை ஈர்ப்பதாகவே உள்ளது, இது அதிதுயர காவியமாக மாறுவதைத் தடுத்து விடுகின்றது. தன் புதுமையான கதைக்களத்தின் மூலம், காதல் பிணைப்பின் இயல்பையும், மனித உறவுகளை வடிவமைப்பதில் நினைவுகள் வகிக்கும் ஆழமான பங்கையும் ஆராய்கிறது.

இத்திரைப்படத்தில் ஜோயலின் நினைவு அழிப்பு செயல்முறை நடைபெறும் காட்சி மனதை ஈர்க்கும் காட்சிகளில் ஒன்றாக உள்ளது. இதில் அவர் தனது முன்னாள் காதலி கிளெமண்டைன் பற்றிய அனைத்துத் தடயங்களையும் அழிக்க முயல்கிறார். இந்தச் செயல்முறை அவளுடன் தொடர்புடைய பொருட்களால் தூண்டப்படுகிறது, ஒரு நவீனச் சாதனம் அவர்களின் உறவுடன் தொடர்புடைய ஒவ்வொரு நினைவையும் முறையாக அழிக்கின்றது. ஆனால், நினைவுகள் மறையத் தொடங்கும்போது, ஜோயல் பெரும் வருத்தத்தை உணர்கிறார், அவற்றைப் பற்றிக்கொள்ளத் தீவிரமாக முயல்கிறார். அவர்களது காதலின் சிறு துளிகளையாவது பாதுகாக்கும் நம்பிக்கையில், அவர் கிளெமண்டைனை தனது மனதின் தொடர்பற்ற மூலைகளில் மறைக்க முயல்கிறார். இந்த போராட்டம் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தாலும், அதில் நகைச்சுவை கலந்திருப்பது அவரது பதற்றம் கலந்த தீவிர முயற்சிகளை மேலும் ஈர்க்கக்கூடியதாகவும், மனித இயல்பின் அபத்தத்தைப் பிரதிபலிப்பதாகவும் ஆக்குகிறது. “மனிதன் பிரதிநிதித்துவப்படுத்தும் ஞானம் மற்றும் அன்புடன் ஒப்பிடும்போது, நமது அனைத்துத் திட்டங்களும் […] சமமாக முழுமையற்றவையாகவும், நகைப்புக்குரியவையாகவும் உள்ளன” என எமர்சன் குறிப்பிடுகிறார்.  நினைவழிப்பு வெற்றிகரமாக இருந்தாலும், ஜோயல் மீண்டும் கிளெமண்டைனை காதலிக்கிறார் என்பதை எமர்சனின் வரிகள் விவரிக்கிறது.

இறுதியில், படம் அதன் மனச்சோர்வூட்டும், எதார்த்தம் மீறிய நிகழ்வுகளின் சித்தரிப்பிற்கு மத்தியிலும், அன்பு, நம்பிக்கை ஆகியவற்றின் செய்தியைக் கொண்டுள்ளது. எல்லா வலிகளும் மனவேதனையும் இருந்தபோதிலும், காதல் என்பது போற்றத்தக்க அனுபவம், அதன் நல்ல, கெட்ட நினைவுகள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு அவசியமானவை என்று படம் சொல்கின்றது. கதை முழுவதும் இணைக்கப்பட்டுள்ள, நகைச்சுவை காண்பவர் படம் முன் வைக்கும் துயரத்தில் மூழ்குவதைத் தடுக்கிறது, மாறாக, காதலின் நெகிழ்தன்மை பற்றிய கசப்பும் இனிப்பும் கலந்த, மனிதநேயம் நிறைந்த ஆழமான சித்திரத்தை வழங்குகிறது. இலகுத்தன்மையான தருணங்கள் இல்லாமல் இருந்திருந்தால், படம் பெரும் சோகப்படமாகவே உணரப்படும். ஆனால் இந்த இலகுத்தன்மையான தருணங்களால், இது என்றும் மாறா காதல் பற்றிய அர்த்தமுள்ளதாகவும், புதிய பார்வையுடனும் அதே நேரம் உறவுகளின் வலிமிகு வேதனைகளையும், மறக்கமுடியாத இனிய தருணங்களை உண்மையாக வெளிப்படுத்தும் மனதைத் தொடும் படைப்பாக இருக்கிறது.

ஒரு கொடிய நகைச்சுவை: டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ்

ஸ்டேன்லி குப்ரிக்கின் புகழ்பெற்ற “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ்” திரைப்படத்தில், நகைச்சுவை என்பது மனிதக் குறைபாடுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் கருவியாகவும் செயல்படுகிறது. இத்திரைப்படம் உலகத் தலைவர்களையும், இராணுவ அதிகாரிகளையும் பொறுப்பற்றவர்களாகவும், பயத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்களாகவும், அபத்தமான திறமையற்றவர்களாகவும் சித்தரிக்கிறது. உலகப் பாதுகாப்பின் பொறுப்பில் இருப்பவர்கள், மக்கள் நினைப்பது போல அந்த அளவு பகுத்தறிவுடன் இருக்க மாட்டார்கள் என்ற அச்சுறுத்தும் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. கேலிச்சித்திரம் வழியாக, சர்வதேச உறவுகளின் நிலையற்ற தன்மையையும், அகந்தையுடன் கூடிய முடிவெடுத்தல் எவ்வளவு எளிதாகப் பேரழிவாக முடியலாம் என்பதையும் படம் வெளிப்படுத்துகிறது.  “நகைச்சுவையை உணர்தல் என்பது மற்ற மனிதர்களுடன் இணைக்கும் உறவின் பிணைப்பு” – மனித நடத்தையைப் பற்றி எமர்சன் குறிப்பிடுகின்றார். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ் இதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. தன்னைத் தவிர யாரையும் காணமுடியாதவர்களையும், குறைபாடுள்ள சிந்தனைகளையும் கொண்டு கண்மூடித்தனமாகச் செயல்படும் கதாபாத்திரங்களைக் கொண்டு  நகைச்சுவைக் கதையைச் சொல்கின்றது.

நேரடியான நாடகபாணியைக் காட்டிலும் அவல நகைச்சுவை ஒரு திரைப்படத்தின் கருப்பொருளை இன்னும் ஆழமாக முன்வைக்கிறது. அணு ஆயுதப் போர் பற்றிய கடுமையான எச்சரிக்கைக்குப் பதிலாக, இத்திரைப்படம் உலக அரசியலின் அபத்தத்தைக் கூர்மையான, கடித்துத் துப்பும் நகைச்சுவையாக மாற்றுகிறது. சூழலின் முழு முட்டாள்தனத்தையும் பார்த்து நம்மை சிரிக்க வைப்பதன் மூலம், குப்ரிக் நம்மை ஒரு பயங்கரமான உண்மையை எதிர்கொள்ள வைக்கிறார் – உலகின் கதி தவறிழைக்கக்கூடிய, பெரும்பாலும் பகுத்தறிவற்ற மனிதர்களின் கைகளில் இருக்கிறது என்பதே அந்த உண்மை. இந்த சிரிப்பு இலகுவானதல்ல, எமர்சன் குறிப்பிட்டது போல “அனைத்துப் பொய்களும், அனைத்துத் தீமைகளும் போதுமான தூரத்திலிருந்து பார்க்கும்போது […] நகைப்புக்குரியதாக மாறுகின்றன” என்ற உண்மையை உணர்ந்த பதற்றமான எதிர்வினை. நம் சொந்த அழிவின் சாத்தியத்தைப் பார்த்து நாம் சிரிக்கிறோம். (இந்தத் திரைப்படம் இன்றும் மிகவும் பொருத்தமாக இருப்பது ஒரு சோகம்).

வலி கொண்ட சிரிப்பு: பாரசைட்

பாரசைட்” திரைப்படத்தில் நகைச்சுவை வர்க்க வேறுபாடுகளை வெளிக்கொணரும் முக்கிய கதை சொல்லும் உத்தியாக ஆரம்பித்து, படத்தின் இறுதியில் வரும் வன்முறைக்கான முன்குறிப்பாகவும் விளங்குகிறது. ஆரம்பத்தில், கிம் குடும்பத்தின் போராட்டங்கள் இலகுவான தொனியில் சித்தரிக்கப்படுகின்றன. உதாரணமாக, திருடப்பட்ட வைஃபை சேவை மீண்டும் கிடைத்ததற்காக அவர்கள் காட்டும் நகைப்பூட்டும் அவசர நன்றியுணர்வு. இவர்கள் பணக்கார பார்க் குடும்பத்திற்குள் ஊடுருவும்போது, அவர்களின் புத்திசாலித்தனமான திட்டங்களும், விரைவான சிந்தனையும், கூர்மையான, கேலி செய்யும் நகைச்சுவையுடன் இணைந்து, அவர்களின் ஏமாற்று வேலையை உற்சாகமூட்டுவதாகவும், மகிழ்வூட்டுவதாகவும் ஆக்குகிறது. இந்த நகைச்சுவை பார்வையாளர்களை ஈடுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான அனைவரும் அறியக்கூடிய வேறுபாட்டையும் வலியுறுத்துகிறது: ஒன்று உயிர்வாழப் போராடுகிறது, மற்றொன்று ஆடம்பரத்தில் வசதியாக இருக்கிறது. இந்த உறவுகளின் மூலம், பாங் ஜூன்-ஹோ பல்வேறு சமூக வர்க்கங்களுக்கு இடையேயான மறைந்திருக்கும் பரஸ்பரச் சார்பை வெளிப்படுத்துகிறார், செல்வந்தர்கள் தங்களின் சலுகை நிறைந்த வாழ்க்கை முறையைத் தக்க வைத்துக் கொள்ள ஏழைகளைச் சார்ந்திருப்பதை அறியாமலேயே இருக்கின்றனர்.

திரைப்படம் நகர நகர, நகைச்சுவை மேலும் பதற்றமாக மாறுகிறது, கிம் குடும்பத்தில் முளைத்து வந்த புதிய நிகழ்வுகளின் ஊசலாடும் தன்மையைப் பிரதிபலிக்கிறது. கிம் குடும்பத்திற்கும் முன்னாள் வீட்டுப் பணிப்பெண்ணுக்கும் இடையேயான மோதல், ஆரம்பத்தில் நகைப்பூட்டும் சங்கடமான சந்திப்பாகத் தொடங்கி, விரைவில் குழப்பமாக மாறி, மேற்பரப்பின் கீழ் மறைந்திருக்கும் விரக்தியை வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து நகைச்சுவையின் நுட்பமான அடியோட்டத்தை பராமரிப்பதன் மூலம், “பாரசைட்” அதிகப்படியான போதனை போன்று உணரப்படுவதைத் தவிர்க்கிறது. மாறாகச் சமூக ஏற்றத்தாழ்வின் அபத்தத்தைத் தானாகவே பேச அனுமதிக்கிறது. நகைச்சுவை பார்வையாளர்களை ஒரு வகை மகிழ்வான உணர்வில் ஆழ்த்துகின்றது, பின்னர் திரைப்படம் கூர்மையான, வன்முறை நிறைந்த திருப்பம் எடுப்பதால், அதன் இறுதி காட்சி மேலும் அதிர்ச்சியூட்டுவதாக ஆக்குகிறது. 

எமர்சன் எழுதியதைப் போல, “நகைச்சுவையை உணரும் திறனுள்ள மனிதன்” – அதாவது வாழ்க்கையின் உண்மை நிலையை நகைச்சுவையுடன் பார்க்கக்கூடிய நபர் – “தவறான பாதைகளிலிருந்தும், இருண்ட மனநிலையிலிருந்தும் தன்னைக் காத்துக்கொள்கிறான்”. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கிம் குடும்பம் இந்தப் பார்வையை இழந்துவிடுகிறது. எமர்சன் சொல்வதுபோல, “இந்த உணர்வு இழக்கப்படும்போது, மற்றவர்களால் அவனுக்கு உதவ முடிவதில்லை”. இப்படி நகைச்சுவையும் பதற்றமும் கலந்த கதையோட்டம், இத்திரைப்படத்தை வெறும் சமூக விமர்சனமாக மட்டுமில்லாமல், நம் உணர்வுகளைத் தொடும் மறக்க முடியாத திரைப்பட அனுபவமாக மாற்றுகிறது.

நகைச்சுவையின் தீவிரமான செயல்பாடு

25 ஆண்டுகளுக்கு முன்பு நான் என் உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு வந்தபோது, உலக சினிமா மூலம் எனது கலாச்சாரப் புரிதலை விரைவுபடுத்தினேன். இக்காலகட்டத்தில் நான் பார்த்த திரைப்படங்களுள் ஒன்று ஸ்கோர்சேசியின் ஆஃப்டர் அவர்ஸ். ஒரு பெண்ணுடன் சந்திப்புக்கு உணர்ச்சிவசப்பட்டு ஒப்புக்கொள்ளும் ஒரு மனிதனைப் பற்றியது இத்திரைப்படம். அச்சந்திப்பு கற்பனைக்கெட்டாத, கனவுக்கும் நனவுக்குமிடையே தவிக்கும் நடுக்கமூட்டும் அனுபவமாக மாறுகிறது. ‘காமெடி ட்ராக்’ கலந்த மசாலா படங்களைப் பார்த்து வளர்ந்த எனக்கு, இந்தப் படத்தைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தது; அது அசௌகரியமாக இருந்தாலும், நிச்சயமாக நகைச்சுவையாகவும் இருந்தது. இந்தப் படத்தைப் பற்றி ஈபர்ட் எழுதிய விமர்சனத்தை நான் படித்தேன். அதில் அவர், “நகைச்சுவை அவ்வளவு இறுக்கமாக இருந்தது, நான் வெளியே சென்று ஒரு சிகரெட் புகைக்க வேண்டியிருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார். இது போன்ற பல படங்களுக்குப் பிறகு, நகைச்சுவை இங்கே ஒரு ட்ரோஜன் குதிரை போன்றது என உணர்ந்தேன் – அந்நியமாதல், நகர வாழ்வின் பதற்றம் போன்ற கருப்பொருட்களை உள்ளே கொண்டு வந்து, ஒருவரின் வாழ்க்கை மீது ஒருவருக்கு எவ்வளவு குறைந்த கட்டுப்பாடு இருக்கிறது என்பதை இப்படம் வெளிப்படுத்துகிறது. அசௌகரியமான நகைச்சுவை ஒவ்வொரு வாழ்க்கையின் உள்ளார்ந்த “திரிசங்கு நிலையில்” இருந்து எழுகிறது. இந்த இடைவெளி நமது விருப்பங்களுக்கும் நமது யதார்த்தங்களுக்கும் இடையே உள்ளது. ஸ்கோர்சேசி நமது குறைபாடுகளையும், பாதிப்புக்குள்ளாகும் தன்மைகளையும், நாம் பகிரும் மனிதத்தன்மையையும் நமக்கு முன் வைத்தார். இங்கு நகைச்சுவை சமூகக் குறைபாடுகள், மனித முட்டாள்தனங்கள், இருப்பியல் குழப்பங்கள் ஆகியவற்றை அணுகுகிறது. எமர்சன் “தி காமிக்” என்ற கட்டுரையில்  குறிப்பிடுவது போல, நகைச்சுவை இந்த உயர்ந்த நோக்கங்களுக்குச் சேவை செய்ய, அது “அதன் சொந்த எல்லைகளுக்குள்” பயன்படுத்தப்பட வேண்டும் – ஸ்கோர்சேசி ஒருபோதும் அந்த எல்லையைத் தாண்டவில்லை.

இந்தத் திரைப்படங்கள் நகைச்சுவை என்பது நாடகத்திற்கான வெறும் துணைப்பொருள் அல்ல, மாறாக கனமான கருப்பொருட்களை அணுகக்கூடியதாகவும், நிலைத்திருக்கச் செய்வதற்கும் ஓர் அத்தியாவசிய கருவி என்ற எமர்சனின் தத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. சரியான அளவில் நகைச்சுவையைப் பயன்படுத்தும் தீவிரமான திரைப்படங்கள் தங்கள் கருப்பொருளைத் தாண்டி, தங்கள் செய்திகளை மேலும் தாக்கம் நிறைந்ததாகவும், அவற்றின் உணர்ச்சிப்பூர்வமான எடையை மேலும் எதிரொலிக்கவும் செய்கின்றன. இங்கு விவாதிக்கப்பட்ட திரைப்படங்கள், தீவிரமான தருணங்களை நகைச்சுவை எவ்வாறு கோடிட்டுக் காட்ட முடியும் என்பதை நிரூபிக்கின்றன. இது வெறும் நிவாரணத்தை மட்டுமல்லாமல், மனித இயல்பைப் பற்றிய ஆழமான புரிதலையும் வழங்குகிறது. நகைச்சுவை இந்தத் திரைப்படங்களின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்குப் பதிலாக மேம்படுத்துகிறது.

இந்தத் திரைப்படங்கள், விளையாட்டுத்தனத்தையும்  கண்ணியத்தையும் திறமையாக சமநிலைப்படுத்துவதன் மூலம், போதனை செய்வதாகவோ அல்லது உணர்வுரீதியாக அழுத்தும் தன்மையுடையதாகவோ மாறுவதைத் தவிர்த்து, அவற்றின் கருப்பொருளை பார்வையாளர்களிடம் இன்னும் ஆழமாக எதிரொலிக்கின்றன. வாழ்க்கை, அதன் அனைத்துக் குளறுபடியான பெருமையிலும், சோகமாகவும் நகைச்சுவையாகவும், இதயத்தைப் பிளப்பதாகவும் வேடிக்கையாகவும் ஒருசேர இருக்கிறது என்பதை அவை நமக்கு நினைவூட்டுகின்றன. சில நேரங்களில் கண்ணீரைச் சமாளிப்பதற்கான சிறந்த வழி, அது சிறிதளவாக இருந்தாலும் கூட, புன்னகைக்க ஒரு காரணத்தைக் கண்டறிவதுதான்.

பி.கு: சிறந்த மொழிபெயர்ப்புக்காக நிர்மலுக்கும், மதிப்பீட்டுக்காக சாரதிக்கும் மனமார்ந்த நன்றிகள்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “கண்ணீரில் சிரித்து வாழ்தல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.