நிலுவையில் உள்ள பிரபஞ்சம்

நாம் எப்போதும் இருக்கப் போகும்
இந்த இடம்
ஒரு தவறான நினைவக முகவரிப் பதிவு
ஒவ்வொரு மறுதொடக்கத்திலும்
தோன்றும் துவக்கத் திரையில்
நட்சத்திர ஈசல்கள் மினுக்கிப் பறந்து
இறந்து மறைந்து
பிறந்த நெபுலா-க்களிலிருந்து1
மழை ரேகைகள் உருவாகி
வழிந்து வடிந்து மடிந்து
இருண்மையின்அடர் முறை செயல் வகைமைகளில்2
ஒளியைத் தம் வழியே ஏற்றிக்
கொண்டாடிக் கொண்டேயிருக்கும்
மூன்று பகுப்புகளுக்கு இடையே
விளைந்து விழுந்து வழிந்து நழுவிப் போக
நிகழும் இந்த விரையும் பொழுதின்
பி-கோட்பாடு மற்றும் நிகழ்காலவாதம்3
ஆகியவற்றின் ஒருங்கிணைந்த
தற்காலிக வகுப்பில் வாழும் நிதர்சனம்
மட்டும் தான் காலம்
ஆனால் அது மட்டுமே நம் காலம் அல்ல
ஒரு அனுப்பப்படாத செய்தியில்
வரப் போகும் அந்தப் புதுப் பிரபஞ்சம்
நிலவுகள் அதன் வரைவு நகல்கள்
கருந்துளைகள் ரத்து செய்யும்
மாற்றங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
வெற்றிடத்தில் வெடித்துத் துடிக்கும் மின்னல்
ஒரு கருந்துளையின் ‘சைனஸ்’ தாளம்4
அதன் குறை துடிப்பு இதயம்5
மற்றும் விரைவுத் துடிப்பு இதயம்6
ஆகியவற்றின் அகாலத்தின் உதடுகளுக்கு
இடையே சிதறும் அறுதி ஒளிக்கீற்று
ஒரு அற்ற அலைவரிசை
ஒரு சிருஷ்டி தோல்வி
ஒரு சிருங்கார வேள்வி
ஒரு விந்துச் சொட்டின் பெரு வெடிப்பில்
உங்கள் பார்வைக்குக்
கிடக்கும் ஒரு அழியாத ஒலி வடிவம்
விண்வெளியின் எதிரொலிப்பில்
சூல் கொண்டு நிறைவடைகிறது
இருள் பொருள்7 புள்ளிகள்
தோற்றுவித்த நிழல்கள்
நாம் இதுவரை காண முடிந்த பிரபஞ்சத்தின்8
நிறை அரை குறை காட்சிகள்
அமைதியைக் கெடுக்கும்
நுண் நச்சுக் கிருமிக் கோப்புகளின்
சோதனை பதிப்புகள் மட்டுமே நாம்
இந்த வாழ்வின் ஒரு விசைப்பலகையின்
அழிவு கூட்டல் ஆக்கம் பொத்தான்கள்
அழுத்தப்பட்ட பிறகும்
சிருஷ்டி காத்திருக்கிறது
அங்கீகாரத்தின் அகங்காரத்திற்கு
இறுதி விண்மீன் உதிர்ந்த போது
ஒரு விண்மீன் அழுத்துகிறது
தன் பின்னழிப்பு பொத்தானை9
அந்தரத்தின் உண்மை
பிழை கொண்டு அழைக்கிறது
ஒரு கருந்துளையின்
மறுசுழற்சிக் குப்பைத் தொட்டியின்
அறிமுகப் பாடலுக்கு
நட்சத்திரங்கள் தம் இயல்பில்
தேடி வந்து குதித்து நீந்தி
நீங்க முடியாமல் தவிக்கின்றன
கரையுமில்லை
கரையவுமில்லை
நாம் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறோம்
நம்மையே உண்மையே என நம்பியே
மறைக்கப்பட்ட ஒரு விண்ணப்பப் படிவம் நிரப்பப்பட
ஒரு பொய் அறிவிக்கப்பட்டு
ஆவணப்படுத்தப்படுகிறது
ஓர் இரக்க கணத்தின் புவனமுழுது10
தோற்றுவித்த பல்லாயிரம் நேரக்கோடுகள்
மொழியின் எலும்பு மஜ்ஜைகளில்
திறக்கும் பல்லண்ட வாயில்கள்11
ஒரு புதிய இயற்பியல் சமன்பாட்டை நோக்கி நகர்கின்றன
கனவுகள் முறிந்த மீ-எதார்த்தத்தில்
எங்கும் தகவல்களின் ஓலங்கள்
‘டேக்கியன்’12 துகள்களின் இரத்தப்போக்கில்
சிதறம்13மலர்கிறது
உருவகப்படுத்தப்பட்ட ஒரு பாவனையான அண்டத்தின்
பேய் மாறிகள்14 நாம் என்றாகிறது இப்போது
* Metadata – மேல் அதிகத் தகவல்கள் அல்லது குறிப்பு இலக்கிய ஆதாரங்கள் (Reference Literature Resources) – மேலதிகத் தகவல்களின் மூலம் ஒரு கட்டுரைக்கும் கவிதைக்குமான வடிவத் தொடர்பை அவற்றுள் நிகழும் மீட்சி, தொடர்ச்சி, கிளர்ச்சி மற்றும் பிழற்சி கொண்டு நிறுவுவதின் பயனை ஏற்படுத்த முயல்கின்றன இக்கவிதைகள். கவிதையின் புனைவு உரிமத்திற்கும், கட்டுரையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய தன்மைகளுக்கும் இவை ஒரு சூட்சும பாலத்தை எழுப்பிப் பார்க்கின்றன. கவிதையின் ஒரு வடிவக் கூறாக இவை பரிசோதனை முயற்சி அடிப்படையில் இங்கே முன்வைக்கப்படுகின்றன.
1 சூரியக் குடும்பத்திற்கு அப்பால், தூசு, ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான ஒளியுடன் கூடிய புகை போன்ற அமைப்பு கொண்ட முகிலே (மேகம்) ஒண்முகில் அல்லது நெபுலா (Nebula) எனப்படுகிறது. பழமையான அண்டவெளி ஒண்முகில்களில் உள்ள வாயுக்கள் ஈர்ப்பால் ஒன்றிணைந்து புதிய பல விண்மீன்கள் உருவாகின்றன. விண்மீன்களாக உருவாகாத மீதி முகில் பிரதேசங்கள் விண்மீன்களின் ஈர்ப்பால் ஒன்றிணைந்து கோள்களாக உருவாகின்றன.
2 Dark Mode
3 காலமற்ற கோட்பாடு என்றும் அழைக்கப்படும் காலத்தின் பி-கோட்பாடு (B-Theory), கால ஓட்டம் என்பது ஒரு அகநிலை சார்ந்த மனித கருத்து என்றும், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அனைத்தும் சமமாகவே உண்மையானவை என்றும் கூறுகிறது. மறுபுறம், நிகழ்காலவாதம் (Presentism) என்பது நிகழ்கால தருணம் மட்டுமே உண்மையானது என்றும், கடந்த காலமும் எதிர்காலமும் இல்லை என்றும் வலியுறுத்தும் ஒரு தத்துவார்த்தக் கண்ணோட்டமாகும். எனினும் நாம் வாழும் காலம் இவற்றையெல்லாமும் ஒருங்கிணைத்தே இயங்குகிறது என்பதும் ஒரு உண்மையே.
4 சைனஸ் தாளம் (Sinus rhythm) என்பது ஒரு உயிர் இயங்கத் தேவையான ஆதுரமான இதயத் துடிப்பின் இயல்பான ஒழுங்குமுறைத் தாளத்தைக் குறிக்கிறது.
5 Bradycardia – மெதுவான இதயத் துடிப்பு
6 Tachycardia – விரைவான இதயத் துடிப்பு
7 Dark Matter – கரும் பொருள் அல்லது இருள் பொருள் அல்லது இருள் வஸ்து – கரும்பொருள் என்பது நேரடியாகப் பார்க்க முடியாத ஒரு வடிவமாகும். ஆனால் புலப்படும் பொருளின் மீது ஏற்படும் அதன் ஈர்ப்பு விளைவுகள் அளக்கப்பட்டுத் துலக்கப்பட்ட காரணமாக அது இருப்பதாக விஞ்ஞானிகளால் அறியப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் இதுவரை அறியப்பட்ட நிறைவில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை, சுமார் 27% ஆக்கிரமித்துள்ளதாகவும் கருதப்படுகிறது. கரும்பொருளின் முழு தன்மை இன்னும் அறியப்படவில்லை என்றாலும், இது ஒளி அல்லது பிற மின்காந்த கதிர்வீச்சுடன் தொடர்பு கொள்ளாத ஒரு புதிய வகை அடிப்படை துகள் என்று நம்பப்படுகிறது.
8 காட்சிக்குக் கிடைத்த பேரண்டம் – Observable Universe – காணக்கூடிய பிரபஞ்சம் என்பது பூமியிலிருந்து காணக்கூடிய அனைத்துப் பொருட்களையும் கொண்ட பிரபஞ்சத்தின் ஒரு கோளப் பகுதியாகும். இந்தப் பொருட்களிலிருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சு அண்டவியல் விரிவாக்கத்தின் தொடக்கத்திலிருந்தே சூரியக் குடும்பம் மற்றும் பூமியை அடைய நேரம் அமைந்துள்ளது. பிரபஞ்சம் சமவியல்பு (Isotropic) தன்மை கொண்டது என்று வைத்துக் கொண்டால், காணக்கூடிய பிரபஞ்சத்தின் விளிம்பிற்கான தூரம் ஒவ்வொரு திசையிலும் ஒரே மாதிரியாக இருக்கும். அதாவது, காணக்கூடிய பிரபஞ்சம் பார்வையாளரை மையமாகக் கொண்ட ஒரு கோளப் பகுதியாகும். பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் அதன் அதன் சொந்தமான காணக்கூடிய பிரபஞ்சம் உள்ளது, இது பூமியை மையமாகக் கொண்ட ஒன்றோடு ஒன்றுடன் ஒன்று சேரலாம் அல்லது சேராமலும் இருக்கலாம்.
9 Backspace Button – ‘பேக்ஸ்பேஸ்’ விசை என்பது முன் உள்ள எழுத்தை (எழுத்து என்பது இங்கே வாழ்வு எனும் பொருளில் பயின்று வருகிறது) நீக்கும் ஒரு விசைப்பலகை விசையாகும்.
10 Omnipresence – எங்கும், எல்லா இடங்களிலும், உலகம் முழுவதிலும் வியாபித்திருக்கும்
11 Multiverse Portals – கோட்பாட்டு இயற்பியல், பல்லண்டம் என்பதனை பல பிரபஞ்சங்களின் ஒரு கருதுகோள் குழுவாகக் கருதுகிறது. இதன் பொருள், நமது பிரபஞ்சம் ஒரு மிகப் பெரிய பல்லண்டப் பிரபஞ்சத்தில் ஒரு சிறிய பிரபஞ்சமாக இருக்கலாம் அல்லது அங்கு பல எல்லையற்ற பிரபஞ்சங்கள் கூட ஒன்றுக்கொன்று இணையாக இருக்கலாம் என்பது. அப்படிப்பட்ட பல்லண்டங்களுக்கான வாயில்களும் உள்ளன என்பது தற்போது ஒரு விஞ்ஞானப் புனைவு என்னும் அளவில் உள்ளது.
12 Tachyon – இது ஒரு அனுமான துகள் ஆகும். இது எப்போதும் ஒளியின் வேகத்தை விட வேகமாகப் பயணிக்கும் என்று கோட்பாடு ரீதியாகக் கருதப்படுகிறது. விஞ்ஞான சோதனை ரீதியாக இது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இக்கருத்து சார்பியல் கோட்பாட்டுடன் (Theory of Relativity) ஒத்துப்போகிறது என நம்பப்படுகிறது. டேக்கியான்கள் பெரும்பாலும் காலப் பயணம் மற்றும் முரண்பாடுகள் போலத் தோன்றும் மெய்யுரைகள் (paradoxes) ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டு விவாதிக்கப்படுகின்றன, ஏனெனில் இவற்றின் இருப்பு காலத்தைப் பின்னோக்கித் தொடர்பு கொள்ள அனுமதிப்பதாக நம்பப்படுகிறது.
13 Entropy – வெப்ப இயக்கவியல் செயல்முறையில் பயன்படும், சக்தியாக மாற்ற முடியாத ஆற்றலைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வெப்பவியக்கவியல் பண்பு இது. சீர்குலைவின் அளவு எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.
14 Ghost Variable – மென்பொருள் பொறியியலில், “பேய் மாறி” என்பது ஒரு நிரலின் விவரக்குறிப்பு அல்லது சரிபார்ப்பு செயல்முறையில் பயன்படுத்தப்படும் ஒரு மாறி ஆகும், ஆனால் உண்மையான நிரலின் செயல்பாட்டில் இது பயன்படுத்தப்படாது. இது நிரலாளர் இயக்க நேரத்தில் நேரடியாகக் காண முடியாத பண்புகள் அல்லது நடத்தையை வெளிப்படுத்த அனுமதிக்கிறது. இந்த மாறிகள் நிரலின் இயங்கக்கூடிய குறியீட்டின் ஒரு பகுதியாக இருக்காது. மேலும் இவை இறுதி தயாரிப்பில் தொகுக்கப்படமாட்டாது.
டார்க்_மோட்
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
