மா. காளிதாஸ் கவிதைகள்

1.
என் கனவில்
அடிக்கடி நடமாடும் ஒருவன்
என் கனவைச் சட்டையாக அணிந்திருக்கிறான்

கனவின் சட்டை பல சமயங்களில் வெண்மையாக
சில சமயங்களில் கருப்பாக சிவப்பாக நீலமாக இருக்கிறது

என் கனவின் சட்டைக்குக் காலர் இல்லை
எதையும் சேமித்து வைப்பதற்கான பையோ
திறந்து மூடுவதற்கான பொத்தான்களோ கூட இல்லை

சில சமயங்களில் என் கனவில் நடமாடுபவன்
கனவுச் சட்டையிலிருந்து
தனக்குத் தேவையான கோடுகளை எடுத்துச் செல்கிறான்
இப்படித்தான் அவன் முற்றம் கோலத்தால் நிறைகிறது
சில முக்கியமான நிகழ்வுகள் அடிக்கோடிடப்படுகின்றன அல்லது குறுக்கும் நெடுக்குமாக அடிக்கப்படுகின்றன

சில சமயம் பூக்களை எடுத்துச் செல்கிறான்
அந்தப் பூக்கள் அவன் காதலியின் தலையில் மணம் வீசுகின்றன
அவன் பூஜை அறையில் மாலையாகத் தொங்குகின்றன
அவன் தெருவைக் கடந்து செல்லும் மரண ஊர்தியிலிருந்து உதிர்கின்றன

என்ன நினைத்தானோ
அழுக்கும் வியர்வையும் நிரம்பிய
என் கனவுச் சட்டையைக் கழற்றித்
தன் கண்ணீரில் நனைத்து
என் இரவை
முழுவதுமாகத் துடைத்துக் கொண்டிருந்தான்

அன்றிரவு வானில் முழு நிலவாக உலர்ந்து கொண்டிருந்தது என் கனவு.


2.
ஒரு பழைய குழு புகைப்படத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.

யாருடைய நெற்றியை விட்டோ விலகி ஒரு வெள்ளை நெட்டுப்பொட்டு நீண்டிருந்தது.

என்னை உனக்கு நினைவிருக்கிறதா என்று கேட்பது போல்
ஓர் இறந்த ஆன்மா
என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

கேமராவை பார்க்காமல்
இன்னொரு பக்கம்
பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அந்தக் காட்சி
தெளிவாகப் புலனாகிவிட்டதா எனத் தெரியவில்லை.

புகைப்படம் எடுப்பதற்குச் சற்றுமுன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வந்து நின்றவள்
நிச்சயமாக அதை மறந்திருக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொரு புகைப்படத்திலும் மையமாக நிற்பவர் ஏதோ சொல்ல வருகிறார்
ஆனால் அதற்குள்
அந்த ‘கிளிக்’சத்தம் கேட்டு விடுகிறது.

மூடி வைக்கும் முன்
நன்றாக உற்றுப் பார்த்தேன் இப்போதும்
தூணுக்குப் பின்னால் காலம் மங்கலாய் நின்று கொண்டிருக்கிறது.

‘எல்லோரும் இங்க பாருங்க
ஸ்மைல் ப்ளீஸ்’ எனக்கூறி வெற்றிகரமாக புகைப்படம் எடுத்த வரை நேற்று சந்தித்தேன்.
அவரது வலதுகைப் பெரு விரலை சர்க்கரை புழு
ஏற்கனவே தின்று செரித்திருந்தது.


3.
ஒரு பன்னைப் பிய்க்கத் தெரியாமல்
பிய்த்து சிதறித் தின்னும்
சிறு குழந்தையைப் போல
இந்த இரவுடன் மன்றாடுகிறேன்.

அது என்னை வேடிக்கை பார்க்கிறது
விளையாடி ஓய்ந்த
கரடி பொம்மையைப் போல.

கனவின் ஒரு பகுதியைக்
கம்பாக ஊன்றி
எனக்கு முட்டுக் கொடுக்கிறது.

பசித்து அழும்போது
ஒரு நட்சத்திரத்தை எடுத்து
பால் குப்பியைப் போல
என் வாயில் திணிக்கிறது.

கொட்டக் கொட்ட விழித்திருக்கும்
ஆந்தையின் கண்களில் பட்டுவிடாதபடி
தன் முதுகால்
என்னை மறைத்துக் கொள்கிறது.

மிஞ்சிய கருவாட்டுக் குழம்பை ருசிக்க
ஜன்னல்வழி தாவும் பூனையின் காதில் ஏதோ கிசுகிசுக்கிறது
விழுந்தடித்து ஓடுகிறது பூனை.

எதையோ கொள்ளையடிக்கும் பொருட்டு
எங்கோ ஒரு பூட்டு உடைகிறது
ஆனால் எனக்குக் கேட்பதெல்லாம்
மெல்லிய குரலில்
இரவின் ஆராரோ மட்டுமே.

பூச்சாண்டியைப் போலப்
பலமுறை பயங்காட்டியே பழகியதால்
இப்போதெல்லாம் இரவைக் கண்டால்
சிரிப்பு தான் வருகிறது.

உறக்கம் கலைந்து எழுந்ததும்
முதல் வேலையாகத் தேடுகிறேன்
எனக்கு ஒவ்வொரு நாளும் வழிகாட்டும்
அந்தப் பிரம்மாண்ட மின்மினிப்பூச்சியை.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “மா. காளிதாஸ் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.