
மிகச் சாதுவாக நகர்கின்றன
பெருந்திமிங்கிலங்கள் ஆழ்கடலுக்குள்
சமுத்திரத்தின் ஆழத்தில் என்னதான் இல்லையென
எல்லா வளங்களையும் பெருப்பித்துக் கடல் காட்டும் ஆசைதானோ
நதிகளின் மீன்களையும் ஈர்த்து
அள்ளி வருகிறது இச் செங்கடலுக்குள்
இப் பாலை பூமியிலும், நெடிதுயர்ந்த கட்டடங்களிலும்
இரைகளைப் பிடித்திடத்தான் எத்தனை எத்தனை வலைகள்
பெற்றோரை – தாம் பெற்றோரை – சொந்தங்களைப் பெற்றோரை
நிம்மதியாக வாழச் செய்திடவென
தாய்தேசத்தைப் பிரிந்தவர்களின் பரிதாபகரமான விழிகள்
எத்தனை எத்தனை சகித்தல்களின் கதைகளைப் பேசுகின்றன இங்கு
திமிங்கிலங்களிடமும் தூண்டில்களிலும் சிக்கிய
அப்பாவி மீன்களின் வலிகள்
எப்போதும் தேங்கிக் கிடக்கின்றன
ஜீவித்தலுக்கான யாசகமாக அக ஆழங்களில்
ஒவ்வொரு நாளையும் பொறுமையோடு வாழச் செய்கின்றன
துளி ஈரமும் நிழலும் ஏதுமற்ற வெளிகளில் நடப்பட்டு
இலைகளுதிர்த்து செத்துப் பிழைத்து
என்றாவதொரு நாள் துளிர் விடுமென்ற
நம்பிக்கை மீதுறக் காத்திருக்கும் எதிர்பார்ப்பும், பிரார்த்தனைகளும்
திசை காட்டும் நட்சத்திரங்கள் வழி தவறச் செய்துவிட்டதால்
வதைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் அந்நிய நாட்டு ஜீவன்களின்
குருதியாலும் கண்ணீராலும் நிரம்பி
அலையடிக்கும் இச் செங்கடலுக்குள்
எப்போதும் போல இக் கணத்திலும்
மிகச் சாதுவாகவே நகர்கின்றன பெருந்திமிங்கிலங்கள்
தகிக்கும் வெப்பத்தில் தாகித்தவாறு
கை கொடுத்துத் தூக்கி விடும் பேருதவியொன்றிற்காய்
பிரார்த்தனைகளோடு ஏங்கிக் காத்திருக்கும்
அந்நிய மானிடரின் கதைகளைப் பாரெங்கும்
எத்தி வைப்பாயோ சூரியனே
அனலான இராக் காலங்களில் உறக்கமிலா வாதைகளால்
விழிநீர் தேங்கிய விழிகளின்
அந்தரிப்புகளைப் பொழிந்திடாயோ வெண்ணிலாவே
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
