ந.சிவநேசன் கவிதைகள்

1.

ஒரு கவிதைக்கு ஞௌ எனப் பெயரிடலாமா?
இடலாம்.
ஞௌ போல வாழ்ந்து வருபவர்கள் பலரை எனக்குத் தெரியும்
ஞௌ போல வாழ்பவர்கள் எங்கேயும் யாருக்கும் எதிலும் பரிச்சயமில்லாதவர்கள்
யாருக்கும் அவர்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லை
அவர்களும் இருக்கிற இடம் தெரியாமலேயே இருந்து விட்டார்கள்.
ஒரு முறை வேலை வெட்டி இல்லாமலேனும்
ஞௌ போல வாழ்பவர்களைக் கூட்டி வந்து முன்னிருத்தி மனதைக் கிண்டிப் பாருங்கள்
அவர்கள்
கதை கேட்கவும்
சொல்லவும்
ஙௌ, ணௌ, ழௌ, றௌ, னௌ
ஆகியோரையும் வரிசையில் அழைத்து வந்து
பாவமாய் நின்றிருப்பார்கள்.


2

கொஞ்சம் அமைதியாக இருங்கள்
நான் முதலில் கெட்டவனாகிக் கொள்கிறேன்
அப்போதுதான் நான் நல்லவன் ஆவேனென நம்புவீர்கள்

நல்லவனாக மாறும் கெட்டவனின் சாகசம்
நல்லவனாக இருந்து
நல்லவனாக மடிபவனின்
வாளை விடவும்
கூர்மையாயிருக்கிறது

நான் முதலில்
தும்பிகளைக் கொல்கிறேன்
அப்போதுதான் நான் அவற்றை நூலிலிருந்து காக்கும் போது கைதட்டுவீர்கள்

நான் முதலில் அவதூறான சொற்களை உமிழ்கிறேன்
அப்போதுதான் அதன்பிறகான எனது
தூய சொற்களுக்கு
காது கொடுப்பீர்கள்

கடவுளும் சாத்தானும் சராசரி
சாத்தானாக இருந்து
கடவுளாவதை நீங்கள் விரும்புவது போன்றே நானும் விரும்புகிறேன்

கொஞ்சம்
அமைதியாக
இருங்கள்
நான் முதலில் இரைச்சலை உண்டுபண்ணி
பிறகு அமைதிக்கு
உங்களைப் பழக்குகிறேன்


3
மணிகள் விற்பவன்
மணிகள் ரூபத்தில் நம்பிக்கையைக் கோர்த்திருக்கிறான்
அவன் பணம் வாங்கிக் கொண்டு
பழைய கழுத்துக்கு பதிலாக
புதிய கழுத்தைத் தருகிறான்
புதிய கழுத்து
புதிய இதயத்தை
புதிய அறிவை
புதிய செல்வத்தை
புதிய ஜீவனைத் தருமென நம்புகிறவர்கள்
நிமிடத்துக்கொரு முறை
புதிய கழுத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறார்கள்
புதிய கழுத்து
பழைய கழுத்து சொன்னதை
எண்ணிப் பார்த்தது
‘எல்லாம் உறங்கி எழும்வரை தான்’


4
யோசனைகளின் வால் பிடித்து வந்து
நான் எங்கே பிழையானேன் என
யோசிக்கிற இடத்தை
இப்போது தான்
அடைந்திருக்கிறேன்

அதிகம் யோசிக்காமல் இருந்திருக்கலாம் என்கிற
கதவு விசாலமாய் திறந்து கொண்டது.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.