‘சொல்வனம்’ எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

கிரிதரன் அவர்களுக்கும் அனுராதா கிருஷ்ணசாமி அவர்களுக்கும் வாழ்த்துகள்!
உங்களது நூல்கள் வெளிவந்துள்ளதைக் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி.

இதுவரை அளித்துள்ள எழுத்துப் பயணத்திற்கும், இப்போது அச்சில் வந்துள்ள புதிய நூல்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்! இன்னும் பல அச்சுப் பதிப்புகள் வெளிவர நல்வாழ்த்துகள்!

இது போன்ற பல நூல்கள் தொடர்ந்து வெளிவர, உங்கள் சிந்தனைகளும், சொற்களும் என்றும் செம்மையாகத் திகழ நல்வாழ்த்துகள்.

நூல்கள் உருவாகும் பயணத்தில் உங்கள் ஒளிக்கதிர்கள் தொடர்ந்து பரவட்டும்!

எழுத்து வலிமையாக வளர வாழ்த்துகிறோம்!

-பதிப்புக் குழு


திருமதி அனுராதா க்ருஷ்ணஸ்வாமி அவர்களின் ‘ஒரு துளி வெயில்’ மொழிபெயர்ப்புச் சிறுகதை நூல்

ஏப்ரல் 5 சனிக்கிழமை தரு பதிப்பகத்தாரால் ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன. மொழியாக்கம் செய்யப்பட்ட சிறுகதை தொகுப்புகள் இரண்டு. மலையாளத்திலிருந்து தமிழில் அரவிந்த் வடசேரி மற்றும் வட இந்திய மொழிகளிலிருந்து தமிழில் அனுராதா க்ருஷ்ணஸ்வாமியால் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளடங்கிய தொகுப்புகள். ஆவநாழி மின்னிதழ் ஆசிரியர் சுதேச மித்திரனின் ‘கோபுரம் தாங்கி’ சிறுகதை தொகுப்பின் இரண்டாம் பதிப்பு, ஆவநாழி மின்னிதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு மற்றும் ஓவியர் ஜீவா அவர்களின் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. இப்படியாக ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன.

கையடக்கமான வடிவில், கண்களை உறுத்தாத பாந்தமான எழுத்துருக்களுடன் வெளிவந்திருக்கும் இப்புத்தகங்கள் அனைவரும் வாங்கிப் படித்து மகிழும் வகையில் விலை விதிக்கப்பட்டுள்ளன.

அனுராதா க்ருஷ்ணஸ்வாமியின் “ஒரு துளி வெய்யில்” சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பதினோரு சிறுகதைகளில் ஐந்து கதைகள் “சொல்வனம்” இதழில் வெவ்வேறு காலகட்டங்களில் வெளிவந்து பரவலான வாசக கவனத்தை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகங்கை வாங்கி மகிழ தரு பதிப்பகத்தாரின்  9940937599 என்ற மொபைல் எண்ணை அணுகவும்.

அனுராதா க்ருஷ்ணஸ்வாமி அவர்களின் பதிவில் இருந்து

இது நிஜம் தான். ஆனால் நம்ப முடியவில்லை. அப்படி இப்படி என்று என்னுடைய மூன்றாவது புத்தகமும் வெளிவந்துவிட்டது. 

டிசம்பர் 2022 ல் முதல் தொகுப்பு வெளி வந்த செய்தியை காசி விசுவநாதர் ஆலயத்தில் இருக்கும்போது சிறுவாணி பிரகாஷ் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவித்தார். பல்வேறு மொழிகளில் வெளிவந்த, ஆவநாழி மின் இதழுக்காக நான் மொழிபெயர்த்த சிறு கதைகளின் தொகுதி அது. எட்டு இந்திய மொழிகளில் வெளிவந்த மொத்தம் 14 சிறுகதைகள் கொண்ட தொகுதி. சிறுவாணி வாசகர் மையத்துக்காக பவித்ரா பதிப்பகதாரால் வெளியிடப்பட்டது. புத்தகத்தை மகளுக்கு சமர்ப்பித்திருந்தேன். அப்போது கணவரின் கண்களில் ஒரு கேள்வி தொக்கி இருந்தது அடுத்த புத்தகம் யாருக்கு? 

அடுத்த புத்தகம் புக்கர் விருது பெற்ற கீதாஞ்சலி ஸ்ரீ யின ஹிந்தி நாவல் “ரேத் சமாதி”யின் தமிழ் மொழிபெயர்ப்பு ” மணல் சமாதி” 2024 ஜனவரியில் புத்தகக் கண்காட்சியின் போது காலச்சுவடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. கணவர் விரும்பிய படியே அந்த புத்தகத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். அதைப் பார்க்கத்தான் அவர் இல்லை.

இப்போது மூன்றாவது புத்தகம். இதுவும் ஆவநாழி மற்றும் சொல்வனம் மின்னிதழ்களில் நான் மொழிபெயர்த்து வெளிவந்த பல மொழிகளில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. இது என் பெற்றோருக்கு சமர்ப்பணம்.

நன்றி என்ற ஒற்றைச் சொல் என் உணர்வுகளை முழுவதுமாக வெளிப்படுத்தும் வலிமையற்றது என்ற போதிலும், மனமார்ந்த நன்றிகள்.

சில வரிகளால் சில உலகங்கள் – ரா. கிரிதரனின் எழுத்துப் பயணத்தின் சஞ்சாரம்

ரா. கிரிதரனின் “துப்பாக்கி போல் சொகுசாய் பேனா” என்ற விமரிசன கட்டுரைகளின் தொகுப்பும், “சாதகப்பறவையின் காத்திருப்பு” என்ற புனைவு விமரிசன கட்டுரைகளின் தொகுப்பும் அண்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. 

இன்று எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் ரா. கிரிதரன். இவரது காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை தொகுப்பு சிறப்பான விமரிசன அங்கீகாரம் பெற்றது. பரவலான வாசிப்பு, நுண்ணுணர்வுடன் கூடிய தேடல், செவ்வியல் நாட்டம், நவீன பரிசோதனை முயற்சிகளில் ஈடுபாடு என்று ரா. கிரிதரனின் விழைவுகள் புதியன அறிதலும் அறிதலில் ஆழப்படுதலும் ஆகிய திசைகளில் விரிவன. கவித்துவ கற்பனையும் கருத்துருக்களைக் கையாளும் துணிவும் ரா. கிரிதரனின் மொழியமைப்புக்கு ஒரு தனியுருவம் அளித்துள்ளன.அவரது புனைவு போலவே இவ்விரு கட்டுரை நூல்களும் கனமான விமரிசன வரவேற்புக்கு உரியவை. இவற்றை இங்கு பெறலாம்

https://www.commonfolks.in/books/r-giridharan

சாதகப்பறவையின் காத்திருப்பு
₹200
Author: ரா. கிரிதரன்
No. of pages: 252
Language: தமிழ்
Published on: 2025
Book Format: Paperback
Category: கட்டுரை
Subject: இலக்கியம், விமர்சனம்
Description
ஆர் சண்முகசுந்தரம், ஜெயகாந்தன், சல்மான் ருஷ்டி முதல் இன்று எழுதிக்கொண்டிருக்கும் சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன் வரை வெளியான நவீனப் புனைவு நூல்கள் குறித்த இலக்கிய விமர்சனம்.

துப்பாக்கிப் போல சொகுசாய் பேனா
₹180
Author: ரா. கிரிதரன்
No. of pages: 201
Language: தமிழ்
Published on: 2025
Book Format: Paperback
Category: கட்டுரை
Subject: இலக்கியம், விமர்சனம்
Description
நம்மாழ்வார், பாரதியார் முதல் இன்று எழுதிக்கொண்டிருக்கும் கண்டராதித்தன் வரை வெளியான நவீன கவிதை மற்றும் அபுனைவு நூல்கள் குறித்த இலக்கிய விமர்சனம்.



Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “‘சொல்வனம்’ எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.