சூரிய தரிசனம்

முடங்கிய நிலையிலே
முட்டி நிற்கும்
காகிதக் கப்பலைத்
திசை திருப்பி நகர்த்திவிடும்
விரல்களைப் போல்—
துள்ளலற்ற
இந்த நேரத்தையும்
திசை திருப்ப
துள்ளல் மிக்க
இசையை இசைக்கிறேன்…
“கடக்க முடியாத தூரம்
எங்கு இருக்கிறது?”
வழிகாட்ட
தீர்க்கமான
ஒரு நல்லிதயம் போதும்.
சன்னலின் கட்டுப்பாட்டிலிருந்து
விடுபட்டு வளரும் கிளைக்கே
வாய்க்கிறது—
நேரடி சூரிய தரிசனம்!
காயங்கள்
என் மௌனத்தின் மீது
சிற்றெறும்பு என
நுகர்ந்தபடி செல்கின்றேன்..
வழிநெடுங்கிலும்
காயங்கள் ..,.
காயங்கள் மீது
மின்மினியென
பறந்து கொண்டிருக்கின்றன…
நிறைவேறிய
நிறைவேறா
பல கனவுகள்….
அதன் பெரும் பசிக்கு
எப்போதும் தீனி
நான்.
உண்மை
உன் இருளை
அவ்வளவு
அலங்காரம் செய்து
பெட்டிக்குள் பூட்டி வைத்திருந்தாய்.
ஆனாலும்,
உனக்குள்ளிருக்கும் ஒளிவிரல்
நீண்டு
உன்னையுமறியாமல்
திறந்துவிடுகிறது.
என்ன செய்வாய்?
விலகிச் சென்றதற்கு
நாம் மட்டுமா காரணம்?
நம் ஒளியும்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
