கரானா – மறையும் சுவடுகள் – ஹிந்துஸ்தானி இசை உலகம்

நண்பர் ராகா சுரேஷ் எழுதிய ‘கரானா’ எனும் நாவல் வடக்கு கர்னாடக மாநிலத்தில் அமைந்த நிப்பூர் எனும கிராமத்தில் வளரும் ஒரு இசைக்கலைஞரின் சிறு வயது வாழ்விலிருந்து தொடங்கினாலும், மும்பையிலும் கராச்சியிலும் வாழும் ஹிந்துஸ்தானி உஸ்தாத்களின் இருவேறுப் பரம்பரைக் கதைகளை இணைக்கிறது. கரானா என்பது ஒரு தேர்ந்த இசைக்கலைஞரின் நிழலடியில் துவங்கும் ஒரு இசைப்பள்ளி அல்லது இசை பாணி எனத் தோராயமாக விளக்கிக்கொள்ளலாம். பல சிஷ்யர்களும் குரு பரம்பரைகளும் அவர்கள் அனைவரையும் இணைந்திருக்கும் ஒரு உயிர்ப்பான இசைப்பள்ளி. ஒவ்வொரு இசை பாரம்பரியத்துக்கும் நீண்ட வரலாறும் பல இசைக்கலைஞர்களின் வாழ்வும் சேர்ந்திருக்கும். மாபெரும் இசை ஆசிரியரின் சாதனைகளைத்தொகுத்து இசைபாணியை மையமாகக் கொண்டிருக்கும் கரானாக்கள் குருகுல வாசமாகவே அமைந்திருக்கும். ஒவ்வொரு கரானாவுக்கும் ஒரு பிரத்யேக பாணியும், பாடாந்திரமும் அமைந்திருக்கும். இந்தியாவில் ஜெய்ப்பூர் கரானா, பாடியாலா கரானா, கிரானா கரானா எனப் பலப் பிரபலமான கரானாக்கள் உண்டு. குடும்பங்களைக் காட்டிலும் மிகவும் வலுவான உறவுகளாக அமைந்திருக்கும் குரு சிஷ்யன் உறவுகளும், சொந்த குழந்தைகளைக் காட்டிலும் வலுவான பிணைப்பைக் கொண்டிருக்கும் இசைக்கலைஞர்களும் கரானாக்களின் மையம். தந்தை தாய்க்குக் கூட இல்லாத உரிமை குருக்களுக்கு அங்கு உண்டு.

சந்திரகாந்த் எனும் சிறுவனின் பயணத்திலிருந்து தொடங்கும் கதை என்றாலும் மிக எளிமையான ஆனால் நிதர்சனமானத் தொடக்கம். கர்னாடக மாநிலத்தின் தார்வாட் பகுதியிலிருக்கும் நிப்பூர் எனும் சிறு கிராமத்தில் வளரும் சிறுவன் சந்திரகாந்த். இசையுடன் எவ்விதமான பிணைப்பும் இல்லாத குடும்ப சூழல். கிராமத்தின் மையத்தில் இருக்கும் சிறு மடம். அதில் இருக்கும் சாமியாருக்கு இசை பயிற்சி உண்டு. ஊரிலிருப்பவர்களுக்கு எவ்வித சிக்கல் வந்தாலும் மடத்தின் சாமியாரிடம் ஆலோசனை பெறுவார்கள். சந்திரகாந்துக்கு பிறவியிலேயே இசை ஆர்வம் மிகுதி. மேலும் பல பாடல்களை ஒரு முறை கேட்டதும் பாடக்கூடிய திறமை உள்ளவன். பம்பாயிலிருந்து தனது இசைக்குழுவினரோடு வந்திருந்த நிசார் கான் எனும் சோட்டே உஸ்தாதின் கச்சேரியில் பாடிய பாடல்களை சந்திரகாந்த் மீண்டும் இம்மி பிசகாமல் பாடிக்காட்டுவதோடு புது சங்கதிகளையும் சேர்க்கிறான். சந்திரகாந்தின் இசைத் திறமை எல்லாருக்கும் தெரிந்தாலும், ஒரு பெரிய உஸ்தாதின் பாணியை கேட்டதும் பாடக்கூடியவன் என யாரும் அதுவரை நம்பவில்லை. பம்பாய்க்கு வந்தால் பாட்டு கற்றுக்கொடுப்பதாகச் சொன்னதால் நிசார் கானைப் பின் தொடர முடிவு செய்கிறான். ஒரு முஸ்லிம் வீட்டில் தங்கி இசை கற்றுக்கொள்வதை முதலில் ஆட்சேபிக்கும் சந்திரகாந்தின் பாட்டி, சந்திரகாந்தின் நண்பன் உடன் வருவதால் வேண்டா வெறுப்போடு ஒத்துக்கொள்கிறாள்.

மிகச் சரியான இடத்திலிருந்து நாவல் தொடங்கியுள்ளது. ஹிந்துஸ்தானி இசையின் நுணுக்கங்களை இயல்பாகக் கற்றுக்கொள்வதற்கு ஒரு இசை பாரம்பரியத்தில் பிறப்பது மட்டுமே முதன்மை என்றிருந்தாலும் பல பெரிய கலைஞர்கள் அவ்விதியை மிகச் சாதாரணமாகத் தகர்த்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஹரிபிரசாத் செளராஸியா, அல்லாவுதின் கான், பன்னாலால் கோஷ் எனும் பெரிய வரிசை எவ்விதமான இசைப் பின்னணியிலும் துவங்கியதல்ல. பார்க்கயியலாத அப்படிப்பட்ட விதியின் கைகள் சந்திரகாந்தைப் பற்றின. ஹிந்துஸ்தானி இசைக்கலைஞரைப் பற்றிய ஒரு நவீன நாவலுக்கு இது மிக அருமையானத் தொடக்கம். கதை அங்கிருந்து பம்பாயில் தொடர்கிறது.

பம்பாய் வந்தபின் நிசார் கான் எனும் சோட்டே உஸ்தாதுடன் சந்திரகாந்தின் இசைப் பயிற்சி தொடங்குகிறது.. ஜாபர் அலி எனும் படே உஸ்தாத் அவர்களின் மகனான நிசார் கான் தனித்துவமான இசைக்கலைஞர். சிறு வயதிலிருந்து ஜாபர் அலியுடன் கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது அந்த ஊரில் இருந்த பல பிரலமான இசை வல்லுநர்களிடமும் இசை நுணுக்கங்களைப் பயின்றவர். ஒவ்வொரு கரானாவுக்கு ஒரு அடிப்படை பாணி ஒன்று அமைந்திருக்கும். சில கரானாக்கள் இசை உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் – கிரானா கரானா எனும் பாணியில் இனிமை கூடிய இசை முக்கியத்துவம் பெறும். இசையின் இனிமை, செளந்தர்யம், ‘பாவம்’ போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுப்பதால் அதிவேக தாளங்களில் இசை அமைந்திருக்காது. மெதுவான தாளத்தில் இனிமை கூடிய பாவனை அமைந்திருப்பதால் இசையில் நிதானம் கூடி இருக்கும். சில கரானாக்களில் நுணுக்கமான தாளங்களுக்கும் அதிவேக கணக்குகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் (பாடகி கெளஷிகி சக்ரவர்த்தி ஒரு உதாரணம்) ஒரே குருவிடம் கற்றுக்கொண்ட இருவேறு கலைஞர்கள் தங்கள் பாணியில் வேறுபடுவதையும் நாம் காண முடியும். அதாவது ஒரே குருகுலத்திலிருந்து வரும் இரு வேறுக்கலைஞர்கள் தங்கள் இசை வெளிப்பாட்டு முறையில் வேறுபடுவதைப் பார்க்கலாம். கலைஞர்களின் அகத்தேடலும் இதில் முக்கிய பங்கு பெறும். அன்னபூர்ணா தேவியிடம் பயின்ற பண்டிட் ஹரிபிரசாத் செளராஸியா அவர்களும் பண்டிட் நித்தியானந்த் ஹல்திபூர் அவர்களும் மனோதர்மத்தில் நேரதிராக அமைந்திருப்பார்கள். ஒருவரிடம் மிகச் சிக்கலான சங்கதிகளைப் பார்க்க முடியும். மற்றொருவர் இனிமை மற்றும் ஸ்வர துல்லியத்தை மட்டுமே மையப்படுத்துவதை கேட்பவர்கள் உணர முடியும். ஒரே குருவிடம் பயின்றவர்கள் இருவேறு வகையான இசை பாணிகளில் அமைந்திருப்பது கச்சேரிகளில் அவர்கள் முன்வைக்கும் இசை பாணியிலும் தெரியும். மேலும், அன்னபூர்ணா தேவியிடம் கற்றுக்கொள்வதற்கு முன்னரே ஹரிபிரசாத்ஜி பாலியுட் இசை உலகில் ஒரு இசையமைப்பாளராக உருவாகிவிட்டதும் ஒரு காரணம்.

சந்திரகாந்தும் நண்பர் ஷாந்திநாத்தும் நிசார் கான் இருப்பிடத்தைத் தேடி அடைந்த பின்னர் ஜாபர் கானிடம் இசை கற்றுக்கொள்ளத் தொடங்கியது ஒரு மாபெரும் கலைஞன் சிறுவனின் திறமையை கண்டுகொண்ட கதை எனலாம். ஒரு பெரிய இசைப்பள்ளி ஆலமரம் போன்றது. அதில் இருக்கும் பெரிய வலைப்பின்னல் பல குரு பரம்பரைகளையும் குருமார்களையும் தொட்டுச் செல்லும். ஜாபர் கான் எனும் பெரிய ஆலமரத்தைத் தரிசிக்கத் துவங்கியதும் அவரைச் சுற்றி பின்னலாக விரிந்திருந்த கரானாவின் பல சுவையான கதைகள் சந்திரகாந்தின் காதுகளை அடைந்தன. உண்மையை விட உண்மைத் தோற்றத்திற்கு அதிக வசீகரம் உண்டு. ஜாபர் கானைப் பற்றி பல சுவையான சம்பவங்களைக் கேள்விப்பட்டாலும், ஜாபர் கானின் நண்பரும் ஹார்மோனியக் கலைஞருமான முஸ்தபா கான் எழுதத்தொடங்கிய நாட்குறிப்புகள் கரானாவின் ஆதிக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

ஜாபர் கான் வீட்டில் முஸ்தபா கானின் இசை ஒலிக்காத நாள் இல்லை. பக்கவாத்தியத்துக்கும் மைய இசைக்கலைஞர்களுக்கும் இருக்கும் உறவு என்றும் அலாதியானது. கிட்டத்தட்ட ஒரு நிழல் போல பக்கவாத்தியக்காரர்கள் வாக்யேக்காரர்களைத் தொடர்ந்து பயணிப்பார்கள். சுருதியோடு இயைந்து செல்லும் தாள பாணிகளும் கரானாவின் தனிப்பட்ட சொத்தாகப் பார்க்கப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் தாளம் என்பது இசையின் மையம். லயத்தின் சுழற்சி தன் மனப்போக்கில் பயணம் செய்தபடி இருக்கும். அந்த லயத்தின் பல சாத்தியங்களுக்கு இடையே தங்கள் பாடலை அல்லது இசையை இசைக்கலைஞர்கள் உருவாக்குவார்கள். விலாயத்கான், ஷாஹித் பர்வேஸ் கான் போன்றோர் லயத்தின் விற்பன்னர்களாக அறியப்படுகிறார்கள். ஒரே தாளகதிக்குள் ஸ்வரங்களை நிரப்புவதும் , ஒரே ஸ்வரத்தை நீட்டுவதும் என காலத்தோடு அவர்கள் விளையாடும் விளையாட்டுகள் பிரசித்தி பெற்றவை. ஜாபர் கானுக்கும் முஸ்தபாவுக்கும் இடையே அமைந்திருக்கும் இசையைக் கடந்த நட்பு கதை முழுவதும் நம்முடன் பயணிக்கிறது. அதே போல ஜாபர் கானின் சிறுபிள்ளைத்தனங்களையும் மன்னித்துவிடும் குணத்தை நாம் முஸ்தபாவிடம் பார்க்க முடிகிறது.

சிறுவனான சந்திரகாந்தின் பயிற்சியிலிருந்து கதை முஸ்தபாவின் நாட்குறிப்புக்குள் சென்று சேரும் இடம் கரானாவின் வரலாற்றை சொல்லத் தொடங்கும் இடம். ஜாபர் கான் என்பவர் யார்? அவரது இசையின் தொடக்கம் என்ன எனும் கேள்விகளிலிருந்து கரானாவின் ஆரம்ப காலங்களுக்குள் கதை செல்கிறது. சுதந்திரத்துக்கு முன்னான காலத்தில் அமைந்திருப்பதால் வரலாற்றின் சிறு பின்னல்களும் கதையினூடாகச் சொல்லப்படுகிறது. நம் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய வகையில் வரலாற்றுப் பாடம் இல்லை. அது இந்த நாவலின் வேகத்துக்கு உதவியிருக்கிறது என்றாலும் நாவலின் பலகீனமும் இதுதான். பல தலைமுறைகளின் கதையைச் சொல்ல முற்படும்போது நாம் கால மாற்றத்தையும், மனிதர்களின் எழுச்சி வீழ்ச்சிகளை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. ஒரு காலமாற்றம் என்பது ஏதோ ஒரு விழுமியத்தின் சரிவு அல்லது ஏற்றம் தான். மனிதர்களோடு மட்டுமல்லாது காலத்தோடும் தொடர்புடையதாக நாம் விழுமியத்தைப் பார்க்கிறோம். கரானாவின் அகண்ட காலத்தில் எல்லா முக்கியமான கட்டத்திலும் இசையோடு குருதித் தொடர்பில்லாத ஒருவர் சிறு கல்லைப்போட்டு நீரின் பாதையை மாற்றுவது போல எதிர்காலத்தைத் திருத்திச் செல்கிறார்.

ஜாபர் அலி எனும் வாதி

ஜாபர் அலியின் தந்தை தில்ஷாத் அலிகான் மும்பையின் அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். முஸ்தபாவின் தந்தையும் தில்ஷாத் அலிகானும் நண்பர்கள். முஸ்தபாவை போல ஜாபர் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தது கண்டு தில்ஷாத்துக்கு மிகுந்த வருத்தம். இசை பாரம்பரியம் அல்லாத குடும்பத்திலிருந்து ஒரு பெரிய உஸ்தாத் உருவாக முடியாது எனத் திடமாக நம்பியவர். கிட்டத்தட்ட சந்திரகாந்தின் பாட்டியைப் போல. ஜாபரின் பிடிவாத குணத்தினால் அக்காலத்தில் பிரபலமாக இருந்த உஸ்தாத் சஜத் ஹுசைனிடம் சேர்த்துவிட முனைந்து வெற்றியும் அடைகிறார். உஸ்தாத் சஜத் ஹுசைன் மிகப்பிரபலமான இசைக்கலைஞராக இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர். அவரிடம் கற்றுக்கொள்ள பலரும் காத்திருந்தாலும், ஜாபரின் முனைப்பு அவரை பிரதான சீடராக உருவாக்குகிறது.

ஹிந்துஸ்தானியில் வாதி ஸ்வரம் என்பது ராஜாவைப் போன்றது. ஒரு ராகத்தின் தலைமை ஸ்வரமாக வாதி ஸ்வரம் அமைந்திருக்கும். கரானாவின் மைய இசைக்கலைஞராக உருவாவதோடு மட்டுமல்லாது சஜத் ஹுசைன் அடையாளம் காட்டும்படியான பிரதான சீடராகவும் உருவாகி வரும்போது ஜாபர் காதல் வசப்படுகிறார். சமூக அமைப்பில் ஜாபரின் குடும்பம் மிகவும் தாழ்ந்தது என்பதால் சஜத் ஹுசைனுக்கு இந்த திருமணத்தில் ஒப்புதல் இல்லை. சிறு லய பிசகில் தாளத்தோடு இயையாத ஸ்வரம் இனிமையை கைவிடுவது போல ஜாபர் கான் மற்றும் மனைவி மெஹருனீசா இணை மீது சஜத் ஹுசைனுக்கு தீராத பகை உருவாகிறது. அதுவரை சஜத் ஹுசைனை விடத் திறமையான இசைக்கலைஞர் எனப்பெயர் வாங்கியிருந்த ஜாபர் கான் மெல்ல கச்சேரிகளில் பிரபலமடையத் தொடங்கியிருந்தார். அப்படி ஒரு கச்சேரியில் தான் சஜத் ஹுசைனின் மாணவனாக உருவாகும் வாய்ப்பும் ஜாபருக்குக் கிடைத்திருந்தது. அதை இத்தனை விரைவாகக் கெடுத்துக்கொண்டது ஜாபரின் குடும்பத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. மெஹருனீசா பணக்காரப்பெண்ணாக வளர்ந்ததால் ஜாபரின் இல்லத்தில் எப்படி சேர்ந்து இருப்பாள், பிற உறவினர்களிடம் எப்படிப் பழகுவாள் எனும் குழப்பங்கள் ஒரு புறம், மற்றோரு புறம் இந்தியாவின் பிரலமான உஸ்தாதின் சீடர் தன்னுடைய தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக்கொண்டது மற்றொரு புறம். நாவலின் மைய நாடகத்தருணங்கள் இப்பகுதியில் அமைந்திருக்கிறது.

சஜத் ஹுசைன் பரந்த மனதுடையவர் என்பதால் ஜாபரை சீடராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கும் ஒரு கணக்கு உண்டு. அவருடைய வாரிசாக வருமளவு திறமையான சீடர்களை அவர் உருவாக்கவில்லை. சீடர்கள் எந்தளவு குருவின் பாதையை மதித்து இசைபாணிகளை செழிக்க வைக்கிறார்கள் என்பது ஒரு கரானாவின் முக்கியமான குறிக்கோளாகப் பார்க்கப்படுகிறது. கரானாக்களின் வெற்றியும் அதை நம்பியே உள்ளது. பல கரானாக்களில் குருவின் பாடங்களை வெளியே யாருக்கும் கொடுக்காமல் இருப்பதோடு, கரானாக்குள்ளேயே யாருக்கு எவ்விதமான இசையைக் கற்றுத்தர வேண்டும் எனும் தர வரிசை கூட உண்டு. அதனால் ஒரு ரகசிய குழு போல விளங்கும் கரானாவின் மையம் அதன் திறமையான சீடர் குழுவினால் அமையப்பெறும். அப்படிப்பட்ட சீடர்கள் யாருமில்லை, தன்னுடைய இசை பாணிக்குத் தொடர்ச்சி இல்லை எனும் குழப்பத்தில் சஜத் ஹுசைன் இருந்தபோது ஜாபர் அவரை அறிமுகம் செய்துகொண்டார். தற்செயலாக நிகழ்ந்தது என்றாலும் வரலாற்றில் தற்செயல்களின் திசை முடுக்கம் பல சமயங்களில் திட்டவட்டமாக உருவாக்கப்படும் சம்பவங்களால் கூட நிகர் செய்ய முடியாது. அப்படி ஒரு விதியின் மறை முடுக்கம் ஜாபரை சஜத் ஹுசைனிடம் கொண்டு வந்து சேர்ந்திருந்தது.

இதே போன்ற ஒரு நெருக்கடி ஜாபர் கானுக்கும் தன் கடைசி காலத்தில் ஏற்படும். தனது பாணி இசையை ஏந்திச் செல்ல வாரிசு இல்லாமல் அவர் குழம்பும் நேரத்தில் விதி வேறொரு சீடரை கொண்டு சேர்க்கும். நாவல் முழுவதும் இப்படிப்பட்ட வரலாற்று தருணங்கள் எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் வந்தபடி இருக்கிறது. தருணங்களின் தொகுப்பாக நாம் வரலாற்றை பகுத்துப்பார்த்தால் மனிதர்களின் வாழ்வில் இப்படிப்பட்ட முன் திட்டமில்லாத எத்தனையோ பெரிய சம்பவங்கள் கோர்க்கப்பட்டிருப்பதை நம்மால் உணர முடியும். நாவல் நெடுக இப்படிப்பட்ட திசை மாற்றங்களை நாம் எதிர்பார்த்திராத இடங்களில் ஆசிரியர் அமைத்துள்ளார். அதற்கு முன்னும் பின்னும் பெரிய பீடிகையில்லாமல் இருப்பதால் நாவலில் ஒரு நிதானம் கூடி உள்ளதோடு மட்டுமல்லாது நிதர்சனத்தோடு ஒட்டியும் அமைந்துள்ளது. சம்பவங்களைச் சொல்வதில் இப்பாணி சற்று உதவியிருந்தாலும் உயிர்ப்பான நாடமாக ஆகும் சாத்தியங்களை இப்பகுதிகள் கைவிட்டது என்றும் தோன்றுகிறது.

ஹிந்துஸ்தானி இசையில் ஸ்வரங்களை அணுகும் விதத்தில் சில குணங்கள் உண்டு. பிரதானமான ஸ்வரங்களில் நிறுத்திப்பாடும் வழக்கத்தை ‘நியாஸ்’ எனக்கூறுவர். அது ஹிந்துஸ்தானி இசையில் மிக முக்கியமான சொல். நியாஸ் என்பதை கிட்டத்தட்ட தியானச்சொல் எனலாம். நிதானமாகச் செல்லும் இசையில் இப்படிப்பட்ட இடங்கள் இசையின் சுவையைக் கூட்டும். ஜாபரின் வாழ்வில் திருமணத்துக்குப் பின் இசை அவரது உலகில் நிதானமாக சுவையை கூட்டியது எனலாம். கிட்டத்தட்ட ஏறுமுகம் மட்டுமே கொண்ட காலம். வாழ்வின் ருசியை அவர் நியாஸ் செய்த காலமும் கூட. இந்திய பிரிவினை காலகட்டம் என்பதல் சஜத் ஹுசைனின் குடும்பம் கராச்சிக்கு இடம் பெயர்ந்துவிடும். பம்பாயில் தங்கிவிடும் ஜாபர் கானின் இசை வாழ்க்கை ஒரு தியானம் போல மிக ஆழமாக வேரூன்றும் காலம். அதே சமயம், சஜத் ஹுசைனின் குடும்பத்தினர் இவர் மீது காட்டிய வெறுப்பும் வளர்ந்தபடி இருந்தது. கராச்சிக்குச் சென்றால் கொலை கூட செய்துவிடுவார்கள் என்பதால் ஜாபரும் மெஹ்ருனீசாவும் பம்பாயிலேயே தங்கிவிடுகின்றனர். ஒரு கட்டத்தில் சஜத் ஹுசைன் இறந்து போகிறார். செய்தி கேட்டதும் ஜாபர் எவ்விதமான உணர்ச்சியையும் காட்டவில்லை. அவரது உத்தரவுக்காகக் காத்திருக்கும் மெஹ்ருனீசா தனது அப்பாவை கடைசியாகப் பார்க்கக்கூட செல்லாது மனது வெறுத்துப்போகிறாள். குரு என்பதைத் தாண்டி தன்னை இழிவுப்படுத்தியவர் எனும் பிம்பம் ஜாபர் கானிடம் தங்கிவிட்டதால் சஜத் ஹுசைனின் சாவுக்கு யாரும் செல்லவில்லை. முற்றிலும் புதுவிதமான ஜாபரை மெஹ்ருனீசா உணர்கிறாள். அவளது உலகம் மெல்ல இருளை நோக்கிச் செல்கிறது.

அடுத்த சில மாதங்களில் நெஞ்சு வலியில் மெஹ்ருனீசா இறக்கிறாள். அப்பாவின் நினைவில் அவளது இதயம் பலகீனம் அடைந்திருக்கலாம் என பலரும் வெளிப்படையாகப் பேசுகின்றனர். இது குடும்பத்தில் தொடரும் இதயக்கோளாறு என்பதை பிற்காலத்தில் நிசின் கான் இறக்கும்போது நாம் உணர்கிறோம். நிசின் கான் மற்றும் ரஷீத் இருவரும் சிறு குழந்தைகளாக எதுவும் புரியாமல் நின்றிருக்கும்போது முஸ்தபாவும் ஜாபரும் அன்பின் முழு சொரூபமாக அவர்களை வளர்க்கிறார்கள். கராச்சி கரானாவுடன் ஜாபரின் உறவை நிரந்தரமாக இது பிரித்துவிடுகிறது. அடுத்த இருபது வருடங்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையே ஜாபர் குழந்தைகளை வளர்க்கிறார். கதையை அதிகம் சொல்லப்படாமல் இருந்தாலும், ஒரு தந்தையாக அவர்கள் இருவருக்கும் தேவையான இசை ஞானத்தை வழங்குவதை ஓரிரு பத்திகளில் ஆசிரியர் விளக்கிவிடுகிறார்.

நாவலில் நேரடியாக எழுதப்படும் சம்பவங்களின் தொடர்ச்சியில் அதிக சாரம் இல்லாவிட்டாலும், ஆழமாகச் சொல்லப்படும் சில பகுதிகள் கதையின் தரத்தை உயர்த்துகிறது. குறிப்பாக ஒரு கரானாவை முன்னின்று வளர்த்து ஒரு உயிர்ப்பான இசைப்பள்ளியாக மாற்றுவதற்காக ஒவ்வொரு முறையும் வெளியிலிருந்து யாரேனும் ஒரு இசைக்லைஞர் உள்ளே நுழைந்து அடித்தளத்தை மேலும் ஸ்திரப்படுத்துகிறார். ஜாபர், சந்திரகாந்த், வைஷாலி, ஞானப்பிரகாஷ் என ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தேடல்கள் உண்டு. எல்லா நேரங்களில் அவை இசை தொடர்பாக இருப்பதில்லை. ஜாபர் கானுக்கு சமூகத்தில் பலரும் அறியப்படும் இசைக்கலைஞராக ஆக வேண்டிய வேட்கை காலம் முழுவதும் துரத்துகிறது. ஞானப்பிரகாஷின் தூண்டுதலால் சந்திரகாந்தின் அகத்திலிருந்து வெளிப்படும் இசை இலக்கணங்களையும் மீறி புது தடங்களைப் போடுகிறது. இனிமையான குரலுக்குச் சொந்தக்காரியான வைஷாலி ஒரு கலகக்காரியாக அறியப்பட்டாலும், இசை அவளை ஒரு கட்டத்தில் பண்படைய வைக்கிறது. குருவை மீறும் போக்கு இவர்கள் அனைவருக்கும் இருந்தாலும், இசையின் சுழல்பாதை போல ஒருகட்டத்தில் இவர்கள் அனைவரும் இசையின் மகத்துவத்தை மீற முடியாத இடத்துக்கு சென்றுவிடுகிறார்கள். இசையை விட தனது இருப்பு மேலானது எனும் நிலையை மீறிச் செல்லும்போது என்றும் வாழும் துருவ நட்சத்திரமாக இசை மட்டுமே நிற்கும் என்பதை வைஷாலி முடிவில் உணரும் இடம் மிகவும் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.

சந்திரகாந்தின் பயிற்சியின் போது நிசார் கான் இறந்துவிடுகிறார். அடுத்த சில நாட்களில் திருமணம் நடக்க இருக்கும் நேரத்தில் இப்படி நடந்தது ஜாபர் கானின் குடும்பத்தை நிலை குலைய வைக்கிறது. மெல்ல அவரது புகழ் மங்கி வந்ததாலும் அவரது தனிப்பட்ட சோகத்தாலும் இசைக் கச்சேரிகளும் வாய்ப்புகளும் அவருக்குக் குறைந்தன. மனம் உடைந்து போகும் சந்திரகாந்த் தனது சொந்த கிராமமான நிப்பூருக்குத் திரும்பச் செல்கிறான். இசையிலிருந்து தூர விலகிச் சென்று விடுவதோடு பாட்டியிடம் கூட சரியாகப் பேசாமல் காலத்தைக் கடத்துகிறான். ஒரு பைராகியாகச் சுற்றியிருந்த ஞானசேகரன் வழி இசைக்குள் சந்திரகாந்த் மீண்டும் நுழைகிறான். ஜாபர் கானின் கரானாவின் முக்கியமானத் தொடர்ச்சியாக அவன் மாறுவதும் கதையில் நிகழ்கிறது. யாருமற்ற வெளியில் அவன் மட்டும் இருப்பதாக நினைக்கும்போது அவனது சிஷ்யை வைஷாலி முன்வந்து கரானாவின் தொடர்ச்சியாக அமைவதோடு நாவல் முடிவடைகிறது.

நாவலின் வடிவத்தில் சில சிக்கல்கள் ஆசிரியரின் தனிப்பட்ட இலக்கிய ரசனை சார்ந்தது. இது ராகா சுரேஷின் முதல் நாவல். இதற்கு முன்னர் அவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் எல்லாம் பல பரிசுகள் வென்றவை. சுரேஷின் ரசனை அசோகமித்திரன் உலகைச் சார்ந்தது. மிகக் கறாரான புறவய உலகில் சிக்கனமான சொல் களஞ்சியத்தைக் கொண்டு மிக விரிவான வாழ்வையும் விழுமிய மாற்றங்களையும் காட்டியவர் அசோகமித்திரன். அவரது உலகில் இருக்கும் நிதானம், சொல் களஞ்சியத்தின் எளிமை, சொல்ல வருபவற்றை சில பத்திகளில் சொல்லிவிடும் வழிமுறை, பெரிய கேன்வாஷில் காட்டாமல் சுருங்கச் சொல்வது போன்றவை இந்த நாவலிலும் உண்டு. அவை சிறுகதைக்கு உரியவை. அந்த இலக்கிய மை கொண்டு இந்த நாவலை எழுத முற்பட்டது வடிவ ரீதியாக சிக்கல்களை உருவாக்கி உள்ளது.

அடுத்ததாக, ஸ்வராலாபனை போல மீண்டும் மீண்டும் மையக்கருவை தொட்டு மீட்ட வேண்டியது நாவலின் அடிப்படை. ராக ஆலாபனை ஒரு மலர் போல விரிவடைவது போல ஒவ்வொரு ஸ்வரமாக வெளிப்படும். ஒரு ஸ்வரத்துக்கு வந்து சேர வேண்டிய வழி பலவிதங்களில் இருக்கும். சில ராகங்களில் சில வழிகளுக்குத் தடையுண்டு. சில ராகங்களில் இலக்கண ரீதியிலான தடை இல்லாவிட்டாலும், ரசனை பூர்வமானத் தடைகள் உண்டு. லஷ்ணமும் லஷ்யமும் ஒன்றுக்கு ஒன்று கொண்டுகொடுத்துள்ளதால் நாம் பார்க்கும் நெகிழ்வான ராக பாணி இன்றளவும் வளரும் சித்திரமாக இசை உலகில் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட நெகிழ்வுத்தன்மை நாவல் எனும் கட்டமைப்பிலும உண்டு. திட்டவட்டமான வடிவ இலக்கணம், வாசிப்பின் ரசனை, கதையின் விரிவாக்கம் போன்றவற்றிலிருந்து பெற்றுக்கொண்ட விதிகள். சில சஞ்சாரங்களில் காட்டக்கூடிய மையக்கருவை விரித்தும் திசை மாற்றியும் காட்ட வேண்டியது நாவலாசிரியனின் வழி. அங்கு கதை சொல்லப்படக்கூடாது. நிகழ்ந்திருக்க வேண்டும். இந்த நாவலில் கதாபாத்திரங்கள் வழியாகக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. வாசகனாக கதாபாத்திரங்களுடன் பயணம் செய்யும், உணர்ச்சிகளை தனதாக உள்வாங்கி அந்த உலகத்தில் நுழைந்துகொள்ளும் வாசல்களை ஆசிரியர் மூடிவிட்டார். இது நாவலின் முக்கியமான குறைபாடு.

நாவல் பகுதிகள் ஒரு சிறுவனின் இசை உலக வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றி செல்லும்படி தொடங்கியிருந்தது. அது அப்படியே வளர முடியாதபடி அச்சிறுவனுக்க்கு அமைந்த குருவைப் பற்றிய கதை மையப்பகுதியாக அமைந்துவிட்டது. அச்சிறுவனின் உணர்வைப் பிந்தொடர்ந்து நாமும் பம்பாய் செல்லும்போது திடுமென ஜாபரின் கதைக்குள் நுழைந்ததினால் வாசகனாக எனக்கு யார் மீதும் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. இந்தக் கவனச் சிதறலை ஆசிரியர் பல குரல் தன்மையில் விரியும் கதை கூறல் முறையில் சரி செய்திருக்க முடியும். சொல்லப்போனால், சந்திரகாந்தின் வாழ்க்கைப் பயணமும் ஜாபரின் பயணம் அதிக வித்தியாசமில்லாதது. இரு வேறு காலகட்டங்களில் உன்னதக் கலைஞர்களாகத் திகழ்ந்த இரு வேறு இசை உஸ்தாதுகளின் கதையை அருகருகே கொண்டு சென்றிருக்க முடியும். கதைக் கருவை விரிவாக்கவும், இருவேறு காலகட்டத்தில் கரானாவின் விழுமியங்களின் மாற்றங்களை வாசகர்கள் உணர்ந்துகொள்ளவும் இந்த பாணி ஏற்றதாக இருந்திருக்கும். இது நாவலின் கதைகூறல் பாணியின் குறை,

ஜாபர், சஜத் ஹுசைன் இருவரின் இசை பாணியில் இருந்த வித்தியாசங்களையும், கரானாவின் தனித்துவத்தையும் விரிவாக விளக்க ஆசிரியர் முனையவில்லை. அதற்கான இடம் இருந்தும் அவற்றை தவிர்த்ததுக்கு ஒரு காரணத்தை நம்மால் ஊகிக்க முடியும். நாவலின் கதை ஓட்டத்தை தடுக்காமல் இருக்கவும், கடினமான இசை விளக்கங்களைக் கொண்டு நாவலின் தீவிரத்தன்மையை அதிகமாக்க அவர் விரும்பவில்லை என ஒரு வாசகராகவும், ராகா சுரேஷின் இசை அனுபவத்தை இத்தனை ஆண்டு காலமாகத் தொடர்ந்து வந்திருக்கும் நண்பன் எனும் முறையும் என்னால் உணர முடிந்தது. ஒரு தீவிரமான நாவலை சுரேஷால் எழுதி இருக்க முடியும். யுவன் சந்திரசேகர், தி.ஜானகிராமன் போன்றோர் எழுதிய இசை சார்ந்த நாவல்களை வாசித்தவர்கள் நாம். தமிழில் அதற்கான வெளி இருப்பதை நவீனத் தமிழிலக்கிய வாசகனாக என்னால் உணர முடிகிறது. இதே கதையை தமிழில் எழுதுவதன் மூலம் அந்த வாய்ப்பை ஆசிரியர் உபயோகிக்க முடியும்.

இவை அனைத்தையும் மீறி நாவல் ஒரு புது உலகைச் சித்தரித்ததில் வெற்றி கண்டிருக்கிறது. அதிகம் வெளியே தெரியாத உலகம், பல பூடகங்களும், உண்மை பாவனைகளும், உண்மைகளும், காழ்ப்புகளும், பொறாமைகளும் கொண்ட உலகம். மனிதர்களால் உருவாக்கப்படுவது என்பதால் மட்டுமே இவை அனைத்தையும் கொண்டிருக்கும் ஒரு வெளி – ஆனால் அந்த உலகம் எதிர் நோக்கி நிற்பது தூய இசைக்கான சாத்தியங்களை மட்டுமே. ஒவ்வொரு தனி மனித அகத்தையும் மீறி எட்டமுடியாத இடத்தில் இசை சஞ்சரிக்கிறது என்பதை காட்டியிருக்கும் மற்றொரு நாவல்.

Gharana, Suresh Sundaresan
Price : ₹600.00
Published by: South Side Books
316 pages
Publication date: 1 January 2024
ISBN: 9788194324676


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.