கொல்கத்தா மருத்துவ மாணவி, மருத்துவமனை வளாகத்தில் வைத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான செய்திகள், தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. தொலையியக்கியால் (Remote) ஒலியைக் குறைத்தாள் லாவண்யா.
“என்னடி? என்னதானடி செய்வது? பிரபஞ்சமே பெண்மையை மத்திமமாகக் கொண்டு இயங்குவதுதானேடீ. அப்படியொரு உலகில் அப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத சமூகமாக இருக்கிறது? எவனையுமே, உறவுக்காரன் உள்பட, நம்ப முடியவில்லையே?” அங்கலாய்த்தாள் லாவண்யா.
செளம்யா நீண்ட பெருமூச்சையே பதிலாகத் தந்தாள். அவளது பார்வை தரையைப் பார்த்தபடி நிலைகுத்தியிருந்தது.
அந்தப் பாரிய பரிசோதனைக்கூடத்தின் உள்ளே காற்றோட்டத் துளைகள் வழியாக, குளிர்ந்த காற்று தொடர்ந்து, செலுத்தப்பட்டுக்கொண்டிருந்ததன் விளைவாக, அவர்களது சருமங்கள் உலர்ந்து இருந்தன. வரிசையாக வைக்கப்பட்டிருந்த மேஜைகளில், கணிப்பொறிகளும், அவைகளுடன் பிணைக்கப்பட்டிருந்த எண்ணற்ற நுண்ணோக்கிகளும், முப்பரிமாண பிரதியெடுப்பான்களும், பாவனை நிரல் கருவிகளும் தத்தமதி காரியங்களை, மனனம் செய்யப்பட்ட வாய்ப்பாட்டைப் போல் நிகழ்த்திக்கொண்டிருந்தன. அவற்றுக்கான கட்டளைகளைக் கணிப்பொறிகளின் மென்பொருள்கள் தானியங்கி முறையில் வழங்கிக்கொண்டிருந்தன.
“இதையெல்லாம் சொன்னால், இப்படிப்பட்ட ஆண்கள் ஒன்றும் சோதனைக்குழாயில் பிறந்தவர்களல்ல என்று பதில் வரும். எல்லோரும் நல்லவர்களல்ல, கெட்டவர்களும் அதிலே….” என்ற செளம்யாவை,
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லா ஆண்களுமே வாய்ப்பமையாதவரை நல்லவன்களாகத்தான் தோற்றமளிப்பார்கள்.” என்று இடைமறித்தாள் லாவண்யா.
“கொஞ்சம் அந்த வாதத்தையும் பரிசீலிக்கலாமே? எல்லா மனித உயிரிலும் பெண் மரபணுக்கள் பாதி இருக்கின்றன அல்லவா?”
“அட! அப்படியெல்லாம் நினைத்தும் விடாதே, செளமி. எல்லா ஆண்களுமே வாய்ப்பமையாதவரை தான். எவனும் யோக்கியன் இல்லை” என்றாள் லாவண்யா தீர்க்கமாக.
“இல்லை லாவி. இப்படி யோசித்துப் பாரேன். ஒருக்கால், கெட்ட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால்? நல்ல ஆண்கள் என்று ஒரு பகுதி, இருப்பது உண்மைதானென்றால்? பிரச்சனை, அந்தப் பகுதி அளவில், எண்ணிக்கையில் சிறியது என்றிருந்தால்? நம் தீர்வு, அந்த சிறிய எண்ணிக்கையைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு இனப்பெருக்க வாய்ப்பை வழங்கி, அவ்வெண்ணிக்கையை பெரிதுபடுத்துவது என்றிருந்தால்? ஆனால், நாம் அப்படிச் செய்யாமல் மீண்டும் மீண்டும் பெரிய எண்ணிக்கையில் இருக்கும் தகுதியற்ற ஆண்களுக்கே இனப்பெருக்க வாய்ப்பை வழங்கிக்கொண்டிருப்பது தான் தகுதியற்ற ஆண்களின் எண்ணிக்கை பெருகக் காரணமாகியிருந்தால்? அப்படிப் பெருகுவது தான் பின்னாளில் அவர்களுக்கே இனப்பெருக்க வாய்ப்பு பெரிதும் சென்றடையும் சாத்தியங்களை மிகைப்படுத்துகின்றன என்றிருந்தால்?” என்றாள் செளம்யா, சீற்றத்துடன்.
“என்ன பேசிக்கொண்டே போகிறாய்? இதற்கெல்லாம் என்ன நிரூபனம்? சும்மா நீயாக எதையேனும் கற்பனை செய்துகொண்டு திரியாதே செளமி. சாவியைத் தொலைத்த இடத்தில் தான் தேடவேண்டும்.” என்றாள் செளம்யா.
அப்போது அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையில், அவர்களுக்கு முன்னிருந்த கணினி, “உங்கள் திட்டத்தின் மைல்கல் தேதிகள் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்று மின்னஞ்சல் மூலம் சொன்னது.
“பேசிக்கொண்டே வேலை செய்ய மறந்தாயிற்று.. வா, வேலையைப் பார்ப்போம்” என்ற செளம்யா, தனது கணினிக்குத் திரும்ப, அரை மனதாய், அவர்கள் மேற்கொண்டிருந்த திட்டத்தில் அன்றைக்கான காரியங்களை கவனிக்கலானார்கள் இருவரும்.
திட்டத்தின் முதல் வரியைப் படித்தாள் லாவண்யா.
“Take the subject at a count of ten and allow it to mate…..” என்று வாசித்துவிட்டு, “என்னடி, ‘சப்ஜெக்ட்’ என்று இருக்கிறது” என்று குழம்பினாள் லாவண்யா.
“அதுவா? அப்படியென்றால் எதைக் கொண்டு சோதனை செய்யவெண்டும் என்பது. அது தனியாக ஒரு தரவுத்தளத்தில் (Database) வைத்திருப்பார்கள். திட்டத்தின் எண்ணைப் புகுத்தினால் அது என்ன என்பது தெரிந்துவிடும்” என்று செளம்யா சொல்ல, லாவண்யா திட்டத்தின் எண்ணை உள்ளீடு செய்து தரவுத்தளத்தில் (Database) தேட, தரவுத்தளம் ‘எலி’ என்று பதில் தந்தது.
“திட்டத்தின் படி, நம்மிடம் இருக்கும் பத்து பெண் எலிகளோடு பத்து ஆண் எலிகளைக் கூடச்செய்ய வேண்டும். அந்த பத்தில் ஐந்து ஆண் எலிகள் மிகவும் பண்படுத்தப்பட்டதாகவும் எஞ்சிய ஐந்து ஆண் எலிகள் பண்படுத்தப்படாததாகவும் இருக்க வேண்டும்.” என்று உரக்கப் படித்தாள் லாவண்யா.
சொல்லிவிட்டு,
“ப்பா… இந்தத் திட்டம் எப்போது துவங்கி எப்போது முடிய? மாதக்கணக்கில் ஆகும் போலிருக்கிறதே” என்றாள் தொடர்ந்து.
“இல்லை. ஏற்கனவே அவ்வகையான எலிகளை வகை பிரித்தாகிவிட்டது. திட்டத்தின் முடிவில், தலைமுறைகளின் தொடர்ச்சியில், பண்படுத்தப்படாதவைகளின் பங்கு என்ன என்பது குறித்து ஆராய்வது தான் நோக்கம்.” விளக்கிய செளம்யா, எழுந்து சென்று பத்து பெண் எலிகளை ஒரு பெரிய கம்பிக் கூண்டில் அடைத்தாள். பின் பண்படுத்தப்பட்ட ஆண் எலிகளில் ஐந்தையும் அவற்றின் மீது பச்சை நிறத்தால் குறியிட்டும், பண்படுத்தப்படாத ஆண் எலிகளில் ஐந்தை அவற்றின் மீதி சிகப்பு நிறத்தால் குறியிட்டும் அந்தக் கூண்டிற்குள் இட்டு கூண்டின் கதவுகளை மூடினாள்.
கூண்டில் என்ன நடக்கிறது என்பதை சலனப்படக் கருவிகள் தொடர்ந்து காட்சிகளாய் சேமித்தபடி இருந்தன.அக்கருவிகள் எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்பதை ஒருமுறை ஊர்ஜிதம் செய்துகொண்டாள்.
பிறகு இருவருமாக, அந்தக் கூண்டின் அருகில் அமர்ந்து, கூண்டுக்குள் எலிகள் என்ன செய்கின்றன என்பதை கவனிக்கலானார்கள்.
“இந்த சிகப்பு எலிகள் எத்தனை சுறுசுறுப்பாக இருக்கிறது பாரேன்” என்றாள் லாவண்யா.
“ம்ம்.. நிதானமற்று, நிலையற்று இருப்பதாகவும் அதை அர்த்தப்படுத்தலாம் இல்லையா” என்றாள் செளம்யா. அதனைக் கண்டுகொள்ளாதவளாய், லாவண்யா தொடர்ந்து கூண்டுக்குள் என்ன நடக்கிறது என்பதை ஆர்வமுடன் பார்க்கலானாள்.
சற்றைக்கெல்லாம், சிகப்பு எலிகளை, பெண் எலிகள் அண்டின. ஒன்றொடொன்று முகம் வைத்துக் கொஞ்சின.
“பார்த்தாயா? சிகப்பு எலிகள் சுறுசுறுப்பாக இருப்பதால், அதில் பெண் எலிகள் ஈர்க்கப்பட்டு, சிகப்பு ஆண் எலிகளோடு சேர்ந்திருக்கின்றன. இதுதானே பிழைத்தல் என்பது. இந்த நீல நிற எலிகள் சரியான சோம்பேறிகள் போலும். பிழைக்கத்தெரியாதவைகள். பிழைத்தல் நிமித்தம் பின் தங்குகின்றன.” என்றாள் லாவண்யா, கூண்டில் வைத்த தன் கண்களை அகற்றக் கூடத் தோன்றாமல்.
“தகப்பன் எலிகளே இத்தனை நிதானமற்று, நிலையற்று இருந்தால்…” என்று செளம்யா இழுக்க,
“அப்படியெல்லாம் இல்லை. ஏன்? சுறுசுறுப்பான எலிகளுக்கு நிதானமான குட்டிகள் வாய்க்காதா?” என்று இடைமறித்தாள் லாவண்யா.
“எத்தனை அப்படி வாய்க்கும்? எல்லாவற்றுக்கும் அந்த அதிர்ஷ்டம் அமையுமா? அப்படி அமைந்தால் அது அதிர்ஷ்டமா?”
“ஹேய் செளமி…அந்த நிச்சயமற்ற தன்மை தானே வாழ்க்கை என்பது”
செளம்யா, உதடுகளை இறுக்கியபடி, தலையை இடமும் வலமுமாக அசைத்துக்கொண்டாள்.
பிறகு, சில நீல நிற ஆண் எலிகள், பெண் எலிகளை நெருங்கத்துவங்கின.
“பார்த்தாயா? இப்போதுதான் அந்த நீல நிற ஆண் எலிகளுக்கு புத்தி வந்திருக்கிறது. ஆனால், கால தாமதமாக வந்த புத்தி. சிகப்பு எலிகள் சும்மா விடுமா என்ன?”
“என்ன சொல்கிறாய் லாவண்யா, காலதாமதமாக வந்த புத்தியா?”
“பின்னே? காலதாமதல்லாமல் வேறென்ன? ஆனால், இன்னமும் எதுவும் நிச்சயமாகவில்லை. சிகப்பு எலிகளோடு பெண் எலிகள் இனப்பெருக்க ரீதியில் இன்னமும் கூடவில்லை செளம்யா”
“ஏன்? கூடியிருந்தால்?”
“கூடியிருந்தால், சிகப்பு எலிகளுக்குப் பிறந்த எலிகளுக்கும் சேர்த்து நீல எலிகள் தான் உணவு கொண்டு வருவதாக இருந்திருக்கும். புதிய தலைமுறை அல்லவா, செளம்யா?”
சற்றைக்கெல்லாம் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே ஆக்ரோஷமான சிகப்பு எலிகள், நீல எலிகள் மீது பாய்ந்து தள்ளுவதும், கடிப்பதும், பிறாண்டுவதுமாக வன்முறையில் இறங்கின.
“பாரேன், தன் இணைக்கு ஒரு போட்டி என்றதும் எப்படி அந்த சிகப்பு எலிகள் ஆக்ரோஷம் காட்டுகின்றன? அதில் எத்தனை காதல், எத்தனை உடைமை உணர்வு, எத்தனை கோபம். அந்த பெண் எலிகள் அதைத்தானே ரசிக்கும் செளம்யா?”
“ஆனால், நீல எலிகள் தானே பண்பட்ட எலிகள் லாவி? சிகப்பு எலிகள் இணைக்கு முந்தலாம். அவசரம் காட்டலாம். நீல எலிகளுக்கு எதிராய் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தலாம். அது, நிதானமற்ற தன்மையின் இயல்பு அல்லவா? ஆனால், நல்ல தலைமுறை உருவாக….” என்று செளம்யா பேசிக்கொண்டிருக்கையிலேயே,
“செளம்யா, இயற்கை விதிகள் அப்படி வேலை செய்யாது. பெண்ணை யார் முந்துகிறார்களோ அவர்களுக்கே முன்னுரிமை. இதுதான் இயற்கை. அல்லவா? சரியான இணைக்கென பெண் எலி காத்திருக்குமா? அந்தச் சரியான இணை வரவே இல்லையென்றால்? எத்தனை காலம் காத்திருப்பது?”
செளம்யா எதுவும் பேசாமல் லாவண்யாவையே பார்த்திருக்க,
“பண்பட்டால் மட்டும் போதாது. இணைக்கு முந்தவும் தெரியவேண்டும். இப்படி யோசித்துப்பார். சிகப்பு எலிகள், நாளை பண்படவும் வாய்ப்பிருக்கிறதல்லவா? பிறக்கும் போதே எல்லா எலிகளும் பண்பட்டு விட முடியுமா என்ன? சொல் செளம்யா”

செளம்யா இப்போதும் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க, செளம்யாவிடமிருந்து பார்வையை அகற்றி, கம்பிக் கூண்டில் செலுத்தினாள் லாவண்யா.
சற்றைக்கெல்லாம் கூண்டுக்குள் நீல, மற்றும் சிகப்பு எலிகளுக்குள் சண்டை மூண்டுவிட, இரண்டு நீல எலிகளை சிகப்பு எலிகள் கொன்றே விட்டதை இருவரும் கண்ணுற்று அதிர்ந்தார்கள்.
“செளம்யா, அந்த எஞ்சிய பலவீனமான மூன்று நீல எலிகளை கூண்டிலிருந்து அகற்று. அவற்றுக்குப் போராடவே தெரியவில்லை” உச்சுக் கொட்டினாள் லாவண்யா.
“பலவீனமான எலிகளா?” என்றாள் செளம்யா அதிர்ந்து.
“என்ன எதற்கெடுத்தாலும் அதிர்ச்சிக் கேள்வி கேட்கிறாய். நீல எலிகளுக்குப் போராடவே தெரியவில்லை. சிகப்பு எலிகளுக்கு இருப்பது போல் உடல் வலு அவைகளுக்கு இல்லை. ஆக்ரோஷம் காட்ட மறுக்கின்றன. இணைக்கென ஆக்ரோஷம் காட்டவில்லை என்றால், அது என்ன காதலாகிறது, செளம்யா?ச்”
“இல்லையே? நீல எலிகளின் உடற்தகுதியும் ஏற்கனவே சோதிக்கப்பட்டதுதான் லாவண்யா. அவைகளின் ஆரோக்கியத்தில் எவ்விதக் குறையும் இல்லை”
“பிறகேன், சிகப்பு எலிகளை எதிர்த்து சண்டையிட்டு நீல எலிகள் ஜெயிக்கவில்லை?”
“எல்லா பகைக்கும் சண்டை தீர்வல்ல என்று அவைகள் நினைத்திருக்கலாம். வேறு எதற்கேனும் அந்த உடல் வலுவை, ஆரோக்கியத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவைகள் நினைத்திருக்கலாம் அல்லவா?”
“ஹஹ.. இப்போது பெண் எலிகளின் பார்வையில் இதைப்பார். அந்தப் பெண் எலி யாரிடம் செல்ல வேண்டும்? தனக்காகச் சண்டையிடும் ஆண் எலிக்காகவா, அல்லது, தன்னை விட்டுவிட்டு வேறிடத்தில் முக்கியத்துவத்தைத் தேடும் ஆண் எலிக்காகவா? சொல் செளம்யா, சொல்?”
செளம்யா மெளனித்தாள். லாவண்யாவை சுருங்கிய புருவங்களுடன் மத்திமமாய்ப் பார்த்தாள்.
செளம்யாவிற்காகக் காத்திராமல், லாவணயா, அந்த மூன்று நீல ஆண் எலிகளை எடுத்து வேறொரு கூண்டில் விட்டாள்.
“உங்களுக்கு இது போதும். கிடைத்ததைத் தின்றுவிட்டு செத்துப்போங்கள்” என்று சாபமும் இட்டாள். ஒரு தானியங்கி எந்திரக்கை, அந்தக் கூண்டை லாவகமாகக் கவ்விக்கொண்டு அவர்களின் அருகாமையை விட்டகன்றது.
இப்போது, அந்த சிகப்பு எலிகள் ஒவ்வொன்றும் பத்து பெண் எலிகளோடும் கூடத்துவங்கின. அவைகளின் கூடலைப் பார்க்க மனமில்லாமல், இருவரும் எழுந்துகொண்டார்கள்.
“இது முடியட்டும்.” என்ற லாவண்யா, உதட்டோரப் புன்னகையுடன் கண்ணடித்துவிட்டு,
“நாம் பிறகு வந்து அவதானிப்பைத் தொடரலாம்” என்றாள் செளம்யாவிடம்.
செளம்யா அந்த பரிசோதனை வளாகத்தின் தானியங்கி அமைப்பில் சில பொத்தான்களைத் தட்டிவிட, தானியங்கிக் கருவிகள் அந்தக் கூண்டிற்கு உணவு வழங்கவும், சுத்தம் செய்யவும் தயாராகிக்கொண்டன.
~ * ~
நான்கு வாரங்களுக்குப் பிறகு, லாவண்யாவும், செளம்யாவும் வந்து பார்த்தபோது, அந்தக் கம்பிக்கூண்டில், அந்தப் பத்து பெண் எலிகளும், தலா ஆறு குட்டிகள் வீதம் சுமார் அறுபது குட்டிகள் ஈன்றிருந்தது. அறுபது குட்டிகளில் சுமார் ஐம்பது குட்டிகள், தங்கள் தந்தைகளைப் போன்றே அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது – அவற்றில் இருபத்தி ஐந்து குட்டிகள் பெண் குட்டிகளாய் இருந்தன.
“அந்த எஞ்சியிருக்கிற பத்து குட்டிகளைப் பாரேன், செளம்யா. ஆரவாரம் இல்லாமல் அமையாய் இருக்கின்றன. நான் சொன்னேன் அல்லவா? சுறுசுறுப்பான எலிகளுக்கு நிதானமான குட்டிகள்….” என்று லாவண்யா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,
“இது சுறுசுறுப்புக்குப் பிறக்கும் நிதானம், லாவி. நிதானத்திற்கே நிதானம் பிறந்தால்? அதை யோசித்துப் பார். அது நிச்ச்யம் இதைவிடவும் மேம்பட்டதாக இருக்கத்தான் வாய்ப்பதிகம். இல்லையா?” என்று இடைமறித்தாள் செளம்யா.
செளம்யா சொல்வதைக் கேட்பதில் ஆர்வமில்லாதவளாய், லாவண்யா கூண்டையே அவதானித்திருந்தாள். இனிமேல் விளக்குவது வீண் என்ற முடிவுக்கு வந்தவளாய், செளம்யாவும் கூண்டை அவதானிக்கத்துவங்கியிருந்தாள்.
இப்போது கூண்டுக்குள் சக ஆண் எலிகளின் ஆக்ரோஷத்தில் அந்த பத்து சாவதானமான எலிகளும் அலைகழியத்துவங்கியிருந்தன. அந்தப் பத்து எலிகளுக்கான உணவுகளை, ஆக்ரோஷமான எலிகள் தின்று தீர்த்தன. அந்தப் பத்து எலிகளைத் தள்ளி விடுவதும், கடித்து வைப்பதுமாக இருந்தன. சமயத்தில் இரு தரப்புக்கும் சண்டை வந்து, கடித்துக் குதறிக்கொண்டன. அந்தச் சண்டையில் அமைதியான எலிகள் அதிகம் காயமடைந்தன. காயத்தின் வழி, கிருமிகள் தாக்கி ஆரோக்கியம் குன்றி மரணித்தன.
“எனக்கென்னவோ, உனது வாதங்கள் இந்தக் கூண்டிற்குத்தான் பொருந்துமென்று தோன்றுகிறது” என்றாள் செளம்யா.
“இருப்பதே ஒரு கூண்டு தானே, செளமி” என்றாள் லாவண்யா கூண்டிலிருந்து பார்வையை அகற்றாமல்.
இப்படியே நாட்கள் கடந்தது. மூன்றாவது வாரத்தின் முடிவில், கூண்டுக்குள் ஆண் பெண் எலிகளுக்கிடையிலான இனப்பெருக்கம் துவங்கியது. அவைகளும் குட்டிகள் ஈன்றன. ஒவ்வொன்றும் தலா ஆறு குட்டிகள். மிக விரைவிலேயே கூண்டு சிறுத்துப் போனது.
“வேறு பெரிய கூண்டு தேவை, லாவி” என்றாள் செளம்யா.
“தெரிகிறது. கூண்டு செய்ய ஆட்களை வரவழைக்கிறேன்” என்றவள் யாரையோ அழைத்துப் பேசிவிட்டு, “என்ன இது? புதிய கூண்டு செய்ய தொழிலார்கள் வரவே இன்னும் நான்கு வாரங்களாகுமாமே? அதுவரை இத்தனை எலிகளையும் எப்படி சமாளிப்பது?” என்றாள் லாவண்யா.
“பேசாமல் நீயே ஒரு கூண்டு செய்யேன்” என்றாள் செளம்யா.
“ச்சே. முதலில் தோண்டவேண்டும். சிமிட்டிக்கலவை இட வேண்டும். அஸ்திவாரமிடவேண்டும். பிறகு தூண் அமைக்க வேண்டும். பிறகு உத்திரம் வைக்க வேண்டும். மிகவும் உடல் உழைப்பு கோரும் வேலை.” என்றாள் லாவண்யா.
“அதற்கெல்லாம் பொறியியல் ஞானம் தேவை, லாவி. அந்த ஞானத்திற்கு மூளை தான் மூலதனம். சுறுசுறுப்பு அல்ல. நிதானமற்ற தன்மை அல்ல” என்றாள் செளம்யா. இதை ஏன் இப்போது சொல்கிறாள் என்று துணுக்குற்ற லாவண்யா ,எதையோ உணர்த்தத்தான் அப்படிச் சொல்கிறாள் என்றுணர்ந்து யோசனையில் ஆழ்ந்தாள் லாவண்யா.
வேறு வழியின்றி, அடுத்த நான்கு வாரங்களுக்கும், அத்தனை எலிகளையும் அந்தக் கூண்டிலேயே வளர அனுமதியளிப்பது என்று இருவரும் முடிவெடுத்தார்கள். ஆனால், கூண்டுக்குள் இடப் பற்றாக்குறை மிகுத்தது. வலுமிக்க எலிகள் மற்ற வலு குன்றிய பெண் எலிகளை ஓரம்கட்டிவிட்டு உணவுகளைக் கவர்ந்ததில், கூண்டிற்குள் ஆரோக்கியம் குன்றியது. பெரிய எலிகள், இடப்பற்றாக்குறையால், அங்குமிங்கும் அலைபாய, இடையில் இடறி, சிக்கிக் குட்டிகள் சின்னாபின்னமாயின. பல குட்டிகள் இறந்தே போயின. இறந்த குட்டிகளை அப்புறப்படுத்துகையில், தன்னை ஏறிட்ட செளம்யாவிடம்,
“மரணமெல்லாம் இயற்கை தானே செளமி. அதுவும் பிழைத்திருத்தலில் அடக்கம் தானே. ஒரு வகையில் அதுவும் நல்லதுதானே. பலவீனமானது மரணித்தால் தான் என்ன?” என்றாள் லாவண்யா.
இடப்பற்றாக்குறையால், தொடர்ந்து பெண் எலிகள் ஒரே இடத்தில் இருக்கப்போய் அவைகளின் உடல் பருமன் கூடிக்கொண்டே சென்றது. இதனால் ஆரோக்கியம் குன்றி , இனப்பெருக்கத்திற்கு லாயக்கற்றதாகின.
அப்போது, “உங்கள் திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறீர்கள். திட்டத்தின் முடிவு என்ன என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்” என்று சொல்லி வந்தது ஒரு மின்னஞ்சல்.
“இரு. முடிவை நானே விளக்கமாக எழுதுகிறேன்” என்ற லாவண்யா, செளம்யாவை நகரச்சொல்லிவிட்டு, கணினி முன் அமர்ந்தாள். முடிவை எழுதலானாள்.
“எலிகளுள்ளும் இனவிருத்திக்கான போட்டி, கலவித்துணைக்கான போட்டிச் இருக்கிறது. எலிகளுள்ளும் எவை பலமானவைகளோ, எவை சுறுசுறுப்பானவைகளோ அவைகளே இனப்பெருக்க வாய்ப்பைப் பெறுகின்றன. பெண் எலிகளைக் கவர சுறுசுறுப்பு காட்டாத எலிகள் இனப்பெருக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு பின்தங்கிவிடுகின்றன. பின் நாளில், இனப்பெருக்க வாய்ப்பைப் பெற்ற ஆண் எலிகளின் குட்டிகளே இப்பின்தங்கிவிட்ட ஆண் எலிகளை வந்தடைகின்றன. ஆக, நிதானம், நிலைத்தன்மை, பிழைத்தலின் நிமித்தம் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன தாம். நிதானத்தின் நிமித்தம், அமைதியின் நிமித்தம் பின் தங்க நேர்ந்துவிட்ட எலிகள் எப்போது அந்த நிதானத்துடனும், அமைதியுடனும்,கூடவே பெண் எலிகளை ஈர்ப்பதிலும் பங்காற்றி மிஞ்சுகின்றனவோ அப்போதுதான் அவைகளுக்கும், அவைகளின் சந்ததிகளுக்கும் இப்பூமியில் வாழ இடமிருக்கும். இந்த எல்லா இயக்கங்களின் மத்தியிலும் அச்சாணியாய் பெண் எலிகளே இருக்கின்றன என்பது பெண் இனம் சந்தோஷப்பட்டுக்கொள்ளக்கூடிய செய்தியாகிறது” என்று எழுதி முடித்த லாவண்யா, “எப்படி எழுதியிருக்கிறேன் பார்?” என்பதாய்க் கண் சிமிட்டினாள்.
செளம்யாவின் பதிலுக்குக் காத்திராதவளாய், அந்த முடிவை அப்படியே திட்ட மேலாளருக்கு அனுப்பினாள்.
“அப்பாடா! ஒருவழியாகத் திட்டம் முடிந்தது. இல்லையா?” என்று விட்டு இருக்கையிலிருந்து எழுந்திருக்க, சற்று முன் திட்ட மேலாளருக்கு அனுப்பிய மின்னஞ்சல், உள்பெட்டிக்குத் திரும்பியிருந்தது. லாவண்யா, அதனைச் சுட்டித் திறக்க, ‘திட்டத்தின் இரண்டாம் பாகத்தின் முடிவை இணைக்க மறந்துவிட்டீர்கள்‘ என்றது கோப்பு.
“இந்தத் திட்டத்தில் இரண்டாம் பாகமா? அது என்ன எனக்குத் தெரியாமல்?” என்றாள் லாவண்யா சுருங்கிய புருவங்களுடன்.
“அதொன்றுமில்லை. மின்னஞ்சல் தவறாகச் சொல்கிறது. ஒரு திட்டம் தான்” என்று செளம்யா சமாளிக்கப்பார்க்க, ‘இரண்டாம் பாகம். திட்ட அறை, A2B’ என்று மின்னஞ்சலில் இருந்த வாசகத்தைப் பார்த்துவிட்டு,
“இல்லையே. ஏதோவொரு அறை ஒதுக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறதே” என்றாள் லாவண்யா குழப்பத்துடன்.
“ஐயோ ,அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு பாகம் தான் லாவண்யா” என்று செளம்யா சமாளிக்க முயல, அவளது பேச்சுக்குக் கட்டுப்படாமல், ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து எழுந்து, A2B இருக்கும் இடம் நோக்கி லாவண்யா நடக்க, செளம்யா, அவளை அங்கு போக விடாதவகைக்குத் தடுக்கப்பார்க்கும் முகமாய்,
“இல்லை. நீ அதைப் பார்க்காதே. உனக்கு அது தேவையில்லாதது. நீ பார்க்க வேண்டியது அது அல்ல” என்று செளம்யா எத்தனையோ முயன்றும் இறுதியில் லாவண்யா A2B அறையைக் கண்டுகொண்டு எட்டிப்பார்க்க, அந்த அறைக்குள் உள்ள கூண்டில் மூன்று பெரிய எலிகளும், பதினெட்டு எலிக்குட்டிகளும் வளைய வந்து கொண்டிருந்தன. அந்தக் கூண்டில் எவ்வித ஆர்பாட்டமும் இல்லை. அலைகழிப்பும் இல்லை. ஆக்ரோஷமில்லை. அவைகளுக்கு ஒரு ரோபோ சில கேள்விகளைக் கேட்க, அந்த எலிகள் தத்தமது முன்னங்கால்களை நகர்த்தியும் சைகை செய்தும் பதிலளித்துக்கொண்டிருந்தன.
“என்ன இது? என்ன நடக்கிறது இங்கே?” என்றாள் லாவண்யா தன்னிடமிருந்து எதுவோ மறைக்கப்பட்டிருக்கிறதென்கிற சீற்றத்துடன்.
“இது உனக்குத் தேவையில்லாதது, லாவி” என்றாள் செளம்யா.
“இப்போது சொல்லப்போகிறாயா இல்லையா?” என்று லாவண்யா கத்த,
“நீ ‘தின்றுவிட்டுச் செத்துப்போங்கள்’ என்று சபித்தாயே அந்த மூன்று ஆண் எலிகளையும், எந்திரங்களின் மேற்பார்வையில் வளர அனுமதிப்பதே திட்டத்தின் இரண்டாம் பாகம். நாம் எதையும் செய்ய வேண்டியதில்லை. எல்லாமும் முன்பே கணிக்கப்பட்டிருக்கின்றன. எந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளும்” என்றாள் செளம்யா.
“அது இருக்கட்டும். நான் சபித்தது ஆண் எலிகளைத்தானே. பிறகெப்படி குட்டிகள், செளமி?”
“அதுவா? அது தான் திட்டம். ஒருக்கால் அந்த எலிகள் புத்திகூர்மையைக் கைகொண்டு தங்களுக்கென உதவ கருவிகளை உருவாக்கி, செயற்கை முறையில் கருத்தரித்தால்…” என்று செளம்யா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே
“ஆனால், கருத்தரிக்க பெண் முட்டை வேண்டுமல்லவா?” என்றாள் லாவண்யா.
“அதற்கெல்லாம் வழியில்லாமலா? எந்தக் காலத்தில் இருக்கிறாய் நீ” என்றாள் செளம்யா.
“ஆனால் இதெல்லாம் செயற்கையாக…..” என்று லாவண்யா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,
“பிழைத்தல் லாவி. பிழைத்தல். பிழைத்தல் என்கிற முனைப்பு எதையும் செய்ய வைக்கும்.” என்றாள் செளம்யா.
“அதாவது எலிகள், இந்தச் சின்னஞ்சிறு எலிகள் செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யும் என்கிறாயா?” என்றாள் லாவண்யா ஏளனத்துடன்.
“அந்த தைரியத்தில் தான் நீ இதுகாறும் பேசியதை எல்லாம் பேசினாயோ?” என்றாள் செளம்யா, சுருங்கிய கண்களுடன்.
லாவண்யா, செளம்யாவை முறைத்தாள்.
“இப்படி யோசித்துப் பார். மனித இனம் கோடி ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? ஒரு குரங்காகத்தானே? அதாவது இப்போதிருக்கும் இந்த எலிகள் போல் இன்னொரு விலங்காகத்தானே? இப்போது மனிதன் முயக்கம் என்ற ஒன்று நடவாமலேயே பிள்ளை பெறும் வித்தைக் கற்றவனாகிவிட்டான். இது குரங்குகளுக்கு கோடி ஆண்டுகளில் நடந்ததே, எலிகளுக்கிடையிலும் நடக்கலாம் என்பதற்கான அத்தாட்சி தானே? பூமியில், ஒரு விலங்கினத்தின் வழக்கத்தை இன்னொரு விலங்கினம் கற்றுக்கொள்வது ஒன்றும் புதிதல்லவே. ஓநாய்கள் மனிதர்களிடமிருந்து கற்றுக்கொண்டு நாய்களாகவில்லையா? அப்படிப் பார்த்தால், குரங்குகள் கோடிக்கணக்கான ஆண்டுகளில் தான் உருவாக்கிய செயற்கை கருத்தரித்தலை எலிகளுக்கு வழங்குவது அப்படி ஒன்றும் நடக்கக்கூடாத, அல்லது நடக்க வாய்ப்பில்லாத ஒரு நிகழ்வல்லவே? அதற்கு கால தாமதமாகலாம். இந்த ஆராய்ச்சிக்கூடத்தில் நாம் செய்வது, அந்தக் காலதாமதத்தைக் குறைப்பது தானே. ஒருக்கால், இந்த எலிகள் செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யக்கூடியன என்பது உனக்குத் தெரிந்திருந்தால், நீ இதுகாறும் பேசியதையெல்லாம் பேசியிருப்பாயா?” என்றாள் செளம்யா.
“அப்படி நடந்தால் அது இயற்கையாக இருந்திருக்காது அல்லவா?” என்றாள் லாவண்யா.
“எந்த இயற்கையைப் பற்றிப் பேசுகிறாய் நீ?” என்று எதிர்கேள்வி கேட்டாள் செளம்யா.
“என் கேள்வி இதுதான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலைக் கணக்கில் கொண்டால், அந்தக் காலத்தின் குரங்குகளுக்கு, இன்றிருக்கும் மனித இனம் என்பது இந்த A2B கூண்டில் உள்ள எலிகள் போலத்தான். இல்லையா? இன்று இருக்கும் மனிதனை, அந்தக் குரங்குகள் எதிர்கொண்டிருந்தால், மனித இனம் இனவிருத்திக்கான வாய்ப்பின்றி அழிந்து போயிருக்கும், இல்லையா? ஒருவகையில், மனித இனத்தின் ஆண்களை புத்திசாலிகள் எனலாம். செயற்கையாகக் கருத்தரிக்கும் இடத்திற்கு நகரும் வரை, அக்காலக் குரங்குகளுடன் இணைந்து பல்கிப் பெறுகி பொறுத்திருந்ததை, வேறெப்படித்தான் சொல்வது? இப்படி யோசித்துப் பார். கருத்தரிக்கப் பெண் தேவை என்ற நிலை. கருத்தரித்து அடுத்தடுத்த தலைமுறை பல்கிப் பெறுகும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொண்டே, பெண்ணில்லாமலே கருத்தரிக்கக் கூடிய இடத்திற்கு நகர்வதை, திட்டமன்று தானே சொல்லவேண்டி இருக்கிறது. எத்தனை திட்டமிடல்? எத்தனை ஒருங்கிணைப்பு? இத்தனை காலமும் சுயாதீனமாகப் பிழைத்திருக்க வக்கில்லாத ஓரினம் நம்மை, இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிக்கொள்ளப் பயன்படும் ஒரு பேருந்தைப் போல பயன்படுத்தியிருப்பதைக் கவனிக்கிறாயா? இப்போதிருக்கும் இந்த உலகைக் கட்டமைத்தது யார்? ஆணா? பெண்ணா? நாம் பார்க்கும், துய்க்கும் எல்லா நவீனத்தையும், அதற்குப் பின்னான கடின உழைப்பையும் நல்கியது ஆண்கள்.” என்ற செளமியை,
“அது பெண்ணை பல தலைமுறைகளாக அடக்கி ஒடுக்கி….” என்று லாவண்யா இடைமறிக்க,
“கூண்டைப் பெரிதாக்கச் சொன்னேனே? நீ என்ன சொன்னாய் என்பது நினைவிருக்கிறதா? உன்னால் கடலின் ஆழத்தில் சென்று எண்ணெய்க் குழாயில் வேலை பார்க்க முடியுமா? சாக்கடைக் குழாயில் இறங்கி தூர் வார முடியுமா? பள்ளாத்தாக்கில் இறங்கி தேனெடுக்க முடியுமா? நாளையே ஆண்கள் எல்லோரும் அழிந்துவிட்டால், இந்த உலகை நம்மால் நகர்த்திச்சென்று விட முடியுமா? அது சாத்தியமா? ஆனால், நாளையே பெண்கள் அழிந்துவிட்டாலும், செயற்கை இனவிருத்தியோடு ஆண்களால் இவ்வுலகை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றுவிட முடியும். அதை கவனிக்கிறாயா?” என்றாள் செளமி.
எதற்குமே லாவண்யாவிடம் பதிலில்லை.
“கலன்கள், கருவிகள், இரும்பு, நெருப்பு, எண்ணெய் என்று எல்லாவற்றையும் உருவாக்க, ஆண் குரங்குகளுக்கு எது தேவையாக இருந்ததோ, எது அவற்றை மேற்கொள்ள உந்தியதோ அதுதான் இப்போது இந்த A2B எலிகளிடமும் உள்ளது என்பதை நீ புரிந்துகொள்கிறாயா?” என்றாள் செளமி.
அந்தக் விளக்கத்தில் சற்று திணறி, பின் தன்னைத் தொகுத்துக்கொண்ட லாவண்யா செளம்யாவையே பார்த்து நின்றாள்.
“ஆனால், இந்த ஒட்டுமொத்த நாடகத்தில் ஒன்றை கவனித்தாயானால், இப்போது நம்மிடம் கெட்ட அல்லது நாளைய சமூகத்திற்குத் தேவைப்படாத வித்து கொண்ட எலிகள் எவை, நாளைய சமூகத்திற்குத் தேவைப்படும் வித்து கொண்ட எலிகள் எவை என்பதைப் பிரித்தறிய ஒரு மார்க்கம் கிடைத்திருக்கிறது என்று தானே அர்த்தமாகிறது லாவி? இதற்கு முன்னால் நம்மால் அப்படித் துல்லியமாகப் பிரித்தறிய முடியாதிருந்தது. இல்லையா?”
“அப்படி சொல்லிவிட முடியுமென்கிறாயா?” என்றாள் லாவண்யா பிடிமானம் இன்னமும் எட்டாமல்.
“ஏன் முடியாது? இந்த A2B கூண்டைப் பாரேன் இங்கேயும் ஆண் பெண் எலிகள் இருக்கின்றன. அவைகளுக்குள் காமம் இருக்கிறது, காதல் இருக்கிறது, உறவுகள் பேணுகின்றன, ஆக்ரோஷம் இல்லை. வன்முறை இல்லை. ஆரோக்கியமான சமூக அமைப்பு இருக்கிறது. பெண் எலிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறது. எந்த ஆண் எலியும், பெண் எலிகளை மொய்ப்பதில்லை. அது அது அதனதன் வேலையைச் செய்கிறது. அந்தக் காரியத்தின் பயணத்தில் அவைகள் கூடுகின்றன. இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த இனப்பெருக்கத்திற்கு ஆக்ரோஷம், வன்முறை தேவைப்படுவதில்லை என்பதை கவனிக்கிறாயா? இப்படித்தான் குரங்குத்தலைமுறைகள் மெருகேறி மெருகேறி இன்றிருக்கும் சமூகமாக ஆகியிருக்கிறது என்பதை கவனிக்கிறாயா?” என்றாள் செளம்யா.
“வன்முறை, ஆக்ரோஷம், அவசரம் ஆகியன சூழலைப் பொறுத்ததுதானே செளமி?. நாளையே ஒரு விளிம்பு நிலைச் சூழலில், நீ சுட்டும் இந்த A2B கூண்டுக்குள்ளும் வன்முறையும், ஆக்ரோஷமும், அவசரமும் கைகொள்ளப்படலாம் இல்லையா செளமி?”
“ஆமாம். ஆனால், அப்படி நேர்ந்தால், இன்னொரு A2C அல்லது A2D கூண்டு ஏன் உருவாகக்கூடாது லாவி? நம்மிடம் தான் பிரித்துப் பார்க்க மார்க்கம் கிடைத்துவிட்டதே?”
“அதாவது, பெண்ணை அண்டுவதில் வன்முறையையும், ஆக்ரோஷத்தையும், அவசரத்தையும், காட்டும் ஆண் எலிகளிடம் இருந்து பழகிவிட்ட பெண் எலிகளுக்கு இந்தப் புதிய A2B கூண்டின் ஆண் எலிகளுடனான உறவு உவப்பானதாக இருக்குமென்று எண்ணுகிறாயா?” என்றாள் லாவண்யா புரிந்து கொள்ள முயற்சி செய்பவளாய்.
“பெண்ணை அண்டுவதில் வன்முறை, ஆக்ரோஷம், அவசரம் ஆகியனவற்றுக்கும் பங்கிருக்கிறது என்றெண்ணும் பெண் எலிகள் இருக்கும் பட்சத்தில், அதற்கான சமூகப் பின்விளைவுகளையும் அவைகள் எதிர்கொள்ளத்தான் வேண்டும், லாவி. அப்படி நேர்கையில், அதை அவர்களது தேர்வு தான் என்றாகிறது. ஏனெனில், பெண்ணை அண்டுவதில் வன்முறை , ஆக்ரோஷம், அவசரம் ஆகியனவற்றின் பங்கு தேவையில்லை என்றெண்ணும் எலிகளாலும் கூண்டுகள் சாத்தியப்படுகின்றன என்கிற பேருண்மை தான் காரணம் லாவி. அப்படியான எலிகளுக்கு ஏன் வன்முறையும், ஆக்ரோஷமும், அவசரமும் நிர்பந்திக்கப்படவேண்டும் என்பது என் கேள்வி? அது அவைகளின் தேர்வு அல்லவே?” என்றாள் செளம்யா.
லாவண்யா எதுவும் பேசத்தோன்றாமல் செளமியாவையே பார்த்தபடி நின்றிருந்தாள்.
“கொஞ்சம் இரு. இந்தத் திட்டப்பகுதியின் முடிவை எழுதிவிட்டு வருகிறேன்” என்ற செளம்யா, கணினியில் தனது பயணர் பெயர், கடவு எண் இட்டு நுழைந்துவிட்டு, முடிவை எழுதலானாள்.
“பிரபஞ்சத்தின் ஆதி என்பது, காலம் என்னும் சூத்திரத்திற்கும் முந்தையது. ஆக, பிரபஞ்சத்திற்குப் பிந்தைய கருப்பொருள் பெருவெடிப்பிற்குப் பிறகு, கருப்பொருள் பிரபஞ்சமெங்கும் விரவியது. அவற்றின் ஓரிரு புள்ளிகளில், காலத்தின் இழுவைத்தன்மையால், உலகங்கள் தோன்றின. அவ்வுலகங்களுக்கென இயற்கைகள் உருவாகின. ஒவ்வொரு இயற்கைக்கும் தனித்தனி விதிகள் உருவாகின. அவற்றில் உதித்த உயிர்களுக்கான, பிழைத்தல் நியதிகளுக்கு அவ்வியற்கையின் விளிம்புகளே எல்லைகளாயின. இதன் பொருள் என்ன? கிரகம் காலத்தை வளைக்கிறது. ஆக, காலம் கிரகத்திற்கானதென்றாகிறது. இதன் பொருள் என்ன? காதல், அன்பு, ஆகிய வளர, தழைக்க, காலம் அடிப்படையாகிறது. ஆக, காலத்தின் இழுவைத்தன்மையை தன் இயக்கங்களின் அச்சாணியாய், அடிப்படையாய்க் கோரும் பெண் கிரகத்திற்கானவளாகிறாள். கிரகத்தின் தன்மைகளை ஏற்றவளாகிறாள். ஆனால், இந்தப் புள்ளியில் ஒன்றை கவனிக்க வேண்டும். பிரபஞ்சத்தன்மை என்பது கிரகத்தன்மைகள் பெரிதும் அற்றதாவது.”
“இப்போது திட்டத்திற்கு வருவோம். எலிகள் கற்கும் பட்சத்தில், எலிகள் களன்கள், கருவிகள் செய்துகொள்ளும் வகைக்கு வளர்ந்துவிடும் பட்சத்தில், அழியும் கிரகத்தோடு அழிந்துவிடும் விதியை மீறி, தாண்டிச் சென்றுவிடலாம். அப்போது அவைகளின் பிழைத்தல் இக்கிரகத்தையும் தாண்டி அவைகளை அழைத்துச்செல்லலாம். அந்த இடத்திற்கு நகர வேண்டுமானால், எலிகள் அமைதி பழக வேண்டும். நிதானம் பழக வேண்டும். ஆனால், அப்படிப் பழகும் எலிகள் இனப்பெருக்கத்திற்குத் தேர்வு செய்யப்படாமல் போகும் சாத்தியக்கூறுகள் இருக்கிறது. அப்படி நடந்தால், அமைதி, நிதானம் ஆகியவற்றைக் கைக்கொள்ளுதளில் கிடைக்கும் சாத்தியங்கள், தங்களின் அடுத்தடுத்த கட்டங்களை எட்டுவது எங்ஙனம்? அப்படி நடக்கும் பட்சத்தில், அதுகாறும் வழக்கிலிருந்த பிழைத்தல் விதிகளைப் புறந்தள்ளிவிட்டு நவீன அடுக்குப் பிழைத்தல் விதிகளை அவைகள் கைகொள்ள வேண்டி இருக்கும். இந்தத் திட்டத்தின் வழி, எலிகளை இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகளுக்குத் தள்ளப்படும் நிகழ்வு, பெண் எலிகளால் தான் நிகழ்கிறது என்பதையே திட்டத்தின் இரண்டாம் பகுதி குறிப்புணர்த்துகிறது என்றே கருதுகிறேன். பெண் எலிகளின் இனப்பெருக்க வாய்ப்பு மறுப்பு தான், ஆண் எலிகளை இரண்டாவது அடுக்கு பிழைத்தல் விதிகளைக் கைகொள்ளத் தூண்டுகிறது. அது பெரும்பாலும் தொழில் நுட்பத்தின் வழி நடக்கவே வாய்ப்பிருக்கிறது. ஒரு தலைமுறையை உருவாக்கும் வித்தைக்கான மாற்று வித்தை என்ற ஒன்று, உருவாக வழி செய்ததில், பெண் எலிகளின் நிராகரிப்பின் பங்கு மகத்தானது என்றால் அது மிகையில்லை. பார்க்கப்போனால், பிழைத்தல் விதிகளில், இந்த அடுக்குத் தாவலே, பெண் எலிகள் காரணமாக இருக்கும் கடைசித் தாவல் அடுக்காக இருக்குமென்றே நினைக்கிறேன். இதன் பிறகான தாவல்களுக்கு, பெண் எலிகள் காரணமாக இருக்கப்போவதில்லை என்பது, பிரபஞ்சமே பெண்மையை மத்திமமாகக் கொண்டு அமையப்பெற்றது என்று இதுகாறும் நம்பிக்கொண்டிருந்த என் நம்பிக்கைகளை அவநம்பிக்கையாக்குகிறது. அதில் எனக்கு ஏமாற்றமே ” என்று எழுதிய செளம்யா அதனை திட்ட மேலாளர் பார்வைக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பினாள்.
சற்றைக்கெல்லாம், திட்ட மேலாளரிடமிருந்து அக்கடிதமும் மீண்டும் உள்பெட்டிக்குத் திரும்பியது. லாவண்யாவும் செளம்யாவும் துணுக்குற்று ச்அக்கடிதத்தைத் திறந்தார்கள்.
“உங்கள் திட்ட அறிக்கையில் பிழை இருக்கிறது. சரியான அறிக்கையை சமர்ப்பிக்கவும்.” என்றது கடிதம்.
“என்ன?” என்று அதிர்ந்தாள் லாவண்யா.
“ஏய்! என்ன குழப்பம் செய்தாய்?” என்று பதறிய செளம்யா, நினைவூட்டிப் பார்த்துவிட்டு, “அன்று சப்ஜெக்ட் என்ற வார்த்தைக்குப் பொருள் பார்த்தாயே அது தரவுத்தளத்திலிருந்து (Database) தானே” என்று கேட்டவாறே, தரவுத்தளத்தைத் தொடர்பு கொண்டு, திட்டத்தின் எண்ணை உள்ளீடு செய்ய, “மனிதன்” என்று காட்டியது.
“இல்லையில்லை. எனக்கது எலி என்று தான் காட்டியது” என்றாள் லாவண்யா.
தொடர்ந்து, திட்ட எண்ணிலிருந்து இரண்டு இலக்கங்களை மாற்றி, தரவுத்தளத்தில் (Database) தேட, இப்போது ‘எலி’ என்று காட்டியது.
“சரியாகப் போயிற்று. தவறான பரிசோதனை செய்து நேரத்தை வீணடித்திருக்கிறோமா இதுகாறும்” என்றாள் லாவண்யா சோர்வுடன்.
சற்று யோசித்துவிட்டு, இறுதியில்,
“இருக்கட்டும். நம் அறிக்கையில், எலி என்பதற்கு பதிலாய் மனிதன் என்று மாற்றிவிட்டாலும் கூட இந்த அறிக்கையின் உண்மைத்தன்மை பெரிதாக மாறிவிடப்போவதில்லை. இல்லையா?” என்றாள் செளம்யா.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
