ஊடாடும் பெருநிழல்

நேற்றும் அந்த சர்தார்ஜி ரொம்ப நேரமாக வீட்டுக்கு வெளியில் சற்றுத் தூரமாக நின்று காத்திருந்ததாகச் சொன்னாள் துங்கா.  எத்தனையோ முறை உள்ளே வரச்சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக சந்து முனையிலேயே நின்றிருந்தான் என்றும் சொன்னாள். தனக்கு சற்று பயமாக இருந்தது என்றும் சொன்னாள்.  

யாராக இருக்கலாம்? வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்தவன் மிக எளிதாக  தொலைபேசியிலும் தொடர்பு கொண்டிருக்கலாமே. தன் பெயரைச் சொல்லிக் கேட்டிருக்கிறான்.  தில்லியில் சுல்தான்புரியில் இருந்தவரா என்றும் உறுதி செய்திருக்கிறான்.  மனைவி கேட்டும் எதுவும் சொல்லாமல் வெளியில் நின்றிருக்கிறான்.  மிகவும் குழப்பமாக இருந்தது.

சரி. இன்று அவனை பார்த்து விட்டே வெளியில் போகலாம் என்று வீட்டில் காத்திருந்தான் வியாசன். அப்படி வெளியில் போய் ஒன்றும் பெரிய காரியத்தை செய்யப்போவதில்லை. நண்பன் யுவராஜ் கடையிலோ வேறு எங்காவது உட்கார்ந்து பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருக்கும் வேலைதான். நாற்பது வருடங்கள் தில்லியில் பரபரப்பான அலுவலக வாழ்க்கையையும் அல்ப அரசியல்கள் பொதிந்த பொதுவாழ்க்கையையும் முடித்து விட்டு ஒருவழியாக சொந்த ஊரில் நிம்மதியாகக் காலம் கழிக்க வந்தவன் வியாசன்.  இந்த நிலையில் எங்கிருந்து தேடி வந்திருக்கிறான் இவன்?  சரி. காத்திருக்கலாம் என்று வீட்டிலேயே இருந்தான். 

மறுநாள் பிற்பகல் மதிய உணவுக்குப் பிறகு நல்ல தூக்கத்தின் இடையில் அழைப்பு மணி ஒலித்தது. அவனேதான்.  சர்தார்ஜிகளுக்கே உரிய சராசரி உயரத்துக்கும் சற்று அதிகமான உயரம். சுமார் நாற்பத்தைந்து வயதிருக்கலாம்.   குர்த்தாவை முன்னிழுத்து நிறுத்தும் சிறுதொப்பை. தீட்சண்யமான கண்கள்.  வாசலிலேயே நின்று இருகைகளையும்  கண்களுக்கு நேராக வேல்போல நிறுத்திக் கும்பிட்டான்.

“வியாசன் பாய்ஜி.  நமஸ்தே.   உங்களுக்கு என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை.  தில்லி சுல்தான்புரியில் நீங்கள் வசித்தபோது உங்கள் வீட்டுக்கு  அருகில் வசித்த அங்கத் சிங் குடும்பம் பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவருடைய மகன்… லக்கிசிங்… என்னை மூன்று  வயதில் நீங்கள் பார்த்திருக்கலாம்.  உள்ளே வரலாமா பாய்ஜி?” என்று கேட்டவாறே குனிந்து இருகைகளாலும் பாதங்களைப் பற்றிக் கண்களில் ஒத்திக் கொண்டுத் தன் கைகளுக்கு முத்தமிட்டான்.

 சற்றுக் குழம்பியவாறு அவனுடைய இரு கரங்களையும் பற்றியவாறு உள்ளிழுத்து  வந்து கூடத்தில் சோபாவில் உட்கார வைத்தான் வியாசன்.  யாரென்று பார்க்க வந்து நின்ற துங்காவின் கால்களில் நெடுமரம் போல விழுந்து கும்பிட்டான் லக்கி.

“பாபிஜி ப்ரணாம்… உங்களுக்கு என்னைத் தெரியாது. பாய்ஜி சொல்லியிருப்பாரா என்பதும் தெரியாது. நான் உங்களிருவரின் பிள்ளை போல.  இப்போதிருக்கும் என் இந்த உடலும் உயிரும் பாய்ஜி அப்போது எங்களுக்கு  அளித்த பிச்சை” என்றான்.

துங்கா குழப்பத்துடன் தன் கால்களை விடுவித்துக் கொண்டு அவனை எழுப்பித் தூக்கி நிறுத்தினாள்.   அவள் கரங்களைப் பற்றித் தன் கண்களில் ஒற்றியவாறு நீண்ட கண்களில் நீர் சொரிந்தவாறு நின்றிருந்தான். துங்காவும் சற்றுக் கண்கலங்கி நின்றது போல இருந்தது. அவள் ஒருவாறு சமாளித்துக் கொண்டு “ஜீத்தோ ரஹோ பேட்டே… சார் சொல்லியிருக்கிறார்.  உன்னை இப்படிப் பெரியவனாக வளர்ந்து பார்ப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.  உட்கார்… இதோ வருகிறேன்” என்று சொல்லியவாறு உள்ளே அவசரமாகப் போனாள்.

“பாய்ஜி… ஏறத்தாழ நாற்பது வருஷம் ஆச்சு… பப்பாஜி எப்போதும் சொல்லிக் கொண்டே இருந்தார்… எல்லாம் ஓய்ந்ததும் தில்லியில் இருக்க முடியாமல் நாங்கள் பஞ்சாப் திரும்பிப் போய்விட்டோம். குர்தாஸ்பூர் அருகில் எங்கள் சொந்த கிராமத்துக்கு பப்பாஜி அழைத்துக் கொண்டு போனார்.   தில்லிக்கு மீண்டும் வருவதற்குத் தனக்கு தைரியம் இல்லை என்று சொல்லி விட்டார்.  அந்த தில்லியைப் பார்க்க மிகுந்த வெறுப்பு இருப்பதாகவும் என்னையும் அங்கே போகவேண்டாம் என்று சொல்லி விட்டார்.  

நங்கல் கிராமத்திலேயே மீண்டும் விவசாயம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக   பழைய வாழ்க்கைக்குத் திரும்பினார் பப்பாஜி. என்னை  அங்கிருந்த ஒரு கிராமத்துப் பள்ளியிலேயே படிக்க வைத்தார். என்னுடைய அண்ணன் படிக்கவில்லை. எப்போதும் எதையோ அதிர்ச்சியுடன் வெறித்துப்பார்த்த வண்ணம் இருப்பான். எங்கள் குடும்பத்திலிருந்து தில்லிக்கு யாரும் எக்காரணம் கொண்டும் போகக் கூடாது என்று கண்டிப்புடன் இருந்தார்.  சிறுவயதிலிருந்தே பப்பாஜி போலவே எங்களுக்கும் தில்லி என்ற பெயரைக் கேட்டாலே வெறுப்பாக இருக்கத் தொடங்கியது….

நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தான் லக்கி சிங். இடையில் துங்கா மோர் கொண்டு   வைத்ததைக் கண்டு கொள்ளாதது போல அவன் கண்கள் இறந்தகாலத்தின் சுவடுகளைத் தேடி உழல்வதைப் போல அலைந்தது.

“லேலோ பேட்டா”  என்று அவனை உலுக்கி எழுப்புவது போலச் சொன்னாள் துங்கா.  அவள் கொண்டு வந்து வைத்த மோர் அப்படியே இருந்தது. லக்கி தன் பழைய நினைவுகளில் முற்றாக ஆழ்ந்து போனது போலக் காட்சியளித்தான். 

அப்போது வியாசனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை.   தனியார் நிறுவனத்தில் வேலை. வாடகை குறைவாக இருக்கிறது என்று சுல்தான்பூரில் மேலும் இரண்டு அறைத்தோழர்களுடன் தங்கியிருந்தான். சுற்றிலும் நிறைய சீக்கியக் குடும்பங்கள். இவர்கள் தங்கியிருந்த வீடு வைதீகம் செய்து வைக்கும் நாராயண சாஸ்திரிகள்  வீடு. எப்போதோ அங்கு வீட்டு மனைகள் மிகவும் மலிவாக இருப்பதைக் கேள்விப்பட்டு இருந்த காசில் அவர் கட்டி வாடகைக்கு விட்டிருந்த வீடு. மேலும் கீழுமாக நான்கு குடித்தனங்கள். அத்தனையும் தமிழ்க்குடும்பங்கள். வியாசன் இருந்த வீடு மட்டும் பிரம்மச்சாரிகள் குடித்தனம்.  மற்ற குடும்பஸ்தர்களுக்கு ஏதாவது அவசரம் ஆத்திரத்துக்கு உதவிக்கு ஆகும் என்று நாராயண சாஸ்திரிகள் இவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். அவர் சற்று தூரமாக தசரத்புரியில் குடியிருந்தார்.

அந்தக் குறிப்பிட்ட நாளின் காலை 9.30 மணி சாத்தானின் பொழுதாக மாறியது. இந்தியப் பிரதமரின் இரு மெய்க்காவலர்கள் அவருடைய வீட்டிலேயே அவரைச் சுட்டுச் சாய்த்த செய்தி காட்டுத்தீயாக தில்லியெங்கும் பரவியது. அவர் இறந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டுமே செய்தி பரவியது.  அந்த வேளை ஊருக்குள் அனர்த்தமாக சிலர் இனிப்புகளை விநியோகிப்பதாக வதந்திகள் பரவி தில்லியிலும் மற்ற இடங்களிலும் பரவலாக அங்கங்கு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.  சிலரை வீடுகளுக்கு உள்ளேயே அடைத்து வைத்துத் தீ வைத்தனர்.  நகரெங்கும் மரணம் கொடிய முறையில் நர்த்தனமாடிக் கொண்டிருந்தது.

இவர்கள் தங்கியிருந்த சுல்தான்புரியிலும் பல வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.  கையில் தீப்பந்தங்களுடனும் பெட்ரோல் கேன்களுடனும் வீடு வீடாகத் தேடி வந்து கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் மனிதர்களுக்கும் தீ வைத்தார்கள். ஜெகதாம்பா மார்க்கெட் சாலையில் வியாசனின் கண்ணெதிரிலேயே ஒரு லாரியை மடக்கி   ஓட்டியவனைக் கீழிறக்கி   பெட்ரோல் ஊற்றி நனைத்த பெரிய டயரை மாலை போல அவன் கழுத்தில் மாட்டி அதில் தீவைத்துக்  களித்தது ஒரு கும்பல். கையில் நீளமான லத்தியை பின்பக்கம் ஏறக்குறைய தன் புட்டத்தில் செருகிக்கொண்டு சாய்ந்து நின்று   சில போலீஸ்காரர்கள் தூரமாக நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.    இக்காட்சியைக் காணச் சகிக்காமல் வீட்டுக்கு ஓடினான் வியாசன்.

எங்கும் மரண ஓலம்.  மனிதச் சதைகளும் முடியும் கருகும் துர்வாடை.  அங்கங்கு சிதறிக்கிடந்த தலைமுடிகள். அறைகுறையாக வெந்து தணியாமல் விரைத்திருக்கும் பிணங்களின் அவலக்காட்சி.  ஒருவழியாக வீடு சென்றடைந்தான்.   அருகில் இருந்த  கடைகளை சிலர் சூறையாடிக் கொண்டிருந்தார்கள்.  சிலர் தலையில் டிவி பெட்டியையும் நாற்காலிகளையும் டேப் ரிக்கார்டர்களையும் சுமந்து வேகமாக விரைந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிலர் வியாசனுக்குப் பரிச்சயமானவர்களாக இருந்தார்கள்.  யாரும் யாருடைய கண்களையும் சந்திக்காமல் விரைந்து கொண்டிருந்தார்கள். சில கடைகளும் வீடுகளும் பற்றி எரிந்து கொண்டிருந்தன.  பெண்கள், குழந்தைகளின் அழுகுரல் வயிற்றைக் கலக்கியது.  சற்றுத் தூரமாக இளைஞர்களின் கும்பல் ஒன்று மூன்று இளம்பெண்களை கைகளைப் பிடித்து எங்கோ தரதரவென்று இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். ஏறத்தாழ மயங்கி விழும் நிலைக்கு வந்திருந்தான் வியாசன். வீட்டுக்குத் திரும்பியபோது அங்கு சக அறைவாசிகள் யாருமில்லை.  படியில் அங்கங்கு கற்கள் இறைந்திருந்தன. ஒன்றிரண்டு பருமனான தடிக்கம்புகளும் படியின் குறுக்காக வீசியெறியப்பட்டிருந்தது.

படியேறி வீட்டுக்கு வந்து மாடியிலிருந்து வெளியே பார்த்தபோது, கண்ணுக்கு எட்டியதூரம் வரை கரும்புகை மண்டலம். பெண்களின் அவலக்குரல்.  குழந்தைகளின் ஓலம். மரண விளிம்பைத் தொடும் ஆண்களின் இறுதி நேரக் கதறல்… வீட்டைத் திறந்து உள்ளே காலடி எடுத்து வைத்ததும் பெருங்குடல் வெளியில் சிதறி வருவது போலப் பெரிய ஓலத்துடன் வாந்தி எடுத்தான். அறை உள்ளெங்கும் வாந்தி பெரும் நாற்றத்துடன் சிதறியது.  தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்தான் வியாசன்.

“அப்போது எனக்கு வெறும் மூன்று வயதுதான் பாய்ஜி.  கொஞ்சம் வளர்ந்ததும் பப்பாஜி நடந்த எல்லாக் கதைகளையும் அவ்வப்போது சொல்வார். நடுத்தர வயது சீக்கியர் ஒருவர் தன்னுடைய இடுப்பில் மூன்று வயதுச் சிறுவனைத் தூக்கி வைத்துக் கொண்டு நின்றதையும் அவருடைய இடுப்பைச் சுற்றி வளைத்த கரங்களுடன் எட்டு வயதுப் பையன் ஒருவன் உங்கள் வீட்டின் படியில் உயிர் பயத்துடன் ஒடுங்கி நின்றிருந்த காட்சியையும் பப்பாஜி அப்படியே ஒரு திரைக்காட்சி போல விவரித்து இருக்கிறார்.  

‘மாலை நேரத்தின் அரையிருளில் ஒடுங்கி நடுங்கி நின்றிருந்த பப்பாஜியை நீங்கள் அடுத்தவருக்குத் தெரியாமல் உங்கள் சிறிய வீட்டுக்குள் கொண்டு வந்து ஒளித்து வைத்ததை சொல்லியிருக்கிறார். அப்போது அக்டோபர் மாதம். பப்பாஜியும் அவர் இடுப்பில் இருந்த பையனும் உடன் நின்றிருந்த பையனும் குளிரால் நடுங்கியவாறு உயிர்ப்பயத்துடன் நின்றிருக்கிறார்கள். அவர்களை   அழைத்து வந்து,   வீட்டில் இருந்த  கம்பளி, குளிராடைகளையும் கொடுத்தது பற்றிச் சொல்லியிருக்கிறார். சுல்தான்புரியின் ஏ-4 பிளாக்கில் மொத்தம் 84 வீடுகளை வன்முறை கும்பல் கொளுத்தியது பற்றியும் இரவு முழுக்க அப்பகுதியில் கேட்ட ஓலக்குரல்களைப் பற்றியும் கூறியிருக்கிறார். அவை அத்தனையும் உயிரின் கூக்குரல்கள் என்று கூறுவார் பப்பாஜி. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒருவராவது இறந்திருப்பார்கள் என்று பிறகு சொன்னார்கள். எங்கள் வீட்டில் ஒரு கும்பல் நுழைந்து எங்கள் பெப்பியை (அம்மா) கதறக் கதறத் தூக்கிக் கொண்டு போனார்கள். அவர் உயிருடன்தான் இருக்கிறாரா என்று இன்றுவரை எங்களுக்குத் தெரியாது பாய்ஜி’. 

‘பதற்றத்துடன் என்னை இடுப்பில் தூக்கிக் கொண்டும் என் சகோதரனை இழுத்துக்கொண்டும்  பின்வாசல் வழியாகத் தப்பித்து ஓடிய சந்தர்ப்பத்தில் பெப்பியைத் தாக்கி இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். கடைசி வரை அவருக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை என்று சொன்னார் பப்பாஜி.  உங்கள் வீட்டில் பதுங்கியவாறு பெப்பி அணிந்திருந்த ஆடையின் நிறம்,   அடையாளங்களையும் கூறி அவளைத் தேடச்சொல்லி உங்களிடம் சொன்னாராம். உங்களாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

நான்கைந்து நாட்கள் எங்களை   வீட்டுக்குள் ஒளித்து வைத்து நீங்கள் அடைக்கலமும் உணவும் தந்ததாக பப்பாஜி சொல்வார். உங்கள் பகுதியில் பல இடங்களில் அடைக்கலம் கேட்டு வந்தவர்களைக் கொலைகாரக் கும்பலுக்குக் காட்டிக் கொடுத்த பலரும் இருந்திருக்கிறார்கள். அவர்களிடையில் நீங்கள் கடவுளாகத் தெரிந்தீர்கள் என்று பப்பாஜி கண்ணீர் மல்கக் கூறுவார்”…

 நான்கைந்து நாட்களில் நிலைமை சற்று மாற்றமடையத் தொடங்கியது. கூட்டத்தின் கொலைவெறி சற்றுத் தணிந்திருந்தது. இக்கொலைகளுக்குக் காரணம் யார் என்று ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினார்கள்.  ஒரு குறிப்பிட்ட கட்சியின் சில தலைவர்களின் பெயர்களையும் அச்சத்துடன் சொன்னார்கள். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் அங்கங்கு நிவாரண முகாம்களை அமைத்தது. வியாசனின் வேண்டுகோளுக்கு இணங்க அதுபோன்ற நிவாரண முகாமுக்கு அங்கத் சிங்கையும் தங்களின் வாகனத்தில் பத்திரமாக அழைத்துச் சென்றார்கள் போலீசார்.  ஒரு வாரத்துக்குப் பிறகு நிலைமை மேலும் சரியானது போல இருந்தது. ஃபர்ஷ் பஜார் நிவாரண முகாம் சென்று ஓரிருமுறை  அவர்களைப் பார்த்து வந்தான் வியாசன்.  மூத்த மகன் அர்ஜன் சிங், அங்கு சேர்க்கப்பட்ட நாளிலிருந்து  வானத்தையே வெறித்துப் பார்த்தவாறு படுக்கையிலேயே படுத்திருந்ததாகச் சொன்னார்கள்.   சிறிது நாட்களுக்குப் பிறகு சென்று பார்த்தபோது அவர்கள் அந்த முகாமில் இல்லை.   சிறிது நிவாரணத்தொகை பெற்றுக் கொண்டு தன்னுடைய  சொந்த கிராமத்துக்கு அவர் மகன்களுடன் சென்று விட்டதாகச் சொன்னார்கள்.

“பாய்ஜி, குர்தாஸ்பூர் போவதற்கு முன்பு பப்பாஜி எங்களை நாங்கள் குடியிருந்த சுல்தான்பூர் வீட்டுக்கு எங்களை அழைத்துப் போனார். அந்தப் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் பாதி கொளுத்தப்பட்ட கதவுகள், கறுத்துப் போன சுவர்கள், அப்போதும் சற்று மிச்சமிருந்த பிணவாடை என்று   தெருவே பெரிய சுடுகாடாக இருந்ததாக சொல்வார். உங்களைப் பார்க்க சுல்தான்புரி வந்ததாகவும் ரயில் போக்குவரத்து   சரியானதும் நீங்கள் சொந்த ஊருக்குப் போயிருப்பதாகவும் அக்கம்பக்க வீடுகளில் சொன்னார்கள்’. 

எங்கள் பெப்பியை எங்கும் காணவில்லை. நடுவீட்டில் குனிந்து முத்தமிட்டு வாஹேகுருவின் நாமங்களைச் சொல்லி வணங்கிவிட்டு  தன் சொந்த கிராமத்துக்கு எங்களைக் கூட்டி  வந்ததாகச் சொன்னார் பப்பாஜி.  அண்ணன் அர்ஜன் சிங் அதிர்ச்சியில் வெறித்த பார்வையுடனே பல வருஷங்கள் இருந்தான்.  ஒருநாள் அவனுடைய இருபத்து இரண்டாவது வயதில் பியஸ் நதியின் கரையில் அவன் பிணம் ஒதுங்கியதாக யாரோ வந்து சொன்னார்கள். நானும் பப்பாஜியும் அங்கே ஓடிப்போனோம்.  போலீஸ்காரர்கள் அவனுடைய பிணத்தை எங்களிடம் ஒப்படைத்தார்கள். பிணமான போதும் அதே பீதியடைந்த கண்களுடன் எங்கோ வெறித்துப் பார்த்தவாறே சிதையில் அடங்கிப்போனான் அர்ஜன் சிங்’.

‘எங்கள் வாழ்க்கையில் சுல்தான்புரியில் நடந்தவற்றைப் பற்றிக் கூறும்போதெல்லாம் பப்பாஜி உங்களைப் பற்றிச் சொல்வார். அப்போதெல்லாம் அவருக்குக் கண்ணீருடன் நன்றியுணர்ச்சியும் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்து இருக்கிறேன்.  எக்காரணம் கொண்டும் தில்லிக்கு மீண்டும் போகக் கூடாது என்று  தான் சாகும் வரை உறுதியுடன் இருந்தார் பப்பாஜி. இப்போது எங்கள் குடும்பத்தில் நான் ஒருவன்  மட்டுமே எஞ்சியிருக்கிறேன் பாய்ஜி. எங்கள் உயிருக்கு அடைக்கலம் கொடுத்த உங்களை ஒருமுறை பார்த்து உங்கள் பாதங்களைத் தொட்டு வணங்குவதால் பப்பாஜியின் ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கும் என்று நினைத்தேன். அவர்  வேண்டாம் என்று சொல்லியும் மூன்று மாதங்களுக்கு முன்பு தில்லி வந்து சுல்தான்புரி  ஏ-4 பிளாக்கில் தேடினேன்’. 

அங்கு   மதராசிகள் வசித்த ஒரே வீடு உங்களுடையதுதான். இப்போதும் அங்கே சில மதராசி பண்டிட்டுகள் இருக்கிறார்கள். உங்கள் பெயர் மட்டும்தான் பப்பாஜி அடிக்கடி சொல்வார். அதை வைத்துக்கேட்ட போது அந்த வீட்டில் இருந்த  மதராசி பண்டிட்டு குடும்பங்கள்   சில வருடங்களுக்கு முன்பு துவாரகாவில் சொந்த வீடு கட்டிக் கொண்டு போனதாகச் சொன்னார்கள்.  அவர்கள் சொன்ன குத்து மதிப்பான முகவரியைக் கண்டுபிடித்து துவாரகா  சென்று விசாரித்தபோது, நீங்கள் அந்த வீட்டை விற்று விட்டு சொந்த ஊரில் குடியேறியதாகச் சொன்னார்கள். பிறகு நீங்கள் நாடகங்கள், சினிமா ஆகியவற்றில் தீவிரமாக இருந்ததாகவும் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள மதராசிகளின் சங்கத்தில் போய்க் கேட்டால் உங்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும் என்றார்கள். அதை வைத்து இங்கே இருக்கிறேன் பாய்ஜி’.  

உங்களை சந்தித்து உங்கள் பாதங்களில் விழுந்து என் நன்றியை சமர்ப்பித்தது என் பப்பாஜியின் ஆன்மாவுக்கு நிச்சயம் சாந்தி அளித்திருக்கும். ஆனால் ஒரு விஷயம் உங்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும் பாய்ஜி… என்று இழுத்தான் லக்கி சிங்.

“உங்களைத் தேடி சுல்தான்புரி சென்ற போது ஏ-4 பிளாக்கில் நான் சந்தித்த  வயதான சர்தார்ஜி ஒருவர் கூறினார்…. அந்தப் பகுதியில் உள்ளே இருந்தவர்களையும் சேர்த்து  முற்றிலும் எரிந்துபோன ஒரு வீட்டின் பின்புறம் நின்று கதறி அழுது கொண்டிருந்த ஒரு பையனை என் பப்பாஜி காப்பாற்றித் தன்னுடன் அழைத்துச் சென்றதாகக் கூறினார். அவனைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா பாய்ஜி?  அது நானா இல்லை என் அண்ணன் அர்ஜன் சிங்கா என்று ஏதாவது தெரியுமா?” என்றான்… 

 ‘இதுபற்றி என்னிடம் பப்பாஜி எப்போதும் ஒன்றும் கூறியது இல்லை.    தன் பிள்ளையல்லாத எங்களில் ஒருவரை அகதிகள் முகாமில் ஒப்படைக்காமல் குர்தாஸ்பூர் கூட்டிச் சென்றார். எங்கள் இரண்டு பேரையும் ஒன்று போலத்தான் வளர்த்தார்.  கலவரத்தின் போது பப்பாஜி தூக்கிக் கொண்டு வந்த பையன் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?” என்றான் லக்கி.

“இதோ பார் லக்கி… உன்னுடைய பப்பாஜி அங்கத் சிங்கை முதன்முறையாக எங்கள் இருட்டான மாடிப்படியில்தான் சந்தித்தேன். அப்போது அவருடைய இடுப்பில் நீயும் பக்கத்தில் ஒடுங்கியவாறு உன் அண்ணன் அர்ஜன் சிங்கும் இருந்தான். உங்கள் எல்லோரையும்   என் வீட்டில் ஒளித்து வைத்து  பிறகு நிவாரண முகாமுக்கு   அழைத்துச் செல்ல நான்தான் ஏற்பாடு செய்தேன்.  அங்கும் உன் பப்பாஜி இதுபற்றியெல்லாம் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.  நீங்கள் இருவருமே அவருடைய பிள்ளைகள்தான் என்று இன்றுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இருக்கிறேன். தேவையில்லாத ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம்.  நீ இதைச் சொன்ன பிறகு மிகவும் உயர்ந்த மனிதராக உன்னுடைய பப்பாஜி என் மனதில் இன்னும் உயர்ந்திருக்கிறார். அவரை எப்போதும் வைத்துக் கொண்டாடு. அவருடைய நினைவைக் கொண்டாடு… ஊரெல்லாம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது ஒருமனிதன் தன்னுடைய சொந்தத் துயரிலும் இன்னொரு உயிரைக் காப்பாற்றித் தான் உயிருள்ளவரை பொத்திப் பாதுகாத்து இருக்கிறான்.  நீயும் அவருடைய பிள்ளை. அர்ஜன் சிங்கும் அவருடைய பிள்ளைதான். உனக்கும் நாற்பதுக்கு மேல் ஆகிவிட்டது. நீ ஒன்றும் சின்னக்குழந்தை கிடையாது” என்று வியாசன் சொன்னதை அத்தனை விரும்பவில்லை என்று அவன் முகத்தில் தெரிந்தது.

நீண்ட நேரமாகிவிட்டது. இவன் மோரும் குடிக்கவில்லை.   சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டும் என்று சமையலறை சென்று அவனுக்கு இரவு உணவு தயார் செய்வதற்காக துங்காவிடம் கூறிவிட்டு கூடத்துக்குத் திரும்பியபோது லக்கி சிங் உட்கார்ந்திருந்த நாற்காலி காலியாக இருந்தது. வீட்டுக்கு வெளியில் சென்று சிறிது தூரம் வரை சென்று பார்த்தபோது அவன் எங்கும் காணப்படவில்லை.  அவன் வந்து போன சுவடு மட்டுமே வியாசன் நெஞ்சில் நீண்டநேரம்  உறைந்திருந்தது. 

-அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருது 2024 பரிசு பெற்ற கதை


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஊடாடும் பெருநிழல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.