எம் பேரு அம்மணி!. ஆனா, யாருமே பேர சொல்லி கூப்புடமாட்டாங்க. அக்கம் பக்கத்துல உள்ளவங்க ‘ஊமச்சி’னு சொல்லுவாங்க. அம்மா, ‘ஏய் மக்கு’ன்னும் அப்பா, ‘ஏய் எரும’ன்னும்தான் கூப்புடுவாங்க!, நா எதுக்குமே லாயிக்கு இல்லியாம்! திட்டிக்கிட்டே இருப்பாங்க. அதனாலியே, நா யாரு மூஞ்சியும் பாக்கவே மாட்டன். பராக்குப் பாத்துகிட்டு, நா பாட்டுக்கு வாய்க்குள்ளார ஏதாவது மொனவிக்கிட்டே கெடப்பன்.
யாரு கூப்புட்டாலும் காது கேக்காத மாரிதான் இருப்பன். யாருகிட்டியும் பேசவும் புடிக்காது.
ஒரு நாளு, புதுசா ஆண்டி ஒருத்தவங்க வூட்டுக்கு வந்தாங்க.
“ஊம் மவளுக்கு என்னா காமாச்சி? ஒடம்பு சரியில்லியா?. நாக்க வெளிய நீட்டிக்கிட்டே இருக்காளே!. அப்பப்ப எச்சி வேற ஒழுவுது?.
“அது ஒரு மக்கு சாம்பிராணிக்கா. புத்தி கொஞ்சம் மந்தம். அதான்!.”
அவிங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டது கேட்டுச்சி. யனக்கு என்னோட யோசன!..
‘அந்த ஆளுங்கல்லாம் எங்க போறாங்க?. அந்த நாயி யான் அந்த பையன பாத்து அப்பிடி கொலக்கிது?.’
நா, மத்த பிள்ளிங்ககூடல்லாம் வெளாடவும் மாட்டன். அதுங்கல்லாம் ரொம்ப றப்பு புடிச்சதுங்க. என்னிய எளக்காரமாவே பாக்கூங்க.!. சில ராங்கி புடிச்ச பிள்ளிங்க என்னடான்னா, வேப்ப குச்சிய ஒடிச்சி எம்மூஞ்சி கிட்ட ஆட்டி, ‘பூச்சாண்டீன்னு’ன்னு பயங்காட்டுங்க. எனக்கு ஒரே அழுவாச்சியா வந்துரும். அதனால, அதுங்ககூடல்லாம் சேர மாட்டன். நா பாட்டுக்கு எங்க பெரஞ்ஜாவுல உக்காந்துகிட்டு அதுங்க வெளாடறத பாத்துக்கிட்டு கெடப்பன். யாராவுது கீழ உழுந்துட்டாங்கன்னா,‘நல்லா வேணும்..’ன்னு கைய தட்டி சிரிச்சுக்குவன், யாராவது மத்தி ஆயிட்டாலும் அப்பிடிதான்!.
எனக்கு, பக்கத்து வூட்டு தாத்தாவ ரொம்ப புடிக்கும். அவுரு காலீலேர்ந்து உச்சி வெயிலு வர்ற வரிக்கும் வேப்பமரத்தடீல உக்காந்துகிட்டு பேப்பரோ, போனோ பாத்துக்கிட்டே கெடப்பாரு. எங்க அம்மம்மா செத்து போனதுக்கப்பறம் அவுருதான் எனக்கு ரொம்ப சாயாங். மலேசியா ஐஸ்கிரீம், உப்பு போக்கனான்னு தெனந்தோரும் ஏதாவுது வாங்கி கொடுப்பாரு. ஐஸ்கிரீம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சாப்புட்டுக்குவோம். போன்ல படமல்லாம்கூட காட்டுவாரு. அதுனாலியே எங்க அம்மா, அப்பா வேலக்கி போயிட்டவொன்னியே அவுருகிட்ட ஓடி போயிருவன். என்னிய தூக்கி மடீல வெச்சுக்கிட்டு,’என் செல்லம்’ன்னு கொஞ்சுவாரு!. எங்க அம்மா, அப்பாகூட அப்பிடில்லாம் என்னிய கொஞ்ஜினதே இல்லை. எங்க அம்மாகூட வேலக்கி போறப்ப,‘புள்ள ஒண்டியா இருக்கா. கொஞ்சம் பாத்துகுங்க தாத்தா..’ன்னு சொல்லிட்டு போவாங்க.
* * *
எங்க வூட்டுக்கு எதுத்தாப்ல வேப்பமரம் ஒன்னு இருக்கு?.. நா அதோட உச்சிய மட்டும் பாக்கவே மாட்டன். ஏன்னா, அங்கதான் பூச்சாண்டி இருக்குதாம். எல்லாரும் அப்படி சொல்லித்தான் பிள்ளிங்களுக்கு பயங்காட்டுவாங்க!.
நா சாப்புடாம அடம் புடிச்சாக்கா, என்னாச்சும் ராங்கி செஞ்ஜாக்க ஒடனே எங்கம்மா மரத்தக் காட்டி, ‘பூச்சாண்டிய கூப்புடட்டா..’ன்னு மெரட்டுவாங்களா?. எனக்கு ஒரே பயமா போயிரும். இந்த பூச்சாண்டி வேற பாக்கறதுக்கு எப்படி இருக்குமோன்னு நடுங்கி சாவேன்.
அன்னிக்கி அப்பிடிதான்!. என்னமோ காட்றாங்களேன்னு எக்குதிப்பா வேப்பமர உச்சிய பாத்து தொலச்சிட்டன். அந்த நேரன்னு பாத்து, பூச்சாண்டி கீழ வர ரெடியாயிட்டு இருந்திச்சி போல!.
அம்மா சொன்னாங்க!.
‘தோ பாத்தியா, உச்சீல எலையெல்லாம் ஆடுது. பூச்சாண்டி, எறங்கி வர்றதுக்கு தயாரா இருக்கு.. நா இப்ப வான்னு.. சொன்னா போதும், ஒடனே வந்துருமாக்கும். பாக்குறியா?. ஊட்டி உடறதுக்கு நீ உன்னும் சின்ன பிள்ள இல்ல, தெரிஞ்சிக்க’.
அவ்ளோதான்!. நா அங்கினியே மூத்திரம் போயிட்டன். உடனே அம்மா, ‘தடி மாட்டுக் கழுத’ன்னி ஏசி, மங்காலியே முதுவுல ரெண்டு மொத்து மொத்துனாங்களா, எனக்கு ஒரே அழுவாச்சியா போச்சி.
அன்னிக்கேர்ந்து, எனக்கு ஒரே ஆச!. எப்படியாவுது அந்த பூச்சாண்டிகூட பேசி கூட்டாளி ஆயீர்னூமே!.
ஆனா, எப்பிடி கூட்டாளி புடிக்கிறதுன்னுதான் தெரியில?.
* * *

அன்னிக்கி, ‘ஏய் மக்கு, எங்கடி உன்னோட செவுப்பு ரிப்பன காணம்’ன்னு அம்மா முதுவுல ரெண்டு வெச்சி தேட சொன்னாங்க. அழுதுகிட்டே வாங்குக்கடியில இருந்த கடுதாசி பொட்டிக்குள்ளார தேடுனன்.. தக்கிங்க, குண்டுமணிங்க, புளியாங்கொட்டைங்க, ‘அஞ்ஜாங் கல்லுங்க’, பிளாஸ்டிக் கப்புங்கன்னு கண்டது கடையதெல்லாம் இருந்துச்சி. அப்பதான் நா சின்ன பிள்ளியா இருந்தப்ப வெளாண்ட அந்த பொம்மய பாத்தனாக்கும். ஒடனேயே எனக்கு ஏன்னு தெரியில, பூச்சாண்டி ஞாவகம்தான் வந்துச்சி!.
வெறும் தல மட்டுந்தான் கெடச்சிச்சி!. முண்டத்த காணோம். தல முடிகூட இல்லாம மொட்ட தலையா வேற இருந்துச்சி. கண்ணெல்லாம் ஒரே தூசி. அந்த கண்ணுல எச்சிய துப்பி எம் பாவாடயால தொடச்சி உட்டன். அப்பா, எவ்ளோ பெரிய கண்ணுங்க? யம்மாடி!, ஒதடுங்கதான் என்னாமா செவுப்பு!. காலீல என்னோட வாயிலேர்ந்து ரத்தம் வருமே அந்தமாரி ஒதட்லேர்ந்து ரத்தம் வருதாக்கும்!. வெரலால ஒதட்ட தடவி பாத்தன். நல்ல காலம் ரத்தம் வர்ல. அந்த சின்ன மொகத்துல கன்னங்கதான் எப்பிடி ‘புப்புனு’ உப்பிப்போய் இருக்குது!. ஆ, மறந்தே போயிட்டன்!. கன்னத்த தடவுனா இந்த பொம்ம கண்ண சிமிட்டுமே!
நா, பொம்மயவே கொஞ்ச நேரம் உத்துப் பாத்துக்கிட்டு இருந்தன்.. தல முடி இல்லாம மொட்டையா பாக்க என்னமோ மாரி இருந்துச்சி. திடீர்ன்னு,
‘ஒரு கா, பூச்சாண்டிகூட இப்பிடித்தான் இருக்குமோ?.’
நெனச்சனா இல்ல வாய்க்குள்ளாரியே மொனவிக்கிட்டனான்னு எனக்கே தெரியில?.
‘சடீர்ன்னு பாத்தாக்கா பொம்ம கண்ண சிமிட்னமாரி இருந்துச்சி!.’
அய்!, கன்னத்த தடவுனா இல்ல கண்ண சிமிட்றதுக்கு!.. நாந்தான் கன்னத்துல கைய வெக்கவே இல்லியே?.
எனக்கு ஒரே ஆச்சரியமா போச்சி. பொம்ம உண்மிலியே கண்ண சிமிட்டிச்சா, இல்லியா? நா பாத்தது நெசம் போலயா இல்ல சும்மாவா?. எனக்கே இப்ப சந்தேகம் வந்திரிச்சி!. ஆனா, பயமா இல்ல. நா, சின்ன பிள்ளீல வெளாண்ட ‘பேபி’ பொம்மதான அது!.
ஆ!. ‘பேபி’!. அதான் அதோட பேரு!.
* * *
பேபி,
நல்ல காலம் ஒன்ன நா கண்டுபுடிச்சது!. நீ எனக்கு ஒரு ஒதவி செய்யனுமே?. எங்கம்மா எப்ப பாத்தாலும் ‘பூச்சாண்டிய கூப்புடட்டா’ன்னு மெரட்றத என்னால தாங்கமுடியில. நா எப்பிடியாவுது பூச்சாண்டிகூட பேசி கூட்டாளி ஆயிட்டா அது போதும் எனக்கு. நா ஊங்கிட்ட சொல்றதல்லாத்தியும் பூச்சாண்டிக்கிட்ட சொல்லி எங்கள கூட்டாளி ஆக்கி வெச்சிறேன்?.
ம்ஹும்.. இல்ல இல்ல.. அந்த மாரி வேனா!. நீ பேபி இல்ல!.. எனக்கு இப்ப நீதான் அந்த பூச்சாண்டி!.. நா ஊங்கூட பேசுனா, அது நேரா பூச்சாண்டிகிட்டியே பேசுற மாரிதான்.. ஆ!. அதான் சரி.
‘ஐ!.. நீ இப்ப இன்னோருக்கா கண்ண சிமிட்னதானே?’
எப்படி அது? யாரும் கன்னத்த தடவாமிலியே நீ கண்ண சிமிட்றியே?. ஆச்சரியமா இல்ல இருக்கு!.. அப்படின்னா, நா இப்ப பூச்சாண்டிகூடதான் பேசிக்கிட்டு இருக்கேன்னு சொல்லு!. அடி சக்க!.
* * *
பூச்சாண்டி,
நா ஊங்கூட பேசிட்டு இருக்குறத நெனச்சாக்கா என்னால நம்பவே முடியில!. எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா!. சொன்னா நம்பமாட்ட!. ரெண்டு தடவ நீ கண்ண சிமிட்டி சிக்னல் காமிச்சதுலேர்ந்து ஊம் மேல இருந்த பயங்கூட கொஞ்ஜம் கொறஞ்ஜிதான் போச்சின்னா பாத்துக்கியேன்!. ஊங்கிட்ட பேசறதுக்கு எவ்ளோ ஆசயா இருக்கு தெரியுமா?.
ஆமா, பொழுதன்னிக்கும் அரச மரத்து உச்சீலியே உக்காந்துகிட்டு என்ன செய்வே? ஒனக்கு ‘லெச்சேவா’ இருக்காதா?. எப்பப் பாத்தாலும் எங்க பாட்டிமாரி தூங்கிட்டே இருப்பியோ?. அதான், அம்மா உன்னிய எத்தினியோவாட்டி கூப்புட்டாலும் ஒரு வாட்டிகூட வந்ததே இல்லியா?.
பூச்சாண்டி, ஒரு பேச்சுக்கு கேக்கறன். அப்பிடியே என்னிய உச்சிக்கு கூடிட்டு போயிட்டு என்ன செய்வே?. ‘ஏன்டி ரொம்ப ராங்கி பன்ற?.’ன்னு கேட்டு, அங்கேர்ந்து கீழ தள்ளிவுட்ருவியோ?. ஐயோ, அவ்ளோ மேலேர்ந்து உழுந்தாக்கா நா செத்து இல்ல போயிருவேன்!. பூச்சாண்டி, உன்ன கையெடுத்து கும்புடறன்! அப்படி ஏதும் செஞ்சிறாதயேன்!. இனிமேக்கி நா, ஒழுங்கா இருக்கனாக்கும்.
* * *
பூச்சாண்டி,
உண்மிய சொல்லு. நேத்து ராத்திரி நீ எங்க வூட்டுக்கு வந்ததானே!.. என்ன ஏமாத்த முடியாது. மணி எத்தன இருக்குமோ தெரியில?. எனக்கு முழிப்பு வந்துரிச்சி!. அப்ப, திடீர்னு ஓட்டு மேல யாரோ நடக்குற சத்தம்!. அது நீயாதான் இருப்பேன்னு எனக்குத் தெரிஞ்சி போச்சி. என்னைப் பாக்கதான வந்தே?.
மக்கா நாளு, அம்மா ‘மூசாம் பூணையா இருக்கும்டி’ன்னு ஏதோ சொன்னாங்க. ஆனா, எனக்கு தெரியும்!.. அது, நீயேதான்?. நீகூட ஏங்கிட்ட வந்து, ‘அம்மணீ, நா யாரு தெரியுதா’ன்னு கேட்டியே!. ஊம் மூஞ்சிகிட்ட ஒரே வெளிச்சமா இருந்திச்சா! என்னியால சரியா பாக்க முடியில. நா பதில் சொல்றகாட்டியும் ‘என்னிய பாத்து நீ ஒன்னும் பயப்பட வேணாம். நாதான் இப்ப உன்னோட கூட்டாளி ஆயிட்டன் இல்ல!. இனி தைரியமா இரு’ன்னு சொல்லிட்டு மறஞ்ஜி போயிட்ட. எனக்கு ஒரே ஆச்சிரியிமா இருக்கு!. நெசமாலியும் நீ வந்ததானே? அதனாலதான், ஓம்மேல இருந்த பயமேல்லாம் இப்ப எங்க போச்சின்னே தெரியிலியா?.
நேத்து ராத்திரி நா உன்னிய தோ இந்த லாச்சிகுள்ளாரதான் வெச்சேன்னு நெனைக்கிறன். ஒனக்கு பசிக்குமேன்னு இந்த வாழ பழத்தகூட பக்கத்திலியே வெச்சன்!. ஆனா, இன்னிக்கி பாத்தாக்கா, நீ வெளிய மேச மேல இருக்க!. தோ, இந்த வாழ பழத்த பாரேன். ஒரு பக்கமா கடிச்சிருக்கு தானே!. அப்படின்னா, அதுக்கு என்னா அர்த்தமாம்?. ம்.?.
பாத்தியா, இப்ப நீ கண்ண சிமிட்னதானே!. அதான், என்னிய இனிமேக்கி நீ ஏமாத்த முடியாதாக்கும்!,. தெரிஞ்சிக்க.
பூச்சாண்டி, ஒரு நாளிக்கி என்னிய வேப்பமர உச்சிக்கு கூட்டிட்டுதான் போயேன். உன்னோட எடத்த பாக்கனூன்னு எவ்ளோ ஆசயா இருக்கு தெரியுமா? எங்க வூட்ல என்னிய வெளிய எங்கியும் கூடிட்டே போவமாட்டாங்க.
* * *
பூச்சாண்டி,
ஏன்னு தெரியில, எனக்கு இன்னிக்கி ஒரே தூக்கம் தூக்கமா வருது. நா சீக்கிரமா படுக்கப் போறன். ஊங்கூட நாளைக்கி பேசறேனே?. கோவிச்சிக்க மாட்டியே?.
‘ஐ!. நா இப்ப எங்க இருக்கன்?. இவ்ளோ ஒசரத்துக்கு எப்படி வந்தன்?. கொஞ்சம் எக்குனா மேல நச்சத்திரங்களகூட தொட்டுற்லாம் போல இருக்கே!. இது என்னாது?. பொக மூட்டம் கூட்டம் கூட்டமா எங்கியோ போவுதே!. நிலா வெளிசத்துல சுத்தி இருக்குற எலையெல்லாம் என்னமா மின்னுது?. ஓஹோ!. இதான் பூச்சாண்டி இருக்குற வேப்பமர உச்சியா? என்னிய இங்க கூட்டிட்டி வந்து வுட்டுட்டு இந்த பூச்சாண்டி எங்க போச்சி?. இங்க இருக்குறது எங்கியோ காட்டுக்குள்ளார இருக்குற மாரியில்ல இருக்குது. தோ தூரத்துல மலையெல்லாம்கூட தெரியுதே!, இதான் பாட்டி சொன்ன பத்துமலையா?. அடேயப்பா எவ்ளோ ஒயரமா இருக்கு?. பக்கத்துலியே அவுங்க சொன்ன ராமர் கோவிலு, கொளம், அனுமாரு செல எல்லாங்கூட தெரியுதே!. ஆமா இவ்ளோ வெளிச்சமா இருக்கே இப்ப இங்க ராவா பகலா?. சுத்தீரும் குருவிங்க, பாப்பாத்திங்க, தட்டாங்கல்லாம்கூட பறந்துகிட்டு இருக்குதுங்களே!. அப்பா, இந்த எடம் எவ்ளோ அழகா இருக்குது!. ஐயோ! அங்க பாருங்களேன், கிளிங்கள!. அடேயப்பா!. எவ்ளோ கிளிங்க!.’
‘ஆமா, அந்த மரத்தடீல யாரோ உக்காந்திருக்காங்களே? எங்கியோ பாத்த மொகமா இல்ல இருக்கு?. ஐ, அம்மா!. அட, பொடவீல எவ்ளோ அழகா இருக்காங்க?. ‘அம்மா!.’ நா ஆசயா கூப்புடறன். ஆனா, சத்தம் வெளிய வரவே இல்ல. அம்மா என்னிய பாத்துட்டாங்க. ‘அம்மணி கண்ணூ..’ன்னு ஓடி வந்து கட்டி புடிச்சிக்கிட்டாங்க. “ஏஞ் செல்லம்’ன்னு மூஞ்செல்லாம் முத்தம் குடுத்து கொஞ்சினாங்க. ‘இவ்ளோ நேரமா எங்கடீ போனே?’ன்னு கேட்டு மடீல உக்கார வெச்சிகிட்டு, ரெட்ட ஜட பின்னிவுட்டாங்க. ‘சாப்பாடு ஊட்டிவுடடாடீ’ன்னு கேட்டாங்க. நா, ‘நல்ல அம்மா’ன்னு சொல்லி அப்பிடியே கட்டி புடிச்சிக்கிட்டன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. அப்ப, பின்னாலேர்ந்து ‘தாயீ..’ன்னு யாரோ கூப்புடறது கேட்டு திரும்பி பாத்தாக்கா, அப்பா!. என்னியால நம்பவே முடியில. கையில நாய் குட்டி ஒன்ன வெச்சிக்கிட்டு, ‘ஒனக்குதான் தாயி’ன்னு நீட்டுறாரு. பஞ்சுமாரி இருந்த அந்தக் குட்டிய தூக்குனப்ப கையெல்லாம் கூசிச்சி. அது, எம் மூஞ்செல்லாம் நக்குனப்ப ஓரே சந்தோஷமா இருந்துச்சி!. ஒடனே எனக்கு தாத்தா ஞாவகம்தான் வந்துச்சி.’
‘பக்கத்துல ஒரே சத்தமா இருக்குதே என்னான்னு பாத்தாக்கா, அக்கம் பக்கத்து புள்ளிங்கள்ளாம் ஓடி புடிச்சி வெளாடிட்டு இருக்குதுங்க!. என்னியும் வரச் சொல்லி கூப்புடுதுங்க. சரீன்னு நானும் சேந்துக்கிட்டன். அப்பா, என்னா ஆட்டம்?. என்னா சிரிப்பு?. இப்படியெல்லாம் நா வெளாண்டதே இல்ல. அப்ப, திடீர்ன்னு அந்தப் புள்ளிங்க எல்லாம் என்னடான்னா கலரு கலரு பாப்பாத்திங்களா மாறிப் பறக்க ஆரம்பிச்சிருச்சீங்க. எனக்கு ஒரே அதிசயமா போச்சி. நானும்கூட பாப்பாத்திங்கள தொறத்திக்கிட்டு பறக்கறனாக்கும். நா நானாவே இருந்தாலும்கூட என்னாலியும் பறக்க முடிஞ்சிச்சி. ஒரே கொண்டாட்டந்தான். திடீர்ன்னு மழ!. எனக்கு உன்னும் குஷியா போச்சி. அம்மா, அப்பா எங்க போனாங்களோ?. ஆச தீர மழீல நனைஞ்ஜிக்கிட்டே பறக்கறன். அப்பேனு பாத்து, ‘அம்மணி’ன்னு யாரோ கூட்புடுற சத்தம்!. திரும்பிப் பாத்தாக்கா அது யாருன்னே தெரியில!. தல முடி பவுனு கலர்ல சும்மா பளபளன்னு மின்னுது!. பாக்கவே கண்ணல்லாம் கூசுது!. ம்.. யாரா இருக்கும்?. நல்லா உத்து பாத்தன். அது, ‘நாந்தான் பூச்சாண்டி!. அடையாளம் தெரியிலியா அம்மணீ?’ன்னு கேட்டுச்சி. என்னால நம்பவே முடியில. அட, மூஞ்சி என்னோட பேபி பொம்ம மாரியே இல்ல இருக்குது!.’
‘வந்து ரொம்ப நேரமாச்சி அம்மணி!. உன்னும் கொஞ்சம் நேரத்துல விடிஞ்சிரும். வா, வூட்டுக்கு போலாம்ன்னு கூப்புட்டிச்சி. ‘பூச்சாண்டி, எனக்கு வூட்டுக்கு போவ புடிக்கவே இல்ல தெரியுமா’ன்னு சொல்லி, அத கட்டி புடிச்சிக்கிட்டன்.’
* * *
பூச்சாண்டி,
நேரா பாக்கறப்ப நீ எவ்ளோ அழகா இருக்க!. அந்த பவுனு கலரு முடி உனக்கு எப்பிடி வந்துச்சி. அந்த மாரி எனக்கும் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?. எனக்கு இப்ப இங்க இருக்கவே கொஞ்சம்கூட புடிக்கில தெரியுமா?. இன்னோருக்கா என்ன எப்ப அங்க கூட்டிட்டு போவ?.
ஆங், மறந்தே போயிட்டன.
பூச்சாண்டி, ஓங்கிட்ட ஒரு ரகசியம் சொல்லனுமே!.
நா.. நா.. இப்ப வயசுக்கு வந்துட்டனாம்!.
‘ஆய்!. நீ கண்ண சிமிட்னியா?’
ஓ ஒனக்கு முந்தியே தெரியுமா?. ஒரு வாரமா என்னிய தாத்தா வூட்டுக்குகூட போவ வுடாம வூட்லியே உக்கற வெச்சிட்டாங்க!
‘பொதங்கிழம வயசுக்கு வந்துருக்கியா?. பரவால்ல நல்ல நாளுதான்..’ன்னு அம்மா சொன்னாங்க. ஆனா, அன்னிலேர்ந்து அவுங்க குடுத்த சாப்பாடுதான் வயித்த கொமட்டுது. சொன்னா நம்ப மாட்ட பூச்சாண்டி!. பச்ச முட்டய ஒடச்சி, அதுல நல்லெண்ணிய ஊத்தி, அப்படியே குடிக்க சொல்றாங்க. அதுல வேற பதினஞ்சி நாளிக்கி குடிக்கனுமா?. உவ்வேக்!.. மூக்க மூடிக்கிட்டேதான் குடிச்சிக்கிட்டு வரன்!..’
‘இனிமேக்கி உச்சி நேரத்துல வேப்பமரத்துக்கிட்டெல்லாம் போவக்கூடாதாம். ரத்த கவுச்சிக்கு காத்து சேட்ட வந்து அடிச்சிருமாம்!. ஏதுக்கும் நல்லதுன்னு துரு புடிச்ச ஆணி ஒன்ன ஏந்தல முடில சொறிவி உட்டுருக்காங்க. தோ பாரன், இதான் அந்த ஆணி!. காத்து சேட்ட அடிச்சிருச்சின்னா அவ்ளோதானாம்!.. இருந்தாப்புல இருந்து கூரைய பாத்து, ‘அங்க யாரோ இருந்துகிட்டு என்னிய கூப்புடறாங்க’ன்னு பிணாத்த ஆரம்பிச்சிருவனாம்!..தலைய விரிச்சி போட்டு, வரட்டு வரட்டுன்னு சொறிஞ்சிக்குவனாம்!. கெட்ட ரத்தம் போறது நிக்காதாம். ஒடம்பு பாட்டுக்கு நரங்கிக்கிட்டே போவுமாம்!.. பூசாரி வந்து என்னிய சாட்டையாலியே அடிச்சுதான் காத்து சேட்டய வெரட்டி அடிப்பாராம்.’
அம்மா சொல்றதெல்லாம் உண்மியா பூச்சாண்டி?. பாட்டிகூட முந்தி அப்படித்தான் சொல்லியிருக்காங்க. நெனச்சி பாக்கவே ஒடம்பெல்லாம் நடுங்குது!. அய்யோ, எனக்கு ஒரே பயமா இருக்கே!..
பூச்சாண்டி, யாராலியும் எனக்கு எந்த ஆபத்தும் வராம நீதான் என்னிய காப்பாத்துனும்!. செய்வியா?.
‘ம்.. நீ, கண்ண சிமிட்னத பாத்தன்தான்!. இருந்தாலும் எனக்கு மனசு கேக்கல. ஏம்மேல சத்தியமா?’
* * *
இன்னிக்கி நாயிட்டு கெழம!.
நா, எழுந்திரிக்கவே புடிக்காம வாங்குலியே படுத்துக் கெடக்கறன். அம்மா அப்பா இன்னிக்கி பூரா வீட்லதான் இருப்பாங்க. நா தாத்தாவ பாக்க போவ முடியாது. ஆனா, பாக்கப் போவனுன்னு ஆசயா இருக்குது!. அவுருகூட நேத்திக்கி, ‘நாளிக்கும் வருவதானே’ன்னு கேட்டு, சத்தியம் வாங்குறமாரி சோத்து கைய நீட்டுனாரே?. ம்.. எப்பிடி அவர பாக்கப் போறது?.
அப்ப, திடீர்ன்னு ‘ஐயோ..’ன்னு அம்மா கத்துற சத்தம் கேக்கவும் எனக்கு ‘பக்’குனு ஆயிறிச்சி. காலீலியே அம்மா அப்பாகுள்ளார சண்ட வந்துரிச்சாங் காட்டியும்ன்னு நெனச்சிக்கிட்டன். குசினிக்கி போவவே பயமா இருந்துச்சி. என்ன செய்யிறதுன்னே தெரியில!.
பூச்சாண்டி முன்னால போய் நின்னுகிட்டு, ‘அப்பா அம்மாவ போட்டு அடிக்கிறாரு போல!. எனக்கு ரொம்ப பயமா இருக்கே. இப்ப நா என்னா செய்யட்டும்?.’ன்னு பிணாத்த ஆரம்பிச்சிட்டன். அப்ப, ‘ஐயோ அப்பா..’ன்னு இன்னோரு கொரலு கேட்டுச்சி! யாருதுன்னே தெரியில. ஒன்னும் புரியாம, ‘அம்மா.. அம்மா..’ன்னு சிணுங்கிட்டே அஞ்ஜடிக்கு வந்தன்.
வெளிய பாத்தாக்கா, வேப்பமரத்தடீல ஒரே கூட்டம்!. ஆளுங்க என்னத்தையோ பாக்கறதுக்கு முண்டியடிச்சிக்கிட்டு இருந்தாங்க. எனக்கு காலும் ஓடல கையும் ஓடல.. வூட்ல அம்மா அப்பாவ வேற காணோம். சுத்தி முத்தி தேடுனா, அம்மா கூட்டத்துக்குள்ளார இருக்குறது தெரிஞ்ஜிச்சி.
ஒடனே முண்டியடிச்சிக்கிட்டு கூட்டத்துக்குள்ளார போயி, ‘அம்மா, அம்மா’ன்னு அழுதுகிட்டே அவுங்க கைய புடிச்சன். அம்மா, ‘ஏய் மக்கு, இங்க ஏன்டீ வந்த?. வூட்டுக்கு போ.. அம்மா தோ வந்திர்றன்.‘ ன்னு வெரட்டி அடிச்சாங்க.
மரத்தடீல பெரிய வேப்ப மர கெள ஒன்னு, தாத்தா உக்காந்து பேப்பர் படிக்கிற நாக்காலி மேல உழுந்து கெடந்துச்சி!. நாக்காலி சப்பையா நொறுங்கி போயிருந்துச்சி!. பக்கத்துலியே பொணம் ஒன்னுமேல பேப்பர் போட்டு மூடி இருந்தாங்க!. சோத்து கையி மட்டும் பேப்பருக்கு வெளிய மல்லாக்கா நீட்டிக்கிட்டு தெரிஞ்சிச்சி.
எனக்கு கை காலெல்லாம் ஒதற ஆரம்பிச்சிரிச்சி.
நா, அழுதுக்கிட்டே ஒன்னுமே புரியாம அண்ணாந்து வேப்ப மரத்து உச்சிய பாத்தன்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

வித்தியாசமான கதைக்கரு. மலையக மண்ணின் நாட்டார் வழக்கு மொழி கதை முழுவதும் விரவி, வாசிப்பு சுகானுபவத்தைத் தருகிறது. பூச்சாண்டியை இத்துணை நல்ல பிரகிருதியாய்க் காட்டியிருப்பது அருமை. மன வளர்ச்சி குன்றியிருக்கும் குழந்தைக்குள் உருவாகும் எதார்த்த ஏக்கங்களைச் சரியாய்ப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஸ்ரீ காந்தன்.