தெரிந்த நிழல்களும் தெரியாத நிஜங்களும்

அமித் வர்மா என்ற ஒருவர், தி சீன் அண்ட் தி அன்சீன் என்ற பாட்காஸ்டை உருவாக்கி, வெகுநீள எபிசோட்களை வெகு சிரத்தையாக வெகுநாட்களாக வழங்கி வருகிறார். அந்த பாட்காஸ்டின் ஒவ்வொரு அத்தியாயமும் ஐந்தாறு மணி நேரங்கள் ஓடும். அதன் ஒரு எபிசோட் வழியாகத்தான் கார்த்திக் முரளிதரன் பற்றித் தெரிய வந்தது. எனக்கு தெரிந்து கார்த்திக் அந்த பாட்காஸ்டின் நேர்காணல்களில் மூன்று முறை கலந்து கொண்டிருக்கிறார். இந்தியாவில் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றி விவாதித்த முதல் இரண்டு அத்தியாயங்கள், அந்தத் துறைகளை மட்டும் விரிவாக (சிறப்பாகவும்) அலசின. ஐந்து மணி நேரம் நீளமுள்ள மூன்றாவது அத்தியாயம், இந்திய அரசமைப்பு, அதன் தவறுகள், குறைபாடுகள் மற்றும் அதை கணிசமாக மேம்படுத்தக்கூடிய வழிகள் பற்றி விவாதித்தது. அந்த அத்தியாயம் 2022இல் வெளிவந்தபோது ​​கே.எம். அதையே ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தார். அவர் பேச்சில் இருந்த துல்லியம், சிந்தனை மற்றும் செயல் பாடுகளில் இருந்த தெளிவு எல்லாம் என்னைக் கவர்ததால், புத்தகம் வெளிவந்த உடன் வாங்கி படித்தேன்.


முரளிதரன் அமெரிக்காவில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்று, UCSD-யில் பேராசிரியராக பணி புரிபவர். அதோடு இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி ஏராளமான களப்பணிகளையும் செய்துள்ளார்.  Accelerating India’s Development – A State Led Roadmap for Effective Governance என்ற தலைப்பிலான இந்த புத்தகம், கடந்த இரண்டு தசாப்தங்களாக அவர் கற்றுக்கொண்ட மற்றும் சேகரித்த விஷயங்கள் அனைத்தையும் வடித்துக் கொட்டுவதால், படிக்கும்போது இந்தியா பற்றிய ஒரு பரந்த, விரிவான, சுவையான வசீகரிக்கும் ஒரு பார்வையைத் தருகிறது. புத்தகம் 800 பக்கங்களைக் கொண்டிருந்தாலும், கடைசி 200 பக்கங்கள் குறிப்புகள் மற்றும் சான்றாதாரங்களை தொகுப்பதால், நாம் புத்தகமாக படிக்க எளிதான உரைநடையில் எழுதப்பட்டிருக்கும் 600 பக்கங்கள் மிஞ்சுகின்றன,

ஆரம்ப அத்தியாயங்கள் தற்போதைய இந்திய சமுதாயத்தின் நிலை மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை கோடிட்டுக் காட்டுகின்றன. 77 ஆண்டுகளுக்கு முன்பு நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது, ​​மக்கள், கலாச்சாரம், மொழிகள், மதம், வறுமை மற்றும் புவியியல் ஆகியவற்றில் இருந்த அதன் பன்முகத்தன்மை காரணமாக, இந்தியா ஒரே நாடாக வெகு நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாமல், டஜன் கணக்கான வெவ்வேறு துண்டுகளாக சிதறிவிடும் என்று பலர் சத்தியமடித்துக் கொண்டிருந்தார்கள்.  அப்படியெல்லாம் எதுவும் ஆகாமல், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா நீடித்து, செழித்து வளர்ந்திருப்பதே ஒரு சாதனைதான். எனினும், இன்னும் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் இமய மலை உயரத்திற்கு வளர்ந்து நிற்பதும் நிதர்சனம்தான். பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதில் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகள், அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் மீது பொது மக்களிடையே நிலவும் நம்பிக்கையின்மை, ஊழல், வறுமை, குடிமக்களிடையே வெகுவாக நிலவும் பொதுவான நாட்டை/சமூகத்தைப் பற்றிய அக்கறையின்மை (apathy) அல்லது ஏமாற்றம் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பது இன்று வரை மிகவும் கடினமான சவாலாத்தான் இருந்து வருகிறது.

அந்த பின்னணியை அலசி, இப்போதைய நிலைமையை ஒப்புக்கொண்ட பிறகு, நிறைய உண்மைகள், தரவுகள் மற்றும் வரைபடங்களுடன், ஆசிரியர் இந்தியா பற்றிய பல கட்டுக்கதைகளை உடைத்து, தற்போதைய பிரச்சினைகள் மற்றும் நிலைகளை வெவ்வேறு கோணங்களில் இருந்து நமக்கு காண்பித்து புதிய கண்ணோட்டங்களை முன்வைக்கிறார். சில எடுத்துக்காட்டுகள்:

மேற்கத்திய அறிஞர்கள் அல்லது இந்தியாவில் உள்ள மக்கள் கூட நாட்டில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று புகார் செய்யும்போது, வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவின் தற்போதைய நிலைமைகளை ஒப்பிட்டுச்‌ சாடுகிறார்கள். ஆனால் கொஞ்சம் ரூம் போட்டு யோசித்தால், அமெரிக்கா போன்ற நாடுகள் ஆரம்பத்தில் மிகச் சிறிய சிறுபான்மையினர் (அதாவது நில உடமைகளை  வைத்திருந்த ஆண் வெள்ளையர்கள்) மட்டுமே வாக்களிக்கும் வழக்கைக் கொண்டிருந்த ஜனநாயக நாடுகளாக உருவாகின என்பது தெரிய வரும். அரசாங்கத்திடம் இருந்து அந்த வாக்காளர்கள் எதிர்பார்த்த பெரிய சேவை அவர்களின் நில உரிமைகளை கராராக நிலைநாட்டும் உத்தரவாதங்கள் மட்டும்தான். இருநூறு வருடங்களுக்கு முன்பிருந்த அந்த வாக்காளர்களுக்கு சாலை போடுவது, கல்வி, சுகாதாரம் போன்ற வேறெந்த சமூக தேவைகளிலும் அக்கறை இருக்கவில்லை. அந்தக்கால அரசாங்கங்கள் தங்களிடம் இருந்த குறைந்த வரிப்பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் நில உரிமைகளை தெள்ளத்தெளிவாக நிலைநாட்டுவதிலேயே செலவழித்தன.

இப்படியே சில தசாப்தங்களை கடத்தியதில் அந்த வாக்காளர்களுக்கு அப்போதைய அரசாங்கத்தின் பயன் புரிந்து, பிடித்து, அதன்மேல் நம்பிக்கை வர ஆரம்பித்தது. அந்த ஆரம்ப நம்பிக்கை கட்டமைக்கப்பட்டதன் மூலம், அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைய முடிந்தது. வரிகளை அதிகரிப்பதும் சாத்தியமானது. அரசாங்கம் கொஞ்சம் வளம் பெற்று வலுவடைந்தவுடன் சாலைகள் அமைக்க முடிந்தது. பின்னால் அதிகமான குடிமக்களுக்கு மெதுவாக ஓட்டளிக்கும் உரிமை வழங்கவும் (எ.கா. பெண்கள், கறுப்பினத்தவர்கள்) முடிந்தது. அதே காலகட்டத்தில் வரி வருவாயை அதிகரிப்பதன் மூலம், கல்வி, சுகாதாரம் போன்ற கூடுதல் சேவைகளை அரசாங்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வழங்க முடிந்தது. 

ஆரம்பத்தில் சிறியதாகத் தொடங்கி, சிறிய அளவிலான சேவைகளை வழங்குதல், நம்பிக்கையைப் பெறுதல் மற்றும் வரி அடிப்படை, திறன் மற்றும் சேவைகளை மெதுவாக விரிவுபடுத்துதல் போன்ற இந்தப் படிப்படியான ஏணி, வளர்ந்த நாடுகளின் வரலாற்றில் பல இடங்களில் தென்படும். இந்த மிக மெதுவான வளர்ச்சி குடிமக்களுக்கு அரசாங்க அமைப்புகள் மீது நம்பிக்கை ஏற்படச் செய்தது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, 1947 இல் நாடு சுதந்திரம் பெற்றபோது அரசியல் சாசனம் எழுதப்பட்டதால், ஆரம்பத்திலிருந்தே நாட்டில் உள்ள அனைவருக்கும் ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் உணவு, வேலைகள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு போன்ற பல விஷயங்களை வழங்க தேவையான அளவு வருமானம் அல்லது பிற தேவையான திறன்கள் அரசாங்கத்திற்கு சுதந்திரம் கிடைத்த உடனேயே கைவசப் படவில்லை. குடிமக்களோ சுதந்திரம் கிடைத்த மறுநாளில் இருந்து இந்த எல்லா சேவைகளையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்தார்கள்!  எல்லாவற்றையும் உடனே தர முடியாத அரசாங்கத்திடம் இது அவநம்பிக்கை வளர வழிவகுத்தது. இதன் விளைவாக மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை கட்ட தயங்கினர், ஏமாற்றினர். கல்வி, சுகாதாரத் தேவைகளுக்காக தனியார் சேவைகளை நாடினர். இந்த சூழ்நிலை எதிர்பார்க்கப்படும் அனைத்து சேவைகளையும் வழங்குவதற்கான திறன் மற்றும் நம்பிக்கையை அரசு பெறுவதைத் தடுத்தது.  இந்த கண்ணோட்டத்தில் இந்தியாவின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது, ​​நமக்கு ஒரு புதிய புரிதல் புலப்படலாம்.

– இந்திய குடிமக்கள் அரசாங்க நிதியில் பெரும்பான்மை ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் மோசடிகள் வாயிலாக கபளீகரம் செய்யப்பட்டு விடுவதாக நினைக்கிறார்கள். மோசடிகள் நடப்பதென்னவோ நிஜம்தான் என்றாலும், இலக்குகளை சென்றடையாத நிதி மொத்தத்தில், 13% மட்டுமே ஊழலால் விழுங்கப்படுவதாகவும், மீதமுள்ள 87% இழப்பு மோசமான மற்றும் பயனற்ற/திறனற்ற செயல்படுத்தலால் ஏற்படுவதாகவும் ஆசிரியர் வாதிடுகிறார். அரசாங்க அமைப்புகளில் உள்ள திறமையின்மையை சிறிதளவு குறைத்தாலும் விநியோகங்களில் 10 மடங்கு முன்னேற்றம் ஏற்படலாம்!  விநியோகங்களும் சேவைகளும் மேம்படும்போது, ​​ஊழல் தானாகவே குறையத் தொடங்கலாம்.  இதனால், அமைப்பை சரிசெய்து ஒரு பாசிட்டிவ் பீட்பேக் லூப்பை (Positive Feedback Loop) உருவாக்கும் சாத்தியம் நிறைய உள்ளது.

– இருக்கும் வேலைக்கு தேவை இல்லாத அளவு மிக அதிகமான எண்ணிக்கைகளில் இந்தியாவில் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பது மக்களிடையே நிலவும் இன்னொரு பொதுக்கருத்து. ஆனால் உண்மையில், இந்தியாவில் வாழும் ஒவ்வொரு 1000 குடிமக்களுக்கும் 16 பொது ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால், சீனா, அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் நார்வேயில் இந்த எண்ணிக்கை முறையே 57, 77, 138 மற்றும் 159 என இருக்கிறது! விகிதாசாரப்படி பார்த்தால், இந்தியாவின் பொது ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான் என்பதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது!  ஆனால் தூரதிஷ்டவசமாக, நம்மிடம் இருக்கும் இந்த குறைந்த எண்ணிக்கையிலான அரசு ஊழியர்களின் திறனும் கூட, (உ-ம்: காவல்துறை) சாதாரண குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக, பணக்காரர்களுக்கும் அதிகாரம் மிக்கவர்களுக்கும் (உ-ம்: வி.ஐ.பி. எஸ்கார்ட்) சேவைகளை வழங்கப் பயன்படுத்தப்படுவது பொதுமக்களிடம் அரசாங்கத்தின் மேல் உள்ள நம்பிக்கையை அழித்தொழிக்கிறது. 

இப்படி சில அத்தியாயங்களில் உண்மைகளை புள்ளி விவரங்களுடன் சுவாரஸ்யமாக இணைத்துப் காட்டிய பிறகு, புத்தகம், துறை வாரியாக நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான யோசனைகளில் இறங்குகிறது. பரிந்துரைகள் வெறும் கனவுகளோ அல்லது நாற்காலி பகுப்பாய்வோ அல்ல. கார்த்திக் சுமார் இருபது ஆண்டுகளாக பலவிதமான களங்களில் இந்த யோசனைகளை சோதித்திருக்கிறார் என்பதால், நடைமுறையில் எந்த யோசனைகளை அமல்படுத்த முடியும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார். அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது அரசில்வாதிகளின் முதல் குறிக்கோள் என்பதால், அந்த நோக்கில் இருந்து கண்களை எடுக்காமல் செயல்படுத்தக்கூடிய மாற்றங்களில் அவர் கவனம் செலுத்துகிறார். எனவே, பல பரிந்துரைகள் குறைந்தபட்ச முயற்சி மற்றும் செலவில், பதவியில் இருப்பவர்கள் எளிதாக எடுத்து நடத்தி முடிக்கக்கூடியவை.  பல பரிந்துரைகள் விவரிக்கத் தகுந்தவை என்றாலும், கட்டுரை நீளத்தை கருத்தில் கொண்டு, சிலவற்றை மட்டும் பின்வருமாறு சுருங்கச் சொல்லி விளங்க வைக்கலாம்:

– இந்தியாவைப் பொறுத்தவரை எந்த ஒரு சேவையையும் மேம்படுத்த வேண்டுமென்றால் உடனே அதற்கு இன்னும் அதிகமான அளவு நிதி ஒதுக்குவதில்தான் நமது கவனம் உள்ளது. ஆனால் அந்தத் திட்டம் மற்றும் ஒதுக்கப்பட நிதியின் விளைவுகளை (output) அளவிடுவதில் நாம் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. உதாரணமாக, மாணவர்களின் கணினிசார்ந்த அறிவைப் பெருக்க ஒரு பள்ளிக்கு 10 கணினிகள் சாங்க்ஷன் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரு கணினி காணாமல் போனால், தணிக்கையின் போது பள்ளி முதல்வர் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வார். எனவே அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அவர் பத்துக் கணினிகளையும் அலமாரியில் பூட்டியே வைத்திருப்பார். இது மாணவர்கள் அதிலிருந்து ஒரு பைசா கூட பயன் பெறாத சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.  கம்ப்யூட்டர் திருடு போவது நிச்சயம் ஒரு பிரச்சினைதான். ஆனால் தணிக்கை செய்ய வருபவர் பத்து கம்ப்யூட்டர்களும் இருக்கிறதா என்றுதான் பார்க்கிறாரே ஒழிய, மாணவர்கள் என்ன கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை என்பதால், தலைமை ஆசிரியரின் கவனம் பொருட்களை பாதுகாப்பதில் இருக்குமளவுக்கு கணினியியலை கற்றுத்தருவதில் இருப்பதில்லை. நமது நிர்வாகக் கொள்கைகள் இப்படியாக, என்ன வெளியே வருகிறது (Return on Investment) என்பதைக் கண்டுகொள்ளாமல், என்ன உள்ளே போகிறது என்பதையே கவனித்துக் கொண்டிருப்பதால், ஒவ்வொரு அமைச்சகம்/செயலகம்/என்ஜிஓ எல்லாம் தங்கள் செல்லத் திட்டங்களுக்காக மேன்மேலும் அதிக நிதியைக் கேட்பதிலேயே கவனம் செலுத்துகின்றன. அதற்கு பதிலாக, களத்தில் பணிபுரியும் உள்ளூர் அரசாங்கம் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடுகளைக் குறைத்து, நிறைய சுதந்திரங்களை வழங்குவதன் மூலம் செயல்திறனை மேம்படுத்துவது இந்த பிரச்சினைகளில் பலவற்றைத் தீர்க்கக்கூடும். இதற்கு உதாரணமாக ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமல், கல்வி விநியோகத்தின் தரத்தை மேம்படுத்திய இரண்டு நாடுகளாக சீனா மற்றும் வியட்நாமை புத்தகம் மேற்கோள் காட்டுகிறது.  குறிப்பாக, மிகவும் வலுவான மத்திய கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் தேசமாகக் கருதப்படும் சீனாவில், உண்மையில் எந்த அளவுக்கு உள்ளூர் அரசாங்க மட்டத்தில் முடிவெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது என்பதை பல அத்தியாயங்களில் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது. 

– ஒரு கள விசாரணையில், ஆசிரியர் ஒரு இந்திய மாநில அரசாங்கத்துடன் இணைந்து குறைந்தபட்ச செலவில் ஒரு கால் சென்டரை அமைத்திருக்கிறார். பின்னர் அந்த அழைப்பு மையத்தை உபயோகித்து அரசாங்க மானியத்தைப் பெறுபவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட பணம் கிடைத்ததா என்று சரி பார்த்திருக்கிறார்கள். இதைச் செய்யும்போது, ​​இடைத்தரகர்களாக இருக்கும் அதிகாரிகளிடம் இந்த சரிபார்ப்பு செயல்முறையை பரவலாக திரும்பத்திரும்ப விளம்பரப் படுத்தியிருக்கிறார்கள். மானியம் பெறுபவர்களில் வெகு சிலரிடம் மட்டுமே இந்த மையம் பேசியது என்பதால், இதற்கான செலவு மிகவும் சொற்பம்தான். ஆனால் சரிபார்ப்பு நேரடியாக நடக்கிறது என்ற புரிதலும், பயமும், பெரும்பாலான மோசடிகளை நீக்கி, மானியம் சரியான முறையில் பெறுநர்களைச் சென்றடைய வழி செய்திருக்கிறது.  இதுபோன்ற சிறிய ஆனால் மிகவும் பெரிதாக அறிந்துகொள்ளப்படும் சரிபார்ப்பு முறைகளைச் செயல்படுத்துவது வழங்கப்படும் சேவையின் தரத்தில் வியத்தகு முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

– திறமையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வது எளிதல்ல என்பது தெரிந்ததே. அதை எளிதாக்குவதற்காக தொழிற்சங்களுடன் போர் தொடுப்பதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கு உதவியாளர்களாக 3 முதல் 5 ஆண்டுகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில், புதிய பயிற்சியாளர்களை பணியமர்த்துமாறு ஆசிரியர் பரிந்துரைக்கிறார்.  இருந்த பணியைச் செய்ய கூடுதல் உதவி கிடைப்பதால் அரசு ஊழியர்கள் இதை எதிர்க்க மாட்டார்கள்.  புதிய பயிற்சியாளர்களில் ஒரு சிறிய சதவிகிதத்தினர் பின்னர் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உந்துவிக்கும் பரிசை அவர்களுக்கு முன்னே வைத்தால், அவர்களும் சிறப்பாக வேலை செய்வார்கள். இந்தத் திட்டத்தில் பங்கேற்று ஆனால் முடிவில் நிரந்தரம் செய்யப்படாத பலர் இன்னொரு தற்காலிக பதவிக்காலத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பின்னாட்களிலும் அரசாங்க வேலை கிடைக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் இந்தத்திட்டத்தின் மூலம், வேறு தனியார் அலுவலகங்களில் பயன்படக்கூடிய உபயோகமான பணித்திறன்களை அவர்கள் பெற்றிருப்பார்கள். ஆண்டுகள் செல்லச்செல்ல, திறமையற்ற மூத்த ஊழியர்கள் ஓய்வு பெற்று விலகும்போது சேவைகளின் தரம் கணிசமாக மேம்படும். 

இதே போல் சுகாதாரப் பராமரிப்பு, நீதிமன்ற அமைப்பு, விவசாயம், காவல் துறை போன்ற பல துறைகளுக்கும் பல கள-சோதனை செய்யப்பட்ட யோசனைகளைப் புத்தகம் பரிந்துரைக்கிறது. முடிந்த இடங்களில் எல்லாம் திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீட்டின் விளைவுகளை (Output) அளந்து ஆய்வது, தற்காலிக பணியாளர்களை வேலைக்கு சேர்த்து பயிற்சி அளிப்பது, பின்னால் அந்த பயிற்சியை உபயோகித்து அவர்கள் தனியார் துறைகளிலும் வேலைபெற உதவுவது போன்ற பரிந்துரைகள் முன்னேற்றப்பட வேண்டிய பல துறைகளுக்கு பொருந்தும்.  இவை அனைத்தும் மாநில முதலமைச்சர் அளவில் ஆராயப் படவேண்டியவை.  இந்த யோசனைகளில் பலவற்றை சுமார் நான்கு ஆண்டுகளுக்குள் முடிவுகள் தெரியும்படி நிச்சயம் செயல்படுத்த முடியும் என்று ஆசிரியர் சூடமேற்றி சத்தியம் செய்கிறார்.  இந்தியத் தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவதால், அரசியல்வாதிகள் மக்களால் உணரப்படும் முன்னேற்றங்களுக்காக பெறும் வாழ்த்துக்களை (credit) அடுத்த தேர்தல் பிரசாரங்களின் போது எடுத்துரைத்து ஓட்டுக்களாக திரும்பப்பெற முடியும். இந்த நம்பிக்கை வளர்ந்தால், இந்த யோசனைகளில் மாநில முதல்வர்களும் மந்திரிமார்களும் உற்சாகத்தோடு ஈடுபடுவார்கள். 

இந்திய மாநிலங்களின் தேவைகள் பரவலாக வேறுபடுவதால், மத்திய அரசு மட்டத்தைவிட மாநில அளவில் என்ன செய்ய முடியும் என்பதில் புத்தகம் (தலைப்பிலேயே குறிப்பிட்டிருப்பதைப்போல்) அதிக கவனம் செலுத்துகிறது. மத்திய அரசோடு ஒப்பிடும்போது, அமல்படுத்த கடினமாகத் தோன்றும் பல பரிசோதனைகளை, மாநில அளவில் சிறிய விரைவான முயற்சிகளாக செய்து பார்ப்பது எளிதாக இருக்கும் என்பதை இந்த அணுகுமுறை திரும்பத் திரும்ப சுட்டிக் காட்டுகிறது. முயற்சிகள் வெற்றி பெற்றால், பிற மாநிலங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம்.  இல்லையென்றால், முயன்ற மாநிலங்கள் குறைகளை விலக்கி திட்டங்களை சற்றே மாற்றியமைத்து இன்னொரு முறை முயலலாம்.

கோவிட் தொற்றுநோய் எங்கும் விரவி இருந்தபோது குழந்தைகள் தங்கள் வீட்டிலேயே போதுமான பள்ளிப்படிப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக அமல் படுத்திய இல்லம் தேடிக் கல்வி என்ற ஒரு திட்டத்தை ஆசிரியர் பெரிய வெற்றி பெற்ற திட்டம் என்று வெகுவாக புகழ்ந்து மேற்கோள் காட்டுகிறார். இன்னும் பின் தங்கி இருக்கும் பீகார் போன்ற மாநிலங்களில் இத்தகைய முயற்சி இந்த அளவு வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே இது போன்ற திட்டங்களை மத்திய அரசு நாடு முழுவதற்கும் அமல் படுத்துவதை விட, மாநில அரசுகள் தங்கள் மாநில தேவைகள் மற்றும் திறன்களை புரிந்துகொண்டு மாநில அளவில் அமல் படுத்துவது புத்திசாலித்தனம். இந்தியாவின் 28 மாநிலங்களும் தங்கள் மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை மிகவும் சுறுசுறுப்பாக செய்து பார்க்கும் சிறிய ஆய்வகங்களாய் செயல்படுவது நாட்டை எங்கேயோ தூக்கிக்கொண்டு போய் வைக்கும்.

கடைசி அத்தியாயம் உட்பட பல பகுதிகளில், ஆசிரியர் இந்தியா செயல்படுத்தியுள்ள ஆதார் பயோமெட்ரிக் ஐடி முறையைப் பற்றிப் பேசுகிறார். இது இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டு, உலகில் முதன்முறையாக இவ்வளவு பெரிய அளவில் பயன்படுத்தப்படும் சிறந்த ஒரு அமைப்பும் திட்டமுமாக, சமூக மேம்பாட்டிற்கான முன்னோடியாக உள்ளது.  இத்தகைய முயற்சிகள் இந்தியா அந்த அளவில் உலகம் முன்பின் பார்த்திராத  புதுமைகளை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. 

UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) இந்தியாவின் இன்னொரு மாஸ்டர் ஸ்ட்ரோக். பல வளர்ந்த நாடுகளின் அமைப்புகளை விட பெரிய அளவில் இந்த திட்டத்தை உருவாக்கி, அமல் படுத்தி, மிக சுமுகமாக இயக்கிக்காட்டி உலகை வியக்க வைத்திருக்கிறது இந்தியா! நான் பென்சில்வேனியாவில் ஒரு சிறிய வங்கியின் இயக்குனர் குழுவில் (Board of Directors) தன்னார்வலனாக (Volunteer) பணியாற்றி ஆலோசனைகள் வழங்கி வருகிறேன். அந்த வங்கியின் மேலாளர்கள் எல்லோரையும் இந்தியாவின் UPI திட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறேன். தெரிந்து கொண்டவர்கள் என்னிடம் திரும்ப வந்து அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இல்லாத இத்தகைய ஒரு திட்டத்தை இந்தியா நிர்மாணித்து மிக நன்றாக நடத்தி வருவதைப் பற்றிய தங்கள் வியப்பை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆதார் மற்றும் UPI அமைப்புகள் இப்போது மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிக் கொண்டிருக்கின்றன.  இந்தியா எங்கோ ஒரு மூலையில் இருக்கும் குட்டி நாடு இல்லையென்பதால், அதன் அளவு மற்றும் மக்கட்தொகை காரணமாக, இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட ஒன்றிணைக்கப்பட்ட தீர்வுகள் உலகிற்கே உதவக்கூடும் என்பதை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

இப்படியாக சட்டென்று பார்க்கும் போது மலைப்பூடுவதாகத் தோன்றினாலும், இந்தியாவின் குறைகள், இடர்பாடுகள் எல்லாவற்றையும் தாண்டி அதன் வளர்ச்சியை சுமுகமாக விரைவுபடுத்துவதற்கு நிறைய செய்ய முடியும் என்று புத்தகம் தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது/வாதிடுகிறது. 

புத்தகத்தைப் பற்றி குறை சொல்ல அதிக விஷயங்கள் இல்லை. எழுத உபயோகப் படுத்தப்பட்டிருக்கும் ஆங்கில உரைநடை எளிமையானது. உள்ளடக்கப்பட்ட பகுதிகள் விரிவானவை. மத்திய, மாநில, உள்ளூர் அரசாங்கங்கள் முயற்சிக்க வேண்டிய யோசனைகள், அதிகாரிகள் மற்றும் தனிநபர் குடிமக்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய யோசனைகள், மற்றும் நிறுவனங்கள்/அரசு சாரா அமைப்புகள் பங்களிக்க வேண்டிய யோசனைகள் என்று எல்லா நோக்கிலிருந்தும் ஆசிரியர் பிரச்சினைகளை அலசி முடிந்த அளவு யோசனைகளை வாரி வழங்கி இருக்கிறார். புத்தகத்தின் நீளம் (800 பக்கங்கள்) குறித்து ஒரு புகார் கூறலாம். சில இடங்களில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது சலிப்பேற்படுத்துகிறது என்று குறை பட்டுக்கொள்ளலாம் என்றாலும், ஆசிரியரின் உயரிய நோக்கம் அதை எல்லாம் நியாயப்படுத்துகிறது. பல யோசனைகள் களப்பணி மூலம் நடைமுறையில் அமல் படுத்தும்படியானவைதான் என்று நிரூபிக்கப் பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய சிறப்பம்சம்.

குறிப்பாக இந்தியாவை உருப்பட வைப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, என்னைப் போன்ற ஒரு கொள்கை ஆர்வலராக (Policy Geek) இருந்தால், உங்களுக்கு இது ஒரு சுவாரஸ்யமான வாசிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். வழங்கப்பட்ட பல யோசனைகள் இந்தியாவுக்கு மட்டுமில்லாமல் உலகின் பல வளரும் நாடுகளுக்கும் பொருந்தும் என்றும் நம்புகிறேன். புத்தகத்தைப் படிக்க உங்களுக்கு நேரமும் பொறுமையும் இல்லையென்றால், குறைந்தபட்சம் இந்த யோசனைகளில் பலவற்றை விவாதிக்கும் பாட்காஸ்ட் அத்தியாயங்களையாவது நிச்சயம் கேளுங்கள். உங்கள் உள்ளூர் எம்‌எல்‌ஏ, எம்‌பி போன்றவர்களுக்கு புத்தகத்தையும், வலைத்தளத்தையும் அறிமுகப் படுத்துங்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த காரணகர்த்தாக்களில் நீங்களும் ஒருவர் என்று எதிர்காலக் குடிமக்கள் உங்களை வாழ்த்தக் கூடும்!

  1. https://seenunseen.in/episodes/2024/4/1/episode-375-karthik-muralidharan-and-the-bureaucrats-burden/
  2. https://seenunseen.in/episodes/2022/8/15/episode-290-karthik-muralidharan-examines-the-indian-state/
  3. https://seenunseen.in/episodes/2020/8/9/episode-185-fixing-indian-education/
  4.  https://seenunseen.in/episodes/2021/5/16/episode-225-understanding-indian-healthcare/
  5. https://www.acceleratingindiasdevelopment.in/

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “தெரிந்த நிழல்களும் தெரியாத நிஜங்களும்”

Leave a Reply to சுந்தர் வேதாந்தம்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.