கொக்கென நினைத்தாயோ ?

ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன்

தமிழாக்கம் : கார்த்திக்

பாண்டவர்கள் வனத்தில் வசித்து வந்த காலத்தில் அவர்களை சந்திக்க ரிஷி மார்கண்டேயர் அங்கே வந்தார். அப்பொழுது அவரிடம் யுதிஷ்டிரன் பெண்களை பற்றி உயர்வாக பேசினான். அந்த சமயத்தில் அவர்களுக்கு மார்க்கண்டேயர் ஒரு கதையைக் கூறினார். முன்னொரு காலத்தில் கௌசிகன் என்றொரு ப்ராமண பிரம்மச்சாரி வசித்து வந்தார். கடுமையான விரதங்கள் மூலம் தனது பிரம்மச்சரியத்தை காத்து வந்தார். ஒருநாள் மரத்தடியில் அவர் த்யானத்தில் இருந்த பொழுது அங்கே பறந்த கொக்கு ஒன்று அவரது தலையில் எச்சமிட்டது. அதனால் கோபமடைந்த கௌசிகன் கோபத்துடன் எரித்து விடும் எண்ணத்துடன் அதை பார்த்தார். அடுத்த நொடி அந்த கொக்கு எரிந்து சாம்பலானது. தான் நினைத்தது உடனே பலித்ததை எண்ணி பெருமை அடைந்தார்.

அடுத்த நாள், தனது தினசரி வழக்கப்படி பிக்ஷை எடுக்க சென்றார். அவர் சென்ற வீட்டுப் பெண்மணி, தனது வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்ததனால் அவரைக் காத்திருக்க சொன்னாள். அவள் வேலையை முடிக்கும் தருணத்தில் அவளது கணவன் வந்து விட அவனை கவனிக்க சென்று விட்டாள். அவனுக்கு உணவளித்தப் பின், கௌசிகனுக்கு பிக்ஷை இட வந்தாள். வெகுநேரம் காத்திருந்ததால் கோபமடைந்த கௌசிகன் அவளை கோபமாய் பார்க்க அவளோ ” நீ கோபத்துடன் பார்த்தால் எரிந்து விட நான் என்ன கொக்கா? நான் எனது தர்மத்தை சரியாக கடைப்பிடிக்கும் பெண்” என்றுக் கூறினாள்.

தான் கொக்கை எரித்தது இவளுக்கு எவ்வாறு தெரிந்தது என கௌசிகனுக்கு ஆச்சர்யம். அதைக் கண்ட அந்த பெண் “பார்த்தால் கற்றறிந்தவர் போல் இருக்கிறீர்கள். ஆனால் , எது தர்மம் என அறியாமல் உள்ளீர்களே? உண்மையான தர்மத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் பக்கத்துக்கு நகரத்தில் வசிக்கும் தர்மவியாதரை சென்று சந்தியுங்கள்” எனக் கூறினாள்.

வியப்புடன் நகரத்திற்கு சென்ற கௌசிகனுக்கு அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது. தனிமையான குடிலில் தவம் செய்து கொண்டிருக்கும் ஒருவரை எதிர்ப்பார்த்து சென்றவருக்கு தர்மவியாதர் கசாப்பு தொழில் செய்பவர் என தெரிந்ததும் அவர் என்ன தர்மத்தை தமக்கு சொல்லி விட முடியும் என்ற யோசனை தோன்றியது.

கௌசிகனை கண்டதும் “தர்மம் அறிந்த பெண்மணி அனுப்பியவர்தானே தாங்கள்? சற்று காத்திருங்கள். என் வேலையை முடித்துவிட்டு வருகிறேன்” எனக் கூறி தனது வேலையை கவனிக்க துவங்கினார். மீண்டும் ஆச்சரியப்பட்ட கௌசிகன் அவருக்காக காத்திருந்தார். தன் வேலையை முடித்துக்கொண்டு கௌசிகனை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார் தர்மவியாதர். அங்கே சென்றும் எதுவும் கூறாமல் , அங்கே இருந்த அவரது வயதான பெற்றோருக்கு பணிவிடை செய்யத் துவங்கினார். அதுவரை தன்னைப் பற்றி மட்டும் எண்ணி வந்த கௌசிகனுக்கு உண்மையான தர்மம் என்னவென்று புரிந்தது. தனது வீட்டிற்கு திரும்பியவர் தனது பெற்றோரை கவனிக்கத் துவங்கினார்.


தங்கக் கூண்டில் இருந்து விடுதலை

வனவாசத்தின் பொழுது ஒருமுறை ரிஷி விபாண்டகர் வசித்த ஆசிரமத்தின் வழியாக சென்றனர் பாண்டவர்கள். அப்பொழுது அவர்களுக்கு விபாண்டகரின் மகனான ரிஷி ரிஷ்யஸ்ருங்கரை பாரிய கதையை லோமேஸர் அவர்களுக்கு கூறினார். விபாண்டகர், தன் மகனுடன் துறவிகளுக்கு உண்டான வாழ்வை வசித்து வந்தார். பொதுமக்களிடம் இருந்து மிகவும் தள்ளி தனியாக வசித்து வந்த காரணத்தினால் ரிஷ்யஸ்ருங்கர் மற்ற யாருடனும் பழகியதே இல்லை. தன் தந்தையிடம் இருந்து கற்று தேர்ந்த ஞானத்துடன், பிரம்மச்சரிய வாழ்வை கடைப்பிடித்ததால் உண்டான தூய்மை மற்றும் புனிதத்தினால் அவர் மிக அதிக சக்தி உடையவராக இருந்தார்.

அருகில் இருந்த அங்க தேசத்தில் ஒரு முறை கடுமையான வறட்சி ஏற்பட்டு அதனால் பஞ்சம் உண்டானது. அங்க தேச அரசனான ரோமபாதா, கற்றறிந்த ஞானிகளிடம் இதற்கு தீர்வை கேக்க, அவர்கள் ரிஷ்யஸ்ருங்கரை நாட்டுக்கு வரவழைக்க சொன்னார்கள். ரிஷ்யஸ்ருங்கர் எங்கு சென்றாலும் அங்கே மழை வரும். எனவே அவரை எப்பாடுபட்டாவது அழைத்து வர கூறினார்கள்.

அதன் பின், ரிஷ்யஸ்ருங்கரை அழைத்து வர ரோமபாதா திட்டம் தீட்டினான். நாட்டின் மிக சிறந்த அழகிகளை அழைத்து ரிஷ்யஸ்ருங்கரை தன் நாட்டுக்கு அழைத்துவர உத்தரவிட்டான். உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தால் அரசனின் கோபத்திற்கு உள்ளாக நேரிடலாம். அதே நேரத்தில், அதற்கு கட்டுப்பட்டு ரிஷியிடம் சென்றால் அவர் சபிக்க நேரிடலாம். எனவே பயந்து கொண்டே தகுந்த திட்டம் தீட்டினர் அந்த அழகிகள்.

ஒரு மிகப் பெரிய படகொன்றை தோட்டங்கள் நிறைந்த ஆசிரமம் போல அலங்கரித்து ரிஷ்யஸ்ருங்கரின் ஆசிரமம் அருகே கொண்டு சென்றனர். அந்த நேரத்தில் ரிஷி விபாண்டகர் எங்கோ வெளியே சென்றிருக்க, அதை உபயோகப்படுத்திக் கொண்ட அழகி தன்னை ஒரு இளம் பெண் துறவி போல் உருமாற்றிக் கொண்டு ரிஷ்யஸ்ருங்கரை காண சென்றாள். அது நாள் வரை , வேறு மனிதரையே பார்த்து அறியாத ரிஷ்யஸ்ருங்கர், அந்த இளம் துறவியை பார்த்தவுடன் மயங்கினார். அதை பயன்படுத்திக் கொண்டவள் ஆசை வார்த்தைகளாலும், மலர்களாலும் தன் தொடுகையாலும் அவரை தன் வசப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

சிறிது நேரம் கழித்து தன் ஆசிரமம் திரும்பிய விபாண்டகர் எப்பொழுதும் தெளிந்து இருக்கும் தன் மகனின் முகமானாது இப்பொழுது குழம்பி எதோ ஒன்றில் மயங்கி இருப்பது போல் இருப்பதைக் கண்டு, ரிஷ்யஸ்ருங்கரிடம் என்ன நடந்தது என விசாரித்தார்.

நடந்ததை உள்ளவாறு அவர் விவரிக்க, கோபம் கொண்ட விபாண்டகர் அந்த இளம் பெண் துறவியை தேடி காடு முழுவதும் சுற்றினார். ஆனாலும் அவள் அகப்படவில்லை. சிலநாள் கழித்து விபாண்டகர் ஆசிரமத்தில் இல்லாத சமயத்தில் மீண்டும் அந்த படகு அங்கே வந்தது. இம்முறை ரிஷ்யஸ்ருங்கர் படகில் அந்தப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த சமயத்திலேயே படகை அங்கிருந்து நகர்த்தி சென்றனர். அந்தப் படகு அங்க தேசத்தில் நுழைந்து, ரிஷ்யஸ்ருங்கர் கரையிலே காலடி வைத்தவுடன் நாடு முழுவதும் மழை பெய்து மண்ணை நனைத்தது. ரிஷ்யஸ்ருங்கருக்கு ராஜ உபச்சாரம் தந்து கௌரவித்த ரோமபாதா, தன் மகள் சாந்தாவையும் அவருக்கு மணம் செய்து வைத்தான்.

நடந்ததை அறிந்த விபாண்டகர் கோபத்துடன் அங்க தேசத்தை நோக்கி சென்றார். இதை முன்பே எதிர்பார்த்திருந்த அரசன், அவர் வரும் வழியில் அவருக்கு உபசாரங்கள் செய்வித்து மனம் குளிர்விக்க ஏற்பாடுகள் செய்திருந்தான். கோபத்துடன் தன் பயணத்தை துவங்கிய ரிஷி , அவனின் உபச்சாரங்களால் மனம் குளிர்ந்தார்.

தன் அரண்மனைக்கு வந்த ரிஷி விபாண்டகரை அவருக்கு உரிய மரியாதைகள் செய்வித்து நடந்ததை அவருக்கு விளக்கினான் ரோமபாதா. பின், மணமக்களை ஆசிர்வதித்த விபாண்டகர், ஆண் குழந்தை பிறக்கும் வரை அரணமனையில் இருந்துவிட்டு அதன் பின் ஆசிரமம் திரும்ப ரிஷ்யஸ்ருங்கருக்கு உத்தரவிட்டார்.

அவர்களுக்கு ஆண் மகவு பிறந்ததும் கானகம் சென்ற தம்பதியர், அதன் பின் துறவு வாழ்க்கை வாழ்ந்தனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை

மணலில் கட்டப்பட்ட பாலம் கொலையாளியை ஜீரணித்தவர்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.