- உதயத்தில் ஓர் அஸ்தமனம்
- பிரம்மாஸ்திரம்
- ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்
- விமான தளத்தை விற்ற சிறுவன்
- துக்கம்
- காளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]
- என் தலைக்கான கொன்றை
- என் குழந்தைகளின் புகைப்படங்கள்
- வேட்டை நாய்
- வரிசையில் ஒரு சிநேகம்
- குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்
- தீப்பெட்டி
- சௌவாலி
- டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது
- வைரஸ்
- ஒரு பெண் பற்றிய சொற்சித்திரம்
- ஐந்து பெண்கள்
- நெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்
- மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு
- காட்டு மல்லி
- குங்கும பரணி
- மர பொம்மைகள்
- வக்கீலின் கடிதம்
- தொலைந்து போன பொருள்
- உங்கள் கதை [ என்னுடையதும் ]
- கருப்பு எஜமானி
- ஹெட்மாஸ்டர்
- ஏழாவது மலர்
- விற்பனை
- இலக்கு – சேது
- பெருங்காய கச்சோடி
மலையாள மூலம் : சேது
ஆங்கிலத்தில் : ஏ.ஜே.தாமஸ்
தமிழாக்கம் : தி.இரா.மீனா
“நான் உங்களைக் கொச்சுண்ணி மாமா என்று கூப்பிடலாமா?”
“ஓ, கூப்பிடலாம். அப்படித்தான் நிறையப் பேர் கூப்பிடுகிறார்கள்”
“உங்களுக்கு என்னை அடையாளம் தெரியாமலிருக்கலாம்”
“தேவையில்லை. அதைத் தவிர இந்த நாட்களில் நான் யாரையும் அடையாளம் கண்டு கொள்ள முயல்வதில்லை. தேவையற்ற செய்திகளைச் சேகரித்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது”
“இருந்தாலும்..”
“என்ன இருந்தாலும்? நான் உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்றால் அதில் ஏதாவது தப்பு இருக்கிறதா?”
“கொச்சுண்ணி மாமா, அது அப்படியில்லை…”
“என்னைப் பொறுத்தவரை அது அப்படித்தானென்றால்?”
“அச்சுதன் குட்டி வேலை பார்க்குமிடத்திலிருந்து நான் வருகிறேன்”
“அப்படியா? நல்லது”
“அங்கே வெயிலின் கொடுமை அதிகம். இப்போது குழந்தைகளுக்கு விடுமுறை. விடுமுறை எடுத்துக் கொண்டு நான் வீட்டிற்கு வர விரும்பினேன். தவிர, கம்பெனி முதல் வகுப்புக் கட்டணம் தருகிறது”
“அப்படியா? நல்லது. இலவச டிக்கெட் கிடைக்கும் என்றால் யார்தான் வர மாட்டார்கள்?”
“நான் திரும்பிப் போவதற்கு முன்னால் உங்களைச் சந்தித்து விட்டு வர வேண்டுமென்று அச்சுதன் குட்டி குறிப்பிட்டுச் சொன்னான் ”
“குழப்பமாக இருக்கிறது. ஏன் அந்த புத்திசாலிக்கு இப்போது அப்படியொரு எண்ணம் வந்ததாம்?”
“எந்த விஷேஷமான காரணமுமில்லை. நீங்களிருவரும் ஒரே ரத்தத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் அல்லவா? நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பு அவனுக்கு இருக்காதா?”
“நல்லதுதான். நீ அச்சுதனின் ரத்தத்தைப் பார்த்திருப்பாய். என்னுடைய ரத்தத்தை நீ பார்க்க வேண்டுமென்றால், அதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. என் விரலை வெட்ட வேண்டும். ஆனால் நான் ஒரு சர்க்கரை நோயாளி என்பதால் அந்தக் காயம் ஆறுவது கடினம்…”
“ஐயோ! நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை…”

“நீ என்ன அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் ’ரத்தத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் ’ என்பது போலான வார்த்தைகளைச் சொல்லும் போது நீ மிகக் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாட்களில் எல்லாவற்றிற்கும் இயந்திரம் இருக்கிறது. ஒருவேளை சிறிய அளவு ரத்தம் இரண்டு பேரிடமும் எடுக்கப்பட்டு, இயந்திரம் மூலம் சோதிக்கப்படுகையில் இரண்டு பேரும் வெவ்வேறு குல மரபினர் என்று கண்டறியப்பட்டால் என்னாகும்? நம் முன்னோர்களால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த ரத்த உறவு நம்பிக்கை துண்டுகளாகச் சிதறிப் போய்விடும் ”
“எப்படியானாலும், அச்சுதன் உங்கள் மகன் அல்லவா?”
“யாரால் உறுதியாக அப்படிச் சொல்ல முடியும்? தேவகிக் குட்டியின் மீது எனக்கு லேசான சந்தேகம் இருக்கிறது என்று இதற்கு அர்த்தமில்லை. அவள் ஒரு சாந்தமான பிறவி ” என்று வானத்தைக் காட்டிக் கொண்டு சொன்னார்.
“அச்சுதன் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறான். நாங்கள் நண்பர்கள். அங்கேயிருக்கிற மலையாளிகள் சங்கத்தின் தலைவன் அவன், நான் செயலாளர்”
“அப்படியா? அச்சுதன் தலைவனாகி விட்டானா? நல்லது. வருகிற காலத்தில் அவன் இந்தியாவின் பிரசிடென்ட் ஆகும் போது நீ அவனுடைய செயலாளராகி விடலாம்”
“நான் ஐந்தரை மணி ரயிலில் திரும்பிப் போக வேண்டும்”
“நமக்கு இன்னும் சரியாக ஐம்பத்தி ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன. ரயில் நிலையத்திற்கு நீ நடந்து போக பத்து நிமிடங்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, நாம் பேசுவதற்கு நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன”
“ஆமாம். நான் அவசரத்தில் இருக்கிறேன். தவிர அச்சுதன் இன்னும் சில வேலைகள் சொல்லியிருக்கிறான்…”
“அப்படியா? எனில் அது இன்னொருமொரு இலக்கு …”
“ஓ..இல்லை! அப்படியெதுவுமில்லை”
“இருந்து விட்டுப் போகட்டும். நீ எந்த ஊரைச் சேர்ந்தவன்?”
“நான் தெற்குப் பக்கம் ”
“தெற்குப் பக்கத்திலிருந்து ஒரு செய்தி. அது என்னவாக இருக்க முடியும்?: விரைவில் ஏதோ நடக்கப் போகிறது என்பதற்கான குறியீடு தூதுவரால் வந்திருக்கிறது”
“கொச்சுண்ணி மாமா, நீங்கள் அப்படி என்னை நினைத்து விடக் கூடாது. எனக்கு இதில் எந்த பிரத்யேக நோக்கமுமில்லை. அச்சுதனுக்காகத் தான் நான் இங்கு வந்தேன். அவன் என்னுடைய நெருங்கிய நண்பன். மிகக் குழப்பமான நிலையில் அவனைப் பார்ப்பது மிகவும் கவலையாக இருக்கிறது. நான் உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், அதனால் சந்திக்க வேண்டுமென்று நினைத்தேன்.”
“முன்பெல்லாம் பலர் வந்து என்னைச் சந்தித்து விட்டுப் போவது வழக்கம். சிறிது சரித்திரமும் ,சில புனைவுகளும் கலந்த உண்மைகளை வைத்து என்னைப் பற்றிய கற்பனைகள் சிலருக்குண்டு. ஆனால் சமீபத்தில் அப்படியெதுவும் அதிகமில்லை. காரணம் எனக்கு ஓய்வூதியமோ அல்லது சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு, அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்று விருது வாங்கின புகழோ எனக்கு இல்லை என்பதாக இருக்கலாம். நான் பழைய வரலாற்றை பேசப் போகிறேன் என்று கவலைப் படாதே”
“நான் உங்களைப் பற்றி நிறைய..”
“அவற்றை அச்சுதன் உனக்குச் சொல்லியிருந்தால் அதை நம்பாதே. அவன் சங்கத் தலைவன் என்பதெல்லாம் இருக்கட்டும். அவன் பேசுவதெல்லாம் அபத்தமானது ”
“அச்சுதன் உங்களுடைய ஒரே மகன், அவனிடம் நீங்கள் சிறிதளவாவது இரக்கம் காட்ட வேண்டும், இல்லையா?”
“ஓ..பரவாயில்லை. உன் தகவல் அற்புதமானது. இப்போது என்னிடமிருந்து அச்சுதனுக்குக் கருணை வேண்டும். சரி, அதை ஒரு மூட்டையாகக் கட்டி உன்னிடம் தருகிறேன். ஆனால் அது அவனிடம் போவதற்குள் கரைந்து விடும். அந்த கனத்தைச் சுமப்பதும் உனக்குக் கஷ்டமாகி விடும். உன்னுடையது நீண்ட பயணமல்லவா?”
“உங்கள் மனதில் தவறான புரிதல் நிறைய இருக்கிறதென்று எனக்குத் தெரியும் அங்கிள். அச்சுதன் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறான்”
“அப்படியா? தலைவன் சொல்வதையெல்லாம் உதவியாளர் நம்ப வேண்டும். அப்போதுதான் நிறுவனம் ஒழுங்காகவும், கட்டமைப்போடும் இருக்கும் ”
“எங்கள் உறவு அப்படிப்பட்டதல்ல. பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கும் எங்கள் குடும்பங்கள் மிக நெருக்கமானவை”
“அடுத்தடுத்த வீடுகளில் வசித்தாலும், ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பது மிகச் சிறப்பான பண்பு. நிச்சயமாக உன்னிடம் நல்ல ஆளுமை இருக்கிறது ”
“நமக்கு மிகக் குறைவான நேரம்தான் இருக்கிறது. நான் என்ன பேச வந்தேன் என்றால்…”
“அது என்னவாக இருக்குமென்று எனக்குப் புரிகிறது”
“நீங்கள் அந்த மாதிரி சொல்லக் கூடாது அங்கிள்”
“இது ஒரு பழைய ஜோக்…ஒவ்வொரு தூதனும் தான்தான் முதலென்று நம்புவான். இது தூதர்களின் பலவீனம். அந்தச் செய்தியைப் பெறுபவர்க்கு…ஓ..அது அப்படியே இருக்கட்டும். தூதரின் இயக்கமென்பது உண்மையை விலக்கிப், பொய்யான குறிப்புகளைச் செய்தி பெறுபவரின் மனதில் விதைப்பதாகும். திறமையான தூதர்கள் கூட அதைத்தான் செய்வார்கள். இதற்கேற்ற சரியான ஆங்கிலப் பிரயோகத்தை சொல்லுமளவிற்கு நான் புத்திசாலியில்லை”
“அவனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. ஆண் குழந்தை”
“நல்லது. ஓர் ஆண், ஒரு பெண் குழந்தை என்பதுதானே அரசாங்கம் சொல்வது..”
“அங்கிள்…நான்..”
“இந்தச் செய்தியை எனக்குத் தெரிவிக்க ஒரு தபால் கார்டே போதுமானது. நீ இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லை. அச்சுதனிடம் என் முகவரியிருக்கிறது. ஆனால் சரியான பின்கோடு எண்ணை எழுத வேண்டுமென்று நீ ஞாபகப்படுத்த வேண்டும். ஏனெனில் இந்தியாவில் இராமபுரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன.”
“அங்கிள், நான் வாயைத் திறந்து பேசவே நீங்கள் அனுமதிக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. உங்களைச் சந்திக்க மட்டுமே நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் இல்லையா?”
“ஓ. ஆமாம். மறந்து விட்டேன். மன்னித்து விடு. தூதராக வந்தவரிடம் செய்தியைக் கேட்டேயாக வேண்டும். இப்போது ஒன்று செய்யலாம். நீ சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விடு. நான் குறுக்கிட மாட்டேன். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கவனமாகக் கேட்பேன் என்று உறுதியளிக்கிறேன். இல்லாவிட்டாலும் கூடக் காது என்று சொல்கிறோமே அது மிகப் பணிவானது. யார் என்ன சொன்னாலும், முட்டாள்தனமாக இருந்தாலும் கூட, அது தவறாமல் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும். மனிதனின் காதிற்கென தனி அறிதிறன் கிடையாது என்பது இதன் அர்த்தம். சரி, பேச ஆரம்பிக்கலாம். ஆனால் ரயிலைப் பிடிக்க வேண்டும் என்பதை நீ ஞாபகம் வைத்துக் கொள் ”
“நமக்கு இன்னும் அரை மணி நேரமிருக்கிறது ”
“சரியாகச் சொல்ல வேண்டுமெனில் முப்பத்து மூன்று நிமிடங்கள். பதினாறரை நிமிடங்கள் உனக்கு, பதினாறரை நிமிடங்கள் எனக்கு”
“எனக்கு அது போதாது”
“அப்படியானால் உனக்குப் பதினெட்டு ,எனக்குப் பதினைந்து”
“எனக்கு இருபது நிமிடங்களாவது வேண்டும்.”
“சரி. அச்சுதனுக்கு நீ சரியான நண்பன்தான், குறைவாகக் கொடுத்து, பேரம் பேசி அதிகமாகக் கேட்பது ”
“நான் சுருக்கமாகச் சொல்கிறேன். என் எண்ணங்களைக் கோர்வையாகச் சொல்வது எனக்குக் கஷ்டம். அதனால் என் மனதுக்குத் தோன்றிய விதத்தில் நான் சொல்கிறேன். சமீப காலத்தில் அச்சுதனிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஏதோ ஒன்று அவனைத் தொடர்ந்து வருத்திக் கொண்டிருக்கிறது. என்ன காரணம் என்று கேட்ட போது அவனுக்கே அது தெரியவில்லை. சில சமயங்களில் அவன் நடவடிக்கை வினோதமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு நாள் அவன் தோட்டத்திற்கு ஒரு குறவன் தன் குரங்கை அழைத்து வந்தான். அவர்கள் தங்களுடைய வழக்கமான வித்தைகளைச் செய்து காட்டினர். ஆனால் அச்சுதன் அவர்கள் வசப்பட்டதை அறிந்த குறவனும் மிகுந்த உற்சாகமடைந்தான். இதற்கு முன்பு செய்திருக்காத. சாத்தியமற்ற சில வித்தைகளை குறவனும, குரங்கும் செய்து காட்டினர். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் குறவனைக் குரங்கிலிருந்து பிரித்தறிவது கஷ்டமாக இருந்தது. நாங்கள் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த போது அச்சுதன் கீழே குதித்து அவர்களோடு சேர்ந்து கொண்டான். குறவனின் மகன் பறையை வெறித்தனமாக அடித்தான். இது அங்குள்ளவர்களுக்கு வினோதமான காட்சியாகத் தெரிந்தது. கூட்டம் கூடியது .அச்சுதன், குறவன், குரங்கு மூவரும் ஒன்றாகக் குட்டிக் கரணம் அடித்தார்கள். அது நீண்ட நேரம் நடந்தது.
கடைசியில் அச்சுதன் குறவனுக்கு நிறையப் பணம் கொடுத்து விட்டு “இந்தக் குரங்கை என்னிடம் தருகிறாயா?” என்று கேட்டான்.
அந்த வினோதமான வேண்டுகோளைக் கேட்டதும் “ கொல்லவா அல்லது உடன் வைத்துக் கொள்ளவா?” என்று குறவன் கேட்டான்.
“இரண்டிற்குமில்லை. வித்தைகள் செய்ய“ என்று அச்சுதனின் பதில் வந்தது.
“அவனுக்குத் தானாக வித்தைகள் செய்யத் தெரியாது. நானில்லாமல் அவனால் வித்தைகள் செய்ய முடியாது ” குறவன் சொன்னான்.
“பரவாயில்லை. நானும் ஒரு குறவன்தான். உன்னுடைய பறையையும், உடையையும் குடு”
குறவன் தன் முகம் சிவக்கும் வரை பெரிதாகச் சிரித்தான். ”அது வெறும் ஆடம்பரம் தானே சார்? ஒரு குறவனாகப் பிறந்து திரிவதற்கு நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இந்தப் பிறவியில் நான் ஒரு குறவனாகப் பிறப்பதற்கு முந்தைய மூன்று பிறவிகளில் புண்ணியம் செய்திருக்கிறேன் ”
“அச்சுதன் ஒரு குறவனாக அலைய ஆசைப்படுகிறான்! கொச்சுண்ணி வியப்படைந்தார். ”நான் இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டும்? நீ புறப்படும் நேரமாகி விட்டது”
“இன்னுமொரு சம்பவம் இருக்கிறது. நான் சீக்கிரம் முடித்து விடுகிறேன். இதையெல்லாம் உங்களிடம் பேசும்படி அச்சுதன் என்னிடம் சொல்லவில்லை. இதையும் நான் சொல்லி விட்டால் சொல்ல வேண்டியதை எல்லாம் நான் உங்களிடம் சொல்லி விட்டதாகி விடும். நடப்பு என்னவென்று உங்களுக்கும் தெரியும்.”
“எங்கள் காம்பவுண்டின் அருகே தொழிற்சாலை வளாகத்திற்குள் புதிய கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர்கள் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்த போது பழமையான ஓர் உலோக தேவி சிலை கிடைத்தது. அச்சுதனுக்கு இந்தச் செய்தி தெரிந்தவுடன் அவன் மிக வேகமாக அந்த இடத்திற்குப் போய் மேற்பார்வையாளரிடம் பேசி அதை வாங்கி விட்டான். பழம் பொருட்களின் மீது அவனுக்கு ஒரு மயக்கம் இருப்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அந்தச் சிலையைச் சுத்தம் செய்து, மெருகேற்றி வீட்டின் முகப்பு அறை அலமாரியில் வைத்த பின்புதான் இது எனக்குத் தெரிந்தது. இதற்குள் மூன்று நாட்கள் கடந்து விட்டன. எனக்கு முதல் பார்வையிலேயே அந்தச் சிலை ஏதோ தவறாகப் பட்டது. தேவியின் ஒரு கண் விழுந்திருந்தது. சில சமயங்களில் அந்த மற்றொரு கண்ணி்லிருந்து ஆயிரம் கண்களின் மினுமினுப்பு தெரியும். சில சமயங்களில் உயிரிருப்பது போல கண் படபடக்கும்.இரவுகளில் நாங்களிருவரும் குடிப்போம். அந்த நேரங்களில் நான் அந்தச் சிலையைப் பார்க்கக் கூட பயப்படுவேன்.அந்த ஒற்றைக் கண்ணில் ஏதோ ஓளிர்ந்து கொண்டிருக்கும். ஒரு வினோதமான நெருப்பு! அதை அச்சுதனும் உறுதி செய்தான். அவனுக்கும் அச்சம்தான். அவள் பழங்காலத்தின் சக்தியான தெய்வம். அவசரம் அவசரமாக அவளை வீட்டுக்குள் கொண்டு வந்தது அபாயகரமானதுதான். தவிர சுற்றுப்புறமும் அவ்வளவு தூய்மையாக இல்லை. அதன் புனிதத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அந்த வீட்டிற்குள் சிலை வந்ததிலிருந்து அச்சுதனிடம் ஒரு மாற்றத்தை என்னால் கவனிக்க முடிந்தது. ஏதோ ஒன்று அவனை ஆட்கொண்டிருந்ததை முகம் வெளிப்படுத்தியது.
“நீ அதை மீண்டும் பார்க்கவில்லை?”
“இல்லை”
“எனக்குப் புரிகிறது. நீ நிறைய நேரம் எடுத்துக் கொண்டு விட்டாய். பரவாயில்லை. இப்போது நான் பேசுகிறேன், நீ கவனி. எந்தச் சத்தமும், புலம்பலுமில்லாமல் குறுகிய நேரத்தில் என் குரு பல விஷயங்களைப் பேசுவார். நான் என் குருவைப் பற்றி மட்டும் பேச வேண்டும். ஏனெனில் எனக்கு வயதாகி விட்டது. ஆனால் பயப்பட வேண்டாம். அது துர் தேவதையோ அல்லது துர் வருகையோ இல்லை. அவர் எப்படி என் குருவானார் என்று நீ கேட்டால் என்னிடம் பதிலில்லை. முதன்முதலில் அவரை என் கனவில் நான் பார்த்திருக்க வேண்டும். அல்லது நேரில் பார்த்திருக்கலாம். அவர் என்னைத் தேடி வந்திருக்கலாம். எப்படியானாலும், அவர் முகத்தின் பிரகாசத்தை விளக்க என்னால் முடியாது. ஒளி நிறைந்த அந்தக் கண்கள் என்னவெல்லாம் பிரதிபலித்தன? இரக்கம் ,அன்பு, பற்றின்மை— இந்தப் பிரபஞ்சம் முழுவதும். அவர் பாதங்களை வணங்குவதைத் தவிர நமக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றுதான் தோன்றும். எதையும் நான் கேட்காமல் என்னைப் பற்றி எல்லாமும் சொல்வார். “ கொச்சுண்ணி, கொஞ்ச நேரம் தனியாக உட்கார்ந்து ,கண்ணை மூடிக் கொண்டு, உனக்குள் என்னை தியானி. நான் இங்கேதான் இருக்கிறேன்” என்று. மற்ற சமயங்களில் “ கொச்சுண்ணி, மிகத் தாமதமாக நீ இதைத் தொடங்கியிருக்கிறாய்” என்று சொல்வார். நான் அவர் பாதங்களில் என் முகத்தை அழுத்திக் கொள்ளும் போது என் காதில் கேட்பது “ நீ முன்பே இதைச் செய்திருக்கக் கூடாதா? நிறைய நேரத்தை நீ வீணாக்கி விட்டாய் ” என்று. எல்லாவற்றையும் விலக்கி விட்டு வர நான் தயக்கம் காட்டுவது என் குருவிற்குத் தெரியும். ஆனால் அதைத் தொடங்குவதிலும், நடத்திச் செல்வதிலும் என்ன இருக்கிறது? இவை எல்லாம் நமக்குள் அடங்குவது தானே? மூலத்தை அறிவதை இவை தாமதமாக்குகிறதல்லவா? சுலபமாகச் சிலர் அதை அடைகிறார்கள். மற்றவர்களுக்கு, அது வாழ்க்கையில் மிகத் தாமதமாகக் கிடைக்கிறது. இன்னுமொரு வகையினருக்கு மூன்று ஜன்மாக்களுக்குப் பிறகும் வருவதேயில்லை…”
“அங்கிள் எனக்கு எதுவுமே புரியவில்லை.”
“நாம் போகலாமென்று குரு சொன்னார். பயப்பட எதுவுமேயில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். இருப்பினும் எதற்கும் பயன்படாத விருப்பமற்ற கட்டுகள் இருக்கின்றன. எல்லாம் வெறும் இழைகள்தான்.ஓர் ஆழமான மூச்சால் அவைகள் மறைந்து விடும். பெரும்பாலானவர்கள் ’நான்’ மற்றும் ’என்னுடையது’ என்ற எண்ணத்திலேயே வாழ்கின்றனர். தண்ணீர் வற்றிய பிறகுதான் தேங்காயின் ஓடு நமக்குக் கிடைக்கிறது. என் நேரம் இன்னும் வரவில்லை என்று நான் சொன்ன போது குரு சிரித்தார். ’நம் முன்னோர்கள் நான்கு கட்டங்களைச் சொல்லவில்லையா கொச்சுண்ணி?’ என்றார். விழிப்பு நிலை என்பது நமக்குள்ளிருந்து வருவது என்பதுதான் முக்கிய விஷயம். இதயத்திலிருந்து நூற்றியொன்று நாடி, நரம்புகள் எழுகின்றன. அதிலொன்று நேரடியாகத் தலைக்குப் போகிறது என்று சொல்லப் படுகிறது. அந்த நாடியின் வழியாக வாழ்க்கையை முடித்துக் கொள்கிறவன் அமரனாக, சிரஞ்சீவியாகிறான். மற்ற நாடிகள் வழியாக வாழ்க்கையை முடிக்கும் போது, அதன் முடிவென்பது பிறவியெடுத்து, சம்சார பந்தத்திற்குள் நுழைவது. சம்சார கட்டத்தைக் கடப்பதென்பது மிகக் கடினமானது. உடலிலிருந்து வேறுபடும் இயல்பை ஒருவன் உணர்திருக்க வேண்டும். இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால்…”
“நான்..நான்..”
“இதைப் பற்றிப் பேசுவதென்றால், சொல்வதற்கு நிறைய உண்டு. உனக்குச் சலிப்பாகி விடும்…’
“நான்..”
“உனக்கு நேரமாகி விட்டதா? நீ கிளம்ப வேண்டுமே. ஒன்று உண்மை: நாம் நினைக்கிற மாதிரி எந்த ரயிலும் சரியான நேரத்திற்கு வராது.”
“பரவாயில்லை. நான் நடப்பதற்கு பதிலாக ஓடிப் போவேன். ஆனால் நீங்கள் எனக்கு வாக்குக் கொடுக்க வேண்டும். அங்கிள், உங்களைப் பார்க்கத்தானே நான் அவ்வளவு தூரத்திலிருந்து வந்தேன்? நான் அச்சுதனுக்கு ஏதாவது செய்தி சொல்ல வேண்டாமா?”
“தூதரை நான் முட்டாள் ஆக்குகிறேன் என்று நினைக்கிறாயா?”
“இல்லை. ஒரு போதுமில்லை.”
“பிறகு உனக்கு என்ன வேண்டும்? தூதருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைத் தவிர என்னால் வேறு என்ன கொடுக்க முடியும்?”
“ஒரே ஒரு வரம்தான். ஒரு சின்ன விஷயத்துக்கு உங்கள் சம்மதம் வேண்டும். ஒரே ஒரு முறை அச்சுதன் இங்கு வர விரும்புகிறான். உங்களைச் சந்திக்க விரும்புகிறான். அவன் உங்களைச் சந்திக்கும் போது நீங்கள் அவனை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்…”
“நான் ஒரு ’பலிகடாவாக’ நிற்க வேண்டுமென்று நீ குறிப்பிட்டுச் சொல்லாத ஒரு விஷயம் பாராட்டிற்குரியதுதான்…சரி, அவன் வரட்டும். அதை ஒரு போதும் நான் தடுக்க மாட்டேன். ஆனால் என்னைப் பார்ப்பது…அது சாத்தியப் படாது என்று நினைக்கிறேன்.”
“ஏன்?’
“நான் யாத்திரை போகிறேன்.”
“எங்கே?’
“என் வயதில் ஒருவர் யாத்திரை புறப்பட்டுப் போகும் போது, அவர் எங்கே போகிறார் என்று கேட்பது முட்டாள்தனமானதல்லவா? அது ஒரு மிகப் பெரிய பயணமென்று நினைத்துக் கொள்.”
“அச்சுதனிடம்…”
“நான் ஒரு யாத்திரையில் இருக்கிறேன் என்று சொல்”
“அவன் வந்தால்…”
“நான் ஒரு யாத்திரையில் இருக்கிறேன் என்று சொல்”
“அவன் உங்களைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினால்…”
“அப்போதும் நான் ஒரு யாத்திரையில் இருக்கிறேன் என்று சொல்லலாம்.”
~oOo~

நன்றி : The Greatest Malayalam Stories Ever Told A.J.Thomas , Aleph Company ,India
2023
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
