“உலகம் உள்ளவரை லுக்ரீஷஸின் நுண்சொற்களுக்கு அழிவில்லை”
-ஓவட்(Ovid)
டெமாகிரீடஸின் எழுத்துக்கள் முழுமையாக அழிந்துபட்டதே பண்டைய நாகரீக அழிவின் ஆகப்பெரும் அறிவியக்க பெருந்துயரம். அவரது எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கையைப் பார்த்தால் , பழமையின் மிகப்பெரும் அறிவியல் சிந்தனைகளை நாம் இழந்துவிட்டோம் என வருந்துவதில் எந்தத் தவறும் இல்லை. மிஞ்சியிருந்த அரிஸ்டாட்டிலிருந்தே மொத்த மேற்கத்திய சிந்தனையும் மீண்டெழுந்தது. டெமாகிரீடஸிடமிருந்து இந்த மீட்சி தொடங்கியிருந்தால் நமது அறிவியக்க வரலாறு இன்னமும் மேம்பட்டதாக இருந்திருக்கும்.
நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய ஓரிறைவாதம் டெமாகிரீடஸின் இயற்கைவாதத்தை விட்டுவைத்திருக்காது. கிறிஸ்தவமே தனது பேரரசின் ஓரே மதம் என தியோடோசியஸ் பொ.யு. 390ல் அறிவித்த பிறகு கொடூரமான பாகன்கள் ஒழிப்பு, ஏதென்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்தது போன்ற பழமையான கல்வி நிலைகளை மூடுவது, கிறிஸ்தவ சிந்தனைகளுக்கு எதிரான நூல் பிரதிகளை அழித்தொழித்தல்கள் என மிக விரிவான திட்டமிடலுடன் அடக்குமுறைகள் நிகழ்த்தப்பட்டன. ஆன்மாவின் நித்தியத்துவம் அல்லது மூலவர் ஒருவரின் இருப்பை ஏற்றுக் கொண்டதால் மட்டுமே பிளேட்டோவும் அரிஸ்டாடிலும் பொறுத்துக்கொள்ளப் பட்டனர். டெமாகிரீடஸ் நிச்சயமாக தப்பியிருக்க மாட்டார்.
இத்தனை பேரழிவுகளையும் தாண்டி முழுமையாக ஒரு பிரதி நம்மிடம் வந்துள்ளது. அதிலிருந்து பண்டைய அணுத்துவம் – முக்கியமாக அறிவியல் நோக்கு குறித்தும் சிறிது அறிய முடிகிறது. லத்தீன் கவிஞர் லுக்ரீஷஸின் பொருட்களின் இயற்கை என்னும் அற்புதமான பாடல் அது.
லுக்ரீஷஸ், டெமாகிரீடஸின் சீடரான எபிக்யூரஸின் தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர். அறிவியல் நோக்கை விட அறநோக்கிற்கு முக்கியத்துவம் அளித்த எபிக்யூரஸிடம் டெமாகிரீடஸின் நுண்மை இல்லை. சிலநேரங்களில் தனது ஆசிரியரின் அணுத்துவத்தை சற்று அதீதமாகவே பொருள் கொண்டு மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆனாலும் அப்தெராவின் மிகச் சிறந்த தத்துவ ஞானியின் இயற்கைவாதம் குறித்த நோக்கோடு அவருடைய பார்வை ஒத்துப் போனது. தனது சொற்களில் எபிக்யூரஸின் சிந்தனைகளையும் டெமாகிரீடஸின் அணுத்துவத்தையும் வடித்ததால் தான், இருட்கால பேரழிவில் இருந்து மகத்தான இந்த தத்துவங்கள் தப்பிப் பிழைத்தன. அணுக்கள், வானம், கடல் மற்றும் இயற்கை குறித்து பாடியுள்ள லுக்ரீஷஸ், அறிவியல் சிந்தனைகள், தத்துவத்தின் கேள்விகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாதங்களை தனது ஒளிரும் சொற்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
“ விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தன்னியல்பான நகர்வோ அல்லது இறைத்திட்டத்தின் காரணமோ என நாம் நினைத்துவிடாதபடி, கதிரவனின் பாதையையும் நிலவின் பயணத்தையும் இயக்கும் விசைகளைப் பற்றி விளக்குகிறேன்”
பேரலைகளாலான சமுத்திரமும் விண்மீன்களும் எதனால் ஆக்கப்பட்டுள்ளதோ அவற்றாலேயே தான் நாமும் ஆக்கப்பட்டுள்ளோம் என்கிற அணுத்துவ தரிசனத்தினால் விளைகின்ற மகத்தான ஒருமையுணர்வும் அதன் விந்தையுணர்வுமே இந்த காவிய அழகியலின் மையமாக இருக்கின்றன:
“விண்ணக விதையில் விளைந்தவர் நாம்.
வற்றாது அமுதூட்டும் பூமியன்னை
பிறிதொன்றிலாத தந்தையின் பொழியும் துளிகளில்
புன்னகைக்கும் பயிர்களையும் செழிப்பான மரங்களையும்
சகல விலங்குகளையும்
மனிதனையும் பிறப்பிக்கிறாள்.
உண்டு பசியாறி
மகிழ்வுடன் வாழ்ந்து
குலம் செழிக்க
உணவையும் படைக்கிறாள்”
கடினமான பலிகளை வேண்டி கடும் தண்டனைகளை வழங்கும் கிறுக்குத்தனமான தேவர்கள் யாரும் இல்லை என்னும் புரிதலால் விளைந்த ஒளிரும் கலையமைதியை பாடல் வரிகளில் உணர முடியும்:
“நின் வருகைக்கு முன் காற்றும்
வந்தபின் மேகங்களும்
விலகுகின்றன.
கடலின் புன்னகையும்
தனிந்த கதிரொளியுடன்
அமைதியான வானமும்
உனக்காகவே”
நமது ஒருங்கிணைந்த வாழ்க்கை குறித்த முழுதேற்பு :
“வலிகளற்ற உடலையும், அச்சமும் துயரும் இல்லாது இனிமையை சுவைக்கும் மனதினையுமே இயற்கை வேண்டுகிறது என்பதைக் காணவில்லையா”
எந்தவொரு தீமையையும் அழித்துவிடும் தவிர்க்க இயலாத மரணத்தை, அமைதியாக ஏற்றுக் கொண்டதன் வழியாக அது குறித்த அச்சம் விலகுவதையும் காணலாம். லுக்ரீஷஸுக்கு மதம் அறியாமையின் சின்னம், சிந்தனையே ஒளிரும் வழிகாட்டி.

நெடுங்கால புதைவாழ்விற்குப் பிறகு ஜனவரி 1497ல் போஜோ ப்ரச்சொலீனீ (Poggio Bracciolini) என்னும் பழங்கலை ஆய்வாளரால் இந்நூல் கண்டுபிடிக்கப்பட்டது. பல பாப்பரசர்களுக்கு செயலராக இருந்த போஜோ , ஃப்ரன்செஸ்கோ பெத்ரார்க்காவின் (Francesco Petrarch) புகழ்பெற்ற கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு பழங்கால நூல்களை வேட்டையாடுபவராக மாறியிருந்தார். அவர் கண்டுபிடித்த க்வின்டில்லியனின்(Quintilian) பிரதி, சட்டக் கல்வியை ஐரோப்பா முழுமைக்குமாக மாற்றியமைத்தது; விட்ரூவியஸின் (Vitruvius) கட்டுமானக் கலை மீதான ஆய்வுக்கட்டுரை சிறந்த கட்டுமானங்களின் வடிவமைப்பு மற்றும் செயலாக்கத்தில் பெரும் பாய்ச்சலைக் கொணர்ந்தது. ஆனால் லுக்ரீஷஸை கண்டுபிடித்ததே அவரது மகத்தான சாதனை. போஜோ கண்டுபிடித்திருந்த கையெழுத்துப் படி தொலைந்திருந்தாலும் அவரது நண்பர் நிகோலோ நிக்கொலி (Niccolò Niccoli) வைத்திருந்த இன்னொரு பிரதி இன்னமும் ஃப்ளொரன்ஸ் நகரின் பீப்லியோடெக்கா லாரென்ஸியானாவில் (Biblioteca Laurenziana) பாதுகாக்கப் படுகிறது.
புதிய ஒன்றிற்கான களம் லுக்ரீஷஸின் நூலை போஜோ கண்டுபிடிக்கையில் தயாராக இருந்தது. ஏற்கனவே தாந்தேவின் காலத்தில் புதிய சொற்களை கேட்க முடிந்திருந்தது:
“இதயத்தை துளைத்து
உள்ளுறை சிந்தனைகளை
கிளப்புகிறது உன் பார்வை.
வாழ்வை சிதைக்கும் அன்புடன்
கவலையுடனும் பதற்றத்துடனும்
இருப்பதை காண்பாயாக”
De rerum naturaவின் மறு கண்டுபிடிப்பு இத்தாலிய மற்றும் ஐரோப்பிய மறுமலர்ச்சியில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியது. அதன் பெரும் எதிரொலியை கேலலேயோ (Galileo) முதல் கெப்ளர் (kepler) வரை, பேகன் (Bacon) முதல் ஃமாக்கியாவெல்லி (Machiavelli) வரையிலான அவர்தம் எழுத்துக்களில் காண முடிகிறது. போஜோவிற்கு நூற்றாண்டுகள் கழித்து ஷேக்ஸ்பியரில் அணுக்களின் இனிய தோற்றம் நிகழ்கிறது.
“நாசி மீது அமைதியாக படிந்திருக்கும்
அணுக்களின் சிறு குழு”
லுக்ரீஷஸின் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்கோள்கள் மான்டென்யோவின் (Montaigne) கட்டுரைகளில் காணக்கிடைக்கின்றன. ஆனால் அவரது நேரடி செல்வாக்கு நியூட்டன் , டால்டன், ஸ்பினோஸா, டார்வின் தொடங்கி ஐன்ஸ்டைன் வரை நீள்கிறது. திரவ மூலக்கூறுகளால் நிகழும் குருணையின் ப்ரௌனியன் இயக்கம் அணுக்களின் இருப்பை வெளிப்படுத்துகிறது என்னும் ஐன்ஸ்டைனின் சிந்தனைக்கு லுக்ரீஷஸில் தடையத்தினைக் காணலாம். அணுக்களின் இயக்கம் குறித்த லுக்ரீஷஸின் ‘நேர்க்காட்சி’ :
“நம் கண்ணெதிரே தொடர்ந்து நிகழும் காட்சியை வைத்து இந்த செயல்முறை விளக்கப்படுகிறது. ஒரு கட்டிடத்தின் நிழலிடங்களில் கதிரொளி பாய்வதை கவனிப்போம். வெட்டவெளியில் அந்த ஒளியின் பாதையில் பலநூறு சிறுதுகள்கள் பலநூறு விதங்களில் நிரந்தர மோதலுடன் அதிரடியான இணைப்புடனும் விலகலுடனும் அணியணியாக போருக்குச் செல்வதைப் போல தோன்றுவதைக் காணலாம். முடிவற்ற பிலத்தில் அணுக்களது தொடர் விட்டெறிதல்
எவ்வாறு பொருள் விளங்குகிறது என்பதையும் ஊகிக்கலாம். சிறு விஷயங்களுக்கு, ஒரு எல்லை வரை, விளக்கங்களும் பெரிய விஷயங்களின் முடிவுறா சித்திரத்தையும் அளிக்கலாம். ஒளித்தடத்தில் நடனமிடும் சிறு துகள்கள் மீது ஏன் நம் மனத்தை செலுத்த வேண்டியதன் காரணம்: பருப்பொருளின் மறைவான அடிநாதம் ஒன்றின் காரணமாகவே அந்நடனம் நிகழ்கிறது. கண்காணாது விழும் அடிகளால் தொடர்ந்து அனைத்துத் திசைகளிலும் பாதை மாறி அவை மீண்டு வருவதைக் காணலாம். அணுக்களிடமிருந்தே இந்தத் தொடர் அலைச்சலை அவை பெற்றுக் கொள்கின்றன என்பதை உணர முடிகிறது. தொடர் நகர்வில் இருக்கும் அணுக்களிலிருந்தே சிறு துகள்களின் தொடர் அலைச்சல் தொடங்குகிறது. இனி, அணுக்களின் தூண்டுதல்களிலிருந்து தப்பிப் பிழைத்த சிறு பொருட்கள், கண்காணாது விழும் அடிகளால் தம்மைவிட சற்றே பெரிய பொருட்களைத் தாக்கும். அணுக்கள் தொடங்கி நமது புலன்களுக்கு தென்படும் வரை இந்தத் சுழல் நிகழ்வு இயல்பாகக் தொடர்ந்து பரிணமிப்பதால் தான் ஒளித்தடத்தில் நாம் காணும் பொருட்களின் நகர்வு மறைவான தொடர் அடிகளால் நிகழ்கிறது.”
டெமாகிரீடஸில் கருக்கொண்டு லுக்ரீஷஸில் வெளிவந்த ‘நேர்க்காட்சி’யை உறுதியான கணித சமன்பாடுகளால் உயிர்ப்பித்த ஐன்ஸ்டைன், அணுக்களின் அளவினை கணித்தார்.
லுக்ரீஷஸை தடுக்க முயன்ற கத்தோலிக்க திருச்சபை, டிசம்பர் 1516ல் ஃப்ளொரென்டைன் ஆயர் மன்றம் (Florentine Synod) கல்விக்கூடங்களில் அவரை வாசிப்பதை தடை செய்தது. 1551ல் ட்ரெண்ட் மாகாண சபை (Council of Trent) அவரது எழுத்துக்களை தடை செய்தது. காலங்கடந்த இம்முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது. மத்திய கால கிறிஸ்தவத்தால் மறைத்து வைக்கப்பட்டிருந்த, உலகின் பெரும் சித்திரம் கண்விழித்த ஐரோப்பாவில் மீண்டுவந்தது. லுக்ரீஷஸின் காரணவாதம், நாத்திகம் மற்றும் பொருள்முதல்வாதம் மட்டுமே அங்கு முன்மொழியப்படவில்லை. உலகின் ஒளிமிக்க அழகின் மீதான நுண் அவதானம் மட்டுமே இல்லை. இவையனைத்திற்கும் மேலான ஒன்று, நிதர்சனம் குறித்து புதிய, தெளிவான, நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த மத்திய கால மனநிலைக்கு நேர்மாறான, சிக்கலான சிந்தனைக் கட்டமைப்பே அது.
ஐரோப்பிய சமூகத்தின் ஒழுங்கடுக்கில் எதிரொலித்த பிரபஞ்சத்தின் ஒழுங்கடுக்கு தாந்தேவினால் மிக அற்புதமாக பாடப்பட்டது. பூமியை மையமாகக் கொண்ட உருண்டையான பிரபஞ்சம்; சுவனத்திற்கும் பூமிக்கும் இடையே மாற்றில்லாத பிரிவு; இயற்கை நிகழ்வுகள் குறித்து உருவத்துடன் கூடிய அறுதியான விளக்கங்கள். இறையச்சம், மரணபயம்; இயற்கை மீதான உதாசீனம், பொருட்களுக்கு ஆதாரமான கருத்துக்களால் கட்டமைக்கப்படும் உலகம்; கடந்தகாலத்தில் மட்டுமே இருக்கின்ற அறிவின் தொடக்கம், வெளிப்பாடுகளிலும் மரபிலும் உள்ள..
லுக்ரீஷஸால் பாடப்பட்ட டெமாகிரீடஸின் உலகில் இவை எதுவுமே இல்லை. இறையச்சமோ விண்ணகம் – மண்ணுலகு பிரிவினையோ, பிரபஞ்ச ஒழுங்கடுக்கோ, இறுதி லக்ஷியங்களோ குறிக்கோள்களோ – எதுவும் இல்லை. இயற்கையின் ஒரு பகுதியாக இயைந்திருப்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டு பேரமைதியுடன் ஆழ்ந்திருத்தல், மேல் கீழ் ஒழுங்கடுக்கு என எதுவும் இல்லாமல் ஆண், பெண், விலங்குகள், தாவரங்கள், முகில்கள் என அனைத்துமே அதியற்புதமான ஒருமையின் உயிர்க்கண்ணிகள் என ஆழமான கருணை – இவைகளே உள்ளது. “அறிவார்ந்த மனிதனுக்கு இந்த புவியே முழுதாக திறந்திருக்கிறது, ஏனெனில் தூய ஆன்மாவிற்கு பிரபஞ்சமே தாய்வீடு“ என்ற டெமாகிரீடஸின் அற்புதமான வரிகள் பிரபஞ்ச சகோதரத்துவத்தின் ஆழுணர்வுகளை எழுப்பியது.
பிரபஞ்சம் குறித்து எளிய சொற்களில் சிந்திக்க முயலும் குறிக்கோள் நம்முன் இருக்கிறது. இயற்கையின் ரகசியங்களை புலனாய்ந்து உணர இயலுகிற வேட்கையும், நமது முன்னோரை விட அதிகமாக தெரிந்து கொள்வதன் விருப்பும் உள்ளது. மகத்தான கருவிகளால் கேலலேயோ, கெப்ளர், நியூட்டன் உருவாக்கிய கட்டுமானங்கள்: வெளியில் சுதந்திரமான நேர்க்கோட்டு இயக்கம் குறித்த சிந்தனை, உலகை கட்டமைத்த அடிப்படை பொருட்கள் மற்றும் அதனிடையேயான ஊடாட்டங்கள் குறித்த சிந்தனை, (அண்ட)வெளியே உலகின் கொள்கலன் என்னும் சிந்தனை. பொருட்களின் வரையறைக்குட்பட்ட வகுத்தல் என்னும் சிந்தனை, உலகின் துளிமைப் பண்புகள் குறித்த சிந்தனை, நம் விரல்களுக்கிடையே முடிவிலியை அகற்றிய சிந்தனை. அணுக்கொள்கையின் அடிவேராக இருந்திருந்தாலும், துளிம இயக்கவியல் வழியாக பெருவலிமையுடன் மீண்டு வந்து, துளிம ஈர்ப்பியலில் இன்று வெளிப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி இயல்புவாத ஒருங்கிணைவில் வெளிவந்த முதல் சித்திரவடிவின் பாகங்களை , டெமாகிரீடஸின் தரிசனத்தை மீட்டெடுத்து, செறிவாக்கி, நவீன சிந்தனையின் மையத்திற்கு கொண்டு வந்து வடிவமைத்தவர் ஒரு ஆங்கிலேயர். இதுவரையிலான விஞ்ஞானிகளுள் முதன்மையான அவரே அடுத்துவரும் அத்தியாயத்தின் நாயகர்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
