7. விருந்தாளி

ஆங்கில மூலம் : ஸ்ரீ அரவிந்தர்  ‘Spiritual Sonnets’

தமிழாக்கம் : மீனாக்ஷி பாலகணேஷ்

ஸ்ரீ அரவிந்தரின் ‘Spiritual Sonnets’ எனும் எட்டுக்கவிதைகளில் இது ஏழாவதாகும்

விருந்தாளி

எனது ஆழ்ந்த இறப்பற்ற நிலையை நான் அறிந்துகொண்டிருக்கிறேன்:
என்மனதின் எல்லையற்ற அமைதியான மறைக்கப்பட்ட முற்காட்சி
இந்த உலகத்தை அழிவற்ற பார்வையின் மூலம் சந்திக்கிறது,
மானிடக் காட்சிக்கு கடவுள்-பார்வையாளன்.

இதயம், தசை இவற்றின் எந்த வலியுமோ, துயரமோ
அந்தத் தூய, குரலற்ற தெய்வப்பீடத்தை மிதிக்க இயலாது.
விதியின் காவல்நாய்களான ஆபத்தும் பயமும், தாங்கள் கட்டப்பட்ட
வாரிலிருந்து விடுபட்டு,
உடலையும் நரம்புகளையும் கிழித்துக்கொண்டு – நேரங்காலமற்ற ஆன்மாவை
விடுதலை செய்யும்.

விழித்துக்கொள்! கடவுளின் கிரணங்களும் சாட்சியும் என் உள்ளத்தில்
எனது ஆன்மாவின் இறப்பற்ற அடிப்படையாக
சுடர்போன்று, அறியவியலாத வல்லமை வாய்ந்த விருந்தினனாக.
இறப்பு அருகில் வர, விதி அதன் விளைவைத் தாங்குகிறது;

இயற்கையின் இருப்பைத் தகர்க்கும் அதிர்வான சப்தங்களை அவன் கேட்கிறான்:
அவன், வெல்ல முடியாத, சுடரொளி வீசுபவனாக அமைதியாக அமர்ந்துள்ளான்.

இறப்பு என்பதனை மிகவும் அமைதியாக, நிறைவாக எதிர்கொள்ளும் ஒருவருடைய சிந்தனைகள் இவை. முன்பே பார்த்த பாடல்களில் கூறியபடி, ஸ்ரீ அரவிந்தர் இறப்பை நண்பனாக, விருந்தாளியாகவே பார்க்கிறார்.

இப்படிப்பட்ட நிலை ஞானிகளுக்கே சாத்தியப்படும்.

தாகூரின் சிந்தனைகளும் இப்படிப்பட்டவையே. கீதாஞ்சலி முழுமையும் இத்தகைய கருத்துக்களை உள்ளடக்கிய பாடல்களைப் படிக்க இயலும்.

முதல் பாடலிலேயே கூறுவார்: 

This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life.

இந்த சக்தியற்ற பாத்திரத்தை (தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார்) தாங்கள் திரும்பத் திரும்பக் காலி செய்து, அதனைப் பின்பு எப்போதும் புதிய உயிரினால் நிரப்புகிறீர்கள்.

எத்தகையதொரு வாழ்க்கை விளக்கம்!

இன்னொரு கவிதை:

Thy gifts to us mortals fulfil all our needs and yet run back to thee undiminished.
The river has its everyday work to do and hastens through fields and hamlets; yet its incessant stream winds towards the washing of thy feet.
The flower sweetens the air with its perfume; yet its last service is to offer itself to thee.
Thy worship does not impoverish the world.
From the words of the poet men take what meanings please them; yet their last meaning points to thee.

தாங்கள் இறந்துபோகும் மனிதர்களாகிய எங்களுக்கு அளித்துள்ள பரிசுகள் எங்கள் எண்ணற்ற தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இருப்பினும் நாங்கள் குறைவின்றி உங்களிடம் திரும்பத் திரும்ப யாசித்து வருகிறோம்.

நதியானது செய்வதற்கு அதன் தினசரிப் பணிகள் உள்ளன; அது விரைவாக வயல்களினூடும் சிறு குடியிருப்புகளினூடும் செல்கின்றது. அதன் ஓய்வற்ற நீர்த்தாரை தங்கள் கால்களை அலம்புவதற்காகவே திரும்பி வருகிறது.

மலர் காற்றினைத் தனது நறுமணத்தால் நிரப்புகிறது. ஆயினும் அதன் கடைசிப் பூசை தன்னை உங்களுக்கு அர்ப்பணிப்பதே.

உங்களை வழிபடுவதனால் உலகம் குறைந்து போய்விடாது.

கவிஞர்களுடைய சொற்களிலிருந்து தமக்கு விருப்பமான அர்த்தங்களை மனிதர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். ஆனாலும் அவற்றின் முழுமையான கடைசிப்பொருள் தங்களையே சுட்டுகிறது.

இவை எத்தனை சத்தியமான சொற்கள்.

ஸ்ரீ அரவிந்தரின் கூற்றின்படி நாமே இவ்வுலகின் விருந்தாளிகள்.

எனது ஆழ்ந்த இறப்பற்ற நிலையை நான் அறிந்துகொண்டிருக்கிறேன்: 

தங்களைச் சார்ந்த எதுவுமே அகதிநிலையை உடையது. ஒரு பொழுதைப் போல மறுபொழுது இல்லாதது மனது. அது எல்லாப் பக்கங்களிலிருந்தும் வந்து நெருக்கிச் சுழற்றும் எண்ணச் சிதறல்களாலும் அசைவுகளாலும் கடும் சுழற்சியிலுள்ளது. உயிர் ஆற்றல் ததும்பும் நிலை என்பது மேலும் கீழும் வீசியடிக்கும் கடலலைகள் போன்றவை; வாழ்க்கையின் செயல்கள், விருப்பங்கள், அசைவுகள் ஆகியன மாறிக் கொண்டேயிருப்பன. உடலும் கூட தொடர்ச்சியான அழிவுக்கும் மாற்றத்திற்கும் உட்பட்டு, அதன் ‘செல்’களும் இடைவிடாத படைப்புக்கும் அழிவுக்கும் ஆளாகின்றன. ஆனால் உடலின் (?) எங்கோ ஆழமான பகுதியில் அழிவற்ற, மாற்றமற்ற, நிலையான, இறப்பற்ற பொருள் உள்ளது. அதுவே தங்களது ஆன்மா, தங்கள் வடிவில் உள்ள தெய்வ நிலைப் பொருள். இதனைக் கண்டுணர்ந்து இதனில் வாழவேண்டும். அப்போது இறப்பு தனது முகமூடியைக் கழற்றி விடும்!- இறப்பற்ற ரோஜாவில் எம். பி. பண்டிட்.

இதயம், தசை இவற்றின் எந்த வலியுமோ, துயரமோ

அந்தத் தூய, குரலற்ற தெய்வப்பீடத்தை மிதிக்க இயலாது.

‘வாழ்க்கை என்பது மகிழ்ச்சியற்ற பல நிகழ்வுகளைக் கொண்டது. பருவுடலை நூற்றுக்கணக்கன பல தொடர்புகள் (நோய்கள்?) தாக்குகின்றன. அவற்றைப் பொறுக்கவியலாததனால் உடல் வலியிலும் மன அழுத்தத்திலும் வருந்துகிறோம். மனத்தைப் பாதிக்கும் விஷயங்களில் பல வேதனையையும், துன்பத்தையும் அளிப்பவை. இதயம் கவலையில் ஆழ்கிறது, மனம் நினைவுகளில் ஆழ்கின்றது. ஆனால் இதனையும் தாண்டிய பகுதி ஆழ்மனத்தில் உள்ளது- அதற்குத் துன்பமும் வலியும் கிடையாது. அதுவே இதயத்தின் குகை எனப்படும்- ‘நான்’ எனும் ஆன்மா வாழுமிடம்; அங்கு அசுத்தமில்லை; எதிர்மறை எண்ணங்கள் கிடையாது, எதுவுமே உண்மைநிலையின் மனக் குழப்பங்களால் கதவைத் திறக்க முடிவதில்லை. துளைக்க இயலாத அமைதியும் உடைக்கவியலாத அமைதியும் நிலவும். அத்தனை தொந்தரவுகளும் இந்த உள்ளடங்கிய தெய்வ அமைதியான இடத்திற்கு அன்னியமானவை.’- இறப்பற்ற ரோஜாவில் எம். பி. பண்டிட்.

இயற்கையின் இருப்பைத் தகர்க்கும் அதிர்வான
சப்தங்களை அவன் கேட்கிறான்:
அவன், வெல்ல முடியாத, சுடரொளி வீசுபவனாக
அமைதியாக அமர்ந்துள்ளான்.

நம்மை நாம் எனப்படும் வடிவை இயற்கை கடினப்பட்டு உருவாக்குகிறது. நம் மனது, உடல், வாழ்க்கை அனைத்துமே இயற்கையால் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப் படுகிறது. இயற்கையின் சீற்றங்கள் நம்மீது பட்டு இதனைத் தகர்க்க முயல்கின்றன. இது அழிக்கப்படுவதும் உருவாக்கப் படுவதுமாக மாறி மாறி நிகழ்ந்து கொண்டே உள்ளது. ஆனால் நம்முள் வெகு ஆழத்தில் சாட்சியாக இருக்கும் தெய்வ விருந்தாளி இவை அனைத்தையும் ஏன், எதற்காக என அறிந்ததனால் பார்த்துக் கொண்டே உள்ளது. இந்த விருந்தாளியே நமது அழிவற்ற ஆன்மா. இதனை ஆழ்ந்து உணர்ந்தால், நாம் இதனை ஒளிமயமான அசைக்கமுடியாத ஆன்மச் சுடரென அறியலாம்.’ – இறப்பற்ற ரோஜாவில் எம். பி. பண்டிட்.

பாரதியாரின் பொருள் செறிந்த கவிதையுடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன்.

காலமாம் வனத்தில் எனும் பாடலை நாம் அனைவருமே எம்.எஸ் அம்மா பாடிக் கேட்டிருப்போம்.

காலமாம் வனத்தில் அண்டக் கோலமா மரத்தின் மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு – ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு – தழல்
காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்
கால்களா றுடைய தெனக் கண்டு – மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு

மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் – இந்த
விந்தையெல்லாம் ஆங்கதுசெய் கள்ளம் – பழ
வேதமாய் அதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் – ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்

ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும் – ஒன்றே
ஆகினா லுலகனைத்தும் சாகும் – அவை
அன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லையிதை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்த
அறிவு தான் பரமஞான மாகும்.
விளக்கம் மிக எளிதல்லவா?

7. The Guest

I have discovered my deep deathless being:
Masked by my front of mind, immense, serene
It meets the world with an Immortal’s seeing,
A god-spectator of the human scene.

No pain and sorrow of the heart and flesh
Can tread that pure and voiceless sanctuary.
Danger and fear, Fate’s hounds, slipping their leash
Rend body and nerve, – the timeless Spirit is free.

Awake, God’s ray and witness in my breast,
In the undying substance of my soul
Flamelike, inscrutable the almighty Guest.
Death nearer comes and Destiny takes her toll;

He hears the blows that shatter Nature’s house:
Calm sits he, formidable, luminous.

(அடுத்த இதழில் நிறைவுறும்)




Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.