சன்ன வருடல்

பின்னிரவின் அகாலத்தில்
குஞ்சொலிகள் மீச்சிறிதாய் கீச்சிடுவதைக் கேட்க
உங்களின் படுக்கை வீட்டிற்கு வெளியே முகப்புப் பகுதியில் இருக்க வேண்டும்.
நீங்கள்
நான்காயிரம் ரூபாய்க்கு
சுவரில் மாட்டும் மின்விசிறி வாங்க வேண்டும்.
அது இடைவிடாத கொசுக்கடியின்
நீண்ட நாள் வேதனையை போக்குவதற்காக
இருக்க வேண்டும்.
மின் விசிறி மாட்டிய இரண்டாவது நாள்
சிட்டுக் குருவிகள்
அதன் பின்புறம் கூடு கட்ட ஆரம்பிக்க வேண்டும்.
குறிப்பாக
உங்களுக்கு திருமணம் நடந்திருக்க வேண்டும்.
உங்கள் மனைவி அதனை ஒவ்வொரு முறையும் பிய்த்து வெளியே வீச வேண்டும்.
ஐந்தாவது முறையும்
பிய்த்தெடுக்க
நினைக்கும்பொழுது
அவர் மனமிரங்கி குருவிகளின் விடாமுயற்சியைக் கண்டு வியக்க வேண்டும்.
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு பயந்து
நீங்கள்
மின் விசிறியின் மின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும்.
இப்படியாக இருக்கும்
நாளில்
கொசுக்களெல்லாம்
எங்கே போனதென்று
நீங்கள் வியக்க வேண்டும்.
வியந்து நீங்களொரு நாள் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்ன பிறகு
கொசுக்களெல்லாம்
படையெடுத்து கடிப்பதை
வாடிக்கையாக்கும்போது
நீங்கள் வியந்ததற்காக
வருந்த வேண்டும்.
வெளியூரில் இருக்கும்
பிள்ளைகள்
விடுமுறைக்கு வீட்டிற்கு
வந்து பார்க்கும்பொழுது
கெஞ்சும் பாவனையில்
முகம் இருக்க வேண்டும்.
கடந்து கொண்டிருக்கும்
நாளொன்றில்
அவைகளுக்கு
பிடிக்காமல்
என்ன செய்தோமென
கவலைப்பட்டு
சாளரக் கம்பியிலேறி
சத்தமில்லாமல் பார்க்கும்பொழுது
பதறிய குருவி
பறக்க வேண்டும்.
கனவொன்றின் பொருட்டால்
கண் விழிக்கும்பொழுது
சன்னமான கீச்சொலி
வருமிடம் தெரியாமல்
நீங்கள்
குழம்ப வேண்டும்.
பின்னொரு நாள்
பின்னிரவில்
எழும்பொழுது
மீச்சிறொலி கேட்க வேண்டும்.
மின் விளக்கை போட்டால் அது
கத்துவதை நிறுத்த வேண்டும்.
பகலெல்லாம் மௌனமாகி
இரவெல்லாம்
விட்டு விட்டு அவைகளின் கீச்சொலிகள் கேட்க வேண்டும்.
இப்படியாக
இவைகள்
இரவு பகல்
இடைவெளிகளில்
கொஞ்சொலிகள்
கேட்டு
நீங்கள்
தூங்குவதற்கு
குருவிகள்
உங்கள்
வீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதற்கு
நீங்கள்
என்னைப்போல
இருக்க வேண்டும்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.