ஆங்கில மூலம் : ஸ்ரீ அரவிந்தர் ‘Spiritual Sonnets’
தமிழாக்கம் : மீனாக்ஷி பாலகணேஷ்
ஸ்ரீ அரவிந்தரின் ‘Spiritual Sonnets’ எனும் எட்டுக்கவிதைகளில் இது ஆறாவதாகும்.
The Hidden Plan

However long Night’s hour, I will not dream
That the small ego and the person’s mask
Are all that God reveals in our life-scheme,
The last result of Nature’s cosmic task.
A greater Presence in her bosom works;
Long it prepares its far epiphany:
Even in the stone and beast the godhead lurks,
A bright Persona of eternity.
It shall burst out from the limit traced by Mind
And make a witness of the prescient heart;
It shall reveal even in this inert blind
Nature, long veiled in each inconscient part,
Fulfilling the occult magnificent plan,
The world-wide and immortal spirit in man.
6. மறைக்கப்பட்ட திட்டம்
இரவின் நேரம் எத்தனை நீளமாக இருப்பினும், நான் கனவு
காண மாட்டேன்
கடவுள் நமது கால அட்டவணைப்படி வெளிப்படுத்தும் அனைத்தும்,
சிறு ‘நான்’ எனும் முனைப்பும் மனிதனின் முகமூடியுமே
பிரபஞ்சத்திற்கு இயற்கையின் இசைவுடனான கடமையின்
இறுதிச்சுமை.
ஒரு பெரும் தோற்றவமைதி அவளுடைய இதயத்தில் பணிசெய்கிறது;
தொலைதூரக் கடவுள் பிரசன்னத்திற்காக அது நீண்டபொழுது
தயார்படுத்திக் கொள்கிறது.
சாஸ்வத இருப்பின் ஒளிமயமான தனியொரு ஆளாக
கல்லிலும் விலங்கிலும் கூட கடவுளின் சாந்நித்யம் உறைகிறது.
மனதால் அறியப்பட்ட எல்லைகளைத் தகர்த்துக்கொண்டு அது வெளிவரலாம்
முன்னறிதலுடைய இதயத்தை அது ஒரு சாட்சியாக்கலாம்;
ஆற்றலற்ற, ஒளியிழந்த தன்மையின்போது கூட திரையிடப்பட்ட
தன்னுணர்வற்ற பகுதியை, அது வெளிப்படுத்தலாம்,
மாயமந்திரமான நேர்த்தியான திட்டத்தை, உலகெங்கும் அழிவற்ற
தெய்வத்திறத்தை மனிதனில் நிறைவு செய்தவண்ணம் ….
(அது வெளிப்படுத்தலாம்) எனக் கூட்டிக் கொள்ளவும்.
இவை மிகவும் வலிமை வாய்ந்த சொற்களாலான கவிதை.
எதிலும் எல்லாவற்றிலும் இறைமையைக் காண்பது.
இதனை மிக அழகாக இறைவனின் மறைத்து வைக்கப்பட்டுள்ள திட்டமெனக் கூறுகிறார். நாம் வாழ்வின் இறுதிநாள் என்று, வாழ்வில் என்னென்ன எப்போது நடக்கும் என முன்கூட்டியே நாம் அறிந்துகொண்டால் நாம் வாழும் முறையும் கூட வேறு மாதிரியாக இருக்கலாம்.
கடவுளின் சாந்நித்தியத்தைப் பற்றி எம். பி. பண்டிட் அவர்கள் தான் எழுதியுள்ள ‘இறப்பற்ற ரோஜா’வில் தனது ஆழ்ந்த கருத்துக்களைக் கூறியுள்ளார்.
‘பிரபஞ்சத்தில் எதுவுமே தற்செயலாக நிகழ்வதில்லை, எதுவுமே தேவையற்றதெனக் கருதப்படுவதில்லை; அனைத்திற்கும் காரணமுண்டு. ரகசியமான சக்திதான் அனைத்தையும் நடத்துகின்றது.
அண்டம் முழுமையுமே இறைவனின் அசைவுகளாகக் கருதப்படுகிறது*. கடவுளின் இருப்பு, என்பதன் வளரும் தோற்றம்தான் அண்டத்தின் அசைவுகள். சச்சிதானந்தம் (சத் + சித் + ஆனந்தம்) எனப்படும் ‘வாழ்வு – மனத்தின் விழிப்புநிலை- பேரின்பம்’ இவற்றை வெளிப்படுத்துவது ஒன்றே அதன் முனைப்பான செயல், தாத்பர்யம். அவ்வாறு நிகழும்போது ஒவ்வொரு அசைவுமே கடவுளின் சக்தியின் நடப்புகளாக அமைகின்றன. ஒவ்வொரு வடிவமும் கடவுளின் ஆத்மாவின் இருப்பிடமே. உண்மையாகக் கூறப்போனால் அனைத்துமே, அது கல்லானாலும் மிருகமானாலும் கடவுளின் ஆத்மா அதனுள்ளிருப்பதனால்தான் தானும் உள்ளது. அதன் உள்ளிருக்கும் ஆத்மா, காப்புரிமை பெற்றதல்ல; அது திரையின்பின் வடிவாக இருந்து கொண்டு தான் வெளிப்படப் போகும், வெளிப்பட வேண்டிய தருணத்திற்காகக் காத்துக் கொண்டுள்ளது.
இதனைப் படிக்கும்போது தொடர்பான சில எண்ணங்கள் சிந்தையில் தோன்றின. கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரப் பாடலொன்றின் வரிகள் படிப்பறிவற்ற ஏழையின் சொற்களில் இக்கருத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்து உள்ளத்தை அசைத்துப் பார்க்கின்றன:
கண்டாருங் கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை
அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்குமல்லவோ
இறைவனின் இருப்பை உணர்ந்து கொள்வதென்பது நடப்பில் அனைவருக்கும் இயலாததொன்று. எவரும் அவனைக் கண்டதில்லை; விளக்கியும் கூறியதில்லை. தாமுணர்ந்தபடிக் கூறியுள்ளனர். நமக்குத் தேவையான வடிவில் நாமும் உணர்ந்து கொள்ளலாம்.
ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடு ஒன்றை
மூட்டுவிப்பானும் முயங்குவிப்பானும் முயன்ற வினை
காட்டுவிப்பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டே தில்லை அம்பலத்தே.
என்பது பட்டினத்தார் வாக்கு.
இவ்வுலகத்தினர் அனைவருக்கும் உணவு கொடுப்பவனும், அவர்களை மாயையில் அழுத்துவிப்பவனும், உலகை இயக்குபவனும், ஜீவாத்மாவின் வினைகளுக்கேற்ப அவர்களுக்கு உரிய பலனை வழங்கி ஆட்டுவிப்பவனும் தில்லை அம்பலத்தே உள்ள ஆடலரசன். இந்த ஆடலரசனான ஐயனின் நடனம் ஒன்றே உலகை, பிரபஞ்சத்தை, கோள்களை ஆட்டி இயக்குகிறது என இறை அடியார்கள், அறிவியல் வித்தகர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் தாங்கள் உய்த்துணர்ந்தபடி கூறுகிறார்கள்.
*காரைக்கால் அம்மையார் தமது மனக்கண்ணில் ஐயனின் அணுத்தாண்டவத்தைக் கண்டு உணர்ந்து அதன் திறத்தை, நயத்தை பௌதிக ரீதியாக அன்றே அற்புதத் திருவந்தாதியில் விளக்கினார். இந்த ஆட்டம் சிறிது பிழை வந்தாலும் பேராபத்தை உண்டாக்கும். இது அணுவில் செய்யப்படும் சிறுமாற்றம் அணுகுண்டு வழியாகப் பேரழிவை உண்டுபண்ணுவது போன்றதாகும். நடராஜப் பெருமானின் நடனம் சற்றுத் தவறினாலும் இந்த அண்டம் என்ன ஆகும் என தமது அற்புதத் திருவந்தாதிப் பாடல் ஒன்றில் விளக்கியுள்ளார் அம்மையார்.
அடிபேரில் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மாமுகடு பேரும் – கடகம்
மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றாது அரங்கு.
இறைவனின் அடிபெயர்ந்தால் பாதாள உலகம் பெயர்ந்துவிடும்; முடி சிறிது பெயர்ந்தால் மேல் உலகங்கள் பெயர்ந்து போகும்; கை பெயர்ந்தால் வான் திசைகள் அனைத்தும் பெயர்ந்து விடும். அவன் இதனை அறிந்து ஆடவில்லையானால் இந்த அண்டம் தாங்காது.
இறைவன் உலகங்களை எல்லாம் அணுவாக்கித் தானும் அணு வடிவாய் நின்றாடுவது அணுத்தாண்டவம் எனப்படும். அணுக்கள் அனைத்தும் சிறிதும் பிறழாமல் ஒரே தளத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றன. இவை இயங்குவதாலேயே அண்டங்கள் இயங்குகின்றன என அறிவியலோர் கண்டறிந்துள்ளனர்.
இந்த அணு (Atom) எனப்படுவது புரோட்டான்களையும் நியூட்டிரான்களையும் (Protons, Neutrons) நடுப்பகுதியில் கொண்டும் வளையச் சுற்றில் எலக்டிரான்களைக் (Electrons) கொண்டும் இருக்கும். சுற்றும் அணுவும் தன் பாதையினின்று (Orbit) இம்மியும் பிறழாது ஓயாமல் சுற்றிக் கொண்டே இருக்கும்.
இந்த அணுவின் அமைப்பு நடராஜப் பெருமானின் நடனத்தோடு ஒப்பிடப்படுகிறது. அவனுடைய ஒழுங்கான நடன அமைப்பின் காரணமாகவே இந்த அண்டம் இயங்குகிறது எனலாம். ஆடும் அவன் கையில் தீ, காலில் மண், தலையில் நீர், கையில் உள்ள உடுக்கையில் காற்று, ஆடுமிடம் ஆகாயம் எனப் பஞ்ச பூதங்களும் அவனாகவே நின்று, அனைத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் தான் அனைத்துள்ளும் நின்று ஆடுகிறான். இதுவே அணுத்தாண்டவம்.
இதனை இந்துமதப் பெரியவர்கள் மட்டுமே கூறவில்லை. உலகம் முழுமையும் உள்ள அறிவியர் வல்லுனர்கள் ஒப்புக் கொள்கின்றனர். பௌதிகவியல் அறிவாளர் ஃப்ரிட்ஜொஃப் காப்ரா தனது ‘தெ டாவோ ஆஃப் பிஸிக்ஸ்’ (The Tao of Physics) எனும் நூலில் நடராஜரைப் பற்றிக் கூறுவார்:
‘அனைத்தின் இருப்பினையும் இயக்கத்தையும் சிவனின் நடனமானது விளக்குகிறது. பிரபஞ்சத்தின் பல்வேறு பருப்பொருட்களிலும் உயிர்களிலும் உள்ளவை அனைத்தும் மாயை, எப்போதும் மாறிக்கொண்டே இருப்பன என்பதை அது அறிவுறுத்துகிறது. படைப்பு – அழிவு எனும் இந்தச் சக்கரம் பருவங்களை மட்டுமே குறிப்பதில்லை; அனைத்து உயிர்களின் பிறப்பிலும் இறப்பிலும் அவை தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, விலங்கு அல்லது தாவரப் பொருள்களின் (Organic) கலப்பற்ற மற்ற (inorganic) பொருள்களிலும் உறைந்திருக்கும்.”
இதனை உணர்த்தும் விதத்தில் CERN (European Council for Nuclear Research) எனும் அமைப்பில் பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை அறிந்தபின் ஸ்ரீ அரவிந்தரின் கவிதையை இன்னொருமுறை படிக்கலாமா? புதிதாக ஏதுவும் புரிகிறதா? இந்த விஷயங்களில் இன்னும் சிறிது தெளிவு கிடைத்ததாக நான் உணர்கிறேன்.
நன்றி!
பார்வை நூல்கள்
1)கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்
2) பட்டினத்தார் பாடல்கள்
3) அற்புதத் திருவந்தாதி- காரைக்காலம்மையார்
4) ஆனந்த குமாரசுவாமி – The Dance of Siva.
5) The Tao of Physics – Fritjof Capra
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
