புரத்தல்

1
சித்தியுடன்
பல்லாங்குழியாடியதை
எவ்வளவு முயன்றும்
மீட்கமுடியவில்லை
சன்னதமாடுபவளாகவும்
சுருக்கிட்டு சாந்தமாய்
கிடந்தவளாகவுமே
நினைவெழுகிறாள்


2
பெரியாச்சி
வயிற்றைக் கிழித்து
குடலை வாயில்
கவ்வியவள்
அப்பெரியாச்சி
எங்கள்‌ வீட்டு உத்தரத்தில்
காலாட்டி
அமர்ந்திருக்கும்
கதையை
பாட்டி‌ அவள்
பாட்டியிடமிருந்து
கேட்டதாய்ச்சொன்னாள்

3
மிளகாய் காயும்
முற்றத்தில்
அமர்ந்திருக்கையில்தான்
மாமா கையில்
அருவாளுடன் நுழைந்தார்
சின்னமாமா தப்பினார்
வெட்டு அம்மாச்சியின்
காதில்‌ விழுந்தது
எனக்குச் சுருக்கென்று
மூத்திரம் வர
முற்றத்தில் போனால்
அம்மாச்சி வைவாள்
காதறுந்து இரத்தம்
கொட்டுபவள் திட்டப்போவதில்லை
என்றாலும்
கொல்லைக்குச் சென்றேன்
ஓட்டமாய்

4
புஸ்வானம் போல்
பொங்கி ஓயனும்
சங்கு சக்கரத்தைப்போல்
மலராய் சுற்றி அடங்கனும்
என்பாள் அக்கா
வெடித்த தீ
அகத்தை விட்டு
புறமெல்லாம் கரித்துவிட்டது
மூன்றாம் நிலை
தீக்காயத்தோடு
ஆஸ்பத்திரியில் கிடந்தவள்
ஏதோ சொன்னாள்
அவள் கடைசி சொல்லும்
யாருக்கும் விளங்கவில்லை
சித்தி சுருக்கிட்டுக்கொண்ட
உத்தரத்திற்குத் தெரியும்
முந்திச் செல்வதை பார்க்கும்
பிந்தியது
எச்சொல் உரைக்குமென

5
யாரும்
செல்வதேயில்லை அப்பக்கம்
இன்று டவுன் பஸ்காரன்
சென்றுவிட்டான்
குளமருகே.
மாமா நீருப்பிக்
கிடந்த குளம்.
சித்தியை இருகப்
பிடித்துக்கொண்டேன்
அவள் திமிறினாள்
உருமினாள்
அக்குளத்தை எதிர்கொள்ள
அவளுக்குத் தெரிந்த ஒரு வழி
தீப்பற்றிய கூண்டுக்குள்
சுற்றி சுற்றி வெடித்தது பறவை
பின் அழுதாள்
குளத்தை எதிர்கொள்ள
மற்றுமொரு வழி

6

எங்களுக்கு
இந்தத் திடீர்
விருந்தாளியை
எப்படி எதிர்கொள்வதெனத்
தெரியவில்லை
அன்று
தாத்தா பெரப்பம்பாயில்
அயர்ந்துவிட்டார்
தூக்கம் கெடுமென
பல்லாங்குழி அன்று ஒலிக்கவில்லை
அம்மாச்சி கருவேப்பிலை
பறிக்க கொல்லைக்குச்சென்றுகொண்டிருந்தாள்
முற்றத்துக் கம்பிகள்
பிசிரற்ற கருநிழலாக விழும் உச்சி
நேரத்தில்
மரணம் எட்டிப் பார்த்தது
வீட்டினுள்
தீப்பற்றிய வீடென
ஓடி அலைந்து அரற்றினோம்
எத்தனை நீரள்ளி வீசியும்
அணையவில்லை
அந்நெருப்பை என்ன செய்வதென்று
எங்கள் யாருக்கும் தெரியவில்லை
அத்தீ வேண்டிய உடலை
அதற்கு திண்ணக் கொடுத்தோம்

மீண்டும் எங்கள் வீட்டில்
பல்லாங்குழி ஒலிக்க
வெகு காலமானது
ஒலித்தபோது
சோழிகள் அத்தனை
விநோத ஒலிப்யெழுப்பின

7
எப்படியோ
மீண்டது வீடு
முற்றத்தில்
மீன் கழுவுகையில்
பூனைகள் வரத்துவங்கின
பல மாதங்கள் கழித்து
உத்தரத்தில் மரநாய் ஓடியது
கொல்லையில் இரட்டை நரி
பார்த்தபோது
நல்லகாலம் வந்துவிட்டதை
உறுதிசெய்தார் தாத்தா
வெடுக்கென எதுவும் நிகழவில்லை
யாரும் எதையும் அசைக்கவில்லை
ஒரு நாள்
அக்கா முற்றத்தில்
காய்ந்த வடகத்தின் மீது
விழுந்து உதைத்துக்கொண்டாள்
சித்தியின் பெயரை
தன் பெயர் என்றாள்
முதுகில் விழுந்த
புளியம் விளார் காயங்களை
பார்க்கச்சொன்னாள்
அந்த உத்திரத்தைச்
சுட்டி சுருக்கிட்டுக்கொடுக்கச்சொன்னால்
காப்பற்றும் படி கெஞ்சியவள்
கோழை வடிய முழி‌ பிதுங்க
ஆடி ஓய்ந்தாள்
முன் மட்டுமே
செல்லும் காலம்
பின்னகர்ந்தது
இவ்வாறுதான்

8
எங்கள் வீட்டிலிருந்து
ஆஸ்பத்திரி
வெகு அருகில்தான்
என்றாலும்
எல்லா மரணங்களும்
சந்தேகத்திற்கு இடமின்றி
வீட்டினுள்ளேயே
நடந்தேறியது
மேலும் நிலைப்படிக்குத்
தெரியும்
மரணம் தேடி வந்ததா
இல்லை
மரணத்தை தேடிச்
சென்றார்களா
எனும் விவகாரம்

9
சித்தி
அத்தனை தூரம்‌ கடந்து
இந்த வீட்டின் உத்தரத்தை
தேடி வந்தாள்
அக்கா
தீயிட்டுக்கொள்ள
இந்த வீட்டின் அடுப்படியைத்தான்
தேர்ந்தாள்
அத்தனை பிரியமளிப்பது
இவ்வீடு
அத்தனை பாதுகாப்பளிப்பது
இவ்வீடு
அத்தனைக்காலம்
வளர்த்தெடுத்தது இவ்வீடு

10
அம்மாச்சியின் கல்யாணத்தில்
புகைப்படமே கிடையாது
சித்தியின் கல்யாணத்தில்
கருப்பு வெள்ளைப் படம் வந்தது
அக்காவின் கல்யாணத்தில்
கலர்ப்படம் வந்தது
நான் ஃபோட்டோக்களை
நுணுக்கி ஆய்ந்துவிட்டேன்
பேயொன்றும் கண்ணுக்குப்
புலப்படவேயில்லை
சித்தியும் அக்காவும்
அகமெல்லாம் ஆசையாகத்தான்
மணந்துகொண்டனர்
பிழை எங்குதான் உள்ளது?
பத்தாயத்தினுள் பாம்பு
புகுந்ததை யாரும் பார்க்கவேயில்லை
மரக்கா பற்றயிருந்த கை மணிக்கட்டில்
அதன் பல்தடம் பதியும் வரை

11
பூவனூர் மாமா
உறுதி செய்தார்
வீட்டில் பேய் இருப்பதை
‘நெஞ்சுல ஏறி
அமுக்குச்சுடா
கன்னங்கரேள்னு
உருவம்டா’ என்றார்
பேயின் இருப்பை
பலரும் பலவிதமாக
உறுதி செய்தனர்.
கூடத்தில் தூக்கம்
கலைந்தமர்திருந்த
மொத்தக் குடும்பமும்
கேட்டது
பாத்தாயத்துள்ளிருந்து எழுந்த
அழுகுரலை
தாத்தா வீரன் கோயிலுக்குச்
சொல்லி விட்டார்
ரத்தக் காவாக
இரண்டு சேவல் தலை திருகப்பட்டது
பேய்தான் நடந்தவற்றுக்கெல்லாம்
காரணமென்பதில்
சிறு ஆசுவாசம் ஓடிற்று
வீட்டினுள்

12
மூன்று ஜோசியக்காரர்
பார்த்து
வீரனுக்குப் படையலிட்டு
அனுமதி பெற்றுத்தான்
நிகழ்ந்தன சுபங்கள் எல்லாம்
சுருக்கிட்டுச் சாக
உந்தியது ஏதென்று
யாரும் அறியவேயில்லை.
மாமா பேசா மௌனியானார்
அம்மாச்சி முற்றத்தில்
அமர்ந்து சுவற்றையே வெறித்தாள்
நாயின் பின்னங்கால்
கிளறிய மண்ணென
வீடெல்லாம் விழுந்தது
சாவின் கரிமண்
மரணம் ஒரு உயிரை
கொண்டு செல்வது மட்டுமில்லை
கண்ணில் படும் உடல்களை
சிதைக்கிறது
உடல்களின் நாட்கணக்கில்
கழித்து விடுகிறது
பல தினங்களை
முடிவற்ற எண்களிடையே
கூட்டலை கழித்தலை
பெருக்கலை வகுத்தலை
வீசி எறிந்தது யார்?
எண்களை எண்களின்
நிலையில் இருக்க விடாமல்
உருகி வழிந்தோடச்செய்து
கண்ணீரைப் பெருக்கியது யார்?

13
நாக்கை உள்மடக்கித் தினித்து
முகத்தை சீர்செய்து
கிடத்தி
ஊரே வந்து பார்த்துச்
சென்றது
‘முருங்க எல போல
சின்னவளாச்சே’
என் ஒப்பாரி வைத்தாள்
பெரியம்மாயி
சின்னவற்றின் மீது
கருணைவேண்டுமல்லவா
அம்முவுக்கு நாய்க்குட்டிகள்
மீதிருப்பதுபோல்

14
சருகு பற்றிக்கொள்ளும்
வெயிலில்தான்
காத்தான் சாமானுக்கு
சேவலறுத்து
சுருட்டு சாராயம் வைத்துப்
படையலிட்டோம்
பின் வீரனுக்கு
பொங்கல்கூட்டி
நுனியிலையில் படைத்து
கற்பூரம் ஏற்றினோம்
மணியடித்து
சாம்பிராணிப்புகையிட்டப்போது
சாமியாட சித்தியோ
அக்காவோ இல்லை
வெடித்துத் துள்ளும்
உடலை பிடித்தடக்கி
நெற்றியில்
திருநீரிட்டு ஆற்றும்
வேலை அம்மாச்சிக்கு இல்லை
சப்தமாதருக்கெல்லாம்
பூ வைத்த பின்
எஞ்சிய பூவை
வீரனின் அரிவாள்
நுனியில் சுற்றினார் தாத்தா
கருப்பனுக்கும்
பெரியாச்சிக்கும்
காட்டேறிக்கும்
சம்பிராணியிட்டு
படையலானபின்
அம்மாச்சி கண்ணீருடன்
இத்துடன்
எல்லா பீடையும்
ஒழிந்ததாகச் சொன்னாள்

15
நாள்
மாதம்
வருட
காலக்கணக்குகள்
மரணத்துக்கு இல்லையென்றாலும்
வருடம் தவறாமல்
நிகழ்ந்து வந்தது மரணம்
யாரைக் காரணம் காட்டுவது?
ஒவ்வொருவருக்குள்ளும்
தானே காரணமென்று
சொல்லியழ
ஒரு காரணமிருந்தது
அம்மாச்சி பேசுவதேயில்லை
அந்த வீட்டை அதன் கதையை
தன் குலக்கதையை
வெறித்து நோக்க்கிகொண்டிருந்தது
அவள் அகம்
அவள் மீண்டும்
கதை சொல்லத்துவங்கும்
நாளில்தான்
எல்லாம் சரியாகும் என
உறுதியாய் நம்பினான்
சின்னவன்

16
முப்பாட்டனான
பிச்சைமுத்து வாங்கி
வந்தது
இந்த மரப்பாச்சி பொம்மை
பூர்வீக வீட்டின் தூணைவிட
மரப்பாச்சிக்கு வயசதிகம்
என
இருவத்தைந்து பிரசவம் பார்த்த
பட்டம்மாள் சொல்லித்தான்
தெரியும்
அதை வைத்து விளையாடிய
நான்கு பெண்கள்
அர்ப்பாயுளில்
போய்ச்சேர்ந்தார்கள்
இன்னும் நான்கு பெண்கள்
தலை நரைத்து
கூன் விழுந்து
ஈயும் எறும்பும் மொய்க்க
கிடையாய்க் கிடந்து
போய்ச்சேர்ந்தார்கள்
அம்மரப்பாச்சியில்
அங்கங்கு சில
வெட்டு விழுந்துள்ளது
கீறல் சில உண்டு
பூர்வீக வீட்டை காலிசெய்தபோது
அம்மரப்பாச்சி கிடைக்கவேயில்லை
பிடிவாதமாய் வீட்டுக்குள் ஒளிந்துகொண்டது
கடைசியாக கண்டபோது
உற்றுப்பார்த்தில்
தெரிந்தது
ஆசாரியின் உளி இழுத்த
சிரிப்பு

17
சிவபிக்கு
உச்சி நெற்றி
மயிர்ப்பிசிர் போலவே
அவள் அம்மா லட்சுமிக்கும்
தொழுவத்தின் எட்டு மாடுகளில்
கனிந்தவள் இவள்தான்
தொட நீளும் கைகளுக்கு
வாகாய் நெற்றி நீட்டுவாள்
முடிந்தால் கரும்புள்ளி நிறைந்த
வெளிர் நாவால் கனிந்து தொடுவாள்
குடும்பத்தின் அத்தனைக் கதைகளையும்
அம்மாவிடமென
பால் கரந்து ஆவதற்குள்
சொல்லிவிடுவாள் அம்மாச்சி
வீடெல்லாம் அல்லலின் ஒலி எழுந்த நாளில்
கோழிகள் மௌனமாயின
அணிலை பாம்பை
குருவியை என எல்லாவற்றையும்
துரத்தி குரைக்கும் வீரன்கூட
சுருட்டிப் படுத்துக்கொண்டான்
வரப்பைத் தாண்டி இரண்டு அடி நிலம்கோறி
குடும்பத்தை சபித்து
அருவா எடுத்து சண்டைக்கு நிற்கும்
லாடசாமி கூட தூண்டை தோளில் இட்டு
துட்டி கேட்க வந்து போனார்
நிகழாதவை நிகழுமென
மீண்டும் ஊரே திடுக்கிடலுடன்
அறிந்துகொண்ட நாளில்
லட்சுமி பால் சுரக்க மறுத்துவிட்டாள்
எத்தனை கண்ணீருக்கும்
அத்தனை அழலுக்கும்
எதற்கும்
பொழுதினை தேக்கும் பலமில்லை
தொழுவம் இருளில் அடங்கி
புலரியில் தெளிந்தது
கன்றின் குரலுக்கு
மடியின் நாளங்களில் பால் பெருகிற்று
பிசு பிசுவென விடிந்த
அந்த காலையில்
நிகழ்பவை நிகழ்ந்துகொண்டே இருக்கும்
எனக் கண்டாள் அம்மாச்சி

18

வாரி சுருட்டிக்கொண்டு
எழுந்தவர் எல்லாம்
துக்கத்தை
வீட்டுக்குள்ளேயே விட்டனர்
தொழுவத்தில் மூன்று அரிக்கேன்
விளக்குகள் தொங்கவிடப்பட்டன
சின்னவன் கையில்
சிமினி விளக்குடன்
நின்றான்
லட்சுமி அமுந்திய முக்காரங்களில்
வலியை செரித்து நின்றது
வரப்போகும் உயிரில்
மனங்கள் குவிந்தன
லேசாக தூரல் பிசுபிசுத்த
இரவில்தான் லட்சுமி
ரெண்டாம் முறை ஈன்றாள்
கரிக்காளைக்கன்று
முழுக்கரியவன் வந்து விழுந்த போது
பத்தாயத்து இருளுள் விழும்
விளக்கொளியென மெல்ல சிரித்தது அகம்
அம்மாச்சி கண்ணன் என்றாள்
கழிந்தவை கழிய
புதியன பிறக்க
அவ்விரவுக்குள் ஒலித்துக்குக்கொண்டிருந்தது
மெட்டு தப்பாமல்
ஓயாமல் இருக்கும்
கிருட்டி நாதம்

19

தொழுவத்தின் கூரையில்
முட்டையிட்டு அடைகாத்த
கோழியின்
பக் பக் ஒலி
இரவைக் கூட்டிக்கழித்து
எல்லாம் சரியாக
இருப்பதாய்ச் சொன்னது

20

ஒரு நாள்
திருகைக்கல்லில்
உளுந்து உடைக்கையில்
அம்மாச்சி
மீண்டும் கதை சொல்லத்
துவங்கினாள்
அது முழுக்கவே தேவதைக்
கதைகளாக இருந்தது
தேவதைகளின் பாடலை
நடுங்கும் குரலில்
கட்டி இழுத்து வந்தாள்
அந்த வீட்டுக்குள்
உண்மையிலேயே
அன்று புதிய
ஆண்டொன்று
பிறந்தது
தேக்கங்கள் எல்லாம்
மனங்களுக்குத்தான் என்பதை
வாழ்க்கை பெருகிக்கொண்டே
இருப்பதை
நடுங்கும் மூதாட்டியின் குரல்
சொல்லிற்று

21

மூன்று வருடம்
துட்டியால் விட்டுப்போனது
நான்காம் வருடம்
அத்தையும் பெரியம்மாவும்
தலையில்
பாலி சுமந்து சென்றார்கள்
ஊரெல்லாம் சக்கரைப் பொங்கல்
வைத்தானது
வீரனுக்குப் பலியிட
கிடாய்களை வெட்டுக்கு இழுத்துச்சென்ற
அந்தி சாய்ந்தானபின்
அம்மாச்சி வாசலில் கால் நீட்டி
தொழுவத்தின் மணி சத்தத்தினிடையே
அமர்ந்துகொண்டாள்
காம்பைக் கிள்ளியதற்கும்
சுன்னாம்பை இழுவியதற்குமான
நீண்ட ஒரு இடைவெளியில்
கணக்கிட்டுக் கழித்தெரிந்தது அகம்
விளக்கு மாடத்தின் அகல் ஒளி
அம்மாச்சியை சுற்றி
வட்டாமாய் விழுந்து கிடந்தது

22

கரவையும் வயலுமென
பெருகிற்று வாழ்வு
அத்தை குடமென
இடுப்பில் இருத்தி
கொணர்ந்த மரக்கால் அளந்து
நிரம்பிற்று பத்தாயம்
தினம் தினம்
பளீரென துலங்கிற்று காலை
வண்ணமாய்ப் பெருகி
ஆழ்ந்தது அந்தி
திருகைக்கல் மெல்லச் சுற்றி
உளுந்து உடைந்தது
அது ஆழச் சுற்றி
கேப்பை மாவானது
ஆடிப்பாடி
மலர்சப்பரம் வைத்து
அம்மாச்சியை
சுடலை சேர்த்தோம்
மூன்றாம் நாள் பால்தெளித்து
பதினாறாம் நாள் கருமாதி வைத்து
கரிவிருந்தான நாளில்
சின்னவள் சமைந்தாள்
மீண்டுமொரு கன்னி
பிறந்து வந்தாள்
கருணையுடன்
அகம் புரக்க


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.