பற்றுவெளி

செக்கச்செவேலென்று  ரத்தம்போல  புதுமண் மேலே வந்து கொண்டிருந்தது.  ஜேசிபி ஒற்றைக் கையால் மண்ணை அள்ளி அள்ளிப் புரட்டிக் கொண்டிருந்ததை தேவானை  வாசற்படியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். வழக்கமாக புதுமண்ணைப் பார்க்கையில் உண்டாகும் பரவசம் இல்லாமல் மனம் கனத்துக் கிடந்தது. 

மூத்தவன் வயிற்றில் இருக்கும்போது அவளுக்கு  உழுத காட்டின் செம்மண்ணை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளக் கொதியாயிருக்கும். மண்ணைத் தின்பதைப் பார்த்தால் செல்வம் மச்சான் அடிக்க வரும். பழைய நினவுகளின் பெருமூச்சு எழுந்தது. மூத்தவன் மகள் சமைஞ்சு இப்போது இரண்டு வருஷமாயிற்று. காலமும் ஓடிப்போயிற்று.  

மேகாற்றில்  புதுமண்ணின் வாசம் எழுந்து நினைவைக் கிளறியது. 

தேவானை கல்யாணமாகி  வந்தபோது ஐம்பது ஏக்கரும் கல்தூண் நட்டு கம்பி வேலிகட்டி முழுதாக செல்வத்தின் அய்யனின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது ஊரை ஒட்டி இருந்த இந்தத்  துண்டுநிலத்தில் ஓலைச்சாலை போட்டுத்தான் செல்வம் மச்சானையும் தேவானையையும்  தனிக்குடி வைத்தார்கள்.

ஓலைச்சாலையின் முன்பிருந்த வேப்பமரத்தைச் சுற்றி   வெண்டைக்காய் போட்டிருந்தது. புதுப்பெண்ணாய்  ஆள்காரர்களோடு சேர்ந்து வெண்டைக்காய் பறிக்கையில் செல்வம்  மச்சான் தேவானைக்குப் பிஞ்சாகப் பறித்துக் கொடுத்து அதை  கருக்மொருக்கென்று அவள் தின்பதை ஆசையாகப் பார்த்துக்கொண்டிருப்பான். மூத்தவனை சாயங்காலத்தில் தூளிகட்டி தூங்க வைப்பது அய்யன் நட்டு வளர்த்த  இந்த வேப்ப மரத்தில்தான். 

அப்போது  செல்வம் மச்சானின் அய்யன் நல்ல  செயலாக இருந்தார். எந்நேரமும் வயக்காட்டில்தான் இருப்பு. ராத்திரி வீட்டுக்கு வராமல் பம்புசெட்டிலும் காட்டுச்சாலையிலும்  அவர் படுத்துக்கொள்ளும் போதெல்லாம் ஆத்தா இங்கே வந்து  அய்யனைத் திட்டிக்கொண்டே இருக்கும். ராத்திரி பூராவும் கண்ணை மூடாமல் கிடக்கும். வயல் வெள்ளாமையின் மீது  உயிர் அய்யனுக்கு.

சின்ன மச்சான் கல்யாணத்தின் போதுதான் இங்கே செங்கல் வீடு இரண்டு குடிக்குமாக தனித்தனியாக எடுத்தது. வீடெடுக்கும்போது வேப்ப மரத்தை தொடவே இல்லை. அது ராஜாவாட்டம் நடுவில் நின்றுகொண்டு  எல்லாற்றையும் குனிந்து பார்த்தபடி இருந்தது.

பிள்ளைகள் பிறந்து வளர்ந்து வீடு  நிறைந்தபோது அய்யன் பக்கத்து இடத்தையும் வாங்கினார். பெரிதாக தொட்டிக்கட்டு வீடு கட்டினார். எல்லாருமாக இங்கு குடி வந்தனர். 

அய்யன் மட்டும் ஏனோ புதுவீட்டுக்கு வராமல் ஆத்தாவோடு காட்டுச்சாலையிலேயே தங்கிக் கொண்டது. எனக்கு இந்தச் சாலைதான் கடைசி வரைக்கும் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டது. ஆத்தா போனபிறகு என்ன சொல்லியும் வீட்டுக்கு வர மசியவில்லை.  காட்டுச்சாலையிலேயேதான் நடை தளர்ந்த பின்பும் இருந்தது. அதுவரை ஐம்பது ஏக்கரும் அய்யன் கைக்குள்ளேதான் இருந்தது.  விதைப்பாடும் உழவும் அறுப்பும்  என எல்லாம் அய்யன்தான்.  இப்போது வேப்பமரத்தில்   சாத்தி வைத்திருக்கும் இந்த மூங்கல்தடி எப்போதும் அய்யன் கையில் இருக்கும். ஒருமுறை கரும்பு வெட்டு நடக்கும்போது இந்த மூங்கில் தடியால் ஏழடி நாகப்பாம்பை  அய்யன் அடிச்சு தூக்கிப் போட்டதை ஆத்தா  அடிக்கடி நினைவுகூர்ந்து சாகசக்கதைபோல சொல்லியபடி இருக்கும். 

பிள்ளைகள் அடுத்தடுத்து பிறந்தபோது அய்யன் வயக்காட்டு மண்ணை கரைத்துத்தான் ஒரு சொட்டு நாக்கில்  வைத்தது. பேரப்பிள்ளைகளிடமும் சதாகாலமும்  வயல் விதைப்பு அறுவடை என்றுதான் பேசிக்கொண்டே இருக்கும்.

ஒருமுறை இந்தப் பக்கத்தில் எவரும் செய்யத்துணியாத காரியமாக அய்யன் பொள்ளாச்சியிலிருந்து வேரோட இருபது தென்னைமரத்தை பிடுங்கி லாரியில் ஏற்றி வைத்து நான்கு நடையாக கொண்டு வந்து இங்கு நட்டு வைத்தார். சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம் சனங்கள் தென்னை மரங்கள் தழைந்து புதுக்குருத்து விட்டதை  வியப்பாகப் பார்த்துப் போயினர். அவர்களிடம் இதற்கு லட்ச ரூபாய் செலவு ஆனதாக செல்வம் மச்சான் பெருமையாச் சொல்லும். 

அய்யன்  ஆத்தா மீதும்  அம்புட்டு பிரியமாக இருந்தார். ஒருநாளும் திட்டி எவரும் பார்த்ததில்லை. ஆத்தா கடைசிவரைக்கும் கொண்டையில் பூவும் கழுத்தில் அட்டிகையுமாக ராணியாட்டம் கம்பீரமாக இருந்தது. மூத்த பேரன்  கல்லூரி போனபின்புதான் ஆத்தா கண்ணை மூடியது. ஆத்தா காலமானதும் அய்யன் தளர்ந்துட்டார். ஆனாலும் அய்யனால்  வயக்காட்டுக்கு போவதை  நிறுத்த முடியவில்லை.  உடம்புக்கு முடியாமால் ஆனபின்பும் விடாப்பிடியாக  வயற்காட்டு வெள்ளாமையை போய் பார்ப்பேன் என அடம்பிடித்துக் கொண்டேதான் இருந்தார். கொழுந்தியாள் முழுகாமல் இருக்கையில்  சின்னமச்சான் மூங்கில் தடியூன்றியபடி வயற்காட்டுக்குப் புறப்பட்ட அய்யனை தடுத்தார்.

”” நீங்க ஏங்கய்யா அலையறீங்க..? ஊட்டுல இருங்க…. காட்டை நாங்க பார்த்துக்கறோம்…””

சட்டென அய்யனுக்கு கோபம் வந்துவிட்டது.

”” நீயென்னடா எங்காட்டைப் பார்க்கறது…? “”

சின்னமச்சானை மூங்கில்தடியால் அடிக்கப் போய்விட்டார்.  வீட்டில் ஒரே ரகளையாகப் போய்விட்டது. அதன்பின்பு  அய்யன் சின்னமச்சானுடன்  வெகுநாளைக்குப் பேசவேயில்லை. 

அய்யன் காட்டுச்சாலையில் தனியாக இருந்தாலும்  நன்றாகத்தான் இருந்தார்.  நாலைந்து மாதம் முன்னாடி ஒரு நாள் காட்டுச்சாலையில் அய்யனைக் காணவில்லை. எங்கு போனார் என்றும் தெரியவில்லை. வீட்டில் எல்லோரும் ஆளாளுக்குத் நாலாத்திசையிலும் சென்று தேடினர்.  ஆறு, குளம், கிணறுகளையெல்லாம்கூட நோட்டமிட்டனர். அய்யன் கிடைக்கவேயில்லை. வீடு துக்கவீடு போலானது. விசயம் கேள்விப்பட்டதிலிருந்து தேவானை தனிமையில் அழுதபடியே இருந்தாள்.  ஊர்க்காரர்கள் அய்யனை தேடுவதும்  கொஞ்ச நாளில் ஓய்ந்து போனது. சின்ன மச்சான் மட்டும் அய்யனை தேடுவதை நிறுத்தவில்லை. 

சில வாரங்கள் போயின. கரும்புக்காட்டுக்கு தண்ணீர் பாய்ச்ச விடியக்காலையில் கிணற்றடிக்கு வந்த சின்ன மச்சான் அய்யன் காட்டுச்சாலைக் கயிற்றுக் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டார். வீட்டுக்கும் அய்யன் திரும்பிய சேதி வந்தது. தேவானையின் மனம் நிம்மதியடைந்தது. அந்த சிரிப்பும் அதிககாலம் நிலைக்கவில்லை. அடுத்த மாதமே அய்யன் மறுபடியும் காட்டுச்சாலையிலிருந்து காணாமல் போய்விட்டார். எங்கு போகிறார் என்பது பெரும்புதிராக குழப்பியது. மீண்டும் வீடு துக்கக்களை கொண்டது. தேவானை தனிமையில்  அழுதவாறு இருந்தாள். சில நாட்களுக்குப்பிறகு மழை தூறிய  ஒரு சாயங்காலத்தில் அய்யன் எங்கிருந்தோ காட்டுச்சாலைக்கு திரும்பவும் வந்து சேர்ந்தார்.  

அய்யனின் காணாமல் போகும் இந்த காரியம் வாடிக்கையாக நடந்துக்கொண்டே இருந்தது. ஒருநிலையில்  அய்யன் இப்படி போவதும் வருவதுமாக இருப்பதை வீட்டில் யாரும் பொருட்படுத்தாத சூழல் ஏற்பட்டது.  தேவானைக்கு மட்டும்  மனம் கேட்கவில்லை.  அய்யன் காணாமல் போவதை தடுக்க வேண்டும் என நினைத்தாள். செல்வம் மச்சானிடமும் சின்ன மச்சானிடமும் பேசினாள். அன்றிரவு அய்யன் அசந்து உறங்கும் நடுச்சாமத்தில் காட்டுச்சாலைக்குப் போனார்கள்.  அய்யனைக் கயிற்றுக் கட்டிலோடு வம்படியாகத்  தூக்கி வந்து வீட்டின் வலப்புறத்து  பழைய வீட்டில் தங்க வைத்து விட்டனர்.  

இங்கே அய்யன் எந்நேரமும் வேப்பமரத்தை பார்த்துக்கொண்டு  கயித்துக்கட்டிலிலேயே முடங்கியவர்போல் உட்கார்ந்திருந்தார்.  இருப்பினும் கொஞ்சம்  அசந்தாலும்  தடுமாறியபடி மூங்கில் தடியூன்றி  வயக்காட்டுக்கு கிளம்பிவிட முயன்றார். எப்பொழுதும் வீட்டில்  ஒருத்தர் அய்யனைக் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். 

என் மூத்த  மருமகள் ஜோதியையும் சும்மா சொல்லக்கூடாது. இந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்ததிலிருந்து அய்யனை  அரும்பாடுபட்டு கவனித்துக் கொண்டாள். ஊரும் ஒரம்பரைச்சனங்களும் மெச்சினர்.

“” மாமனாரோட அப்பந்தான்னு நெனைக்காம…. சொந்த அப்பனாட்டமே பார்த்துக்குறா….””

“” ரெண்டு நேரம் சத்துமாவுக்கஞ்சி ஊட்டி உடறதாகட்டும்… குளிச்சு வுடும்போது ஒத்தாசை பண்ணறதாகட்டும்….மல்லுமண்டு மெத்தை நனஞ்சா சுத்தம் செய்யறதாகட்டும்…. முகஞ்சுளிக்காம பண்ணறா மகராசி..!  “”

இரண்டு நாள் முன்னாடிதான் ஜோதியும்  மகன் கணேசனும் மாசமாக இருக்கும் மகளைப் பார்க்க காரில் பெங்களூரு கிளம்பிப் போனார்கள்.  இரண்டு பேரையும் உடனே கிளம்பி வரச்சொல்லி தகவலும் கொடுத்தாயிற்று. அவர்கள் இரண்டு பேரும் வந்தபின்புதான் ஆகவேண்டிய காரியம் எல்லாம் வேகமாக நடக்கும்.

வேப்பமரத்தைச் சுற்றியுள்ள மேடு பள்ளங்களைத் தட்டி நிரவிவிட்டு, ஜேசிபியை நிறுத்திய மாணிக்கம் இறங்கி நடந்து வந்தான்.   முதலைத் தோல்போல பாளம் பாளமாகப் பிளந்து கிடந்த வேப்ப மரப்பட்டையின் மீது சாய்ந்தபடி வெற்றிலை போட்டுக் கொண்டான். செம்மண் மீது மழைத்தட்டான்கள்  மிகுதியாக பறந்தன.  

தேவானையும் நிகழ்கணத்துக்கு மீண்டாள். என்ன என்ன வேலைகள் இன்னும் பாக்கி இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கினாள்.  முதலில்  முத்துசாமிக்கு தகவல் சொல்லி அனுப்ப வேண்டுமென்பது நினைவு வந்தது. இந்தக்காலத்திலும் செல்போன் வைத்துக்கொள்ளாத ஆள் முத்துச்சாமி.  எந்நேரமும் தண்ணி போட்டாலும் பெரிய காரியச்  சடங்கெல்லாம் நிதானமாக தப்பில்லாமல்  செய்யக்கூடியவன். பந்தம் பிடிக்கறது, மாத்துச்சீலை விரிக்கிறது என்று பொஞ்சாதியையும் ஒத்தாசைக்கு  கூட்டிக்கொண்டு சரியான நேரத்திற்கு வந்து விடுவான். தூரஞ்சோலிக்கு இன்னிக்கெங்கயும் போகாமல் ஆள் வீட்டில் இருக்க வேண்டும்.

ஒவ்வொன்றாக  நினைக்கையில்  தேவானைக்கு நெஞ்சில் என்னமோ அடைத்ததுபோல இருந்தது. அப்பனை பார்த்த ஞாபகமே இல்லை.  அம்மாவை வெள்ளைச்சீலையில் பார்த்ததுதான் நினைவே. கல்யாணமாகிக் கணக்கம்பட்டி வந்தபின்னாடிதான் அய்யன் மாமனில்லை அப்பன் என்று உணர்ந்தாள். இன்னைக்கு வரைக்கும் ஒரு சுடுசொல் கிடையாது. ஒரு முகஞ்சுளிப்பு கிடையாது. பெற்ற மகன்களைப் பேசினாலும் தன்னை ஒரு  வார்த்தையென்றாலும் ஒரு வார்த்தை சொன்னதில்லை. ’புள்ளே’ என்றுதான் பிரியம் வழியும் தொனியில் கூப்பிடுவார்.  தேவானைக்கு நினைக்க நினைக்க மனம் பொங்கியது.  கண்ணீர்த்துளிகள் முட்டின.

பெரிய காரியமாயிற்றே எப்படியும் இன்னைக்குச்  சாயங்காலத்தில் இருந்தே ஒறம்பரைக்காரகள் எல்லோரும் வர ஆரம்பித்து விடுவார்கள். வெளிப்பந்தலில் உட்கார,  காபிகுடிக்க, இடம் வேண்டுமென்றுதான் வேப்பமரத்தை சுற்றிக் கிடந்த  இடமெல்லாம்  சுத்தம் செய்தது.   இனிமேல்தான் பிளாஸ்டிக் சேர் வாடகைக்கு எடுத்து வந்து போடனும். காபித்தண்ணிக்கு ஏற்பாடு செய்யனும்.

மாணிக்கம் ஜேசிபியை மீண்டும் ஓட்டத் தொடங்கினான். தேவானை   அய்யன் மூச்சை கவனித்துப் பார்த்தாள். மெல்ல நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது. கதவை ஒருக்களித்துச் சாத்தி விட்டு வெளியே வந்தாள். பெருமூச்சுடன் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

“”  தொன்னூத்தி  ரெண்டு வருஷம் … ஏ யப்பா!….”” 

தேவானைக்கு தான் எல்லாம் இவ்வளவு வருஷம் வாழ்வேன் என்கிற நம்பிக்கையே இல்லை. ஒருகணம் அய்யனின் ஆயுள் மீது பொறாமைகூட எழுந்தது. 

இரண்டு மாதத்திற்கு முன்னாடி வரைக்கும்  ஒன்றுமே பிரச்சனை இல்லை. பல்லுக் கட்டியிருந்ததால் குழைய வேகவைத்த சோறாகட்டும், ஞாயிற்றுக்கிழமை கவிச்சியாகட்டும் கொஞ்சம் கொஞ்சமாக அதக்கி அதக்கி சாப்பிட்டபடிதான் இருந்தார் அய்யன்.   வயற்காட்டுக்கு போகாமல் நிப்பாட்டி வைக்கறதுதான் பெரும்பாடாக இருந்தது.   இந்த வீட்டுக்கு வந்தபின்னாடியும் ஒருதடவை வயற்காடு வரைக்கும் போய்விட்டு இதோ வந்துவிடுகிறேன் என்று  போனவரை நான்கைந்து மணிநேரமாக காணவில்லை.  ஆறேழுபேர் பைக்கில் போய்  தேடியும் ஆளே கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. அப்புறம் குடிமங்கலத்திலுள்ள பேத்தி வீட்டில் இருப்பதாக போன் வந்தது. இந்த தள்ளாட்ட வயதிலும் எப்படி பஸ் பிடித்து வழி கண்டுபிடித்து போனாரோ அய்யனுத்தான் வெளிச்சம். அங்கே போயும் நேராகப் பேத்தி வீட்டுக்கு போகாமல் காட்டுக்கு போய்விட்டார்.  வெங்காய நடவை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். மறுநாள்தான் கார் வைத்து பேத்தி புருஷன் அய்யனைக் கூட்டிக்கொண்டு வந்தார். வீட்டுக்கு வந்தப்புறமும் இப்போது எதற்கு வெங்காய  நடவு என்று சதா புலம்பியபடி  கிடந்தார். 

கிடையாக் கிடந்தாலும் அய்யனுக்கு  நினைப்பெல்லாம் வயக்காட்டில்தான். அவ்வப்போது பழைய வெள்ளாமை குறித்த  கதைகளை எல்லாம் தனக்குத்தானே பேசியபடியே இருந்தார். திடீர் திடீரென்று தேவானையிடம் கேட்க ஆரம்பிப்பார்.

”” அறுப்புக்கு ஆளு வந்தாச்சா…? “”

”” வந்துருவாங்க மாமா…. கம்முனு படுங்க சித்த நேரம்…..””

தேவானை  பதில் சொன்னால் சரியென்று அமைதியாக தூங்கி விடுவார். இருப்பினும் நினைத்தபோது எல்லாம் கேட்க ஆரம்பிப்பார்.

”” நெல்லு வண்டியெல்லாம் புறப்பட்டாச்சா….கேளு புள்ளே….? “”

”” நேத்தே போயாச்சே மாமா….””’

 ”” செரி செரி…””

இப்போதும் வயற்காட்டில் நெல்லறுக்கையில் செல்வம் மச்சான் அய்யனை வயலுக்கு கூட்டிட்டுப் போய் வரப்பில்  உட்கார வைத்து விடுவார். கண்ணை விரித்துக்கொண்டு  ஆட்கள் நெல்லு மூட்டைகளை டிராக்டரில் அடுக்கறதையே உற்றுக் கவனித்தபடி  இருப்பார். 

தேவானை எழுந்து உள்ளே கயிற்றுக் கட்டிலில் கிடக்கும் அய்யனைப்  பார்க்கப் போனாள். கடைசி நாட்களில் அய்யன் சின்னக்குழந்தை போலாகிவிட்டார். இந்த இரண்டு வாரமாத்தான்  சுத்தமாக நடமாட்டமில்லாம கயிற்றுக் கட்டிலோடு முடங்கியது. போனவாரம்  ஞாயித்துக்கிழமை ராத்திரி கோயமுத்தூரிலிருந்து சின்ன மச்சான் வந்து சத்துமாவு ஊட்டிவிடப்போனபோது கையைத்தட்டி விட்டார். எதோ சன்னமாக சொன்னார்.  உத்துக் கேட்டபோதுதான் புரிந்தது.

“” தோசை தோசை….””

தேவானை சமயற்கட்டுக்கு ஓடிப்போய் தோசை சுட்டாள். மெத்துமெத்தென்று ஊற்றிக்கொண்டு வந்த தோசையை சின்ன மச்சான் வாங்கி தேங்காய்ச் சட்டினி தொட்டு இரண்டு வாய் ஊட்டினார். சப்பிச்சப்பிச் சாப்பிடச் சாப்பிடவே அய்யன் தூங்கி விட்டார்.   அப்போதே  எல்லாருக்கும்  அய்யன் கடைசிக் கட்டத்திற்கு போய்விட்டார் எனத் தெரிந்து விட்டது. 

இந்த நான்கு நாட்ளாக சுத்தமாக நாவடங்கி விட்டது.   என்றைக்கிருந்தாலும் ஒருநாள் எல்லோரும் போகத்தானே போகிறோம் என்று  எல்லோரையும் போல தேவானையும் மனதைத் தேற்றிக் கொண்டாள்.

நேற்று ராத்திரியில் இருந்தே அய்யனுக்கு சத்துமாவுக்கஞ்சி துளியும் உள்ளே போகவில்லை.  செல்வம் மச்சான்தான் ராத்திரி கஞ்சி கொடுப்பது வழக்கம்.  எப்பவும்போல் கஞ்சியை பதமாக ஊதி ஆறவச்சு ஊட்டுனார். கஞ்சி  உள்ளே இறங்காமல் கடைவாயில் வழியறதைப் பார்த்துமே  வெளியே போய் துண்டால் முகத்தை மூடிக்கொண்டு மச்சான் அழுகாச்சி பிடித்து விட்டார்.  ராத்திரியெல்லாம் எங்கய்யன் எங்ய்யன்னு என்று  கண்ணை மூடாமல் அனத்தியபடி கிடந்தார். மச்சான் மனசை  திடமாக்கிக்கொண்டு வீங்கின மூஞ்சியுடன் அதிகாலையில் முக்கியமானவர்களுக்கு தகவல் சொல்ல  பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார். வழியிலேயே மாணிக்கத்துக்கு  தகவல் சொல்லிட்டு போயிக்கக் கூடும். 

வேப்ப மரத்தின் உச்சிவாது மேல் ஒற்றைக்காகம் வந்தமர்ந்து கரைந்தது. மாணிக்கமும் தேவானையை நோக்கிக் குரல் கொடுத்தான்.

”” அம்மா நெரத்தி முடிச்சாச்சுங்க….””

 தேவானை அய்யன் குறித்த நினைவுகளிலிருந்து மீண்டு வந்தாள்.  எழுந்து முன்வாசலை பார்த்தாள்.  துப்புரவாக  ஒரே மட்டமாக செக்கச்சேவேலென்று இருந்தது. திருப்தியாகவும் இருந்தது. ஒறம்பரைச்சனங்கள் வரும் இடம் நறுவிசாக இருப்பதில் நிம்மதியும் ஏற்பட்டது.

தேவானை திரும்பி வீட்டின் உள்ளறைக்குப் போய் அலமாரியிலிருந்து பணத்தை எடுத்து வந்து மாணிக்கத்திடம் கொடுத்தாள்.  பணத்தை வாங்கிய மாணிக்கம் எண்ணிக்கொண்டே ஜேசிபியை பார்த்து நடந்தான். தேவானை மாணிக்கத்திடம் சத்தமாகச் சொன்னாள்

’’ பக்கத்தாடி முருகன் ஸ்டோரில  நூறு கைவச்ச சேருக்குச்சொல்லி இருக்குது, எடுத்துட்டு  வந்து இப்பவே எல்லாம் வரிசையா போட்டுட்டுப் போயிறு…. நாளைக்கு நேரமே பந்தலைப் போட்றோனும்….””

“” செரீங்கம்மா….””

மாணிக்கம் ஜேசிபியை எடுத்துக்கொண்டு போய்விட்டான். தேவானை மறுபடியும் திரும்பி    அய்யனை எட்டிப் பார்த்தாள். அய்யன் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தார். தேவானைக்கு  அக்கம் பக்கத்தில் இருக்கும் பங்காளிகள் எல்லோருக்கும் இப்பொழுதே போய் சொல்லிவிட்டு, நங்கையாமார்களையும்  ஒத்தாசைக்குக் கூடவே  கூட்டிக்கொண்டு வரலாமென்று   தோன்றியது. சட்டென்று போய்விட்டு வந்து விடலாமென்று  வெளிக்கேட்டுக் கதவை திறந்தாள். வடக்குப் பார்த்து நடந்தாள். கதிரணைந்து கொண்டிருந்தது. 12-சி யிலிருந்து பள்ளிப் பிள்ளைகள் இறங்கினார்கள்.

என்றைக்குமில்லாமல் இன்றைக்கென்று வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக இருந்ததும் பழசையெல்லாம் நினைத்துக் கொண்டதுமாக தேவானைக்கு கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. மந்தையைத் தாண்டிக் கிளுவை மரத்தில் வேலிபோட்டிருந்த தோட்டத்தைப் பார்த்து   ’ ஓய் ’ என்று குரல்கொடுத்ததும் கன்னியம்மா எட்டிப் பார்த்தாள்

’’ அய்யனுக்கு செரியில்ல கன்னீம்மா….நீ புறப்பட்டு வந்துரு…. ””

’’ உங்குரல கேட்டதுமே எனக்கு பக்குன்னுச்சுக்கா… சேரி நீ நட…  நாம் பின்னாடியே வாரன்….””

’’ வாரப்போ பித்தாள முக்காலிய  எடுத்துட்டு வந்துரு, சீர், செனத்திக்கு வேணும்…’’ 

தேவானை நடந்து இன்னும் ஏழெட்டு வீடுகளுக்குத்  தகவல் சொல்லிவிட்டு திரும்புவதற்குள் கன்னியம்மா பித்தளை முக்காலியுடன் சாய மரத்தடியில் காத்திருந்தாள். தேவானைக்கு அய்யனை தனியே விட்டுவிட்டு வந்ததில் மனசுக்குள் அடித்துக் கொண்டிருந்தது. கால்களை எட்டி வைத்து நடந்தபடி பேசினாள்.

”” வெரசா நட, தனியா உட்டுட்டு வந்துட்டேன் அய்யனை…””

””கதவைச் சாத்தினியாக்கா… நாய் கீய் வந்து கவ்விட்டுப் போயிரப்போகுது….””

 கன்னியம்மா  சிரித்தாள். 

 ’’ கம்முனு இரு  பெரியவங்களைப் போயி…””

தேவானையால் கன்னியம்மாவின் கிண்டலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

”” அட  நிசமாத்தான் கேட்டேன்….  நூறைத்தாண்டி கெடையில் கெடந்த எங்கூட்டுக்கரரோட பாட்டனை நாய் கவ்விட்டு வந்து  ஒருக்கா ரோட்டுல்ல  போட்டுருச்சாமா…  அப்புறமா ஒரு தாழி செஞ்சு அதுக்குள்ள  அவரை உட்கார வச்சு உத்தரத்தல கட்டிதொங்க விட்டுட்டு காட்டுக்கு  போவாங்களாமா… ஒண்ணுக்கு போனா ஒழுகறதுக்கு ஒரு ஒட்டை இருக்குமாமா அதில….””

மீண்டும் சிரித்த கன்னியம்மாளை தேவானை அதட்டி அடக்கினாள்.

”” சித்த  நேரம் பேசாம வாயமூடிக்கிட்டு வாடி….””

மேலும் சற்று தூரம் நடந்தனர். கன்னியம்மா கேட்டாள்.

 ”” எல்லாருக்கும் சொல்லியாச்சா….? “”

 ”” போனு போட்டுருக்கு… எல்லாரும் வந்துட்டு இருப்பாங்க…, முன்னாடி வாசலெல்லாம் நெரவியாச்சு, டீத்தூளு.  ஒன் யூஸ் தம்ளரெல்லாம் சின்னவரு வாங்கியாரேன்னாரு…””

கன்னியம்மா மடிச்சுருளை அவிழ்த்து வாய்க்குள் எடுத்துப் போட்ட புகையிலையின் வாசம் தேவனைக்கும் இதமாக இருந்தது. அரசமர முக்கில்  திரும்பியதும் வீட்டைப் பார்த்தாள். அங்கிருந்தே முன்வாசலில் பிளாஸ்டிக் சேரெல்லாம் போட்டிருப்பது தெரிந்தது. கேட்டருகில் யாரோ உட்கார்ந்திருப்பதுபோல் பட்டது. அதுக்குள்ளாற யாரு வந்தாங்க என்று யோசித்து கொண்டே வந்தவள் கேட்டு லைட்டைப் போட்டாள். 

முன்வாசலில் சேர் போட்டு  உட்கார்ந்திருந்த அய்யன் கேட்டார்.

”’ புள்ளே  அறுப்புக்கு ஆளு வரச்சொல்லி இருந்தேன்…. இன்னும் ஆரயும் காணோமே…? நீ எங்கே போனே இந்நேரம் வெரைக்கும்….? “”

அய்யன் கையில் அந்த மூங்கில் தடி இருந்தது 


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

6 Replies to “பற்றுவெளி”

  1. இந்த மண்ணின் ஆன்மாவோடு பிணைந்த மனிதர்களின் கதை.அய்யன் தன் மரணப்படுக்கையில் இருந்தது என் சொந்த அனுபவங்களை கிளறியது.இறுதியில் அய்யன் சேரில் கம்பிரமாக உட்கார்ந்திருந்தது நிறைவைக் கொடுத்தது.
    நல்ல படைப்பை கொடுத்த லோகுவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  2. ஐம்பேரியற்கையில் மண்ணே நம்மை இங்கே கட்டி வைக்கிறது, மீண்டும் மீண்டும் இழுத்து வருகிறது. இந்த கதையில் அந்த மையம் சரியாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். டீச்சர்.

  3. நல்ல கதை.
    நல்ல கிளைமாக்ஸ்.
    “இறப்பு என்பது நாம் எதிர்பார்த்தபடி நடப்பதில்லை” என்பதை மீண்டும் நிரூபிக்கிறது, மேலும் கிராமத்து வாழ்க்கையைப் பற்றி ஒருவித பொறாமையையும் எழுப்புகிறது.

  4. ””கதவைச் சாத்தினியாக்கா… நாய் கீய் வந்து கவ்விட்டுப் போயிரப்போகுது….””

    சீரியஸா போயிட்டிருக்கும் கதைப்போக்கில் கன்னியம்மாவின் கிண்டல் வாய்விட்டு சிரிக்க வைத்தது. நல்ல முரண்.

    கன்னியம்மா மடிச்சுருளை அவிழ்த்து வாய்க்குள் எடுத்துப் போட்ட புகையிலையின் வாசம் தேவனைக்கும் இதமாக இருந்தது. – நுணுக்கமான அவதானம். விவரணை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.